Thursday, 29 June 2017

நீ வருவாயென...


வாழ்க்கைத்துணை பற்றி ஒவ்வொருவருக்கும் ஒரு கனவு ஒரு ஆசை இருக்கும். ஆசைக்கும் கொடுப்பினைக்கும் இடைப்பட்டதுதான் வாழ்க்கையும் அதன் போராட்டமும்..


பொதுவாக வாழ்க்கைத்துணையின் திசையை பற்றி தெரிந்துகொள்ள விரும்புவர் என்பதை தவிர இப்பதிவில் ஜாதக அமைப்பை வைத்து ஒருவரது வாழ்க்கைதுனைவரின் அம்சங்களை கண்டுகொள்ளது பற்றி அலசியிருக்கிறேன். 


மேற்கண்ட ஜாதகத்தில் வாழ்க்கைத்துணைவரை குறிக்கும் ஏழாமிடத்தில் குரு இருக்கிறார். ஏழாமதிபதியும் களத்திர காரகனுமான சுக்கிரன் சூரியனுடன் இணைந்திருக்கிறார்.

ஜாதகரின் மனைவி அரசு வங்கியில் பணி புரிகிறார். குடும்ப பாவம் குருவினுடையதாக இருப்பதால் குடும்ப உறவில் இணையும் மனைவி குருவின் காரகங்களுள் ஒன்றான தனம் புழங்கும் துறை சார்ந்தவர் என எடுத்துக்கொள்ளலாம். ஏழாமதிபதி சுக்கிரன் சூரியனுடன் சேர்ந்ததால் ஜாதகரின் மனைவி அரசுப்பணியில் இருப்பார் என அனுமானிக்கலாம்.

நவாம்சம் திருமண பந்ததிற்காகவே விசேஷமாக ஆராயப்பட வேண்டும். ராசியில் 7 ஆமிடம் என்றால் நவாம்சத்தில் 9 ஆம் பாவம் கவனிக்கப்படவேண்டும். ஏனெனில் ராசியில் ஒருவருக்கு அளிக்கப்படும் பாக்கியங்களை தெளிவாக கண்டுகொள்ளவே நவாம்சம். நவாம்சம் பாக்கியஸ்தானத்தின் நீட்சி என்றால் அது மிகையல்ல. அந்தவகையில் மேற்கண்ட ஜாதகத்தில் ஒன்பதாமிடத்தில் சூரியன் நிற்பதால் வாழ்க்கைத்துணை சூரியனோடு தொடர்புடையவர். அதாவது அரசுப்பணியில் உள்ளவர் என்பதை அறுதியிட்டு காட்டுகிறது.  

இரண்டாவதாக ஒரு பெண்ணின் ஜாதகத்தை கவனியுங்கள்.


ஜல ராசியான விருச்சிகம் ஏழாமிடமாகி அதன் அதிபதி செவ்வாய் மற்றோர் ஜல ராசியான கடகத்தில் நீச நிலையில் உள்ளார். அதனை நீசமாகி வக்கிரமடைந்த ஜலக்கோளான குரு பார்வை செய்கிறார். எனவே ஜாதகிக்கு வாய்க்கும் கணவர் வெளிநாடு தொடர்புடையவர் என அனுமானிக்கலாம். செவ்வாய் நீசமும் குரு ராசியில் வலுவடைந்து நவாம்சத்தில் பலவீனமடைந்ததும்  ஜாதகிக்கு திருமணத்தில் ஏற்பட்ட தாமதத்தை குறிப்பிடுகின்றன.

நவாம்சத்தில் ஒன்பதாம் பாவத்தில் அமைந்த கேது ஒரு ஜலக்கோள் அத்துடன் ஒன்பதாம் பாவாதிபதி செவ்வாயும் வெளிநாட்டை குறிக்கும் ராகுவோடு தொடர்பில் இருப்பது கவனிக்கத்தக்கது. குடும்ப ஸ்தானமான 2 ஆமிடத்தில் ஜலக்கோள் சந்திரன் நிற்பது ஜாதகியின் குடும்ப வாழ்வு வெனிநாட்டில் என எடுத்துக்கொள்ளலாம்.

ராசியில் 7 (வாழ்க்கைத் துணை) ஆம் அதிபதியும் 12 (தாம்பத்யம் மற்றும் வெளிநாடு)  ஆம் அதிபதியுமான செவ்வாயின் திசையில் ஜாதகி திருமணம் முடிந்து வெளிநாடு சென்றார். ஜல ராசியான கடகத்தில் வெளிநாடு செல்வதை குறிக்கும் ஒன்பதாம் அதிபதி சனியின் பூசம்-3 ல் நிற்கிறார் என்பது முக்கியமாக குறிப்பிடத்தக்கது.

மூன்றாவதாக மற்றொரு பெண்மணியின் ஜாதகம்.


ஜாதகி ஒரு மருத்துவர்.

ஜீவனத்தை குறிக்கும் 1௦ ஆமதிபதி புதன் சூரியன் மற்றும் செவ்வாயுடன் 9ல் கூடியுள்ளது. இம்மூன்றும் மருத்துவத்துடன் தொடர்புடைய கிரகங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தன, குடும்ப பாவாதிபதியும் ஜீவன காரகனுமான சனி 7ல் மருத்துவ கிரகமான புதன் வீட்டில் நின்றது ஜாதகியின் ஜீவனம் மருத்துவம் மூலம் ஏற்படும் என்பதோடு குடும்பத்திற்கு வரும் கணவனும் மருத்துவனே என்பதை குறிப்பிடுகிறது.

ராசியில் ஏழாமதிபதி புதன் பாக்ய ஸ்தானத்தில் சூரியன் மற்றும் செவ்வாயுடன் சேர்ந்ததும் கணவரும் மருத்துவர் என்பதை உறுதி செய்கிறது. புதன், சூரியன், செவ்வாய் மூன்றும் மருத்துவத்தோடு தொடர்புடைய கிரகங்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. ஜாதகியின் கணவர் புகழ் பெற்ற மருத்துவர்.

நவாம்சத்தில் லக்னத்திலேயே மருத்துவக கிரகங்களுள் ஒன்றான செவ்வாய் நின்று ஒன்பதாம் பாவாதிபதியும் ஒளஷத காரகன் எனப்படும் புதனாகி தன்வந்திரி எனப்படும் பிரதான மருத்துவ கிரகமான சூரியனுடன் இணைந்து 7 ல் நின்றது ஜாதகியின் கணவர் மருத்துவர் என்பதை தெளிவாக்குகிறது.

விரைவில் மற்றொரு பதிவில் சிந்திப்போம்,

வாழ்த்துக்களுடன்,
அன்பன்,
பழனியப்பன்.
அலைபேசி எண்: 7871244501

Sunday, 4 June 2017

கிரகங்களின் உச்சநிலை வக்கிரம் & நீசநிலை வக்கிரம் – செயல்பாடு எப்படி?

கிரகங்களில் சூரிய - சந்திரர்கள் மற்றும் நிழல் கிரகங்களான ராகு-கேதுக்கள் ஆகியவை தவிர ஏனைய அனைத்து கிரகங்களுக்கும் வக்கிர மற்றும் அதிசார இயக்கங்கள் உண்டு.

பூமி தனது சஞ்சாச விதிகளின்படி குறிப்பிட்ட கிரகங்களை முந்திச் செல்கையில் குறிப்பிட்ட அக்கிரகங்களுக்கும் பூமிக்குமிடையேயான ஈர்ப்பு விசையில் ஏற்படும் மாறுதலான தோற்ற நிலையே வக்கிரம் எனப்படும்.

இத்தகைய நிலையில் கிரகங்கள்  தாங்கள் நிலைகொண்டுள்ள பாகைக்கு முன்னதாக இருப்பதுபோன்ற நிலைக்கு அதிசாரம் என்றும் பின்னதாக இருப்பது போன்ற நிலைக்கு வக்கிரம் என்றும் பெயர்.
    
வக்கிர அதிசார நிலையை அடையும் கிரகம் பொதுவாக அதன் சுபாவ தன்மைகளை இழந்ததாக கருதப்பட வேண்டும். எனவே ஜனன ஜாதகத்தில் சுபக்கிரகங்கள் வக்ரமடைந்திருக்கக்கூடாது. அப்படி ஜனன ஜாதகத்தில் வக்கிரமடைந்த சுப கிரகங்கள் கோட்சாரத்தில் வக்ரமடைந்தால் கெடு பலன்களை அதிகம் தரும்.

பாவ கிரகங்கள் இதற்கு எதிர்மறை. ஜனன ஜாதகத்தில் வக்கிரமடைந்த பாவ கிரகம் கோட்சாரத்தில் வக்ரமடைந்தால் நல்ல பலன்களையே தர முற்படும்.

கீழே உதாரண ஜாதகம்


உச்சனுடன் கூடும் நீசன் நீச பங்கமடைய வேண்டும் என்பது ஜோதிட விதி. 6 ஆமதிபதி சனி  உச்சமடைந்த 12 ஆமதிபதி சூரியனுடன் 8 ஆமிடத்தில் கூடியது ஒருவகையில் விபரீத ராஜ யோகமே. 6 ஆமதிபதி சனி அஸ்தங்கமடைந்ததும் பெரிய பாதகமில்லை. உண்மையில் ஜீவனகாரகன் இப்படி சூரியனுடனும் வித்யகாரகனான லக்னாதிபதி புதனுடன் கூடியதால் ஜாதகருக்கு அரசுப்பள்ளி ஆசிரியராக பணி வாய்த்தது.  

ஆனால் தன காரகன் குரு வக்ர நிலையில் லக்னத்தில் அமைந்துள்ளார். பாதகாதிபதி லக்னத்தில் அமைவது பாதகாதிபதியின் காரகங்கள் சார்ந்த வகையில் பாதிப்பை ஏற்படுத்த வேண்டும் என்பது ஜோதிட விதி. தன ஸ்தானாதிபதி சுக்கிரன் உச்ச நிலையை அடைந்து வக்ரமாகிவிட்டது. உச்சமடைந்து வக்கிரமான கிரகம் நீச பலனையே தரவேண்டும். எனவே இந்த ஜாதகருக்கு பொருளாதாரம் சார்ந்த வகையில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதை அறிய முடிகிறது.

ஜாதகர் சனி திசையில் ஏறக்குறைய 22 லட்சத்திற்கும் அதிகமான அளவில் கடும் பொருளாதார இழப்பை சந்தித்தார்.

கீழ மற்றொரு பெண்மணியின் ஜாதகம்


ஜாதகிக்கு புத்திர பாக்யத்தை தரவேண்டிய குரு ஆறில் மறைவு.

நீசமடைந்து வக்கிரமடைந்த கிரகம் உச்சபலனை தரும் என்ற விதிப்படி குரு 6 ஆமிடத்தில் வலு குறையவில்லை. மேலும் குரு அமைந்த பாவாதிபதி சனி உச்சமடைந்துவிட்டதால் குருவும் உச்சமாக உள்ளதாகவே எடுத்துக்கொள்ளவேண்டும்.  இந்த ஜாதகத்தில் குரு 6 ல் மறைந்த தோஷம் ஜாதகிக்கு புத்திர பாக்கியம் அமைய தடைகளை மட்டுமே ஏற்படுத்தவேண்டும்.

பொதுவாக உச்சமடைந்த கிரகங்கள் சந்தோஷமான மனநிலையில் இருக்கும். எனவே குரு சனி வீட்டில் 6 ல் அமைந்து வலுவடைந்ததால்  சனியின் இயல்புப்படி தாமதமாக புத்திர பாக்கியம் அமையும்.

ஜாதகியின் ராசிக்கு 1௦ ஆமிடத்தில் குருவும் ராசியிலேயே சனியும் உச்சமடைந்த காலத்தில் ஜாதகியின் 29 ஆவது வயதில் பெண் குழந்தை பிறந்தது.  

மீண்டுமொரு பதிவில் சிந்திப்போம்.

வாழ்த்துக்களுடன்

அன்பன்,
பழனியப்பன்.
அலைபேசி எண்: 7871244501.

Sunday, 14 May 2017

ஒருபுறம் அவசரம் மறுபுறம் ஆவேசம்

கிரகங்கள் வரிசையில் இப்பதிவில் செவ்வாய் மற்றும் தற்போதைய கோள்சாரத்தில் அதன் செயல்பாடு  ஆகியவற்றை ஆராய்வோம்.

செவ்வாய் துணிச்சல், வீரம், வீரியம், ஆதிக்கம், பராக்கிரமம், அதிகாரம், ஆளுமை, உறுதி, பிடிவாதம், வளைந்துகொடுக்காத குணம், நம்பிக்கை, தர்மம், நேர்மை, நியாயம், சகோதரம், காவல், தீயணைப்புத்துறை, உயர்பதவி, போன்ற பலவற்றிற்கு காரகத்துவம் பெற்ற கிரகம். தைரிய காரகன் என அழைக்கப்படுபவர். தங்கள் உயிரையே துச்சமாக நினைத்து போரில் ஈடுபடும் ராணுவத்தினரை குறிப்பவர். பூமி, தோட்டம்,  மண்ணின் மைந்தர்களான விவசாயிகளை குறிப்பவர் செவ்வாய்.

செவ்வாய் ஜாதகத்தில் நன்கு அமைந்தவர்கள் இப்பதிவில் குறிப்பிடுவது போன்ற பல நல்ல பாக்கியங்களையும் தோஷப்பட்டவர்கள் இங்கு குறிப்பிட்டிருப்பது போன்ற பல பாதக நிகழ்வுகளையும் எதிர்கொள்ள வாய்ப்புள்ளவர்கள் ஆவர்.   



பயத்தின் காரணமாக ஏற்படும் ஆத்திரம், அவசர முடிவுகள் போன்றவை செவ்வாயின் காரகத்தில் வருபவை. அதனால்தான் செவ்வாயின் இரு நிலவுகளில் ஒன்றுக்கு PHOPOS (அவசரம்) என்றும் மற்றொரு நிலவுக்கு DEIMOS  (ஆவேசம்) என்றும் பொருள்படும்படி கிரேக்கர்கள் ஆதிகாலத்திலேயே பெயரிட்டிருக்கிறார்கள்.

ஆத்திரப்பட்டு உயிரை மாய்த்துக்கொள்ளக்கூடிய குரூர முடிவுகளை எடுக்க வைப்பவர் செவ்வாய். “ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு” என்ற பழமொழி செவ்வாயின் இந்த குணத்தை முன்னிட்டு தோன்றியதே. ஆறாம் பாவத்திற்கு உரிய காரகங்களான கடன், வியாதி மற்றும் எதிரி போன்றவற்றிற்கு காரக கிரகம் செவ்வாய் ஆவார். அதனால்தான் ஆறாம் பாவ காரகன் என செவ்வாயை குறிப்பிடுகிறது ஜோதிடம்.    

கடன் எனும் புதைகுழியில் விழுந்து அதிலிருந்து வெளியேற இயலாத சூழலில் மானத்தைவிட உயிர் பெரிதல்ல என்ற முடிவெடுக்க வைப்பவர். .தற்கொலை காரகன், கடன் காரகன் என்ற பெயர்களும் செவ்வாய்க்கு உண்டு. ஜாதகத்தில் செவ்வாயின் நிலையையும் திசா புக்திகளையும் ஆராய்ந்தால் மேற்சொன்ன குரூரங்கள் நடக்கும் காலத்தை தெளிவாக அறிய இயலும்.

கன நேர கவனச் சிதறலால் வாகன விபத்தில் உயிரிழப்புகள் நிகழ செய்வாயே காரணம். செவ்வாய் ஜாதகத்தில் தோஷப்பட்டவர்கள் நில விவகாரங்களில் வேதனைப்படாமல் இருக்க முடியாது. சகோதரனால் கண்ணீர் சிந்தாமல் இருக்க முடியாது. கடனால் துயரப்படாமல் இருக்க முடியாது. இவற்றுள் ஒன்றன் பாதிப்பு நிச்சயம் இருக்கும். தீமை தரும் லாகிரி வஸ்துக்களின் பழக்கத்திற்கும் செவ்வாயே காரணம்.

பூமி விவகாரங்களில் பிறரை ஏமாற்றியவர்கள், பூமியை நம்பி பிழைக்கும் விவசாயிகளுக்கு வேதனை தந்தவர்கள் செவ்வாயின் குரூரப் பார்வையால்  மேற்குறிப்பிட்ட துர்பலன்களை அனுபவிப்பார்கள்.

செவ்வாயின் இத்தகைய குரூரத்தன்மைகளின் விளைவாகவே செவ்வாய் தோஷம் திருமண பொருத்தத்தில் முக்கியமாக கவனிக்கப்படுகிறது. செவ்வாய் ஜாதகத்தில் வலுவாக இருந்து நல்ல ஆதிபத்தியம் பெற்றிருந்தால் உலகமே எதிர்த்து நின்றாலும் கலங்காது தனது செயலில் வெற்றி பெற வைப்பார். தன்னலம் கருதாது கடமையாற்றும் தியாக சீலர்களாகவும் பூமி பாக்கியங்கள் நிறைந்தவர்களாகவும் பெரிய இயந்திரங்கள்கொண்ட தொழிற்சாலைகளை ஏற்று நடத்தும் முதலாளிகளாகவும் சுரங்க அதிபர்களாகவும் இருப்பர்.

செவ்வாயின் அதி தேவதை முருகன். 

பூர்வ ஜென்ம வினையால் கடும் பாதிப்புக்கு உள்ளானவர்களும் செவ்வாய் மட்டும் நன்கமைந்திருந்து முருகனை சரணடைந்தால் பாதிப்புகளில் இருந்து விடுபடலாம். “முன்செய்த பழிக்குத்துணை முருகா எனும் திருநாமம்” என்பது நமது கிராமங்களில்  சொல்லப்படும் வாக்கு.

சஷ்டி விரதம் இருந்து திருமணம், புத்திரம், கடன், செவ்வாய் தோஷம் போன்ற பல பிரச்சனைகளில் இருந்து விடுபட்ட பலரை நான் அறிவேன். அறுவைச்சிகிச்சை நடக்கும் காலங்களில் வீட்டில் முருகன் படத்தின் முன் பசும் நெய் தீபம் ஏற்றி வைத்தால் சிகிச்சை நல்லபடியாக நடக்கும். சனியும் செவ்வாயும் கடுமையான பாவக்கிரகங்கள் என்றாலும் இவ்விரு கிரகங்கள் அளிக்கும் மேற்சொன்னது போன்ற பூமி வகை பாக்கியங்கள் பல தலைமுறைகளுக்கும் நிலைத்து நிற்கும் வகையிலானவை.  
   .       
செவ்வாயை எதிர்த்து போரிடக்கூடிய கிரகங்கள் என்றால் அது சனியும் ராகுவும்  மட்டுமே. செவ்வாயின் முழுமையான எதிரி கிரகம் புதன் மட்டுமே. சனி அல்ல. சனியும் செவ்வாயும் எதிரிடையான செயல்படும் சம வலுவுடைய கிரகங்களாகும். சனியை விட அதீத குரூரம் காட்டுபவர் செவ்வாய். ராகு-கேதுக்கள் முன்னாள் எந்த கிரகமும் எதிர்த்து நிற்க முடியாது என்றாலும் செவ்வாயை போன்ற குணாதிசயங்களை கொண்ட கேதுவிற்கும் சனியை போன்ற குணாதியசங்களை கொண்ட ராகுவிற்கும் சம வலிமை கொண்டவர் செவ்வாய் என்பதும் கவனத்தில் கொள்ளக்கூடியது,

செவ்வாயின் அம்சமான சீனாவின் அதட்டல்கள் ராகுவின் அம்சமான இந்தியாவிடம் (சுதந்திர இந்திய ஜாதகத்தில் லக்னத்தில் ராகு உச்சம்) எடுபடாமல் போவதன் காரணம் இதுதான்.

செவ்வாய் கோட்சாரத்தில் சாதாரணமாக ஒரு ராசி மண்டலத்தை 45 நாட்களில் கடந்துவிடுவார். செவ்வாய் திசை 7 வருடங்கள். செவ்வாய் ஜாதகத்தில் கெட்டிருந்தால் திருட்டு பொய் புரட்டு போன்றவற்றில் ஈடுபட வைக்கும்.  

சனி ஒரு ராசி மண்டலத்தை கடக்க சராசரியாக இரண்டரை வருடங்கள் எடுத்துக்கொள்கிறது. சனி திசை 19 வருடங்கள். சனி கடும் உழைப்பாளி, நியாயஸ்தன் என்பதே செவ்வாயை விட சனியை பார்த்து அனைவரும் நடுங்க காரணம்.

புவி அமைப்பில் ஒவ்வொரு ராசியும் அந்தந்த ராசி தொடர்புடைய தொழில் செய்பவர்களை குறிக்கும். இந்திய ஜாதக அமைப்பில் தமிழ்நாடும் ஆந்திராவும் துலாம் ராசி அமைப்பில் வருபவை என்றொரு ஆய்வுக்கோணம் உண்டு. இது பற்றி முன்பொரு பதிவில் குறிப்பிட்டிருந்தேன், காவிரி பாயும் தமிழ்நாட்டின் முதன்மை தொழில் பண்டை காலம்தொட்டு விவசாயம்தான்.  இதனால் துலாமின் சப்தம (7 வது) ராசியான மேஷமும் செவ்வாயும் விவசாயிகளை குறிப்பிடுபவை.

தற்போது மேஷ ராசிக்கு அஷ்டமத்தில் செவ்வாயின் மற்றோர் வீடும் நீர் ராசியுமான விருச்சிகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக சனி நிற்கிறது. இந்தகைய அமைப்பால் செவ்வாயின் இரு வீடுகளுமே சனியால் பாதிக்கப்பட்டுள்ளது தெளிவாகிறது. பரம சுபனும் செவ்வாயின் நண்பனுமான குரு தற்போது கோள்சாரத்தில் மேஷ ராசிக்கு 6 ல் மறைந்துள்ளார். மேஷ ராசிக்கு பாதக ஸ்தானமான கும்பத்தில் கேது நின்று மேஷத்தை மூன்றாம் பார்வையாக பார்க்கிறார். மேஷத்திற்கு சிந்தனை ஸ்தானமான 5 ஆம் பாவத்தில் ராகு நின்று மேஷத்தின் சிந்தனையை குழப்புகிறார். இவை அனைத்துமே மேஷ ராசிக்கு பாதகமான நிலைகள். மேஷ விருசிக ராசிகளுக்கு தற்போது குரு பார்வை இல்லை. விருட்சிகத்திற்கு 11 ல் குரு நல்ல நிலையில் இருந்தாலும் விருட்சிக ராசியில் இருக்கும் சனி அதன் பலன்களை அனுபவிக்கவிடாமல் தடை செய்கிறார்.

செவ்வாய் சனியின் மூலத்திரிகோண வீடாகிய கும்ப ராசியில் பிரவேசித்தது முதல் அதாவது கடந்த டிசம்பர் துவக்கம் முதல் ஒரு பெரிய இழப்பாக தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் அமைந்தது. அதனை தொடர்ந்து செவ்வாயின் காரகத்தொடு தொடர்புடைய மண் (மணல் குவாரி பிரச்சனை), பூமி தொடர்பான பாதிப்புகள் (பத்திரப்பதிவு பாதிப்புகள்), விவசாயிகள் தற்கொலைகளும் அதிர்ச்சி மரணங்களும் அதிகம் நடக்கின்றன. ஜனவரி மூன்றாவது வாரம் வரை செவ்வாய் கும்பத்தில் இருந்தபோது விவசாயிகள் தற்கொலைகள் அதிகம் நடந்தன பிறகு அது  குறைந்தாலும் போராட்டம் தொடர்கிறது.

காரணம் என்ன?

தமிழ்நாட்டில் ராசியாகிய துலாம் ராசிக்கு செவ்வாய் ஆறில் மறைந்தார். பிறகு மேஷத்தில் ஆட்சி பெற்றதும் போர்க்குணத்திற்கு உரிய செவ்வாய் போராட வைத்தது. (டெல்லியில் விவசாயிகள் போராட்டம்). தற்போது ரிஷபத்தில் இருக்கும் செவ்வாய் தனுசுவின் துவக்கத்தில் வக்ர கதியில் இருக்கும் சனியின் பார்வையை பெறாவிட்டாலும் சனிக்கு செவ்வாயின் 8 ஆம் பார்வை படுகிறது. இதன் பொருள் முழு வேகத்தில் எதிரிகள் அழிக்கப்படுகிறார்கள் காஸ்மீர் எல்லையில் ராணுவம் தீவிரவாதிகளை வேட்டையாடி வருகிறது. இந்தியாவின் கடக ராசிக்கு 6 ரில் சனியும் 10 ல் செவ்வாயும் இருக்கும்போது இது நடப்பது கவனிக்கத்தக்கது. இதே சமயம் உழைப்புக்குரிய சனியை செவ்வாய் பார்ப்பதால் ஜீவன வகையில் உலக அளவில் பாதிப்புகள் அதிகம் ஏற்படும். இந்தியாவில் குறிப்பாக மென்பொருள்துறையில் இதன் தாக்கம் நன்கு தெரிகிறது.

அடுத்த சில நாட்களுக்கு சனி- செவ்வாய் நேருக்கு நேர் பார்வை ஏற்படவிருக்கிறது. உலக அளவில் இதன் பாதிப்பு இருக்கும். தீவிரவாத தாக்குதல்கள், பூகம்பங்கள், விமான விபத்துக்கள், தீவிபத்துக்கள், வாகன விபத்துக்கள், திடீர் செயற்கை மரணங்கள், திருட்டு, கொள்ளை, கற்பழிப்புகள், ராணுவம்-காவல் துறையோடு தீவிரவாதிகளின் நேரடி மோதல்கள் ஏற்படும்.

இந்தியாவை பொறுத்தவரை ராணுவம் இதுவரை இல்லாத குரூர பாணியில் அதே சமயம் அதிக அளவில் வெளியே தெரியாத வகையில் தீவிரவாதிகளை  எதிர்கொண்டு அழிக்கும். ராணுவத்துக்கும், துணை ராணுவத்துக்கும், பொதுமக்களுக்கும் சேதங்கள் ஏற்படுவது தவிர்க்க இயலாததாக இருக்கும். காரணம் இந்தியாவின் கடக ராசிக்கு பாதக ஸ்தானமான ரிஷபத்திலும், கடகத்திற்கு 12 ல் மிதுனத்திலும் செவ்வாய் மறைவதாலும் இத்தகைய நிலை ஏற்படும். செவ்வாய் எப்போதெல்லாம் வலுவிழக்கிறதோ, கடகத்திற்கு பாதக, மறைவு ஸ்தானங்களில் செல்கிறதோ அப்போதெல்லாம் இந்தியாவும் கடக ராசியினரும் பாதிக்கப்படுவர்.   

அடுத்த இரு மாதங்கலில் தேசத்திலும் தமிழ்நாட்டிலும் சில முக்கிய விஷயங்கள் நடந்து முடியும். அது சிலவகையில் பாதிப்பாக இருந்தாலும் முடிவில் நன்மையாக இருக்கும்.  

நீர் ராசியான விருட்சிகத்தை விட்டு சனி மாற இருக்கும் இவ்வருடம் மழைப்பொழிவு இவ்வாண்டு நன்றாக அமையவேண்டும் என்பது விதி. எனவே விவசாயிகள் வேதனை இவ்வாண்டு கணிசமாக குறையும். அதே சமயம் கடகத்திற்கு ராகு மாறுவதால் நீர் மேலாண்மையில் நவீனங்கள் புகுத்தப்பட்டு விவசாயம் கண்டிப்பாக செழிக்கும்.

அன்பர்களுக்கு இவ்விடத்தில் ஒரு வேண்டுகோள்.

சுய ஜாதகத்தில் செவ்வாய் தோஷப்பட்டவர்கள் விவசாயிகளுக்கு உதவுங்கள். அவர்களது குழந்தைகளின் கல்விக்கும் திருமணத்திற்கும் வாழ்வாதாரம் மேம்படவும் உதவுங்கள்.  

எனக்கு தெரிந்த ஆன்மீக ஸ்தலத்தில் சத்ரு சம்ஹார ஹோமத்தில் பயன்படுத்த அன்பர் ஒருவர் ஐந்தாயிரம் கிலோ மிளகாயை சேகரித்துக்கொண்டிருக்கிறார்.

மிளகாயை உண்டு எனது வயிறு எரியவில்லை. இதுபோன்றவைகளை கண்டு எனது வயிறு மட்டுமல்ல உள்ளமும் எரிகிறது.

விவசாயிகள் வியர்வை சிந்தி விளைவிக்கும் உணவுக்கு ஆதாரமான தானியங்களையும் உணவுப்பொருட்களையும் வீணாக்காதீர்கள். நீராதாரங்களை பாதிக்கும் நெகிழித்தாள்களை (Plastic) பயன்படுத்தாதீர்கள். பாரம்பரியம்மிக்க ஆல், அரசு, வேம்பு போன்ற மரங்களை இயன்ற அளவு நடுங்கள்

மேலும் சிந்திப்போம்,

வாழ்த்துக்களுடன்,

அன்பன்,
பழனியப்பன்.
அலைபேசி எண்: 7871244501