Thursday, 8 October 2015

கொலைகார கிரகங்கள் காட்டும் கருணை!

ஒரு ஜாதகர் திருமண வயதில் மாரக திசையை எதிர்கொள்ளும் சூழலில் மாரகத்தைத் தரும் கிரகங்கள் தாங்கள் நின்ற  சார அடிப்படையில்  ஜாதகருக்கு திருமணம் போன்ற எந்த நிகழ்வுகளையும் எதிர்கொள்ள வைத்து பிறகே ஜாதகரை கொல்கின்றன. மாரகர்கள் என்பதற்காக தாங்கள் தொடர்புடைய எதையும் ஜாதகருக்கு மறுப்பதில்லை. இது ஒரு ஆச்சரியமான உண்மை. கிரகங்கள் எந்த விதத்திலும் தங்கள் கடமையில் தவறுவதில்லை. முன்பொரு பதிவில் குறிப்பிட்டிருந்தது போல வெட்டப்படுபவனால் வளர்க்கப்படும் ஆடு திருவிழா நாள் வரும் வரை சரியாகத் தீனியிட்டு வளர்க்கப்படுவது போன்றது இது.


பின்வரும் ஜாதகத்தை கவனியுங்கள்.  


ஜாதகிக்கு 03.02.2002 ல் சந்திர திசை சுக்கிர புக்தியில் திருமணம் நடந்தது.

விருச்சிக லக்னத்திற்கு பாதகாதிபதியான (9 ஆமதிபதி) சந்திரன், 7 ஆம் ஆதிபத்தியம் பெற்ற களத்திர காரகன் சுக்கிரனின் சாரம் பெற்றதால் சந்திர திசையில் திருமணம் நடக்க வேண்டும். சுக்கிரன் தனது பாவம் மற்றும் காரக அடிப்படையிலும் சுகஸ்தானாதிபதியான சனியின் சாரம் பெற்றதனாலும் தனது புக்தியில் திருமணத்தை நடத்தினார்.

9 ஆம் பாவாதிபதி திசையில் சுய புக்தியிலும்  4 & 12 ஆமதிபதிகளின் புக்தியிலும்  ஒருவர் வெளிநாடு செல்வார். 9 ஆம் பாவமே ஜல ராசி என்பதாலும் 4 ஆமதிபதி சனியின் சாரத்தில் நின்ற 12 ஆமதிபதி சுக்கிரனின் புக்தியிலேயே ஜாதகி திருமணம் முடிந்தவுடன் கணவருடன் வெளிநாடு சென்றார். 7 ஆமதிபதி 9 ஆம் பாவத்தில் நின்று அது ஜல ராசியுமாகி திசா நாதன் அதே 9 ஆம் பாவாதிபதியானால் ஒரு ஜாதகரின் வாழ்க்கைத்துனைவர் வெளிநாட்டுடன் தொடர்புடையவராக இருந்தே ஆக வேண்டும். (வெளிநாட்டு வரன் பார்க்கும் பெற்றோர்கள் தங்கள் வதுவின் (பெண்ணின்) ஜாதகத்தில் இத்தகைய அமைப்பு உள்ளதா என கவனித்து அதன்படி வரனை தேர்ந்தெடுக்க இது போன்ற குறிப்புகள் உதவியாக இருக்கும். திருமணத்தில் நேரும் தாமதத்தை இதனால் தவிர்க்கலாம்).

வெளிநாடு சென்ற ஒரு மாதத்திற்குள்ளாகவே ஜாதகிக்கு மூலையில் புற்றுநோய்கட்டி (Brain Tumor) இருப்பது கண்டறியப்பட்டு மூன்று மாத சிகிச்சைக்குப்பின் இந்திய திரும்பினார். இந்தியாவிலும் தொடர்ந்த சிகிச்சை தொடர்ந்தது. 2௦௦2 டிசம்பர் நான்காம் வாரத்தில் ஜாதகிக்கு செவ்வாய் திசை துவங்கியது. தொடர்ந்த சிகிச்சையில் பலனளிக்காமல் செவ்வாய் திசை சுய புக்தியில் 2௦௦3 ஏப்ரலில் தமிழ் புத்தாண்டு பிறந்ததும் காலமானார். 

லக்னத்தை அஸ்டமாதிபதியுடன் சேர்ந்ததால் கெட்டுவிட்ட சுக ஸ்தானாதிபதியான சனி மூன்றாம் பார்வையாகப் பார்க்கிறார். லக்னம் என்பது தலையை குறிக்கும். எனவே தலையில் வியாதி. ஸ்திர லக்னத்திற்கு பாதகஸ்தானமான 9 ஆமிடத்திற்கு உரிய சந்திரன் பாதகத்தை செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் வியாதி மூலம் அந்த பாதகம் ஏற்பட்டது. சந்திரன் இரத்தம் மற்றும் உடலில் உள்ள திரவ இயக்கங்களை கட்டுப்படுத்தும் கிரகம் என்பதால் மூலையில் கட்டி.  சனி, ராகு & செவ்வாய் இவர்களே புற்று நோய்க்கு காரகத்துவம் வகிப்பவை. ராகு திசா நாதனின் வீட்டில் பாதகஸ்தானத்தில் சந்திரனின் வீட்டில் நிற்கிறது. ராகு-கேதுக்கள் எந்த வீட்டில் நிற்கிறார்களோ அந்த வீட்டோனின் காரணிகளை தாங்கள் எடுத்துச் செய்வார்கள். இந்த அடிப்படையில் சந்திர திசை வியாதியை கொடுத்தாலும் மரணத்தை தரவில்லை. அடுத்துவந்த 6 ஆமதிபதி செவ்வாய் இரத்தத் திசுக்களின் (Bone Marrow) உற்பத்தி மற்றும் இயக்கங்களுக்கு காரகம் வகிப்பது. செவ்வாய் பாதக ஸ்தானத்தில் நின்ற ராகுவின் சாரம் பெற்றதால் தனது சுய புக்தியிலேயே மரணத்தை தந்தது.

இந்த ஜாதகத்தில் சந்திரன் ஜாதகிக்கு மரணத்தை வழங்கும் உரிமையைப் பெற்றிருந்தாலும் மரணம் உறுதி எனும் சூழ்நிலையில் ஜாதகிக்கு தான் நின்ற சாரத்தினடிப்படையில் (சுக்கிரன் சாரம்) திருமணம் மற்றும் பாவ அடிப்படையில் வெளிநாட்டு பயண வாய்ப்பையும் வழங்கி கருணை காட்டிவிட்டு அதே நேரம் மரணத்தை உறுதி செய்யும் வியாதியை தந்ததோடு விலகிவிட்டது கவனிக்கத்தக்கது.

அடுத்து மற்றோர் பெண்ணின் ஜாதகம். 


ஜாதகத்தில் திருமண தொடர்புடைய 2 மற்றும் 7 ஆமிடங்களை விரயாதிபதி குரு சாரத்தில் நின்று செவ்வாய் பார்வை செய்வதால் கெட்டது. செவ்வாய்க்கு வீடுகொடுத்த  7 ஆம் பாவாதிபதி சுக்கிரன் லக்ன பாதகாதிபதி சனியுடன் இணைவு பெற்றதால் கெட்டுவிட்டார். குடும்ப காரகனும் 9 & 12 பாவங்களுக்குரிய குரு மூன்றில் பகை வீட்டில் வக்கிர கதியில் நின்று பாதகாதிபதி சனி பார்வை பெற்றதால் கெட்டுவிட்டார். மேஷ லக்னத்திற்கு குரு சுபனானாலும் சனியுடன் இணைந்தாலோ அல்லது சனி பார்வை பெற்றாலோ பாதகத்தையே செய்வார் என்பது ஒரு முக்கிய ஜோதிட விதி.சுகஸ்தானமான நான்காமிடத்தில் கேது நின்று அதன் பாவாதிபதி சந்திரன் நீசமானதால் சுகஸ்தானமும் கெட்டது. ஆயுள் மற்றும் மாங்கல்ய ஸ்தானமான 8 ஆமிடம் இரு பக்கமும் பாவிகளால் சூழப்பட்டு பாவ கர்தாரி தோஷத்திற்கு உள்ளாகியுள்ளது. மேலும் அங்கு நீச சந்திரன், சுபாவ பாவியான சூரியன் மற்றும் 6 ஆமதிபதி புதன் ஆகியோர் அந்த இடத்தை கடுமையாகப் பாதிக்கும் வகையில் அமைந்துள்ளனர். ஜாதகிக்கு ஆயுள் பலமில்லை என்பதை இது குறிக்கிறது.

குடும்ப வாழ்க்கை தொடர்புடைய 2,4,7,8,12 ஆகிய அனைத்து பாவங்களும் அதன் அதிபதிகளும் ஜாதகத்தில் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

சுக்கிரன் லக்ன பாதகாதிபதி சனியுடன் இணைவு பெற்றதால் ஜாதகிக்கு மரணத்தை வழங்கவேண்டிய பொறுப்புக்கு உள்ளாகியுள்ளார். ஆனால் சனி 7 ஆமதிபதியான தனது (சுக்கிரனின்) சாரம் பெற்றுவிட்டதால் அதற்கு முன்னர் ஜாதகிக்கு தனது காரகம் மற்றும் பாவ அடிப்படையில் இல்லற இன்பத்தை வழங்கிவிட கருணை காட்டினார்.

ஜாதகிக்கு 26.01.2015 அன்று சுக்கிர திசை சனி புக்தியில்  திருமணம் நடந்தது. திசா நாதன் சுக்கிரன் எழாமதிபதி என்பதும் தனது சுய சாரத்திலே (பூராட நட்சத்திரத்தில்) நிற்பதாலும் சுக்கிர திசையில் திருமணம் என்பது ஜாதகிக்கு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. புத்தி நாதன் சனி சுக்கிரனுடன் இணைவு பெற்று அதே சுக்கிரன் சாரம் பெற்றதாலும் சனி புக்தியில் திருமணம் நடந்தது.

விருச்சிக ராசிக்கு நடக்கும் ஏழரை சனியின் கடுமையான கட்டத்தில் லக்ன பாதகாதிபதி சனி புக்தியில் ஜாதகிக்கு திருமணம். திருமண தேதியும் அதன் கூட்டுத்தொகையும் 8 ஆகவே அமைந்துவிட்டதை கவனியுங்கள். சனியின் கோரப்பிடியில் ஜாதகி இருக்கிறார் என்பதை இது குறிப்பிடுகிறது. எந்த ஒரு விபரமறிந்த ஜோதிடரும் கோடிகளை தட்சினையாகப் பெற்றாலும் இதுபோன்ற சூழலில் திருமணத்தை தவிர்த்துவிட அறிவுரை கூற வேண்டும். ஆனால் ஜோதிடர்களைவிட சனி வலுவானவர். மனித சக்தியால் சம்பவங்களை தவிர்த்துவிட இயலாது என்பதால்தான் படைத்தவனிடமே நமது குறைகளை கூறுகிறோம்.

ஜாதகிக்கு மரணம் குடும்ப வாழ்க்கை வடிவில் வந்தது என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. 7 ஆமிடாதிபதி சனியுடன் சேர்க்கை என்பதாலும்  7 ஆமிடத்தில் செவ்வாய் என்பதாலும் குடும்ப பாவங்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுவிட்டதாலும் கணவன் வடிவில் மரணத்தை சனி வழங்கியிருக்க வேண்டும். சனியும் செவ்வாயும் மாரக பாவங்களுடன் தொடர்புகொண்டால் மரணம் குரூரமாக இருக்க வேண்டும் என்பது ஜோதிட விதி. ஜாதகியின் இறுதி நேரம் முதலையின் வாயில் சிக்கிய ஜீவனைப் போன்றதாக இருந்திருக்க வேண்டும். நினைத்துப் பார்க்க நெஞ்சம் நடுங்குகிறது.

மாங்கல்ய காரகன் செவ்வாய் 7 ஆமிடத்தோடு தொடர்புகொண்டுள்ளதால் கணவனால் ஜாதகி கொல்லப்பட்டிருக்க வேண்டும் என அனுமானிக்க வாய்ப்புள்ளது. மரணம் எப்படி நிகழ்ந்தது என அறியப்படவில்லை. ஜாதகி கொல்லப்பட்டிருக்கவேண்டும் என்ற கோணத்தில் காவல்துறையின் விசாரணை வலையத்தில் கணவன் உள்ளார்.

மேற்கண்ட இரு ஜாதகங்களிலும் மாரகத்தை தரும் கிரகங்களாக இருந்தாலும் தங்களது காரக, பாவ தொடர்புகள் அடிப்படையில் ஜாதகருக்கு நடக்கும் நிகழ்வுகளை குறைவின்றி நடத்தி விடுகின்றன. தங்கள் பணியை செவ்வனே செய்கின்றன. மனிதர்களுக்குத்தான் சாக்குப் போக்கு.

மரணம் தொடர்புடைய நுட்பமான சில விபரங்களை இங்கு நான் அவசியம் கருதி குறிப்பிடாமல் தவிர்த்திருக்கிறேன். அதனை சாதாரண மனிதர்கள் தெரிந்துகொள்வது பல வேதனைகளுக்கு வழிவகுக்கும் என்பதே காரணம்.  நடிகர் ரஜினிகாந்த் ஒரு முறை குறிப்பிட்டதுபோல “சாகர நாள் தெரிஞ்சுட்டா வாழற நாட்கள் நரகமாயிடும்” என்பதுபோல்தான்.

ஒரு முக்கிய அறிவிப்பு:

ஜோதிடத்தில் நிகழ்வுகளின் காரணங்களை துல்லியமான அளவிட  பல்வேறு அறிஞர்கள் பலவிதங்களில் ஆராய்ந்துகொண்டிருக்கிரார்கள். அடியேன் K.P அயனாம்சத்தை பயன்படுத்தினாலும் அதன் அனைத்து முறைகளையும் அப்படியே பயன்படுத்துவதில்லை. பாரம்பரிய முறையை (TRADITIONAL VEDIC METHOD) சார்ந்தே எனது ஜோதிட பயணம் இதுவரை வந்துள்ளது. உதாரணமாக K.P முறையில் யோகங்கள் மற்றும் அஷ்ட வர்க்கங்களுக்கு இடமே இல்லை. ஆனால் இவற்றின் பயன்கள்  நிராகரிக்க முடியாதவை.

தற்போது நான் ஆய்வு நோக்கில் நமது பாரம்பரிய அயனாம்சமான சூரிய சித்தாந்த அயனாம்சத்தின் திருத்தப்பட்ட நவீன அயனாம்சத்தை இந்தப் பதிவிலிருந்து பயன்படுத்த துவங்கியுள்ளேன். பழைய சூரிய சித்தாந்தத்தை அடிப்படையாக கொண்ட அயனாம்சமே வாக்கிய அயனாம்சம் எனப்படுகிறது. திருத்தப்பட்ட சூரிய சித்தாந்த அயனாம்சமானது அயனாம்சத்தில் மட்டுமல்லாது தற்கால கிரக சஞ்சார விதிகளுக்கேற்ப கிரகங்களின் திசா புக்தி காலங்களிலும் சிறிய மாறுதல்களைக்கொண்டிருக்கும். வாக்கிய மற்றும் திருக்கணித முறைகளை ஒருங்கிணைக்கும் முயற்சி இது. கணினியை கொண்டு ஜோதிட ஆய்வு செய்துவரும் ஆய்வாளர்கள் இதை பயன்படுத்திப்பாருங்கள்   பல ஆச்சரியங்களை அடைவீர்கள். ஜெகன்நாத ஹோரா மென்பொருளில் இந்த திருத்தப்பட்ட சூரிய சித்தாம்ச அயனாம்சம் கிடைக்கிறது.

விரைவில் மீண்டும் மற்றுமொரு பதிவில் சந்திப்போம்.

வாழ்த்துக்களுடன்,
அன்பன்,
பழனியப்பன்.

Thursday, 24 September 2015

ஸ்ரீ தயானந்த சரஸ்வதி சுவாமிகள்.



சுவாமி தயானந்த சரஸ்வதி சுவாமிகள் 1930 - 2015

சுவாமிகள் 23.09.2015 அன்று இரவு 10.17  மணிக்கு ரிஷிகேஷில் ஜீவ முக்திடடைந்தார்.

பாரத புண்ணிய பூமியை, நமது இந்து தர்மத்தை உய்விக்க வந்த மகான்.ஆனால் பிற்பாடு மதங்களைக்கடந்த மகானானார்.   

சில ஆண்டுகளுக்கு முன் எனது ஆத்ம நண்பரும் பிரபல ஆடிட்டருமான திரு.ரமணி அவர்களை சந்திக்க கோவை சென்றிருந்தபோது இந்த மகானை தரிசிக்க ஆனைகட்டி ஆசிரமத்திற்குச் சென்றிருந்தேன். சுவாமிகள் அப்போது அமெரிக்காவில் தனது ஆசிரமத்தில்  இருந்ததால் தரிசிக்க இயலவில்லை. ஜோதிடனான நான் புதனின் அம்சம். மகான்கள் குருவின் அம்சம். புதனுக்கும் குருவிற்கும் ஜோதிட விதிகளின்படி கடும் கருத்து வேறுபாடுகள் உண்டு. எனினும் ஒன்றையொன்று மிகவும் வசீகரிப்பவை என ஜோதிடத்தில் பல்வேறு ஆய்வுகள் செய்த காலஞ்சென்ற ஜோதிட அறிஞர் நம்புங்கள் நாராயணன் ஒருமுறை குறிப்பிட்டது நினைவுக்கு வருகிறது.  காலச் சூழலில் பிறகு பல முறை முயன்றாலும் எனது கர்மா இவரைப்போன்ற மகான்களை தரிசிக்க எனக்கு பாக்கியமில்லை என்பது போன்று உணர்த்தியது. இவர்போன்ற ஞானிகளை உயிரோடிரிந்தபோது தரிசிக்கும் யோக்கியதையை எனக்கு அருளும் இறைவா என என்னைப்படைத்தவனிடம் நான் வேண்டிக்கொள்கிறேன்.


முக்தியடைய சில நாட்களுக்கு முன்பு.


 மிக எளிய கிராமமான மஞ்சுக்குடியில் பிறந்த மகான்.. ஆளால் மகத்தான ஆன்மீகவாதி. இந்த உலகை உய்விக்க வந்த ராகவேந்திரரின் மறு உருவமாகவே அவரை நான் கண்டேன். இவர் போன்ற பரிசுத்த ஞானிகளை இனி வரும் காலத்தில் தரிசிக்க இயலாது. காரணம் காலகட்ட தோஷம். ஜோதிட வரலாற்றை நான் எனது வலைப்பூ துவங்கிய போது இவரை எனது மானசீக வழிகாட்டியாக எண்ணியே எழுதியிருந்தது வாசகர்களுக்கு ஞாபகமிருக்கலாம்.இனியும் நமக்கு வழிகாட்டியாய் நம் மனதில் நிறைந்து நமது வாழ்வை செம்மைப்படுத்துவார். இதற்கு மேலும் இவரைப்பற்றி எழுத எனக்குத் தகுதியில்லை என்பதால் இத்தோடு நிறுத்திக்கொள்கிறேன்.

கனத்த இதயத்துடன்,
அன்பன்,

பழனியப்பன்.

Sunday, 2 August 2015

மக்களின் நாயகர்கள்.

மக்கள் போற்றும் மகத்தான ஜாதக அமைப்பை கொடுக்கக் கூடிய கிரகம் எதுவெனக் கேட்டால் ஜோதிட ஆராய்ச்சியாளர்கள் அனைவரும் தயக்கமின்றி உடனே கூறும் கிரகம் சனி ஆகும். சனியின் பரிபூரண பாக்கியங்கள் நிறைந்த அத்தகைய ஜாதகர்களை சனியின் அம்சங்களான அடித்தட்டு மக்கள் தங்களை வாழ்விக்க வந்த நாயகர்களாகப் பார்க்கின்றனர். சனியின் தெய்வீக சக்தி இத்தகைய ஜாதகர்களை அவர்களின் பால்ய வயதின் துயரங்களிலிருந்து மீட்டுக்கொண்டு வருவதுடன் ஒரு குழந்தையை அதன் தந்தை கையைப்பிடித்துக்கொண்டு வருவதுபோல் அவர்களின் ஒவ்வொரு செயலிலும் துணை நிற்கும். என்ன ஒரு பாதகம் என்றால் இத்தகைய ஜாதகர்கள் அவர்களின் பால்ய வயதிலேயே கொடுமையான காலகட்டத்தினை பார்த்திருப்பார்கள். பால்ய வயதில் ஏற்பட்ட அத்தகைய பாதிப்புகள் இவர்களின் வாழ்நாளின் இறுதிவரை இவர்களை நல்வழியில் நடத்தும்.

இது விஷயத்தில் செவ்வாயும் சனிபோன்று ஜாதகரை வழிநடத்தும் என்றாலும்  சனிக்குப் பிறகே செவ்வாய் எடுத்துக்கொள்ளப்படுகிறார். ராகு-கேதுக்களை தவிர்த்துவிட்டுப் பார்த்தால் சனியும்-செவ்வாயும்தாம் கிரகங்களிலேயே கடுமையானவை. சட்டம், நீதி, காவல், ராணுவம் உள்ளிட்ட பாதுகாப்புத் துறையுடன் சம்மந்தம்பெறும் கிரகங்கள் இவை. ஜாதகத்தில் நன்கு அமைந்தால் ராகுவைப்போல தன் திசா-புக்திகளில் கொடுக்கக் கூடிய கிரகங்கள் எதுவுமில்லை என்றாலும் அவை விரையமாகிவிடக்கூடியவை. சனி மற்றும் செவ்வாய் கொடுக்கும் பாக்கியங்கள் மட்டுமே தலைமுறைகளுக்கும் நீடித்து நிற்பவை.    

இவ்விரு கிரகங்களிடம் பாக்கியங்களைப் பெறவேண்டும் என்றால் இவை ஜாதகத்தில் நீசம், பகை, வக்கிரம், அதிசாரம் போன்ற தோஷங்களின்றி வலுவாக அமையவேண்டும். கிரகங்கள் வக்கிரமானால் ஜாதக அமைப்பை பொறுத்து சில நன்மைகளை தரும் என்றாலும் தங்கள் தனித்துவமான காரகத்தில் சொதப்பிவிடும்.


மக்களால் கொண்டாடப்பட்ட நாயகர்களான காமராஜர், ரவீந்திரநாத் தாகூர், M.G.R, ரமண மகரிஷி மற்றும் சமீபத்தில் மறைந்த இசைமேதை  M.S.விஸ்வநாதன் போன்று பலரது ஜாதகங்களை இது விஷயத்தில் உதாரணமாகக் கொள்ளலாம் என்றாலும் இங்கு நாம் அலசவிருக்கும் ஜாதகம் கடந்தவாரம் மறைந்த மக்களின் ஜனாதிபதி திரு.A.B.J.அப்துல்கலாம் அவர்களுடையது. 




15.10.1931 – 1.15 AM – ராமேஸ்வரம்.

சிறந்த பிறவிவிகளாக பரிணமிக்க தேவையான அடிப்படை ஒரு ஜாதகரின் பால்யவயதிலேயே விதைக்கப்படுகிறது. ராமேஸ்வரத்தில் சன்னதி தெருவில் பல்வேறு மதச்சூழலில் வளர்ந்தவர் கலாம். கோவிலின் தலைமை குருக்களின் மகனுடன் பள்ளியில் இஸ்லாமியச் சிறுவன் அமர்ந்திருக்க இயலாது என்று கடைசி பெஞ்சிற்கு அனுப்பப்பட்டவர் கலாம். நண்பன் குருக்களான தன் தந்தையிடம் முறையிட்ட பிறகு குழந்தைகளிடம் வேற்றுமை பாராட்டாதீர்கள் என்று ஆசிரியருக்கு அறிவுறுத்தப்பட்டு நண்பர்கள் ஒன்றுசேர்ந்தனர்.

ஒரு மீன்பிடி படகிற்கு சொந்தக்காரரான தன் தந்தையின் சம்பாத்தியத்தில் வறுமையான சூழ்நிலையில் வளர்ந்தவர் கலாம். தந்தைக்கு உதவி செய்ய காலை 4.30 மணிக்கு கிளம்பி ராமேஸ்வரத்திற்கு வரும் செய்தித்தாள்களை வீடுதோறும் சென்று விநியோகித்துவிட்டு 8.00 மணிக்கு வீடு வந்து பள்ளி செல்வார் கலாம். இது போன்ற  சிறுவயதுச் சம்பவங்கள் கலாம் மனதில் பெரிய பாதிப்பை கொடுத்திருக்க வேண்டும்.

கடக லக்னத்தில் கடன், வியாதி, எதிரியை குறிக்கும் 6ம் பாவாதிபதியும் 9ஆம் பாவமான பாக்கிய ஸ்தானத்தைக் குறிப்பவருமான பரம சுபன் குரு உச்சம். ஸ்திர ராசியான விருச்சிக ராசிக்கு பாதக ஸ்தானமான 9ல் தனித்த குரு உச்சமானதால் குடும்ப வாழ்வை கேள்விக்குறியாக்கி தனது உச்ச பலனை ஜாதகருக்கு நல்ல குணங்கள் மற்றும் நல்ல வாய்ப்புகளாக மாற்றிவிட்டார். தன்  வீட்டில் ஒரு உச்ச கிரகம் அமைந்ததால் சந்திரன் நீச பங்கம் பெற்றார். உச்சன் குருவின் வீட்டில் அமைந்த சனியும் ராகுவும்  வலிமை பெற்றனர்.

அஷ்டமாதிபதி சனி வலிமை பெற்றதால் தீர்க்கமான ஆயுள் பெற்றார். ஆனால் 7 ஆமதிபதி சனி தன் 7ஆவது பாவத்திற்கு 12 ல் அமைந்ததால் குடும்ப வாழ்வு ஜாதகருக்கு வாய்க்கவில்லை. 7 ஆமதிபதி சனியும் குடும்ப காரகன் குருவும் சடாஷ்டகத்தில் (6 - 8) அமைப்பில் அமைந்ததும் இதற்கு முக்கிய காரணம். ராசிப்படி ஆராய்ந்து இதை உறுதி செய்யலாம். ஸ்திர ராசியான விருச்சிக ராசிக்கு பாதக ஸ்தானமான 9ஆமிடத்தில் ராசிக்கு 2ஆமிடாதிபதியான குரு தனித்த நிலையில் உச்சமானது மற்றும் ராசிக்கு 2 ஆமிடத்தில் சனி அமைந்தது போன்ற இத்தகைய அமைப்புகள் எல்லாம் குடும்ப வாழ்வு ஜாதகருக்கு இல்லை என்பதை  தெள்ளத்தெளிவாய் விளக்குகிறது. காரக அடிப்படையில் தான் அமைந்த வீட்டின் செயல்களை கடைசி நேரத்தில் தடுக்கும் விசேஷ குணம் கொண்டது மாந்தி. குடும்ப ஸ்தானத்தில் அமைந்த மாந்தி ஜாதகரின் பெண்பார்க்கும் படலத்தை கடைசி நேரத்தில் தடுத்துள்ளது தெரிகிறது. அக்னிச் சிறகுகளில் தனது பெண்பார்க்கும் படலம் கடைசியில் தடுக்கப்படுவது பற்றி குறிப்பிட்டுள்ளார்.     

இந்த ஜாதகத்தில் குரு, சனி மற்றும் ராகுவும் ஜாதகரின் வாழ்வில் வழி நடத்தும் கிரகங்களாக வருகின்றன. ஆறாமதிபதி குரு உச்சமாகி ஜாதகருக்கு வாழ்வில் பல எதிர்ப்புகளை கொடுத்தார். ஆனால் 6 ஆமிடமான எதிரி ஸ்தானத்தில் வலுவாக அமைந்த குருவின் சமக் கிரகமான சனி அந்த எதிர்ப்புகளை தவிடுபொடியாக்கினார். பாக்ய ஸ்தானத்தில் வலுவாக அமைந்த ராகு ஜாதகரை புதுமையான முறையில் சிந்திக்கத் தூண்டினார். ராக்கெட், ஏவுகணை, அணுவியல் போன்றவை ராகுவின் காரகத்துவத்தில் வருகின்றன. 9 ஆமிடம் நுண்ணிய சிந்தனைகளுக்கான பாவம். குரு ஆழ்ந்த சிந்தனைகளுக்கு காரகத்துவம் பெற்ற கிரகம் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.  குரு – ராகு சம்மந்தமே ஜாதகர் ஏவுகணை மனிதர் என அழைக்கப்படக் காரணம்.

கடக லக்னத்திற்கு யோக காரகனான செவ்வாய் திசை 1996 அக்டோபரில் துவங்கியது. செவ்வாய் உச்சன் குருவின் விசாக நட்சத்திரத்தில் அமைந்ததால் ஜாதகருக்கு “பாரத ரத்னா” விருது கிடைத்தது. அதே செவ்வாய் திசையின் சுக்கிர புக்தியில் ஜாதகர் இந்திய குடியரசுத் தலைவரானார். லக்ன கேந்திரத்தில் திக்பல வலுவுடன் ஆட்சி வீட்டில் அமைந்த சுக்கிரனுடன் பூமிகாரகன் செவ்வாய் இணைந்தது சிறப்பு. இயற்கை அன்னையின் மீது ஜாதகருக்கு இணையற்ற காதலை ஜாதகருக்கு இவ்வமைப்பு வழங்கிருக்க வேண்டும். செயற்கைக்கோள் அனுப்பிய வெற்றியை கொண்டாட 1 லட்சம் மரக்கன்றுகளை தனது உயரதிகாரியிடம் கலாம் கேட்டுள்ளார் என்பது இயற்கையின் மீதான அவரது நேசத்தை நிரூபிக்கிறது. குருவின் வீட்டில் அமைந்த ராகு திசை ஜாதகருக்கு பரந்த மனப்பான்மையை கொடுத்தது. ஜாதிமத பேதமின்றி அனைவரையும் நேசிக்கும் மனோ பாவத்தை தந்தது. தனது ஜனனத்தின் காரணத்தையும் மரணத்தின் காலத்தையும் ஒரு வட இந்திய ஜோகியின் மூலம் அறியச் செய்தது. மரணத்தையும் நிதானத்துடன் எதிர்கொள்ளச்செய்தது.

உச்சமாக அமைந்த புதனும் குருவும் வளரும் சமுதாயத்தினரான மாணவர்களை நோக்கிய திசையில் ஜாதகரின் கவனத்தை திருப்பின என்றால் அது மிகையல்ல. 

மரணம் பற்றிய திசா புக்தி நுட்பங்கள் வாசகர்களுக்குத் தெரிய வேண்டாம் என்பதால் அதுபற்றி இங்கு குறிப்பிடவில்லை.   

இந்தியாவைப் பொறுத்தவரை மக்களை ஒரு ஆட்டுமந்தைக் கூட்டங்களாகத்தான் ஆட்சியாளர்கள் நினைக்கிறார்கள் என்று முன்பொரு பதிவில் குறிப்பிட்டிருந்தேன். பரந்த ஆடு மந்தைக்கூட்டங்களை அடிக்கடி வெவ்வேறு பாதையில் திருப்பிவிட்டுக் கொண்டிருக்க வேண்டும். இல்லாவிட்டால் அவை ஒன்றை ஒன்று முட்டிச் சண்டையிடுவது மற்றுமின்றி மேய்ப்பவனையும் முட்ட ஆரம்பித்துவிடும்.

இந்திய அரசியல்வாதிகள் நல்ல மேய்ப்பர்கள்.

மக்களின் மனோபாவத்தை கலாமை நோக்கிச் சிலநாட்கள் செல்ல வழிவகுத்திருப்பவர்கள் ஆட்சியாளர்கள். உலகத்திலேயே மிகவும் கீழ்த்தரமான, பயங்கரவாதிகளையும், குதர்க்கவாதிகளையும் அரசியல்வாதிகளாகக் கொண்டிருக்கும் தேசமிது. குறிப்பாக தமிழகம்.

அன்னாரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுவோம்.

மீண்டுமொரு பதிவில் சிந்திப்போம்.

அன்பன்,
பழனியப்பன்.
செல்பேசி: 7871244501.