Sunday, 13 April 2014

யாருக்கு ஏன் எதற்கு வாக்களிக்க வேண்டும்?

எச்சரிக்கை

இது ஜோதிடப் பதிவு அல்ல.

இந்தியாவை ஆட்டுவிப்பது சுதந்திர இந்தியாவின் ஜனன காலத்தில் லக்னத்தில் வலுவாக அமைந்துவிட்ட ராகு பகவான்தான். இந்தியாவைப் பொறுத்தவரை அரசியல்வாதிகள் அணைவருமே ஒருவகையில் ராகுவின் அம்சம்தான் எனலாம். இதில் மாறுபட்ட அம்சமுடைய அரசியல்வாதிகள் அதாவது ராகுவின் குணாதிசயத்திற்கு மாறுபட்ட குணாதிசயமுடைய அரசியல்வாதிகள் இந்தியாவை ஆட்சி செய்ய முடியாது. இந்தியா சுதந்திரமடைந்து இன்றுவரை இந்தியாவை ஆள்பவர்களின் ஜாதகங்களை ஆராய்ந்தால் இந்த உண்மையை தெளிவாக உணரலாம்.

சரி, ராகுவின் அம்சங்கள்தான் என்ன?

அணைத்து தீவிரமான துர்நடத்தைகளுக்குமே ராகுவே காரணம்.
பிரிவினை, நம்பிக்கைத் துரோகம், ஏமாற்றுதல், பழிவாங்கல், போதை, கள்ளக்கடத்தல், பின்னணியிலிருந்து இயக்குவது, சூழ்ச்சி, சதிவேலை, நாச வேலை, பேச்சுவன்மை  இன்னும் பல.

பல மத,மொழி,இன,கலாசார மாறுதல்களைக் கொண்ட இந்தியாவை ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்துகொண்டிருக்கும் தருவாயில் இந்தியாவின் மீதான அவர்களின் பிடி நழுவிக்கொண்டிருப்பதை உணர்ந்தார்கள். அதைச்சமாளிக்க பல்வேறு யுக்திகள் ஆலோசிக்கப்பட்டன. அப்போதுதான் நமது சுவாசமான இந்திய வேதத்திலேயே அதற்கான உபாயம் ஒன்றும் இருந்ததை அறிந்து மகிழ்ந்தார்கள். அந்த வேதக் குறிப்பு என்ன?
பகைவனை வழிக்குக்கொண்டுவர வேதம் வகுத்துள்ள விதி.

1.சாம                 - சமாதான உடன்படிக்கை

2.பேத                 - பகைவனின் கூட்டத்திற்குள் யார் பெரியவர்                              என்ற உயர்வு தாழ்வு சொல்லிப் பிரித்து பிறகு                            அவர்களை வெற்றிகொள்வது                                       
3.தான                - பணத்தைக் கொடுத்து பகைவனை வழிக்குக்                             கொண்டு வருவது.

4.தண்டம்              - சண்டையிட்டு பகைவனை வெற்றி காண்பது.

இந்தியாவைப் பொறுத்தவரை ஆங்கிலேயர்களுக்கு மேற்குறிப்பிட்டவற்றில் சாம, தான, தண்டங்கள் அதிக அளவில் கை கொடுக்கவில்லை. ஆனால் பேதம் கைகொடுத்தது. ஆம் பல மத,மொழி,இன,கலாசார மாறுதல்களைக் கொண்ட இந்தியாவை பேதப்படுத்தித்தான் அவர்களால் கட்டுப்படுத்த முடிந்தது.ஒற்றுமையாய் இருந்த இந்தியாவை முதலில் மத அடிப்படையிலும் பிறகு மொழி, ஜாதி அடிப்படையிலும் பேதங்களை பரப்பி. மக்களை பிளவு படுத்தி கட்டுப்படுத்தினார்கள். ஆங்கிலேயர்கள் மிகச் சிறப்பாகக் கையாண்ட நமது பண்டைய   (ஆனால் இன்றும் கை கொடுக்கும்) யுக்தி இது.

ஆங்கிலேயர்கள் நமது தேசத்தை விட்டுச் சென்றுவிட்டாலும் அவர்களுக்கு சிறப்பாகக் கைகொடுத்த இந்த யுக்தியை ஆட்டுமந்தைகளான இந்த பாவப்பட்ட தேச மக்களிடமிருந்து வாக்குகளைப் பெற நமது அரசியல்வாதிகள் மேலும் விரிவுபடுத்தி சிறப்பாகவே செயல்படுத்தி வருகிறார்கள்.

பால்யக் கல்வியில் ஒரு பாடம் அனைவரும் படித்திருப்போம்.

ஒற்றுமையாக கூட்டணியாக இணைந்து செயல்படும் மாடுகளை வேட்டையாட முடியாத காட்டு விலங்குகள். மாடுகளுக்குள் நிறம், வண்ணம், கொம்பு, வலிமை போன்ற உயர்வு தாழ்வுகளைக் கூறி சிறு சிறு குழுவாகப் பிரித்து பின்னர் எளிதாக அவற்றை வேட்டையாடிவிடும்.

இந்தக் கதையை பள்ளியில் படிக்காது விட்டுவிட்டவன்  கூட அரசியல்வாதி ஆனவுடன் அரசியலில் பால பாடமாகப் பயின்றிருப்பான்.



தமிழர்களால் பேதப்படுத்தி நிராகரிக்கப்பட்ட பெரும்செல்வம் பெருந்தலைவர் காமராஜர்.


தன் இனம் என்பதற்காகவே தீவிரவாத அமைப்புகளுக்கு ஆதரவு கொடுத்து அதனால் ஏற்பட்ட பின்விளைவுகளால் பிறகு தன் இனம் அழிவதை தடுக்கத் திராணியின்றி வேடிக்கை பார்த்த வெக்கங்கெட்ட ஜென்மங்கள் உங்களைத் தேடிவருகிறார்கள் இப்போது. 

லட்சக்கணக்கான யூதர்களின் உயிரைப் பறித்த ஹிட்லர் போன்ற பல நாசகாரர்களையும் அவர்களின் தீவிரவாத அமைப்புகளுக்கு ஏற்பட்ட கதியை வரலாற்றில் பார்த்த பிறகும் இவர்களுக்கு ஏன் இந்த சிந்தனை வந்தது?

ஆங்கிலேயர்கள் தங்கள் தேசத்திற்கு செல்வங்களை கொள்ளையடித்துச் செல்ல இந்தியாவை ஆட்சி செய்தனர். இவர்கள் (தமிழக அரசியல்வாதிகள்) தன் இனம் அழிந்தாலும் தாங்கள் அதிகாரத்தில் அமர்ந்திருக்க வேண்டும் என்ற அரசியல் வெறி இந்தக் கயவர்களை இப்படி உந்துகிறது. அதுமட்டுமல்ல இன்னும் கொஞ்சம் தமிழர்கள் எஞ்சியிருக்கிறார்கள் இலங்கையில். இந்தப் பிரச்சிசையை ஆற விட்டால் தங்களை தமிழக மக்கள் மறந்துவிடுவார்கள் என்பதால் இன்னும் இலங்கைத் தமிழர்களின் வாழ்வுக்கு வழிகாட்டிகள் தாங்கள்தான் என்று கூறிவருகின்றனர். இந்தக் கயவர்களின் இத்தகைய அரசியலால் நமது மீனவர்கள் நாள்தோறும் செத்துமடிகின்றனர், நிம்மதியை இழந்துவிட்டனர். இலங்கைவாழ் தமிழர்களின் அடுத்த தலைமுறை இருந்தால்தானே இனி போராடுவார்கள் என்பதால் அங்கிருக்கும் தமிழச்சிகளின் கருப்பைகள் கசக்கி எறியப்படுகின்றன இந்த மாபாதகர்களின் அரசியலால்.

ராகுவால் ஆட்சி செய்யப்படும் இந்தியா உலகை இயக்கம் சக்திகளுள் ஒன்றாக மாறிவிட்டதை கடந்த வருட குருப்பெயர்ச்சி பற்றிய பதிவிலேயே பார்த்தோம். அதனால் இந்தியத் தலைமையை மீறி தமிழகத்து அரசியல்வாதிகளால் இலங்கை விஷயத்தில் எந்த ஐ.நா சபையிலும் சென்று எதுவும் செய்ய முடியாது என்பதே யதார்த்தமான உண்மை. தமிழகத்து அரசியல்வாதிகளைப் பொறுத்தவரை இலங்கை பிரச்சனை ஒரு நாட்டாமைச் சொம்பு. தற்போது அது ஜெயலலிதாவின் கையில் இருக்கிறது. அதை ஜெயலலிதா கீழே வைத்துவிட்டால் கருணாநிதி எடுத்துக் கொண்டுவிடுவார்  என்பது தெளிவு.


இந்த மானங்கெட்ட தமிழக அரசியல்வாதிகளின் கோமாளித்தனங்களை தேசிய கட்சிகள் எப்படி பார்க்கின்றன என்பதற்கு சமீபத்திய உதாரணம். தாங்கள் வெற்றிபெற்றுவிட்டால் தேசத்தின் பெயரை மாற்றுவோம் (தேசத்தின் தலைஎழுத்தை மாற்ற முடியாது என்பதை நினைத்தார்களோ என்னவோ) என்று கூறி வைத்தனர். ஆனால் இவர்கள் கூட்டணி வைத்த தேசியக் கட்சி இப்படி லூசுத்தனமாகவெல்லாம் பேசாதீர்கள் என்று கூறிவிட்டது. அது மட்டுமல்ல இலங்கையின் இறையாண்மையில் தலையிட மாட்டோம் என்பதையும் தெளிவாகவே அறிவித்துவிட்டது அனைவரும் அறிந்ததே. பொது சிவில் சட்டமும் கொண்டு வருவோம் என்று கூட அந்த தேசியக் கட்சி அறிவித்து விட்டது. இதிலெல்லாம் உடன்பாடில்லாத இந்தப் பிரிவினைவாதிகள் எதற்காக இன்னும் கூட்டணியில் நீடிக்கிறார்கள். காரணம் முன் சொன்னதே. வயிற்றுப் பிழைப்பல்ல அரசியலில் பிழைத்திருக்க வேண்டும் என்பதே.

இப்படிப்பட்ட தவறான அரசியல்வாதிகளைத் தவிர்த்து தேச மக்களின் ஒற்றுமையில் உண்மையான நலத்தில் வளர்ச்சியில் அக்கறை கொண்ட அரசியல்வாதிகளுக்கு வாக்களியுங்கள்.



விஜய் T.V. இல் ஜோதிடம் தொடர்பான ஒருநீயா நானா நிகழ்ச்சியில் அடுத்த பிதமர் யார் என்ற கேள்விக்கு வந்திருந்த ஜோதிடர்கள் அனைவரும் ஒரு துண்டு சீட்டில் பதில் எழுதி ஒரு பெட்டிக்குள் வைத்துள்ளார்கள். ஜெயலலிதா முதன்முதலில் முதலமைச்சராக ஆனபோது பிரபல ஜோதிடர் திரு.நம்புங்கள் நாராயணன் அவர்கள் ஜெயலலிதா,அவரை எதிர்த்து நின்ற வேட்பாளர்கள் ஆகியோரது ஜாதகங்களை ஆய்வு செய்து ஜெயலலிதா எத்தனை ஓட்டுகள் பெறுவார் எவ்வளவு வாக்கு வித்தியாசத்தில் வெல்வார் என்பது போன்ற துல்லியமான விபரங்களை ஓட்டு எண்ணிக்கைக்கு முன் INDIAN EXPRESS ல் பிரசுரித்திருந்ததை நாம் மறந்திருக்க மாட்டோம். தேர்தல் முடிவில் அது எப்படி துல்லியமாகப் பலித்தது என்பதும் அனைவுரும் அறிந்ததே. 

ஆனால் விஜய் T.V. ல் கேள்வி எழுந்தவுடன் ஜோதிடர்கள் துண்டு சீட்டில் எழுதிக்கொடுத்தது ஆச்சரியம் மட்டுமல்ல. வேதனையும் கூட. ஜோதிடத்தை இப்படிக் கேவலப்படுத்தக் கூடாது. எத்தனை பேர் அதில் மோடியின் ஜாதகத்தையாவது ஆய்வு செய்திருப்பர் என்பது தெரியவில்லை. 

செப்டம்பர் 17 1950 ல் பிறந்த மோடியின் ஜாதகம் என வலையுலகில் உலாவரும் ஜாதகத்தில் ஜனன நேரம் துல்லியமானதல்ல என்பது எனது எண்ணம். அது தெரியாமல் முடிவைக் கூற இயலாது. எனினும் மோடி 17 ஆம் தேதி பிறந்ததால் சனியின் அம்சம். ராகு சனியைப்போல் செயல்படும் என்பது அனைவரும் அறிந்ததே. அதனடிப்படையில் மோடிக்கு பிரதமராக வாய்ப்பு உண்டு. ராகுல் காந்தியும் மோடியும் ஒரே ராசியானாலும் ராகுலின் ஜாதகத்தில் மக்கள் செல்வாக்கைக் குறிக்கும் சனி நீச்சம் என்பதால் மக்கள் செல்வாக்கில்லாது நாட்டை ஆள முடியாது. அப்படி ஆனாலும் நீடிக்க முடியாது என்பது உறுதி.

சரி எந்தக் கட்சிக்கு வாக்களிப்பது?


எனது தனிப்பட்ட கருத்துக்களை வாசகர்களின் மீது திணிக்க விரும்பவில்லை எனினும் தற்போதைய நிலையில் மத்தியில் பி.ஜே.பி ஆட்சிக்கு வருவதே தேச நலனுக்கு உகந்தது. எனினும் தமிழகத்தில் பி.ஜே.பி கூட்டணிக்கு வாக்களிப்பது உகந்ததல்ல. தமிழகத்தில் அ.தி.மு.கவிற்கு வாக்களிப்பதே சிறந்தது. காரணம், காங்கிரஸ் ஆனாலும் பி.ஜே.பி ஆனாலும் தமிழகக் கட்சிகளை கோமாளிக் கூட்டங்களாகவே பார்க்கின்றன என்பது எனது கண்ணோட்டமல்ல, நடந்துகொண்டிருக்கும் உண்மை. தவறான பாதைக்குச் சென்றுவிட்ட தமிழக அரசியலில் அதன் மதிப்பை உயர்த்த முயன்றுகொண்டிருப்பவர் ஜெயலலிதா என்றால் அது மிகையல்ல. 

கற்பனை செய்து பாருங்கள். பி.ஜே.பி கூட்டணியிலுள்ள கட்சிகள் அதிக இடங்களில் வென்று அவர்களின் தயவு இன்றி ஆட்சி நடத்த முடியாது எனும் சூழ்நிலையில் இந்தக் கோமாளிகள் தங்கள் ஜாதிகளுக்கு ஒரு நாடு மொழிக்கு ஒரு தேசம் மதத்திற்கு ஒரு மாநிலம் என்று இந்த தேசத்தை துண்டாட முயல்வார்கள் என்பது உறுதி. இத்தகைய கோமாளிக் கூட்டங்களை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டுதான் இந்த தேசத்தை காங்கிரஸ் கட்சி  வெற்றிகரமாகச் சமாளித்துவந்தது. நாட்டின் வளர்ச்சியிலும் வெளியுறவுத் துறை, பாதுகாப்பு போன்ற விஷயங்களிலும் காங்கிரஸ் கட்சி வெற்றிகரமாகவே செயல்பட்டுள்ளது. ஆனால் உள்நாட்டில் இந்தக் கோமாளிக் கூட்டங்களின் தயவு வேண்டியிருந்ததால் செய்துகொண்ட சமரசத்தால் அது அனுபவித்த அவஸ்தைகள் ஒருபுறம் தனது கட்சிக் கயவர்களின்  சுரண்டல்களால் பட்ட அவஸ்தைகள் மறுபுறம் என படாத பாடு பட்டுள்ளது அது. திமுகவை பற்றி இங்கு குறிப்பிடாததற்கு அதன் கடந்தகால வரலாறுகள் அதை விமர்சிக்கக் கூட தகுதியில்லாதபடி மாற்றிவிட்டதே காரணமாகும்.

உலகில் வல்லரசான நாடுகள் பெரும்பாலானவை இருகட்சி ஜனநாயக அமைப்பைக் கொண்டவை என்பது நாம் கண்டுகொண்டிருக்கும் உண்மை. இந்த சிந்தனையை மீறி மக்கள் வாக்களித்தால் அதை எப்படிச் சமாளிப்பது என்பது காங்கிரசுக்கு கைவந்த கலை. டெல்லியில் மக்களின் முடிவு தவறு என்று மக்களாலேயே ஒப்புக்கொள்ள வைத்துவிட்ட காங்கிரசின் சாதுரியத்தைக் கொண்டு இதை தெளிவாக அறியலாம். 

நான் எந்தக் கட்சியையும் சாராதவன். அது மட்டுமல்ல ஒரு கட்சிக்காரன் என்று கூறிக்கொள்வதைக் கேவலமாக நினைப்பவன். ஒரு கட்சிக்காரன் என்று முத்திரை குத்திக்கொண்டு அந்தக் கட்சித் தலைமை செய்யும் கோமாளித்தனங்களை எல்லாம் ஆதரிப்பவனல்ல. போலி மத, இன, மொழிச்சார்ப்பின்மை பார்ப்பவனல்ல. மனிதர்களில் மானுடத்தை மட்டுமே பார்ப்பவன்.

வாக்களிப்பது நமது ஜனநாயகக் கடமை. நமது எதிர்கால வாழ்வோடு தொடர்புடைய வகையில் வாக்களியுங்கள். அன்றைக்கு அளிக்கப்படும் பணத்திற்கு வாக்களிக்காதீர்கள். அது அன்று மட்டுமே பலனளிக்கலாம். ஐந்தாண்டுகளுக்குப் புதிய அரசு நீடிக்கும் வகையில் வாக்களியுங்கள். தேச நலனில் அக்கறையோடு வாக்களியுங்கள். போலி மதவாதம் பேசி நம்மை பேதப்படுத்துபவர்களை இடதுகையால் ஒதுக்கித் தள்ளுங்கள்.

உண்மையாக வாக்களியுங்கள் ஆனால் உறுதியாக மத்தியில் பி.ஜே.பி கூட்டணிக்கும் மாநிலத்தில் அ.தி.மு.கவிற்கும்.

வாழ்த்துக்களுடன்,
அன்பன்,
பழனியப்பன்.

Sunday, 6 April 2014

சைவத் துறவியும் பௌத்தத் துறவியும்.

பண்டைய காலங்களில் ஜோதிடத்தை ஆய்வு செய்ய ஜோதிடர்களுக்கு வாழ்க்கைச்  சூழலில் சில வசதிகள் இருந்தன. ஒரு சிறிய கிராமத்தில் குறைந்த அளவு எண்ணிக்கை கொண்ட மக்களின் வாழ்வை கவனித்து அவர்களின் ஜாதக அமைப்பிற்கும் அவர்களின் வாழ்வியல் சம்பவங்களுக்கும் உள்ள தொடர்பை நுணுக்கமாகக் கவனித்து ஆராய்ந்து அவற்றை ஜோதிட நூல்களில் குறிப்பிட்டு வைத்துள்ளனர். பின்வரும் சம்பவத்தை மனதில் கற்பனை செய்யுங்கள்.

ஒரு கிராமத்திற்கு சைவத் துறவி ஒருவர் வருகிறார். அவரது பற்றற்ற வாழ்க்கை முறையில் கவரப்பட்டு ஒரு சிலர் இல்லற வாழ்வை வேண்டாமெனத் தீர்மானித்து அவரது சீடர்களாக மாறிவிடுகின்றனர். இந்நிலையில் சீடர்களின் பெற்றோரின் மன்றாடலை செவி சாய்க்காத அவர்களது ஜாதகத்தை ஜோதிடரிடம் பெற்றோர் எடுத்துச் சென்று ஆலோசிக்கின்றனர். அப்போது அப்படி சீடர்களான பெரும்பாலோரின் ஜாதகத்தில் ஒரு குறிப்பிட்ட கிரக அமைப்பு இருப்பதை கவனிக்கின்றனர் ஜோதிடர்கள். அந்த கிரக அமைப்பை ஒட்டியே அவர்களது வாழ்க்கைச் சூழ்நிலை அமையும் என்பதை தீர்மானித்து ஜோதிடர் சீடர்களின் துறவு வாழ்க்கைக்கான காரணங்களை விளக்குகிறார்.

பண்டைய ஜோதிட அறிஞர்களின் அந்த விளக்கங்களை உதாரண ஜாதகத்துடன் இங்கு காண்போம்.


1.சைவத்துறவி:

புதன் திசை இருப்பு 10 வருடம்  11 மாதம்  23 நாட்கள்.

மேற்கண்ட ஜாதகம் திருமணத்தை எதிர் நோக்கிக் காத்திருக்கும் ஒரு பெண்ணின் ஜாதகம்.  

இந்த கடக லக்ன ஜாதகத்தில் சந்திரன் லக்னத்திலேயே ஆட்சியில் உள்ளார். ஜாதகரை அவர் எந்த சூழ்நிலையிலும் காப்பாற்றுவார் என்பது உறுதி. குடும்ப காரகன் குரு நீச்சமாகி குடும்பம் அமைவதை தடை செய்கிறார். இல்லற வாழ்வுக்கு எதிராகச் செயல்படும் கிரகம் சூரியன் இல்லறத்தோடு தொடர்புடைய ஏழாம் பாவத்தில் அமைந்து அதில் நாட்டத்தைக் குறைக்கிறார். தாம்பத்திய சுகத்தைக் குறிக்கும் 12 ஆம் பாவாதிபதி புதன் ஏழில் நீச குரு, சூரியனுடன்  அமைந்ததும் தோஷமே. சனி 5 ல் அமைந்த ஜாதகருக்கு இல்லறம் சுகப்படாது என்பதோடு ஆன்மீக சிந்தனை எழ அது அடிகோலுகிறது. மேலும் 5 ஆமிட சனி புத்திர பாக்கியத்தையும் குருவின் வலிமையை ஒட்டி தடை செய்வார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. மேற்குறிப்பிட்ட கிரக அமைப்புகள் யாவையும் இல்லறத்தில் நாட்டமற்ற, பற்றுதலற்ற வாழ்க்கைச் சூழல் ஜாதகிக்கு அமையும் என்பதைக் குறிக்கும்.

ஏழில் குருவும் புதனும் அமைந்ததால் ஜாதகி போதனை புரியும் ஆற்றலுடையவர் என்பது விளங்குகிறது (ஜாதகி தற்போது தனியார் பள்ளி ஆசிரியை).

சந்திரன் புதனின் நட்சத்திரமான ஆயில்ய நட்சத்திரத்திலும் புதன் சந்திரனின் நட்சத்திரமான திருவோண நட்சத்திரத்திலும் உள்ளனர். சந்திரனின் நட்சத்திரத்தில் அமைந்த கிரகத்தை சனி மட்டுமே பார்ப்பது துறவி யோகங்களில் ஒன்று. மேற்கண்ட ஜாதகத்தில் சந்திரனின் நட்சத்திரமான திருவோண நட்சத்திரத்தில் அமைந்த புதனை சனி மட்டுமே பார்க்கிறார். சந்திரனின் இயல்பைக் கொண்டு ஜாதகர் சைவ வழிபாட்டு முறையை ஏற்றுக்கொண்டவர் என்பதை தீர்மானிக்கலாம்.

இத்தகைய அமைப்பை துல்லியமாகக் கவனித்து அதை துறவி யோகமான பரிவராஜ யோகங்களுள் ஒன்றாகக் கணக்கிட்டுள்ளனர்  நமது பண்டைய ஜோதிட சிகாமணிகள்.

சந்திரன் ஆட்சியில் உள்ளதும்  குருவின் வீட்டில் ஒரு உச்ச கிரகம் இல்லற இன்பத்திற்கு அதிபதி சுக்கிரன் அமைத்து குருவின் நீச தோஷத்திலிருந்து விடுபட வைக்கிறார். உச்ச சுக்கிரனுடன் மாங்கல்ய காரகன் செவ்வாய் இணைந்திருப்பதும் ஜாதகியின் திருமண வாழ்வை உறுதி செய்கிறது. தற்போது ஜெய வருஷம் ஆனி மாதம் (2014 ஜூன்)  குரு கடக ராசியில் உச்சமானவுடன் ஜாதகிக்கு ஜனன காலத்தில் ஏற்பட்ட தோஷம் விலகும் பிறகு திருமணம் நடக்கும் என்பதை அனுமானிக்கலாம். இதை திசா புக்திகளைக் கொண்டு உறுதி செய்துகொள்ள வேண்டும்.

2.பௌத்தத் துறவி

கேது திசை இருப்பு 3வருடம்  5 மாதம்  19 நாட்கள்.

இந்த இரண்டாவது ஜாதகம் மற்றொரு பெண்ணினுடையது.

ரிஷப லக்னத்திற்கு ஆறில் சூரியன் நீசமாகி அதனுடன் குடும்ப பாவதிபதி புதனும் இல்லற இன்பத்திற்கு அதிபதி சுக்கிரனும் வக்கிரகதியில் மறைவு ஸ்தானத்தில்  கூடி நின்றது ஜாதகியின் இல்லறச் சிந்தனையைத் தகர்த்தது. 5 ல் நின்ற கேது ஜாதகியின் ஆன்மீக நாட்டத்தைத் தூண்டுகிறார். லக்னத்திற்கு 12ல் சந்திரன் மறைவு. சந்திரன் நின்ற மேஷத்திற்கு  பாதக ஸ்தானமான  11ஆம் இடத்தில் குரு நின்று குடும்ப வாழ்வை ஜாதகிக்கு மறுக்கிறார். லக்னத்திற்கு 7 ஆமிடத்தில் ரிஷபத்திற்கு யோக காரனும்  தர்ம கர்மாதிபதியான சனி நின்றது திருமண வாழ்வைத் தடை செய்யமாட்டார். ராசிக்கு 7 ஆமிடம்தான் கடுமையாகக் கெட்டது.

இந்த ஜாதகத்தில் மனோகாரகன் சந்திரன் ஞானகாரகன் கேதுவின் அஸ்வினி நக்ஷத்திரத்தில் நின்றதும்,  சந்திரனுக்கு வீடு கொடுத்த செவ்வாய் உச்சமடைந்தாலும் அந்தச் செவ்வாய் சனியால் மட்டுமே பார்க்கப்படுவதும் துறவி யோகமான பரிவராஜா யோகங்களுள்  மற்றொரு வகை.

ஜாதகிக்கு துறவி யோகமுள்ளது சரி. அவர் எப்படி பௌத்தத் துறவி ஆனார்?

சிவப்பு நிறத்திற்கு உரிய செவ்வாயை சனி பார்ப்பதால் ஜாதகி சிவப்பு நிறத்தை தனது வழிபாட்டில் பயன்படுத்த வேண்டும். பண்டைய காலத்தில் பௌத்தத் துறவிகளின் ஜாதகங்களை ஆராய்ந்ததில் இந்த அமைப்பு உள்ளது கண்டறியப்பட்டது. பௌத்தத் துறவிகள் அடர் காவி வண்ணத்தை அங்கியாக அணிவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. ஆனால் நமது ஜாதகி பௌத்தத் துறவி அல்ல. சிவப்பு வண்ண நட்சத்திர வடிவத்தை தங்களது தியானத்திற்கும் வழிபாட்டிற்கும் பயன்படுத்தும் பிரம்ம குமாரிகள் அமைப்பில் துறவு வாழ்வை ஏற்றுக்கொண்டுள்ளார்.


பிரம்ம குமாரிகளின் முத்திரைச் சின்னம்




யார் யார் எத்தகைய வாழ்வியல் சூழ்நிலையில் இருக்க வேண்டும் என்பதை இறைவன் தீர்மானிக்கிறான் என்பதை இது போன்று ஜாதகங்களை ஆராய்ந்து அறிந்துகொள்ளலாம். அதனால் மனம் பண்படும். வாழ்வில் நிதர்சனங்கள் புரியும். வேதனைகளையும் அனுபவித்து எற்றுக்கொள்ளும் மனோபாவம் வளரும். அதனால் மானிடம் சிறக்கும். இதுவே ஜோதிடத்தின் சக்தி.

அடுத்த வாரப் பதிவு: யாருக்கு ஏன் எதற்கு வாக்களிக்க வேண்டும்?  

வாழ்த்துக்களுடன்,
அன்பன்,
பழனியப்பன்.

Sunday, 2 March 2014

நவாம்ச சக்கரத்தின் நுட்பங்கள்.

ஒரு மனிதனின் வாழ்வின் சம்பவங்களை ஜாதகக் கட்டத்தில் உள்ள 12 பாவங்கள் அதன் அதிபதிகள் மற்றும் தொடர்புடைய காரக கிரகங்களைக் கொண்டு அறியலாம்.

ஒரு பெண்ணின் மாதவிடாய் தொடர்புடைய விபரங்களை  5 ஆமிடம் அதன் அதிபதி ஆகியவற்றைக் கொண்டு அறியலாம். பெண் இயல்பை நிர்ணயிப்பதில் காரகன் சுக்கிரனுக்கு முக்கிய பொறுப்பு உண்டு. பெண்ணின் மாதவிடாயின் ஒழுங்கை செவ்வாய் நிர்ணயிக்கிறார். செவ்வாயை மாதவிடாய் காரகன் எனலாம். அவளுடைய குழந்தை பாக்கியத்தை குரு நிர்ணயிக்கிறார்.


மேற்கண்ட மகர லக்ன ஜாதகம்  7 நிமிட இடைவெளியில் பிறந்த இரட்டைப் பெண் குழந்தைகளில் முதல் பெண்ணின் ஜாதகம். பெண்ணின் மாதவிடாய் சுழற்சியில் முக்கிய பங்கு வகிக்கும் செவ்வாய் நீசமாகி வர்கோத்தமம் பெற்றதாலும்  ஐந்தாம் பாவதிபதி சுக்கிரன் குருவின்  பார்வை பெற்றதாலும்  ஜாதகியின் மாதவிடாய் சுழற்சியில் பாதிப்பில்லை.
நவாம்சத்தில் செவ்வாய் மற்றும் சுக்கிரனும் வர்கோத்தமம்  பெற்று வலுவாகவே உள்ளனர். புதன் நவாம்சத்தில் 5 ஆம் பாவதிபதி ஆகி நீசம் பெற்றது ஜாதகி படிப்பில் கெட்டிக்காரர் என்பதைக் குறிப்பிடும் அதே நேரம் அவர் உயர் கல்வி பெறும் நிலையில் கடின சூழ்நிலைகளைக் கடந்தாக வேண்டும் என்பதையும் குறிப்பிடுகிறது. ஐந்தாமிடம் ஒருவரது நுண்ணறிவைக் குறிப்பிடுவதாகும். 9 ஆம் பாவம் உயர் கல்வியை குறிக்கும். 


இந்த இரண்டாவது ஜாதகம் 7 நிமிடத்திற்குப் பின் பிறந்த ஜாதகியின் தங்கையுடையது.

முதல் ஜாதகத்தை ஒப்பிடும்போது 2வது ஜாதகத்தில் நவாம்ச லக்னம் மட்டும் மாறியுள்ளது. உச்சமாகி வக்ரமடைந்த கிரகம் நீசத்திற்கு ஒப்பான பலனைத் தரவேண்டும் என்ற விதியின் அடிப்படையில் நவாம்சத்தில் 5 ஆமிடத்தில் உள்ள சனி கெடுபலனைத் தரவேண்டியவராகிறார். இந்த ஜாதகிக்கு மாதவிடாய் சுழற்சியில் குறைபாடு உள்ளது. கல்வியில் சுமார்தான். நுண்ணறிவு இல்லை.  இந்த இரண்டிற்கும் காரணம் நவாம்சத்தில் ஐந்தாமிடத்தில் தோஷ நிலையில் அமைத்த சனிதான். முதல் ஜாதகத்தில் நவாம்சத்தில் ஆறாமிடத்தில் அமர்ந்து கெட்ட சனி நன்மையே செய்வார். ஆனால் இரண்டாம் ஜாதகத்தில் நவாம்சத்தில்  சனி புத்திர ஸ்தானமான 5 ஆமிடத்தில் அமைந்ததால் ஜாதகிக்கு தோஷத்தை கொடுக்க வேண்டியவராகிறார்.   

இரு ஜாதகத்திலும் மாதுல காரகன் (தாய் மாமனைக் குறிப்பிடும் கிரகம்) 
புதன் நீசமானது ஜாதகிகளின்  தாய்மாமன் வாழ்வில் படும் துயரங்களைக் குறிப்பிடுகிறது. 


இந்த 3 ஆவது  ஜாதகம் ஒரு பெண்ணின் ஜாதகம்.

இப்பெண்ணின் ஜாதகத்தில்  2 ஆமதிபதியும் குடும்ப காரனுமான  குரு ராசியிலும் நவாம்சத்திலும் உச்சமானது சிறப்பு. நவாம்சத்தில் குரு உச்சமடைந்தது 2 ஆம் பாவமாக அமைந்தது அதனினும் சிறப்பு. 2 ஆம் பாவத்தில்  ராசியில்  2ல் நீசமடைந்து நவாம்சத்திலும் உச்சன் குருவுடன் கூடியதால்   புதன் தனது நீசத்திலிருந்து விடுபட்டார். நவாம்சத்திலும் மண வாழ்வைக் குறிக்கும் பாவங்களான 2,7 பாவங்கள் நல்ல நிலையிலேயே அமைந்துள்ளது. ராசியிலும் நவாம்சத்திலும் 2 ஆமிடத்தோடு தொடர்புடைய மாதுல காரகன்  புதனால் ஜாதகி தனது தாய் மாமனை மனம் புரிந்தார். புதன் வித்யா காரகனும் ஆவதால் ஜாதகி  பள்ளி ஆசிரியையாகப் பணிபுரிகிறார். ராசியில் 2லும் நவாம்சத்தில் ஜீவன ஸ்தானமான 10லும் சூரியன் சம்மந்தப்பட்டதால்   ஜாதகிக்கு அரசுப் பணி அமைந்தது.


முந்தைய பெண்மணியின் ஜாதக அமைப்புகளைக் கொண்ட ஒரு ஆணின் ஜாதகம் இந்த நான்காவது ஜாதகம். அதே ஆண்டில் பிறந்தவர்.

குடும்பம் அமைவதைக் குறிப்பிடும் 2வது பாவம் லக்னாதிபதி சனி அமர்ந்ததால் கெட்டது. 2 ஆம் அதிபதியும் குடும்ப காரகனுமான  குரு உச்சமடைந்ததால் அவர் தனது பாவத்தையும் உயர்வடையச் செய்ய வேண்டும். ஆனால் குருவுக்கு வீடு கொடுத்த 6 ஆமதிபதி சந்திரன் உச்சமடைந்ததால் குருவானவர் சந்திரனை மீறிச் செயல்பட முடியாது. எனவே குருவால் குடும்பத்தை அமைத்துத் தர  இயலவில்லை. ஆனால் காரகத்தின் அடிப்படையில் குரு ஜாதகரை செல்வந்தராக்கியுள்ளார். மேலும் 7ஆமதிபதி 6 ஆமதிபதியுடன் ஒன்று சேர்வது மனைவி குடும்பத்திற்கு வருவதைத் தடுக்கும் அமைப்பாகும்.

நவாம்சத்தில் 2 மற்றும் 7 ஆம் பாவத்திற்கு அதிபதி செவ்வாய் நீசமானது ஜாதகருக்கு குடும்பம் அமையாது என்பதை உறுதி செய்கிறது. இது சகோதரத்தாலும் ஜாதகரின் உறுதியற்ற குணத்தாலும் அவருக்கு குடும்பம் அமையாது என்பதை குறிப்பிடுகிறது. நடந்ததும் அப்படியே.



மேற்கண்ட 5 ஆவது ஜாதகம் ஒரு ஆணினுடையது.

லக்னத்திற்கு புத்திர பாவமான 5 ஆமதிபதி செவ்வாய் 8 ல் நீசமாகி ராகுவுடன் சேர்ந்து கெட்டு மறைந்துவிட்டார். ராசிக்கு புத்திர ஸ்தானமான 5 ஆமிடம் செவ்வாய் ராகுவால் கெட்டதும் புத்திர வகையில் பாதிப்பை தரக்கூடியதே.  புத்திர காரகன் குரு 3 மறைந்துவிட்டார். 3 ஆமிடம் 5 ஆம் பாவத்திற்கு பாதக ஸ்தானம் (சர பாவமான மேஷத்திற்கு பாதக ஸ்தானமான 11 பாவத்தில் கும்பத்தில் குரு அமைந்த அமைப்பு) என்பது இங்கு கவனிக்கத்தக்கது. இதனடிப்படையில் பார்த்தால் ஜாதகரின் புத்திர பாக்கியம் கேள்விக்குறியே என்று சொல்லத் தோன்றும்.

ஜாதகருக்கு 2 புதல்விகள். எப்படி?

நீசமான செவ்வாய்க்கு வீடு கொடுத்த சந்திரன் பூரட்டாதி 4 ல் குரு சாரத்தில் நின்று புனிதமடைகிறார். பொதுவாகவே ஒரு கிரகத்தின் சாரத்தில் (நட்சத்திரத்தில்) அமையும் கிரகங்கள் அதன் நட்சத்திராதிபதி கிரகத்தின் காரகத்தை வலுவுடன் காக்கும்.

இது ஒரு சூட்சுமமான முக்கிய விதி. ஜோதிடத்தில் இப்படி எண்ணற்ற விதிகள் உள்ளன. அணைத்தையும் ஒரு சேர கவனத்தில் கொள்வதுதான் ஜோதிடர்களுக்குச் சிரமமான வேலை. இதில் தேர்ந்தவரே ஜோதிட வித்தகர் ஆவார்.

மேற்கண்ட விதியினடிப்படியில் சந்திரன் செயல்பட்டு தனது பாவத்தில் நீசமான புத்திர ஸ்தானாதிபதியும்  நண்பனுமான செவ்வாயை வலுவூட்டுகிறார். அதனால் ஜாதகருக்கு புத்திரம் ஏற்பட்டது. மேலும் நவாம்சத்தில் செவ்வாய் லக்னாதிபதி குருவுடன் அவரது ஆட்சி வீட்டில் அமைந்தது புத்திர வகையில் பாக்கியக் குறைவை ஏற்படுத்தவில்லை. நவாம்சத்தில் 5 ஆமதிபதி சனி மேஷத்தில் நீசமானாலும் அங்கு உச்சமடைந்த சூரியனால் நீச பங்கமும் ஏற்பட்டுவிட்டது. 5 ஆம் பாவாதிபதி செவ்வாய் பெண் கிரகமான சந்திரனது வீட்டில் அமைந்து சந்திரனாலும் வலுவடைந்ததால் ஜாதகருக்கு இரு குழந்தைகள். இருவருமே பெண்கள்.

5 ஆம் பாவத்திற்கு 3 ஆம் பாவமான 7 ஆம் பாவம் 2 ஆவது குழந்தையைக் குறிக்கும். 7 ஆமிடத்திற்க்கு குரு  பார்வை ஏற்பட்டதால் 2 ஆவது குழந்தை பாக்கியமும் கிட்டியது. செவ்வாயுடன் ராகு ஒரு பாவத்தில் சேர்ந்தால் அங்கு இருவருமே வலுவடைவர் என்பது ஒரு நுட்பம். ஆனால் அதன் பாதிப்பை ஜாதகர் அனுபவித்துத்தான் ஆக வேண்டும். ஜாதகர் செவ்வாயின் காரகத்தின் அடிப்படையில் பூமி (நிலம்) வகையில் கடனுக்காக விரையம் செய்தார் என்பது வருந்தத்தக்க உண்மை.  ஆனால் குரு மற்றும் சந்திரனால் புத்திர பாக்கியத்திற்கு குறைவு ஏற்படவில்லை.


இந்த ஆறாவது ஜாதகமும் ஒரு ஆணினுடையது

5 ஆமிடத்தில் புதன் உச்சமானால் ஜாதகரின் முதல் மனைவிக்கு குழந்தை பாக்கியம் கிட்டாது. இரண்டாவது மனைவிக்கு குழந்தை பாக்கியம் கிட்டும் என்றொரு விதி ஜோதிடத்தில் உண்டு. ஆனால் ஜாதகருக்கு லக்னாதிபதியும் ஆறாம் அதிபதியுமான சுக்கிரன் நவாம்சத்தில் நீசம். நவாம்சத்தில் வீரிய ஸ்தானமான 3 ஆமிடத்தில் லக்னாதிபதி சூரியன் நீசமாகி அதன் அதிபதி சுக்கிரனும் நீசமானது ஜாதகரின்  வீரியமின்மையைக் குறிப்பதோடு ஜாதகருக்கு இரண்டாவது மணம் செய்யுமளவுக்கு இல்லறத்தில் நாட்டம் இராது என்பதைக் குறிக்கிறது. ஜாதகர் ஏக பத்தினி விரதன்.  கௌரவமான வாழ்வைக் கொண்டிருந்தாலும் குழந்தை பாக்கியம் கிட்டவில்லை.

மேற்கண்ட ஜாதக அமைப்புகளில் இருந்து நவாம்சத்தை அளவிடுவது எவ்வளவு முக்கியம் என்று புரிந்து கொள்ளலாம். ராசியில் மறுக்கப்பட்ட ஒரு பாக்கியம் நவாம்சத்தில் உறுதி செய்யப்பட்டால் தாமதமாகவேணும் அந்த பாக்கியம் ஜாதகருக்குக் கிடைத்துவிடும். ஆனால் நவாம்சமும் கெட்டுவிட்டால் குறிப்பிட்ட அந்த பாக்கியம் ஜாதகருக்கு மறுக்கப்பட்டுள்ளதாகத்தான் அர்த்தம் கொள்ளவேண்டும். நவாம்சம் பற்றிய இன்னும் பல நுட்பமான முறைகளை வேறொரு  சந்தர்ப்பத்தில் காண்போம்.

அடுத்த பதிவு: சைவத் துறவியும் பௌத்தத் துறவியும்.

வாழ்த்துக்களுடன்,
அன்பன்,
பழனியப்பன். 


வேண்டுகோள்:  ஆலோசணைகளுக்காகத் தொடர்பு கொள்வோர் அற்பக் காரணங்களுக்காக தொடர்பு கொள்ள வேண்டாம்  என பணிவுடன் வேண்டுகோள் விடுக்கிறேன். ஜோதிடத்தை வாழ்வில் உபயோகமான முறையில் பயன்படுத்த வேண்டும்.