Thursday, 2 October 2014

செவ்வாயும் புதனும் சேர்ந்தால் செம கூட்டணியாமே?

எப்படியோ எனது தந்தைக்கு மதுப்பழக்கம் ஏற்பட்டுவிட்டது. இப்போதுபோல நாற்பது வருடங்களுக்கு முன் மதுவில் இத்தனை வகை இருந்திருக்க வாய்ப்பில்லை. இருந்தாலும் பட்டை சாராயம், கள்ளு போன்றவை அப்போதைய பிரபலங்கள். அப்போது எனக்கு 5 வயது இருந்திருக்கலாம். அப்போது முதலே 30 வயது வரை நான் சற்று ஒல்லியான உடல்வாகுடையவனே. பள்ளியிலேயே எனக்கு ‘புல்தடுக்கி பயில்வான் என்றொரு பட்டப்பெயருண்டு.

அந்தப் பால்ய வயதில் ஒரு புண்ணியவானின் (!) ஆசைகேற்ப எனது தந்தையும் என்னை காலையில் எழுந்திருக்குமுன்பே பனை மரத்திலிருந்து கள் இறக்கும் இடத்திற்கு என்னை தரதரவென்று அழைத்துச் செல்வார். அங்கே ஒரு மரத்திலிருந்து இறக்கி தனியாக வைக்கப்பட்ட கள் எங்களுக்குத் தயாராக இருக்கும். ஒரு மரத்துக்கள் உடம்பைக் குண்டாக்கும் என்பதை கூறி ‘நீ மட்டுமல்ல உனது பரம்பரையே துக்கமற்ற வாழ்வில் திளைக்க வேண்டும் என்று படிப்பறிவில்லாத எனது தந்தைக்கு கவலையை மட்டுமல்ல உலகையே மறக்கும் காலாமிர்தத்தை அறிமுகப்படுத்தியவரும் அதே புண்ணியவான்தான். என்ன ஒரு உயர்ந்த குணம். கிட்டத்தட்ட 8  மாதங்கள் கள்ளைத்தான் நான் காப்பியாக எண்ணிக் குடித்தேன் என்றால் அது பொய்யல்ல. நல்ல வேலையாக ‘ஜல்லிபட்டி என்ற அத்தக்கிராமத்திலிருந்து ‘வெள்ளியணை அக்ரகாரத்திற்கு எங்களை இடம்பெயர வைத்து என்னைக் காப்பாற்றினான் என் இறைவன் முருகன்.

முதலில் மதுவை எனது தந்தை குடித்தார். பிறகு மது எனது தந்தையை குடிக்க ஆரம்பித்தது. நான் வளர்ந்து கல்வி முடித்து பணிக்குச் சென்ற பிறகும் அவர் இறக்கும்வரை என்னை குடிக்காதே எனக் கூறவேயில்லை. மது மனிதனை எப்படி அனு அனுவாகக் கொல்கிறது என்பதை  எனது பால்ய வயது முதல் அருகிலிருந்து பார்த்தவன் நான். எனது தந்தை அதிக மதுவருந்தியதன் விளைவாக போதையிலேயே போய்ச் சேர்ந்தார். தான் இறப்பது தெரியாமலேயே நினைவில்லாமலேயே இறந்தார் எனது தந்தை. அது ஒன்று வேண்டுமானால் மது எனது தந்தைக்குச் செய்த நன்மையாக இருக்கலாம்.

தீய பழக்க வழக்கங்களுக்கு காரகன் செவ்வாய் ஆவார்.

செவ்வாய் ஜாதகத்தில் கெட்டு அதனுடன் புதன் சம்பந்தம் பெற்றால் புகைப்பிடித்தல், புகையிலை உண்ணுதல், கஞ்சா, மது உள்ளிட்ட அணைத்து போதை வஸ்த்துக்களின் பழக்கம் ஏற்படும். புதன் செவ்வாய் இவற்றுடன் இரண்டாம் பாவமும் தீய பழக்க வழக்கக்களுக்குரிய 6 ஆம் பாவமும் சம்பந்தம் பெறவேண்டும். இந்த அமைப்பில் ராகு சேர்ந்தால் கூட்டாக மதுவருந்துதல், போதை ஊசிகளைப் பகிர்ந்து கொள்ளுதல் போன்ற விபரீதங்களின் எல்லைக்கு கிரகங்கள் இட்டுச் செல்லும்.

தீய பழக்கங்கள் மற்றும் தொடர்புகள் ஏற்படும் காலத்தையும் அவை முடிவுறும் காலத்தையும் செவ்வாய் மற்றும் 6 ஆம் இடம் இவைகளோடு தொடர்புடைய கிரகங்களின் நிலையைக் கொண்டு துல்லியமாக அளவிட முடியும்.


பின்வரும் ஜாதகத்தைக் கவனியுங்கள்.


ஜனன கால புதன் திசை இருப்பு: 1 வருடம் 6 மாதம் 23 நாட்கள்.

லக்னாதிபதி செவ்வாயானவர் லக்னத்திற்கு 6 ஆமதியான வக்ர கதியிலுள்ள  புதனின் ஆயில்ய நட்சதிரத்தில் லக்னத்திற்கு 4 ஆமிடத்தில் நீசம். நீச செவ்வாய்க்கு வீடு கொடுத்த சந்திரன் அதே புதனின் கேட்டை நட்சத்திரத்தில் நீசம் உடன் ராகு சேர்க்கை. செவ்வாயும் சந்திரனும் நீசப் பரிவர்த்தனை. சர ராசியான விருச்சிகத்திற்கு பாதக ஸ்தானத்தில் (9 ஆம் பாவம்) லக்னாதிபதி. ராசியும் லக்னமும் சஷ்டாஷ்டக (6 – 8) அமைப்பில் உள்ளது. ஜாதகரைக் காப்பாற்ற வேண்டிய குரு லக்னத்திற்கு பாதக ஸ்தானமான 11 ஆமிடத்தில் உள்ளது. மேலும் விருச்சிக ராசிக்கு ஒரு விசேஷ குணம் உள்ளது அது என்னவெனில் ஒரு விஷயத்தில் அதீத விருப்பையும் இல்லாவிட்டால் அதீத வெறுப்பையும் கொள்ள வைக்கும் ராசி அது. ஜாதகர் கொண்டது மதுவின் மீதான அதீத விருப்பு என்பதுதான் சோகம்.

இவையனைத்தும் கடுமையான ஜாதக அமைப்புகள்.

ஜாதகருக்கு 2009 துவக்கத்தில் சந்திர திசை துவங்கியது. அதுமுதல் ஜாதகர் மதுவின் கோரப்பிடியில் அகப்பட்டுவிட்டார். ஜாதகர் இன்னும் மதுவின் பிடியிலிருந்து மீளவில்லை.

அம்ச சக்கரத்தில் செவ்வாய் உச்சமானதால் நீச பங்கப்படுள்ளது தெரியும். இது ஒரு நல்ல அம்சம். செவ்வாய் இப்படி நீசபங்கப்பட்டது செவ்வாய் அமைந்த வீட்டதிபதி சந்திரனின் நீசத்தையும் பங்கப்படுத்தும். ஆனால் இவை இரண்டும் ராசியில் நீச பரிவர்த்தனை ஆனதால் அம்சத்தினால் இக்கிரகங்களுக்கு ஏற்பட்ட வலுவானது தாமதமாகவே வேலை செய்யும்.

இப்படி ஒரு கிரகம் ராசியில் நீசமாகி அம்சத்தில் உச்சமானதன் பலனாவது ராசியில் அந்தக் கிரகம் நீசமானதன் பலன் முதலிலும் இரண்டாவதாக அம்சத்தில் உச்சமானதன் பலனும் கிடைக்கும் என்பதாம். எனவே சந்திர திசையின் பிற்பகுதியில்  ஜாதகர் படிப்படியாக மீண்டு வருவார் எனலாம். இதை மற்றொரு வழியிலும் அனுமானிக்கலாம். சந்திர திசை 10 வருடங்கள் என்பதும் சந்திரன் செவ்வாயின் வீட்டில் உள்ளதும் தெரிந்ததே. எனவே சந்திரன் தான் அமர்ந்துள்ள பாவத்தின் அடிப்படையிலும் தனது திசையில் பலனளிக்க வேண்டும். இதில் சந்திரன் அமர்ந்த செவ்வாயின் ஒரு வீடுதான் நீச சந்திரனால் கெட்டுள்ளது மற்றோர் வீடான மேஷம் கெடவில்லை எனவே சந்திர திசையின் முதன் 5 வருடங்களில் பாதிப்பு விருச்சிக ராசிக்குரியபடி கடுமையாகவும் மற்றோர் பகுதி மேஷ ராசிக்குரியபடி அதிக பாதிப்பின்றியும் அமையும்.  

கீழே மற்றோர் ஜாதகத்தைக் கவனியுங்கள்.


ஜனன கால செவ்வாய் திசை இருப்பு: 3 வருஷம் 11 மாதம் 22 நாட்கள்.

மேஷ லக்னத்திற்கு 4 ல் லக்னாதிபதி நீசமாகி வக்ரமாகியுள்ளார்.நீச செவ்வாய்க்கு வீடு கொடுத்த சந்திரன் தீய தொடர்புகளைக் குறிக்கும் 6 ஆமிடத்தில் நீசன் செவ்வாயின் நட்சத்திரமான சித்திரை நட்சத்திரத்தில் அமைந்துள்ளார். அதனுடன் முந்தைய ஜாதகத்தைப் போலவே ராகு சேர்க்கை. 

இப்படி மனோகாரனான சந்திரன் கெட்டு அதனுடன் ராகு சேர்வது ஜாதக அமைப்பில் ஏற்படும் கெடுபலன்களை தீவிரப்படுத்தும்.

ஜாதகருக்கு 1999 ல் துவங்கிய குரு திசை ஜாதகருக்கு வெளிநாட்டு வேலையை வழங்கி வெளிநாடு அனுப்பியது. காரணம் குரு ஒரு ஜலக்கோள் என்பதும்  வெளிநாடு தொடர்பை ஏற்படுத்தும் 9 ஆம் பாவாதிபதியாக வருவது ஒரு காரணம். மற்றொன்று  லக்னாதிபதி ஜல ராசியான 4 ஆமிடத்தொடு தொடர்பு கொண்டதும் ஆகும். ஆனால் குருவும் மது பழக்கத்தைக் குறிக்கும் புதனின் வீடான மிதுனத்துடன் தொடர்பு பெற்றது ஜாதகரை மதுவுக்கு அடிமையாக்கியது.

குரு பாக்யாதிபதி (9 ஆமதிபதி) என்பதால் பாக்கியங்களைக் கொடுத்தது ஆனால் விரயாதிபதி (12 ஆமதிபதி) என்பதால் புத்திர வகையில் ஜாதகருக்கு விரையத்தை அதாவது புத்திர மறுப்பை கொடுத்தது. இதற்கு லக்னத்திற்கு 5 ல் அமைந்த சனியும் முக்கிய காரணம். ஜாதகர் செயற்கை முறையில் புத்திர பாக்கியத்திற்கு முயன்றார். ஆனால் மருத்துவர்கள் ரத்தத்தில் ஆல்கஹால் அதிகமிருப்பதால் செயற்கை முறை பலனளிக்காது என தெரிவித்துவிட்டனர். அம்சத்திலும் ஐந்தாமதிபதி நீசமானதை கவனியுங்கள். முந்தைய ஜாதகம் ராசியில் கெட்டு அம்ச வலுவால் தரக்கூடியது. மூன்று கிரகங்கள் (குரு, செவ்வாய் , சனி) வக்ர கதியிலமைந்த  இந்த ஜாதகத்தில் மூன்றுமே தண்ணியடித்துவிட்டு அமர்ந்திருக்கும் நிலைதான்.

மது ஜாதகரின் வாழ்வை மட்டும் சீரழிக்கவில்லை அவரது வம்ச விருத்தியையும் தடை செய்துவிட்டது.

வளரும் சமுதாய அமைப்பில் பல்வேறு சீர்கேடுகள் அதிகரித்துவிட்டன. அதில் முதன்மையானது மதுவின் மீதான மோகம்.

இன்று மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டால் அது காவல் துறைக்கும் (செவ்வாயின் அம்சம்) ஜாதீய  அமைப்புகளுக்கும் (ராகுவின் அம்சம்) வருமானம் ஈட்டும் அற்புதமான வழியாகிவிடும். ஜாதீயக் கயவர்கள் தேசாபிமானிகள் போல நடிப்பது இதற்காகத்தான். அரசு மதுவை வருமானம் ஈட்டும் பொருளாகப் பார்க்காமல் இதர வழிகளில் பொருளீட்ட முனைய வேண்டும். மதுவின் மீதான கட்டுப்பாடுகளை தீவிரமாக அமல்படுத்த வேண்டும். அணைவரும் இணைந்து போராடினால் மதுவின் பயன்பாட்டை முடக்கிவிடலாம்.

நினைவில் கொள்ளுங்கள் அபினுக்காக தங்கள் தேசத்தின் (ஹாங்காங்) ஒரு பகுதியையே ஆங்கிலேயர்களிடம் இழந்தவர்கள் சீனர்கள்.

நாம் விழித்துக் கொள்ளாவிட்டால் இழக்கவிருப்பது நமது வாழ்வை, நமது சமுதாயத்தை.

மீண்டுமொரு பதிவில் சந்திப்போம்,

வாழ்த்துக்களுடன் அன்பன்,
பழனியப்பன்

3 comments:

  1. ஐயா, ஒரு சந்தேகம் ராசிக்கும் பாவத்துக்கம் என்ன வேறுபாடு? கிரக சேர்க்கை
    பார்வை பலனை ராசியில் பார்ப்பதா பாவசக்கரத்தில் பார்ப்பதா? thanks..

    ReplyDelete
    Replies
    1. ராசி என்பது நாம் காணும் வான்வெளியில் கிரகங்கள் இருக்கும் நிலை. பாவம் என்பது ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட கதியில் தான் சுழல வேண்டும் என்ற கணக்கீட்டு விதியின் அடிப்படையில் ஒரு நாளின் சூரியோதயம் முதல் கணக்கிட்டு குறிப்பிட்ட நேரத்தில் கிரகங்கள் இருக்கும் நிலையை அளவிடுவது. மிகப்பெரிய வான்வெளியை காணுகையில் இடமாறு தோற்றப்பிழை ஏற்படுவது இயல்பு. காரணம் வான்வெளியின் பிரம்மாண்டம். அதனால்தான் பாவத்தை கிரக சஞ்சார விதிகளின் படி எடுத்துக்கொண்டு பலன் காண்கிறோம். சாதாரண டெஸ்ட்டில் தெரியாதது C.T ஸ்கேனில் மருத்துவர்களுக்கு தெரியுமல்லவா. அப்படி ஒரு ஒப்பீட்டுக்கு பாவத்தை அவசியம் காண வேண்டும்.எனினும் ராசியையே பிரதானமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

      அன்பன்,
      பழனியப்பன்.

      Delete