Wednesday, 23 January 2019

உயர் கல்வி - கவனம்.


கல்வி இல்லாதவன் கண்ணில்லாதவன் என நமது முது மறைகள் கூறுகின்றன. அடிப்படைக்கல்வி அனைவருக்கும் பொதுவானது. ஆனால் உயர்நிலைக் கல்வி ஒருவரின் வாழ்க்கையோடு அவர்தம் சம்பாத்யத்தோடு தொடர்புடையது என்பதால் பெற்றோர் தமது குழந்தைகளுக்கு உயர் கல்வியை தேர்ந்தெடுப்பதில் கவனம் செலுத்துவது மிக அவசியம். மாணவர்களின் ஜாதக அமைப்புக்கு ஏற்ப கல்வியை தேர்ந்தெடுத்து அமைத்துக்கொடுத்தால் பின்னாளில் அவர்கள் வாழ்வில் கல்வி-தொழில் ரீதியாக ஏற்படக்கூடிய பாதிப்புகளை பெருமளவு தவிர்த்துவிடலாம் என்பது அனுபவ உண்மை.




ஜாதகத்தில் ஒவ்வொரு பாவமும் பின்வருமாறு கல்வியோடு தொடர்புகொண்டுள்ளன.

லக்னம்:
தனது சுய நிலைக்கான கல்வி, சுய திருப்தி, பாதுகாப்புக்கான கல்வி.

2 ம் பாவம்:
பொருளாதாரம் சார்ந்த கல்வி, உணவு சார்ந்த, வாய் மூலம் அதாவது மொழி அறிவு கொண்டு சம்பாதிக்கக்கூடிய போதனை, விற்பனை பிரதிநிதி போன்றவை.

3 ம் பாவம்:
எழுத்து, தகவல் தொடர்பு, விளம்பரம், பயணம் சார்ந்த (tourism) கல்விகள்.

4 ம் பாவம்:
உற்பத்தித் தொழில்கள் அனைத்தும், விவசாயம், தோட்டக்கலை, கட்டுமானம், வாகனத்துறை போன்றன.

5 ம் பாவம்:
குழந்தை வளம், மன வளக் கல்வி, 4ஆவது பாவம் தோட்டம் என்பதால் அதை வளர்சிப்படுத்த தேவையான மூல விதைகள், பயிர்கள், செடிகள் போன்றவற்றை தயாரித்து வழங்கல் போன்றன.

6 ம் பாவம்:
சத்ரு ஸ்தானம் என்பதால் ஆயுதக்கல்வி, சேவகம், வம்பு, வழக்கு, அடிதடி என்பதால் சட்டம், மருத்துவம் தொடர்புடைய கல்விகளும் இவ்விடத்திற்கு உகந்தது.

7 ம் பாவம்:
தொடர்பு ஸ்தானம் என்பதால் உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்துதல் (Marketing),  தொழில் வளம், நிர்வாகம் போன்றன.

8 ம் பாவம்:
மறைவு ஸ்தானம் என்பதால், ஜோதிடம், புதைபொருள், வரலாறு, தீவிர ஆய்வுக் கல்விகள் அனைத்தும்.

9 ம் பாவம்:
வெளிநாடு தொடர்புடைய கல்வி, மத ஆச்சார கல்விகள், உயர் கல்வி.

10 ம் பாவம்:
சுய தொழிலை குறிப்பிடும் பாவம் என்பதாலும் ராஜ்ய ஸ்தானம் என்பதாலும் சனி-சந்திர தொடர்பு நன்கமைந்திருந்தால் சுய தொழிலும், நிர்வாகம், அரசியல் கல்வியும் (Political science).

11 ம் பாவம்:
லாப ஸ்தானம் என்பதால் பொருளாதாரத்தோடு தொடர்புடைய கல்விகள், வருவாயை பெருக்கி உடனடி லாபத்தை தரக்கூடிய கல்விகள். பல உயர் நிலை கல்விகளையும் ஒருவர் பல பட்டங்களையும் பெறுவதை குறிப்பிடும் பாவமாகும்.

12 ம் பாவம்:
வெளி நாட்டு வாழ்வை குறிப்பிடும் இடம், ஆகாய மார்கத்தை குறிப்பிடும் பாவம் என்பதாலும் வெளி நாட்டு மொழிகள், கணினி அறிவியல், கடல் கடந்த தொடர்பால் அமையும் கல்விகள், (Shipping, Marine Engg, Fisheries, Logistics).

உயர் கல்வி அமையும் காலத்தில்

கல்வி பாவங்களான 2, 4, 5, 9 பாவங்கள் பாதிக்கப்பட்டு புதன்,குரு போன்ற கிரகங்கள் பாதிக்கப்பட்டிருந்தாலும்  உயர் கல்வியை குறிக்கும் 9 ஆம் பாவத்திற்கு விரைய பாவமான 8 ஆம் பாவம் தொடர்புடைய திசையோ புக்தியோ நடப்பில் இருந்தாலும், மேற்சொன்ன கல்வி பாவங்களும் கிரகங்களும் ராகு-கேதுக்களின் தொடர்பை பெற்றிருந்தாலும், கோட்சார சனியின் நிலையை பொறுத்து கல்வியில் பாதிப்பு ஏற்படும் அல்லது உயர் கல்வி தடைபடும்.  அப்போது அக்கால அளவு எத்தனை மாதங்கள் நீடிக்கும் என்பதை தகுந்த ஜோதிடரின் உதவியை நாடி அந்த கால கட்டத்தை கடந்ததும் தடைபட்ட கல்வியை தொடரச் செய்யலாம். பின்வரும் ஜாதகம் அந்த மாதிரியானதுதான்.



இந்தப்பெண்ணுக்கு சுக்கிர திசையில் புதன் புக்தி நடக்கிறது. சுக்கிரன் ஒன்பதாம் பாவாதியாவதால் உயர்கல்வியை குறிக்கிறது. ஆனால் புக்தி நாதன் புதன் ஐந்து மற்றும் எட்டுக்கு அதிபதி. புதன் தனது புக்தியில் ஐந்தாம் பாவ பலனை தந்துவிட்டு எட்டாம் பாவ பலனாக புக்தியின் பிற்பாதியில் கல்லூரிக் கல்வியை தடை செய்கிறது. ஜாதகி பள்ளிச் சூழலை கல்லூரியில் எதிர்பார்த்து அது கிடைக்காததால் குறிப்பிட்ட கல்லூரியில் படிப்பை தொடர முடியாது என்கிறார். இச்சூழலில் புதன் புக்தி முடிந்ததும் அடுத்த புக்தி சாதகமான சூழலில் கல்வியை தொடர செய்வது அவசியம்.


கிரகங்கள் ரீதியான தொழில்களை வழங்கும் கல்வியை தேர்ந்தெடுத்தல்.

சூரியன்:
அரசு வகை, நிர்வாகம், நிரந்தர வருமானம் தரத்தக்க தொழில்கள், அரசியல், அதிகாரம் செலுத்தக்கூடிய தொழில்கள். மருத்துவம், தந்தை வழி பூர்வீக தொழில்கள்.

சந்திரன்:
நீர், திரவம் சார்ந்த தொழில்கள், அன்றாடம் அழியக்கூடிய தொழில்கள், அடிக்கடி இடம் பெயரக்கூடிய தொழில்கள்.

செவ்வாய்:
இயந்திரம், பூமி வகை, வாகனம், கண்காணிப்பு, மேலாண்மை, அறுவை சிகிச்சை மருத்துவம், ஆயுதங்களை பயன்படுத்தி செய்யப்படும் தொழில்கள், பாதுகாப்பு, சீருடை அணிந்து சீரான ஒழுங்கு முறையுடன் செய்யும் அனைத்து தொழில்களும்.

புதன்:
கல்வி, கணிதம், ஜோதிடம், மருத்துவம், இசை, காலி நிலம், தகவல் தொடர்பு சார்ந்த தொழில்கள். பத்திர வகை, எழுத்தி வகை தொழில்கள்.

குரு:
ஆன்மிகம், போதனை, தங்கம், புரோகிதம், கோவில் அர்ச்சகர், குழந்தை நலம் சார்ந்த, நீதிபதி, கௌரவமான, மதிப்பான அனைத்து தொழில்களும்.

சுக்கிரன்:
ஆடம்பரம், அலங்காரம், வாசனை வகை, மதுவகை, பூக்கள் வகை, இசை, நாட்டியம், சங்கீதம், சொகுசுக்காக செய்யப்படும் அனைத்தும் தொழில்களும்.

சனி:
கடினமாக உடல் உழைப்பைக்கொண்டு செய்யப்படும் தொழில்கள், ஊதியக்குறைவான தொழில்கள், கீழ்மட்ட வகைத் தொழில்கள், பழைய பொருட்கள், சீரமைப்பு, நிலக்கரி, சுரங்கம், சுத்தப்படுத்தக்கூடிய தொழில்கள்,

ராகு:
போதை, வட்டி, அடகு பிடித்தல், ஜோதிடம், ஆராய்ச்சி, மருத்துவம், நிழல் உலக தொழில்கள், விஷ வகை, பாம்பு வகை தொழில்கள், சட்ட விரோதமான தொழில்கள் அனைத்தும்.

கேது:
சட்டப்படியான அனைத்து தொழில்களும், ஜோதிடம், மருத்துவம், நெசவு, ஆன்மிகம், நீதி மன்றம், சிமென்ட், ரப்பர், நூல்-கம்பி வகைகள்.

மேற்குறிப்பிட்டபடி கிரகங்கள் தன, தொழில், சேவக (6 ஆமிடம்) ஸ்தானங்களோடு தொடர்புகொண்டு திசா-புக்தி நடத்துமானால் அவை தொடர்புடைய தொழில்களை வழங்கும் கல்வியை தேர்ந்தெடுக்கலாம்.


மேற்கண்ட ஜாதகத்தில் செவ்வாயும் சனியும் பரஸ்பர பார்வையில் உள்ளது. ஜாதகர் குரு திசையில் குரு சாரம் பெற்ற புதன் புக்தியில்  பொறியியல் கல்வியில் சேர்ந்தார்.. திசா நாதன் குரு புதன் வீட்டில் சந்திரன் சாரம் பெற்று திசை நடத்துகிறது. புதனும் சந்திரனும் பரிவர்த்தனையில் உள்ளது. லக்னாதிபதி சூரியனும் புதனின் வீட்டிலேயே உள்ளார். கேது தொழில் ஸ்தானமான 10 ஆமிடத்தில் உள்ளது. செவ்வாய் தனது பகை கிரகமான வக்கிர கதியில் பலகீனமாக அமைந்த சனி பார்வை பெற்றுள்ளது. அதனால்  ஜாதகத்தில் சனி-செவ்வாய் தொடர்பை விட புதன் தொடர்பே ஓங்கி உள்ளது. ஜாதகர் புதன் புக்தி முடிந்து சந்திரன் சாரத்தில் அமைந்த கேதுவின் புக்தி துவங்கியதும் முதல் வருடத்தோடு பொறியியல் கல்வியை கைவிட்டு மருத்துவத்திற்கான நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்று 2016 ஆம் ஆண்டு மருத்துவக் கல்வியில் (MBBS) சேர்ந்தார். மாற்றத்தை குறிக்கும் சந்திரனின் சாரம் பெற்ற திசா நாதன் குரு அதே சந்திரனின் சாரம் பெற்ற கேது புக்தி துவங்கியதும் மாற்றத்தை தந்தது. குறிப்பிடத்தக்க ஒரு அம்சம் பொறியியல் கல்வியில் இம்மாணவர் முதலாமாண்டில் ஓரிரு பாடங்களை தவிர்த்து பெரும்பாலான அனைத்து பாடங்களிலும் தோல்வியுற்றார். ஆனால் மருத்துவ நுழைவுத்தேர்வில் வென்று தற்போது அங்கு சிறப்பாக கல்வி பயின்று வருவது குறிப்பிடத்தக்கது.  

இதை இங்கு குறிப்பிடக்காரணம் ஜாதகத்தில் கல்வித்துறையை தேர்ந்தேடுக்கும் போது கிரக வலு, கிரக சேர்க்கை, பரிவர்த்தனை போன்ற அம்சங்களை பாவகங்களோடு தொடர்பு படுத்திப் பார்த்தே முடிவு செய்ய வேண்டும் என்பதற்காகவே.

மேலே குறிப்பிட்டிருக்கும் தொழில்கள் பொதுவானவையே. கிரக காரகப்படியும் சேர்க்கைப்படியும் பல்வேறு தொழில்களை அளவிட முடியும். அதை ஜாதக அமைப்பை பொறுத்து ஒருவருக்கு சிறப்பை தரும் கல்வியை தகுந்த ஒரு ஜோதிடரால் கூற முடியும் என்பதால்தான்.

எனவே உயர் கல்வியை தேர்ந்தெடுக்கும்போது பெற்றோர்களுக்கு கவனம் தேவை.

அடுத்த பதிவு

“பரிகாரம்”

வெகு விரைவில் அடுத்த பதிவில் சந்திப்போம்,

அதுவரை,

வாழ்த்துக்களுடன்,

அன்பன்,
பழனியப்பன்,
கைபேசி எண்: 07871244501, 08925308253 (Whatsapp)

Monday, 5 November 2018

உயிரோடு விளையாடு.

2042 ஆம் ஆண்டில் அது ஒரு மழைக்கால ஞாயிற்றுக்கிழமை.
ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் முகப்பில் இராவின் அடையாளத்தை பரிசோதித்த காவலாளி ரிஷியை பார்த்து நமட்டு சிரிப்புச் சிரித்தான். ரிஷி அவனை எரித்துவிடுவதுபோல் பார்த்துவிட்டு இராவை உள்ளே அழைத்துச் சென்றான்.



ஸ்வீடனில் நாம் ஓரிடத்திற்குள் நுழையும்போதே 28 அடி தொலைவிலிருந்து நமது கண்களைப் பார்த்து அடையாளங்கள் உறுதி செய்து அனுமதிக்கும் தொழில்நுட்பம் வந்துவிட்டது தெரியுமா இரா. இங்கு அடுத்த ஆண்டு இறுதியில் அதை செயல்படுத்த ஆரம்பித்துவிடுவோம் நாங்கள் என்றான் ரிஷி.

முதலில் அதைச் செய் என்ற இரா “ஏய் ரிஷி நீ சொன்னபடி வலையில் அலசியதில் ஜோதிட சாகரம் என்றொரு ஜோதிட தகவல் பதிவு குழுவில் நீ ஈடுபாடு காட்டும் ஜோதிட விஷயங்களை 2018 லேயே அலசியிருக்கிறார்கள்” என்றாள்.

Interesting என்றான் ரிஷி.

ஆமாம் எதிர்கால திருமண சூழல், வாழ்க்கை முறைக்கான ஜோதிட காரணங்களை பழனியப்பன், சிவக்குமார், கீர்த்தி கணேஷ்  போன்ற அன்றைய மெம்பர்ஸ் அலசியிருக்கிறார்கள் என்றாள்.

"சரி வீட்டுக்கு வந்ததும் காண்பி" என்றான் ரிஷி.

ஷாப்பிங்கை முடித்துக்கொண்டு இரவு தனது பிரத்யேக தகவல் தொடர்பு திரைமுன் அமர்ந்தபோது தனக்கு வந்திருந்த அந்த தகவலை பார்த்தான் ரிஷி.

உடனே தொடர்புகொண்டான்.

எதிர்முனை “ ஹலோ” என்றது.

“ஐம் ரிஷி”

“ஓஹ் நைஸ் ஐம் மீனா” என்றது குரல்.

“உங்களது பதிலை பார்த்தேன். நாம் சந்திப்போமா”

“ஆம் சந்திப்போம்”

“நீங்கள் வேலை செய்யும் ஸ்கூல் எங்கு உள்ளது” என்றான் ரிஷி.

“மடிப்பாக்கம்”

“நான் வேளச்சேரி” என்றபடி அரைமணி நேரம் பேச்சு நீண்டது.

இறுதியாக ஞாயிறு மாலை 4 மணிக்கு சந்திப்பதாக முடிவானது.

சிறிது நேரங்கழித்து ஜோதிட சாகர பதிவுகளை எடுத்துக்கொண்டு ரிஷியை அணுகினாள் இரா.

“இன்னொருனாள் பார்த்துக்கலாம்” என்றான் ரிஷி.

“ ஏன் என்ன ஆச்சு?” என்றாள் இரா.

மீனாவின் செய்தியையும் பேசியதையும் கூறினான் ரிஷி.

 “என்னையும் அழைத்துப்போவாயா?” என்றாள் இரா. 

“ஷ்யூர்” என்றபடி அவளது கையைப்பிடித்து இழுக்க இரா அவன்மீது சரிந்தாள்.
மின்விளக்கை பார்த்து கண் சிமிட்டினான் ரிஷி.

விளக்கு அணைந்தது.

வெளியே வானம் தூறிக்கொண்டிருந்தது.

காலை டைனிங் டேபிளில் இருந்து கொண்டு இராவை பார்த்து இரைந்தான் ரிஷி.

“ஆபீசுக்கு டைம் ஆச்சு சீக்கிரம்”

“கொஞ்சம் வெயிட் பண்ணு” என இரா கூற ரிஷி டென்ஷனாகி திட்டினான்.

“என்ன மனுஷியா பாரு மிஷினா பார்க்காத” என்றபடி தட்டில் இட்லியை வைத்தாள் இரா.

இட்லியை விழுங்கிக்கொண்டு இராவை பார்த்த ரிஷி “போய் குளீங்கடி” என்றான்.

“நான் குளித்தால் நீதான் மச்சான் செலவு செய்யணும்” என்றாள் இரா.

“எல்லாம் என் தலை எழுத்து” என்று நெற்றியில் ரிஷி தட்டிக்கொள்ள இரா சிரித்தாள்.

ஞாயிறு மாலை இராவுடன் ரிஷி மீனாவை சந்தித்தான்.

“ஓஹ் இவள்தான் இராவா” என்று மீனா கூற,

இரா “இவள்தான் மீனாவா” என்று கூற ரிஷி இராவை அதட்டினான்.

ரிஷியும் மீனாவும் இரண்டரை மணி நேரம் பேசிக்கொண்டிருந்தனர். மீனா அனாதையான தான் வளர்ந்த ஆஸ்ரமம், கல்வி, தற்போது அரசுப்பள்ளியில் ஆசிரியையாக பணிபுரியும் நிலை என தன்னைப்பற்றி அனைத்தையும் கூறினாள். ரிஷி தான் இன்ஜினியரிங்கில் தங்கப்பதக்கம் பெற்று சைண்டிஸ்ட் ஆக இருப்பது , கிராமத்தில் வாழும் தனது வயோதிக பெற்றோர். திருமணச் சூழல், ஜாதக தோஷம், இரா  என குற்ற உணற்சியில்லாமல் தன்னைப்பற்றி மறைத்துப் பேசாமல் உண்மையாக பேசினான். அப்படித்தான் பேச வேண்டும் என அவனுக்குத் தோன்றியது.

கல்வியில் உயர்ந்து நல்ல வளமையான நிலையில் இருக்கும் ஒருவன் ஜாதகம், தோஷம் எனப் பேசுவதைப்பார்த்து மீனா ஆச்சரியப்பட்டாள்.



“என் பின்னணி எனக்குத் தெரியாது. தவறான உறவுக்கு பிறந்தவளாகக்கூட இருக்கலாம். எனக்கு ஜாதகமும் கிடையாது” என்றாள் மீனா. தனது பின்னணியை பாராமல் தன்னை மதித்து மணந்துகொள்ளும் ஒரு ஆண் மகனை எதிர்நோக்கி இருக்கும் தனது சூழலை மீனா கூறினாள்.

இறுதியாக இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவானது.

எளிய முறையில் தனது கிராமத்தில் பெற்றோர் முன்னிலையில் திருமணம் முடித்து சென்னை திரும்பினான் ரிஷி. மீனா ரிஷிக்கு ஒரு அருமையான மனைவியாக வந்து வாய்த்தாள். மீனாவிடம் இயல்பான அதீத ஈர்ப்பு இருந்தாலும் ரிஷியால் இராவை சீண்டுவதை நிறுத்த இயலவில்லை.  ரிஷி மற்றும் மீனாவின் உணவு மற்றும்  ஆரோக்ய விஷயத்தில் இரா நிலைமை அறிந்து செயல்பட்டதால் மீனாவிற்கும் இரா மீது  ஒரு பட்சாதாபம் தோன்றியது. ஒருநாள் ரிஷியிடன் கேட்டேவிட்டாள் மீனா.

“இராவிற்கு மட்டும் குழந்தை பிறக்கும் என்றால் என்னை நீ தேர்வு செய்திருக்கமாட்டாய் தானே ரிஷி”

“ஓரளவிற்கு அது உண்மைதான் மீனு” என்றான் ரிஷி.

“அது என்ன ஓரளவிற்கு உண்மை” என்றபடி அவளது காதை திருகினாள் மீனா.
  
சரியாக எட்டு மாதம் கழித்து இன்னும் குழந்தை வாய்ப்புக்கான அறிகுறியே இல்லை என்பதை உணர்ந்து ஜோதிடரை அணுகி ஆலோசனை பெற விரும்பினான் ரிஷி.

இராவை அழைத்து அன்னைக்கு ஜோதிட சாகரம் என்று கூறினாய் அல்லவா அவர்களில் ஒரு ஆக்டிவ் ஜோதிடரை தொடர்புகொண்டு எனது ஜாதகத்தை அனுப்பி பதில் வாங்கு என்றான் ரிஷி. இரா அதற்கான முயற்சியை எடுக்க வியாழன் இரவு ஒன்பது மணிக்கு பதில் அளிக்கப்படும் என்று ஜோதிடர் சிவக்குமாரிடம் இருந்து பதில் வந்தது. மீனாவிற்கு இரண்டு மாதங்களாக ஜீரணத்தில் பிரச்சனை இருக்கிறது. அதற்கான மருத்துவரும் அந்த நேரத்திலேயே அப்பாயிண்மென்ட் அளித்திருக்க “ நீ ரெகார்ட் செய்து வை ரிஷி, நான் டாக்டரிடம் போய் வந்தபிறகு கேட்டுக்கொள்கிறேன்” என்றுவிட்டு டாக்டரை காணச்சென்றுவிட்டாள் மீனா. 

ஜோதிடர் சிவக்குமாரை திரையில் குறிப்பிட்ட நேரத்தில் பிடித்தான் ரிஷி.

“எனது குருநாதரை வணங்கி ஜோதிடர் சிவக்குமார்” என்றார் ஜோதிடர்.

"வணக்கம் ஐயா. நான் ரிஷி ஜோதிடத்தில் ஈர்ப்புள்ளவன். உங்களது குழுவைப்பற்றி தெரியும் பழனியப்பன் ஐயாவின் வலைத்தளத்தை அவ்வப்போது படிப்பவன் நான். அவர் எப்படி இருக்கிறார் ஐயா? என வினவினான்.

நலமாக இருக்கிறார். முதுமை. நினைவுத்திறன் குறைந்துவிட்டது. காது மந்தம். எப்போதாவது குழுவில் எட்டிப்பார்ப்பார். இப்போது தனது துணைவியாருடன் பெண்ணின் குடும்பத்துடன்   ஊட்டியில் வசிக்கிறார் என்றார் ஜோதிடர். 

தொடர்ந்து “உங்கள் ஜாதகம் ஆய்வு செய்யப்பட்டுவிட்டது. பலன்களுக்கு செல்லலாமா?” என்றார் ஜோதிடர்.

“எங்களுக்கு புத்திர பாக்கியம் பற்றி கேட்டிருந்தோம். அவளது  ஆரோக்கியம் பற்றி கவலையாக உள்ளது. திருமணமாகி வந்ததிலிருந்து அவளுக்கு உடன் ஆரோக்கியத்தில் பிரச்சினை ஏற்பட்டதாக கூறுகிறாள். அவளது சிரமங்களை பார்த்து வேதனைப்படுகிறேன்.அதற்கு என்ன காரணம் என்றான்.

உடனிருந்த இராவை கவனித்த ஜோதிடர் “இவர் யார்” என்று கேட்டார்.

சொன்னான்.

கும்ப லக்னமான உங்களுக்கு புத்திர காரகன் குரு இரண்டாம் இடத்தில் வக்கிரம் ஆகியுள்ளது. ஏழாமிடத்தில் ராகுவுடன் சுக்கிரன் சேர்ந்துள்ளது. ஏழாமிடம் காம ஸ்தானம். சுக்கிரனும் தாம்பத்யத்தில் முக்கிய பங்கு வகிக்கும் கிரகம்தான். ராகு 7ல் இருந்தால் ஏழாமிட தொடர்பை வளர்த்தும். தறிகெட்ட விபரீத காம உணர்வு. ஒன்றுக்கும் மேற்பட்ட தொடர்புகள். இவற்றை ஏற்படுத்த வேண்டும். அதனால் மனைவியான சுக்கிரன் ராகுவால் கடுமையாக பாதிக்கப்படும். ராகுவுடன் சுக்கிரன் சேர்ந்துள்ளதால் மனைவிக்கு ஆயுள்குறைவும் ஏற்படுத்தும் என்றார் ஜோதிடர்.

“ஐயோ” என மனதுக்குள் கூறிக்கொண்டான் ரிஷி.

இந்த பாதிப்பிலிருந்து மீள வழியுண்டா என வினவினான் ரிஷி.

“ராகு என்ற மாயை ஏற்படுத்தும் விபரீத எண்ணங்களுக்கு இடம்கொடாமல்  மனதை கட்டுப்படுத்தி மனைவியை நேசித்து இல்லறம் நடத்துங்கள்” என்று இராவை எரிச்சலுடன் பார்த்துக்கொண்டே கூறினார் ஜோதிடர்.

“எனது ஜாதகப்படி மனைவிக்கு ஆரோக்ய பாதிப்பு ஏற்படுமா?” என்றான் ரிஷி.

ஏழாமிடம் சுக்கிரனுடன் ராகு சேர்க்கை ஏற்பட்டுள்ளது. ராகுவுடன் சுக்கிரன் சேர்வதே மனைவியின் ஆயுளுக்கு பாதிப்பு என்பதோடல்லாமல் சுக்கிரன் நீசத்தை நோக்கி செல்கிறது. குரு இரண்டில் வக்கிரமாகி உத்திரட்டாதியில் நிற்கிறது. குரு நிற்கும் நட்சத்திராதிபதி சனி துலாத்தில் உச்சமாகி வக்ரமடைந்துள்ளது. எனவே மனைவிக்கு கிட்னியில் பாதிப்பு ஏற்படும் அது வயிற்றுப்பகுதியில் எதிரொலிக்கும் என்றார் ஜோதிடர் சிவக்குமார்.

அவளுக்கு வயிற்றுக்குச் செல்லும் உணவு செரிமானமாவதில்லை என்று அதற்காக சிகிச்சை பெற்றுவருகிறாள் என்றான் ரிஷி.

இல்லை அதன் மூல காரணம் கிட்னி மற்றும் கர்ப்பப்பையில்தான் இருக்கும். எனவே அதை பரிசோதித்துக்கொள்ளுங்கள் எங்கள் குழுவில் டாக்டர் நரேன் வயிறு தொடர்பான மருத்துவத்தில் நிபுணத்துவம் பெற்றவர். டாக்டர் சண்முகசுந்தரம் கிட்னி ஸ்பெசலிஸ்ட். இருவருக்கும் ஜோதிட அறிவும் உண்டு தேவைப்படின் பயன்படுத்திக்கொள்ளுங்கள் என்றார் ஜோதிடர்.

தொடர்ந்த ஆலோசனைகளுக்குப் பிறகு பரிகார முறைகளை குறித்துக்கொண்டு திரையை அணைத்தான் ரிஷி.

ஜோதிடர் கூறிய வார்த்தைகளின் விபரீதங்களை உணர்ந்த ரிஷி பரிகார மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் இறங்கினான். ஜோதிடர் கூறிய மருத்துவர்களை தொர்புகொண்டு நேரில் பரிசோதனைக்கு அழைத்துச் சென்று வந்தான். ஒன்றரை மாதங்களில் நிலைமை சரியானதுபோல தோன்றினாலும் மீனாவிற்கு வயிற்று உபாதை மிதமாகவேனும் இருக்கவே செய்தது.

அன்று ஒரு அரசு விடுமுறை நாள். மீனாவிற்கும் பள்ளி விடுமுறை என்பதால் பிக்னிக் செல்வது என்று முடிவாகியிருந்தது.ரிஷி செய்திகளை கவனித்துக்கொண்டிருந்தான். இரா கீழ்த்தளத்தில் வந்து சேர்ந்த மளிகை பொருட்களை எடுத்துவர சென்றிருந்தாள்.

திடீரென்று உடைமாற்றும் அறையில் சத்தம் கேட்டது.

ஓடிச்சென்று பார்த்தபோது மீனா தரையில் சுருண்டிருந்தாள். 

மீனா.. மீனா...என கத்தியபடி அவளது கன்னத்தை தட்டினான். 

மீனாவை தூக்கி மடியில் வைத்துக்கொண்டு அவளது தலையில் ஏதேனும் அடிபட்டிருக்கிறதா எனப்பார்த்தான். .

மீனா மயங்கியிருந்தாள்.

மீனு மீனூ..

என்னடி ஆச்சு எனும்போதே அவனுக்கு கண்களில் நீர்கோர்த்தது.

அவளை தரையில் கிடத்திவிட்டு தண்ணீரை எடுத்து வந்து முகத்தில் தெளித்தான்.

மீனு...

மீனு..

உணர்வில்லை.

இரா...

இரா...

எங்க போய்த் தொலைஞ்சே என கத்தியபடி தனது மணிக்கட்டுப் பட்டையை தட்டி இராவுக்கும் அவரச உதவிக்கும் தகவல் அனுப்பிவிட்டு உள்ளறைக்கு ஓடிச்சென்று டாக்டர் நரேன் மீனாவிற்கு அளித்திருந்த மருந்து வில்லைப் பட்டைகளை எடுத்து ஆபத்துக்கால வில்லையை கண்டுபிடித்து அவளது வாய்க்குள் திணித்தான் ரிஷி.

மீண்டும் தண்ணீரை மீனாவின் முகத்தில் தெளித்து அவளை உலுக்கினான்.. அவளது மார்பில் கைவைத்து அழுத்தியவாறே  மற்றோர் கையால் மிதமான வேகத்தில் குத்தினான். மீனாவின் கண்ணத்தை குவித்து அவளது வாயோடு தனது வாயை வைத்து ஊதினான். தனது நிறுவனத்தில் தனக்கு அளிக்கப்படிருந்த அத்தனை முதலுதவி சிகிச்சைகளையும் முயன்றான்.

பலனில்லாமல் போகேவே பீறிட்ட அழுகையை அடக்கியபடி அவளது கால் பாதங்களை தனது கரங்களில் தாங்கி விறுவிறுவென தேய்க்க ஆரம்பித்தான்.

“என்ன விட்டுட்டு போய்டாதடி” என ஓலமிட்டு புலம்பிய தருணத்தில் ரிஷி அவளது உடல் சில்லிடத்தொடங்கிவிட்டதை தெளிவாக உணர்ந்தான்.

பொங்கிவரும் அழுகையை கட்டுப்படுத்த இயலாத ரிஷி மீனாவை தன் மார்போடு அணைத்துக்கொண்டு தனது கதறலை துவக்கினான்.

“கொன்னுட்டனே....”

படீரென கதவை திறந்து பாய்ந்து வந்த இரா (Indian Robotic Association  வடிவமைத்த நான்காம் தலைமுறை ரோபோட்) அவனருகில் அமர்ந்து அவனது தோளைத்தொட்டாள்.

தரைத்தளத்தில் ஆம்புலன்ஸ் ஓசை ஒலித்தது.



மீண்டுமொரு பதிவில் சந்திப்போம்.

அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்களுடன்,

அன்பன்,
பழனியப்பன்.
கைப்பேசி:7871244501.