Sunday, 22 May 2016

யாரை எங்கே வைப்பது என்று...

யாரை எங்கே வைப்பது என்று யாருக்குத் தெரிகிறதோ இல்லையோ படைத்தவனுக்கு நன்றாகவே தெரியும். சில சமயங்களில் நமது விருப்பங்களையும் வெறுப்புகளையும் மீறி வாழ்வில் சில சம்பவங்கள் நடந்துவிடுவது உண்டு. கவிஞர் கண்ணதாசன் சொன்னது போல் காரணம் புரிந்தால் கவலைகள் மறையும்.

ஒருவர் அரசியலில் ஈடுபடவும் முன்னேறவும் கீழ்க்கண்ட அமைப்பு ஜாதகத்தில் இருக்க வேண்டும்.

1.அரசியlலுக்கு காரகத்துவம் பெற்ற சுக்கிரன் வலுப்பெற்று 1௦ ஆமிடத்துனோ அல்லது சூரியனுடனோ தொடர்புகொண்டிருக்க வேண்டும்.

2. ராஜ கிரகமான சூரியன் ராசி, லக்னம், 5, 7 ஆமிடங்கள் அல்லது பத்தாமிடத்துடன் தொடர்புகொண்டிருக்க வேண்டும்.

3.அரசாங்க வகை பாக்கியங்களை குறிக்கும் 5 ஆமிடத்தில் கேது வலுத்திருக்க வேண்டும்.

4.சுதந்திர இந்திய ஜாதகத்தில் லக்னத்தில் உச்ச ராகு இருப்பதால் இந்திய அரசியலில் உள்ளவர்களும் ராகுவின் அம்சங்களாகவே இருக்க வேண்டும். இதனடிப்படையில்  அரசியலில் வெற்றி பெற சூழ்ச்சி மற்றும் சதிராட்டங்களுக்கு காரகத்துவம் பெற்ற ராகு வலுத்திருக்க வேண்டும். 


இந்தியாவின் வடகோடி மாநிலமான காஷ்மீரின் முதலமைச்சர் திருமதி.மகபூபா முக்தியின் ஜாதகம் கீழே.


ராசி அதிபதி செவ்வாயும் பாக்யாதிபதி சந்திரனும் நீச நிலையில் பரிவர்த்தனை. இதனால் வாழ்வின் முன்பகுதியில் கடும் சோதனைகளை சந்தித்து வேதனைப்பட வேண்டும். ஆனால் இத்தகைய நீச கிரக பரிவர்த்தனையானது வாழ்வின் பிற்பகுதியில் பங்கமடைந்து ராஜ யோகத்தை தர வேண்டும் என்பது விதி.  இவ்விதிப்படி முற்பகுதியில் திருமணம் நடந்து மணமுறிவு ஏற்பட்டுவிட்டது. இப்போது பிற்பகுதி வாழ்க்கை.

மேலும் ஒருவரின் தொடர்புகளை குறிக்கும் 7 ஆமிடத்தில் ராஜ்ய ஸ்தானாதிபதியும் (1௦ ஆமதிபதி))  அரச கிரகமுமான சூரியன் நின்றதும் ஜாதகி அரசாங்கத்தோடு தொடர்புகொள்ள வேண்டும் என்பதை உறுதி செய்கிறது.  7 ஆமிடமானது பத்தாமிடத்திற்கு பத்தாமிடம் (பாவத் பாவம்) என்ற வகையில் அரசியலுக்கு முக்கியத்துவம் பெறுகிறது என்பதை கவனிக்க வேண்டும்.

அரசாங்க வெகுமதிகளைக் குறிக்கு 5 ஆமிடத்தில் கேது நின்றால் ஒருவர் உயர்ந்த நிலையை தனது வாழ்வில் ஒருநாள் அடைந்துவிடுவார். அல்லது ஞானியாகவோ பிச்சைக்காரராகவோ தனது வாழ்நாளை கழிக்க வேண்டும். “வச்சா குடுமி செரச்சா மொட்டை” என்ற அனுபவ மொழி கேதுவின் 5 ஆமிட நிலைக்கு மிகச் சரியாகப் பொருந்தும். கேது விஷயத்தில் நடுவாந்திரமான நிலை, பலன் என்பதே இல்லை. மேற்கண்ட ஜாதகத்தில் ராசிக்கு 5 ல் கேது நிற்பது ஜாதகியின் அரசியல் தொடர்பை குறிக்கிறது.

குடும்ப ஸ்தானம் வக்கிர சனியால் பாதிப்படைந்ததும், குடும்ப காரகனும் குடும்ப பாவாதிபதியுமான குரு வக்கிரமடைந்து தனது குடும்ப பாவத்திற்கு 12 ஆமிடமான ராசியில் நின்றதும்,  7 ஆமிடமான களத்திர ஸ்தானத்தில் சுபாவ பாவி சூரியன் நின்றதும், சுக்கிரன்  ராசிக்கு 8 ல் மறைந்ததாலும் ஜாதகியின் மண வாழ்வை முறித்துவிட்டது.

அரசியலுக்கு காரகத்துவம் பெற்ற சுக்கிரனின் திசை ஜாத்கிக்கு தற்போது நடக்கிறது. ஒரு கிரகம் அதன் திசையில் தன் வீட்டில் உள்ள கிரகத்தையும் சார்ந்து பலன் கொடுக்க வேண்டும் என்ற விதிப்படி ரிஷபத்தில் நின்ற ராஜாங்க கிரகம் சூரியனின் பலனையும் எடுத்துக்கொண்டு தற்போது நடக்கும் சுக்கிர திசை ஜாதகிக்கு முதலமைச்சர் பதவி வழங்கியுள்ளது என்றால் அது மிகையல்ல. ஜாதகி முதலமைச்சராக பல தடைகளை சந்தித்தார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அவற்றை தகர்த்து ஜாதகியை கிரகங்கள் முதலமைச்சர் ஆக்கியுள்ளது தெளிவாகியுள்ளது.

கீழே இந்தியாவின் தென்கோடி மாநிலமான நமது தமிழகத்தின் முதலமைச்சர் மாண்புமிகு செல்வி ஜெயலலிதா அவர்களின் ஜாதகம். 


லக்னத்திற்கு பத்தாமிடத்தில் அரசியலுக்கு காரகத்துவம் பெற்ற சுக்கிரன் உச்சமானது ஜாதகியின் அரசியல் தொடர்பையும் அதே சுக்கிரன் கலைத்துறைக்கும் காரகத்துவம் பெற்றவர் என்பதால் ஜாதகியின் சினிமாத்துறை தொடர்பையும் குறிக்கிறது.

ராசியதிபதியாக சூரியனே அமைந்ததும், அந்த சூரியனும் ராசிக்கு 7ல் அமைந்ததும் ஜாதியின் அரசியல் தொடர்பை உறுதி செய்கின்றன. அரச பாக்கியங்களுக்குரிய இடமான 5 ல் கேது அமைந்து கேதுவிற்கு வீடு கொடுத்த சுக்கிரன் 1௦ ஆமிடத்தில் உச்சமடைந்ததும் ஜாதகி அரசியலில் உச்ச நிலையை அடைவார் அன்பதை அழுத்தம் திருத்தமாக குறிப்பிடுகிறது. 

ஜாதகிக்கு குரு திசை 2012  ஆம் ஆண்டே துவங்கிவிட்டது. இந்த ஜாதக அமைப்பின் படி குரு 7 மற்றும் 1௦ க்கு உரியவர் என்பதால்,முதல் எட்டு ஆண்டு கால பலனாக 1௦ ஆமிட பலன் தற்போது நடக்கிறது. ஒரு கிரகம் அதன் திசையில் தன் வீட்டில் இருக்கும் கிரகத்தையும் சார்ந்துதான் பலன் கொடுக்க வேண்டும் என்ற விதிப்படி 1௦ ஆமிடத்தில் உச்சம் பெற்ற அரசியலுக்கு காரகத்துவம் பெற்ற சுக்கிரனை சார்ந்து குரு பலன்களை தற்போது கொடுத்துக்கொண்டிருக்கிறார். எனவே ஜாதகி தற்போதும் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இது காலத்தின் கட்டாயம்.

உபய லக்னத்திற்கு பாதக ஸ்தானமான 7 ஆமிடத்தில் குரு ஆட்சியாக தனித்து நின்றதும், குடும்ப ஸ்தானம் வக்ர சனியால் கெட்டதும். களத்திர காரகன் சுக்கிரன் தசம கேந்திரத்தில் உச்சமாகி கேந்திராபத்திய தோஷத்திற்கு ஆளானதாலும் ஜாதகிக்கு இல்லற வாழ்க்கை பாக்கியம் வாய்க்கவில்லை என்பதை குறிப்பிடுகிறது. 

அடுத்து நாம் காண்பது இந்தியாவின் கிழக்கு பகுதி மாநிலமான மேற்கு வங்கத்தின் முதலமைச்சர் மம்தா பானர்ஜி அவர்களின் ஜாதகம்.



மேஷ லக்னத்திற்கு ராஜ்ய ஸ்தானமான 1௦ ஆமிடாதிபதியும் மக்கள் செல்வாக்கை குறிக்கும் கிரகமுமான சனி லக்னத்திற்கு 7 ல் உச்சம். இந்த உச்ச சனியின் அனுஷ நட்சத்திரத்தில் அரசியலுக்கு காரகத்துவம் பெற்ற சுக்கிரன் அமைந்தது மிக விசேஷம். உச்சனின் நட்சத்திரத்தில் அமைந்த கிரகமும் உச்ச வலுவோடு செயல்படும் என்பது கவனிக்கத்தக்கது. சுக்கிரனின் இரு வீடுகளும் சனி, சந்திரன் ஆகிய இரு உச்ச கிரகங்களை கொண்டு ஜாதகம் அமைந்ததால் சுக்கிரன் உச்ச வலுவோடு செயல்பட்டு அரசியல் தொடர்பை ஏற்படுத்தும் என்பதை கவனிக்க வேண்டும். இப்படி சுக்கிரன் 8 ல்  மறைந்தாலும் உச்ச வலுவோடு அமைந்த கிரகத்திற்கு மறைவு ஸ்தான தோஷமும் இல்லை என்பது நுட்பமான ஒரு விதி. 

சனி உச்ச வலுவோடு அமைந்துவிட்டால் அது சூரியனின் காரகத்தையும் எடுத்துக்கொண்டு செயல்படும் என்பது பெரும்பாலான ஜோதிடர்களுக்கே இன்னும் தெரிய வராத ஒரு முக்கிய விதியாகும். சூரியனும் அரசியல் செல்வாக்கை குறிக்கும் 5 ஆவது பாவத்திற்கு 5 ல் (பாவத் பாவம் என்ற அடிப்படையில்) அமைந்துள்ளார்.

ஜாதகிக்கு தற்போது உச்ச கிரகமான சனியின் திசைதான் நடப்பில் உள்ளது இதன்படி பார்த்தாலும் சூரியனுக்குரிய ராஜாங்க தொடர்பு ஜாதகிக்கு நீடிக்க வேண்டும் என்ற அமைப்பில் தற்போது மீண்டும் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

சுகஸ்தானமான 4 ஆமிடத்தில் குரு உச்சமாகி வக்ரமாகிவிட்டார். உச்சமாகி வக்ரமான கிரகம் நீச்சத்திற்கொப்பான பலனையே தரும்.  குடும்ப காரகன் குரு நீச நிலை பெற்றுவிட்டாலும் குருவிற்கு வீடு கொடுத்த சந்திரன் உச்சமானால் அது தன வீட்டில் அமைந்த நீச தோஷம் பெற்ற குருவை வலுவடைய செய்ய வேண்டும். ஆனால் உச்சமான சந்திரன் சர ராசியான தனது கடக ராசிக்கு பாதக ஸ்தானத்தில் 11 ல் உச்சம் பெற்றதால் பயன்படவில்லை.

7 ஆமிட சனி  8 ஆமிட சுக்கிரன், நீச நிலை பெற்ற குரு ஆகியவை ஜாதகிக்கு மண வாழ்வை அமைய விடாமல் தடுத்துவிட்டன என்றால் அது மிகையல்ல.

கீழே இந்தியாவின் மேற்குக்கோடி மாநிலமான குஜராத்தின் முதலமைச்சர் ஆனந்திபென் அவர்களின் ஜாதகம். 


மகர லக்ன ஜாதகத்தில் ஐந்தாமிடாதிபதி சுக்கிரனும் 3, 12 ஆமிடாதிபதியுமான குருவுடன் பரிவர்த்தனை. 12 ஆமிடத்தில் ஒரு கிரகம் பரிவர்த்தனை பெறுகிறது என்றால் ஜாதகர் ஒன்றை இழந்து ஒன்றை அடைய வேண்டும் என்பது விதி. ஜாதகி இழந்தது குடும்ப வாழ்வை. பெற்றது அரசியல் சிறப்பு. ஐந்தாமிடம் அரச வெகுமதிகளுக்குரிய இடம் என்பதால் இது நடந்தது என்பதோடல்லாமல் லக்னாதிபதி சனி அங்கு தனது நட்பு வீட்டில் நல்லவன் ஒருவனோடு அமர்ந்துள்ளான் என்பது இங்கு முக்கியத்துவம் பெறுகிறது. இந்த வகைகளில் விசேஷ பலம் பெற்ற ஐந்தாமிடத்தை ராஜ கிரகம் சூரியன் பார்த்தது ஜாதகி அரசியலில் ஈடுபட்டு உயர்ந்த நிலையை அடைவார் என்பதை தெளிவாக குறிப்பிடுகிறது.

முதன் முறையாக இந்தியாவின் நன்கு திசைகளின் முக்கிய மாநிலங்களிலும் பெண் முதலமைச்சர்கள். நால்வருமே குடும்ப வாழ்வு அற்றவர்கள். இந்த நான்கு பேர் மட்டுமல்ல பெரும்பாலும் இந்தியாவில் ஆள்பவர்களுக்கு குடும்ப வாழ்வு இந்தியாவை  பொறுத்தவரை இல்லை என்பதே நிதர்சனம். கருணாநிதி போன்ற சிலர்  இதற்கு விதி விலக்காகலாம். ஆனால் விதி விலக்குகள் குறைவானவையே. 

இதற்கு என்ன காரணம்?

சுதந்திர இந்தியாவின் ஜாதகத்தில் இதற்கான பதில் உள்ளது. 

சுதந்திர இந்தியாவின் ஜாதகத்தில் ரிஷப லக்னத்தில் ராகு உச்சம். லக்னத்தில் உச்சம் பெற்ற ஒரு கிரகம் அதன் காரகத்துவத்தை அழுத்தம் திருத்தமாக நிலை நிறுத்தும்.  ராகுவின் அம்சங்களாக குறிப்பிடப்படுவோர்கலீல் சில கீழே.

அதீத கஷ்டங்களை கடந்து வாழ்வில் முன்னேறுபவர்கள், முஸ்லீம்கள், கண்டம் மற்றும் விபத்து போன்ற குரூர சம்பவங்களை எதிர்கொள்வோர், விதவைகள், மணமுறிவுற்றவர்கள், வாழ்க்கைத்துணையை இழந்தவர்கள், குடும்ப வாழ்வை இழந்தவர்கள் அல்லது குடும்ப வாழ்வு மறுக்கப்பட்டவர்கள் மற்றும் அனைத்து விதமான மோசமான நடத்தைகளையும் தனதாக்கிக்கொண்டவர்கள். 

இந்த அம்சங்களில் ஒன்றை பெற்ற ஒருவர்தான் இந்தியாவில் அரசியலில் வெற்றி பெறவும் நீடித்திருக்கவும் இயலும். ராகுவின் அம்சங்களை தவிர பிற அம்சங்களை பெற்றவர்கள் அரசியலுக்கு வந்து வெற்றிக்கொடி நாட்டினாலும் அது வெகு காலம் நீடிக்காது என்பதே உண்மை.

மேற்சொன்ன 4 முதல்வர்களும் இத்தகைய அம்சங்களான குடும்ப வாழ்வு அற்றவர்களும் மணமுறிவுற்றவர்களும்தான்.

இந்தியாவை சிறப்பாக ஆண்ட அன்னை இந்திரா         - ஒரு விதவை.
காங்கிரசை இயக்கிக்கொண்டிருக்கும் அன்னை சோனியா - ஒரு விதவை
தற்போதைய பிரதமர் மோடி                           – மணவாழ்வை துறந்தவர்.
மக்கள் போற்றிய முதலமைச்சர் காமராஜர்   - குடும்ப வாழ்வை துறந்தவர்.
குடும்ப வாழ்வை துறந்தவர் – வாஜ்பாய்.

தமிழ்நாடும் ஆந்திராவும் கலைகளுக்குரிய சுக்கிரனின் துலாம் ராசி என்ற அமைப்பில் வருவதால் கலைத்துறையோடு தொடர்புடையவர்களே சிறப்பான முதல்வர்கள்.  

அதீத கஷ்டத்தில், பசிகொடுமைக்கு தனது முதல் மனைவியை பறிகொடுத்தவர், கலைத்துறையில் கோலோச்சியவர்  – M.G.R

அதீத கஷ்டங்களை சந்தித்தவர்கள் – கக்கன் போன்ற எண்ணற்ற உத்தமர்கள் பல்வேறு மாநிலங்களில் முதலமைச்சர்களாக இருந்து போற்றப்பட்டிருக்கிரார்கள்.. .

M.G.R மட்டுமல்ல கருணாநிதி, ஜானகி ராமச்சந்திரன், ஜெயலலிதா, N.T .ராமராவ் ஆகியோர் முதலமைச்சர்களாக வர கலைகளுக்குரிய சுக்கிரனே முக்கிய காரணம்.

காஞ்சி மகா முனிவரின் வாக்கு:
“வாழ்வின் உயர்ந்த நிலையை அடைந்தவர்கள் அந்நிலையை அடைந்ததற்காக இழந்தவற்றை அறிந்தால் அத்தகைய நிலையை அடைய ஒருவனுக்கு மனமே வராது.”

மேற்கண்டவர்கள் ஜெயலலிதா உட்பட முதலமைச்சர்களாவது இந்த காலகட்டத்தின் கட்டாயம். இந்த காலகட்ட விதிக்கு பொருந்தாதவர்களையே காலம் தோல்வியடைய செய்துள்ளது என்பதே நிதர்னமான உண்மை.

மீண்டுமொரு பதிவில் சந்திப்போம்.

வாழ்த்துக்களுடன் அன்பன்,

பழனியப்பன். 

5 comments:

  1. அய்யா வணக்கம் .
    யாரை எங்கே வைப்பது என்று இறைவனுக்கு மட்டுமே தெரிந்த சூட்சுமம் .

    கிழக்கு ,மேற்கு , வடக்கு, தெற்கு திசைகளில் பெண்களே தலைமை பதவியில் இருப்பதும் அவர்கள் வாழ்க்கை பற்றிய குறிப்புடன் கூடிய ஜாதக அமைப்பு வியப்பை தருகிறது .

    மேலும் கடந்த கால அரசியலில் கோலோச்சியவர்கள் பற்றிய குறிப்பை தந்துள்ளீர்கள் .
    இது ஒரு மிக சிறப்பான ஜோதிட பதிவு. வாழ்த்துக்கள்

    சோமசுந்தரம் பழனியப்பன் , மஸ்கட்

    ReplyDelete
  2. நன்றி.தங்கள் வரவு நல்வரவாகுக.

    ReplyDelete
  3. நன்றி.தங்கள் வரவு நல்வரவாகுக.

    ReplyDelete
  4. அருமையான பதிவு சார்

    savithaastro@gmail.com
    http://savithaastro.blogspot.in
    +91 9443711056

    ReplyDelete