Sunday, 5 August 2018

வைதேகி காத்திருக்கிறாள்.


சம்பாத்தியத்திற்காக குடும்பத்தை பிரிந்து வெளிநாடு சென்று வேலை பார்க்கும் அன்பர்களின் வாழ்க்கை பார்வைக்கு சிறப்பாகத் தோன்றினாலும் பெரும்பாலும் அதில் துயரங்களும் கலந்தது என்பதே உண்மை. அதிலும்  கணவரை வெளி நாட்டுக்கு அனுப்பிவிட்டு நமது இல்லத்தரசிகள் படும் மனோரீதியான துயர் கொடுமையானது. அதனினும் கொடுமை மண முடித்த ஓரிரு ஆண்டுகளில் குடும்பத்தை பிரிவது.




வெளிநாட்டில் வேலை பார்க்கும் அனைவரும் ஒவ்வொரு ஆண்டும் தாய்நாடு திரும்புவதில்லை. அப்படி ஆண்டுக்கு ஒருமுறையாவது குடும்பத்தை பார்க்க இயலாதோர் இல்லற வாழ்க்கை உண்மையில் சபிக்கப்பட்ட ஒன்றுதான். அந்த வரிசையில் சமீபத்தில் ஆராய்ந்து என்னை பாதித்த இரு ஜாதகங்கள் இன்றைய பதிவில் இடம்பெறுகின்றன.


ஒரு ராசி மண்டலத்தின் இறுதி 3 பாகைக்குள் இருக்கும் கிரகமும் முதல் மூன்று பாகைக்குள் இருக்கும் கிரகமும் வலுவற்ற அமைப்பில்தான் இருக்கும்.

மேற்கண்ட ஜாதகத்தில் லக்னம் 1.12 பாகையில் ராசி மண்டலத்தின் விளிம்பில் அமைந்துள்ளது வலுவற்ற அமைப்புதான். அதைவிட ஒரு ஜாதகத்தில் ஜாதகரை  தாங்கிப்பிடிக்க வேண்டிய லக்னாதிபதியும்,  குடும்ப பாக்ய பாவாதிபதியுமான சுக்கிரனும் ராசி சந்தியில் 0 பாகையில் நிற்பது மிக மோசமான அமைப்புதான். லக்னாதிபதி புதன்,  களத்திர & பாதகாதிபதியும் குடும்ப காரகனுமான குரு சாரம் (புனர்பூசம் – 4) பெற்று நிற்பது ஜாதகி கணவன், குடும்ப வகை பாதிப்புகளை அடைவாள் என்பதை குறிக்கிறது.

சுக்கிரன் திக்பலம் பெற்ற விரையாதிபதி சூரியனுடன் இணைந்து 10 ல் மாந்தியுடன் இணைந்து நிற்பது குடும்ப வாழ்க்கை விரையமாவதை குறிப்பிடும் அமைப்பாகும். அப்படி அமைந்த சுக்கிரனை கேந்திராதிபத்ய தோஷம் பெற்ற குரு பார்ப்பது ஜாதகியின் குடும்ப வகை பாதிப்பின் தீவிரத்தை காட்டுகிறது.


பொதுவாக அனைத்து லக்னத்தவர்க்கும்  சுக ஸ்தானாதிபதி வக்ரமடைவது சுகத்தில் ஏற்படும் தடையை குறிப்பிடும் என்றாலும் உபய லக்னத்தவர்க்கு மட்டும் 4 ஆம் அதிபதி 4 ஆமிடத்தில் தனித்த நிலையில் எப்படி நின்றாலும் பாதிக்கும்.

நான்காமிடத்தில் ஆட்சியில் நின்றால் கேந்திராதிபத்திய தோஷம், வக்ரமடைந்தாலும் சுகக்கேடு. சனி, ராகு-கேதுக்களோடு இணைந்து 4 ல் நின்றால் தோஷம் பெருமளவில் குறையும். குரு களத்திர பாவாதிபதியாகி களத்திர பாவத்திற்கும் 10 ல் கேதிராதிபத்திய தோஷம் பெற்று நிற்பதும் பாதிப்பே.

போக ஸ்தானமான 3 மற்றும் கணவன் மனைவிக்கிடையேயான உடல் ரீதியான உறவை குறிக்கும் 8 ஆமிடாதிபதி செவ்வாய் நீசமானது பரிதாபத்திற்குரியது. பெண்ணின் ஜாதகத்தில் களத்திர , மாங்கல்ய காரகனான செவ்வாய் நீசம் பெற்றது ஜாதகியின் கணவனுக்கு உள்ள உயிராபத்தை குறிப்பது மட்டுமல்லாது ஜாதகி கணவனால் சுகமடைய முடியாது என்பதையும் குறிப்பிடுகிறது.

உபய லக்னத்திற்கு 11 ஆமிடம் பாதகமில்லை என்றாலும் பொதுவாக கடகத்தில் நிற்கும் கிரகங்கள் எந்த ஒரு ஜாதகருக்கும் மன ரீதியான பாதிப்பை தரும். கணவனை குறிக்கும் செவ்வாய் ஜல ராசியான கடகத்தில் நிற்பது ஜாதகியின் கணவன் வெளிநாட்டில் வசிப்பதை குறிப்பிடுகிறது. செவ்வாய் நீசம் பெற்ற நிலையில் கேது தொடர்பைபுயும் பெற்று சனி பார்வை பெறுவது, கணவன் தனக்கு ஏற்படும் கடனை அடைக்க வெளி நாடு சென்று பணி புரிவதையும் குறிப்பிடுகிறது. கடகம்-வெளிநாடு, சனி – வேலை, செவ்வாய் – கணவன், கேது = கடன்.

மேற்கண்ட அமைப்பை 5 ஆமதியும் கர்ம காரகனுமான சனி பார்ப்பது ஜாதகியின் கணவனுக்கு ஏற்படும் பாதிப்பு அவனது கர்ம வினையால் ஏற்படும் பாதிப்பு என்பதை தெள்ளதெளிவாக எடுத்துரைக்கிறது.

இனி ஜாதகியின் கணவரது ஜாதகத்தை அலசுவோம்



லக்னத்தில் இரு ஜலக்கிரகங்கள். லக்னாதிபதி தன ஸ்தானத்தில் கேதுவும் ஒரு ஜலக்கிரகம் என்பதுடன் கேது வெளிநாட்டையும் குறிக்கும் கடனையும் குறிக்கும். ஒரு ஜாதகர் வெளிநாடு செல்வதை குறிக்கும் 9 ஆம் பாவாதிபதி லக்னத்தில் உள்ள இரு ஜலக்கிரகங்களுடன் இணைகிறது. ஜீவன காரகன் சனி 9 ஆம் பாவத்தில் நீசமடைந்து வக்கிரம் பெற்ற நிலையில் நிற்கிறது. இந்த அமைப்புகள் அனைத்துமே மனைவியின் ஜாதகத்தில் குறிப்பிட்டபடி ஜாதகர் வெளிநாட்டில் வசிப்பதை குறிப்பிடும் அமைப்பாகும்.

குரு குடும்ப காரகன், புத்திர அஷ்டமாதிபதி என்பதோடு அவர் குடும்ப பாவத்திற்கு விரையத்தில்  லக்ன விரையாதிபதி சந்திரன் மற்றும் சுக, பாக்யாதிபதி செவ்வாயுடன் இணைந்து நிற்கிறார். ராகு-கேதுவின் அச்சுக்கு வெளியே மனைவியை குறிக்கும் சுக்கிரனும் குடும்ப பாவாதிபதி புதனும் நிற்கின்றனர். இந்த அமைப்பு மனைவி குழந்தையை விட்டு பிரிந்து ஜாதகர் வெளிநாடு செல்லும் நிலையை குறிக்கிறது.  எனினும் வெளிநாட்டில் ஒருவர் வாழும் காலத்தை திசா-புக்திகளே முடிவு செய்கின்றன.

ஜாதகர் ராகு திசையில் துவங்கிய தொழில் நஷ்டமடைந்தது. சனி நீசமடைந்து வக்கிரம் பெற்றாலும் அவர் கடனை குறிக்கும் கேது சாரம் பெற்று கேது லக்னாதிபதியுடன் இணைந்து சனிக்கும் கால புருஷனுக்கும் ஆறில் மறைந்து சஷ்டாஷ்டகம் பெற்று லக்னாதிபதியோடு தன ஸ்தானத்தில் அமைந்ததால் தொழிலில் மிக மோசமான இழப்பை சந்தித்தார். (செவ்வாய் & கேது = கடன். சனி = கடனால் ஏற்படும் பாதிப்பு.).

குரு வீட்டில் அஷ்டமத்தில் நின்றாலும் ஐந்தாமிட தொடர்பையும் பெற்ற காரணத்தால் ராகு திசை சந்திர புக்தியில் 11.06.2006 ல் திருமணம் நடந்து அதே சந்திர புக்தியில் 11.03.2008 பெண் குழந்தை பிறந்தது.

ஜாதகர் வங்கிக்கடன் பெற்று நடத்திய தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் அதனை அடைக்க வழிதெரியாது விழித்தார். ஜாதகர் சிம்ம லக்னம், ராசி என்பதால் ஜாதகரின் முறையீட்டை அரசு ஏற்று வங்கிக்கடனில் பெரும்பகுதியை தள்ளுபடி செய்தது.  மீத தொகையை அடைக்க வழி தெரியாது இரு முறை ஜாதகர் தற்கொலைக்கு முயன்றார். அஷ்டம ராகு ஆயுளையும் உலுக்கினார் என்றே கூற வேண்டும். அதோடு அடைந்த அவமானம் அளவில்லாதது. பொதுவாக நெருப்பு ராசியை லக்னமாக கொண்டவர்கள் கௌரவதிற்காக உயிரை மாய்த்துக்கொள்ளவும் துணிகின்றனர்.

திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை என்றபடி ஜாதகர் காவிரிக்கரையில் ஜீவசமாதியான மகான் ஸ்ரீசதாசிவ பிரம்மேந்திரரை சரணடைந்தார். ஜாதக அமைப்பில் கேது 2 ஆமிடத்தில் இருந்து லக்னத்தை நோக்கி வருவதால் ராகு கொடுத்த தொல்லையை கேதுவின் அம்சமான மகான் குறைத்தார் என்றே சொல்லவேண்டும். பூர்வீக வீடு ஏலத்தில் போவதில் இருந்து தப்பியது.


சதாசிவ பிரம்மேந்திராள் அதிஷ்டானம், நெரூர். (கரூர் அருகில்)

ஜாதகருக்கு அஷ்டமத்தில் நின்ற ராகு திசை முடிந்து அஷ்டமாதிபதியான குருவின் திசை தொடங்கியது. ஓநாயிடமிருந்து மீண்டு புலியிடம் சிக்கிய புள்ளிமானின் கதைதான். குடும்ப காரகன் குடும்பத்திற்கு விரையத்தில் லக்னத்தில் இருப்பதால் குரு குடும்பத்திலிருந்து ஜாதகரை பிரித்தார்.

ஜாதகர் 2008 மத்தியில் கடனை மீட்க பொருளீட்ட வெளிநாடு சென்றார். தற்போது 2018. இடைப்பட்ட 10 வருட காலத்தில் ஜாதகர் 2013 ல் குடும்ப பாவாதி புதனின் புக்தியிலும் களத்திர காரகன் (ஆணுக்கு) சுக்கிரனின் புக்தியில் 2016 லும் இந்தியா வந்தார். புதன் சுக்கிரன் இருவரும் சுக ஸ்தானாதிபதி செவ்வாயின் நட்சத்திரம் சித்திரையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.     

மனைவியின் ஜாதகத்தில் கணவனின் கடன் நிலைமை, கணவனுக்கு ஏற்படும் உயிராபத்து, தற்கொலைக்கு முயன்றது, வெளிநாட்டு வேலை ஆகியவை தெளிவாக உள்ளது.

கணவனின் ஜாதகத்தில் மனைவியை குறிக்கும் சுக்கிரன் சுகஸ்தானமான 4 க்கு விரையத்தில் மூன்றில் ஆட்சி பெற்றது. ராகு-கேதுவின் அச்சை விட்டு குடும்ப பாவாதிபதியும் மனைவியான சுக்கிரனும் விலகி இருப்பது ஆகியவை குடும்ப வாழ்வில் இருவருமே பெரிய அளவில் சுகப்பட இயலாது என்பதையே காட்டுகிறது.  இருவரையும் கிரகங்கள் விதி வசத்தால் அல்ல ஜாதக அமைப்பாலேயே இணைத்திருக்கின்றன.

கணவன்-மனைவி இருவருக்குமே இது கடவுள் போட்ட முடிச்சுதான் எனலாம்.

ஓரிரு ஆண்டுகளே இல்லற இன்பத்தை அனுபவித்த தம்பதியரில் இருவரின்  நிலையுமே கொடுமையானதுதான். வெளிநாடு சென்ற கணவன் இரு முறை மட்டுமே இந்தியா வந்து சென்றுள்ளார். தனது மகள் பூபெய்த இருக்கும் நிலையில் அதற்காகவேனும் தனது கணவர் வருவாரா என பொங்கி வரும் உணர்சிகளை கட்டுப்படுத்த இயலாத நிலையில் ஜாதகி என்னிடம் ஜாதக ஆலோட்சனை கேட்டு வந்தார்.

நல்ல குடும்பத்தில் பிறந்ததால் வழி தவறவும் மனமின்றி தன் உணர்வுகளோடு ஒரு கொடிய போராட்டம் நடத்திக்கொண்டு, 

வெளிநாடு சென்ற கணவன் அங்கேயே ஒரு குடும்பம் அமைத்துக்கொண்டான் இனி வர மாட்டான் எனக்கூறி தனக்கு வலை வீசும் ஆண்களிடமிருந்து தன்னையும் தனது மகளையும் காத்துக்கொண்டு,

கணவர் அனுப்பும் பணத்தை கடனுக்கு கட்டிவிட்டு தான் எளிய வாழ்க்கை வாழ்ந்துகொண்டு,

வாழ வேண்டிய வயதில் இல்லற வாழ்க்கையை அனுபவிக்க முடியாத சோகத்தை கண்களில் தாங்கிக்கொண்டு,

அசோகவனத்து வைதேகி ராமன் தன்னை வந்து மீட்டுச் செல்வான் என்ற நம்பிக்கையில் காத்துக்கொண்டிருந்ததைப் போல,

இங்கேயும் 

ஒரு

வைதேகி காத்திருக்கிறாள். 


விரைவில் மீண்டுமொரு பதிவில் சிந்திப்போம்,

வாழ்த்துக்களுடன்,

அன்பன்,
பழனியப்பன்.
கைப்பேசி: 7871244501