Thursday, 11 January 2018

திருமண பொருத்த நிலைகள் – 1

தண்டனை தாமதத்திற்கு உரிய சனி பகவான் பெயர்ச்சியாகி குடும்ப காரகன் குருவின் வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில் பல வருடங்களாக திருமணம் தடைபட்டவர்களுக்கு திருமணம் நடைபெற ஒரு நல்வாய்ப்பு இனிதே கனிந்துள்ளது. இந்நிலையில் திருமண பொருத்தத்தில் நட்சத்திரப்பொருத்தத்தை தவிர முக்கியமாக ஜாதக பொருத்தம் இன்றியமையாததாகிறது. கவனமாக ஆராய்ந்தால் ஒருவரின் இல்லற வாழ்வை,  குடும்ப வாழ்வை பாதிக்கும் அமைப்புக்கு சரியான வலுவுடைய ஜாதகத்தை சேர்த்தால் பல துயரங்களை தவிர்க்கலாம். அதற்கான வாய்ப்பை ஜோதிஷம் எனும் அற்புதக் கலை மூலம் நமது ஆன்றோர்கள் நமக்கு அருளியுள்ளனர். ஜாதக பொருத்தத்தில் பல்வேறு கூறுகள் உள்ளன என்பதால் அவற்றை ஒரு தொடராக திருமண நிலைகள் என்ற தலைப்பில் எழுத உள்ளேன். இது முதலாவது பகுதி என எடுத்துக்கொள்ளுங்கள்.



களத்திர கிரகங்கள் என்பது ஆணுக்கு சுக்கிரனும் பெண்ணிற்கு செவ்வாயுமாகும். சப்தமாதிபதி கிரகமும் இந்த வகையில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். ஆண் - பெண் ஜாதகங்களில் இவை ஒன்றுக்கொன்று பாதகத்தில் அமையக்கூடாது. பொருத்தம் பார்க்கும் ஜோதிடர்கள் இதை கவனிப்பது மிக முக்கியம்.


உதாரணமாக பின்வரும் ஜாதக அமைப்பை கவனியுங்கள். 

ஏழாம் அதிபதி ஏழுக்கு பாதகத்தில் உச்ச நிலையில் அமைந்துள்ளது. இது பாதகமான அமைப்பு. ஆனால் உச்சமான ஒரு கிரகம் மகிழ்ச்சியான மனநிலையில் இருக்கும் என்பதால் திருமணத்தை தாமதப்படுத்தும் அவ்வளவே. பொதுவாகவே மெதுவாக சுற்றும் சனி ஒருவரது ஜாதகத்தில் உச்சமாகி அது ஏழாம் இடத்துடன் தொடர்புபெற்றால் அத்தகையவர்களுக்கு திருமணம் தாமதமாகும் என்பதை நினைவில் கொள்க.

இத்தகைய அமைப்பை ஈடு செய்யும் வகையில் துணையாக வருபவருக்கு பின்வரும் அமைப்பு அவரது ஜாதகத்தில் இருத்தல் நலம். துணையாக வருபவருக்கு மேற்கண்ட ஜாதகத்தின் நடப்பு திசா கிரகத்தின் நட்பு வகையிலான திசா புக்திகள் நடக்க வேண்டும்.  ஒருவரது திசா நாதன் மற்றொருவருடைய ஜாதக அமைப்பில் 1,6,8,1௦,12  தொடர்பில் இருந்து திசை நடத்தக்கூடாது.. மேலும் அப்படி இருந்தால் அது பிரச்சனைகளை ஏற்படுத்தும். மேலும் மேற்கண்ட ஜாதகத்தில் சனி இருக்கும் துலாத்தில் துணைவராக வருபவருக்கு   குரு இருத்தல் அல்லது பார்த்தல் நலம்.

இரண்டாவதாக பின்வரும் ஜாதக அமைப்பை கவனியுங்கள்


இங்கு சனி உச்சமாகி வக்ரமாகியுள்ளது. எனவே இது நீச்சத்திற்கு ஒப்பான நிலை. இந்த நிலையில் அமைந்த ஜாதகருக்கு (இதர கிரக அமைப்புகளும் சாதகமாக இல்லாத சூழ்நிலையில்) பாதிப்பை தர வாய்ப்புண்டு.

இத்தகைய நிலையில் ஜாதகர் தனது வாழ்க்கைத்துணைவரை எதோ ஒரு வகையில் பாதிக்கப்பட்டவராக தேர்ந்தெடுத்தல் நலம். உதாரணமாக சனி பாதத்தை குறிக்கும் கிரகம் என்பதால் காலில் பாதிப்பை கொண்டவரையோ அல்லது மணமுறிவு மற்றும் துணைவரை இழந்தவரையோ  திருமணம் செய்தால் வாழ்வு சிறக்கும். இல்லையேல் ஜாதக அமைப்பு துணைவர் வந்தபிறகு தனது அம்சமாக துணைவரை மாற்றிவிடும்.

மூன்றாவதாக மற்றுமொரு அமைப்பு கீழே.


மேற்கண்ட ஜாதக அமைப்பில் ஏழாம் அதிபதி சனி தனது மூலத்திரிகோண வீட்டில் அற்புதமாக அமைந்துள்ளது. செவ்வாயும் அப்படியே. ஆனால் சனியால் செவ்வாய் பார்க்கப்படுகிறது. இத்தகைய அமைப்பு ஆணுக்கு இருந்தால் மனைவியால் அவர் பாதிப்படைவார். அவரது செயலை மனைவி கட்டுப்படுத்த முனைவார். அதனால் அங்கு மணவாழ்வில் பிரச்சனை ஏற்படும். இதே அமைப்பு பெண்ணுக்கு இருந்தால் ஜாதகி கணவரை கட்டுப்படுத்த முயற்சிப்பது மட்டுமின்றி (கணவன் – செவ்வாயை சனி பார்ப்பதால்) ஜாதகிக்கு புத்திர பாக்கியம் தொடர்பில் மரபணு ரீதியான பிரச்சனை எழக்கூடும். இதற்கு செவ்வாயோடு  சந்திரன், கடக ராசி மற்றும் குருவின் நிலைகளையும் கவனிக்க வேண்டும்.

இத்தகைய ஜாதக அமைப்பை ஈடு செய்யும் வகையில் துணையாக வருபவருடைய ஜாதக அமைப்பு இருக்குமாறு ஜோதிடர்கள் கவனித்து சேர்ப்பது மிக அவசியம். இல்லாவிட்டால் இத்தகைய அமைப்பு பாதிக்கும் வாய்ப்பு உண்டு.

நான்காவதாக ஒரு ஜாதக அமைப்பு கீழே


மேற்கண்ட ஜாதக அமைப்பு பெண்ணுக்கு இருந்தால் மிகக்கடுமையான தோஷம். 7ல் ஒரு நீசன் மற்றும் 7 , 8  அதிபதியான சனி நீசம். பெண்ணுக்கு 8 ஆமிடம் மாங்கல்ய பலத்தை குறிக்கக்கூடியது என்பதை நினைவில் கொள்க. இவ்விரு கிரகங்களும் எதோ ஒரு வகையில் நீச பங்கம் பெற வேண்டும் இல்லையேல் மகரத்தில் குரு – சனி இணையும் காலத்தில் (2020 ல்) இந்த தோஷம் நீங்கும் காலம் திருமணம் செய்வது நலம்.

பொதுவாக ஆண் ஜாதகமாக இருந்தால் சுக்கிரனுக்கு பாதகத்தில் செவ்வாயோ அல்லது ஏழாம் அதிபதியோ இல்லாமலும், பெண்ணாக இருந்தால் செவ்வாய்க்கு பாதகத்தில் சுக்கிரனோ அல்லது ஏழாம் அதிபதியோ இல்லாமல் கவனித்துச்சேர்ப்பது நலம்.

மீண்டும் ஒரு பதிவில் சிந்திப்போம்.

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,
பழனியப்பன்.
கைப்பேசி எண்: 8300124501