எனது
நண்பர் தனது இளைய மகனை 6 ஆவது படிக்கையில் தங்கள் குடும்பத்தைவிட்டு தொலைவில்
இருக்கும் பள்ளிக்கு மாற்றினார். பிறகு உயர் கல்வியும் வெளியூரிலேயே
கழிந்தது. தற்போது இளைய மகன் தனது கல்விக்கேற்ற வேலைக்காக முயற்சித்துக்கொண்டு சில
மாதங்களாக வீட்டில் உள்ளார்.
சிறு
வயதில் பதின் பருவத்தில் ஏற்பட்ட குடும்பத்தினுடனான பிரிவு மகனின் சிந்தனையில்
தனித்த மாறுபாட்டை ஏற்படுத்தியிருந்தது. தந்தைக்கு
உள்ளுரில் கல்வி கற்று தனது உடனிருந்து தன்னை புரிந்து கொண்ட மூத்த மகனைப்போல் இளைய
மகன் இல்லையே என்ற ஆதங்கம் இளைய மகனுக்கும் இவருக்கும் இடையே சச்சரவுகளை உண்டாக்கிக்கொண்டுள்ளது.
சிறு வயதிலேயே குடும்பத்தை விட்டு மகனை பிரித்ததன் தவறை தந்தை எண்ணி எண்ணி இப்போது
வேதனைப்படுகிறார்.
பதின்
பருவம் என்பது குழந்தைத்தனத்தில் இருந்து விடுபட்டு ஒரு மனிதன் சுயமாக
சிந்திக்கத்தொடங்கும் வயது. ஒரு தந்தை தனது மகனுக்கு அப்போது நல்ல தோழனாக இருந்து
அவனை சரியான பாதையில் செலுத்த வேண்டிய காலம் அது. சரியான பாதையில் மகனை செலுத்தி
அவன் செல்லத்தொடங்கிவிட்டால் பிறகு வாலிபனாகி உயர்கல்விக்கு வெளியூர் அல்லது
வெளிநாடு சென்றாலும் அவன் பெரிதாக பாதை மாற வாய்ப்பு குறைவு.
இன்றைய
கல்விக்கூடங்கள் மாணவர்களின் சுய சிந்தனையை சிதறடித்து அவர்களை மதிப்பெண் எடுக்கும் இயந்திரங்களாக
மாற்றிக்கொண்டிருக்கின்றன.இன்றைய மாணவர்களிடம் மனித வாழ்வின் மகத்துவங்களை போதிக்க
தவறுகின்றன.
விளைவு
என்ன?
லட்சங்களை
மாத ஊதியமாக உற்பத்தி செய்யும் இத்தகைய இயந்திர மனிதர்கள், தங்களுடன் இணைந்து சுழல
மனைவி என்ற பெயரில் மற்றொரு இயந்திரத்தை எதிர்பார்க்கிறான். மனிதனின் பொருளாதார
நிலை ஆட்டம் காணும்போது அங்கு பணத்தால் நல்ல குணம், உண்மையான அன்பு போன்ற பல விஷயங்களை
வாங்கிவிட முடியாது என்று உணரும்போது அவனது வாழ்வில் பிரச்சனைகளும் பிரிவினைகளும்
தோன்றுகின்றன.
எந்த
உறவு எந்தக்காலத்தில் பிரியும் என்பதை ஜாதகத்தை வைத்து கண்டுபிடித்துவிடலாம்.
இப்பதிவில் பெற்றோருக்கும் குழந்தைகளுக்குமான உறவு நிலைகளை மட்டும் ஜாதக ரீதியாக அலசுவோம் வாருங்கள்
ஒருவரது
பெற்றோருடனான உறவு நன்றாக அமைய வேண்டுமானால் அவர் ஜாதகத்தில்
1.தாயாரை
குறிக்கும் மாத்ரு காரகன் சந்திரனும் தந்தையைக் குறிக்கும் பித்ரு காரகன்
சூரியனும் ஆட்சி, உச்சம், நட்பு
என்றவகையில் வலுவாக இருக்க வேண்டும்.
2.சூரியனும்
சந்திரனும் பகை வீட்டிலோ அல்லது பாவிகளுடனோ 6,8,12 ஆமதிபதிகளுடனோ
தொடர்பில் இருக்கக்கூடாது.
3.நீசமடைந்திருக்கக்கூடாது.
அப்படி நீசமடைந்தாலும் நீசம் பங்கமடைந்திருக்க வேண்டியது அவசியம். இவ்விரு
கிரகங்களும் லக்னதிற்கும் தனது வீடுகளுக்கும் 6,8,12 ல்
மறைந்திருக்கக்கூடாது. சூரிய
சந்திரர்களுக்கு கேந்திரத்தில் சுபாவ பாவிகளோ அல்லது லக்ன பாவிகளோ இருக்கக்கூடாது.
மேற்சொன்னபடியே தொடர்புடைய பாவங்களான நான்கும் ஒன்பதும் கீழ்குறிப்பிட்டபடி அமைவது நலம்.
1.லக்னத்திற்கு நான்கு மற்றும் ஒன்பதாம் பாவதிபதி கிரகங்கள், பாவிகள் மற்றும் 6,8,12 ஆமதிபதிகள் பார்வை சேர்க்கை இல்லாமல் அமைந்திருக்க
வேண்டும். ஆட்சி, உச்சம், நட்பு என்ற வகையில் வலுவாக இருக்க வேண்டும். (ஆனால்
இந்த விதி கன்னி & தனுசு லக்னத்தவர்களுக்கு பொருந்தாது. காரணம் நான்காம்
வீட்டில் ஆட்சியில் இருக்கும் குரு கடுமையான கேந்திராதிபத்திய தோஷத்திற்கு
ஆளாவதுதான்.மேலும் கன்னி லக்னத்துக்கு பாதகாதிபதியான குரு உச்சமடைவதும் தோஷம்தான்.
ஏனென்றால் குரு தாயார் வகையில் பாதகத்தை செய்ய வாய்ப்புண்டு.)
2. நான்கு
ஒன்பதாம் பாவாதிபதிகள் நீசமடைந்திருக்கக்கூடாது.
3.
தங்களது பாவங்களுக்கு மறைவில் அமரக்கூடாது.
4.நான்கு
ஒன்பது பாவத்திற்கும் நான்கு ஒன்பது பாவாதிபதிகளுக்கும் கேந்திரத்தில் சுபாவ
பாவிகளோ அல்லது லக்ன பாவிகளோ இருக்கக்கூடாது.
இவை தவிர
கிரகண தோஷம், பாவகர்தாரி தோஷம் போன்றவற்றிற்கு ஆட்படாமல் இருப்பது போன்ற பல
விதிகளும் உண்டு. விதிகள் நீண்டால் பதிவில் விதிகள் மட்டுமே இருக்கும் என்பதால் இத்தோடு
நிறுத்திக்கொள்வோம்.
உதாரண
ஜாதகம் கீழே.
மேலே நான் குறிப்பிட்ட ஜாதகம் தான் இது.
தாயாரை
குறிக்கும் மாத்ரு காரகன் சந்திரன் உச்சம். ஆனால் லக்னத்திற்கு 12 ல் மறைந்ததும் கேது
சேர்க்கை பெற்றதும் தோஷம். மாத்ரு ஸ்தானாமான 4 ஆமிடத்தில்
மிதுன லக்னத்திற்கு பாதகாதிபதி குரு வக்ரமடைந்த நிலையில் அமர்ந்திருக்கிறார். மேலும் நீசமாகி வக்கிரமடைந்த
மாத்ரு ஸ்தானாதிபதியும் லக்னாதிபதியுமான புதனை குரு பரிவர்த்தனை பெற்று பார்ப்பதும் மாத்ரு காரகன்
சந்திரனையும் ஒன்பதாம் பார்வையில் லக்ன பாதகாதிபதியான குரு பார்ப்பதும் தாயாரின்
பாக்கியத்தை அனுபவிக்க குரு தடை செய்வார் என்பதை மிகத் தெளிவாகவே ஜாதகம் உணர்த்துகிறது .ஒரு காரகனையும் அந்த
காரகன் உணர்த்தும் பாவாதிபதியையும் லக்ன பாதகன் பார்த்தால் பாதகம் நிச்சயம். மேற்கண்ட
ஜாதகத்தில் சந்திரன் உச்சமடைந்து நான்காமதிபதி புதன் பாதகாதிபதியான குருவுடன் பரிவர்த்தனை பெற்றதால் தாயாருக்கு இந்த
ஜாதகம் பாதகத்தை செய்ய வழியில்லை. ஆனால் தாயாரின் பாக்கியங்களை பெற இயலாத சூழல்
ஏற்படும். அதாவது தாயாரை விட்டு விலகி இருக்க வைக்கும். நான்காமிடம் வித்யா
ஸ்தானம் என்பதால் கல்விக்காகவும் குரு பத்தாம் அதிபதி என்பதால் ஜாதகர் தனது
ஜீவனத்திற்காகவும் தாயாரை விட்டு விலகியிருக்க நேரிடும் என்று நாம் அனுமானிக்கலாம்.
சூரியன் தனது
கடும் பகைவனான சனியுடன் இணைந்ததும் தோஷமே. தந்தையுடனான உறவில் பகை உணர்ச்சி
மேலிடும் என்பதை இது தெளிவாக்குகிறது. ஆனால் ராசிக்கு நான்கு ஒன்பது அதிபதிகள்
பகைவர்களானாலும் ஜாதகருக்கு யோகத்தை வழங்கக்கூடியவர்கள். எனவே தந்தை மீது மதிப்பு
இருந்தாலும் அதை வெளிப்படுத்த வாய்ப்பில்லை. மேலும் காரகன் பாவத்தில் இருப்பது
தோஷம் என்ற அடிப்படையில் ராசிக்கு ஒன்பதாமிடமான பித்ரு ஸ்தானத்தில் பித்ரு காரகன்
சூரியன் இருப்பதால் பிதாவுடனான உறவு பாதிப்படையும் என்பதை ஜாதகம்
குறிப்[பிடுகிறது.
இத்தகைய
அமைப்புகள் ஜாதகரை சிறு வயதிலேயே பெற்றோரை விட்டு பிரித்து வைத்தது.
கீழே
மற்றுமொரு உதாரண ஜாதகம்.
மாத்ரு
ஸ்தானம் எனப்படும் (தனுசு) லக்னத்திற்கு நான்காம் அதிபதி குரு வக்கிரமடைந்து வலு
குறைந்தார். அதுமட்டுமல்ல தனது நான்காம் பாவத்திற்கு 6 ஆமிடத்தில் பாவிகளுடன்
சேர்ந்து ரொம்பவே கெட்டுவிட்டார். தாயாரை குறிக்கும் மாத்ரு காரகன் சந்திரன்
ஆட்சியில் இருந்தாலும் அது லக்னத்திற்கு மறைவு ஸ்தானமாகிவிட்டது.
அடுத்து
தந்தையை குறிக்கும் ஒன்பதாம் பாவமான சூரியனுடைய வீடும் ராகுவால் பாதிக்கப்பட்டது. சூரியன் தனது
வீட்டிற்கு 6 ல் மகரத்தில் மறைந்துவிட்டார்.
மேற்சொன்ன
அமைப்புகள் ஜாதகர் தனது பெற்றோரை விட்டு விலகி இருக்க வேண்டும் என்பதை பொதுவாக
குறிக்கிறது.
ஜாதகருக்கு
2013 அக்டோபர் 14 முதல்
கேது திசையில் இருக்கிறார்.
கேது
தாயாரை குறிக்கும் நான்காமிடத்திற்கு 12 ஆமிடமான 3 ல் அமர்ந்ததால் தாயாரை விட்டு
பிரிவு. ஒரு பாவத்திற்கு பிந்தைய பாவத்தில் இருக்கும் கிரகம் அல்லது அதன்
பாவாதிபதி தன் முந்தைய பாவத்தையும் அதில் இருக்கும் கிரகத்தையும் பாதிக்கும்
என்பது ஒரு முக்கிய ஜோதிட விதி.
இதனடிப்படையில்
ஜாதகருக்கு நடக்கும் கேது திசை தாயாரை பாதிக்க வேண்டும். ஆனால் தாயாருக்கு வலுவான
திசா புக்திகள் நடந்தாலோ அல்லது கேதுவின் எதிரி கிரகத்தின் திசா புக்திகள்
நடந்தாலோ பாதிப்பு ஏற்படுத்த இயலாது. எனவே கேது தாயாரை விட்டு விலக வைப்பார் என
எடுத்துக்கொள்ளலாம்.
பித்ரு ஸ்தானம் சிம்ம ராசியாகி அங்கு பாவிகளான செவ்வாயும் ராகுவும் இருப்பதும் சூரியன் தன் வீட்டுக்கு 6 ல் மறைந்ததும் ஜாதகர் தந்தையின் பாக்கியங்களையும் குறைவாகவே பெறுவார் என்பதை உணர்த்துகிறது.
விருட்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு சந்திரன் நீசம். ஐப்பசி மாதம்
பிறந்தவர்களுக்கு சூரியன் நீசம். இவர்கள் நிலை எப்படி என்றொரு கேள்வி எழுகிறது.
மாதா
பிதா காரகர்கள் பலவீனப்பட்டாலும் இவர்கள் தொடர்புடைய பாவங்களான நான்காம் பாவம்
அதன் பாவாதிபதி மற்றும் ஒன்பதாம் பாவம் அதன் பாவாதிபதி இவைகளோடு நடக்கும் திசா
புக்திகளை ஆராய்ந்தே பதில் கூற வேண்டும்.
ஸ்திர ராசியான
விருசிகத்திற்கு 9 ஆமதிபதி சந்திரன் பாதகாதிபதியாவதால் சந்திரன் ராசியில் நீசமாவது
ஒருவகையில் நன்மையே. இதேபோல் ஐப்பசி மாதத்தில் பிறந்தவர்களுக்கு சூரியன்
நீசமாவதால் சூரியன் தொடர்புடைய பாவங்கள் பலகீனமாகலாம் சூரியனின் காரகத்துவம்
மட்டுமே பாதிக்கும் என்ற கட்டாயமில்லை.
எனவே
கிரக காரகத்தை மட்டும் எடுத்துக்கொண்டோ அல்லது பாவத்தை மட்டுமே எடுத்துக்கொண்டோ
மட்டும் ஆராயாமல் கிரகத்தை வலுவடைய செய்யும் ஜாதக காரணிகளையும் பாவத்தை
தாங்கிப்பிடிக்கும் காரணிகளையும் முக்கியமாக நட்சத்திர காரணிகள் மற்றும் நவாம்ச
நிலை போன்ற பல்வேறு காரணிகளையும் ஆராய்ந்தால் ஒரு உறவு அல்லது தொடர்பு எப்போது
பிரியும் என்பதை தெளிவாக அறியலாம். அதன் மூலம் உறவுகளை தாங்கிப்பிடிக்கும்
காரணிகளை அறிந்து அதை வலுவடைய செய்ய முயலலாம்.
மீண்டுமொரு
பதிவில் சந்திப்போம்.
வாழ்த்துக்களுடன்,
அன்பன்,
பழனியப்பன்.