ஜோதிடத்தில் பொருளாதார வளமைக்கு உரிய கிரகங்களாக குரு, சுக்கிரன்,
ராகு, புதன் ஆகியவை குறிப்பிடப்படுகின்றன.
குரு பெரிய அளவிலான பணப்புழக்கத்தையும், சுக்கிரன் சிறிய அளவிலான
பணப்புழக்கத்தையும், ராகு அந்நிய தொடர்புகள் மூலம் புழங்கும் பணத்தையும், புதன் வியாபாரத்தின் மூலமும்,
வங்கிக்கடன், பத்திரங்கள், காலி மனைகள் இவற்றை முன்னிட்டு புழங்கும் பணத்தையும்
குறிக்கின்றன. சூரியன் அரசு வழங்கும் கடனையும் அதை பெறுபவரையும் குறிக்கும். சூரியன்-ராகு
தொடர்பு ஏற்பட்டால் இயக்கம், பொதுச்சேவை செய்வர். இச்சேர்க்கையை குரு பார்ப்பின்
இவர்களது பொதுச்சேவை பாராட்டப்பெறும். இவர்களது சேவையால் பல்லாண்டு நிலைத்து
நிற்கும் பேறு பெறுவார். சூரியன் – ராகு சேர்க்கையை குருவோ அல்லது இதர சுபர்களோ
பார்க்கவில்லை எனில் பொதுச்சேவையில் ஊழல் செய்வர். அதனால் இத்தகையவர்கள் இறந்த
பின்னும் பல்லாண்டுகளுக்கு மக்களால் தூற்றப்படுவர். (ஊழல் அரசியல்வாதிகளை இதற்கு
உதாரணமாக கூறலாம்) சூரியனுக்கு குரு
சேர்க்கை ஏற்படின் கோவில் நிர்வாகப் பொறுப்புகளை ஏற்படுத்தும். சூரியன் பாவ
ஆதிபத்தியத்தில் கெட்டிருந்தால் கோவில் நிர்வாகத்தில் கொள்ளை அடிப்பர். அதனால் இவர்களுக்கு
புற்று நோய் போன்ற கொடிய நோய் வரும்.
செவ்வாய் பாதிக்கப்பட்டிருப்பின் அதிகார துஷ்பிரயோகம், வன்முறை மூலம்
தனத்தை அடையும். இன்று நகரங்களில் நடக்கும் திருட்டுக்களில் பெரும்பாலானவை
வன்முறையிலானவை. போகிற போக்கில் சாதுரியமாக கண்ணியமான தோற்றத்தில் திருடுவது
பாதிக்கப்பட்ட சுக்கிரனாகும். திருடியவர்
சுக்கிரனின் அம்சம் எனில் நம்புவது கடினம் என்றவகையில் இது அமையும். பாதிக்கப்பட்ட
புதன் சாதுரியமாகவும் திட்டமிடலோடும் திருடும். சந்திரன் பணத்தின் மீதான
சிந்தனையையும், செவ்வாய், கேது ஆகியவை பணத்தின் மீதான கட்டுப்பாட்டையும்
குறிக்கும். சனி உழைப்பின் மூலமாக பெறும் பணத்தை குறிக்கும். உழைப்புக்கும்
நேர்மைக்கும் உரிய சனி ஜாதகத்தில் பாதிக்கப்பட்டிருந்து சந்திரன் தொடர்பு
பெறும்போது உழைப்பின் மூலம் அடைய முடியாத தனத்தை திருடிப்பெற முனையும்.
காலபுருஷனுக்கு சுக ஸ்தானாதிபதியான கடக ராசி ஆதிபதி சந்திரன் உழைக்காமல் திருட வேண்டும் என்ற
சிந்தனையை பாதிக்கப்பட்ட சந்திரன் ஏற்படுத்தும். கால புருஷனுக்கு 1௦ ஆமிட அதிபதி
கடகத்திற்கு நேர் எதிரான மகர ராசியாகும். இதனால் திருடர்களின் ஜாதக அமைப்பில்
சனி-சந்திரன் ஏதாவது ஒரு அமைப்பில் சம்பந்தம் பெறும். சந்திரன் கால புருஷனுக்கு 8 ஆமிடமான விருட்சிகத்தில் நீச்சமாகிறது. விருட்சிகம் கால புருஷனுக்கு 8
ஆம் பாவம் என்பதால் ரகசியம் காக்கும்.
எனவேதான் கால புருஷ லக்னத்திற்கு 8 ஆமிட தொடர்பு பெறுவதால் உழைக்காமல் ரகசியமாக திருடுவதற்கு காரக
கிரகமாக சந்திரன் திகழ்கிறார். (சந்திரனின் ரோஹிணி
நட்சத்திரத்தில் பிறந்தவன் வெண்ணையையும் நம் மனதையும் திருடிய கண்ணன்). கடகத்தில் சனியின் பூச நட்சத்திரமும் விருட்சிகத்தில் சனியின் அனுஷ நட்சத்திரமும் அமைந்துள்ளது கவனிக்கத்தக்கது. 8
ஆவது பாவம் திருட்டை குறிக்கும் பாவமாகிறது. கண நேரத்தில் கவனத்தை திசை
திருப்பி திருடுவதற்கு எல்லாம் சந்திரனே காரணம்.
சந்திரன் தொடர்பில்லாத திருட்டே இல்லை. சந்திரன் எந்த கிரகத்துடன்
சேர்க்கையில் உள்ளதோ அல்லது பார்க்கிறதோ அந்த கிரக காரகதிற்கு திருட்டு மனோபாவத்தை
ஏற்படுத்துவார்.
கேது சட்டப்படியான தண்டனை கொடுக்கும் கிரகமாகும். சந்திரனுக்கு கேது
தொடர்பிருந்தால் திருட்டு ஜாதகர் எத்தனை வருஷமானாலும் கேது தொடர்புடைய திசா புக்தி
வந்து ஜனன சந்திரன் மேல் கோட்சார கேது போகும்போது அல்லது ஜனன கேது மீது கோட்சார
சந்திரன் போகும் காலத்தில் தண்டனை அடைவது உறுதி. தண்டனை கொடுக்கும் கிரகங்களான
செவ்வாய் (காவல்துறை), சூரியன் (அரசு), சனி (கர்ம காரகன்) ஆகியோரை கர்ம வினைகளின்
பொருட்டு ராகு-கேதுக்கள் செயல்படாமல் செய்து தண்டனையை நிறுத்தி வைப்பதும் உண்டு. திருட்டின்
தன்மை சந்திரன் மற்றும் 8 ஆமிட தொடர்புகளைப்பொருத்து அமையும்.
கீழே ஒரு பெண்மணியின்
ஜாதகம்.
கடக லக்ன ஜாதகத்தில் 6, 9
ஆமதிபதி குரு லக்னத்தில் உச்ச நிலையில் திக்பலம் பெற்று கேதுவுடன் இணைவு
பெற்றுள்ளார். குரு - கேது தொடர்பு
கோடீஸ்வர யோகம் என கூறப்பட்டாலும் பெரிய தனத்தை குறிக்கும் குரு கடனை குறிக்கும்
கேதுவோடு தொடர்பு பெறுவது பொருளாதார வாழ்கையில் உயர்வை தந்தாலும் ஜாதகருக்கு
கடனும் பெரிய பொருளாதாரத்தை இழப்பதையும் சேர்த்தே இது தரும். சுக்கிரன்
பாதகாதிபதியாகி இரண்டாமிடத்திலும் பாவகத்தில் லக்னத்திலும் சூரியன் மற்றும் வக்கிர
புதனுடன் இணைந்து 2 ஆவது பாவக ரீதியான பாதிப்பை தர வேண்டிய நிலையில் உள்ளார். .
லக்னாதிபதி சந்திரன் மீனத்தில் குருவின் பூரட்டாதி – 4 ல் நின்றாலும் பாவத்தில் லக்னத்திற்கு 8 ல் நின்று அதன் வீட்டதிபதி வக்கிர சனியின் 3 ஆவது பார்வையை
பெறுகிறார். இப்படி 8 ஆமிட தொடர்பை லக்னாதிபதி சந்திரன் பெறுவதால் திருட்டு
தொடர்புடைய விஷயங்களை ஜாதகர் எதிர்கொள்வார் எனலாம். திசா நாதன் புதன் பாதகாதிபதி சுக்கிரனுடன்
இணைவு பெற்று சுக்கிரனின் பூரம் – 4 ல் நின்று திசை
நடத்துகிறார். 2 க்கு விரையத்தில் நிற்கும் கேதுவின் மகம் – 2 சாரம் பெற்ற
சுக்கிரனின் புக்தியில் பூராடம் – 4 ல் தனுசுவில் நிற்கும்
8 ஆமதிபதி சனியின் அந்தரத்தில் தன
ஸ்தானத்திற்கு விரையத்தில் லக்னத்தில் 8 ஆமதிபதி சனியின் பூசம் – 3 சாரம் பெற்ற
கேதுவின் அந்தராந்திரத்தில் ஜாதியின் வீட்டில் 15 சவரன் நகை திருடு போனது. 8 ஆமதிபதி சனி
சாரம் பெற்று லக்னத்தில் நிற்கும் குரு தங்கத்தை குறிக்கும் காரக கிரகமாவார்.
இரண்டாவதாக ஒரு திருட்டுப்பெண்ணின் ஜாதகம்.
கன்னி லக்ன ஜாதகத்தில் விரையாதிபதி சூரியன் உச்ச சனியோடு இணைவு
பெற்று நீச பங்கம் அடைகிறார். குரு, சுக்கிரன், புதன் மூவரும் அஸ்தங்கம் பெற்றுள்ளனர்.
திருட்டுக்கு காரக கிரகமான சந்திரன் 10 ஆமதிபதியாகி சனி தொடர்புகொண்டுள்ளார்.
இந்த ஜாதகி திருடுவதையே தொழிலாகக்கொண்டவர்.
பாதகாதிபதி குரு பாதகஸ்தானமான மீனத்திற்கு 8 ல் பகை வீட்டில் அரசாங்கத்தை குறிக்கும் சூரியனால் அஸ்தங்கமாகி திசை நடத்துகிறார். ஜாதகரது செயல்களை கண்காணித்து தவறுகளுக்கு தண்டனை வழங்கும் பாதகாதிபதி வலுவிழப்பதால் ஜாதகி தண்டனைகளில் இருந்து தப்புதவதை குருவின் அஸ்தங்கம் குறிக்கிறது. புக்தி நாதன்
ராகு சுயசாரத்தில் திருவாதிரை- 2 ல் நின்று புக்தி நடத்துகிறார். அந்தர நாதனான உச்ச அஸ்தங்க சனி தனது பகைவரான
செவ்வாயின் சித்திரை – 4 ல் நின்று அந்தரத்தை நடத்துகிறார். இந்த நிலையில் ஜாதகியைப்பற்றி
நன்கு அறிந்தவர்கள் ஜாதகி திருடும் சமயத்தில் பொறி வைத்து கையும் களவுமாக ஜாதகியை
பிடித்தனர். அரசாங்கத்தை குறிக்கும் சூரியனும் காவல்துறையை குறிக்கும் செவ்வாயும்
லக்ன பாவிகளானதால் ஜாதகியை பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தும் ஜாதகி
தண்டனையின்றி வெளியே உலாவிக்கொண்டுள்ளார்.
மூன்றாவதாக ஒரு ஆணின் ஜாதகம் கீழே.
கும்ப லக்ன ஜாதகத்தில் திருட்டை குறிக்கும் பாவமான 8 ஆமதிபதி புதன் தன்னுடன் இணைந்து 8
ஆவது பாவத்தில் நிற்கும் சூரியனின் உத்திரம் –
2 இல் நின்று திசா – புக்தியை நடத்துகிறார். 8 ஆமதிபதி புதனின் சார நாதன் சூரியன் திருட்டுக்கு காரக கிரகமான
சந்திரனின் ஹஸ்தம் – 1 ல் நிற்கிறார். சந்திரனின் வீட்டில் அந்தர நாதன் சனி, 8
ஆமதிபதி புதனின் ஆயில்யம் – 2 ல் நின்று
அந்தரம் நடத்துகிறார். புதனின் அந்தராந்திர காலத்தில் மாட்டை குறிக்கும் ரிஷப
ராசியில் சூரியனின் கார்த்திகை–4 ல் நின்ற குருவின் அமைப்பால் ஜாதகரின் 2 மாடுகள் திருடு போயின. புதன்
இரட்டை தன்மையை குறிக்கும் கிரகம் என்பதை கவனிக்க.
பல்வேறு வாசகர்களின் வேண்டுகோளுக்கிணங்க திருட்டு பற்றிய எனது ஆய்வு
இங்கே பதிவிடப்பட்டது. எனது பதிவுகளை திருடி தங்களது தளத்தில் பதிவிட்டுக்கொள்ளும்
ஜோதிடர்களுக்கும் ஒரு ஜாதக அமைப்பு இருக்கத்தான் செய்கிறது போலும்.
மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்,
அதுவரை வாழ்த்துக்களுடன்,
அன்பன்,
பழனியப்பன்.
கைபேசி: 08300124501
No comments:
Post a Comment