Sunday, 22 March 2015

சுக்கிர,சந்திரர்கள் பெறும் திக் பலம்

திக்பலம் – பகுதி 2

முதல் பகுதியை படிக்காதவர்கள் இங்கு சென்று படித்துவிட்டு வந்து பிறகு தொடரவும்.


படைப்பின் சூட்சுமங்களை புரிந்துகொள்ள ஒரு ஜென்மம் போதாது. படைதவனின் கொடுப்பினை இருந்தால் மட்டுமே அது சாத்தியம். ஜோதிடம் அதற்கு உறுதுணை புரிவதால் விசேஷத்தன்மை பெறுகிறது.

ஜனன கால சுக்கிர திசை இருப்பு :10 வருஷம், 5 மாதம், 6 நாட்கள்.

மேற்கண்ட ஜாதகம்  ஒரு பெண்மணியின் ஜாதகம்.

ஜாதகி ஒரு சாதாரண அழகியல்ல. உலக இளைஞர்களெல்லோரையும் ஜொள்ளு விட வைக்கும் பேரழகி. ஆனால் என் போன்ற ஜோதிட ஆய்வாளர்களை பரவசப்படுத்திக்கொண்டிருப்பது அவரது ஜாதகம் என்றால் அது மிகையல்ல. பிறந்த தேதியை வைத்து ஜாதகியாரென்று ஊகிக்க இயலாதவர்கள் இறுதியில் தெரிந்து கொள்ளலாம்.

ஜோதிடர்களால் முன்னதாக பூட்ட கேஸ் என கைவிடப்பட்ட ஜாதகம்.ஜாதகி உலகப் புகழ் பெற்று  30 வயதை கடந்த பிறகும் கூட இவரது திருமண வாழ்க்கை பற்றி ஜோதிடர்களால் அறுதியிட்டு கூற இயலாத நிலையே நிலவியது எனில் இந்த ஜாதகத்தின் சிறப்பைப் பார்த்துக்கொள்ளுங்கள். ஜோதிடர்களுக்கு ராகுவின் செயல்பாடுகளை அறிந்துகொள்ள பெருமளவில் உதவிய ஜாதகம் இது.

லக்னத்திற்கு 4 ஆவது பாவத்தில் சுக்கிரனும் சந்திரனும் திக்பல வலிமையுடன் உள்ளனர். ராகுவிற்கு உள்ள விசேஷம் என்னவெனில் அவர் உடன் இணைந்த கிரகங்களின் கதிர்வீச்சை தூண்டிவிடுபவர். ராகுவின் இந்த தன்மையால் சந்திரன் மற்றுன் சுக்கிரனின் திக்பல வலிமை பன்மடங்காகியது. லக்னத்திற்கு சுகஸ்தானமான 4 ஆமிடம் அதீத வலிமை பெற்றதால் அந்த வீட்டிற்குடைய குருவும் வலிமை பெற்றாக வேண்டிய நிலையில் உள்ளார்.

ராகு-கேதுக்களுக்குடைய மற்றொரு விசேஷம் என்னவெனில் அவை உடன் இணையும் கிரகங்கள் மற்றும் அமரும் பாவதிபதிகளின் காரக மற்றும் ஆதிபத்திய வலிமையை தாங்கள் கவர்ந்துகொண்டு அக்கிரகங்கள் வழங்கவேண்டிய பலன்களையும் தங்களது திசா புக்தியில் வழங்குவர். அதனால் ராகு-கேதுக்களுடன் இவ்வாறு சம்மந்தம் பெரும் கிரகங்கள்  தங்கள் வலிமையை இழந்துவிடும்.

மேற்கண்ட  ஜாதகத்தில் நான்காமிடத்தின் வலிமை கூடியதால் ஜாதகி சுகவாழ்வு வாழ்கிறார். சுகவாழ்வுக்குத் தேவையான தனவரவும் வளமாகவே உள்ளது. லக்னம் சந்திரனின் நட்சத்திரமான ஹஸ்த நட்சத்திரத்தில் அமைந்துள்ளது. வளர்பிறைச் சந்திரன் அழகுணர்ச்சிக்கு அதிபதியாவார். சுக்கிரன் அழகு மற்றும் ஆடம்பரம் இவற்றிற்கு அதிபதியாவார். ராகு தனது சுபாவப்படி இவ்விரண்டு விஷயங்களில் ஜாதகிக்கு தூண்டுதலை அதிகமாக்கினார்.  . 

ராகுவின் அம்சங்கள் எவை என ஆராய்ந்தால் அதில் பாம்புகள்,அந்நிய இனத்தவர்.,முஸ்லீம்கள்,விதவைகள்ஆகியோரை குறிப்பிடலாம். இதில் மற்றொன்று அதீத அழகும் கவர்ச்சியும் கொண்ட இளம் வயதுப்பெண்களும் ராகுவின் அம்சம்தான்.  ராகு திசையோ புக்தியோ நடப்பில் இருப்பவர்களுக்கு ராகுவின் இத்தகைய அம்சங்களில் ஒன்றையாவது தமது வாழ்க்கை வட்டாரத்தில் அடிக்கடி தென்படுவதை உணரலாம். ராகுவின் அம்சமாக அமைந்த ஜாதிகியும் பேரழகியே. தனது கொடுப்பினையான அழகையே முதலீடாகக் கொண்டு மாடலிங் உலகில் நுழைந்தார் . பிற்பாடு திரை உலகிலும் நுழைந்து வெற்றிக்கொடி நாட்டினார். கோடி கோடியாகச் சம்பாத்தித்தார். சம்பாதித்துக் கொண்டு இருக்கிறார். உலகை தனது அழகால் வென்றவர் ஜாதகி.

ஜாதகத்தில் இரண்டாமிடத்தில் விரயாதிபதி சூரியன் நீச நிலையில் அமைந்து குடும்ப ஸ்தானத்தை தோஷப்படுத்துகிறார். மேலும் பெண்களுக்கு மாங்கல்ய பலத்தை வழங்கும் மாங்கல்யகாரகன் செவ்வாய் ஆட்சியில் இருந்தாலும் வக்கிரமாகிவிட்டதால் வலிமை இழந்தார். செவ்வாயை நீச சூரியன் பார்த்து செவ்வாய் தோஷத்தை மேலும் கடுமையாக்கினார்.

தனது காரகப்படி தனவரவிலும் ஆதிபத்தியப்படி சுகத்திலும் பாதிப்பை தரவேண்டிய பாதிப்பை குரு  தர இயலாதபடி ராகு தடை செய்துவிட்டார். ஆனால் இரண்டாமிடம் தோஷப்பட்டதாலும் குடும்ப காரகன் என்ற தனது மற்றொரு காரகத்தின்படியும் குரு ஜாதகியை கடுமையாகப் பாதித்துவிட்டார். இவ்விடத்தில் மற்றொரு ஜோதிட விதியும் செயல்படுவதை கவனிக்க வேண்டும். அது ஒரு கிரகம் தனது காரக அடிப்படையில் ஒரு ஜாதகருக்கு கடுமையான பாதிப்பை வழங்கிவிட்டால் அது தொடருடைய இதர விஷயங்களில் கடும் பாதிப்பை தரக்கூடாது என்பதே அது.

ஜாதகிக்கு குடும்பம் அமைவதை குரு பாதித்தாலும் ராகு குருவை கட்டுப்படுத்துவதால் தானே ஜாதிக்கு திருமணம் செய்து வைத்து ஜாதகி சுகப்படுவதை ராகு இந்த ஜாதகத்தில் உறுதி செய்கிறார். ஜாதகிக்கு அவரது 17 வயதில் திக்பலம் பெற்ற சந்திர திசை வந்தது. சந்திரன் சுகஸ்தானத்தோடு சம்பந்தம் பெற்றாலும் ராகுவிடம் தனது வலிமையை இழந்த சந்திரனால் ஜாதகிக்கு திருமணம் செய்துவைக்க இயலவில்லை. அடுத்துவந்த அஸ்டமாதிபதி செவ்வாயின் திசையிலும் ஜாதகிக்கு திருமணம் நடைபெறவில்லை. 08.04.2007 ல் ராகு பகவான் திசை துவங்கியது. 20.04.2007 ல் ஜாதகிக்கு திருமணம் நடந்தேறியது.

அற்புதமான திக்பலம் பெற்ற சுக்கிர சந்திரர்களால் நல்ல பலன்கள் கிடைத்தாலும் அவைகளின் செயல்பாடுகள் ராகுவால் கட்டுப்படுத்தப்பட்டதால் இந்த உலக அழகிக்கு அவரது 34 ஆவது வயதில்தான் ராகு தனது ஆதிக்க திசை துவங்கியதும் திருமணம் செய்து வைத்தார்.

ஜாதகி முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய்.

கீழே மற்றொரு ஆணின் ஜாதகம்.



ஜாதகத்தில் லக்னத்திற்கு நான்கில் சுக்கிரனும் சந்திரனும் உள்ளனர். சந்திரன் இதில் நீசம். இப்போது திக்பலம் எப்படி வேலை செய்யும் எனும் கேள்வி எழுகிறது.

சிற்றின்பத்திற்கு அதிபதியான சுக்கிரன் நீச நிலையில் உள்ள மனோகாரனான சந்திரனுடன் சுகஸ்தானத்தில் இணைந்ததால் ஜாதகரின் எண்ணமெல்லாம் சிற்றின்பத்திலேயே திளைக்கிறது. பார்க்கும் பெண்களெல்லாம் அனுபவிப்பதற்கே எனும் விபரீத எண்ணம் கொண்டவர் ஜாதகர்.

திக்பலம் பெறும் கிரகங்கள் நல்ல பலனை வழங்க வேண்டும் என்றால் அவை  பாவிகளின் பார்வை சேர்க்கை பெறாமலும் பகை – நீசம் பெறாமலும் இருக்க வேண்டியது அவசியம்.

அடுத்த பதிவு

லக்னத்தில் அமையும் குருவின் திக்பலம்.

வாழ்த்துக்களுடன்,
அன்பன்,
பழனியப்பன்.

Friday, 6 March 2015

சூரியனின் திக்பலம்

ஜாதகத்தில் கிரக மற்றும் பாவ வலுவை அளவிட 51 முறைகள் உள்ளதாக பண்டைய ஜோதிட  நூல்கள் கூறுகின்றன. அவற்றுள் திக்பலம்  பற்றி இங்கு காண்போம்.

எளிய முறையில் கூறுவதென்றால் சிங்கத்துக்கு வலிமை கரையில். முதலைக்கு வலிமை நீரில். இதே போன்று ஒவ்வொரு கிரகமும்  ஜாதகக் கட்டத்தில் கேந்திர ஸ்தானம் எனப்படும் 1, 4, 7, 10 ஆகிய பாவங்களில் பெறும் சிறப்பான  அல்லது சௌகரியமான நிலையையே திக்பலம் என ஜோதிடத்தில் கூறுகிறோம்.

ஒவ்வொரு கிரகமும் எவ்விடத்தில் திக்பலம் பெறுகின்றன என்பது பின்வருமாறு.

கிரகம்                                                 திக்பலம் பெறும் கேந்திர ஸ்தானம்.
புதன் & குரு                          -           1 ஆமிடம்  (லக்ன கேந்திரம்)

சந்திரன் &  சுக்கிரன்          -           4 ஆமிடம்  (சதுர்த்த கேந்திரம்)

சனி                                          -           7 ஆமிடம் (சப்தம கேந்திரம்)

சூரியன் & செவ்வாய்        -           10 ஆமிடம் (தசம கேந்திரம்)

ராகு-கேதுக்கள் இரண்டும் தாங்கள் அமையப்பெறும் பாவாதியின் நிலையை ஓட்டிச் செயல்படும் நிழல்கிரகங்கள் என்பதால் இவற்றிற்கு திக்பலம் கிடையாது.

இப்பதிவில் நாம் தசம கேந்திர திக்பலனை ஆராய்வோம்.


அரசனும் சேனாதிபதியும் அதிகத் துடிப்போது  செயல்படும் இடம் போர்க்களமாகும்.  வெல்லவேண்டும்  என்ற துடிப்பு இருவருக்கும் போர்க்களத்தில் அதீதமாக இருக்க வேண்டும். அந்த அடைப்படையில்தான் அரச கிரகம் எனப்படும் சூரியனுக்கும் சேனாதிபதி எனப்படும் செவ்வாய்க்கும் செயல் ஸ்தானமான 10 ஆமிடத்தை திக்பலம் கொண்டதாக ஜோதிடத்தில் வரையறுத்தார்கள். 


ஜனன கால சூரிய திசை இருப்பு: 4 வருஷம் 4 மாதம் 14 நாட்கள்.

ஜனன நேரத்தை இங்கு குறிப்பிடவில்லை . காரணம் அது சில விரும்பத்தகாத விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளதால்தான். எனினும் ஆய்வு ஜோதிடர்களுக்காக தசா இருப்பை குறிப்பிட்டுள்ளேன். அதைக்கொண்டு ஜனன நேரத்தை அறிந்து கொள்ளலாம். ஜாதகர் பிறந்தது ஜார்க்கண்டிலுள்ள ராஞ்சி.   

மேற்கண்ட ஜாதகத்திற்கு உரிய ஆணின் ஜாதகத்தில் செயல் ஸ்தானமான 10 ஆமிடத்தில் சூரியன் தனக்கே உரிய திக்பலத்துடன் சௌகரியமாக இருக்கிறார். சூரியன் அமைந்த தசம கேந்திரம் சூரியனின் ஆத்ம  நன்பணான புதனின் வீடாகும். அத்துடன் சூரியன் தன் நண்பன் புதனோடு இணைந்து அமைந்தது மிகச் சிறப்பு. போர்க்களத்தில் ஒரு அரசன் தன் நம்பிக்கைக்குரிய நண்பனோடு சேர்ந்து போரை சந்திப்பது போன்றது இது. அரசன் இதுபோன்ற சூழ்நிலையில் பதட்டமின்றி மிக வீரமுடனும் சாதுரியத்துடனும் போர்புரிய இது துணை புரியும். புதன் சாதுரியமான செயல்பாட்டிற்கு காரகத்துவம் பெற்ற கிரகம் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

சூரியன் அமைந்த மிதுன ராசி பஞ்ச பூத அமைப்பில் வாயு ராசி என்பதால் அரசன் வாயுவின் தன்மைக்கேற்றபடி சில சமயம் தீவிரமாகவும் சில சமயம் அலட்டலில்லாமலும் போர்புரிவான். இந்த ஜாதகரும் களத்தில் எத்தகைய சூழ்நிலையிலும் பதட்டமின்றி ஆனால் தீர்க்கமாகச் செயல்படுபவரே. வெற்றியை  மகிழ்வாய் எற்பவர். அதே சமயம் தோல்வி பெறும் நிலையிலும் கூட அசிங்கமாக அல்லாமல் கௌரவமாக ஏற்றுக்கொள்பவர். போரில் வெற்றி தோல்வி என்பது எதிர்பார்க்கக்கூடியதே. அரசன் (சூரியன்) சிறப்பாகப் செயல்பட்டாலும் ஜாதகரின் கன்னி லக்னத்திற்கு சூரியன் விரைய ஆதிபத்தியம் பெறுவதால் சில சமயம் தோல்வி தவிர்க்க இயலாததாகிவிடும். சில சமயம் மட்டுமே.  பல சமயம் தவிர்க்க இயலாமல் போனால் அவன் அரசனாக இருக்கவே தகுதியற்றவனாகி விடுவான் என்பதை கூறித்தான்  அறியவேண்டுமென்பதில்லை.

மேற்கண்ட ஜாதகர் அரசனல்ல. அரசு சார்பில் தலைமைப் பொறுப்பில் செயல்பட அனுமதிக்கப்பட்டவர். போர்க்களம் என்று குறிப்பிட்டது உண்மையில் போர்க்களமல்ல ஆடுகளம். அதுவும் கிரிக்கெட் ஆடுகளம். அரசனாகப் பொறுப்பை ஏற்றிருப்பவர் இந்திய அணித் தலைவர் மகேந்திரசிங்தோனி.

மேற்கு இந்திய அணியை தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் வென்ற தோனியையும் சக வீரர்களையும் ஊக்குவிப்போம்.

போரின் வெற்றியில்  அப்போரில் பங்குபெறும் மன்னர்களின் ஜாதகம்  முக்கிய பங்கு வகிக்கும் என்றாலும் போரில் பங்குபெறும் தேசங்களது  ஜாதக அமைப்பு மிக முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டும்.மேலும் சம்பவம் நிகழும் நாளின் கோட்சார நிலை மற்றும்  பங்குபெறும் இரு அணி வீரர்களின் ஜாதகமும் கவனமாக ஆராயப்பட வேண்டும். இவை அத்தனையையும் ஆராய்ந்து ஆட்டத்தின் முடிவை துல்லியமாக கூறிவிட  இயலும்.

இப்போது நாம் மலேசிய ஆக்டோபசிடமோ அல்லது நியூசிலாந்து கிளியிடமோ ஆஸ்திரேலியாவில் நடக்கும் 11 ஆவது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முடிவைத்தெரிந்துகொள்வோம்.  

மற்ற கிரகங்களின் திக்பலத்தை வேறொரு சந்தர்ப்பத்தில் ஆராய்வோம்.

வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன். 

Sunday, 1 February 2015

உங்களுக்கான தொழிலை தேர்ந்தெடுப்பது எப்படி?

தசாம்சமும் தொழிலும்

சுற்றுலாத்துறை:

ஜோதிட நுணுக்கங்கள் வலைப்பூ கடந்த ஜனவரி 23 முதல் தனது மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துககொள்கிறேன்.  பணிச்சுமை காரணமாக அடிக்கடி எழுத இயலாவிட்டாலும் உபயோகமாக மற்றும் ஆய்வுப்பூர்வமான பதிவுகள் தொடர்ந்து வரும் என்பதை உறுதியளிக்கிறேன். ஜோதிட ஆராய்ச்சியாளர்களுக்கான பதிவு இது. புரியாதவர்கள் அடிப்படையைப் புரிந்துகொண்டு தொடரவும்.

பாவச் சக்கரத்தைப் பற்றி எழுதிய போதே வர்க்கச் சக்கரங்களைப்பற்றி எழுதுமாறு பல்வேறு வாசகர்கள் வேண்டுகோள் விடுத்தனர். கிரகங்கள் நம் வாழ்வின் ஒவ்வொரு அங்கத்திலும் எப்படி செயல்படும் என்பதை அளவிடவே வர்க்கச் சக்கரங்கள். இவற்றில் 16 வகை  சக்கரங்கள் முதன்மையானவை. இவற்றை சோடசாம்சம் என்பர். ஒரு குறிப்பிட்ட சக்கரத்திலிருந்து அது தொடர்புடைய  விஷயத்தை மட்டுமே ஆராயவேண்டும் என இச்சக்கரங்களின் பயன்பாட்டை வரையறுத்த மகரிஷி பராசரர் தனது பராசர ஹோராவில் குறிப்பிட்டுள்ளார். ஆனால் திருமணம் தொடர்புடையவற்றிற்காக மட்டும் ஆராய வேண்டிய நவாம்சத்தை கிரக வலுவை மதிப்பிட இன்று ஜோதிடர்கள் அனைவரும் பயன்படுத்துகிறோம். (பயன்பாட்டிலும் இது சரியாகவே வருவது இங்கு குறிப்பிடத்தக்கது.)

பத்தாமிடாதிபதியின் வலுவை அளவிட நவாம்சச் சக்கரத்தோடு தசாம்சச் சக்கரத்தையும் கவனிக்கவேண்டும். தசாம்சமானது ஒருவரது சுய முயற்சியால் வேலையில் பெறும் மகிழ்ச்சியையும் ஜாதகரது கர்மாவையும் குறிப்பிடும்.

தசாம்சச் சக்கரத்தின் விசேஷங்கள்.

1.தசாம்ச சக்கரத்தில் முயற்சியைக் குறிக்கும் மூன்றாவது பாவமும் அதன் கேந்திரங்களான 6, 9, 12 ஆம் பாவங்களும் முக்கியமானவை. இதன் அதிபதிகளும் இந்த பாவங்களில் அமையும் ராசிக்கட்டத்தின் 3 மற்றும் 10 ஆமதிபதிகளும் மிகுந்த நன்மையைச் செய்யும்.

2.தசாம்சக் கட்டத்தில் 10 ஆமிடத்தில் அமையும் கிரகங்கள் அவை சுபக்கிரகங்களானாலும் பாவக் கிரகங்களானாலும் நன்மையையே செய்யும்.

3. கேந்திர ஸ்தானம் எனப்படும் நன்மை செய்யும் சுகஸ்தானமான  நான்காமிடம் தொழிலைப் பொறுத்தவரை தடைகளையும் தாமதத்தையும் உருவாக்குவதாகும். காரணம் நான்காமிடம் சுகத்தைக் குறிப்பது 10 ஆமிடம் செயலைக் குறிப்பது. ஒருவர் செயல்படாமல் சுகமாக அமர்ந்துவிட்டால் அங்கு அவரது செயல்பாடு பாதிக்கப்படும் என்பது இதன் அடிப்படையாகும். தசாம்ச சக்கரத்தில் நான்காமிடத்தில் அமையும் பாவக் கிரகங்கள் தீமையையே செய்யும்.


16 வகை சோடச வர்க்கச் சக்கரங்களில் எந்த சக்கரத்திலிருந்து எதை அறிவது என்பதை காண்போம்.

1.ராசி                 -    மெய், நிறம், தோற்றம்
2.ஹோரா             -    செல்வநிலை
3.திரேக்காணம்        -    சகோதரன், சகோதரி
4.சப்தாம்சம்           -    குழந்தைகள்
5.நவாம்சம்           -     கணவன் அல்லது மனைவி
6.தசாம்சம்            -    தொழில்
7.துவாதசாம்சம்       -    பெற்றோர்
8.திரிம்சாம்சம்         -    விதி
9.சோடசாம்சம்        -    வாகனம்
10.சஷ்டியாம்சம்       -    பொதுப்பலன் (தசாபுக்தி பலன்)
11.சதுர்த்தாசம்         -    அதிஷ்டம்
12.விம்சாம்சம்         -    கடவுள் நம்பிக்கை, குலதெய்வம், பக்தி
13.சதுர்விம்சாம்சம்     -    கல்வி
14.பம்சாம்சம்          -    உடல் வலிமை
15.சுவேதாம்சம்        -    சுகம்
16.அக்ஷவேதாம்சம்    -    குணம்


நான்காமிடம் ஒருவரின் இருப்பிடத்தைக் குறிக்கிறது. 12 ஆமிடம் அயனம் எனப்படும் நகர்தலைக் குறிப்பிடும். மேற்கண்ட ஜாதகத்தில் ராசிக்கட்டத்தில் 12 ஆமிடாதிபதி செவ்வாய் வாகன காரகன் சுக்கிரனோடு சேர்ந்து நான்காமிடத்தில் சிம்மத்தில் உள்ளது. இதனால் ஜாதகர் ஓரிடத்தில் நிலையாக அமர்ந்து தொழிலை செய்ய இயலாது என்பது இதன் பொருளாகும்.  ஜீவன காரகன் சனி விரைவான செயல்பாட்டைக் குறிக்கும் சர ராசியாதிபதி சந்திரனுடன் இணைந்துள்ளார். ஜாதகர் வாகனச் சுற்றுலா தொழிலை மேற்கொண்டுள்ளார்.

இதை தசாம்சச் சக்கரத்தை வைத்து ஆராய்வோம்.

தசாம்சச் சக்கரத்தில் முயற்சியைக் குறிக்கும் மூன்றாமிடத்தில் ஆன்மீகக் கிரகங்களான குருவும் கேதுவும் நன்கு அமைந்துள்ளனர். (ஜாதகர் திருப்பதிக்கு பக்தர்களை அழைத்துச் செல்லும்  ஆன்மீக சுற்றுலா நிறுவனம் நடத்துகிறார். மேலும் குரு ராசி, நவாம்சம் & தசாம்சத்திலும் வர்கோத்தமத்தில் உள்ளது கவனிக்கத்தக்கது. மூன்றாமதிபதி செவ்வாய் ஆட்சியில் உள்ளது சிறப்பு.  6 ஆமதிபதி சனி பகவான்  6 க்கு 12 ல் அமர்ந்தாலும் ஆட்சியில் உள்ளார். 2 மற்றும் 9 ஆமதிபதியும் வாகனம், சுற்றுலா இவற்றிற்கு காரகனுமான சுக்கிரன் பணவரவைக் குறிக்கும் இரண்டாவது பாவமான துலாத்தில் ஆட்சியில் உள்ளது இந்த வகையில் வருமானம் வரவேண்டும் என்பதை உறுதி செய்கிறது. துலாராசியும் ஒரு சர ராசி என்பது இங்கு கவனிக்கத்தக்கது. 12 ஆமதிபதியும் விரையாபதியுமான சூரியன் 3 ஆவது பாவத்திற்கு கேந்திராதிபதியாவதால் நன்மையைச் செய்யவேண்டும் ஆனால் தசாம்சத்தில் 4 ஆவது பாவத்தில் அமையும் பாவக்கிரகம் தீமையைச் செய்ய வேண்டும் என்பதால் சூரியன் தீமையையும் கலந்தே செய்யவேண்டியவராகிறார். 

ராசிச்சக்கரத்தின்  3 ஆம் பாவாதிபதி சந்திரன் தசாம்சத்தில் 8ல் மறைந்தாலும் சுக்கிரனின் பார்வை பெறுவது சிறப்பு அத்துடன் சந்திரனுக்கு கேந்திரத்தில் லக்னாதிபதியும் 10 ஆமதியுமான புதன் அமைந்தது ஜாதகரின் தொழில் ரீதியிலான முயற்சி, விருப்பம் மற்றும் கர்மாவையும் தெளிவாக விளக்குகிறது.

வர்க்கச் சக்கரங்களைப் போடவும் ஆராயவும் மிகுந்த நேரம் பிடிக்கும் என்பதாலும் அப்படி கால அவகாசமெடுத்து கணிக்குமளவுக்கு ஜோதிடனுக்கு தட்சிணை தரப்படுவதில்லை என்பதாலும் 90 சதவீத ஜோதிடர்கள் ராசி மற்றும் நவாம்சத்தோடு நின்றுவிடுகின்றனர். இன்று ஜாதகங்களைக் கணிக்க கணினிகள் பயன்படுகின்றன என்பதால் ஜோதிடர்கள் இனி வர்க்கச் சக்கரங்களைப் பயன்படுத்தலாம்.

ஆனால் இப்படி வர்க்கச் சக்கரங்களைப் பயன்படுத்துவதிலும் ஒரு சிக்கல் உண்டு. ராசிக்கட்டதில் ஒரு லக்னம் மாறும் கால இடைவெளி தோராயமாக 2 மணி நேரமாகும். நவாம்ச சக்கரத்தில் 12 நிமிடத்திற்கு ஒருமுறை லக்னம் மாறும். ஆனால் வர்க்கச் சக்கரங்களில் ஓரிரு நிமிடங்களிலேயே லக்னமும் கிரகங்களும் மாறும். எனவே ஜனன நேரம் துல்லியமான ஜாதகங்களுக்கு மட்டுமே இவற்றைப் பயன்படுத்துவது பயன் தரும். இதில் ஜனன நேரத்தில் வித்தியாசமிருக்குமென சந்தேகமேற்பட்டால்  அதை சரிசெய்ய (For birth time rectification) தசாம்ச சக்கரத்தை ஜோதிட ஆராய்ச்சியாளர்கள் பயன்படுத்துவது இங்கு குறிப்பிடத்தக்கது. 

எப்படியெனில் ஜாதகர் முப்பது முப்பத்தைந்து வயதில் தொழில் ரீதியாக நிலைத் தன்மை பெற்று இருப்பார். அப்போது அவரது தொழிலுக்கேற்ப தசாம்ச சக்கரம் பொருந்தும் வகையில் ஒருசில நிமிடங்களை முன்னும் பின்னும் சரி செய்து துல்லியமான ஜனன நேரத்தை காண்பது என்பது வழக்கமாகிவருவது இங்கு குறிப்பிடத்தக்கது.

மீண்டுமொரு பதிவில் விரைவில் உங்களை சந்திக்கிறேன்.

வாழ்த்துக்களுடன்,
அன்பன்,
பழனியப்பன்.