Sunday, 22 November 2015

ஆறாம் பாவம்.

பளிங்கு போன்றதொரு நேர் சாலை.அதில் குழிகளும் மேடுகளும் கூட இல்லை.  அது ஒருவழிச்சாலையும் கூட. எதிரில் எந்த ஒரு நபரோ அல்லது வாகனமோ வராது.  உங்களிடம் இருப்பது நவீன வசதிகளுடன் கூடிய அற்புதமான BMW கார். அதுவும் சமீபத்திய மாடல். உங்கள் பயணத்தை கற்பனை செய்து பாருங்கள்.

மேகத்தில்  பறப்பது போன்று இருக்காதா?.

இன்றைய சராசரி இளைஞர்களின் கனவு இத்தகைய காரை வாங்கி அனுபவிக்குமளவு ஒரு அதிகாரம்மிக்க சௌகரியமான சம்பாத்யத்தில் ஒரு பணி.

ஆனால் உண்மையில் அத்தகைய ஒரு பயணம் சுகமாக இருக்க வாய்ப்பே இல்லை. சில நூறு கிலோ மீட்டர்கள் பயணத்திற்குப்  பிறகு பயணம் அலுப்புத்தட்டிவிடும்.என்பதே நிதர்சனம்.

மற்றொரு சாலை.

இது மேடு பள்ளங்கள் நிறைந்தது. இருவழிச்சாலை. உங்களிடம் இருப்பது பழைய அம்பாசிடர் கார். பல ஊசிக்கொண்டை வலைவுகளைக்கொண்ட மலைப்பாதை.

உங்கள் பயணத்தை இப்போது கற்பனை செய்து பாருங்கள்.

திடீரென்று திருப்பத்தில் அச்சுறுத்திய சக வாகன ஓட்டியின் பிறப்பை வசைபாடிய பிறகு இந்தப்பயணம் உங்களுக்கு அடுத்து என்ன எதிர்படும் என்ற ஒரு சுவாரஸ்யத்தை தருவது நிச்சயம்.

இத்தகைய பாதையில் பயணித்து முடித்த பிறகு நீங்கள் பண்பட்ட சிறந்த அனுபங்கள் கொண்ட மனிதராய் மாறியிருப்பீர்கள்.

மனித வாழ்வு இயந்திரத்தனமாகி வாழ்க்கை அலுப்புத்தட்டிவிடக்கூடாது என்பதற்காகவே வாழ்வில் எதிர்படும் சிரமங்கள்.

ஒருமனிதனின் வாழ்வில் இப்படிப்பட்ட எத்தகைய சிரமங்கள் எதிர்படும் என்பதை குறிப்பிடுவதே ஜாதகத்தில் ஆறாம் பாவம்.

ஆறாம் பாவம் கடன், (குணப்படுத்தக்கூடிய) வியாதிகள், எதிரிகள் போன்றவற்றைக் குறிப்பிடும் பாவமாகும்.


பின்வரும் ஜாதகத்தை கவனியுங்கள். 


மேஷ லக்னத்தில் ஆறாம் பாவாதிபதி புதன் வக்கிர கதியில் அமைந்துள்ளார். ஜாதகர் தனது வாழ்வில் ஆறாம் அதிபதியின் காரகத்துவத்தின் காரணமாக சிரமப்படுவார் என்பதை இது குறிக்கிறது.மகர ராசிக்கு ஆறாம் பாவாதிபதி புதன் சுகஸ்தானத்தில் அமைந்துள்ளதன் மூலம் இதை உறுதி செய்துகொள்ளலாம்.

ஆறாம் பாவத்தின் பிரதான காரகங்கள் என்றால் அது கடன், வியாதி எதிரி எனில் இம்மூன்றில் எந்த வகையில் ஜாதகர் சிரமப்படுவார் என்பதை எப்படி கண்டுபிடிப்பது?.

முதலாவதாக கடன்.

லக்னத்திற்கு 2 ஆமிடமான தனஸ்தானத்தில் சுக்கிரன் ஆட்சியில் உள்ளதும் ராசிக்கு விரயத்தில் குரு உள்ளதும் ஜாதகருக்கு விரயத்திற்கேற்ற தனவரவு உண்டு என்பதை உறுதி செய்கிறது. மேலும் ஜாதகன் இன்னும் கல்லூரியில் பயின்றுகொண்டிருக்கும் ஒரு மாணவன். எனவே கடன் என்பது ஜாதகருக்கு பெரிய பாதகத்தை ஏற்படுத்த வாய்ப்பில்லை.

இரண்டாவதாக எதிரி.

லக்னத்திற்கு ஆறாம் பாவத்தில் கடும் பாவிகளான சனி, ராகு, கேதுக்கள் அமைந்தால் எதிர்ப்பில்லாத வாழ்வு என்பது ஜோதிட விதி மட்டுமல்ல அனுபவ உண்மையும் கூட. லக்னத்தில் ஒரு உச்ச கிரகம் அதுவும் பஞ்சமாதிபதியான ராஜ கிரகம் சூரியனாக இருந்தால் எதிரி உதிரியாகிவிடுவான் என்பதும் ஒரு முக்கிய ஜோதிட விதியாகும். எனவே எதிரி வகையில் பெரிய பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை.

மூன்றாவதாக வியாதி.

லக்னத்திற்கு ஆறாம்பாவத்தை பிணிக்கு (வியாதிக்கு) காரகத்துவம் பெற்ற பாதகாதிபதி சனி பார்க்கிறார். ராசிக்கு ஆறாம் பாவத்தை குரு பார்த்து வளப்படுத்துகிறார்.எனவே ஜாதகர் வியாதியால் பாதிக்கப்படுவார் என்பதை தெளிவாக அனுமானிக்கலாம்.

சரி. ஆனால் எப்போது வியாதி வரும்.

வாழ்வின் அனைத்து சம்பவங்களும் திசா புக்திகளின் அடிப்படையில்தான் நடக்கும்.

ஜாதகருக்கு 10.02.2014 முதல் ராகு திசை நடக்கிறது.

ஆறாம் பாவத்தில் கடும் பாவியான ராகு இருப்பது விரும்பத்தக்கது என்றாலும் ராகு-கேதுக்கள் தாங்கள் இருக்கும் பாவாதிபதியின் செயலையே பிரதானமாக பிரதிபலிப்பர் என்பது கவனிக்கத்தக்கது. அத்துடன் சுபாவ அடிப்படையில் ராகு பிணிகளுக்கு காரகத்துவம் பெற்றவர் சனி போன்று செயல்படுவார் என்பது முக்கியமாகக் கவனிக்கத்தக்கது. (கேது செவ்வாயை போன்று செயல்படுவார்).

ராகு திசை 18 ஆண்டுகள் எனில் ராகு தான் இருக்கும் பாவாதிபதி புதன் இரண்டு பாவங்களுக்கு (3 & 6) அதிபதி என்பதால் தனது 18 அண்டு பலனை 9 ஆண்டுகள் கொண்ட இரு பகுதிகளாக பிரித்து வழங்கும்.

இதில் ஆறாம் பாவம் கடன், வியாதி, எதிரி எனில் 3 ஆம் பாவமானது வெற்றி, வீரம், துணிவைக் குறிக்கும் உப ஜெய ஸ்தானமாகும்.

சரி.இரு பகுதி பலனில் எந்த பகுதிக்கான பலன் முதலில் நடக்கும் எது இரண்டாவது நடக்கும் என எப்படி காண்பது?

கோள்சாரத்தை கவனியுங்கள்.

ஜனன காலத்தில் பாதிப்பை அளிக்கும்படி அமையும் வருட கிரகம் கோள்சாரத்தில் அதே பாவத்தில் நிற்கும்போது உறுதியாக பாதிப்பை தரும்.  

இந்த விதியின் அடிப்படையல் ராகு ஜனன ஜாதகத்தில் தான் நின்ற கன்னி ராசியிலேயே தற்போது நிற்கிறது என்பதிலிருந்து பாதிப்பு தற்போது ஏற்படும் என அறியலாம்.   

ஜாதகர்  சென்ற மாதம் அக்டோபர் இறுதி வாரத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். மிகக் கடுமையான பாதிப்பு. ஜீவ மரண போராட்டத்திற்குப் பிறகு நவம்பர் மாதம் இரண்டாவது வாரத்தில் தேறினார்.


ஜாதகர் பாதிக்கப்பட்ட காலத்தின் கோள்சாரம் கீழே.



ஜனனத்தில் ராகு நின்ற அதே ஆறாம் பாவத்தில் ராகுவுடன் ஆறாமதிபதி புதன் உச்சமடைந்துள்ளார்.

ஜாதகரை தாங்கிப்பிடிக்க வேண்டிய பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதி சூரியன் நீசமாகியுள்ளார். 

சூரியன் நீசமானதால் சூரியனின் பாவத்தில் நின்ற லக்னாதிபதி செவ்வாயும் பாக்யாதிபதி குருவும் சுக்கிரனுடன் சேர்ந்து சனி பார்வை பெற்று வலுவிழந்துவிட்டனர்.

உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும்போதுதான் வியாதி தாக்கும்.

அதே போன்றுதான் பாதிப்பை தரக்கூடிய கிரகங்கள் ஜாதகரைத் தாங்கிப்பிடிக்கும் கிரகங்கள் வலுவிழந்ததும் தனது பாதிப்பை வழங்குகின்றன.

ராகு விஷத்தைக் குறிக்கும் கிரகம் என்பதால் விஷ ஜூரமான டெங்குவால் பாதிப்பு. (மருத்துவ ஜோதிட முறையில் இதுபற்றி விரிவாக எழுதினால் பதிவு மிக நீளும்.எனவே இத்துடன் பதிவு நிறைவு செய்யப்படுகிறது.)

மீண்டுமொரு பதிவில் சிந்திப்போம்.

வாழ்த்துக்களுடன்,

அன்பன்,
பழனியப்பன்.
அலைபேசி: 7871244501.  

Wednesday, 11 November 2015

இறைவனின் விளையாட்டு பொம்மைகள்

மனிதன் வாழ்வில் துயரங்களை தாங்கமுடியாதபோது கடவுளே என்று கதறுகிறோம். என்னை பைத்தியமாக்கிவிடேன் எந்த மனோ வலிகளையும் உணரமாட்டேன் என மன்றாடுகிறோம்.

உடல் ரீதியான வேதனைகளைக்கூட பொறுத்துக்கொள்ள இயலும் மனிதனால் மனோ ரீதியான வேதனைகளை பொறுத்துக்கொள்ள முடிவதில்லை.

மனிதன் கர்ம வினைகளை அனுபவித்துத்தீர்க்க பிறவி எடுக்கிறான் என நமது தர்மங்கள் கூறுகின்றன. அப்படியானால் சராசரி மனிதன் உடல் மற்றும் மன வேதனைகளை அனுபவிக்கிறான். முற்றிய நிலையிலுள்ள பைத்தியங்கள் உடல் ரீதியான வேதனைகளை மட்டுமே உணர்கிறார்கள்.

கடவுள் சராசரி மனிதனுக்கு செய்த ஒர வஞ்சனை இது எனக்கொள்ளலாமா?.

இந்தச் சிந்தனையில் விளைவே இப்பதிவு.

மனித வாழ்வில் மிகக் கடுமையான பாதிப்புகளை தரவல்லவை பாபக்கிரகங்கள். அவை கேந்திர ஸ்தானங்களில் அமைந்திருப்பது நல்லது. சுபர் பார்வை சேர்க்கை இருந்தால் நலம். இல்லாவிட்டால் கேந்திரமாக இருந்தாலும் அவை அமைந்த பாவம் மற்றும்  காரக அடிப்படையில் பாதிப்புகளை தரும்.

மனித மன நிலையை  நிர்ணயிப்பதில் பின்வருபவை ஜாதகத்தில் முக்கிய இடம் வகிக்கின்றன.

1.மனோ காரகன்           – சந்திரன்
2.புத்திகாரகன்              - புதன்
3.மேற்சொன்ன இருவரின் வீடுகள் கடகம், மிதுனம், கன்னி.

மேலும் லக்னம், ஐந்தாம் பாவம், லக்னாதிபதி, ஐந்தாம் அதிபதி.

மனோ நிலையில் பாதிப்புகளைத் தரும் கிரகங்களில் முக்கியமான கிரகங்கள் பின்வருமாறு.

1.சந்திரனின் சக்தியை பிரதிபலிக்கும் கேது. இவர் சந்திரனுடன் சேர்ந்திருந்து சிந்தனை தொடர்புடைய இதர பாவங்கள் பாதிப்படைந்தால் மனோ நிலை பாதிப்படைவது நிச்சயம்.
2.சூரியனின் ஆற்றலை பிரதிபலிக்கும் ராகு. இவர் மனோ நிலை தொடர்புடைய கிரகங்களுடனும் பாவங்களுடனும் சேர்ந்திருந்தால் அது தொடர்புடைய தீவிரத் தன்மையை தூண்டிவிடும். உதாரணமாக ஐந்தாமிடத்தில் ராகு நட்பில் அமர்ந்து சுபர் பார்வை பெற்று ஐந்தாம் பாவாதிபதி வலுப்பெற்றால் ஜாதகர் விஞ்ஞானியாகவும் சிறந்த ஆராய்ச்சியாளராகவும் இருப்பார்.
3.சகல துன்பங்களுக்கும் காரகத்துவம் பெற்ற சனி.      
சனி – சந்திரனுடன் இணைந்தால் ஞானி. சனி-சந்திர யோகம் என்று இதற்குபெயர். துறவு மனோபாவம் ஏற்படும். ஞானிகளின் ஜாதகங்களில் சனி-சந்திர யோகம் இருப்பதை காணலாம்.  

சனி-சந்திர இணைவு, பார்வை, பரிவர்த்தனை & சந்திரன் சனியின் நட்சத்திரங்களிலும் சனி சந்திரனின் நட்சத்திரங்களிலும் அமைவது போன்றவை புனர்பூ தோஷம் எனப்படும். திருமணத்தடை, திருமண வாழ்வில் பிரச்சனைகளை இதனால் ஏற்படும்.


பின்வரும் ஜாதகத்தை கவனியுங்கள்.
5.10.1986 -  12.25 PM சென்னை.

ஜாதகர் மனோ நிலை பாதித்த திருமணமாகாத ஒரு ஆண். சில சமயம் கடுமையாக (சங்கிலியால் கட்டப்படுமளவு) நடந்துகொள்வார். அவ்வப்போது மருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுக்க வேண்டிவரும். பெரும்பாலான சமயங்களில் பயந்த சுபாவம். குழந்தை மனம்.


தனுசு லக்னம் இருபுறங்களிலும் பரிவர்த்தனை பெற்ற பாவிகள் சனி-செவ்வாயால் பாவ கர்தாரி யோகத்தில் சிக்கிக்கொண்டுள்ளது. ஐந்தாமதிபதி செவ்வாய்க்கு சனி பார்வை. லக்னாதிபதியின் மற்றோர் வீடான மீனத்தில் ராகு நின்றுவிட்டார். அதற்கு 12 ஆமிடமான கும்பத்தில் குரு பாவி வீட்டில் வக்கிரகதியில் மாந்தியுடன் நின்று கெட்டுவிட்டார். குரு நின்ற இடம்,  சிந்தனை ஸ்தானமான ஐந்தாமிடம் மேஷத்திற்கு பாதகஸ்தானம் என்பதை கவனிக்கவும்.   

பாக்யாதிபதி சூரியன் சிறப்பாக கேந்திர பலம் பெற்றாலும் கேது இணைவு கெடுத்துவிட்டது.

6, 8 ஆமதிபதிகள் இணைந்து 11 ல் நிற்பது சிறப்பென்றாலும் இவர்களுடன் 7 ஆமதிபதியான புத்திகாரகன் புதன் இணைவு புத்தி பேதலிப்பதையும் திருமண வாழ்வு  கேள்விக்குறியாவதையும் குறிப்பிடுகிறது.   

பாவத்தில் சந்திரன் கேதுவுடன் இணைவு கவனிக்கத்தக்கது. 

முழுமையான கால சர்ப்ப தோஷ ஜாதகம் இது. ஜாதகரின் கர்மவினையை இது தெளிவாகக் குறிப்பிடுகிறது.

ஜாதகருக்கு 5 க்கு 11 ல் நின்ற குரு திசையில் 6 ஆமதிபதி சுக்கிரனின் புக்தியில் மனோ நிலை பாதிப்பு துவங்கியது. அப்போதைய கிரக நிலைகள் கீழே.





1.கோட்சார குரு லக்னத்திற்கு 5 ஆமிடத்தில் (ராசிக்கு 7 ல்) 6 ஆமிபதி சுக்கிரனின் பரணி நட்சத்திரத்தில் நின்று வக்ரமடைகிறது.

ஜனன ஜாதகத்தில் ஒரு பாவத்திற்கு பாதகத்தில் வக்கிரகதியில் நிற்கும் கிரகம் கோட்சாரத்தில் அக்குறிப்பிட்ட பாவத்தில் நின்று வக்ரகதியை பெறும்போது பாதகத்தை உறுதியாக செய்யும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.   

2.கோட்சார ஏழரை சனி முன்பே துவங்கிவிட்டாலும் சனி ஐந்தாமதிபதி செவ்வாயின் சித்திரை நட்சத்திரத்திற்கு வந்ததும்தான் மனோநிலை பாதிப்பு துவங்கியுள்ளது இங்கு கவனிக்கத்தக்கது.  

3.கோட்சார செவ்வாயான ஐந்தாமதிபதி நீசமடைகிறார் என்பது இங்கு மிக முக்கியமாக கவனிக்கத்தக்கது.

4.புக்தியை நடத்தும் சுக்கிரன் ஆட்சியடைந்து  அதனிருபக்கமும் கடுமையான பாவகர்த்தாரி யோகம்.

5. கோட்சார ராகு-கேதுக்கள் ஜனன நிலையை ஒட்டியே அமைந்துள்ளன.
ஜனனத்தில் கால சர்ப்ப தோஷத்தை ஏற்படுத்தி கர்மவினையை அனுபவிக்கும்படி அமைந்துள்ள ராகு-கேதுக்கள் கோட்சாரத்தில் அதே ஸ்தானங்களுக்கு வரும்போது அதை அனுபவிக்கும்படி செய்யும். (இது மிக முக்கிய ஜோதிட விதி. ஜோதிடம் பயில்வோர் குறிப்பெடுத்துக்கொள்ளவும்.)

ஜாதகர் தேறுவாரா?

கோட்சார ஏழரை சனி தனது இறுதிக் கட்டத்தில் உள்ளது.

எப்படிப்பட்ட தோஷங்களானாலும் பெரும்பாலும் சனி தனது முதல் சுற்றிலேயே அதை அனுபவிக்கும்படி செய்துவிட்டால் இரண்டாவது சுற்றில் வேதனைப்படுத்தமாட்டார். ஜாதக தோஷங்களை சனியின் முதல் சுற்றில் அனுபவிக்க விடாமல் நல்ல திசா-புக்திகள் வந்து தடுத்துவிட்டால் சனியின் இரண்டாம் சுற்று கடுமையைத்தரும் என்பதே இதில் உள்ள சூட்சுமம்.

தற்போது ஜனனத்தில் நின்ற விருச்சிக ராசியை சனி கடந்துகொண்டிருக்கிறது.

கோட்சார குருவானவர் ஜனனத்தில் தாங்கள் நின்ற இடத்தில் தற்போது நின்றுகொண்டிருக்கும் ராகு-கேதுக்களை கடந்து போகும்போது ஜாதகரின் மனோ நிலையில் நல்ல மாற்றங்கள் ஏற்படவேண்டும். ராகு-கேதுக்களால் ஜனன காலத்தில் ஏற்பட்ட கால சர்ப்ப தோஷம் விலக வேண்டும். அதன் பிறகே ஜாதகர் ஓரளவு நல்ல தெளிவை பெற இயலும்.



மீண்டும் மற்றொரு பதிவில் ஆராய்வோம்.

வாழ்த்துக்களுடன்,
அன்பன்,
பழனியப்பன்.