Saturday 16 November 2013

சாதனைச் சிகரம் சச்சின் டெண்டுல்கர்




இந்தியாவில் அதிகம் அலசப்பட்ட ஜாதகங்களுள் ஒன்று நமது சச்சினின் ஜாதகம். காரணம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

தேசத்தில் பிரச்சனைகள் பல இருக்க, பெரும்பாலான ஜோதிடர்களால் ஆய்வு செய்யப்பட்ட ஜாதகத்தை நாமும் அலசுவது அரைத்த மாவையே அரைப்பது போன்றிருக்கும்  என்ற எனது எண்ணத்தையும் மீறி அவரது ஜாதகத்தை இங்கு நான் ஆய்வுக்கு உட்படுத்தியிருப்பது, எனக்கு கிரிக்கெட் பிடிக்கும் என்பதோடு மற்றுமின்றி எனது பள்ளி நாட்களிலிருந்து என்னை வசீகரித்த கிரிக்கெட் வீரர் சச்சின் என்பதும் அவரது ஜாதகத்தை எனது நோக்கில் ஆராய வேண்டும் என்பதும் ஒரு காரணம். அவரது கடைசி டெஸ்ட்டின் போது இப்பதிவை எழுதுவது மிகவும் பொருத்தமாக இருக்கும் என்பதும் மற்றொரு முக்கிய காரணம்.


இந்தியர்களால் மட்டுமல்ல எதிரணி வீரர்களாலும் கூட மிகவும் நேசிக்கப்பட்டவர் சாதனைச் சிகரம் நமது சச்சின் டெண்டுல்கர் என்றால் அது மிகையல்ல. பின்வரும் அவரது ஜாதகத்தைக் கவனியுங்கள்.

சிம்ம லக்னம் என்பது சாதனையாளர்களுக்கான லக்னம் சென்றால் அது மிகையல்ல. பொதுவாகவே ஒருவர் எந்தத் துறையில் ஈடுபட்டிருந்தாலும் தான் சாரத்த துறையில் சாதிக்க வேண்டும் எனில் அவர் சிம்ம லக்னத்தில் பிறந்தவராக இருக்க வேண்டும். இது ஒரு முக்கியமான பொது விதி.

சாதனையாளர்களுக்கே உரித்த சிம்ம லக்னத்தில்  பிறந்த சச்சினின் ஜாதகத்தில் லக்னாதிபதி சூரியன் பாக்கியஸ்தானத்தில் உச்சம். லக்னாதிபதியைப் பாக்யாதிபதி பார்ப்பதே சிறப்பு என்ற நிலையில், சூரியனுக்கு வீடு கொடுத்த பாக்யாதிபதி செவ்வாயும் உட்சமடைந்து தனது வீட்தில் உட்சமடைந்த சூரியனைப் பார்ப்பது கூடுதல் சிறப்பு. கூடவே இரு கிரகங்களும் நட்பு என்பது அபரிமிதமான ராஜயோகத்தை ஏற்படுத்தும் அமைப்பு.  ராஜ்யத்தைக் குறிக்கும் சூரியனுடன் ராஜ்ய ஸ்தானாதிபதி (10 ஆம் அதிபதி) சுக்கிரன் கூடியிருப்பது மற்றுமொரு சிறப்பு.




விளையாட்டுத்துறையில் ஒருவர் ஜொலிக்க வேண்டுமெனில் அதற்கு

1.காரகத்துவம் பெற்ற புதன் சிறப்பாக இருக்க வேண்டும்.
2.துடிப்பான செயல் வேகத்திற்கு சந்திரன் சிறப்பாக இருக்க வேண்டும்.
3.போர்க்குணத்திற்கும் விடா முயற்சிக்கும் உரிய  செவ்வாய் சிறப்புற்றிருக்க வேண்டும்.

இந்த மூன்று விதிகளும் ஒருங்கே அமைந்த ஜாதகம் சச்சினுடையது.

உட்சன் செவ்வாயுடன் கூடியதால் நீச குரு தனது நீச நிலையிலிருந்து விடுபட்டு  ராஜ யோகத்தைத் தரவேண்டியவராகிறார்.

ஒரு கிரகம் நீச நிலையிலிருந்து விடுபடும்போது அக்கிரகத்திற்குரிய பாவங்களும் வலுவடையும். அதனால் அந்த அக்கிரகத்தினது பாவத்திலமைந்த கிரகங்களும் வலுவடையும் என்பது விதி.

அந்த வகையில் சந்திரன் வலுவடைந்தார். மேலும் புதனும் தனது நீச நிலையிலிருந்து விடுபட்டுள்ளார்.

புதன் தனது நீச நிலையில் இருந்து விடுபட்டதால் ஜாதகர் தான் சார்ந்த துறையில் ஜொலிக்க உதவி புரிந்தார். தன, குடும்ப காரகன் குருவும் தன குடும்ப பாவதிபதி புதனும் ஜாதகருக்கு சிறப்பான குடும்ப வாழ்க்கையையும் அபரிமிதமான செல்வச் செழிப்பையும் கொடுத்தார்கள். ஜாதகரின் செல்வச் செழிப்பிற்கு, குரு ராஜயோகத்தில் அமைந்து தனஸ்தானத்தை 9 ஆம் பார்வையாகப் பார்ப்பதும் குருவின் வீட்டில்  தன ஸ்தானாதிபதி அமர்ந்ததும் முக்கிய காரணம். ரேவதி நட்ச்திரத்தில் தனது சுய சாரத்தில் அமைந்த புதன் தனது பாவத்தையே பார்த்து அதனை சிறப்புச் செய்கிறார்.

புதன் தனது நீச நிலையில் இருந்து விடுபட்டாலும் அது குருவினது நீச பங்கத்தைப் போல (உச்சனுடன் கூடி நீச பங்கப்பட்டது போன்ற) மிக வலுவான நிலையில் இல்லை. மேலும் அவர் அஷடமத்தில் மறைந்துவிட்டார். புதன் ஜாதகருக்கு நற்பலன்களை வழங்கும்படி  இக்கட்டில் குருவால் தள்ளப்பட்டார். அதனால் தனது காரகத்துவங்களில் ஒன்றான கல்வியில் ஜாதகரை கைவிட்டு விட்டார்.  (சச்சின் பள்ளி இறுதியில் தோல்வியுற்று படிப்பை நிறுத்தினார். அதற்கு காலச் சூழ்நிலையும் ஒரு காரணம்). புதன் வாக்குகாரகனும் கூட என்பதால் சச்சின் வாக்கு வன்மை இன்றி சற்றே பெண்மைத்தனமாகப் பேசுவார் என்பது அனைவரும் அறிந்ததே.

இவ்விடத்தில் ஒரு ஜோதிட நுட்பத்தினை ஜோதிட ஆர்வலர்கள் கவனிக்க வேண்டும். ஒரு கிரகம் தோஷப்பட்டு ஜாதகருக்கு நன்மை செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டால் அக்கிரகமானது அதன் காரகங்களில் ஒன்றைக் கை விட்டு அதன் மற்ற காரகங்களில் நன்மை செய்யும்.
பாக்கிய ஸ்தானமும் வலுவடைந்து பாக்கியாதிபதியும் வலுவடைந்ததால் ஜாதகர் தான் விரும்பிய காதல் மனைவியை அடைந்தார். 5 ஆம் இடத்தில் ராகுவுடன் நல்ல நிலையில் அமைந்த சந்திரன் ஜாதகருக்கு காதல் உணர்வுகளை தூண்டினார். லக்னாதிபதியுடன் கூடிய காதல்காரகன் சுக்கிரனும், சுக்கிரனின் வீட்டில் அமர்ந்த 7 ஆமதிபதி சனியும் ஜாதகரின் மனதில் இருந்த காதலை வெளிக்கொணர்ந்தார்கள் எனலாம். 

திருமணத்தோடு தொடர்புடைய 12, 2 மற்றும் 7 ஆவது பாவங்களுடன் சனி செவ்வாய் சம்பந்தம் பெற்றால் தனது குலத்தை (ஜாதியை) விட்டு வேறு குலத்தில் காதல் திருமணம் புரிவார் என்பது ஒரு ஜோதிட விதி. இந்த ஜாதகத்தில் சனி களத்திர பாவாதிபதியாகி 12 ம் பாவத்தை பார்வை செய்கிறார். அதே 12 ஆம் பாவத்தை  செவ்வாயும் பார்த்ததால் காதல் மணம் ஏற்பட்டுள்ளது. இந்த அமைப்பில் குடும்ப காரகன் குருவும் இணைந்ததால் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நடந்தேறியுள்ளது. 

குடும்ப பாவாதிபதி 8 ல் மறைந்தால் குடும்பம் அமையும் போது சில வருந்தமான, அவமானகரமான சூழ்நிலைகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்பது ஒரு ஜோதிட விதி


இந்த ஜாதகத்தில் புதன் 8ல் குரு வீட்டில் மறைந்துள்ளார். குருவினது வீடு என்பதாலும் குரு வலுவடைந்தார் என்பதாலும் பெரிதாக அவமானகரமான சூழ்நிலை திருமணத்தில் ஏற்படவில்லை எனினும் சச்சினின் மனைவி வயதில் மூத்தவர் என்பது இன்றுவரை விமர்சிக்கப்படுகிறது. சனி 10 ஆம் பார்வையாக தனது களத்திர பாவத்தை பார்த்ததால் ஜாதகரைவிட அவரது மனைவி  வயதில் மூத்தவர் என்பது இதற்கு முக்கியமான காரணமாகும்.

சச்சினின் சாதனைகளுக்கு சூரியன், செவ்வாய், புதன், சந்திரன், சுக்கிரன், கர்ம ஸ்தானத்தில் நட்புவீட்டில் அமைந்த சனி, ஜாதகத்தில் நல்ல நிலையில் அமைந்த ராகு – கேதுக்களுமாகும். மேலும் வீர, தீர , வெற்றி ஜெயங்களைக்குறிக்கும் 3 ஆம் இடத்தின் அதிபதி சுக்கிரன் லக்னாதிபதியுடன் பாக்கியஸ்தானத்தில் கூடியது ஜாதகரின் பல சாதனைகளுக்கும்  வெற்றிகளுக்கும் காரணமாக அமைந்தது.

ராகு – கேதுக்கள் இரண்டுமே நல்ல நிலையில் அமைந்துள்ளன. இவை தாங்கள்  அமர்ந்த பாவங்களின் அதிபதிகளை அடியொற்றியே தங்கள் பலன்களை வழங்குவர். 

ராகு மற்றும் கேது இரண்டுமே 5 ல் சுபர்களின் வீட்டில் இருப்பது குறையல்ல. அவர்கள் அமைந்த வீட்டில் சுபர்கள் கெட்டல் மட்டுமே பாவத்தைக் கெடுப்பார்கள். அதுவே பாவிகள் வீடானால் அவ்வீட்டின் பலன் கெட்டுவிடும். (இது ஒரு முக்கியமான ஜோதிட விதி. இவ்விதியை சரியாகப் புரிந்துகொள்ளாமல் சில அரைகுறை ஜோதிடர்கள் திருமணப் பொறுத்த விஷயத்தில் விளையாடுவது வேதனைக்குரியது.)

சச்சினின் ஜாதகத்தில் வலுவடைந்த கிரகங்களால் பெரும்பாலும் அணைத்து பாவங்களுமே வலுவடைந்திருப்பத்தைக் காணலாம்.
இப்படி வலுவடைந்த கிரகங்களும் பாவங்களும் சச்சினின் சாதனைகளுக்கு, செல்வச் செழிப்பிற்கு,குடும்ப வாழ்க்கை உள்ளிட்டவற்றிற்கு காரணமாகும்.

அதோடு லக்னம் கேதுவின் மக நட்சத்திரத்தில் அமைந்ததால் சச்சின் உலகின் ஒப்பற்ற சந்யாசி ஸ்ரீசத்யசாய்பாபாவின் சீடராக உள்ளார்.

ஜீவன காரகன் சனி நட்பு வீட்டில் அமைந்தால் ஜாதகர் தான் செய்யும் கர்மாவை (வேலையை) ரசித்துச் செய்வார் என்பது ஒரு ஜோதிட விதி. சச்சின் கிரிக்கெட்டை தனது உயிர் மூச்சாக நினைப்பதால்தான் அதை அவரால் ரசித்து அனுபவித்து விளையாட முடிகிறது. இதனால் அவருக்கு பல சாதனைகள் தேடி வந்தன.

சச்சின் போன்ற சாதனையாளர்கள் படைத்தவனால் ஆசீர்வதிக்கப்பட்டு அனுப்பப்பட்டவர்கள்.

சச்சின் ஒரு சகாப்தம்.

நூற்றாண்டுகளுக்கு ஒருமுறை மலரும் குறிஞ்சிப்பூ.

இதனை நான் அவர்மீதுள்ள அபிமானத்தால் குறிப்பிடவில்லை.

நாம் அலசிய அவரது ஜாதகத்திலிருந்து இவ்வாசகங்கள் மிகையல்ல என்பது புரியும்.

அவரது சாதனைகளை விடுங்கள்.

அவர் ஒரு நல்ல மனிதர்.

முறையாக வருமான வரி செலுத்துபவர்.

மனிதாபிமானி என்பதால் அவர் பல்லாண்டு வாழ உலகில் அனைவராலும் வேண்டப்படுகிறது.

சச்சின் வாழும் காலத்தில் நானும் வாழ்கிறேன் என்று பெருமையாக நினைக்கும் அவரது பலகோடி ரசிகர்களுள் நானும் ஒருவன் என்று இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.


இதற்கு மேலும் அவரது தொழில், உறவுகள், ஆரோக்கியம், ஆயுள் போன்றவற்றை ஆராய இயலும் என்றாலும் அது விரும்பத்தக்கது அல்ல என்பதால் இத்துடன் பதிவை நிறைவு செய்கிறேன்.

வாழ்க சச்சின்!

மற்றுமொரு பதிவில் சிந்திப்போம்.

வாழ்த்துக்களுடன்.
அன்பன்.
பழனியப்பன்.

Wednesday 6 November 2013

ஐப்பசியில் சூரிய நமஸ்காரம்

நாம் நன்கு ஆராய்ந்து  பார்த்தோமானால் பரிகாரங்கள் என்று நம் சனாதன வேத தர்மம் கூறுபவை பெரும்பாலும் செயலோடு இணைந்தவைகளே. ஏனையவை மனோரீதியானவை  எனப் புரிந்து கொள்ளலாம்.





உதாரணமாக ஐப்பசி மாதத்தில் பிறந்தவர்களுக்கு எல்லாம் உடல் ரீதியான ஏதேனும் ஒரு குறைபாடு இருப்பதை நன்கு அறியலாம். இன்றைய விஞ்ஞானமும் இதை ஒப்புக்கொள்கிறது. எலும்புகள் பலகீனமாகவும் அதனால் உடலமைப்பில் வலுவற்ற ஒரு தன்மையும் இருக்கும். இவற்றிற்கு காரணம் வைட்டமின் D யை கிரகிக்கும் தன்மை ஐப்பசி மாதத்தில் பிறந்தோற்கு மிகக்குறைவாக இருப்பதுதான். வைட்டமின் D யானது உடலின் கட்டமைப்பில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இத்தகைய குறைபாடுகளை போக்கிக் கொள்ள நமது வேதம் ஆரோக்கியத்திற்கு ஆதித்தனை வணங்கு என்றதோடு மட்டுமின்றி சூரியனைப் போற்றிப் பாடும் ஆதித்ய ஹிருதயத்தையும் சூரிய நமஸ்காரம் எனும் வழிபாட்டு முறையையும் வழங்கியுள்ளது.

இந்த சூரிய நமஸ்காரம் செய்வதில்தான் நமது முன்னோர்களின் சாதுரியம் வெளிப்படுகிறது. நன்கு குனிந்து நிமிர்ந்து மூச்சை முறையாக இழுத்துவிட்டுச் செய்யப்படும் சூரிய நமஸ்காரத்தினை நாம் நன்கு கவனித்தோமானால் உடலின் அனைத்து பாகங்களிலும் சூரிய ஒளி நன்றாக விழுமாறும் சூரியன் பதமாக இளம் வெயிலாக விழும் அதிகாலை வேளையில் குறிப்பிட்ட நேரத்திற்குள் முடியுமாறு இவ்வழிபாடு அமைந்திருப்பதை அறியலாம்.(குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் நீடித்தால் வெயில் கடுமையாகி பித்தம் ஏறும்). இதனால் உடலின் அணைத்து பகுதிகளும் சூரியக்கதிர்களிலிருந்து வைட்டமின் D ஐ ஈர்த்து நமக்கு தேவையான வைட்டமின் D கிடைக்கிறது.  

இதே போன்றுதான் ஒரு குறிப்பிட்ட கதியமைப்பில் உச்சரிக்கப்படும் ஆதித்ய ஹிருதயத்தால் நமது உடலின் உஷ்ணாதிக்க உணர்வுகள் தூண்டப்பட்டு அதன்பொருட்டு நமக்குத் தேவையான வைட்டமின் D யை நமது உடலே உற்பத்தி செய்ய வழிவகை செய்திருக்கிறார்கள்.

   உடல் ஆரோக்கியத்தைப் பேண உடற்பயிற்சியை மனதோடு ஒருமுகப் படுத்திச் செய்யும் போது நமக்கு உடலும் உள்ளமும் பலனடைகிறது. இன்றைய நவீன யுகத்தில் செய்யப்படும் எந்த உடற்பயிற்சிக்கும் இது மேலானது இந்த நமது பாரம்பரிய சூரிய நமஸ்காரம். இது நமது ஆயுள் முழுமைக்குமான ஆரோக்கிய வழிபாட்டு முறை.

  ஐப்பசி மாதத்தில் சூரியன் நீச்சமாவதால் இம்மாதத்தில் பிறந்தவர்களுக்கு சூரியனின் வலு குறைந்திருக்கும். எனினும் அனைவருமே சூரியன் சாந்த சொரூபமாகக் காட்சியளிக்கும்  இந்த ஐப்பசி மாதத்திலிருந்து இந்தப் பயிற்சியை துவங்கலாம்.

மற்றுமொரு பதிவில் சந்திப்போம்,
அன்பன்,
பழனியப்பன்.