ஒருவரது ஜாதகத்தில்
விரைவாகச்சுழலும் சந்திரனும் மெதுவாகச் சுழலும் சனியும் தொடர்புகொள்ளும்போது
புனர்பூ எனும் அமைப்பு செயல்படும். இதனால்
ஒரு மனிதனின் சிந்தனை வேகமாகவும் செயல்கள் மெதுவாகவும் இருக்கும். சிந்தனையும் செயலும்
ஒருங்கிணையாதபோது அங்கே மனிதன் குழம்பி விடுகிறான். அப்போதுதான் தன்னை மீறி ஒரு
சக்தி தன்னை ஆட்டுவிக்கிறது என உணர்கிறான். இந்த பக்குவத்தை அடைவதற்கு ஒருவனது
சிந்தனையை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர மெதுவாகச் செயல்படும் சனி பல காலம் எடுத்துக்கொள்கிறார். இந்த
அமைப்பை பெற்றவர்கள் காலம் செல்லச் செல்ல சோம்பேறிகளாகிவிடுகின்றனர் என்பது இந்த
அமைப்பின் குறைபாடு. இந்தக்காலத்தில் சனி
ஒருவனுக்கு போதிக்கும் பாடங்களே “அனுபவம்” என அழைக்கப்படுகிறது. இந்தப்புனர்பூ
அமைப்பு கூட ஜாதக அமைப்பிற்குத்தக்கவாறுதான் செயல்படுகிறது. இதை ஆராய்வதே
இப்பதிவின் நோக்கம்.
கீழே ஒரு பெண்ணின் ஜாதகம்.
மகர லக்ன ஜாதகத்தில் சனி
லக்னதிலேயே ஆட்சியாக இருக்கிறார். லக்னத்திலேயே சனி இருப்பதால் ஜாதகி உழைக்கும்
நபராக இருப்பார். 7 ஆமதிபதி சந்திரன் சனியோடு வந்து இணைந்துள்ளது. இதனால் புனர்பூ
தோஷம் செயல்படும். இதனால் சந்திரனின் வேகம் ஜாதகிக்கும் சனியின் சோம்பல் சந்திரனுக்கும்
சென்று சேரும். ஜாதகி தன் கணவர் வாழ்வில் முன்னேற எடுக்கும் முயற்சிகள் போதவில்லை.
கணவர் தன்னைப்போல் அல்லாமல் சோம்பேறியாக இருக்கிறார் என்று சண்டையிடுகிறார்.
இதனால் கணவரிடம் கோபித்துக்கொண்டு ஜாதகி தாய் வீட்டிற்கு வந்துவிட்டார். இங்கு 7 ஆமதிபதி
சந்திரன் சனியோடு சேர்வதால் கணவர் நிதானப் போக்குடையவராகிறார். ஜாதகி போல கணவர்
அவசரப்படாமல் ஜாதகியை விட்டுப்பிடிக்க எண்ணி அமைதியாக இருக்கிறார். 7 ஆமதிபதி
லக்னத்திற்கு வந்துவிட்டதால் ஜாதகி கணவரை கட்டுப்படுத்த முயல்கிறார். ஆனால்
சந்திரனைவிட இங்கு சனி வலுவுடையவராகிறார். கணவர் சனியின் குணம் கொண்டவராதலால் சனி
நிதானித்து வெற்றி பெறும். 1 ம் 7 ம் இணைந்துள்ளதால் இங்கு இருவரின் பிரிவு
தற்காலிகமானது. இதர கிரக அமைப்புகளும் திசா-புக்திகளும் பாதகமாக இருந்தாலன்றி
இவர்கள் பிரியமாட்டார்கள். இங்கு கணவரின்
நிதானம் இவர்களின் குடும்ப வாழ்க்கையை இழக்காமல் காப்பாற்றும்.
இரண்டாவதாக மற்றொரு
ஜாதகம்.
சிம்ம லக்னத்தில் குரு லக்னதிலேயே
திக்பலம் பெற்று அமைந்துள்ளது. குருவின் திக்பலத்தால் ஜாதகர் செயல் வேகம்
கொண்டவராகிறார். 7 ஆமதிபதி சனி வக்கிரம்
பெற்று 8 ல் நிற்கிறார். விரையாதிபதி சந்திரன் கடகத்தில் சனியின் பூசம்-2 ல்
நிற்கிறது. இதனால் இங்கும் புனர்பூ வேலை செய்கிறது. இங்கு புனர்பூ 8 மற்றும் 12 ஆம் பாவ
தொடர்பாவதால் இங்கு ஜாதகர் துணைவரின் செயல்களால் பாதிப்படைவார். ஜாதகரின்
செயல்வேகத்திற்கு துணைவர் ஈடுகொடுக்க இயலாது. இந்த ஜாதகர் தன் மனைவி தனக்கு
பொருத்தமானவரல்ல என்று கூறி விவாகரத்து கொடுத்துவிட்டார். இங்கே குருவிற்கு
விரையதிலிருந்து சனியோடு தொடர்புகொள்ளும் சந்திரனால் ஏற்படும் எண்ணத்தின் வேகம் சனியால்
பாதிக்கப்படுகிறது. விழைவு குடும்ப வாழ்வு பாதிப்படைகிறது.
மூன்றாவதாக மற்றொரு
ஜாதகம்.
இந்த ஆணின் ஜாதகத்தில் சனியின் அனுஷம் நட்சத்திரத்தில் நீச சந்திரன் துலாம் லக்னத்திற்கு 2 ல் ராகுவோடு இணைந்து நிற்கிறது. சந்திரனின் சார நாதன் சனி 2 ஆம் பாவத்திற்கு 8 ல் வக்கிர கதியில் நிற்கிறது. புனர்பூவில் இது கடுமையான நிலையாகும். 2 ஆம் பாவ நீச சந்திரன் ராகுவோடு இணைந்திருப்பதனால் குடும்பத்திற்கு குறையுள்ள துணைவர் வரவேண்டும். அப்படி வந்தால் குறையை சுட்டிக்காட்டும் சந்திரனும் ராகுவும் குடும்பத்தை பாதிக்காது. இல்லையேல் குடும்ப வாழ்வில் இழப்புகளை இவை ஏற்படுத்தும். ஜாதகரின் முதல் திருமணம் தோல்வியில் முடிந்தது. இரண்டாவது திருமணம் சிறப்பாக உள்ளது. ஜாதகர் தற்போது வெளிநாட்டில் குடும்பத்தோடு வசிக்கிறார். இரண்டாவது திருமணம் பாதிக்காது என்று கூறக்காரணம் முதல் திருமணத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் புனர்பூவும் பாதிப்பிற்குப்பின் வளர்ச்சியை ஏற்படுத்தும் ராகுவுமாகும்.
நான்காவதாக மற்றொரு
ஆணின் ஜாதகம்.
தனுசு லக்னத்திற்கு 2
ஆமதிபதி லக்னத்திற்கு 8 ல் லக்னாதிபதி உச்சமடையும் கடக ராசியில் பாக்யாதிபதி
சூரியனோடு நின்று தனது பாவத்தை தானே பார்க்கிறார் சனி அஸ்தங்கமடையவில்லை என்பது
சிறப்பு. சனி மூன்றாவது பார்வையால் தனக்கு
வீடளித்த சந்திரனை பார்ப்பதால் இங்கும்
புனர்பூ தோஷம் செயல்படுகிறது. இந்த ஜாதகரும் துவக்கத்தில் பல்வேறு
தொழில்களை முயன்று பிறகு சிறப்பான நிலைக்கு வந்து தற்போது சில நூறு கோடிகளுக்கு
அதிபதியாக தொழில் செய்து வருபவர். காரணம் ஜீவன காரகனும் 2 ஆம் பாவாதிபதியுமான சனி
1௦ ஆம் பாவத்தோடு ஏற்படுத்திக்கொண்ட தொடர்புதான். லக்னத்திற்கு தர்ம கர்மாதிபதிகள்
இருவரோடும் சனி இங்கு தொடர்புகொள்கிறார். ராசிக்கு லாப ஸ்தானத்தில் இந்த தொடர்பு
அமைவதால் இங்கு புனர்பூ தோஷம் புனர்பூ யோகமாக மாறி செயல்படுகிறது.
மீண்டும் விரைவில்
அடுத்த பதிவில் சந்திக்கிறேன்,
அதுவரை
வாழ்த்துக்களுடன்,
அன்பன்,
பழனியப்பன்.
கைபேசி: 8300124501