ஜோதிடத்தில்
ராகு-கேதுக்களே நமது கர்மங்களின் பதிவை தெளிவாக எடுத்துக்கூறக்கூடியவை.
ராகு-கேதுக்கள் மனித வாழ்வில் தடைகளையும் பாதிப்புகளையும் ஏற்படுத்தவல்லவை. நமது
இந்து புராணத்தில் மனிதர்களின் செயல்களை குறிப்பெடுத்து வைக்கும் எமதர்மராஜனின்
கணக்குப் பிள்ளையாக குறிப்பிடப்படும் சித்திரகுப்தனை கேதுவின் அம்சமாக ஜோதிடம்
குறிப்பிடுகிறது. கேது சுட்டிக்காட்டும் கர்ம வினைகளை ராகு அனுபவித்துக் கழிக்க
வைக்கும். உண்மையில் நாம் நமது கர்மங்களை அனுபவித்துக் கழிக்கவே இப்பிறவி
எடுத்திருக்கிறோம். இதனால்தான் இப்பூமியை
கர்ம பூமி என நமது மதம் குறிப்பிடுகிறது.
ராகு
கேதுக்கள் ஜாதகத்தில் தனித்த நிலையில் யாருடைய தொடர்பிலும் இல்லாமல் இருப்பது
சிறப்பு. ராகு கேதுக்களுக்கு திரிகோணங்களிலும் அவற்றின் நட்சத்திரங்களிலும்
எந்தவொரு கிரகமும் இல்லாத நிலையில் ஜாதகத்தில் அமையப்பெற்றிருந்தால் அந்த ஜாதகர் புண்ணியவானே. அத்தகைய ஜாதகருக்கு தீய கர்ம வினைகள்
மிகக் குறைவு எனத்தீர்மானிக்கலாம். இன்றைய
நிலையில் சம்பாத்தியம், குடும்பம், ஆரோக்கியம், புத்திரம் இவைகளை அடையவே ஒவ்வொரு
மனிதனும் போராடிக்கொண்டிருக்கிறான். இவைகளை போராடி அமைத்துக்கொண்டாலும் அவற்றில் வம்பு வழக்குகள் இல்லாமல் ஒரு மனிதன்
கடந்தானாகில் அவனே உலகில் பாக்கியவான்.
இப்பதிவில்
நாம் ஒரு மனிதன் வாழ்வில் வழக்குகளை எதிர்கொள்ளவதற்கான ஜாதக காரணங்களை ஆராய்வோம். கேது
நமது ஜாதகத்தில் ஆறாவது பாவத்தையும் கால புருஷனுக்கு ஆறாம் பாவமான கன்னியையும்
இயக்கும் கிரகமாகும். ஆறாம் பாவம் கடன், வழக்குகள், வியாதிகள் ஆகியவற்றை
குறிப்பிடும். எனவே கேது வழக்குகளுக்கு காரக
கிரகமாகிறது. புதன் திசை நடப்பவர்களும் கேது திசை நடப்பவர்களும் ஜாதக
அமைப்பின் அடிப்படையில் வழக்குகளை எதிர்கொள்வதிலிருந்து இதை உணரலாம்.
கீழே ஒரு
ஆணின் ஜாதகம்.
ஜாதகத்தில்
கேது லக்னத்திலேயே அமைந்துள்ளது ஜாதகர் தனது வாழ்வில் வழக்கினை எதிர்கொண்டே ஆக
வேண்டும் என்பதை இது குறிக்கிறது. அது எந்த வகை வழக்கு எனும் கேள்வி எழும்போது கேது
ஒன்பதாம் பாவாதிபதி சூரியனின் உத்திர நட்சத்திரத்தில் அமைந்து சூரியனும்
ஆறாமிடத்தில் கால புருஷனுக்கு ஆறாமதிபதி புதனுடன்
அமைந்ததாலும் தந்தைவழி வழக்கு என
அனுமானிக்க வழியுண்டு. ஒரு ஜாதகர் வழக்கை சந்திப்பார் எனில் எப்போது
சந்திப்பார் என்பதைக் கூற கால புருஷனுக்கு ஆறாமிடமான கன்னியையும், புதனையும்,
கேதுவையும் இவைகளின் சாரம் பெற்ற கிரகங்களையும் கவனித்தால் புரிந்துவிடும். ஜாதகத்தில் பூமி காரகன்
செவ்வாயும், காலி மனைகளைக் குறிக்கும்
புதனும் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளனர். மேலும் பூமி பாக்கியங்களுக்கு உரிய 4 ஆம்
பாவாதிபதி குரு பாதகாதிபதி புதனின் ரேவதி நட்சத்திர சாரம் பெற்று அமைந்துள்ளது.
அதனால் ஜாதகர் குரு திசையில் தந்தையின் பூர்வீக நிலத்திற்கான வழக்கை
எதிர்கொண்டார். அடுத்துவந்த சனி திசை புதனுக்கு பாதகத்தில் அமைந்ததாலும், சனி பூமி
காரகன் செவ்வாயின் அவிட்டம் சாரத்தில் செவ்வாயை நீச பங்கப்படுத்தும் அமைப்பில் சந்திரனோடு இணைந்தது திசை நடத்துவதாலும் ஜாதகர்
வழக்கில் வெற்றி பெற்றார்.
கீழே
மற்றொரு பெண்ணின் ஜாதகம்.
மகர லக்ன
ஜாதகத்தில் கால புருஷ ஆறாம் பாவாதிபதி புதனே லக்னத்திற்கு ஆறாம் பாவாதிபதியாகி
லக்னாதிபதியுடன் பரிவர்த்தனை அமைப்பில் உள்ளார். லக்னத்தில் அமைந்த புதன் உச்ச
நிலையில் வழக்கு காரகன் கேதுவுடன் இணைந்த சந்திரனின் திருவோணம் சாரம் பெறுகிறார்.
சனி ஜீவனத்தை குறிப்பிடும். புதன்
கணக்குவகை பதிவுகளை குறிப்பிடும் என்பதாலும், இரண்டில் சூரியன் நின்றதாலும் ஜாதகி அரசு
வங்கியில் பணி புரிகிறார். ஆறாமிட சனியை பாதகாதிபதி செவ்வாய் விரைய ஸ்தானத்தில் இரண்டில் நிற்கும் அஷ்டமாதிபதி சூரியனின் உத்திராடம் நட்சத்திரத்தில் நின்று பார்க்கிறார். இரண்டில்
நிற்கும் அஷ்டமாதிபதி சூரியன் பாதகத்தில் அமைந்த ராகுவின் சாரம் பெற்றுள்ளார். 10
ஆம் பாவாதிபதி சுக்கிரன் விரையாதிபதி குருவுடன் அமைந்து உச்சம் பெற்றாலும்
பாதகாதிபதி செவ்வாய் பார்வையையும் பாதகாதிபதி செவ்வாய் பார்வை பெற்ற சனி
பார்வையையும் ஒருங்கே பெறுகிறார். இத்தகைய அமைப்புகள் ஜாதகி ஜீவன வகை வழக்குகளை
எதிர்கொள்ள வேண்டும் என்பதை குறிக்கிறது.
ஜாதகிக்கு
குரு திசை சூரிய புக்தியில் அரசு வங்கிப்பணி கிடைத்தது. ஜாதகி குரு திசை முடிந்து
ஆறாமிடத்தில் அமைந்த சனி திசையில் வங்கி விதிமுறைகளுக்கு முரணான வழியில் பணியில்
சேர்ந்ததற்கான வழக்கை எதிர்கொண்டுள்ளார்.
கீழே
மூன்றாவதாக ஒரு ஆணின் ஜாதகம்.
கும்ப
லக்ன ஜாதகத்தில் லக்னத்திலேயே வழக்கு காரகன் கேது வழக்கு பாவமான ஆறாமிடத்தில்
அமையப் பெற்ற இரண்டாமதிபதி குருவின் பூரட்டாதி நட்சத்திரத்தில் நிற்கிறார். எனவே
ஜாதகர் குடும்ப விஷயங்களுக்காக வழக்கை எதிர்கொள்வார் என எளிதாக அனுமானிக்கலாம்.
குடும்ப பாவாதிபதி குரு உச்சமாகி வக்ரமானதால் நீசத்திற்கொப்பான நிலையில் ஆறாம்
பாவாதிபதி சந்திரனுடன் பரிவர்த்தனை பெற்றுள்ளார். ஏழாமிடத்தில் லக்னம் மற்றும்
விரைய ஆதிபத்தியம் பெற்ற சனி ராகுவுடன் இணைந்ததால் பாதிக்கப்பட்ட நிலையில் அவரது
திக்பலம் பலனற்றதாகிறது. ஏழாம் அதிபதி கால புருஷ ஆறாம் அதிபதி புதனுடன் 10 ஆமிடத்தில்
இணைந்து பாதிக்கப்பட்ட குருவின் பார்வையை
பெறுகிறார்..
ஜாதகர்
குடும்ப உறவு சிதைந்த நிலையில் பாதகத்தில் ராகுவின் சுவாதி நட்சத்திரத்தில் ஆட்சி
பெற்ற சுக்ரனின் திசையில் விவாகரத்து வழக்கை சந்தித்து குடும்ப உறவை இழந்தார். சுக
ஸ்தானாதிபதியாகி ஏழில் நிற்கும் ராகுவின் சாரம் பெற்றதால் திருமண உறவு அமைய
காரணமான சுக்கிரனே பாதக ஆதிபத்தியமும் பெற்றதால் ஏழாவது பாவமும் பாதிக்கப்பட
நிலையில் குடும்ப வாழ்வை இழக்கவும் காரணமாகியுள்ளார்.
கீழே
மற்றொரு ஆணின் ஜாதகம்.
சிம்ம
லக்ன ஜாதகத்தில் லக்ன புள்ளி கேதுவின் மக நட்சத்திர சாரம் பெறுகிறது. சுபாவ
பாவியான லக்னாதிபதி சூரியன் நான்காமிடத்தில் ஆறாமதிபதி சனியின் அனுஷம் சாரத்தில் நின்று
ஆராமதிபதி சனியின் பார்வையை பெறுகிறார். இந்த அமைப்பு ஜாதகர் வழக்கை சந்திப்பார்
என குறிப்பிடுகிறது. தற்போதைய திசா நாதன் சுக்கிரன் கால புருஷ ஆறாமதிபதி புதனுடன் இணைந்து திசை
நடத்துகிறார். எனவே தற்போதைய திசையிலேயே வாழக்கை சந்திப்பார் எனலாம். ஜாதகர் வீடு
கட்ட வாங்கிய வங்கி கடனை கட்ட கால தாமதமானதற்காக வங்கியினரின் கடுமையான
வார்த்தைகளால் மன உழைச்சலுக்கு ஆழாகி வங்கி மீது வழக்கு தொடர்ந்தார். நீதிபதி
ஜாதகரின் இயலாமையால் ஏற்பட்ட தாமதத்தின் காரணத்தை புரிந்துகொண்டு வங்கிமீது கடும்
நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும் என எச்சரித்தார். இதனையடுத்து வங்கி பணிந்தது.
இதற்கு
கால புருஷ ஆறாமதிபதி புதன் திசா நாதன் சுக்கிரனுக்கும் சூரியனுக்கும் நட்பாகி பாவ
கர்தாரி யோகத்தில் புதனும் சுக்கிரனும் அகப்பட்டுக்கொண்டதாலும் லக்னாதிபதி சூரியன்
லக்ன கேந்திரத்தில் பஞ்சமாதிபதி குருவுடன் இணைந்து வழுவாக நின்று இவர்கள் நின்ற ஸ்தானாதிபதி
செவ்வாய் சூரியன் – குருவிற்கு கேந்திரத்தில்
நின்று ஆறாமதிபதி சனியோடு பரஸ்பர பார்வையை பரிமாறிக்கொள்வதும் முக்கிய காரணம். சூரியன்
குருவோடு இணைந்து ஆறாமதிபதி சனியை நேர்பார்வை பார்த்து கட்டுப்படுத்துவதோடு சனியோடு
சூரியன் சார பரிவர்த்தனை பெறுகிறார். இதனால் எனது அறிவுரையை
ஏற்று ஜாதகர் நீதிமன்றத்தை அணுகினார். நீதிமன்றமும் ஜாதகருக்கு உதவியது என்றால் அது கிரகங்களின்
அருளன்றி வேறு என்னவாக இருக்க முடியும்.
குறிப்பு:
ஜாதகங்கள் K.P அயனாம்சம் கொண்டு ஆய்வுசெய்யப்பட்டவை.
ராசி –
நவாம்ச ஜாதக கிரக நிலைகளை வைத்து ஜனன தேதிகளை அறியமுடியும்.
மீண்டும்
விரைவில் மற்றொரு பதிவில் சந்திப்போம்,
அதுவரை
வாழ்த்துக்களுடன்,
அன்பன்,
பழனியப்பன்.
கைபேசி: 07871244501
, 08300124501 (Whatsapp)