Friday, 20 July 2018

ஒரு ஜாதகத்தை மற்றோர் ஜாதகம் எப்படி பாதிக்கிறது?


ஒருவரது ஜாதக அமைப்பே அவரது வாழ்க்கைச் சூழலை தீர்மானிக்கிறது. வேலை, குடும்பம், உறவுகள் என இப்படி அனைத்தையும் ஒருவரது ஜாதகத்தை அலசுவதன் மூலம் தெளிவாக அறியலாம். அதனால் ஒரு ஜாதகர் தனது வாழ்வில் எதிகொள்ளும் மற்றொரு ஜாதகரை குறை சொல்வதில் அர்த்தமில்லை என்பதே அப்பட்டமான உண்மை.


 
கீழ்க்கண்ட ஜாதகத்தை கவனியுங்கள்

தனபால் சென்னையில் பிறந்தவர். லக்னப் புள்ளியும் 2 ம் அதிபதி குருவும், தொடர்பு ஸ்தானமான 7 ஆமதிபதி சுக்கிரனும் வாக்கு காரகனும் 8, 11 க்கு உரியவரான   புதனின் நட்சத்திரத்தில் அமைந்துள்ளனர்.

குரு, சூரியன் உள்ளிட்ட 5 கிரகங்கள் மாந்தியோடு லக்னத்தில் அமைந்துள்ளனர். எனவே ஜாதகர் தனித்து இயங்குபவர் . செவ்வாய் லக்னத்தின்  சதுர்த்த கேந்திரத்தில் சனியின் வீட்டில் கும்பத்தில் அமைந்துள்ளது. செவ்வாய் 10 ஆமிடமான சிம்மத்தை பார்க்கிறது. செவ்வாய்க்கு 10 ல் லக்னத்தில் சூரியன் உள்ளது. தொழில் ஸ்தானமான 10 க்கு 10ல் ரிஷபத்தில் சனி அமைந்து 10 ஆமதிபதி சூரியனை பார்க்கிறது. சனியும் செவ்வாயும் ஒருவரை ஒருவர் பார்வை செய்கின்றனர்.

மேற்கண்ட அமைப்பின் பலனாக முக்கியமாக சனி செவ்வாய் தொடர்பின் காரணமான  ( சட்டம் ஒருங்கு நீதித்துறை) தொழில் புரிகிறார் ஜாதகர். .

தனபாலுக்கு கடந்த  29.11.2007ல்  திருமணம் சூரிய திசை சுக்கிர புக்தியில் திருமணம் நடந்தது.

லக்னத்தில் பாவக்கிரகமான சூரியன் எதிரியும் மற்றொரு பாவியுமான சனியின் அனுஷ நட்சத்திரத்தில் அமைந்து 8, 11 அதிபதி புதன், நீச நிலை பெற்ற பாக்யாதிபதி சந்திரன் இவர்களோடு குடும்ப புத்திர அதிபதியான குரு , களத்திர காரகன் சுக்கிரன் ஆகியோரையும் கட்டுப்படுத்துகிறார். இதில் சூரியனை தவிர இதர நான்கு கிரகங்களும்,  லக்னம் விழுந்த புள்ளியும் 8, 11 அதிபதியான புதனின் கேட்டை நட்சத்திரத்தில் அமைந்துள்ளது கவனிக்கத்தக்கது.

குடும்ப காரகன் குரு குடும்ப பாவமான தனுசுக்கு விரையத்தில் உள்ளார். புத்திர காரகன் குரு புத்திர ஸ்தானமான மீனத்திற்கு திரிகோணத்தில் உள்ளார். புத்திர காரகன் குரு புத்திர பாவமான மீனத்திற்கு 3,6,8  மற்றும் மீனத்திற்கு பாதகாதிபதி புதனுடனும் இணைந்துள்ளார்.

தனபால் குரு ஒரையில்தான் பிறந்துள்ளார். குரு மேற்கண்ட அமைப்பில் உள்ளதும் நவாம்சத்தில் நீச மானதும் ஜாதகர் தன, குடும்ப புத்திர வகையிலான பாதிப்புகளை அடைய வேண்டும் என்று பொருள்கொள்ள வேண்டும்.

லக்னத்தில் அமைந்த கிரக கூட்டில் சந்திரன் நீச நிலை பெற்று 4 ஆமதிபதி சனி வக்கிரம் பெற்று சந்திரனின் ரோஹிணி நட்சத்திரத்தில் கடகத்திற்கு பாதகதிலும் லக்னத்திற்கு 7 லும்  அமைந்து சனி செவ்வாய் தொடர்பு 4 ஆம் இடத்திற்கு ஏற்படுவதும் முந்தைய பத்தியில் குறிப்பிட்ட பாதிப்புகளை ஜாதகர் அடைய ஜாதகரின் தாயார் காரணமாக இருப்பார் என அளவிடலாம். 

சந்திரனின் வீடான கடகத்தில் கேது நின்று கடகம் சனி பார்வை பெறுவது இதை உறுதி செய்கிறது. சந்திரனுக்கு கேந்திரத்தில் செவ்வாய் அமைந்து நீச பங்கம் ஏற்படுத்த முயன்றாலும் சந்திரனும் செவ்வாயும் சந்திரனின் வீடும் சனி பார்வை பெற்றதால் நீச பங்கம் தடைபடுகிறது. சந்திரனின் வீட்டில் ஒரு வக்கிர கிரகம் கேது, சந்திரனின் நட்சத்திரம் ரோஹிணியில் ஒரு வக்கிர கிரகம் சனி அமையும் நிலைமை ஒரு ஜாதகனுக்கு மன நிலையிலும் தாயார் வகையிலும் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தும். 

தனபாலுக்கு  29.08.2008 அன்று ஓர் குழந்தை பிறந்தது. அஷ்டமாதிபதி புதனின் சாரம் பெற்ற நீச நிலையில் அமைந்த  சந்திர திசை சந்திர புக்தியில் ஒரு பெண் மகள் ரூபா பிறந்தாள்.



ரூபாவின் லக்னாதிபதியும் மாத்ரு ஸ்தானாதிபதியுமான  குரு லக்னத்திலேயே வக்கிரம் பெற்ற நிலையில் அமைந்துள்ளார். தந்தையை குறிக்கும் பித்ருகாரகன் சூரியன் ஆட்சி பெற்று பாவியான சனியுடன் இணைவு பெற்று  பாவ கர்தாரி யோகமும்  பெற்று நீசன் சுக்கிரன் சாரம் பெற்றுள்ளது. சுக்கிரனும் சூரியனும் சார பரிவர்த்தனை பெற்றுள்ள நிலையில் சனியும் சுக்கிரன் சாரம் பெற்றுள்ளது கவனிக்கத்தக்கது. கிரக யுத்தத்தில் செவ்வாய் அதிக பாகை பெற்று வெற்றி பெற்றுவிட்டதால் புதன் சுக்கிரன் இணைவு காரணமான நீச பங்கம் இங்கு சுக்கிரனுக்கு செயல்படமுடியாமல் போகிறது. 

ரூபா பிறந்த ஓரை நாதன் சுக்கிரனாகி, சுக்கிரன் நீசம் பெற்று கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் சூரியனின் சாரம் பெற்று நிற்கிறது. இவ்வாறு பாதிக்கப்பட்ட ஓரை நாதன் சூரியன் சாரத்தில் நிற்பது சூரியனின் அம்சமான தந்தையையும் பாதிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

குழந்தை ரூபாவின் லக்ன புள்ளி கேதுவின் மூலமாகி சூரியனும் சந்திரனும் ஆட்சி பெற்றாலும் இருவருக்குமிடையில் கேது அமர்ந்தது ஆகியவை குழந்தை  பிறந்தவுடன் பெற்றோருக்கிடையே பிரிவினை ஏற்படும் என்பதை குறிக்கிறது.

மகள் ரூபா பிறந்ததும் கருத்து வேறுபாடு காரணமாக தனபால் தனது மனைவியையும் குழந்தையையும் பிரிந்தார். மகளை தந்தை பார்க்க மறுத்தார் . பிரிவிற்கு தனபாலின் தாயார் (நீச சந்திரன்) வழிகோலியுள்ளார். தனபால்  தனது தொழிலின் மூலம் எளிதாக வழக்குத்தொடர்ந்து சட்ட ரீதியாக குடும்பத்தை மகள் பிறந்த சில மாதங்களிலேயே பிரிந்துள்ளார்.

தனபாலின் ஜாதகத்தில் அவர் பிறந்த துவிதியை திதிக்குரிய திதி சூனிய ராசிகள் தனுசு மீனமாகி திதி சூன்யாதிபதி குரு சூரியனுடன் இணைந்து திதி சூனிய தோஷத்திலிருந்து மீண்டாலும் குரு அஷ்டமாதிபதி புதன் சாரம் பெற்றது.  தந்தைக்கும் குழந்தைக்கும் இடையேயான இடைவெளியை ஏற்படுத்தியுள்ளதை உணர முடிகிறது.

ரூபா பிறந்தது சதுர்த்தசி திதியில். எனவே மிதுனமும் கன்னியும் திதி சூனிய ராசிகளாகவும் புதன் திதி சூனியம் பெற்ற கிரகமுமாகிறது. இங்கு செவ்வாயுடனான யுத்தத்தில் தோல்வியுற்று தனது உச்ச வலுவும் பயனற்றுப்போனதன் காரணமாக திதி சூனியம் புதனுக்கு குறைவாகவே செயல்பட்டாலும் தோல்வியுற்ற லக்ன பாதகாதிபதி புதன் சூரியனின் உத்திர நட்சத்திரத்தில் அமைந்துவிட்டதால் ஏற்கனவே சனி கேதுவால் பலவீனப்பட்டுள்ள சூரியனை மேலும் பாதிக்கச் செய்வதை அறிய முடிகிறது.

தனபால் ஜாதகத்தின் அஷ்டமாதிபதி புதனின் நட்சத்திரத்தில் புத்திர காரகன் குரு. ரூபாவின் ஜாதகத்தில் லக்ன பாதபாதிபதியும் தந்தையின் அஷ்டமாதிபதியுமான புதன் சூரியனின் உத்திரம் நட்சத்திரத்தில் நிற்பது ஒருவரது ஜாதகம் மற்றவருக்கு பாதகத்தை செய்யும் என்பதை குறிப்பிடுகிறது.

கவனிக்க:
ஜாதகங்கள் ஜோதிட ஆய்வு நோக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளன. யாரையும் குற்றம் கூறும் நோக்கத்தில் பதிவிடப்படவில்லை என்பதை அறியவும். ஜாதகங்களில் உண்மைப் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன. ஜாதகங்கள் திருக்கணித அடிப்படையில் பூச பக்ஷ அயனாம்சப்படி ஆய்வு செய்யப்பட்டவை.

வாழ்த்துக்களுடன் அன்பன்,
பழனியப்பன்.
கைபேசி: 8300124501. 

Tuesday, 24 April 2018

கிழக்கும் மேற்கும் சந்திக்கின்றன.


கிழக்கும் மேற்கும் ஒரு புள்ளியில் சந்திக்குமா? 

சந்தித்தால் அங்கே என்ன நடக்கும்?

வாருங்கள் காண்போம்.

இது என்ன அர்த்தமற்ற கேள்வி என்று தோன்றும். ஆனால் கிரகங்கள் காலச்சூழ்நிலையில் குணாதியத்தில் இரு துருவங்களான மனிதர்களை ஒரு சூழலில் ஒருங்கிணைக்கும்போது அங்கே பல வேடிக்கையான சம்பவங்கள் நிகழ்கின்றன. அப்படிப்பட்ட சூழல் சில புதிய பரிணாமங்களை அத்தகைய மனிதர்களுக்கு அவர்களது வாழ்வில் வழங்கும் என்று உறுதியாகக் கூறலாம்.

அது போன்று முற்றிலும் வேறுபட்ட குணங்களைக்கொண்ட இரு சகோதரர்கள் ஒரு குடும்பத்தில் பிறந்து எதிர்கொள்ளும் நகைச்சுவைகளுக்கு ஜோதிதிட ரீதியான காரணங்களை அலசுவதே இப்பதிவின் நோக்கம்.


கீழே அண்ணனின் ஜாதகம்.

                                                    
துலாம் லக்ன ஜாதகத்தில் லக்னாதிபதியும் அஷ்டமாதிபதியுமான  சுக்கிரன் ஆறாமிடத்தில் உச்சம். இரு மறைவு ஸ்தான அதிபதிகள் பரிவர்த்தனை ஆவது பரிவர்த்தனைக்கு உட்படாத பாவத்தின் பலனை இழந்து பரிவர்த்தனை ஆன பாவத்தின் பலனை அடைதல் என்பதாம். லக்னம் பரிவர்த்தனையில் செயல்படாது. அதேபோல குருவின் வீடான 3 ஆமிடம் பரிவர்த்தனையில் செயல்படாது.

3 ஆமிடம் இளைய சகோதரத்தை குறிக்கும் இடம் 6 ஆமிடம் எதிர்ப்பு ஸ்தானம். ஜாதகனுக்கு சாதகனின் இளைய சகோதரனுக்கும் ஏழாம் பொருத்தம்தான். தம்பி கிழக்கு என்றால் அண்ணன் மேற்கு என்பதுபோலத்தான். மூன்றாமிடத்தில் இளைய சகோதரனை குறிக்கும் செவ்வாய் கேதுவுடன் இணைத்து கெட்டுவிட்டார


தம்பியின் ஜாதகம் கீழே

                                              
விருட்சிக லக்ன ஜாதகத்தில் மூத்த சகோதரத்தை குறிக்கும் 11 ஆமிட அதிபதி புதன் 11 க்கு 8 ல்  ஆறாமிடத்தில் மறைவு. 11 ஆமிடத்தில் கேதுவுடன் மூத்த சகோதரனை குறிக்கும் குரு இணைத்து கெட்டுவிட்டார். (ஜோதிடத்தில் சனியும் மூத்த சகோதரனை குறிக்கும் கிரகமாக மதிப்பிடப்படுகிறது). குரு வக்கிரமானது மூத்த சகோதரனின் குணம் குறிப்பிட்ட திசையில் தூண்டப்பட்டிருப்பதை  குறிக்கிறது. அண்ணன் ஜாதகத்தில் மறைவு பெற்ற சுக்கிரனை தவிர இதர சுப கிரகங்கள் பாவிகளுடன் இணைத்துள்ளதை கவனியுங்கள்.

பிருகு நந்தி நாடி விதிகளின்படி ஆணின் ஜாதகத்தில் லக்னாதிபதியை விட குருவையே ஜாதகராக எடுத்துக்கொண்டு மதிப்பிடுகிறார்கள். அந்த வகையில் குரு சனி சேர்க்கை பெற்று  பாவ கர்த்தாரி யோகத்திலும் உள்ளது. இது ஜாதகரின் குண பாதிப்பை தெள்ளத்தெளிவாக குறிக்கிறது.
ஜாதகர் கட்டுப்பெட்டியானவர். மற்றவர்களுடன் இணைந்து பழகும் குணமின்றி தனிமை விரும்பியாக உள்ளார்.தாயை தவிர வேறு யார் கையிலும் உணவருந்த மாட்டார். உணவுக்கு பிடித்துவைக்கும் தண்ணீரில் தாயாரின் விரல் பட்டுவிட்டால்கூட வேறு குடிநீர் எடுத்துவரக்கூறுவார்.
தம்பியின் ஜாதகத்தை கவனியுங்கள்.

லக்னாதிபதியும் ராசியாதிபதியும் பாவிகளாகி இருவரும் கேந்திரங்களில் வலுவாக உள்ளனர். சூரியன் தனது ராசிக்கு 1௦ ல் திக்பலத்தில் உள்ளார்.  ஜாதகர் ஆளுமைத்தன்மை மிக்கவர். மற்றவர்களுடன் தயக்கமின்றி பழகுபவர். சந்திரனை நோக்கி வரும் கேது வக்கிர குருவோடு இணைந்தது ஜாதகரின் ஆன்மீக நாட்டத்தை குறிப்பிடுகிறது.

இப்படி முற்றிலும் மாறுபாடான குண இயல்புகளை கொண்ட இருவரும் அண்ணன் தம்பிகளாக ஒரே வீட்டில் இருப்பது பல நகைச்சுவையான சம்பவங்களுக்கு வழி வகுக்கிறது. பெற்றோரிடமும் மற்றவர்களிடமும் செயல்படுத்தும் தனது கட்டுப்பெட்டியான செயல்களை தம்பியிடம் செயல்படுத்தினால் தம்பியிடம் “நல்ல கவனிப்பு” கிடைக்கும் என்பதை பல “அனுபவங்களின்” மூலம் அறிந்தவர் அண்ணன்.

தம்பியின் ஜாதகம் ஆதிக்க ஜாதகம் என்பதால் அண்ணன் தம்பியை நேருக்கு நேர் பார்ப்பதைக்கூட தவிர்ப்பார்.

என்னே கிரகங்களின் லீலைகள்.

மீண்டும் விரைவில் மற்றொரு பதிவில் சந்திக்கிறேன்.

வாழ்த்துக்களுடன்,

அன்பன்,
பழனியப்பன்.
கைப்பேசி: 7871244501

Tuesday, 27 February 2018

கடவுளின் குழந்தைகள்

குழந்தைகளின் உலகம் மகத்தானது. நாம் எல்லோரும் கவலைகளற்ற அந்த  பருவத்தை கடந்து வந்திருந்தாலும் இன்னும் மனதில் ஏக்கத்தோடு பார்க்கும் பருவம் குழந்தைப்பருவம்.  குழந்தைப்பருவத்தின் பல்வேறு நிலைகளை ஜாதக ரீதியாக இந்தப்பதிவில் அலசுவோம்.



மனிதனின் முதல் பத்து வயது வரை ஆதிக்கம் செலுத்தும் கிரகம் சந்திரன் ஆகும். இப்பருவத்தில் குழந்தைகளின் செயல்பாடு சந்திரனைப்பொருத்தே அமையும்.

கீழே ஒரு பெண் குழந்தையின் ஜாதகம்.


இந்தக்குழந்தையின் ஜாதகத்தில் சந்திரன் உச்ச வர்கோத்தமம் பெற்றுள்ளது. சந்திர திசை 7 வயதில் முடியும். அதன் பிறகு செவ்வாய் திசையின் முதல் பகுதி அதாவது 1௦ வயது வரை மிகுந்த துடிப்பான செயல்பாட்டைக்கொண்டிருக்கும்.

இச்சிறுமியின் தற்போதைய நிலையானது மிகுந்த செயல்வேகம். அதீத கிரகிப்புத்திறன் ஆகியவற்றோடு  சந்திரன் வயதான பெண்ணை குறிக்கும் கிரகம் என்பதன் காரணமாக வயதுக்கு மீறிய பேச்சு  சாதுர்யத்தைக்கொண்டுள்ளது.

குழந்தை மேதாவித்தன்மை எனப்படும் CHILD PRODIGY  வகையை சார்ந்தது இந்த பெண் குழந்தையின் செயல்பாடு.

கீழே இரண்டாவதாக ஒரு சிறுவனின் ஜாதகம்.


சந்திரன் இங்கு ஆட்சியில் அமர்ந்து வர்கோத்தமம் பெற்றுள்ளது. உடன் அமர்ந்த லக்னாதிபதி செவ்வாயை நீசபங்கப்படுத்துகிறது. சதுர்த்த கேந்திரம் என்பது சந்திரனுக்கு திக்பலத்தையும் தருகிறது என்பது இங்கு கவனிக்கத்தக்கது. இத்தகைய ஜாதக நிலைமையானது அதீத முரட்டு சுபாவம் கொண்ட விளையாட்டுத்தனைத்தை ஏற்படுத்தும். பாதகாதிபதியும் மெதுவான செயல்பாட்டுக்குறியவருமான சனியின் திசை நடந்தாலும் கூட சனி 6 ஆமிடத்தில் அமைந்து திசை நடத்துவதால் சிறுவனின் மேற்சொன்ன சுபாவத்தில் அது பாதிப்பை ஏற்ப்படுத்த இயலவில்லை. மாறாக கல்வியில் மட்டுமே அது மந்த நிலைமையை ஏற்படுத்துகிறது.

இத்தகைய தீவிர செயல்பாட்ட குறிக்கும் நிலைமை. மருத்துவத்தில் HYPER ACTIVE  என அழைக்கப்படுகிறது.

மூன்றாவதாக மற்றொரு சிறுவனின் ஜாதகம் கீழே.


இச்சிறுவனின் ஜாதகத்தில் சதுர்த்த கேந்திரத்தில் தடை மற்றும் மந்தத்தன்மையை குறிக்கும் கேது அமர்ந்து குழந்தைப் பருவத்தை குறிக்கும் சந்திரனை பார்க்கிறார். சந்திரனுக்கு இடம் கொடுத்த 2 ஆமதிபதி சுக்கிரன் உச்சமானாலும் சுக்கிரனுக்கு பாவகர்த்தாரி யோகம் ஏற்பட்டு சுக்கிர மற்றும் சந்திர கேந்திரங்களில் பாவிகள் நின்றதால் சிறுவனுக்கு செயல்பாட்டில் மந்தத்தன்மையை தருவதுடன் பேச்சுத்திறனிலும் தடையை ஏற்படுத்துகிறது. இதுவரை சிறுவனுக்கு சரியாக பேச இயலாத நிலையே தொடர்கிறது. இதற்கு 2 ஆமிடம் தொடர்புடையவற்றோடு வாக்கு காரகனும் லக்னாதிபதியுமான புதனுக்கு பாவ கர்த்தாரி யோகம் இருப்பதையும் கவனிக்கவேண்டும். நடப்பில் இருக்கும் ராகு திசை சிறுவனுக்கு பொருட்காரணிகளில் தடையை ஏற்படுத்தாவிட்டாலும் உயிர்க்காரணியில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது  என்பது கவனிக்கத்தக்கது.

மன இறுக்கம் என்றழைக்கப்படும் இத்தகைய நிலையை இன்றைய மருத்துவ உலகம் AUTISM  என குறிப்பிடுகிறது.

மீண்டும் விரைவில் மற்றொரு பதிவில் சந்திப்போம்.

வாழ்த்துக்களுடன்

அன்பன்,
பழனியப்பன்,

கைப்பேசி எண்: 07871244501