Wednesday, 6 November 2013

ஐப்பசியில் சூரிய நமஸ்காரம்

நாம் நன்கு ஆராய்ந்து  பார்த்தோமானால் பரிகாரங்கள் என்று நம் சனாதன வேத தர்மம் கூறுபவை பெரும்பாலும் செயலோடு இணைந்தவைகளே. ஏனையவை மனோரீதியானவை  எனப் புரிந்து கொள்ளலாம்.





உதாரணமாக ஐப்பசி மாதத்தில் பிறந்தவர்களுக்கு எல்லாம் உடல் ரீதியான ஏதேனும் ஒரு குறைபாடு இருப்பதை நன்கு அறியலாம். இன்றைய விஞ்ஞானமும் இதை ஒப்புக்கொள்கிறது. எலும்புகள் பலகீனமாகவும் அதனால் உடலமைப்பில் வலுவற்ற ஒரு தன்மையும் இருக்கும். இவற்றிற்கு காரணம் வைட்டமின் D யை கிரகிக்கும் தன்மை ஐப்பசி மாதத்தில் பிறந்தோற்கு மிகக்குறைவாக இருப்பதுதான். வைட்டமின் D யானது உடலின் கட்டமைப்பில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இத்தகைய குறைபாடுகளை போக்கிக் கொள்ள நமது வேதம் ஆரோக்கியத்திற்கு ஆதித்தனை வணங்கு என்றதோடு மட்டுமின்றி சூரியனைப் போற்றிப் பாடும் ஆதித்ய ஹிருதயத்தையும் சூரிய நமஸ்காரம் எனும் வழிபாட்டு முறையையும் வழங்கியுள்ளது.

இந்த சூரிய நமஸ்காரம் செய்வதில்தான் நமது முன்னோர்களின் சாதுரியம் வெளிப்படுகிறது. நன்கு குனிந்து நிமிர்ந்து மூச்சை முறையாக இழுத்துவிட்டுச் செய்யப்படும் சூரிய நமஸ்காரத்தினை நாம் நன்கு கவனித்தோமானால் உடலின் அனைத்து பாகங்களிலும் சூரிய ஒளி நன்றாக விழுமாறும் சூரியன் பதமாக இளம் வெயிலாக விழும் அதிகாலை வேளையில் குறிப்பிட்ட நேரத்திற்குள் முடியுமாறு இவ்வழிபாடு அமைந்திருப்பதை அறியலாம்.(குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் நீடித்தால் வெயில் கடுமையாகி பித்தம் ஏறும்). இதனால் உடலின் அணைத்து பகுதிகளும் சூரியக்கதிர்களிலிருந்து வைட்டமின் D ஐ ஈர்த்து நமக்கு தேவையான வைட்டமின் D கிடைக்கிறது.  

இதே போன்றுதான் ஒரு குறிப்பிட்ட கதியமைப்பில் உச்சரிக்கப்படும் ஆதித்ய ஹிருதயத்தால் நமது உடலின் உஷ்ணாதிக்க உணர்வுகள் தூண்டப்பட்டு அதன்பொருட்டு நமக்குத் தேவையான வைட்டமின் D யை நமது உடலே உற்பத்தி செய்ய வழிவகை செய்திருக்கிறார்கள்.

   உடல் ஆரோக்கியத்தைப் பேண உடற்பயிற்சியை மனதோடு ஒருமுகப் படுத்திச் செய்யும் போது நமக்கு உடலும் உள்ளமும் பலனடைகிறது. இன்றைய நவீன யுகத்தில் செய்யப்படும் எந்த உடற்பயிற்சிக்கும் இது மேலானது இந்த நமது பாரம்பரிய சூரிய நமஸ்காரம். இது நமது ஆயுள் முழுமைக்குமான ஆரோக்கிய வழிபாட்டு முறை.

  ஐப்பசி மாதத்தில் சூரியன் நீச்சமாவதால் இம்மாதத்தில் பிறந்தவர்களுக்கு சூரியனின் வலு குறைந்திருக்கும். எனினும் அனைவருமே சூரியன் சாந்த சொரூபமாகக் காட்சியளிக்கும்  இந்த ஐப்பசி மாதத்திலிருந்து இந்தப் பயிற்சியை துவங்கலாம்.

மற்றுமொரு பதிவில் சந்திப்போம்,
அன்பன்,
பழனியப்பன். 

No comments:

Post a Comment