Friday, 14 February 2020

பயமும் ஜோதிடமும்

துணிந்தவர்களுக்கு துக்கமில்லை என்பது முன்னோர் வாக்கு. துணிந்தவர்கள் வாழ்க்கை எனும் போர்க்களத்தில் அச்சமின்றி செயல்பட்டு எதிரிகளை வென்று வாழ்வில் முன்னேறிச் செல்வர். அதே சமயம் அவர்கள் இழப்புகளை சந்திக்கவும் தயங்குவதில்லை. பாதிப்புகளை மட்டுமே பார்ப்பவர்கள் வாழ்வில் ஒருநாளும் முன்னேற முடியாது. ஜோதிடத்தில் பயம் என்பது ஒரு தண்டனை என்றுதான் கூற வேண்டும். ஜனன ஜாதகத்தில் சந்திரன் பாதித்தவர்கள்  பயத்தால் பீடிக்கப்படுகிறார்கள்.
இத்தகையவர்களுக்குத்தான் 
எதையும் தன்னம்பிக்கையோடு எதிர்கொள்ளும் ஆற்றல் குறைவு. செவ்வாய் வலுவடைந்தவர்களும் தைரியம், துணிவு, ஆண்மை, வீரியம் ஆகியவற்றிற்குரிய   3 ஆவது பாவம் வலுவடைந்தவர்களும் பொதுவாகவே துணிச்சல் மிகுந்தவர்களாக காணப்படுவர். ஆனால் லக்னாதிபதி மற்றும் சந்திரனின் நிலையைக்கொண்டுதான் ஒருவரின் துணிச்சலை தெளிவாக அறிய முடியும். சூரியனுக்கும் செவ்வாய்க்கும் சனி,ராகு-கேது போன்ற பாவிகள் தொடர்பு ஏற்படும் போது இவ்விரு கிரகங்களுக்கும் மிகுந்த பய உணர்ச்சி ஏற்படும். ஆனால் அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் உள்ளூர பயந்துகொண்டு வெளியில் தைரியசாலிகளாக நடிப்பார். 
இயல்பாகவே தைரியம் மிக்கவை நெருப்பு ராசிகள் எனப்படும் மேஷம், சிம்மம், தனுசு ஆகியவை. மேஷம், சிம்மம் தவிர்த்து மற்றோர் நெருப்பு ராசியான தனுசுக்கு அதிபதி குருவிற்கு சனி சமக்கிரகமாக வருவதாலும். கேது குருவின் தன்மையை ஒத்த ஞானியாக வருவதாலும், குரு இவ்விரு கிரகங்களோடும் சூரியன், செவ்வாயைப்போன்று அல்லாமல் அஞ்சாது எதிர்த்துநின்று செயல்படும். ராகுவோடு சேர்ந்தால் மட்டும் தனது நற்குணங்களை ராகுவிடம் இழந்து அதை சமாதானப்படுத்திவிட்டு தான் வழுவிழந்து நிற்கும். அதனால்தான் சனி, ராகு-கேதுக்களோடு இணையும் குரு இவைகளால் ஏற்படும் தோஷங்களை பெருமளவில் குறைத்துவிடுகிறார்.  ராகு செவ்வாயோடு சேர்ந்தவர்களுக்கும் 3 ஆம் பாவத்தில் ராகு-கேதுகள் இருக்கப்பெற்றவர்களுக்கும் அசட்டுத்துணிச்சல் இருக்கும். எந்த இடத்தில் நிதானிக்க வேண்டும் என்ற தெளிவு இருக்காது. ராகு-சந்திரன் சேர்க்கை உள்ளவர்களுக்கும் ராகுவுக்கு திரிகோணத்தில் சந்திரன் அமையப்பெற்றவர்களுக்கும், சந்திரனுக்கு அடுத்த பாவத்தில் ராகு இருப்பவர்களுக்கும் வாய்ச்சவடால் அதிகம். இத்தகையவர்களை வாய்ச்சண்டையால் வெல்லவே முடியாது. ஆனால் பயமுறுத்தி இவர்களை பணிய வைக்க முடியும்.    
கீழே ஒரு ஆணின் ஜாதகம்.
இந்த ஜாதகர் நெருப்பு ராசியும் ராஜ ராசியுமான சிம்மமே ராசியும் லக்னமுமாக அமையப்பெற்றவர். முக்கிய ஒளிக்கிரகமும் மனோ காரகனுமான சந்திரனை நோக்கி நிழல் கிரகமான கேது  வருகிறது. இதனால் ஜாதகரின் மனம் பதட்டமடைகிறது. 2 ஆமிட கேது பொருளாதரத்தை பாதிக்கவில்லை. ஆனால் மனதை பாதிக்கிறார். சந்திரன் உடலையும் உணவையும் குறிப்பவர். அதனால் உடலின் மீதும் உண்ணும் உணவின் மீதும் மிகுந்த கவலை கொள்கிறார். சந்திரனை நோக்கிய நிலையில் கேது உள்ளதால் ஜாதகருக்கு பேய் பற்றிய பயமுண்டு. நல்ல துறையில் நல்ல சம்பாத்தியத்தில் உள்ள ஜாதகருக்கு இரவில் தனியாக வெளியே செல்ல   பயம். கேதுவின் நிழல் சந்திரனின் மீது படிவதால் இந்நிலை ஏற்படுகிறது. 
இரண்டாவதாக மற்றொரு ஆணின் ஜாதகம்.  
மீன லக்ன ஜாதகத்தில் நிழல் கிரகங்களான கேதுவும் ராகுவும் 1 – 7 ல் அமைந்துள்ளன. இதனால் ஜாதகருக்கு நிழல் கிரகங்களின் தாக்கம் அதிகம். உடல், மனோ காரகன் சந்திரன் 8 ல் மறைந்துவிட்டதால் ஜாதகருக்கு இவை இரண்டைப்பற்றியும் பயம் மிகவும் அதிகம். சந்திரனின் வீட்டில் சந்திரனின் பகை கிரகமான சுபாவ பாவி சனி அமைந்துவிட்டதால் பயத்தில் மனம் குழம்பியுள்ளார். சந்திரனும் கடக ராசியும் ஜோதிடத்தில் மார்பை குறிப்பிடும். 1977 ல் பிறந்த ஜாதகருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. 1998 ல் ஜாதகருக்கு லக்னாதிபதி குருவின் திசை துவங்கியது. குரு கடக ராசிக்கு விரையத்தில் கேந்திராதிபத்திய தோஷத்தில் பகை கிரகம் சுக்கிரனுடன் அமைந்துள்ளார். குரு மார்பை ஆளுமை செய்யும் கிரகமாகும்.  மார்பு ராசியான கடக ராசிக்கு விரையத்தில் குரு கடகத்திற்கு பாதகாதிபதி சுக்கிரனுடன் இணைந்து கடகத்திற்கு பாதகத்தில் ரிஷபத்தில் நிற்கும் செவ்வாயின் மிருக சீரிஷம் – 4 ல் நிற்கிறார். செவ்வாய் மிருக சீரிஷம் – 2 ல் அமைந்து நவாம்சத்தில் கன்னியில் நிற்கிறார். இந்த அமைப்பால் குரு திசை துவங்கியது முதல் தனக்கு மார்பில் பாதிப்பு இருப்பதாக எண்ணி பதட்டமடைகிறார். 
கடக ராசி அதிபதி சந்திரனுக்கு 8 ல் மாந்தியுடன் இணைந்து நிற்கும் செவ்வாயால் இந்த பதட்டம் அதிகமாகி தனக்கு மாரடைப்பு உள்ளதாக எண்ணிக்கொள்கிறார். இதனால் திருமணத்தை தவிர்த்து வருகிறார். தற்போது ஜாதகர் சனி திசையில் உள்ளார். சனி பாவத்தில் கன்னியில் உச்சமடையும் புதனின் ஆயில்யம்-4 ல் நின்று மீன நவாம்சம் பெற்று கன்னி நவாம்சத்தில் உள்ள செவ்வாயின் பார்வையை பெறுகிறார். இதனால் ஜாதகருக்கு தனக்கு இருப்பதாக எண்ணும் மார்பு நோய் பற்றிய பயம் மிக மிக அதிகம். மருத்துவர்கள் ஜாதகருக்கு மார்பில் எவ்வித பாதிப்பும் இல்லை என்று கூறிவிட்டாலும் ஜாதகர் தனது பயத்தால் திருமணம் செய்துகொள்ளாமல் உள்ளார். கால புருஷனுக்கு ரோக ஸ்தானாதிபதியான புதனே களத்திர பாவாதிபதியாகி பாவத்தில் உச்சமடைவதால் நோய் பயத்தால் ஜாதகர் திருமணம் செய்துகொள்ள மாட்டார்.   
மூன்றாவதாக மற்றொரு ஆணின் ஜாதகம்.
துலாம் லக்னத்திற்கு ரோக ஸ்தானமான 6 ஆமிடாதிபதி குரு லக்னத்தில் வக்கிரமடைந்த நிலையில் அமைந்துள்ளார். வக்கிர குருவால் அதன் திக்பலம் பாதிக்கப்படும். 4 ஆம் பாவம் உடலின் கட்டமைப்பை சொல்லும். 4 ஆமிடத்திற்கோ, 4 ஆம் பாவாதிபதிக்கோ குரு தொடர்பு ஏற்படும்போது ஒருவருக்கு உடற்பருமன் ஏற்படும். இந்த ஜாதகத்தில் வக்கிர குருவின் பார்வை நான்காம் அதிபதியான நீச சனியின்மீது படுகிறது. மேலும் குரு வக்கிரமடைந்து 12 ஆமிடம் நோக்கி செல்வதால் 12 ஆமிடத்திற்கும் அரைப்பங்கு குருவின் ஆதிக்கம் ஏற்படும். இதனால் 12 ஆமிட குருவின் அரை பங்கு பார்வை 4 ஆமிடத்திற்கும் ஏற்படுகிறது. இதனால் ஜாதகருக்கு உடல் பருமன் ஏற்படும். ஜாதகத்தில் சந்திரன் லக்ன பாதகத்தில் நிற்கும் கேதுவின் சாரத்தில் நிற்கிறது. இதனால் சந்திரன் தொடர்புடைய திசா-புக்திகள் வந்தால் உடலும், மனம் பாதிக்கப்படும் எனலாம். ஜாதகருக்கு ராசிக்கு பாதகத்தில் லக்ன பாதகாதிபதி சூரியனுடன் இணைந்த செவ்வாய் திசை கடந்த 2018 இறுதிவரை நடந்தது.  செவ்வாய் பாதகாதிபதி சூரியனோடு இணைந்த நிலையில் மேஷத்தில் நீசமடைந்த சனியின் மூன்றாவது பார்வையை பெற்ற நிலையில் சந்திரனை பார்க்கிறது. 
உடற் பருமனுக்கு மருந்துகள் எடுத்துக்கொண்டவர் ஒரு கட்டத்தில் உடல் மிகவும் மெலிந்துவிட்டதாக சக நண்பர்கள் கூற மிகுந்த மன பாதிப்புக்குள்ளானார். நீச சனி உடல் மெலிவுக்கு ஒரு முக்கிய காரணம்.  ஜாதகர் சிறுநீரகத்துறையில் தலைமை மருத்துவராக இருந்து ஏனையோருக்கு பாடம் நடத்துபவர். எனினும் செவ்வாய் திசையில் பாதகாதிபதி சூரியனின் புக்தியிலும் அடுத்து வந்த சந்திர புக்தியிலும்  மன நலம் பாதிக்கப்பட்டு தற்கொலை எண்ணம் வரை சென்று மனநலம் பாதிப்புக்கு சிகிச்சை எடுத்துக்கொண்டார். ரோக ஸ்தானமான 6 க்கு விரையத்தில் 5 ல் நிற்கும் ராகு திசை துவங்கியவுடன் ஜாதகர் தனது பாதிப்பிலிருந்து மீண்டார்.  ரோகம் 6 ஆமிடம். குணம் 5 ஆமிடம்.  

மீண்டும் விரைவில் இதுபோல் மற்றொரு பதிவில் சந்திப்போம்.
அதுவரை வாழ்த்துக்களுடன்,
அன்பன்,

பழனியப்பன். 
கைபேசி: 8300124501.

1 comment: