Tuesday, 30 August 2016

ஜோதிடன் – உண்மைக்கதை.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பட்டுக்கோட்டைக்கு அருகில் மதுக்கூரை அடுத்த சிரமேல்குடி என்றொரு சிறிய கிராமம். கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பதற்கேற்ப ஒரு மரத்தடி பிள்ளையாரும் ஒரு ஸ்ரீராமன் கோவிலும் அவ்வூரின் முக்கிய அங்கங்கள். இயற்கையையும் இறைவனையும் நம்பி வாழும் எளிய மக்கள். தேவர்,கள்ளர்,செட்டியார் போன்ற பலவகை ஜாதியை சேர்ந்தவர்கள். சின்னப்பா என்றழைக்கப்படும் சுப்பிரமணிய ஐயர் போன்ற  இதர வகையினர் சொற்பம்.

சின்னப்ப ஐயர் தெலுங்கு பிராமண வகுப்பை சார்ந்தவர். புரோகிதத்தையும் ஜோதிடத்தையும்  தொழிலாகக் கொண்டவர். காரைக்காலில் காரைக்கால் அம்மையார் – கன்னிகா பரமேஸ்வரி அம்மன் சன்னதிகள் இணைந்த கோவிலில் பூஜா காரியங்களில் ஈடுபட்டிருந்தவர். பிற்பாடு பிரெஞ்சு அரசிடமிருந்து பாண்டிச்சேரி விடுதலை பெற்றபிறகு தமிழ்நாட்டுக்கு திரும்பியவர். ஐயரது பூர்வீகம் திருச்சியை அடுத்த நன்னிலத்திற்கு அருகிலுள்ள வெள்ளதம்பாவூர் ஆகும். சின்னப்பா ஐயர் வைஸ்யர்களுக்கு குரு ஆவார். அவர்களது குடும்பத்தவர்க்கு திருமணம் செய்து வைப்பது உள்ளிட்ட வைதீக காரியங்களில் ஈடுபட்டிருந்தார்.

வருடம் ஒருமுறை கோடியக்கரை சென்று தன் முன்னோர்களுக்கு கர்ம காரியங்கள் செய்து அந்தணர்களுக்கு அன்னதானம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார் முன்னோர் ஆசி வாழ்க்கைக்கு அவசியம் தேவை என்பதை உணர்ந்திருந்தார். 

பெண்களுக்கு பிரசவம் என்பது மறு ஜென்மம் என்பார்கள். மருத்துவ வசதிகளற்ற அந்தக்காலத்தை கற்பனை செய்து பாருங்கள். ஐயரின் முதல் மனைவி காமாக்ஷி தனது முதல் பிரசவத்தில் ஒரு ஆண் மகவை ஈன்றெடுத்துவிட்டு அதனை பார்க்கக்கூட கொடுத்துவைக்காமல் போய்ச்சேர்ந்துவிட்டார்.காமாக்ஷி இறந்த சில காலத்தில் ஐயரின் சந்தோஷமான அந்த ஆண் மகவையும் காலன் பறித்துக்கொண்டான். இரண்டாவது மனைவி பெயர் மீனாக்ஷி. மனைவிகளுக்கு என்ன மங்கலமான பெயர்கள் பாருங்கள்.

மீனாக்ஷி ஐயரின் பூர்வீகமான நன்னிலத்தை சேர்ந்தவர். குறைவிலா மூன்று பெண்மக்களை பெற்றெடுத்தார். ஐயருக்கு இரு சகோதரர்கள். ஆனால் சகோதர  உறவுகள் ஏனோ சரியாக அமையவில்லை. சகோதரர்களுடன் பாகப்பிரிவினை நடந்துவிட்டது. ஒரு சகோதரர் ஐயரைவிட்டு விலகிச் சென்றுவிட்டார். மற்றொருவர் பொன்னுசாமி பெரு வியாதி பீடித்தவர். அவரால் தமது குழந்தைகளுக்கு பாதிப்பு வந்துவிடக்கூடாது என்று சின்னப்ப ஐயர் அவரை குடும்பத்துடன் சேர்க்கவில்லை. ஊரின் ஒரு பகுதியில் தனியாக நல்லோர் சிலர் பாதுகாப்பில் வாழ்ந்து வந்தார்.

ஐயருக்கு ஆண்மகவு இல்லாத குறை வருத்தியது. அதனால் சிரமேல்குடிக்கு அருகில் இருந்த காரப்பன்காடு ராமர் கோவிலுக்கு தனது நிலத்தில் 12 குழி  எழுதி வைத்து அதன் வருமானம்கொண்டு மாதந்தோறும் துவாதசி திதியன்று நான்கு அந்தணர்களுக்கு அன்னமிட வேண்டும் என எழுதி வைத்தார். ஐயரின் சகோதரர் பொன்னுசாமியின் பரிதாப நிலைகண்ட மீனாக்ஷி அவருக்கு ஐயரின் எதிர்ப்பையும் மீறி அன்னமிட்டு அன்னையாய் காத்தார். பொன்னுசாமி தனது விவசாய பங்கு நிலத்தை அண்ணியாய் வந்து அன்னையாய் ஆதரித்த மீனாட்சிக்கு உயில் எழுதிவைத்துவிட்டார். ஆனால் காலன் அவருக்கு முன்னதாக மீனாட்சியை அழைத்துக்கொண்டுவிட்டான். அடுத்த சில ஆண்டுகளில்  பொன்னுசாமியும் இறந்தபிறகு அவரது பூமி குழந்தைகளை சேர்ந்தது. மீனாக்ஷி இறந்த  .பிறகு ஐயர் திருமணம் செய்துகொள்ளவில்லை.

ஐயரின் மூன்று மகள்களில் மூத்தவள் மதுரத்திற்கு திருமணம் ஆகிவிட்டது. அவள் தன் கணவருடன் வசிக்கிறாள். இரண்டாமவள் சரோஜா என்ற தேவகிக்கு வயது 13. திருமணம் ஆகிவிட்டது கணவர் பள்ளிக்கூட ஆசிரியர். தேவகி இன்னும் பூப்பெய்தவில்லை என்பதால் தந்தையுடனேயே இருக்கிறாள். கடைக்குட்டி வசந்தாவிற்கு வயது 11. பால்மணம் மாறா சிறுமி.


மூன்று குழந்தைகளை அதுவும் பெண்களாக வேறு மனிதர்கள் வீட்டில் இல்லாமல் தனி ஆளாய் வளர்ப்பது ஒரு ஆணுக்கு எத்தனை சிரமம் என்பதை அனுபவித்துப்பார்த்தால்தான் தெரியும். ஐயர் குழந்தைகளுக்காக நிறைய சிரமப்பட்டார் என்பதைவிட ஒரு தந்தையாக பல தியாகங்களை செய்தார் என்றால் அது மிகையல்ல. சமையல் செய்யவும் குழந்தைகளுக்கு தலைபின்னிவிடவும் ஒரு மூதாட்டியை நியமித்திருந்தார் அவர்.  ஐயரும் தேவைப்படின் சமையல் செய்வார். அவ்வப்போது தானே களத்தில் இறங்கி பலகாரம் செய்து அசத்துவதும் உண்டு.

1955ல் ஒரு நள்ளிரவு ஐயருக்கு தூக்கம் பிடிக்கவில்லை. எழுந்து அமர்ந்துகொண்டார். தேவகியின் தலையை கோதிவிட்டவர் வசந்தாவின் பிஞ்சுபாதங்களை பிடித்துவிட்டார். தனது கண்களில் அவளது பாதங்களை ஒற்றிக்கொண்டார். ஏனோ அவருக்கு கண்களில் நீர் பெருக்கெடுத்தது. எத்தனை நேரம் அப்படியே சுவரில் சாய்ந்து அமர்ந்திருந்தாரோ தெரியவில்லை. ராமையா காலை கருக்கலில் வந்து “சாமீ” என்று அழைத்ததும் தனது சுய நினைவுக்கு திரும்பியவர். “செத்தே இரு ராமையா” என்றபடி பின்பக்கம் சென்று முகம் அலம்பிக்கொண்டு வந்து ராமையாவை பார்த்தார்.

ஐயருக்கு 62 வயதென்றால் ராமையா தேவருக்கு 54 வயதாகிறது. ஐயரின் நிலத்தில் விவசாய பணிகளை கவனித்துக்கொள்வது ராமையாவின் பணி. இருவருக்கும் அதற்கான வாய்வழி ஒப்பந்தம் உண்டு.  வயலுக்கு உழுவதற்கு விடியலில் சென்றால்தான் வெயில் சூடுபிடிக்கும் ஒன்பது மணிக்குள் எண்ணியபடி உழுதுவிடலாம். சின்னப்பா ஐயரின் வீட்டில் உள்ள 3 பத்தாயங்களையும் குறைவின்றி நிரப்பிவைப்பது ராமையாவின்  அயராத உழைப்பினால்தான். ஒரு பத்தாயம் என்பது பத்து நெல் மூட்டைகள் கொள்ளும்  களம். ஒரு பத்தாயத்து நெல்லை அவித்து அரிசியாக்கி அது தீர்வதற்குள் புதிய நெல் வந்து நிரம்பிவிடும். பிறகு பழைய நெல்லை எடுத்து அவிப்பர். நேர்மையான உழைப்பாளி என்று ஐயரின் நம்பிக்கைக்கு பாத்திரமானவராக ராமையா இருந்தார்.ராமையாவுடன் வெகுநேரம் ஐயர் பேசிக்கொண்டிருந்தார். இவர்களின் பேச்சுக்குரல் கேட்டு  குழந்தைகள் எழுந்து வந்தனர். கனத்த மனதுடன் இருவரும் பேச்சை முடித்துக்கொண்டு எழுந்தனர். பிறகு ராமையாவை நோக்கி பட்டுக்கோட்டைக்கு பத்திர ஆபீஸ் வரை போகணும் அதனால வயல் வேலைய முடிச்சுட்டு நேரே இங்கே வா என்று கூறி அனுப்பிவிட்டு குழந்தைகளின் பக்கம் திரும்பினார் ஐயர். 

அடுத்த சில நாட்களின் ஐயரும் ராமையாவும் பட்டுக்கோட்டை சென்று திரும்பினர். குழந்தைகளுக்கு உடை, பக்ஷணங்களுடன் தனக்கும் புது வேஷ்டி மற்றும் ப்ரோகித காரியங்களுக்கு தேவையான காசி சொம்பு மற்றும் ஹோமங்களில் உபயோகிக்கும் எள்ளு, தர்பை உள்ளிட்ட சில பொருட்களையும் சேர்த்தே வாங்கி வந்திருந்தார்.தின்பண்டங்களை குழந்தைகளுக்கு உண்ணக் கொடுத்துவிட்டு தான் வாங்கிவந்த காசி சொம்பு, புது வேஷ்டி,தர்பை,எள்ளு உள்ளிட்ட இதர பொருட்களை ஒரு துணியில் கட்டி அவர் படுக்கும் இடத்திற்கு மேலே தொங்கவிட்டார்.

நாட்கள் கடந்தன. ஐயரும் ராமையாவும் முன்பைவிட அதிக நெருக்கமாக எதையோ விவாதித்துக்கொண்டிருந்தனர். திடீரென்று ஒருநாள் சமையல்கார மூதாட்டியை இனிமேல் வர வேண்டாம் என நிறுத்தினார். இருவரும் பட்டுக்கோட்டை சென்று வந்ததிலிருந்து ஊரில் ஒருசில சலசலப்புகள் ஏற்பட்டன. ஐயர் ராமையாவிற்கு அதிக இடமளிப்பதாகவும் ராமையா ஐயரை ஏமாற்றி அவரது வீட்டையும் நிலத்தையும் எழுதி வாங்கிக்கொண்டதாகவும் ஒரு பேச்சு நிலவியது.

ஒருநாள் ஐயர் “புள்ளைங்களா இன்னிக்கு நம்ம வீட்ல பலகாரம் செய்யப்போறோம்” என்று குழந்தைகளிடம் கூறினார். “ஹையா” என்று குழந்தைகள் குதூகலித்தன. பலகாரம் செய்யும் பணி துவங்கியது. முறுக்கு, பாசிப்பருப்பு உருண்டை, இலுப்பைப்பூ உருண்டை, ரவை உருண்டை, ஓமப்பொடி, பொறி கொள்ளு (பயறு வகைகளில் வறுத்தது), அப்பம்,  என்று பலவகை பலகாரங்கள் பெரிய செம்பு பாத்திரங்கள் நிறைய செய்து குழந்தைகளை அசத்தினார் ஐயர். தன்னால் செய்ய இயலாதவற்றை கடைகளில் வாங்கிவந்து பாத்திரங்களில் நிரப்பிவைத்து குழந்தைகளை திக்குமுக்காட வைத்தார்.

அது ஒரு சனிக்கிழமை குழந்தைகளை தாமரைப்பூ குளத்திற்கு அழைத்துச்சென்று தானே குளித்துவிட்டார். பிறகு அருகிலுள்ள ஐயனார் கோவிலில் தண்ணீர் எடுத்துச் சென்று  அபிஷேகம் செய்து  கோவிலில் தரிசனம். அன்று வீட்டில் குழந்தைகளுக்கு ஐயரே பரங்கிக்காய் சாம்பார் வைத்து குழந்தைகளுக்கு பிரியமுடன் பரிமாறி அதை ஒரு இனிமையான நாளாக்கினார்.. மாலையின் ராமையா வந்தார். தன்  வீட்டில் இருந்த பொருட்கள், நெல்லின் அளவு, உறவினர்கள் தொடர்பான விபரங்கள், வழிபாடுகள் என பல்வேறு வகையில் இருவரும் பேசிக்கொண்டனர். தனது மரண நாளை துல்லியமாக கணித்திருந்த ஐயர் ராமையாவிடம் இன்றைய சனிக்கிழமையை தாண்டிவிட்டால் இன்னும் மூன்று வருடத்திற்கு பிறகுதான் தனக்கு மரணம் நிகழும் ஆனால் இன்று தவற வாய்ப்பில்லை என்றார். நாளைக்கு செய்ய வேண்டியவை நினைவிருக்கட்டும் என சில விபரங்களை காகிதத்தில் குறித்து ஒப்பந்தம் போல பறிமாரிக்கொண்டனர். அன்று வழக்கத்தைவிட நீண்ட நேரம் ஐயரிடம் பேசிவிட்டு பிறகு தமது ஊருக்கு புறப்பட்டுச் சென்றார் ராமையா.

பாசமான குழந்தைகளுடன் பொழுதைகழித்த ஐயர் ஒரு கட்டத்தில் வீட்டின் மதிப்புமிக்க பொருட்களையும் பணத்தையும் வீட்டிலிருந்த மர பீரோவில் வைத்து பூட்டினார். பழைய உடைக்கு மாறினார். ஒரு ஜமுக்காளத்தை தனது படுக்கையாக விரித்தார். தலைமாட்டில் ஒரு புதிய வேஷ்டி, அங்கவஸ்திரம் வைத்தார். பீரோ சாவியை வசந்தாவின் அரைஞானில் கட்டிவிட்டு “இந்த சாவியை ராமையாவைத்தவிர வேறு யாரிடமும் கொடுக்கக்கூடாது” என உத்தரவிட்டார். இரவு சாப்பிட்டுவிட்டு படுத்த ஐயருக்கு திடீரென்று ராமையாவிடம் சில விஷயங்களை உடனடியாக தெரிவிக்க வேண்டும் என எண்ணினார். ஆனால் அதற்கு தன் உடல் ஒத்துழைக்காது என அறிந்திருந்தார்.

மூத்தவள் தேவகியைவிட கடைக்குட்டி வசந்தா சூட்டிகை என்பது ஐயருக்கு தெரியும். வசந்தா மேஷ ராசிக்காரி என்பதால் இயல்பாகவே சுறுசுறுப்பும் சாதுர்யமும் கொண்டவள்.வசந்தாவிடம் ராமையாவை அழைத்துவருமாறு கூறினார்.   மாலை ஏழு மணிக்கே ஊர் அடங்கிவிடும் அன்றைய காலத்தில் இரவு ஒன்பது மணி என்பது கிட்டத்தக்க பாதி ராத்திரி. அந்த நேரத்தில் தனது மகளை தனியாக காட்டுவழியில் அனுப்புகிறோமே என்று சிந்திக்கும் ஆற்றலை இழந்துவிட்டிருந்தார் சின்னப்ப ஐயர்.

ராமையாவின் ஊரான இளங்காடு சிரமேல்குடியிலிருந்து பட்டுக்கோட்டையை நோக்கிய திசையில் மூன்று கிலோ மீட்டர்களாகும். பிராமண வர்க்கத்திற்கே உரிய பளீர் வெண்மை நிறம். பதினோரு வயது நிரம்பிய பால்மணம் மாறாத பருவம். சிறுமி தனது ஊரின் கடைசியில் ஓடும் சிற்றோடையை தாண்டி, வயல்வெளியையும் சுடுகாட்டையும் கடந்து சவுக்குத்தோப்புக்குள் நுழைந்தாள்.நரிகளும், பாம்புகளும் இரைதேட நடமாடும் இராப்பொழுது. சிறுமியின் பயத்தையும் மீறி அவளை செலுத்தியது தனது தந்தையின் கட்டளையை நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணம்.ஒன்றரை மணி நேர பயணத்திற்குப்பின் வசந்தா ராமையாவின் வீட்டை அடைந்தாள்.
“தாத்தா”
“தாத்தா”
என இருமுறை அழைத்தாள்.
எங்கோ ஒரு நாய் குறைக்கும் ஓசை கேட்டது.
மூன்றாம் முறை கூப்பிட துவங்கும்முன் “யாரு?” என விளித்தபடி ராமையா வெளியே வந்தார். சிறுமியை கண்டதும் “தாயீ என்ன இந்தநேரத்துல தனியா?” என்று பதறியபடி சிறுமியை வாரி அனைத்து “அப்பா எப்படி இருக்கார்” என்றார்.
அப்பாதான் உன்ன அழைச்சுட்டு வரச்சொன்னார்” என்றாள் சிறுமி.
சிறுமியின் பதிலில் நிம்மதிபெற்றவராய் வீட்டில் சொல்லிவிட்டு சிறுமியை தூக்கி தோளில் அமர்த்திக்கொண்டு சிறுமி வந்த வழியே நடக்கத்துவங்கினார் ராமையா.

ஒருமணி நேரத்தில் ஐயரை சந்தித்தார் ராமையா.
ஐயரே என்ன இந்நேரத்துல குழந்தைய தனியா அனுப்பிக்கிட்டு என கடிந்துகொண்டார் ராமையா. சோர்வாக இருப்பதாக கூறி சற்றே சரிவாக தனது வீட்டு திண்ணையில்  சாய்ந்துகொண்டார் ஐயர். குழந்தைகளை தனது இரு பக்கங்களிலும் அமர வைத்துக்கொண்டார்.ஐயருக்கு உடல் சோர்வின் காரணமாக பேச்சு குழறத்துவங்கியது.  ஐயரும் ராமையாவும் பேசுவது முழுதும் புரியவில்லை என்றாலும் தூக்கக் கலக்கத்தில் குழந்தைகள் இருவரும் கேட்டுக்கொண்டிருந்தனர். இரவு ஒன்றரை மணி இருக்கும் தனது படுக்கைக்கு மேலே கட்டியிருந்த பொருட்களை அவிழ்த்து எடுத்துவரச்சொன்னார் ஐயர்.

காசிச்சொம்பில் ராமையாவை  ஓட்டை போடச் செய்து அருகில் எரிந்துகொண்டிருந்த அரிக்கேன் விளக்குக்கு பக்கத்தில் வைத்துக்கொண்டார். தான் சொல்லும்போது அதை தனக்கு ஊற்றுமாரும் பாதியை நாளை தனக்கு குளித்துவிடும்போது பயன்படுத்துமாறும் கூறினார். ராமையாவிடம் முன்பே கூறியிருந்ததை குழந்தைகளிடம் தெளிவுபடுத்தினார்.. நாளை தான் தூங்கும்போது ராமையா கூறும்போது தனது நெஞ்சின் மீது நெருப்பு வைக்க வேண்டும் என்று உண்மையின் தீவிரம் தெரியாதவாறு குழந்தைகளிடம் கூறினார். “”அப்பாக்கு சுடுமே என பதறினாள் வசந்தா அறியாமையுடன். அப்பாவிற்கு சுடாது என குழந்தைகள் நம்புவதுபோல் கூறினார் ஐயர். அறியாக்குழந்தைகளும் அதை நம்பினர். வசந்தாவின் கரங்களை பிடித்து இவளை நான் முன்பு சொன்னபடி இவளது அக்கா மதுரம் வீட்டிற்கு வெள்ளியனைக்கு அனுப்பிவிடு தேவகியை அவளது கணவன் வீட்டிற்கு அனுப்பிவிடு என்று கூறினார். பந்தத்தை துறந்த மனோ நிலையில் இருந்த ஐயர் திடீரென்று “ராம ராம” என கூறியபடி  காசிச்சொம்பின் பக்கம் கையை நீட்டினார். ராமையா காசி தீர்த்தத்தை எடுத்து சிறுமிகளிடம் கொடுத்து ஐயரது வாயில் ஊற்றுமாறு கூற குழந்தைகள் ஊற்றினர். ஐயரின் மீது அளவற்ற பிரியம் கொண்ட ராமையாவும் சிறிது ஊற்றினார். ஐயரது ஆன்மா குழந்தைகளையும் ராமையாவையும் விட்டு அந்த ஸ்ரீராமனின் பாதங்களில் தஞ்சமடைந்தது. 
  
ஜோதிடர்கள் தனக்குத்தானே ஜோதிடம் பார்த்துக்கொள்ளக்கூடாது என்றொரு விதி உண்டு. காரணம், எந்த ஒரு ஜோதிடனும் ஜாதக விதிகளை தான் நன்கறிந்த தனது ஜாதகத்தைக்கொண்டே முதலில் ஆராய்வான். பெரும்பாலான ஜோதிடர்கள் தங்களது ஆயுட்காலத்தை துல்லியமாக அறிய தயங்கினாலும் மேலோட்டமாக அறிந்துவைத்திருப்பர்.தயங்கும்  பாடமானாலும் பலமுறை படிக்கும் போது தெளிவாக புரியும் என்பதுபோல் ஒரு காலகட்டத்தில் மரணம் துல்லியமாக புரிந்துவிடும். அதனால் ஜோதிடனின் எஞ்சிய வாழ்நாளில் நிம்மதியை இழந்துவிடுவான் என்பதே  மேற்சொன்ன விதியின் அடிப்படை. மரண காலத்தை துல்லியமாக சாமான்ய மனிதருக்கு கூறி அவர்களது வாழும் நாட்களில் நிம்மதியை குலைக்கக்கூடாது என்பது ஒரு மிக முக்கிய ஜோதிட விதி என்பதால் ஜோதிடர்கள் மற்றவர்களுக்கு கண்ட காலம் என்றவகையில் எச்சரிக்கை மட்டுமே செய்யவேண்டும்.

தனது மரண நேரத்தை துல்லியமாக அறிந்துகொண்ட ஒரு ஜோதிடன் அதன் பிறகு தனது வாழ்க்கையையும் குடும்பத்தையும் எப்படி கையாண்டான் என்பதே இச்சிறுகதை. இதில் வரும் கதாபாத்திரங்களும் சம்பவங்களும் அவை நடந்த இடங்களும் பெயர்களும் உண்மையானவை.சம்பவங்கள் 1950களில் நடந்தவை.


        படத்தில் ஜோதிடர் சின்னப்பா ஐயர் தனது 3 ஆவது மகள் வசந்தாவுடன்.

சின்னப்ப ஐயர் ஊரார் பேசிக்கொண்டபடி தனது வீட்டையும் நிலத்தையும் ராமையாவிற்கே எழுதி வைத்திருந்தார். மதுரம் மற்றும் தேவகிக்கு செய்ய வேண்டிய சீர்களுக்கான பணத்தை அவர்களது கணவர்களிடம் கொடுத்துவிடுமாறு ராமையாவிற்கு உத்தரவிட்டிருந்தார். கடைக்குட்டி வசந்தாவிற்கு தமது உறவினர்கள் திருமணம் செய்விக்கும்போது மட்டுமே அவளுக்கான பங்கை அளிக்கவேண்டும் என வாக்குறுதி பெற்றிருந்தார்.


            திருமதி.வசந்தா பாலசுப்ரமண்ய ஐயர் தற்போது.

ராமையா தேவர் கடைக்குட்டி வசந்தா-பாலசுப்ரமணிய ஐயர் திருமணத்தில் கலந்துகொண்டு சின்னப்ப ஐயரின் கட்டளையை நிறைவேற்றினார். ஐயரின் மூத்த மகள் மதுரத்திற்கு 7 பிள்ளைகள். பேரன் பேத்திகளுடன் வாழ்கிறார். தனது 80 வயதை கடந்த அவர் சமீபத்தில் கணவரை இழந்தார். தேவகியும் அவள் கணவரும் தற்போது உயிரோடு இல்லை. தேவகியின் ஒரே மகள் நாராயணி என்ற குணாவிற்கு  திருமதி.வசந்தா பாலசுப்ரமணியம் 1999ல் திருமணம் செய்வித்து அவர்கள் இரு பெண்குழந்தைகளுடன் சென்னையில் வசிக்கிறார்கள். வசந்தாவிற்கு இரு மகன்களும் ஒரு மகளுமான மூவருக்கும் திருமணமாகிவிட்டது. மூத்த மகன் குமாரின் ஒரே மகளுக்கும் 2 ஆவது மகனின் 3 பெண் மகள்களில் மூத்தவளுக்கும் சமீபத்தில் திருமணம் நடந்துவிட்டது. மகள் முத்துவிஜயாவிற்கு ஒரே பெண் படித்துக்கொண்டிருக்கிறார். ராமையா வசந்தாவின் இரண்டாவது மகன் மோகன்ராஜ் பிறக்கும்வரை வசந்தாவை கண்டு வந்து அவளது தந்தையின் சீர்வகைகளை தனது உயிரிருந்தவரை நிறைவேற்றினார். தனது கணவரை நாற்பத்து  சொச்சம் வயதுகளை கடந்த நிலையில் இழந்த வசந்தா அம்மையார்  எண்பது வயதை நெருங்கும் வயதில் தற்போது தனது  இரண்டாவது மகன் மோகன்ராஜ் குடும்பத்துடன் கரூரில் வசித்து வருகிறார்.

ஜோதிடத்திற்கு சற்றும் தொடர்பில்லாத பிராமணன் அல்லாத குடும்பத்தில் பிறந்த அடியேன் (பழனியப்பன்) பால்யத்தில் திசை தெரியாத சிட்டுக்குருவியாய் தடுமாறியபோது, இச்சிறுவன் தனது தந்தையைப்போல ஜோதிடனாய் வருவான் என அனுமானித்தாரோ என்னவோ தங்களது கூட்டில் எனக்கும் இடம் தந்து ஆதரவளித்தவர் திருமதி.வசந்தா பாலசுப்ரமண்யம் அவர்கள். என்னை ஒரு கட்டுக்கோப்பான மனிதனாக உருவாக்கியதில் இவருக்கு பெரும்பங்கு உண்டு. அந்த வகையில் என்னை வளர்த்த அன்னை இவர் என்பேன்.

விரைவில் மீண்டும் ஒரு பதிவில் சந்திக்கிறேன்,

அன்பன்,
பழனியப்பன்.

Monday, 15 August 2016

கிரக உறவுகள்

கிரகங்களுக்கிடையேயான உறவுகள் மனித வாழ்வில் எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன என்பது பற்றியதே இப்பதிவு.

உலக மனித இனத்தில் ஒவ்வொருவரும் தனித்தன்மை வாய்ந்தவர்களே. ஒருவரது சாயல் மற்றொருவருக்கு இருக்கலாமேயன்றி முழுக்க பிரதி எடுத்தது போன்று தோற்றமும் எண்ணமும் அமைந்துவிடாது. உடல் ஒன்றாகவும் தலை இரண்டாகவும் அமைந்த அபூர்வ மனித பிறவிகளுக்குக்கூட எண்ணங்களில் மாறுபாடு உண்டு.

நாம் அணைவரும் ஒரு வகையில் கிரக கதிவீச்சுகளின் அம்சங்களே. ஒவ்வொரு வண்ணக்கதிர்வீச்சுக்கும் ஒருசில பிரத்யோக பலன் உண்டு. உதாரணமாக சிவப்பு வண்ணம் வேகத்தையும் போர்க்குணத்தையும் தூண்டும். நீலம் அமைதி தரும். மஞ்சள் மலர்ச்சியையும் வளர்ச்சியையும் தூண்டும்,. பச்சை வண்ணம் வாழ்வில் ஒரு பிடிப்பையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தும். இப்படி பல. இந்தவகையில் ஒவ்வொரு கிரகமும் ஒரு நிற கதிவீச்சை பிரதிபலிக்கிறது.

குருவிடமிருந்து வெளிப்படும் மஞ்சள் நிறக்கதிர்வீச்சு செவ்வாயிடமிருந்து வெளிப்படும் சிவப்புநிறக்கதிர்வீச்சோடும் சூரியனின் வெளிர் மஞ்சளோடும் சந்திரனின் வெள்ளை நிறத்தோடும்  இணைந்து செயல்படுகிறது. அதனால் இந்த நான்கும் நட்புக்கிரகங்கள்.

சுக்கிரனிடமிருந்து வெளிப்படும் கருமை கலந்த தீவிர வெண்மை நிறக்கதிர்வீச்சு சனியிடமிருந்து வெளிப்படும் நீல நிறக் கதிர்வீச்சோடும் புதனின் பச்சை நிறத்தோடும்  குறிப்பிட்டுசொல்ல இயலாத ராகு-கேதுக்களின் கதிர்வீச்சோடும் இணைந்து செயல்படுகிறது. எனவே இவை ஐந்தும் நட்புக்கிரகங்கள்.



முதலாவது கோஷ்டிக்கு தலைவர் தேவகுரு எனப்புகழப்படும் வியாழன் கிரகம். இரண்டாவது கோஷ்டிக்கு தலைமை வகிப்பது அசுர குரு எனப்புகழப்படும் சுக்கிரன் ஆவார். முதலாவது தேவ கோஷ்டி என்றும் இரண்டாவது அசுர கோஷ்டி என்றும் அழைக்கப்படுகிறது. தலைமை வகிக்கும் குரு-சுக்கிரன் இரண்டும் ஆச்சாரியர்கள் என போற்றப்படுகிறார்கள்.


தேவர்கள்-அசுரர்கள் என்பதெல்லாம் இந்த கர்ம பூமியில் பிறக்கும் மனிதனின் இருவேறு குணங்களை அளவிட பயன்படுத்தப்படும் வார்த்தைகள். அவ்வளவே. உண்மையில் நாம் ஒவ்வொருவரின் பூர்வ ஜென்ம கர்மங்களுக்கு தகுந்த மாதிரியான பலன்களையே வாழ்வில் எதிர்கொள்கிறோம் என நமது இந்து தர்மம் கூறுகிறது.

கர்மபூமியில் பிறந்த மனிதன் இரு குணங்களையும் அதாவது நல்ல மட்டும் தீய குணங்களை கொண்டவனாகவே பிறக்கிறான். முழு நற்குணமோ அல்லது முழு தீய குணமோ கொண்டு இந்தக்கலியில் யாரும் பிறக்க முடியாது என்பது அந்தப் பரந்தாமன் வகுத்த விதி.


இதில் புதனிடமிருந்து வெளிப்படும் பச்சை நிறக்கதிர்வீச்சுக்கு ஒரு தனித்தன்மை உண்டு. அது நாரதர் போல. அதன் பச்சை நிறக்கதிர்வீச்சு  இரு கோஷ்டிகளோடும் இணைந்து செயல்படும். குறிப்பாக புதனுக்கு சூரியனோடு மிகுந்த நட்பு உண்டு. சூரியனுக்கு அடுத்து பட்டத்துக்கு உரிய கிரகம் (HEIR) என அழைக்கப்படுகிறது புதன். இளவரசுப்பட்டம் சூட்டப்பட்ட கிரகமான புதனை சூரியனுக்கு சம பலம்கொண்ட நட்புக்கிரகம் என ஜோதிடம் குறிப்பிடுகிறது. வேறெந்த கிரகத்திற்கும் இந்த உரிமை இல்லை. சூரியனின் கதிர்வீச்சு தாக்கத்திற்கு ஒப்பான தாக்கத்தை ஏற்படுத்தவல்லது புதனின் கதிர்வீச்சு. அதனை மனித வாழ்வின் சம்பவங்களைக்கொண்டுதான் அறிய முடியும்.

புத்தியில்லா மனிதன் பிணத்திற்கு சமம் என்பர். புதன் ஒருவரது புத்தி சாதுரியத்தை குறிப்பிடுகிறது. அதனால்தான் புதனை புத்திகாரகன் என ஜோதிடம் போற்றுகிறது. இளவரசுப்பட்டம் பெற்ற புதனுக்கு மந்திரி கிரகமான குருவோடும் சேனாதிபதி கிரகமான செவ்வாயோடும் இணைந்து செயல்படாது ஆனால் அவற்றிற்கு இணையாக செயல்படும் சமக்கிரகம். அரசி கிரகம் என ஜோதிடம் வரையறுக்கும் சந்திரனின் கதிர்வீச்சோடும் இணைந்து செயல்படாது. புதனுக்கு சந்திரன் எதிரிதான். ஒரு கிரகத்தின் கதிர்வீச்சோடு இணைந்து செயல்படாத கிரகங்கள் அக்கிரகத்துக்கு பகைக்கிரகங்களாகின்றன.

இரு கோஷ்டி கிரகங்களிலும் உள்ள கிரகங்கள் ஒன்றுக்கொன்று நட்பு பகை சமம் என்ற வகையில் செயல்படும் என்றாலும் தேவ கோஷ்டியிலுள்ள செவ்வாய்க்கும் அசுர கோஷ்டியிலுள்ள சனிக்கும் உண்டான பகை தீவிரமானது. இரண்டும் இரு வேறு துருவங்கள்.

செவ்வாய் – அவசரம்             சனி – பொறுமை
செவ்வாய்- வேகம்               சனி - நிதானம்
செவ்வாய் – அதி குரூரம்         சனி- குரூரம்
செவ்வாய் – ஆதிக்கம்            சனி- பணிவு
செவ்வாய் – சேனாதிபதி          சனி- போர்வீரன்
           
மிகவும் தீவிரமாக செயல்படும் இவ்விரு கிரகங்களும் ஒன்றுக்கொன்று கடுமையான பகை கிரகங்களாகும். ஜாதகத்தில் நன்கமைந்தால். இவைகள் கொடுக்கும் செல்வங்கள் தலைமுறைக்கும் நிலைத்து நிற்கக்கூடியதாக இருக்கும். இவை இரண்டும் கேந்திர ஆதிபத்தியம் பெற்று ஒன்றாக இணைந்திருந்தால் நல்ல பலனையே தரும். எனினும் அந்த நல்ல பலனை தருவதிலும் தங்களது தனித்தன்மை வாய்ந்த அம்சங்களை நிலைநாட்ட முயலும்.

செவ்வாய் நன்கமைந்தால் அதிகாரம் மிக்க பதவியும் பூமி யோகமும் ஏற்படும். காவல், ராணுவம் போன்ற பாதுகாப்புத்துறைகளோடும், விவசாயம், சுரங்கம், பொறியியல் துறையோடும் தொடர்பை ஏற்படுத்தித் தரும்.

சனி நன்கமைந்தால் சாதாரணமான நிலையிலிருந்து உயர்ந்த நிலைக்கு படிப்படியாக நிதானமாக அதே சமயம் உறுதியாக முன்னேறுவர். கடுமையான உழைப்பு, சட்டம்-ஒழுங்கு, நீதித்துறை, பொறியியல், மக்கள் தொடர்பு போன்றவற்றோடு சம்மந்தப்படுத்தும். சிறந்த பணிச்சூழல், நல் ஆயுள் போன்றவை சனி ஜாதகத்தில் நன்கமைந்தால் கொடுக்கும் கொடை.

பாரதத்தின் 70 ஆவது சுதந்திர தினத்தை ஒட்டி வெளிவரும் இப்பதிவில் சனி-செவ்வாய் செயல்பாட்டுக்கு ஒரு உதாரணம். 

சுதந்திர வேட்கை கொண்ட சனியின் அம்சமான சாமான்யர்கள் ஜாலியன் வாலாபாக்கில் குழுமியிருந்தனர். அப்போது அதி கோபம் கொண்ட செவ்வாயின் அம்சமான ஜெனரல் டயர் அவர்களை ஈவு இரக்கமற்ற வகையில் சுட்டுத்தள்ள உத்தரவிட்டான். அந்தக்கோரக்காட்சியை காந்தி திரைப்படத்தில் காணும்போது நமது நெஞ்சம் பதறும். நேரில் கண்டவனுக்கு எப்படியிருக்கும். அந்த சுதந்திர போராட்ட நிகழ்வுக்கு சற்றும் தொடர்பில்லாத ஒரு 19 வயது இளைஞன். கூட்டம் நடக்கும் இடத்திற்கு அருகில் இருந்த கிணற்றில் தண்ணீர் எடுக்க வந்தவன் தப்பிப்பிழைத்தான். மிகச்சரியாக அடுத்த 19 ஆவது வருடத்தில் அவனது முப்பத்து எட்டாவது வயதில் இங்கிலாந்தில் பணி ஓய்வு பெற்று தனது இறுதிக்காலத்தை கழித்துக்கொண்டிருந்த ஜெனரல் டயரை கண்டுபிடித்து சுட்டுக் கொன்றான் சனியின் அம்சமான உத்தம்சிங்.

செவ்வாய் கோபத்தில் கோரத்தாண்டவம் ஆடியது.

சனி நிதானித்து பழி தீர்த்தது.

குணம் ஒன்றுதான். அது வெளிப்படும் விதம்தான் இரண்டுக்கும் வேறு.

கீழ்க்காணும் ஜாதகத்தை கவனியுங்கள்.



கர வருஷம் கார்த்திகை மாதத்தில் (NOV 2011) பிறந்த சிறுவனின் ஜாதகம் இது.

சிறுவனின் லக்னத்தில் விரைவான செயல்பாட்டை குறிக்கும் இரு கிரகங்களான செவ்வாய்-சந்திரன்.  ஆனால் சந்திரன் இங்கு விரயாதிபதி என்பதும் தேய்பிறை சந்திரன் என்பதும் கவனிக்கத்தக்கது. வாக்கு காரகனும் புத்தி காரகனுமான புதன் செவ்வாயின் வீட்டில் அமைந்து செவ்வாயால் பார்க்கப்படுகிறார். இந்த அமைப்பின்படி சிறுவனது எண்ணம் வார்த்தையாக வெளிப்படும்போது வேகமாக வெளிப்பட வேண்டும்.

ஜாதகத்தில் மெதுவான செயல்பாட்டை குறிக்கும் சனி உச்சம் என்பது கவனிக்கத்தக்கது. சனி செவ்வாயின் சித்திரை நட்சத்திரத்தில் அமைந்து செவ்வாயின் விரைவான செயல்பாட்டுக்கு தடை போடுகிறது.மன எண்ணங்களை விரைவாக வார்த்தைகளாக வெளிப்படுத்த செவ்வாய் விழைகிறது. செவ்வாயின் நட்சத்திரத்திலமைந்த சனி அதை நிதானப்படுத்துகிறது. எண்ணம் விரைவாகவும் அது வெளிப்படும் வார்த்தை மெதுவாகவும் அமைந்துவிட்டால் அங்கு பேச்சில் தடை ஏற்படும். சிறுவனுக்கு கடந்த ஜூலை மாத கடைசி வாரத்தில் சுக்கிர திசையில் சனி புக்தி துவங்கியது.முதல் பேச்சில் தடை இருப்பது தெளிவாக தெரிய ஆரம்பித்தது. சனி தனது புக்தியில் பேச்சுக்கு தடை ஏற்படுத்துகிறார் என்பதை தெளிவாக அறிய முடிகிறது.

இந்தப்பதிவில் சனி-செவ்வாய்க்கிடையேயான உறவை அலசினோம் மற்றொரு சந்தர்ப்பத்தில் இதர கிரகங்களுக்கிடையேயான உறவுகளையும் அலசுவோம்.

அடுத்த பதிவு.

ஒரு ஜோதிடனின் வாழ்வில் நிகழ்ந்த உண்மை நிகழ்வுகள்.

வாழ்த்துக்களுடன்,
அன்பன்,

பழனியப்பன்.  

விடுபட்ட பிற்சேர்க்கை : 
சிவப்பையும் கருப்பையும் பிரதான வண்ணங்களாக தங்கள் கொடிகளில் இணைத்து பயன்படுத்தும் தமிழக அரசியல் கட்சிகளை கவனியுங்கள. இவர்களது செயல்கள் எப்போதும் சுயநலம் சார்ந்ததாகவே இருக்கும். மறந்தும் கூட மக்களுக்காக இவர்களால் அரசியலை பயன்படுத்த முடியாது என்பது கசப்பான உண்மை.