Thursday, 12 September 2019

அடிக்கிற கை அணைக்குமா?


யோகம் என்பது நாம் முற்பிறவிகளில் செய்த புண்ணிய செயல்களின் மூலமாக இறைவன் நம் கணக்கில் வைத்துள்ள வரவு எனலாம். இப்பிறவியில் அதை நல்வழியில் செலவு செய்வது நமது பிறவிப்பயனை கடந்து இறைவனை நெருங்க உதவும். தோஷம் என்பது நாம் முற்பிறவிகளில் சேர்த்துவைத்த கடனுக்கு ஒப்பானதாகும்.  நம்மிடமுள்ள தனத்திற்கு தக்கபடி வாழ்ந்து கடனை அடைத்து நிம்மதி பெறுவது சிறப்பு. அதை விடுத்து நம்மிடம் உள்ள இருப்பைவிட அதிக கடனை ஏற்படுத்திக்கொண்டு அதை அடைக்க வழி தெரியாமல் குறுக்கு வழிகளை கடைப்பிடித்து பாவக்கடனை அதிகப்படுத்திக்கொள்பவர்களுக்கு அடுத்த பிறவி வரை காத்திருக்க வேண்டியதில்லை இந்தப்பிறவியிலேயே அனைத்தையும் பிடுங்கிசெல்ல வருவாய்துறை அலுவலர்கள் வந்து சோதிப்பது போல் இறைவன் நம்மை சோதிக்கிறான்.



ஒரு கிரகம் ஒரு யோகத்தை தரக்கூடிய நிலையில் ஜாதகத்தில் ஒரு பாவத்தில் அமைகிறது என்றால் அதன் அமைவு மற்றொரு பாவத்திற்கு, கிரகத்திற்கு பாதிப்பை தரும் நிலையில் இருக்கலாம். எனவே ஒவ்வொரு கிரக அமைவிற்கும் நல்ல பலன்கள் மட்டுமல்ல தீய பலன்களும் ஜாதகத்தில் ஏற்படும். இது தவிர்க்க முடியாதது. ஒளியை உமிழும் ஒரு பொருள் தனித்திருந்தால்  அதாவது சுயம்புவாக இருந்தால் அதற்கு நிழல்கள் இருக்காது. ஆனால் அந்த ஒளியை நம்பி செயல்படும் பொருள்கள் ஒளியை நோக்கிய திசையில் பிரகாசத்தையும் மறுபுறம் நிழலையும் கொண்டிருக்கும். இங்கு ஒளி ஒளிவடிவான இறைவன் எனக்கொண்டால் நாமெல்லாம் சுய ஒளியற்ற, அந்த ஒளிப்பிழம்பான இறைவன் அருளால் வாழும் உயிர்கள் என்று எடுத்துக்கொள்ளலாம். இந்த வகையில் சுயம்புவான இறைவனுக்கு கர்மங்கள் கிடையாது.

நமக்கு சுய ஒளி இல்லாததால் நமது கர்மங்களை இறைவனை நோக்கிய நிலையில் அமைத்துக்கொண்டால் வாழ்வில் நிம்மதி பெறலாம். அவ்வாறின்றி தீய (நிழல்) கர்மங்களை நோக்கிய நிலையில் நமது வாழ்வை செலுத்தினால் நமக்கு கிடைக்கும் ஒளியையும் நமது தீய கர்மங்கள் முறியடித்து நம்மை வாழத்தகுதியற்றதாக  மாற்றிவிடும்.

பின்வரும் ஜாதகம் ஒரு பெண்னுடையது.


தனுசு லக்ன ஜாதகத்தில் செவ்வாயும் குருவும் பரிவர்த்தனையில் உள்ளது. லக்னத்திற்கு இரண்டில் சுக்கிரன் ராகு சேர்க்கை உள்ளது. இது செல்வ வளமை மிக்கவர்  ஜாதகி என்பதை குறிப்பிடுகிறது. சூரியன் 7 ஆமிதிபதி புதனுடன் இணைந்து பத்தாமிடத்தை பார்ப்பது சிறப்பு. 2 ஆமதிபதியும் ஜீவன காரகனுமாகிய சனி சுக்கிரன் சாரம் பெற்று சுக்கிரனும் இரண்டாமிட தொடர்பு கொண்டது யோகமே. விரைய ஸ்தானத்தில் குரு பரிவர்த்தனையில் இருப்பது ஒருவகையில் தன யோகத்தை குறிக்கும். விரையத்திற்கு குறைவில்லா தனவரவை குரு தருவார் எனலாம். 10 ஆமிடத்தை 10 ஆமதியோடு இணைந்த சூரியன் தர்ம கர்மாதிபதி யோகம் கொண்டு பார்ப்பதால் ஜாதகி சுய தொழில் செய்கிறார்.  நீச சனி சாரம் பெற்ற சூரியன் சனி குறிப்பிடும் இரும்பு தொடர்புடைய தொழில் செய்கிறார். லக்னாதிபதி நீச சனி சாரம் பெற்றதும் இதற்கு ஒரு காரணம்.   

7 ஆமதிபதி புதன் நீச நிலை பெற்று செவ்வாயும் நவாம்சத்தில் நீசம் பெற்று அமர்ந்தது தோஷமே. உபய லக்னத்திற்கு ஏழாமதிபதி வலுகுறைவது ஒருவகையில் நன்மை எனும் சூழலில் ஏழாமதிபதி லக்னாதிபதியான குருவின் பார்வையை பெறுவது கணவரை இந்த ஜாதகம் தாங்கிப்பிடிக்கிறது என்றாலும் செவ்வாய் நவாம்சத்தில் நீசம் பெற்றது கணவர் போதுமான திறமை அற்றவர் என்பதை குறிப்பிடுகிறது. இவர்கள் இரும்பு வியாபாரம் செய்கிறார்கள். இரண்டாமதிபதி சனி 5ல் செவ்வாய் வீட்டில் சுக்கிரனின் பரணி நட்சத்திரத்தில் நீசம் பெற்ற நிலையில் சுக்கிரன் இரண்டில் செவ்வாயின் அவிட்ட நட்சத்திரத்தில் அமைந்ததாலும் செவ்வாய்க்கு சனி திரிகோணம் பெற்றதாலும் செவ்வாய்க்கும் சனிக்கும் ஏற்பட்ட தொடர்பால் இவர்கள் இரும்புக்கடை நடத்துகிறார்கள். ஏழாமதியைவிட லக்னாதிபதி வலு கூடியதால்  ஜாதகிதான் தொழிலை நிர்வகிக்கிறார். ஏழாமதிபதி வலு குறைவது தோஷமே என்றாலும் அந்த தோஷமே ஜாதகி நிர்வாகியாக மாற வழி செய்துள்ளது கவனிக்கத்தக்கது.

கீழே மற்றுமொரு பெண்ணின் ஜாதகம்.

கடக லக்ன ஜாதகத்தில் 7 ல் நின்ற ராகு திசையில் ஜாதகிக்கு திருமணம் நடந்தது. 7 ல் லக்னாதிபதி சந்திரனோடும் மாங்கல்யகாரகன் செவ்வாயோடும ராகு நிற்பது கடும் தோஷமே. நவாம்சத்தில் 7 ஆமதிபதி சனி, மாங்கல்ய காரகன் செவ்வாய் ஆகியோர் நீசமானது தோஷத்தை உறுதி செய்கிறது.  7 க்கு பாதகத்தில் குரு நிற்கிறார். இந்த அமைப்பால் குழந்தை பிறந்ததும் 7 ஆமிட தோஷம் செயல்படும்.  குரு திசையில் ஜாதகிக்கு மகன் பிறந்தான். குரு திசை மாங்கல்யத்தையும் பறித்தது. 7 ஆமிடம் தோஷம் பெற்று, 7 ஆமதிபதியும் பாதகத்தில் 11 ல் அமைந்து, 7 க்கு பாதகத்தில் அமைந்த 6 ஆமதிபதி குரு பார்வையை 7 ஆமதிபதி சனி  பெற்றது ஆகியவை தோஷம் வெளிப்படும் காலகட்டத்தை தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.

தொடர்பு ஸ்தானமான 7 ஆமிடத்திற்கு லாபத்தில் குரு நின்று தொடர்பு ஸ்தான அதிபதியும் ஜீவன காரகனுமான சனியை பார்க்கிறார். எனவே குரு மூலம் ஜாதகிக்கு லாபமும் உண்டு என்பது புலனாகிறது. லக்னத்திற்கு திரிகோணத்தில் குரு அமைந்ததும் சனிக்கு திரிகோணத்தில் புதன் சூரியன் அமைந்ததும், தொடர்பு ஸ்தானமான 7 ஆமிடதிற்கு திரிகோணத்தில் சூரியன் புதன் அமைந்ததுமான அமைப்பால் ஜாதகிக்கு அரசுப்பள்ளி ஆசிரியையாக வேலை கிடைத்தது.

முன்பத்தியில் கூறப்பட்ட அமைப்பால் குரு குடும்ப வாழ்வை பறித்தார். ஆனால் அதே குரு ஜாதகியின் வாழ்வை தாங்கியும் பிடிக்கிறார் என்பது நம்பக்கூடிய உண்மை. முந்தைய அமைப்பு தோஷம் பிந்தைய அமைப்பு யோகம். பெரும்பாலும் பாவத்துவ அமைப்பை பெற்ற கிரகங்கள் முதலில் பாதகத்தை செய்துவிட்டு பிறகு பிறகு யோகம் செய்யும் அமைப்பால் பிற்காலத்தில் யோகத்தையும் செய்துவிடுவதை பார்க்க முடிகிறது. ஜாதக அமைப்பால் இது மாறுபட்டும் செயல்படும் என்பதை கவனத்தில் கொள்க. கீழே வரும் ஜாதகம் அத்தகையது.

கீழே மூன்றாவதாக ஒரு ஆணின் ஜாதகம்.

துலாம் லக்ன ஜாதகத்தில் இரண்டாமிடத்தில் இரண்டாமதிபதி செவ்வாயோடு பாக்ய -விரையாதிபதி புதனும் பாதகாதிபதி சூரியனும் நிற்கிறார்கள். ஜாதகருக்கு லாபத்தில் நிற்கும் சந்திர திசையில் உச்ச குருவின் பூரட்டாதி-4 சாரம் பெற்ற கேது புக்தியில் திருமணம் நடந்தது. அடுத்து வந்த சூரியனுடன் நிற்கும் செவ்வாய் திசையில் ஜாதகர் அரசியலில் ஈடுபட்டு பஞ்சாயத்து தேர்தலில் வெற்றி பெற்றார். சனிக்கு எந்த கிரக தொடர்பு ஏற்படுகிறதோ அந்த கிரகத்திற்கு தனது காரகத்துவமான உண்மை, கடின உழைப்பு, நேர்மை என்ற நற்பண்புகளை சனி வழங்குவார்.  இங்கு சூரியன் வீட்டில் சனி நிற்பதாலும் சூரியனுக்கு 1௦ ல் சனி நிற்பதாலும், சனி சாரத்தில் சூரியன் நிற்பதாலும் ஜாதகர் தனது பதவி காலத்தில் பெருமளவு நேர்மையுடன் ஊருக்கு சில நல்ல காரியங்களை செய்து கொடுத்தார்.

ஆனால் சூரியனும் சனியும் மேற்சொன்ன அதே அமைப்பினால் பாதகங்களையும் செய்ய உரிமை பெற்றவர்களாயிற்றே. அதன்படி 1௦ ஆமிடத்தில் உச்சம் பெற்ற குடும்ப காரகன் குருவின் பார்வை பெற்ற இரண்டாமிட கிரகங்கள் குடும்ப வாழ்வை சிதறடித்தது. அதே செவ்வாய் திசையின் இறுதிப்பகுதியில் 2011 ல் ஜாதகரின் மனைவி ஜாதகரிடமிருந்து விவாகரத்து பெற்று விலகிச் சென்றார்.

இதிலிருந்து நாம் அறிய வருவது,

யோகத்தை செய்யும் கிரகங்கள் பாதகத்தையும் செய்யும்.

ஒரே மனிதனுக்குள் மாறுபட்ட குணங்கள் இருப்பதைப்போல் கிரகங்களும் மாறுபட்ட திசா புக்தி , கோட்சாரங்களில் தங்களது செயல்களில் மாறுபாட்டை தருகின்றன.

அதீத யோகம் ஒருவருக்கு ஏற்படுகிறது என்றால் அதன் தாக்கமாக மற்றொரு விஷயத்தில் பாதிப்பு உறுதியாக இருக்கும். பொதுவாக ஒருவரது வாழ்வை பார்த்து மலைத்து நிற்கும் நாம் அதன் பின்னணியில் அவர் இழந்த இழப்புகளை கவனத்தில் கொள்வதில்லை.

அடுத்த வாரப்பதிவு

“ரகு VS ராகு”

வாழ்த்துக்களுடன்,
அன்பன்,
பழனியப்பன்,
கைபேசி:  08300124501.



Sunday, 12 May 2019

மணமுறிவும் மறு திருமணமும்.


திருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர் என்பது உணர்ந்து சொல்லிய வார்த்தைகள். வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரச் சூழ்நிலையில் மனிதன் இயற்கையை விட்டு வேகமாக விலகிச் சென்று  கொண்டிருக்கிறான். அதனால் இன்றைய மனிதனிடம் பொறுமை, சகிப்புத்தன்மை, விட்டுக்கொடுத்தல் ஆகிய மனித தன்மைகளும் விலகிச் சென்றுகொண்டிருக்கின்றன. இதன் விளைவே அதிரிகரித்து வரும் மண முறிவுகள். 



அமெரிக்க பூர்வ பழங்குடிகளான செவ்விந்திய தலைவரிடம்  குடியேரிகளான வெள்ளையர்கள் அவர்களது நிலப்பரப்பை தங்களுக்கு அளித்துவிடும்படி கேட்டு ஒரு ஒப்பந்தம் போட்டனர்.. அப்போது அந்த செவ்விந்திய தலைவர் குறிப்பிட்ட வாசகங்கள் இன்றும் அமெரிக்காவில் பிரபலமான வாசகங்கள்.

“இயற்கையோடு இணைந்து வாழ்ந்துகொண்டிருப்பவர்கள் நாங்கள். வேட்டையாடுவதில் மட்டுமல்ல சமுதாய, குடும்ப அமைவிலும் ஒரு ஒழுங்கமைவை நாங்கள் கடைபிடிக்கிறோம். நீங்கள் பொருளாதார வளத்திற்காக காடுகளை (இயற்கையை) அழித்தால் மிருகங்கள் அழிந்துவிடும். நீங்கள் மிருகங்களாக மாறிவிடுவீர்கள்” என்பது போன்ற ஒரு நீண்ட கருத்தை பதிவு செய்திருந்தது நினைவு வருகிறது.

கீழே ஒரு பெண்ணின் ஜாதகம்.


ரிஷப லக்ன ஜாதகத்தில் செவ்வாய் - சனி இரண்டும்  1 – 7 தொடர்பிலிருந்து சம சப்தமமாக பார்த்துக்கொள்கின்றன. சனி வக்கிரமானதால் இது கணவரின் விட்டுக்கொடுத்துச் செல்லும் குணத்தை பாதிக்கும். கிரகம் வக்ரமானால் திக் பலம் வலுவிழந்துவிடும். கணவர் தனது சில கருத்துக்களில் ஒரு முடிவோடுதான் செயல்படுவார் என்பதை இது குறிக்கிறது. பாக்யாதிபதி சனி பாக்ய ஸ்தானத்திற்கு பாதகத்தில் அமர்ந்து, பாக்ய ஸ்தானத்தில் நீச நிலையில் சந்திரனோடு இணைந்து அமர்ந்த குருவை வக்கிர சனி மூன்றாம் பார்வை பார்க்கிறது. புத்திரமே ஒரு பாக்கியம்தான் என்பதன் அடிப்படையில் ஒன்பதாமிடம் பெண்களுக்கு பிரதானமான புத்திர ஸ்தானமாகிறது. புத்திர தோஷம் கொண்ட இந்த ஜாதகத்தில் புத்திர பேறுக்காக மருத்துவ ஆலோசனை பெற கணவர் வர மறுத்ததால் விவாகரத்து கேட்டது இந்தப் பெண்.  


கீழே மற்றொரு ஆணின் ஜாதகம்.



தனுசு லக்னத்தவர்க்கு பாதகாதியாக 7 & 10 க்குரிய புதன் வரும் என்பதால் இவர்கள் புதனின் பாதகத்தை களத்திரம் அல்லது தொழில் வகையில் அனுபவிக்கின்றனர். பொதுவாக களத்திர ஸ்தானத்திற்கு விரைய ஸ்தானாதிபதியான 6 ஆமதிபதியுடன் 7 ஆமதிபதி ஒன்று சேர்வது களத்திரத்திற்கு  பாதிப்பை தரும். இதில் 6 ஆமதிபதி  களத்திர காரகன் என்பது இன்னும் பாதிப்பே. முக்கியமாக களத்திர காரகனுடனும் (சுக்கிரன்), களத்திர ஸ்தானாதிபதியுடனும் (7 ஆமதிபதி) பிரிவினையை குறிக்கும் சர்ப்ப கிரகங்கள் இணைந்து நின்றால் அந்த ஜாதகர் குடும்ப பிரிவினையை தொடர்புடைய கிரகங்களின் திசா புக்தி வரும்போது நிச்சயம் எதிர்கொள்வார் எனலாம். சர்ப்ப கிரகங்களில் கேது கிரிஸ்தவத்தையும், ராகு இஸ்லாமியத்தையும் குறிக்கும். கணவன் மனைவி இருவரும் இந்து மதத்தை சார்ந்தவர்கள். இந்த ஜாதகர் திருமணம் முடிந்து 13 நாளில் மனைவியை உதறினார். காரணம் இந்து மதத்தை சேர்ந்த மனைவி கிறிஸ்தவ கடவுளை வழிபடுவது தெரியவர கணவர் விலகிவிட்டார்.

மூன்றாவதாக ஒரு ஆணின் ஜாதகம் கீழே.


மேஷ லக்ன ஜாதகத்தில் பாதகாதிபதியும் ராசியாதிபதியுமான சனி பிரிவினையை குறிக்கும் ஆறாமிடத்தில் வர்கோத்தம வலுவுடன் நிற்கிறது. பாவத்தில் விரையாதிபதி குருவுடன் சேர்ந்து உச்ச கதியில் 7 ல் நின்றதால் 34 வயது நெருங்கிய நிலையில்தான் ஜாதகருக்கு திருமணமானது. பாதகாதிபதியுடன் சேந்து மற்றொரு பகைவன் வீட்டில்  சனியுடன் கிரக யுத்தத்தில் தோல்வியுற்று நவாம்சத்தில் நீசம்  பெற்றும் பல்வேறு வகையில் பலவீனமடைந்த லக்னாதிபதியும் யோகியுமான செவ்வாயால் ஜாதகரின் திருமண வாழ்வை தாங்கிப்பிடிக்க இயலவில்லை. ஏழில் நின்ற குரு திசை சுய  புக்தியில் ஜாதகருக்கு திருமணமாகி எட்டாவது நாளில் மனைவி ஜாதகரை பிரிந்து சென்றுவிட்டார்.   

சந்நியாச யோகம்கொண்ட இந்த ஜாதகத்தில் லக்னாதிபதி செவ்வாயைவிட ராசியாதிபதி சனிக்கே அதிக வலுவுள்ளது. ஜாதகருக்கு ராசி சுக ஸ்தானாதிபதி செவ்வாய் சாரம் பெற்ற சனி புக்தி துவங்கியதும் ஜாதகருக்கு மறு திருமணம் நடந்தது. குரு தொடர்புகொண்ட சனி,  புத்திரத்தையும்  தனது புக்தியிலேயே கொடுத்தது. 4 ஆம் பாவம் மறு திருமணத்தை குறிக்கும்.

கீழே மற்றொரு பெண்மணியின் ஜாதகம்.


துலாம் லக்னம், கடக ராசி. சந்திரன் ஹஸ்தம் – 1 ல் நிற்கிறது. 17 வயது முதல் ராகு திசை. பாதகத்தில் சுக ஸ்தானாதிபதி சனியோடு நின்று ராகு திசை நடத்துகிறது. ராகுவோடு சேர்ந்த சனி 2 , 7 ஆம் பாவாதிபதி செவ்வாயோடு பரஸ்பர பார்வைகளை பரிமாரிக்கொள்கிறது. இத்தகைய ஜாதக அமைப்பு மணமுறிவுற்ற அல்லது குறையுடைய கணவரை தேர்ந்தெடுத்திருந்தால் திருமண வாழ்வை பாதிக்காது. இல்லையேல் நிச்சயம் மண முறிவைத்தரும். ஜாதகிக்கு சுக்கிரன் சாரம் பெற்ற ராகு திருமணம் செய்வித்து மணமுறிவையும் கொடுத்தது. அடுத்துவந்த குரு,  பாக்ய - படுக்கை ஸ்தானாதிபதி (9 - 12 ஆமதிபதி) புதன் சாரம் பெற்றதால் 2 ஆவது திருமணம் செய்வித்தது.. கிரகங்களில் புதனும்,  பாவங்களில் 4 ம் மறு திருமணத்தை குறிப்பிடுபவை.

திருமணம் தொடர்புடைய பாவங்களும் கிரகங்களும் ஒரு ஜாதகத்தில் எப்படி அமைந்துள்ளன. திசா-புக்திகளின் தாக்கம் எப்படி இருக்கும் என்பதை அனுமானித்து ஒரு தேர்ந்த ஜோதிடரால் ஒருவரின் திருமண வாழ்வை அதிகம் பாதகம் ஏற்படாமல் காப்பாற்றிவிட முடியும். உதாரணமாக 7 ஆம் பாவமும் களத்திர கிரகங்களும் பாதிக்கப்பட்டிருந்தால் பாதிப்பின் தன்மைக்கேற்ற ஒரு வாழ்க்கை துணையை தேர்ந்தெடுப்பது மணவாழ்வை பாதுகாக்கும். ஆனால் இன்றைய மனிதனின் பொருளாதாரமும் மனமும் அதை ஏற்றுக்கொள்ளும்  நிலையில் இல்லை. இன்றைய பெரும்பாலான மண முறிவுக்கு காரணம் இதுவே. இதை ஓரளவு சரி செய்துவிட முடியும். ஏற்றுக்கொள்ளத்தான் மனிதர்கள் இல்லை. 

மீண்டும் விரைவில் அடுத்த பதிவில் சந்திப்போம்.   
அதுவரை,

வாழ்த்துக்களுடன்

அன்பன்,
பழனியப்பன்.
கைபேசி & பகிரி (Whatsapp) 08300124501

Friday, 19 April 2019

வழக்கும் ஜோதிடமும்.


ஜோதிடத்தில் ராகு-கேதுக்களே நமது கர்மங்களின் பதிவை தெளிவாக எடுத்துக்கூறக்கூடியவை. ராகு-கேதுக்கள் மனித வாழ்வில் தடைகளையும் பாதிப்புகளையும் ஏற்படுத்தவல்லவை. நமது இந்து புராணத்தில் மனிதர்களின் செயல்களை குறிப்பெடுத்து வைக்கும் எமதர்மராஜனின் கணக்குப் பிள்ளையாக குறிப்பிடப்படும் சித்திரகுப்தனை கேதுவின் அம்சமாக ஜோதிடம் குறிப்பிடுகிறது. கேது சுட்டிக்காட்டும் கர்ம வினைகளை ராகு அனுபவித்துக் கழிக்க வைக்கும். உண்மையில் நாம் நமது கர்மங்களை அனுபவித்துக் கழிக்கவே இப்பிறவி எடுத்திருக்கிறோம். இதனால்தான் இப்பூமியை கர்ம பூமி என நமது மதம் குறிப்பிடுகிறது.


ராகு கேதுக்கள் ஜாதகத்தில் தனித்த நிலையில் யாருடைய தொடர்பிலும் இல்லாமல் இருப்பது சிறப்பு. ராகு கேதுக்களுக்கு திரிகோணங்களிலும் அவற்றின் நட்சத்திரங்களிலும் எந்தவொரு கிரகமும் இல்லாத நிலையில் ஜாதகத்தில் அமையப்பெற்றிருந்தால் அந்த ஜாதகர் புண்ணியவானே.  அத்தகைய ஜாதகருக்கு தீய கர்ம வினைகள் மிகக்  குறைவு எனத்தீர்மானிக்கலாம். இன்றைய நிலையில் சம்பாத்தியம், குடும்பம், ஆரோக்கியம், புத்திரம் இவைகளை அடையவே ஒவ்வொரு மனிதனும் போராடிக்கொண்டிருக்கிறான். இவைகளை போராடி அமைத்துக்கொண்டாலும்  அவற்றில் வம்பு வழக்குகள் இல்லாமல் ஒரு மனிதன் கடந்தானாகில் அவனே உலகில் பாக்கியவான்.

இப்பதிவில் நாம் ஒரு மனிதன் வாழ்வில் வழக்குகளை எதிர்கொள்ளவதற்கான ஜாதக காரணங்களை ஆராய்வோம். கேது நமது ஜாதகத்தில் ஆறாவது பாவத்தையும் கால புருஷனுக்கு ஆறாம் பாவமான கன்னியையும் இயக்கும் கிரகமாகும். ஆறாம் பாவம் கடன், வழக்குகள், வியாதிகள் ஆகியவற்றை குறிப்பிடும். எனவே கேது வழக்குகளுக்கு காரக  கிரகமாகிறது. புதன் திசை நடப்பவர்களும் கேது திசை நடப்பவர்களும் ஜாதக அமைப்பின் அடிப்படையில் வழக்குகளை எதிர்கொள்வதிலிருந்து இதை உணரலாம்.

கீழே ஒரு ஆணின்  ஜாதகம்.


ஜாதகத்தில் கேது லக்னத்திலேயே அமைந்துள்ளது ஜாதகர் தனது வாழ்வில் வழக்கினை எதிர்கொண்டே ஆக வேண்டும் என்பதை இது குறிக்கிறது. அது எந்த வகை வழக்கு எனும் கேள்வி எழும்போது கேது ஒன்பதாம் பாவாதிபதி சூரியனின் உத்திர நட்சத்திரத்தில் அமைந்து சூரியனும் ஆறாமிடத்தில் கால புருஷனுக்கு ஆறாமதிபதி புதனுடன்   அமைந்ததாலும் தந்தைவழி வழக்கு என அனுமானிக்க வழியுண்டு. ஒரு ஜாதகர் வழக்கை சந்திப்பார் எனில் எப்போது சந்திப்பார் என்பதைக் கூற கால புருஷனுக்கு ஆறாமிடமான கன்னியையும், புதனையும், கேதுவையும் இவைகளின் சாரம் பெற்ற கிரகங்களையும் கவனித்தால்  புரிந்துவிடும். ஜாதகத்தில் பூமி காரகன் செவ்வாயும், காலி  மனைகளைக் குறிக்கும் புதனும் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளனர். மேலும் பூமி  பாக்கியங்களுக்கு உரிய 4 ஆம் பாவாதிபதி குரு பாதகாதிபதி புதனின் ரேவதி நட்சத்திர சாரம் பெற்று அமைந்துள்ளது. அதனால் ஜாதகர் குரு திசையில் தந்தையின் பூர்வீக நிலத்திற்கான வழக்கை எதிர்கொண்டார். அடுத்துவந்த சனி திசை புதனுக்கு பாதகத்தில் அமைந்ததாலும், சனி பூமி காரகன் செவ்வாயின் அவிட்டம் சாரத்தில் செவ்வாயை நீச பங்கப்படுத்தும் அமைப்பில்  சந்திரனோடு இணைந்தது திசை நடத்துவதாலும் ஜாதகர் வழக்கில் வெற்றி பெற்றார்.

கீழே மற்றொரு பெண்ணின் ஜாதகம்.


மகர லக்ன ஜாதகத்தில் கால புருஷ ஆறாம் பாவாதிபதி புதனே லக்னத்திற்கு ஆறாம் பாவாதிபதியாகி லக்னாதிபதியுடன் பரிவர்த்தனை அமைப்பில் உள்ளார். லக்னத்தில் அமைந்த புதன் உச்ச நிலையில் வழக்கு காரகன் கேதுவுடன் இணைந்த சந்திரனின் திருவோணம் சாரம் பெறுகிறார். சனி  ஜீவனத்தை குறிப்பிடும். புதன் கணக்குவகை பதிவுகளை குறிப்பிடும் என்பதாலும், இரண்டில் சூரியன் நின்றதாலும் ஜாதகி அரசு வங்கியில் பணி புரிகிறார். ஆறாமிட சனியை பாதகாதிபதி செவ்வாய் விரைய ஸ்தானத்தில் இரண்டில் நிற்கும் அஷ்டமாதிபதி சூரியனின் உத்திராடம்  நட்சத்திரத்தில் நின்று பார்க்கிறார். இரண்டில் நிற்கும் அஷ்டமாதிபதி சூரியன் பாதகத்தில் அமைந்த ராகுவின் சாரம் பெற்றுள்ளார். 10 ஆம் பாவாதிபதி சுக்கிரன் விரையாதிபதி குருவுடன் அமைந்து உச்சம் பெற்றாலும் பாதகாதிபதி செவ்வாய் பார்வையையும் பாதகாதிபதி செவ்வாய் பார்வை பெற்ற சனி பார்வையையும் ஒருங்கே பெறுகிறார். இத்தகைய அமைப்புகள் ஜாதகி ஜீவன வகை வழக்குகளை எதிர்கொள்ள வேண்டும் என்பதை குறிக்கிறது.

ஜாதகிக்கு குரு திசை சூரிய புக்தியில் அரசு வங்கிப்பணி கிடைத்தது. ஜாதகி குரு திசை முடிந்து ஆறாமிடத்தில் அமைந்த சனி திசையில் வங்கி விதிமுறைகளுக்கு முரணான வழியில் பணியில் சேர்ந்ததற்கான வழக்கை எதிர்கொண்டுள்ளார்.

கீழே மூன்றாவதாக ஒரு ஆணின் ஜாதகம்.


கும்ப லக்ன ஜாதகத்தில் லக்னத்திலேயே வழக்கு காரகன் கேது வழக்கு பாவமான ஆறாமிடத்தில் அமையப் பெற்ற இரண்டாமதிபதி குருவின் பூரட்டாதி நட்சத்திரத்தில் நிற்கிறார். எனவே ஜாதகர் குடும்ப விஷயங்களுக்காக வழக்கை எதிர்கொள்வார் என எளிதாக அனுமானிக்கலாம். குடும்ப பாவாதிபதி குரு உச்சமாகி வக்ரமானதால் நீசத்திற்கொப்பான நிலையில் ஆறாம் பாவாதிபதி சந்திரனுடன் பரிவர்த்தனை பெற்றுள்ளார். ஏழாமிடத்தில் லக்னம் மற்றும் விரைய ஆதிபத்தியம் பெற்ற சனி ராகுவுடன் இணைந்ததால் பாதிக்கப்பட்ட நிலையில் அவரது திக்பலம் பலனற்றதாகிறது. ஏழாம் அதிபதி கால புருஷ ஆறாம் அதிபதி புதனுடன் 10 ஆமிடத்தில் இணைந்து  பாதிக்கப்பட்ட குருவின் பார்வையை பெறுகிறார்..

ஜாதகர் குடும்ப உறவு சிதைந்த நிலையில் பாதகத்தில் ராகுவின் சுவாதி நட்சத்திரத்தில் ஆட்சி பெற்ற சுக்ரனின் திசையில் விவாகரத்து வழக்கை சந்தித்து குடும்ப உறவை இழந்தார். சுக ஸ்தானாதிபதியாகி ஏழில் நிற்கும் ராகுவின் சாரம் பெற்றதால் திருமண உறவு அமைய காரணமான சுக்கிரனே பாதக ஆதிபத்தியமும் பெற்றதால் ஏழாவது பாவமும் பாதிக்கப்பட நிலையில் குடும்ப வாழ்வை இழக்கவும் காரணமாகியுள்ளார்.

கீழே மற்றொரு ஆணின் ஜாதகம்.


சிம்ம லக்ன ஜாதகத்தில் லக்ன புள்ளி கேதுவின் மக நட்சத்திர சாரம் பெறுகிறது. சுபாவ பாவியான லக்னாதிபதி சூரியன் நான்காமிடத்தில் ஆறாமதிபதி சனியின் அனுஷம் சாரத்தில் நின்று ஆராமதிபதி சனியின் பார்வையை பெறுகிறார். இந்த அமைப்பு ஜாதகர் வழக்கை சந்திப்பார் என குறிப்பிடுகிறது. தற்போதைய திசா நாதன் சுக்கிரன்  கால புருஷ ஆறாமதிபதி புதனுடன் இணைந்து திசை நடத்துகிறார். எனவே தற்போதைய திசையிலேயே வாழக்கை சந்திப்பார் எனலாம். ஜாதகர் வீடு கட்ட வாங்கிய வங்கி கடனை கட்ட கால தாமதமானதற்காக வங்கியினரின் கடுமையான வார்த்தைகளால் மன உழைச்சலுக்கு ஆழாகி வங்கி மீது வழக்கு தொடர்ந்தார். நீதிபதி ஜாதகரின் இயலாமையால் ஏற்பட்ட தாமதத்தின் காரணத்தை புரிந்துகொண்டு வங்கிமீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும் என எச்சரித்தார். இதனையடுத்து வங்கி பணிந்தது.

இதற்கு கால புருஷ ஆறாமதிபதி புதன் திசா நாதன் சுக்கிரனுக்கும் சூரியனுக்கும் நட்பாகி பாவ கர்தாரி யோகத்தில் புதனும் சுக்கிரனும் அகப்பட்டுக்கொண்டதாலும் லக்னாதிபதி சூரியன் லக்ன கேந்திரத்தில் பஞ்சமாதிபதி குருவுடன் இணைந்து  வழுவாக நின்று இவர்கள் நின்ற ஸ்தானாதிபதி செவ்வாய்  சூரியன் – குருவிற்கு கேந்திரத்தில் நின்று ஆறாமதிபதி சனியோடு பரஸ்பர பார்வையை பரிமாறிக்கொள்வதும் முக்கிய காரணம். சூரியன் குருவோடு இணைந்து ஆறாமதிபதி சனியை நேர்பார்வை பார்த்து கட்டுப்படுத்துவதோடு சனியோடு சூரியன் சார பரிவர்த்தனை பெறுகிறார். இதனால் எனது அறிவுரையை ஏற்று ஜாதகர் நீதிமன்றத்தை அணுகினார். நீதிமன்றமும்  ஜாதகருக்கு உதவியது என்றால் அது கிரகங்களின் அருளன்றி வேறு என்னவாக இருக்க முடியும்.

குறிப்பு: ஜாதகங்கள் K.P அயனாம்சம் கொண்டு ஆய்வுசெய்யப்பட்டவை.
ராசி – நவாம்ச ஜாதக கிரக நிலைகளை வைத்து ஜனன தேதிகளை அறியமுடியும்.

மீண்டும் விரைவில் மற்றொரு பதிவில் சந்திப்போம்,

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்.
கைபேசி: 07871244501 ,  08300124501 (Whatsapp)