Saturday 11 July 2020

இன்பக்கவி!



நமக்கு ரத்தத்தொடர்பு இல்லாவிட்டாலும் எதோ ஒரு வகையில் நம்மை பாதித்த ஒருசிலரை  நினைக்கும்போது மனம் கனிவுகொள்ளும். ஆனால் தமிழறிந்த அனைவருக்கும் அப்படி ஒருவரே இருந்தார் என்றால் அது ஆச்சரியம்தான். கவிஞர் கண்ணதாசன் அப்படி தமிழர்கள் அனைவராலும் நினைவுகூறத்தக்கவர். தமிழகத்தில் அடையாளங்கள் என்று ஒரு பட்டியலிட்டால் அதில் கவிஞர் கண்ணதாசன் முக்கிய இடம் வகிப்பார். அவர் நூறாண்டுகளுக்கு ஒருமுறை மலரும் அபூர்வு மலர் எனலாம். அண்ணாரது ஜாதகத்தை எனது பாணியில் இப்பதிவில் ஆராய்ந்திருக்கிறேன்.    


கவிஞரின் ஜாதகத்தில் மேஷச்சந்திரனும் கடக்கச்செவ்வாயும் பரிவர்த்தனை. கவிஞர் மேஷ ராசி என எடுத்துக்கொண்டால் ஜாதகர் முரட்டுப்பிடிவாதமும் மூர்க்கத்தனமும் முன்கோபமும் கொண்டவராக இருக்கவேண்டும். மேஷ ராசிக்காரர்களை சண்டைக்கோழி என குறிப்பிடுவது சரியாகப்பொருந்தும். பரிவர்தனைக்குப்பின் சந்திரன் கடகத்தில் ஆட்சி பெறுகிறது என எடுத்துக்கொண்டால் தாய்மை உள்ளம், கஷ்டத்தை கண்டு கண்ணீர் சிந்துவது, அழகியல், கற்பனைவளம், குடும்பப்பற்று, அபாரமான நினைவுத்திறன், அரசியல், உணர்ச்சித்தூண்டல் என சொல்லிக்கொண்டே போகலாம். கவிஞரின் ஜாதகத்தில் சந்திரன் கடகத்தில் நின்று செயல்பட்டுள்ளதை நாமறிந்த அவரது வாழ்க்கை அடிப்படையில் அனைவரும் உணரலாம். பரிவர்த்தனைக்குப்பிறகு சென்று அமரும்  இடத்திற்கே கிரகங்கள் அதிக முக்கியத்துவம் கொடுத்து செயல்படும் என்பதற்கு இவரது ஜாதகம் ஒரு மிகச்சிறத்த எடுத்துக்காட்டு. ராசி பரிவர்த்தனையாகி பரிவர்த்தனை கிரகத்தோடு திக்பலமடைவதால் லக்னத்தைவிட ராசி வலுவடைகிறது. லக்னம் செயல்பட்டால் ஜாதகருக்கான சூழல் தானாக அமையும். ராசி செயல்பட்டால் ஜாதகர் தனக்கான சூழலை தானே உருவாக்கிக்கொள்வார். கண்ணதாசன் தனது வாழ்க்கைக்கான வாய்ப்புகளை தானே உருவாக்கிக்கொண்டவர் என்பது அனைவரும் அறிந்ததே.  

ஜாதகத்தில் சந்திரன் கேதுவின் அஸ்வினி நட்சத்திரத்தில் நிற்கிறது. கேது சந்திரனுக்கு திரிகோணத்தில் நிற்கிறது. இதனால் சந்திரன் கேதுவால் முழுமையாக பாதிக்கப்படும். ஆனால் பரிவர்தனைக்குப்பின் செவ்வாய் கேதுவின் நட்சத்திரத்தில் வந்து அமைவதால்   சந்திரனுக்கு ஏற்படவேண்டிய தோஷம் செவ்வாய்க்கு இடம் மாறுகிறது. செவ்வாய் தாய்,  தந்தை, பந்துக்களை குறிக்கும் 4, 9 க்குரிய பாவாதிபதியாவதால் ஜாதகர் இளம் வயதில் பெற்றோரால் உறவினருக்கு தத்துக்கொடுக்கப்பட்டார். பரிவர்த்தனை ஆகும் கிரகங்கள் முதலில் ஜாதகரை பரிதவிக்கவிட்டு பிறகே சிறப்பான பலன்களை வழங்கும். கண்ணதாசன் சிறுவயதில் கடினமான சூழலில் வளர்ந்து படிப்பை தொடர இயலாமல் பரிதவித்து பிறகே சென்னை வந்தார். சிறுவயதில் தான் கண்ணீர் சிந்திய அனுபவங்களையே பாடல்களாக்கி நமது கண்களை குளமாக்கினார். 2 ஆமதிபதி புதன் விரையத்திலும் 5 ஆமிடத்தில் கேதுவும் அமைந்ததால்  2, 5 ஆமிடங்கள் பாதித்தவர்கள் சொந்த ஊரின் இருந்தால் முன்னேற இயலாது என்ற விதியும் இங்கு செயல்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.  

பரிவர்த்தனைக்குப்பின் பின் கால புருஷனுக்கு சுக ஸ்தானமான கடகத்தில், ஜாதகருக்கு படுக்கை சுகத்தை வழங்கவேண்டிய 12 ஆம் பாவத்தில், புதன்+சுக்கிரன் சேர்க்கையால் ஏற்படும் மதனகோபால யோகத்தின் மையத்தில் உணர்சிகளுக்குரிய சந்திரன் வந்து ஆட்சி பெறுகிறார். உணர்சிகளுக்குரிய பெண் கிரகமான சந்திரன் இரு காம-மோக கிரகங்களுடன் குருவின் பார்வையில் இணைகிறது. ஜாதகர் வாழ்க்கை பெண் இன்பத்தை அனுபவிப்பதற்கே என எண்ணி வாழ்ந்தவர் என்பது அனைவரும் அறிந்ததே. அதற்காக  தாசிப்பெண்களை நாடியவரே தவிர அடுத்தவர் மனைவியை அடைய எண்ணியவரில்லை. சந்திரன்+சுக்கிரன்+குரு இந்த மூன்று கிரக சேர்க்கை அளப்பரிய கற்பனைத்திறனை ஜாதகருக்கு கொடுத்தது. பெண்  இன்பம், வர்ணனை மட்டுமல்ல வாழ்க்கையின் அனைத்து அம்சங்களும் இவரது கவிதைகளுக்குள் கைகட்டி நின்றது. குருவின் பார்வை பெரும் இடங்ககளான 2, 4 மற்றும் 12 ஆகிய பாவங்கள் சம்பாத்தியம், சுகத்திற்காக செலவுகள் என்பதை தெள்ளத்தெளிவாக எடுத்துக்காட்டுகிறது. கடகத்தில் அமைந்த கிரகச் சேர்க்கையை குரு பார்ப்பதால் கற்பனை ஊற்று பீய்ச்சி அடித்தது என்றால் அது மிகையல்ல. லக்னாதிபதி சூரியன் இசை ராசியான மிதுனத்தில் ராகுவோடு அமைந்ததால் ஜாதகர் இசையோடு தொடர்புகொள்ள அவதரித்தவர் என்பது புலனாகிறது. ராகு எதையும் அதிகப்படுத்தும் கிரகம் என்பதால் ஜாதகருக்கு லாப ஸ்தானத்தில் அமைந்த ராகு இசை வாழ்வில் அதீத பாண்டித்தியத்தை அமைத்துக்கொடுத்துள்ளார். இந்த முக்கிய அமைப்பே ஜாதகர்  உலகப்புகழ் பெற்றவராக தமிழ் இருக்கும் வரை நினைவு கூறத்தக்க கவிஞராக உருவெடுத்ததற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. 

7 ஆமதிபதி சனி பரிவர்த்தனை செவ்வாயின் மற்றொரு வீடான விருட்சிகத்தில் வக்கிரம் பெற்று அமைந்ததால் ஜாதகருக்கு இல்லற வகையில் பல தொடர்புகள் அமைந்தது. விருச்சிகத்தை சாராயம் காயச்சுமிடம் என ஜோதிடம் வரையறுக்கிறது. சந்திரன் நீசமாகும் கால புருஷனுக்கு உடலுறவு ஸ்தானமான விருட்சிகத்தில் வக்கிர சனி அமைந்து அதன் திரிகோணம் கடகமாக வருவதால் ஜாதகர் மதுவோடு மாதுக்களின் தொடர்பிலும் இருக்க வேண்டும் என்பதன் விதிக்குட்பட்டு வாழ்ந்தார். சூரியன் ராகு தொடர்பு அரசியலிலும் இயக்கப்பணிகளிலும் ஈடுபடுத்தும் அமைப்பாகும். ஜாதகரின் அரசியல் தொடர்புகள் அனைவரும் அறிந்ததே. முக்கிய கிரக சேர்க்கைகள் அமைந்தது உணர்சிகளுக்குரிய நீர் ராசிகள் என்பது கவனிக்கத்தக்கது. இதில் காம கிரகங்களோடு செவ்வாயும் தொடர்பானதால் இவர் தொட்டுப்பார்க்காத மது இல்லை என்றே கூறலாம். லக்னத்திற்கு வீழ்ச்சி ஸ்தானம் கடகம் என்பதால் இவரது மரணம் கூட வெளிநாட்டிலேயே நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது. உடல் அளவில் அவர் மரணித்துவிட்டார். ஆனால் புகழ் அளவில் அவர் ஒரு சிரஞ்சீவி. அவர் வார்த்தைகளாலேயே சொல்வதானால் "நிரந்தரமானவர்கள் அழிவதில்லை."  

மீண்டும் விரைவில் உங்களை அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்.
கைபேசி: 8300124501 

1 comment:

  1. சுருக்கமாக தெளிவாக புரிந்துகொள்ள முடிந்தது சார்

    ReplyDelete