Monday, 15 August 2016

கிரக உறவுகள்

கிரகங்களுக்கிடையேயான உறவுகள் மனித வாழ்வில் எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன என்பது பற்றியதே இப்பதிவு.

உலக மனித இனத்தில் ஒவ்வொருவரும் தனித்தன்மை வாய்ந்தவர்களே. ஒருவரது சாயல் மற்றொருவருக்கு இருக்கலாமேயன்றி முழுக்க பிரதி எடுத்தது போன்று தோற்றமும் எண்ணமும் அமைந்துவிடாது. உடல் ஒன்றாகவும் தலை இரண்டாகவும் அமைந்த அபூர்வ மனித பிறவிகளுக்குக்கூட எண்ணங்களில் மாறுபாடு உண்டு.

நாம் அணைவரும் ஒரு வகையில் கிரக கதிவீச்சுகளின் அம்சங்களே. ஒவ்வொரு வண்ணக்கதிர்வீச்சுக்கும் ஒருசில பிரத்யோக பலன் உண்டு. உதாரணமாக சிவப்பு வண்ணம் வேகத்தையும் போர்க்குணத்தையும் தூண்டும். நீலம் அமைதி தரும். மஞ்சள் மலர்ச்சியையும் வளர்ச்சியையும் தூண்டும்,. பச்சை வண்ணம் வாழ்வில் ஒரு பிடிப்பையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தும். இப்படி பல. இந்தவகையில் ஒவ்வொரு கிரகமும் ஒரு நிற கதிவீச்சை பிரதிபலிக்கிறது.

குருவிடமிருந்து வெளிப்படும் மஞ்சள் நிறக்கதிர்வீச்சு செவ்வாயிடமிருந்து வெளிப்படும் சிவப்புநிறக்கதிர்வீச்சோடும் சூரியனின் வெளிர் மஞ்சளோடும் சந்திரனின் வெள்ளை நிறத்தோடும்  இணைந்து செயல்படுகிறது. அதனால் இந்த நான்கும் நட்புக்கிரகங்கள்.

சுக்கிரனிடமிருந்து வெளிப்படும் கருமை கலந்த தீவிர வெண்மை நிறக்கதிர்வீச்சு சனியிடமிருந்து வெளிப்படும் நீல நிறக் கதிர்வீச்சோடும் புதனின் பச்சை நிறத்தோடும்  குறிப்பிட்டுசொல்ல இயலாத ராகு-கேதுக்களின் கதிர்வீச்சோடும் இணைந்து செயல்படுகிறது. எனவே இவை ஐந்தும் நட்புக்கிரகங்கள்.



முதலாவது கோஷ்டிக்கு தலைவர் தேவகுரு எனப்புகழப்படும் வியாழன் கிரகம். இரண்டாவது கோஷ்டிக்கு தலைமை வகிப்பது அசுர குரு எனப்புகழப்படும் சுக்கிரன் ஆவார். முதலாவது தேவ கோஷ்டி என்றும் இரண்டாவது அசுர கோஷ்டி என்றும் அழைக்கப்படுகிறது. தலைமை வகிக்கும் குரு-சுக்கிரன் இரண்டும் ஆச்சாரியர்கள் என போற்றப்படுகிறார்கள்.


தேவர்கள்-அசுரர்கள் என்பதெல்லாம் இந்த கர்ம பூமியில் பிறக்கும் மனிதனின் இருவேறு குணங்களை அளவிட பயன்படுத்தப்படும் வார்த்தைகள். அவ்வளவே. உண்மையில் நாம் ஒவ்வொருவரின் பூர்வ ஜென்ம கர்மங்களுக்கு தகுந்த மாதிரியான பலன்களையே வாழ்வில் எதிர்கொள்கிறோம் என நமது இந்து தர்மம் கூறுகிறது.

கர்மபூமியில் பிறந்த மனிதன் இரு குணங்களையும் அதாவது நல்ல மட்டும் தீய குணங்களை கொண்டவனாகவே பிறக்கிறான். முழு நற்குணமோ அல்லது முழு தீய குணமோ கொண்டு இந்தக்கலியில் யாரும் பிறக்க முடியாது என்பது அந்தப் பரந்தாமன் வகுத்த விதி.


இதில் புதனிடமிருந்து வெளிப்படும் பச்சை நிறக்கதிர்வீச்சுக்கு ஒரு தனித்தன்மை உண்டு. அது நாரதர் போல. அதன் பச்சை நிறக்கதிர்வீச்சு  இரு கோஷ்டிகளோடும் இணைந்து செயல்படும். குறிப்பாக புதனுக்கு சூரியனோடு மிகுந்த நட்பு உண்டு. சூரியனுக்கு அடுத்து பட்டத்துக்கு உரிய கிரகம் (HEIR) என அழைக்கப்படுகிறது புதன். இளவரசுப்பட்டம் சூட்டப்பட்ட கிரகமான புதனை சூரியனுக்கு சம பலம்கொண்ட நட்புக்கிரகம் என ஜோதிடம் குறிப்பிடுகிறது. வேறெந்த கிரகத்திற்கும் இந்த உரிமை இல்லை. சூரியனின் கதிர்வீச்சு தாக்கத்திற்கு ஒப்பான தாக்கத்தை ஏற்படுத்தவல்லது புதனின் கதிர்வீச்சு. அதனை மனித வாழ்வின் சம்பவங்களைக்கொண்டுதான் அறிய முடியும்.

புத்தியில்லா மனிதன் பிணத்திற்கு சமம் என்பர். புதன் ஒருவரது புத்தி சாதுரியத்தை குறிப்பிடுகிறது. அதனால்தான் புதனை புத்திகாரகன் என ஜோதிடம் போற்றுகிறது. இளவரசுப்பட்டம் பெற்ற புதனுக்கு மந்திரி கிரகமான குருவோடும் சேனாதிபதி கிரகமான செவ்வாயோடும் இணைந்து செயல்படாது ஆனால் அவற்றிற்கு இணையாக செயல்படும் சமக்கிரகம். அரசி கிரகம் என ஜோதிடம் வரையறுக்கும் சந்திரனின் கதிர்வீச்சோடும் இணைந்து செயல்படாது. புதனுக்கு சந்திரன் எதிரிதான். ஒரு கிரகத்தின் கதிர்வீச்சோடு இணைந்து செயல்படாத கிரகங்கள் அக்கிரகத்துக்கு பகைக்கிரகங்களாகின்றன.

இரு கோஷ்டி கிரகங்களிலும் உள்ள கிரகங்கள் ஒன்றுக்கொன்று நட்பு பகை சமம் என்ற வகையில் செயல்படும் என்றாலும் தேவ கோஷ்டியிலுள்ள செவ்வாய்க்கும் அசுர கோஷ்டியிலுள்ள சனிக்கும் உண்டான பகை தீவிரமானது. இரண்டும் இரு வேறு துருவங்கள்.

செவ்வாய் – அவசரம்             சனி – பொறுமை
செவ்வாய்- வேகம்               சனி - நிதானம்
செவ்வாய் – அதி குரூரம்         சனி- குரூரம்
செவ்வாய் – ஆதிக்கம்            சனி- பணிவு
செவ்வாய் – சேனாதிபதி          சனி- போர்வீரன்
           
மிகவும் தீவிரமாக செயல்படும் இவ்விரு கிரகங்களும் ஒன்றுக்கொன்று கடுமையான பகை கிரகங்களாகும். ஜாதகத்தில் நன்கமைந்தால். இவைகள் கொடுக்கும் செல்வங்கள் தலைமுறைக்கும் நிலைத்து நிற்கக்கூடியதாக இருக்கும். இவை இரண்டும் கேந்திர ஆதிபத்தியம் பெற்று ஒன்றாக இணைந்திருந்தால் நல்ல பலனையே தரும். எனினும் அந்த நல்ல பலனை தருவதிலும் தங்களது தனித்தன்மை வாய்ந்த அம்சங்களை நிலைநாட்ட முயலும்.

செவ்வாய் நன்கமைந்தால் அதிகாரம் மிக்க பதவியும் பூமி யோகமும் ஏற்படும். காவல், ராணுவம் போன்ற பாதுகாப்புத்துறைகளோடும், விவசாயம், சுரங்கம், பொறியியல் துறையோடும் தொடர்பை ஏற்படுத்தித் தரும்.

சனி நன்கமைந்தால் சாதாரணமான நிலையிலிருந்து உயர்ந்த நிலைக்கு படிப்படியாக நிதானமாக அதே சமயம் உறுதியாக முன்னேறுவர். கடுமையான உழைப்பு, சட்டம்-ஒழுங்கு, நீதித்துறை, பொறியியல், மக்கள் தொடர்பு போன்றவற்றோடு சம்மந்தப்படுத்தும். சிறந்த பணிச்சூழல், நல் ஆயுள் போன்றவை சனி ஜாதகத்தில் நன்கமைந்தால் கொடுக்கும் கொடை.

பாரதத்தின் 70 ஆவது சுதந்திர தினத்தை ஒட்டி வெளிவரும் இப்பதிவில் சனி-செவ்வாய் செயல்பாட்டுக்கு ஒரு உதாரணம். 

சுதந்திர வேட்கை கொண்ட சனியின் அம்சமான சாமான்யர்கள் ஜாலியன் வாலாபாக்கில் குழுமியிருந்தனர். அப்போது அதி கோபம் கொண்ட செவ்வாயின் அம்சமான ஜெனரல் டயர் அவர்களை ஈவு இரக்கமற்ற வகையில் சுட்டுத்தள்ள உத்தரவிட்டான். அந்தக்கோரக்காட்சியை காந்தி திரைப்படத்தில் காணும்போது நமது நெஞ்சம் பதறும். நேரில் கண்டவனுக்கு எப்படியிருக்கும். அந்த சுதந்திர போராட்ட நிகழ்வுக்கு சற்றும் தொடர்பில்லாத ஒரு 19 வயது இளைஞன். கூட்டம் நடக்கும் இடத்திற்கு அருகில் இருந்த கிணற்றில் தண்ணீர் எடுக்க வந்தவன் தப்பிப்பிழைத்தான். மிகச்சரியாக அடுத்த 19 ஆவது வருடத்தில் அவனது முப்பத்து எட்டாவது வயதில் இங்கிலாந்தில் பணி ஓய்வு பெற்று தனது இறுதிக்காலத்தை கழித்துக்கொண்டிருந்த ஜெனரல் டயரை கண்டுபிடித்து சுட்டுக் கொன்றான் சனியின் அம்சமான உத்தம்சிங்.

செவ்வாய் கோபத்தில் கோரத்தாண்டவம் ஆடியது.

சனி நிதானித்து பழி தீர்த்தது.

குணம் ஒன்றுதான். அது வெளிப்படும் விதம்தான் இரண்டுக்கும் வேறு.

கீழ்க்காணும் ஜாதகத்தை கவனியுங்கள்.



கர வருஷம் கார்த்திகை மாதத்தில் (NOV 2011) பிறந்த சிறுவனின் ஜாதகம் இது.

சிறுவனின் லக்னத்தில் விரைவான செயல்பாட்டை குறிக்கும் இரு கிரகங்களான செவ்வாய்-சந்திரன்.  ஆனால் சந்திரன் இங்கு விரயாதிபதி என்பதும் தேய்பிறை சந்திரன் என்பதும் கவனிக்கத்தக்கது. வாக்கு காரகனும் புத்தி காரகனுமான புதன் செவ்வாயின் வீட்டில் அமைந்து செவ்வாயால் பார்க்கப்படுகிறார். இந்த அமைப்பின்படி சிறுவனது எண்ணம் வார்த்தையாக வெளிப்படும்போது வேகமாக வெளிப்பட வேண்டும்.

ஜாதகத்தில் மெதுவான செயல்பாட்டை குறிக்கும் சனி உச்சம் என்பது கவனிக்கத்தக்கது. சனி செவ்வாயின் சித்திரை நட்சத்திரத்தில் அமைந்து செவ்வாயின் விரைவான செயல்பாட்டுக்கு தடை போடுகிறது.மன எண்ணங்களை விரைவாக வார்த்தைகளாக வெளிப்படுத்த செவ்வாய் விழைகிறது. செவ்வாயின் நட்சத்திரத்திலமைந்த சனி அதை நிதானப்படுத்துகிறது. எண்ணம் விரைவாகவும் அது வெளிப்படும் வார்த்தை மெதுவாகவும் அமைந்துவிட்டால் அங்கு பேச்சில் தடை ஏற்படும். சிறுவனுக்கு கடந்த ஜூலை மாத கடைசி வாரத்தில் சுக்கிர திசையில் சனி புக்தி துவங்கியது.முதல் பேச்சில் தடை இருப்பது தெளிவாக தெரிய ஆரம்பித்தது. சனி தனது புக்தியில் பேச்சுக்கு தடை ஏற்படுத்துகிறார் என்பதை தெளிவாக அறிய முடிகிறது.

இந்தப்பதிவில் சனி-செவ்வாய்க்கிடையேயான உறவை அலசினோம் மற்றொரு சந்தர்ப்பத்தில் இதர கிரகங்களுக்கிடையேயான உறவுகளையும் அலசுவோம்.

அடுத்த பதிவு.

ஒரு ஜோதிடனின் வாழ்வில் நிகழ்ந்த உண்மை நிகழ்வுகள்.

வாழ்த்துக்களுடன்,
அன்பன்,

பழனியப்பன்.  

விடுபட்ட பிற்சேர்க்கை : 
சிவப்பையும் கருப்பையும் பிரதான வண்ணங்களாக தங்கள் கொடிகளில் இணைத்து பயன்படுத்தும் தமிழக அரசியல் கட்சிகளை கவனியுங்கள. இவர்களது செயல்கள் எப்போதும் சுயநலம் சார்ந்ததாகவே இருக்கும். மறந்தும் கூட மக்களுக்காக இவர்களால் அரசியலை பயன்படுத்த முடியாது என்பது கசப்பான உண்மை.

Sunday, 17 July 2016

கிரக தோஷங்களை எதிர்கொள்வது எப்படி?

ஒரு பாவத்தில் நிற்கும் கிரகம் அதன் அம்சத்தை தான் நிற்கும் அந்த பாவத்தில் ஏதேனும் ஒரு வகையில் நிலைநாட்டும்.

கிரகங்கள் தாங்கள் நிற்கும் பாவத்தின் பலனையும் எடுத்து நடத்த கடமைப்பட்டுள்ளன. எனவே ஒரு பாவத்தில் நிற்கும் கிரகம் முதன்மையாக  தனது காரக அடிப்படையிலும் பிறகு தாங்கள் நிற்கும் பாவம் எதனை குறிப்பிடுகிறதோ அதன் அடிப்படையிலும் மேலும் தாங்கள் எந்த பாவங்களுக்கு அதிபதிகளோ அந்த பாவங்கள் எதனை குறிப்பிடுகிறதோ அதன் அடிப்படையிலும் தாங்கள் நிற்கும் குறிப்பிட்ட அந்த பாவத்தில் தங்களது அம்சத்தை நிலை நாட்டும். இதில் கிரகங்கள் நிற்கும் நட்சத்திர அதிபதிகளின் பங்கு குறிப்பிட்ட கிரகங்களின் செயலுக்கு அதன் திசா புக்திகளில் தெளிவாக வெளிப்படும். 

உதாரணமாக இரண்டாம் பாவம் 1.தனம், 2.வாக்கு, 3.குடும்பம் ஆகியவற்றை முதன்மையாக குறிக்கும்.

2 ல் ராகு உள்ளதாகக்கொண்டால் ராகுவின் காரக அடிப்படையில் ஜாதகருக்கு வெளிநாட்டுத்தொடர்பு ஏற்பட்டு அதன் மூலம் சம்பாத்தியம் ஏற்பட வாய்ப்புண்டு. அப்படி ஏற்பட்டால் அதன்பிறகு வாக்கு, மற்றும் குடும்ப வகையில் ராகு பாதிப்பை தர வாய்ப்பு மிகக்குறைவே. இதற்கு ஜீவன காரகன் சனி ஜல ராசிகளுடனோ அல்லது 9, 12 ஆமதிபதிகளுடனோ தொடர்பில் இருக்க வேண்டும். இதனால் வெளிநாட்டு சம்பாத்தியம் ஏற்படும். அடுத்து வாக்கு காரகன் புதன் கெடாமல் சுபர்களுடன் இருந்தால் பொய், புரட்டு இல்லாமல் இருப்பார். அடுத்து குரு கெடாமல் இருக்க வேண்டும் ஏனெனில் குடும்ப காரகன் குரு கெட்டு குடும்ப பாவமும் ராகுவால் பாதிக்கப்பட்டால் குடும்பம் குளறுபடியாகும்.

எனவே இரண்டில் ராகு இருந்தால் இரு தாரம், பொய்யன், மதுவருந்துவான் போன்ற வகையில் மட்டும் பார்க்காமல் இரண்டாமிடம் குறிக்கும் பாவ காரகங்களை தெளிவாக அறிய அதற்குரிய கிரக காரகர்களின் நிலைமையையும் ஆராய்வது அவசியம். இதனை இங்கு குறிப்பிட மற்றொரு முக்கிய காரணம் தற்போது சில பகுதிகளில் திருமணப்பொருத்தம் பார்க்கையில் ராகு-கேது தோஷம் என்ற வகையில் நல்ல ஜாதகங்களையும் பொதுவாக ஒதுக்கி விடுகின்றனர். இது தவறு என்பதற்காகத்தான்.

லக்னத்திற்கு ஏழில் சூரியன் நின்றால் பிரிவினை ஜாதகம் என்றுகூறி பொருத்தமே பார்க்க விரும்பாத ஜோதிடர்கள் கூட உண்டு. சூரியன் ஏழில் நிற்பதால் அரசுப்பணி வரனாகப் பார்ப்பது நல்லது. ஏழாமிடத்தில் நிற்கும் சூரியன் அரசாங்கத்திற்கு  காரகத்துவம் பெற்ற கிரகம் என்பதால் இது பொருந்தும். மேலும் 7 நின்று லக்னத்தை பார்க்கும் சூரியன் ஜாதகரையும் தனது அம்சமாக அரசுப்பணி செய்பவராக அல்லது ஒரு வெற்றிகரமான தொழிலதிபராக மாற்றிவிட வாய்ப்புண்டு. அப்படி நிகழ்ந்தால் தனது காரகத்தை ஒரு வகையில் நிலை நாட்டிய சூரியன் 7 ஆமிடத்தை பாதிக்கமாட்டார் என நம்பலாம். இது ஒரு உபாயம் அவ்வளவே.  

இது போல ஏழாம் அதிபதி நீசமாகிவிட்டால் குறையுள்ள வாழ்க்கைத்துணைவரை பார்ப்பது நல்லது.

குறை என்பது உடல் ஊனம், வாழ்க்கைத்துணையை இழந்தவர், மனமுரிவுற்றவர் என்ற வகையில் இருக்கலாம். அப்படி இல்லாமல் குறையில்லா நல்ல துணையை தேர்ந்தெடுத்தால் என்ன ஆகும் என்றால் நீசமான ஏழாமதிபதி கிரகம் , வாழ்க்கைத்துணைவர் வகையில் தனது அம்சத்தை நிலைநாட்டும். அதாவது துணைவருக்கு உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்த வாய்ப்புண்டு. துணைவர் நீச குனங்களை பெற்றவராக இருக்கவும் வாய்ப்புண்டு. ஆனால் துணைவரின் ஜாதகம் வலுவாக இருந்தால் தனது அம்சத்தை நிலைநாட்ட முயலும் ஜாதகத்தோடு போரிட இயலாமல் மண முறிவுக்கு கொண்டு செல்லவும் வாய்ப்பு ஏற்படும் என்பதை மறுப்பதற்கில்லை.

எனக்கு நன்கு அறிந்த ஒருவரின் ஜாதகத்தில் 7 ஆமதிபதி நீச கிரகத்தோடு சேர்க்கை பெற்றுள்ளது. இவ்வமைப்பு அவரின் மனைவிக்கு மோசமானகுணத்தை ஏற்படுத்த வேண்டும். மனைவி மிக நல்லவர். ஆரோக்யமாகவும் உள்ளார். குறிப்பிடும் நபர் மோசமான நண்பர்களோடு (அரசியல்வாதிகள்) சேர்ந்து தொழில் செய்கிறார். 7 ஆமிடம் களத்திர ஸ்தானம் மட்டுமல்ல ஒருவரது தொடர்புகளையும் குறிக்கும் என்ற வகையில் அந்த நபரின் 7 ஆமிட தோஷம் மோசமான நண்பர்களோடு தொழில் ரீதியாக இணைத்து வைத்து மனைவியை பாதிக்காமல் விட்டுள்ளது.  

12 ஆமிடத்தில் பாவிகள் இருந்தால் குடும்பத்தை விட்டு பிரிந்து சென்று சம்பாதித்து வரும் கணவனை தேடுவது நல்லது. அப்படி இல்லாமல் கணவன் எப்போதும் அருகிலேயே இருந்தால் 12 ஆமிடம் குறிப்பிடும் படுக்கை அறை போர்க்களமாகத்தான் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இவ்விடத்தில் மற்றொரு விஷயம். ஒருவேளை 12 ல் பாவிகள் அமையப்பெற்ற ஜாதகர் ஒரு ஆண் எனக்கொள்வோம். அவர் இரவுப்பணி ஆற்றுபவாராக இருந்தால் அவருக்கு தூக்கம் கெடும் என்ற வகையில் தனது பாதிப்பை அங்கு நிற்கும் பாவிகள் வழங்கும். ஏனெனில் 12 ஆமிடம் தூக்கத்தையும் குறிப்பிடும்.இந்த வகை பாதிப்பு ஏற்பட்டால் அதன் பிறகு தம்பதிகளின் தாம்பத்யத்தில் கிரகங்கள் பாதிப்பை வழங்காது என எடுத்துக்கொள்ளலாம்.   

கீழே நீங்கள் காணும் வட இந்திய சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் ஜாதகத்தில் சினிமா துறைக்கு காரகத்துவம் பெற்ற சுக்கிரன் நீசம். ஆனால் ஜாதகர்  கலைத்துறையில் முதன்மையானவர்.



இது எப்படி?

குரு உச்சமான பாவாதிபதி சந்திரனின்  ஹஸ்த நட்சத்திரத்தில் நின்றதால் சுக்கிரன்னு நீச பங்கம் பெற்றார். எனவே சினிமாத்துறையில் ஜாதகர் சாதித்தார். 7 ல் ஒரு பாவி நின்று சுக்கிரன் நீச பங்கமடைந்ததால் தனது காரகங்களில் ஒன்றான கலைத்துறையில் பாதிப்பு ஏற்படுத்த ராசிக்கு 10 ல் நின்ற குரு தடைவிதிப்பார் என்றதால் சுக்கிரன் தனது காரக பாதிப்பை வேறு வகையில் ஜாதகருக்கு வழங்கியுள்ளார். சுக்கிரன் மனைவியை குறிக்கும் கிரகம் என்பதால் தோஷம் மனைவிக்கு மாறிவிட்டது. 




ஜாதகரின் மனைவி ஜெய பச்சன் குள்ளம் என்பது அனைவரும் அறிந்ததே. அமிதாபச்சனுக்கும் ஜெயா பச்சனுக்கும்  உயர வேறுபாடு சென்டிமீட்டர் கணக்கில் அல்ல கிட்டத்தட்ட அடிக்கணக்கில் என்பது அனைவரும் அறிந்ததே. 7 ஆமதிபதி சூரியன் தொழில் ஸ்தானமான 10 ஆமதிபதி செவ்வோயோடு இணைந்ததால் ஜாதகர் தன்னுடன் நடித்த நடிகையையே வாழ்க்கைத்துணையாக ஏற்றார். 7 ஆமதிபதி சூரியன் செவ்வாயின் சித்திரை நட்சத்திரத்தில் நின்று குள்ளத்தனதிற்கு காரகம் பெற்ற  செவ்வாயுடனும் சேர்க்கை பெற்றதால் ஜாதகரின் மனைவி குள்ளம் என்ற வகையில் அமைந்தார் என அனுமானிக்கலாம்.

இறுதியாக நான் கூற வருவது என்னவென்றால் கிரக பாதிப்புகளை நாம் தடை செய்ய இயலாது. ஆனால் திசை மாற்றிவிட வாய்ப்பு உண்டு என்பதுதான்.

ஜோதிடர்கள் பொதுவாக செவ்வாய் தோஷம், நாக தோஷம், 7 ஆமிட களத்திர தோஷம் என்று ஜாதகங்களை நிராகரிக்காமல் குறிப்பிட்ட பாவம், பாவாதிபதி மற்றும் காரகன் இவர்களையும் ஆராய்ந்து பாதிப்பு எந்த அளவில், வகையில் இருக்கும் என்று அறிந்து பிறகு முடிவுசெய்து அவசியம்.


மீண்டுமொரு பதிவில் விரைவில் சிந்திப்போம்.

வாழ்த்துக்களுடன்,

அன்பன்,
பழனியப்பன்.

Tuesday, 14 June 2016

உறவுகள் தொடர்கதையா? சிறுகதையா?

எனது நண்பர் தனது இளைய மகனை 6 ஆவது படிக்கையில் தங்கள் குடும்பத்தைவிட்டு தொலைவில் இருக்கும் பள்ளிக்கு மாற்றினார். பிறகு உயர் கல்வியும் வெளியூரிலேயே கழிந்தது. தற்போது இளைய மகன் தனது கல்விக்கேற்ற வேலைக்காக முயற்சித்துக்கொண்டு சில மாதங்களாக வீட்டில் உள்ளார்.

சிறு வயதில் பதின் பருவத்தில் ஏற்பட்ட குடும்பத்தினுடனான பிரிவு மகனின் சிந்தனையில் தனித்த மாறுபாட்டை ஏற்படுத்தியிருந்தது.  தந்தைக்கு உள்ளுரில் கல்வி கற்று தனது உடனிருந்து தன்னை புரிந்து கொண்ட மூத்த மகனைப்போல் இளைய மகன் இல்லையே என்ற ஆதங்கம் இளைய மகனுக்கும் இவருக்கும் இடையே சச்சரவுகளை உண்டாக்கிக்கொண்டுள்ளது. சிறு வயதிலேயே குடும்பத்தை விட்டு மகனை பிரித்ததன் தவறை தந்தை எண்ணி எண்ணி இப்போது வேதனைப்படுகிறார்.

பதின் பருவம் என்பது குழந்தைத்தனத்தில் இருந்து விடுபட்டு ஒரு மனிதன் சுயமாக சிந்திக்கத்தொடங்கும் வயது. ஒரு தந்தை தனது மகனுக்கு அப்போது நல்ல தோழனாக இருந்து அவனை சரியான பாதையில் செலுத்த வேண்டிய காலம் அது. சரியான பாதையில் மகனை செலுத்தி அவன் செல்லத்தொடங்கிவிட்டால் பிறகு வாலிபனாகி உயர்கல்விக்கு வெளியூர் அல்லது வெளிநாடு சென்றாலும் அவன் பெரிதாக பாதை மாற வாய்ப்பு குறைவு.

இன்றைய கல்விக்கூடங்கள் மாணவர்களின் சுய சிந்தனையை சிதறடித்து அவர்களை  மதிப்பெண் எடுக்கும் இயந்திரங்களாக மாற்றிக்கொண்டிருக்கின்றன.இன்றைய மாணவர்களிடம் மனித வாழ்வின் மகத்துவங்களை போதிக்க தவறுகின்றன.

விளைவு என்ன?

லட்சங்களை மாத ஊதியமாக உற்பத்தி செய்யும் இத்தகைய இயந்திர மனிதர்கள், தங்களுடன் இணைந்து சுழல மனைவி என்ற பெயரில் மற்றொரு இயந்திரத்தை எதிர்பார்க்கிறான். மனிதனின் பொருளாதார நிலை ஆட்டம் காணும்போது அங்கு பணத்தால் நல்ல குணம், உண்மையான அன்பு போன்ற பல விஷயங்களை வாங்கிவிட முடியாது என்று உணரும்போது அவனது வாழ்வில் பிரச்சனைகளும் பிரிவினைகளும் தோன்றுகின்றன.

எந்த உறவு எந்தக்காலத்தில் பிரியும் என்பதை ஜாதகத்தை வைத்து கண்டுபிடித்துவிடலாம்.

இப்பதிவில் பெற்றோருக்கும் குழந்தைகளுக்குமான உறவு நிலைகளை மட்டும் ஜாதக ரீதியாக அலசுவோம் வாருங்கள்

ஒருவரது பெற்றோருடனான உறவு நன்றாக அமைய வேண்டுமானால் அவர் ஜாதகத்தில்

1.தாயாரை குறிக்கும் மாத்ரு காரகன் சந்திரனும் தந்தையைக் குறிக்கும் பித்ரு காரகன் சூரியனும்  ஆட்சி, உச்சம், நட்பு என்றவகையில் வலுவாக இருக்க வேண்டும்.

2.சூரியனும் சந்திரனும் பகை வீட்டிலோ அல்லது பாவிகளுடனோ 6,8,12 ஆமதிபதிகளுடனோ தொடர்பில் இருக்கக்கூடாது.

3.நீசமடைந்திருக்கக்கூடாது. அப்படி நீசமடைந்தாலும் நீசம் பங்கமடைந்திருக்க வேண்டியது அவசியம். இவ்விரு கிரகங்களும் லக்னதிற்கும் தனது வீடுகளுக்கும் 6,8,12 ல் மறைந்திருக்கக்கூடாது. சூரிய சந்திரர்களுக்கு கேந்திரத்தில் சுபாவ பாவிகளோ அல்லது லக்ன பாவிகளோ இருக்கக்கூடாது.


மேற்சொன்னபடியே தொடர்புடைய பாவங்களான நான்கும் ஒன்பதும் கீழ்குறிப்பிட்டபடி அமைவது நலம். 

1.லக்னத்திற்கு நான்கு மற்றும் ஒன்பதாம் பாவதிபதி கிரகங்கள், பாவிகள் மற்றும் 6,8,12  ஆமதிபதிகள் பார்வை சேர்க்கை இல்லாமல் அமைந்திருக்க வேண்டும். ஆட்சி, உச்சம், நட்பு என்ற வகையில் வலுவாக இருக்க வேண்டும். (ஆனால் இந்த விதி கன்னி & தனுசு லக்னத்தவர்களுக்கு பொருந்தாது. காரணம் நான்காம் வீட்டில் ஆட்சியில் இருக்கும் குரு கடுமையான கேந்திராதிபத்திய தோஷத்திற்கு ஆளாவதுதான்.மேலும் கன்னி லக்னத்துக்கு பாதகாதிபதியான குரு உச்சமடைவதும் தோஷம்தான். ஏனென்றால் குரு தாயார் வகையில் பாதகத்தை செய்ய வாய்ப்புண்டு.)

2. நான்கு ஒன்பதாம் பாவாதிபதிகள் நீசமடைந்திருக்கக்கூடாது.

3. தங்களது பாவங்களுக்கு மறைவில் அமரக்கூடாது.

4.நான்கு ஒன்பது பாவத்திற்கும் நான்கு ஒன்பது பாவாதிபதிகளுக்கும் கேந்திரத்தில் சுபாவ பாவிகளோ அல்லது லக்ன பாவிகளோ இருக்கக்கூடாது. 

இவை தவிர கிரகண தோஷம், பாவகர்தாரி தோஷம் போன்றவற்றிற்கு ஆட்படாமல் இருப்பது போன்ற பல விதிகளும் உண்டு. விதிகள் நீண்டால் பதிவில் விதிகள் மட்டுமே இருக்கும் என்பதால் இத்தோடு நிறுத்திக்கொள்வோம்.


உதாரண ஜாதகம் கீழே.



மேலே நான் குறிப்பிட்ட ஜாதகம் தான் இது.

தாயாரை குறிக்கும் மாத்ரு காரகன் சந்திரன் உச்சம். ஆனால் லக்னத்திற்கு 12 ல் மறைந்ததும் கேது சேர்க்கை பெற்றதும் தோஷம். மாத்ரு ஸ்தானாமான 4 ஆமிடத்தில் மிதுன லக்னத்திற்கு பாதகாதிபதி குரு வக்ரமடைந்த நிலையில்  அமர்ந்திருக்கிறார். மேலும் நீசமாகி வக்கிரமடைந்த மாத்ரு ஸ்தானாதிபதியும் லக்னாதிபதியுமான புதனை குரு பரிவர்த்தனை பெற்று பார்ப்பதும் மாத்ரு காரகன் சந்திரனையும் ஒன்பதாம் பார்வையில் லக்ன பாதகாதிபதியான குரு பார்ப்பதும் தாயாரின் பாக்கியத்தை அனுபவிக்க குரு தடை செய்வார் என்பதை மிகத் தெளிவாகவே ஜாதகம் உணர்த்துகிறது .ஒரு காரகனையும் அந்த காரகன் உணர்த்தும் பாவாதிபதியையும் லக்ன பாதகன் பார்த்தால் பாதகம் நிச்சயம். மேற்கண்ட ஜாதகத்தில் சந்திரன் உச்சமடைந்து நான்காமதிபதி புதன் பாதகாதிபதியான குருவுடன் பரிவர்த்தனை பெற்றதால் தாயாருக்கு இந்த ஜாதகம் பாதகத்தை செய்ய வழியில்லை. ஆனால் தாயாரின் பாக்கியங்களை பெற இயலாத சூழல் ஏற்படும். அதாவது தாயாரை விட்டு விலகி இருக்க வைக்கும். நான்காமிடம் வித்யா ஸ்தானம் என்பதால் கல்விக்காகவும் குரு பத்தாம் அதிபதி என்பதால் ஜாதகர் தனது ஜீவனத்திற்காகவும் தாயாரை விட்டு விலகியிருக்க நேரிடும் என்று நாம் அனுமானிக்கலாம்.

சூரியன் தனது கடும் பகைவனான சனியுடன் இணைந்ததும் தோஷமே. தந்தையுடனான உறவில் பகை உணர்ச்சி மேலிடும் என்பதை இது தெளிவாக்குகிறது. ஆனால் ராசிக்கு நான்கு ஒன்பது அதிபதிகள் பகைவர்களானாலும் ஜாதகருக்கு யோகத்தை வழங்கக்கூடியவர்கள். எனவே தந்தை மீது மதிப்பு இருந்தாலும் அதை வெளிப்படுத்த வாய்ப்பில்லை. மேலும் காரகன் பாவத்தில் இருப்பது தோஷம் என்ற அடிப்படையில் ராசிக்கு ஒன்பதாமிடமான பித்ரு ஸ்தானத்தில் பித்ரு காரகன் சூரியன் இருப்பதால் பிதாவுடனான உறவு பாதிப்படையும் என்பதை ஜாதகம் குறிப்[பிடுகிறது.

இத்தகைய அமைப்புகள் ஜாதகரை சிறு வயதிலேயே பெற்றோரை விட்டு பிரித்து வைத்தது.

கீழே மற்றுமொரு உதாரண ஜாதகம்.



மாத்ரு ஸ்தானம் எனப்படும் (தனுசு) லக்னத்திற்கு நான்காம் அதிபதி குரு வக்கிரமடைந்து வலு குறைந்தார். அதுமட்டுமல்ல தனது நான்காம் பாவத்திற்கு 6 ஆமிடத்தில் பாவிகளுடன் சேர்ந்து ரொம்பவே கெட்டுவிட்டார். தாயாரை குறிக்கும் மாத்ரு காரகன் சந்திரன் ஆட்சியில் இருந்தாலும் அது லக்னத்திற்கு மறைவு ஸ்தானமாகிவிட்டது.

அடுத்து தந்தையை குறிக்கும் ஒன்பதாம் பாவமான சூரியனுடைய வீடும் ராகுவால் பாதிக்கப்பட்டது. சூரியன் தனது வீட்டிற்கு 6 ல்  மகரத்தில் மறைந்துவிட்டார்.

மேற்சொன்ன அமைப்புகள் ஜாதகர் தனது பெற்றோரை விட்டு விலகி இருக்க வேண்டும் என்பதை பொதுவாக குறிக்கிறது.

ஜாதகருக்கு 2013 அக்டோபர்  14 முதல் கேது திசையில் இருக்கிறார்.

கேது தாயாரை குறிக்கும் நான்காமிடத்திற்கு 12 ஆமிடமான 3 ல் அமர்ந்ததால் தாயாரை விட்டு பிரிவு. ஒரு பாவத்திற்கு பிந்தைய பாவத்தில் இருக்கும் கிரகம் அல்லது அதன் பாவாதிபதி தன் முந்தைய பாவத்தையும் அதில் இருக்கும் கிரகத்தையும் பாதிக்கும் என்பது ஒரு முக்கிய ஜோதிட விதி.

இதனடிப்படையில் ஜாதகருக்கு நடக்கும் கேது திசை தாயாரை பாதிக்க வேண்டும். ஆனால் தாயாருக்கு வலுவான திசா புக்திகள் நடந்தாலோ அல்லது கேதுவின் எதிரி கிரகத்தின் திசா புக்திகள் நடந்தாலோ பாதிப்பு ஏற்படுத்த இயலாது. எனவே கேது தாயாரை விட்டு விலக வைப்பார் என எடுத்துக்கொள்ளலாம். 

பித்ரு ஸ்தானம் சிம்ம ராசியாகி அங்கு பாவிகளான செவ்வாயும் ராகுவும் இருப்பதும் சூரியன் தன் வீட்டுக்கு 6 ல் மறைந்ததும் ஜாதகர் தந்தையின் பாக்கியங்களையும் குறைவாகவே பெறுவார் என்பதை உணர்த்துகிறது.   

விருட்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு சந்திரன் நீசம். ஐப்பசி மாதம் பிறந்தவர்களுக்கு சூரியன் நீசம். இவர்கள் நிலை எப்படி என்றொரு கேள்வி எழுகிறது.

மாதா பிதா காரகர்கள் பலவீனப்பட்டாலும் இவர்கள் தொடர்புடைய பாவங்களான நான்காம் பாவம் அதன் பாவாதிபதி மற்றும் ஒன்பதாம் பாவம் அதன் பாவாதிபதி இவைகளோடு நடக்கும் திசா புக்திகளை ஆராய்ந்தே பதில் கூற வேண்டும்.

ஸ்திர ராசியான விருசிகத்திற்கு 9 ஆமதிபதி சந்திரன் பாதகாதிபதியாவதால் சந்திரன் ராசியில் நீசமாவது ஒருவகையில் நன்மையே. இதேபோல் ஐப்பசி மாதத்தில் பிறந்தவர்களுக்கு சூரியன் நீசமாவதால் சூரியன் தொடர்புடைய பாவங்கள் பலகீனமாகலாம் சூரியனின் காரகத்துவம் மட்டுமே பாதிக்கும் என்ற கட்டாயமில்லை.

எனவே கிரக காரகத்தை மட்டும் எடுத்துக்கொண்டோ அல்லது பாவத்தை மட்டுமே எடுத்துக்கொண்டோ மட்டும் ஆராயாமல் கிரகத்தை வலுவடைய செய்யும் ஜாதக காரணிகளையும் பாவத்தை தாங்கிப்பிடிக்கும் காரணிகளையும் முக்கியமாக நட்சத்திர காரணிகள் மற்றும் நவாம்ச நிலை போன்ற பல்வேறு காரணிகளையும் ஆராய்ந்தால் ஒரு உறவு அல்லது தொடர்பு எப்போது பிரியும் என்பதை தெளிவாக அறியலாம். அதன் மூலம் உறவுகளை தாங்கிப்பிடிக்கும் காரணிகளை அறிந்து அதை வலுவடைய செய்ய முயலலாம். 

மீண்டுமொரு பதிவில் சந்திப்போம்.


வாழ்த்துக்களுடன்,

அன்பன்,
பழனியப்பன்.