Friday, 12 February 2021

CURRENCY TRADING

 



பங்குச்சந்தையைப்பற்றி ஏற்கனவே சில பதிவுகள் எழுதியிருந்தாலும் அதில் உள்ள பல வகைப்பாடுகளை ஆராய்ந்து எழுதுமாறு அவற்றில் ஈடுபட்டிருக்கும் வாசகர்களின் வேண்டுகோளுக்கிணங்க பங்கு வணிகத்தின் ஒரு பிரிவான பண மதிப்பில் முதலீடு செய்யும் Currency Trading  பற்றி இப்பதிவில் நாம் ஆராயவிருக்கிறோம்.

பொதுவாக பங்கு வணிகத்திற்கு அனைத்து கிரகங்களுமே ஒரு வகையில் தொடர்பு பெறுகின்றன.

1)பங்கு வணிகத்தில் உறுதியாக, தெளிவாக, பதட்டமும் பயமும் இன்றி முடிவுகளை எடுக்க சூரியன் சிறப்பாக அமைந்திருப்பது முக்கியம். சூரியன் நீசமானவர்கள் துணிச்சலான முடிவெடுக்க இயலாதவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் ரிஸ்க் எடுக்கவே மாட்டார்கள். எனவே லாபமும் மிக சொற்பமே..

2)ஜாதகத்தில் சந்திரன் வலுவாக அமைந்தவர்கள் விரைந்து சிறந்த முடிவுகளை  எடுக்கிறார்கள் என்ற வகையில் சந்திரன் சிறப்பாக, குறிப்பாக வளர்பிறை சந்திரனாக அமைவது நல்லது. தினசரி வணிகத்தில் சில சமயம் வினாடிகளில் எடுக்கும் முடிவுகள் லாப நஷ்டங்களை தீர்மானிக்கின்றன. எனவே ஜாதகத்தில் சந்திரன் பாதிக்கப்பட்டவர்கள் தினசரி வணிகத்தில் ஈடுபடாமல் நீண்ட கால வணிகத்தில் ஈடுபடுவது சிறந்தது.

3)வேகமும் கோபமும் கொண்ட செவ்வாய் ஜாதகத்தில் திட்டமிடலுக்குரிய புதனின் தொடர்பற்று அமைவது நன்று. செவ்வாய் சேர்க்கையால் புதனின் திட்டமிடல் அங்கு சிதறிவிடும். ஆனால் மிதுன லக்னத்திற்கு புதனும் செவ்வாயும் மேஷத்தில் அமையலாம். ஆனால் புதன் செவ்வாயைவிட அதிக பாகையில் நிற்க வேண்டும். இத்தகையோர் விரைவாகவும் சாதுர்யத்துடனும் செயல்படுகிரார்கள். ஆனால் இவர்களுக்கு திருமண வாழ்வு இல்லை என்பது வருத்தமான செய்தி. இதே மிதுன லக்னத்திற்கு புதன் மேஷத்திலும் செவ்வாய் மிதுனத்திலும் பரிவர்தனையாகியிருக்க சிறப்பு. இவர்களின் திருமண வாழ்வு கடுமையாக பாதிப்பதில்லை. பொதுவாக மிதுன லக்னம் தவிர ஏனையோருக்கு குரு செவ்வாய் இணைவு நன்று. இதிலும் குருவே செவ்வாய்க்கு முன்னால் நிற்க வேண்டும். சனி தொடர்பு செவ்வாய்க்கு எப்போதும் கூடாது..   

4)வணிகம் என்றாலே அது திட்டமிட்ட ஒன்றாக அமைய வேண்டும் என்ற வகையில் சரியான அணுகுமுறைக்கு புதன் காரக கிரகமாகிறது. ஜாதகத்தில் புதன் பாதிக்கப்பட்டவர்கள் பங்கு வணிகத்தை விட்டு விலகி இருப்பது நன்று.

5)குரு பெரிய அளவிலான முதலீட்டிற்கு காரக கிரகமாகிறது. குரு பாதிக்கப்பட்டவர்கள் சிறிய அளவில் வணிகத்தில் இதர கிரக சிறப்புகளைப்பொருத்து ஈடுபடலாம். குரு பாதகாதிபதியாக இல்லாமல் அமைவது நன்று. மேஷ லக்னத்திற்கு சனி தொடர்பு குருவிற்கு கூடாது.

6)சிறிய வகை பங்கு வணிகத்திற்கு சுக்கிரன் காரக கிரகமாகிறது. சிறிய அளவிலான  தினசரி வணிகத்திற்கு சுக்கிரன் சிறப்பாக அமைந்திருக்க வேண்டும். புதனும் சுக்கிரனும் பங்கு வணிகத்தின் காரக கிரகங்களாகின்றன. இவ்விரு கிரகங்களும் பாதிக்கப்பட்டவர்கள் பங்கு வணிகத்தின் பக்கம் தலை வைத்துப்படுக்காமல் இருப்பது நல்லது.

7)சனி லக்னத்தில் கெடாமல், வக்கிரமின்றி அமைவது நிதானமான செயல்பாட்டிற்கு வழிவகுக்கும். மெதுவாகச் சுற்றும் சனி உச்சம் பெற்றவர்களும் புனர்பூ (சனி+சந்திரன் இணைவு) தோஷம் கொண்டவர்களும் விரைந்து முடிவெடுக்கும் தினசரி வணிகத்தில் ஈடுபட லாபமில்லை.  ஆனால் நீண்டகால முதலீட்டிற்கு சனி நன்று. அதாவது எதிர்காலத்தில் லாபம் தரும் சிறந்த துறை பங்குகளை வாங்கி வைத்து பிறகு லாபம் பார்க்க மட்டுமே சனி சிறப்பு. எந்த அமைப்புகள் சாதகமாக இருந்தாலும் கோட்சாரத்தில் ஏழரை சனி, அர்தாஷ்டம (4 ஆமிட சனி) சனி நடப்பவர்கள் பங்குச்சந்தையில் ஈடுபடக்கூடாது. மூன்றாமிடச் சனி ஓரளவு நன்மை தருகிறது.

8)மிக பிரம்மண்ட வகை அதாவது பல கோடிகளை முதலீடு செய்ய ராகு காரக கிரகமாகிறது. ராகு-கேதுக்கள் இருவரும் 2 & 8 பாவங்களோடு சுபர் தொடர்பில், பார்வையில் இருப்பது பங்கு வணிகத்திற்கு மிகச்சிறப்பு. ஆனால் இது குடும்ப வகையில் பாதகத்தையும் சேர்த்தே செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது. இவைகளின் 2 & 8  பாவ தொடர்பில் பங்குச்சந்தையில் நன்கு சம்பாதிப்பவர்களும் சொந்த ஊரைவிட்டு வெளியேறி வாழ்பவர்களாகவும் அல்லது சொந்த இனம், குலம் கலாசாரம் விட்டு வேறு கலப்பில் மணம் புரிந்தவர்களாகவும் அல்லது மண வாழ்வில் தோல்வியை சந்தித்தவர்களாக இருக்கிறார்கள்  

9)கேது பங்கு வணிகத்திற்கு எதிரான கிரகமாகும். திடீர் லாபங்களை கொடுத்து பிறகு பிகப்பெரிய வீழ்ச்சி ஏற்படுகிறது என்றாலே அங்கே கேது செயல்படுகிறார் எனப்பொருள். ராகு சாதகமற்று ஜாதகத்தில் அமைந்திருந்தாலும் இதே விதி செயல்படும் என்பதை கவனத்தில் கொள்க.  கேது சிறப்பாக லாப ஸ்தானத்தில் அமைத்திருப்பின் கடன் பத்திரங்களில் முதலீடு, கணினி, மென்பொருள் துறை பங்குகள் லாபம் தரும்.  

அதிசயமாக 8 ஆமிடமும் அதன் பாவாதிபதியும் தன லாப பாவங்களோடு, அவற்றின் அதிபதிகளோடு தொடர்பு கொள்ளும் ஜாதக அமைப்பு உள்ளோர் பங்கு வணிகத்தில் மிகச்சிறப்பாக சம்பாதிக்கிறார்கள். எனவே பங்கு வணிகத்தை பொருத்தவரை  எட்டாமிடம் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. எட்டாமிடம் என்பது மறைந்திருக்கும் தனம் என்பதை கவனத்தில் கொள்க.

கீழே ஒரு ஆணி ஜாதகம்.

சிம்ம லக்ன ஜாதகம். பணத்தை நேரடியாக குறிக்கும் கிரகம் புதனாகும். லக்னப்புள்ளி பூரம்-2 ல் அமைந்து சுக்கிரன் 8 ஆமிடத்தில் உச்சமாகியுள்ளது. இதனால் இவர் பங்கு வணிகத்தில் ஈடுபடுவார் என்பது இவரது லக்ன புள்ளியே சுட்டிக்காட்டுகிறது. சிம்ம லக்னாதிபதி சூரியனுக்கு சுக்கிரன் பகை கிரகம் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே சுக்கிரன் சிம்மத்திற்கு நன்மை செய்ய மாட்டார். ஆனால் 8 ல் மறைந்து உச்சமான சுக்கிரன் நன்மை செய்தே ஆக வேண்டும். சுக்கிர திசையில் ஜாதகர் பாங்கு வணிகத்தில் ஈடுபட நல்ல சம்பாத்தியம் கிடைக்கும். ஆனால் இந்த ஜாதகத்தில்  1௦ ஆமதிபதி சுக்கிரன் 8 ஆமதிபதி குருவோடு பரிவர்த்தனை ஆகியுள்ளது. இதனால் நிலைமை தலைகீழாக மாறிவிடும். சுக்கிரன் பரிவர்த்தனை ஆகாமல் இருந்தால் மட்டுமே இவர் பங்கு வணிகத்தில் நல்ல லாபம் பார்ப்பார். ஏனெனில் பரிவர்த்தனை என்பது ஜாதகருக்கு உயர்வையும் தாழ்வையும் இணைத்தே வழங்கும்.

இந்த ஜாதகர் பணத்தின் மதிப்பில் முதலீடு செய்யும் Currency Trading செய்கிறார்.  Currency Trading க்கு சூரியன் காரக கிரகமாகிறார். ஏனெனில் பணத்தின் மதிப்பை கட்டுப்படுத்துவது அரசாங்கமே. சூரியன் லக்னத்தை பார்ப்பதால் இவருக்கு Currency Trading செய்ய எண்ணம் வந்துள்ளது. உச்ச கிரகமும் Currency Trading செய்ய வைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. பங்கு வர்த்தகத்தில் Currency Trading என்பது பங்கு வணிகத்தில் ஒரு உயர்வான நிலை என்பது குறிப்பிடத்தக்கது. உச்ச கிரகமும் சூரியனைப்போல உயர்வையே சிந்தித்து Currency Trading ல் ஈடுபட வைக்கும். ஆனால் சூரியனது துணிவு ஆளுமை ஆகியவை இதர உச்ச கிரகங்களிடம் இருக்காது. ஜாதகர் உச்ச கிரகமான செவ்வாய் திசையில்தான் Currency Trading செய்தார். செவ்வாய் லக்ன பாதகாதிபதி என்பதோடு அவர் பாதக ஸ்தானத்தில் கேதுவுடன் இணைந்து நிற்கும் விரையாதிபதி சந்திரனின் (திருவோணம்-3) நட்சத்திரத்தில் நிற்கிறார். எனவே இவருக்கு பாதகம் விரையம் என்ற வகையில் வரும். செவ்வாய் திசையின் குரு புக்தியில்தான் ஜாதகர் Currency Trading ல் ஈடுபட்டார். காரணம் குரு Currency Trading ன் காரக கிரகமான சூரியனின் (கார்த்திகை-2)  நட்சத்திரத்தில் நிற்பதுதான்.

திசா நாதன் செவ்வாய் புதனோடு இணைவு பெற்றதால் இவர் நண்பரின் வற்புறுத்தலால்தான் இதில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. நண்பர்களை குறிக்கும் 7 ஆமதிபதி சனி வக்கிரம் பெற்ற நிலையில் விரையத்தில் நின்று நண்பர்களை குறிக்கும் புதனையும் திசா நாதன் செவ்வாயையும் பார்க்கிறது. இதனால் இந்த ஜாதகர் நண்பர்களால் விரையத்தை சந்திப்பார் என்பது தெளிவாக உள்ளது. ஜாதகர் செவ்வாய் திசையில் குரு புக்தியில் குரு மற்றும் சனியின் அந்தரத்தில், Currency Trading ன் காரக கிரகம் சூரியன் கோட்சாரத்தில் ஜனன ராகு மற்றும் கோட்சார கேதுவின் மேல் சென்றபோது அதாவது கடந்த ஐப்பசி, கார்த்திகை  மாதங்களில் (November& December) Currency Trading ல் ஈடுபட்டார். திசா புக்தி கிரகங்கள் ஒருவர் ஈடுபடும் செயலை தெளிவாக குறிப்பிடுகிறது என்றால் கோட்சார கிரகங்கள் அதன் தாக்கத்தை தெளிவாக உணர்த்துகின்றன.  Currency Trading ன் காரக கிரகம் சூரியன் கோட்சாரத்தில் ராகு-கேதுவோடு தொடர்பானதால் இந்த இரு மாதங்களில் ஜாதகர் லட்ச ரூபாய்க்கும் அதிகமான தொகையை இழந்தார். புதன் செவ்வாய்க்கு முன்னால்தான் நிற்கிறது. திட்டமிடலை மீறி இதர அம்சங்கள் ஜாதகரை பாதிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒருவர் பங்கு வணிகத்தில் மட்டுமல்ல அவர் ஈடுபடும் தொழில் எதுவாயினும் அந்த காரக கிரகத்தின் நிலையை ஜாதகத்திலும் கோட்சாரத்திலும் அறிந்து செயல்படுவது எப்போதும் நன்மை பயக்கும்.

மீண்டும் விரைவில் மற்றொரு பதிவில் உங்களை சந்திக்கிறேன்.

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்.

கைபேசி: 8300124501

No comments:

Post a Comment