Friday, 19 April 2019

வழக்கும் ஜோதிடமும்.


ஜோதிடத்தில் ராகு-கேதுக்களே நமது கர்மங்களின் பதிவை தெளிவாக எடுத்துக்கூறக்கூடியவை. ராகு-கேதுக்கள் மனித வாழ்வில் தடைகளையும் பாதிப்புகளையும் ஏற்படுத்தவல்லவை. நமது இந்து புராணத்தில் மனிதர்களின் செயல்களை குறிப்பெடுத்து வைக்கும் எமதர்மராஜனின் கணக்குப் பிள்ளையாக குறிப்பிடப்படும் சித்திரகுப்தனை கேதுவின் அம்சமாக ஜோதிடம் குறிப்பிடுகிறது. கேது சுட்டிக்காட்டும் கர்ம வினைகளை ராகு அனுபவித்துக் கழிக்க வைக்கும். உண்மையில் நாம் நமது கர்மங்களை அனுபவித்துக் கழிக்கவே இப்பிறவி எடுத்திருக்கிறோம். இதனால்தான் இப்பூமியை கர்ம பூமி என நமது மதம் குறிப்பிடுகிறது.


ராகு கேதுக்கள் ஜாதகத்தில் தனித்த நிலையில் யாருடைய தொடர்பிலும் இல்லாமல் இருப்பது சிறப்பு. ராகு கேதுக்களுக்கு திரிகோணங்களிலும் அவற்றின் நட்சத்திரங்களிலும் எந்தவொரு கிரகமும் இல்லாத நிலையில் ஜாதகத்தில் அமையப்பெற்றிருந்தால் அந்த ஜாதகர் புண்ணியவானே.  அத்தகைய ஜாதகருக்கு தீய கர்ம வினைகள் மிகக்  குறைவு எனத்தீர்மானிக்கலாம். இன்றைய நிலையில் சம்பாத்தியம், குடும்பம், ஆரோக்கியம், புத்திரம் இவைகளை அடையவே ஒவ்வொரு மனிதனும் போராடிக்கொண்டிருக்கிறான். இவைகளை போராடி அமைத்துக்கொண்டாலும்  அவற்றில் வம்பு வழக்குகள் இல்லாமல் ஒரு மனிதன் கடந்தானாகில் அவனே உலகில் பாக்கியவான்.

இப்பதிவில் நாம் ஒரு மனிதன் வாழ்வில் வழக்குகளை எதிர்கொள்ளவதற்கான ஜாதக காரணங்களை ஆராய்வோம். கேது நமது ஜாதகத்தில் ஆறாவது பாவத்தையும் கால புருஷனுக்கு ஆறாம் பாவமான கன்னியையும் இயக்கும் கிரகமாகும். ஆறாம் பாவம் கடன், வழக்குகள், வியாதிகள் ஆகியவற்றை குறிப்பிடும். எனவே கேது வழக்குகளுக்கு காரக  கிரகமாகிறது. புதன் திசை நடப்பவர்களும் கேது திசை நடப்பவர்களும் ஜாதக அமைப்பின் அடிப்படையில் வழக்குகளை எதிர்கொள்வதிலிருந்து இதை உணரலாம்.

கீழே ஒரு ஆணின்  ஜாதகம்.


ஜாதகத்தில் கேது லக்னத்திலேயே அமைந்துள்ளது ஜாதகர் தனது வாழ்வில் வழக்கினை எதிர்கொண்டே ஆக வேண்டும் என்பதை இது குறிக்கிறது. அது எந்த வகை வழக்கு எனும் கேள்வி எழும்போது கேது ஒன்பதாம் பாவாதிபதி சூரியனின் உத்திர நட்சத்திரத்தில் அமைந்து சூரியனும் ஆறாமிடத்தில் கால புருஷனுக்கு ஆறாமதிபதி புதனுடன்   அமைந்ததாலும் தந்தைவழி வழக்கு என அனுமானிக்க வழியுண்டு. ஒரு ஜாதகர் வழக்கை சந்திப்பார் எனில் எப்போது சந்திப்பார் என்பதைக் கூற கால புருஷனுக்கு ஆறாமிடமான கன்னியையும், புதனையும், கேதுவையும் இவைகளின் சாரம் பெற்ற கிரகங்களையும் கவனித்தால்  புரிந்துவிடும். ஜாதகத்தில் பூமி காரகன் செவ்வாயும், காலி  மனைகளைக் குறிக்கும் புதனும் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளனர். மேலும் பூமி  பாக்கியங்களுக்கு உரிய 4 ஆம் பாவாதிபதி குரு பாதகாதிபதி புதனின் ரேவதி நட்சத்திர சாரம் பெற்று அமைந்துள்ளது. அதனால் ஜாதகர் குரு திசையில் தந்தையின் பூர்வீக நிலத்திற்கான வழக்கை எதிர்கொண்டார். அடுத்துவந்த சனி திசை புதனுக்கு பாதகத்தில் அமைந்ததாலும், சனி பூமி காரகன் செவ்வாயின் அவிட்டம் சாரத்தில் செவ்வாயை நீச பங்கப்படுத்தும் அமைப்பில்  சந்திரனோடு இணைந்தது திசை நடத்துவதாலும் ஜாதகர் வழக்கில் வெற்றி பெற்றார்.

கீழே மற்றொரு பெண்ணின் ஜாதகம்.


மகர லக்ன ஜாதகத்தில் கால புருஷ ஆறாம் பாவாதிபதி புதனே லக்னத்திற்கு ஆறாம் பாவாதிபதியாகி லக்னாதிபதியுடன் பரிவர்த்தனை அமைப்பில் உள்ளார். லக்னத்தில் அமைந்த புதன் உச்ச நிலையில் வழக்கு காரகன் கேதுவுடன் இணைந்த சந்திரனின் திருவோணம் சாரம் பெறுகிறார். சனி  ஜீவனத்தை குறிப்பிடும். புதன் கணக்குவகை பதிவுகளை குறிப்பிடும் என்பதாலும், இரண்டில் சூரியன் நின்றதாலும் ஜாதகி அரசு வங்கியில் பணி புரிகிறார். ஆறாமிட சனியை பாதகாதிபதி செவ்வாய் விரைய ஸ்தானத்தில் இரண்டில் நிற்கும் அஷ்டமாதிபதி சூரியனின் உத்திராடம்  நட்சத்திரத்தில் நின்று பார்க்கிறார். இரண்டில் நிற்கும் அஷ்டமாதிபதி சூரியன் பாதகத்தில் அமைந்த ராகுவின் சாரம் பெற்றுள்ளார். 10 ஆம் பாவாதிபதி சுக்கிரன் விரையாதிபதி குருவுடன் அமைந்து உச்சம் பெற்றாலும் பாதகாதிபதி செவ்வாய் பார்வையையும் பாதகாதிபதி செவ்வாய் பார்வை பெற்ற சனி பார்வையையும் ஒருங்கே பெறுகிறார். இத்தகைய அமைப்புகள் ஜாதகி ஜீவன வகை வழக்குகளை எதிர்கொள்ள வேண்டும் என்பதை குறிக்கிறது.

ஜாதகிக்கு குரு திசை சூரிய புக்தியில் அரசு வங்கிப்பணி கிடைத்தது. ஜாதகி குரு திசை முடிந்து ஆறாமிடத்தில் அமைந்த சனி திசையில் வங்கி விதிமுறைகளுக்கு முரணான வழியில் பணியில் சேர்ந்ததற்கான வழக்கை எதிர்கொண்டுள்ளார்.

கீழே மூன்றாவதாக ஒரு ஆணின் ஜாதகம்.


கும்ப லக்ன ஜாதகத்தில் லக்னத்திலேயே வழக்கு காரகன் கேது வழக்கு பாவமான ஆறாமிடத்தில் அமையப் பெற்ற இரண்டாமதிபதி குருவின் பூரட்டாதி நட்சத்திரத்தில் நிற்கிறார். எனவே ஜாதகர் குடும்ப விஷயங்களுக்காக வழக்கை எதிர்கொள்வார் என எளிதாக அனுமானிக்கலாம். குடும்ப பாவாதிபதி குரு உச்சமாகி வக்ரமானதால் நீசத்திற்கொப்பான நிலையில் ஆறாம் பாவாதிபதி சந்திரனுடன் பரிவர்த்தனை பெற்றுள்ளார். ஏழாமிடத்தில் லக்னம் மற்றும் விரைய ஆதிபத்தியம் பெற்ற சனி ராகுவுடன் இணைந்ததால் பாதிக்கப்பட்ட நிலையில் அவரது திக்பலம் பலனற்றதாகிறது. ஏழாம் அதிபதி கால புருஷ ஆறாம் அதிபதி புதனுடன் 10 ஆமிடத்தில் இணைந்து  பாதிக்கப்பட்ட குருவின் பார்வையை பெறுகிறார்..

ஜாதகர் குடும்ப உறவு சிதைந்த நிலையில் பாதகத்தில் ராகுவின் சுவாதி நட்சத்திரத்தில் ஆட்சி பெற்ற சுக்ரனின் திசையில் விவாகரத்து வழக்கை சந்தித்து குடும்ப உறவை இழந்தார். சுக ஸ்தானாதிபதியாகி ஏழில் நிற்கும் ராகுவின் சாரம் பெற்றதால் திருமண உறவு அமைய காரணமான சுக்கிரனே பாதக ஆதிபத்தியமும் பெற்றதால் ஏழாவது பாவமும் பாதிக்கப்பட நிலையில் குடும்ப வாழ்வை இழக்கவும் காரணமாகியுள்ளார்.

கீழே மற்றொரு ஆணின் ஜாதகம்.


சிம்ம லக்ன ஜாதகத்தில் லக்ன புள்ளி கேதுவின் மக நட்சத்திர சாரம் பெறுகிறது. சுபாவ பாவியான லக்னாதிபதி சூரியன் நான்காமிடத்தில் ஆறாமதிபதி சனியின் அனுஷம் சாரத்தில் நின்று ஆராமதிபதி சனியின் பார்வையை பெறுகிறார். இந்த அமைப்பு ஜாதகர் வழக்கை சந்திப்பார் என குறிப்பிடுகிறது. தற்போதைய திசா நாதன் சுக்கிரன்  கால புருஷ ஆறாமதிபதி புதனுடன் இணைந்து திசை நடத்துகிறார். எனவே தற்போதைய திசையிலேயே வாழக்கை சந்திப்பார் எனலாம். ஜாதகர் வீடு கட்ட வாங்கிய வங்கி கடனை கட்ட கால தாமதமானதற்காக வங்கியினரின் கடுமையான வார்த்தைகளால் மன உழைச்சலுக்கு ஆழாகி வங்கி மீது வழக்கு தொடர்ந்தார். நீதிபதி ஜாதகரின் இயலாமையால் ஏற்பட்ட தாமதத்தின் காரணத்தை புரிந்துகொண்டு வங்கிமீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும் என எச்சரித்தார். இதனையடுத்து வங்கி பணிந்தது.

இதற்கு கால புருஷ ஆறாமதிபதி புதன் திசா நாதன் சுக்கிரனுக்கும் சூரியனுக்கும் நட்பாகி பாவ கர்தாரி யோகத்தில் புதனும் சுக்கிரனும் அகப்பட்டுக்கொண்டதாலும் லக்னாதிபதி சூரியன் லக்ன கேந்திரத்தில் பஞ்சமாதிபதி குருவுடன் இணைந்து  வழுவாக நின்று இவர்கள் நின்ற ஸ்தானாதிபதி செவ்வாய்  சூரியன் – குருவிற்கு கேந்திரத்தில் நின்று ஆறாமதிபதி சனியோடு பரஸ்பர பார்வையை பரிமாறிக்கொள்வதும் முக்கிய காரணம். சூரியன் குருவோடு இணைந்து ஆறாமதிபதி சனியை நேர்பார்வை பார்த்து கட்டுப்படுத்துவதோடு சனியோடு சூரியன் சார பரிவர்த்தனை பெறுகிறார். இதனால் எனது அறிவுரையை ஏற்று ஜாதகர் நீதிமன்றத்தை அணுகினார். நீதிமன்றமும்  ஜாதகருக்கு உதவியது என்றால் அது கிரகங்களின் அருளன்றி வேறு என்னவாக இருக்க முடியும்.

குறிப்பு: ஜாதகங்கள் K.P அயனாம்சம் கொண்டு ஆய்வுசெய்யப்பட்டவை.
ராசி – நவாம்ச ஜாதக கிரக நிலைகளை வைத்து ஜனன தேதிகளை அறியமுடியும்.

மீண்டும் விரைவில் மற்றொரு பதிவில் சந்திப்போம்,

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்.
கைபேசி: 07871244501 ,  08300124501 (Whatsapp)

Friday, 5 April 2019

வேலையும் ஜோதிடமும்


இன்றைய சூழலில் ஒருவரின் மதிப்பு அவர் செய்யும் வேலையைக்கொண்டே அளவிடப்படுகிறது. ஒருவர் செய்யும் வேலை மற்றும் அதன் சாதக பாதகங்கள் ஜாதகத்தில் 12 பாவங்களோடும் 9 கிரகங்களோடும் தொடர்புகொள்கின்றன. குறிப்பாக 



ஜாதகத்தில் 2, 6, 10 பாவங்கள் வேலையோடு நேரடி தொடர்பை பெறுபவை.

வேலையில் ஏற்படும் இட மாற்றத்தை 3, 9, 10, 12 ஆகியவை குறிப்பிடுகின்றன.

பதவி உயர்வு எனில் 2, 6, 10, 11 ஆகியவையும் 

பணி இழப்பை 1,5,9,12 ஆகியவையும் குறிப்பிடுகின்றன.

பணி  இழப்பிற்குப்பின்  வேலை பெறுவதை 2, 6, 10, 11 ஆகிய பாவங்களும்

வேலைக்கு முக்கிய கிரகங்களாக சனியும், புதனும், குருவும் திகழ்கின்றன.

வெளி நாட்டு வேலைக்கு உரிய பாவங்களாக 9, 12 ம் உள்ளன. நீர் ராசிகளான கடகம், விருச்சிகம், மீனமும் இதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. வெளிநாட்டு வேலைக்கு கிரகங்களில் நிரந்தர வக்கிர கிரகங்களான ராகு கேதுக்களும் காரணமாகின்றன.

பின்வரும் ஜாதகத்தை கவனியுங்கள்.


தொலை தகவல் தொடர்பை குறிக்கும் 3 ஆம் பாவாதிபதி குரு ஏழாமதிபதி சந்திரனின் ரோகிணி நட்சத்திர சாரம் பெற்று அமர்ந்துள்ளார். குருவின் சார நாதன் சந்திரன் கால புருஷனுக்கு 3 ஆமிடமான புதனின் மிதுனத்தில் லக்னத்திற்கு 3 ஆமிடத்தில் நிற்கும் செவ்வாயின் மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் நிற்கிறார். ஜீவன காரகன் சனி லக்னத்திற்கு 12 ஆமிடத்தில் நிற்கிறார். சனிக்கு 10 ல் தூது, அஞ்சலை குறிக்கும் புதன் உச்சகதியில் குரு பார்வையில் நிற்கிறார். இரண்டாமிடத்தில் நிற்கும் ராகுவும் குருவின் சாரம் பெறுகிறார். 10 ஆமதிபதி சுக்கிரன் குருவின் பூச நட்சத்திர சாரம் பெற்று தொடர்பு ஸ்தானத்தில் அமர்ந்துள்ளார். அவருக்கு வீடு கொடுத்த சந்திரன் புதனின் வீட்டில் மிதுனத்தில் அமர்ந்துள்ளார். இந்த ஜாதகத்தில் 2, 6, 10  பாவ தொடர்புகளாலும் 3 ஆம் பாவ மற்றும் , புதனின் வலிமையாலும் ஜாதகருக்கு குரு திசை சனி புக்தியில் அஞ்சல் துறையில் 2011 ல் பணி கிடைத்தது.  

இரண்டாவதாக கீழே மற்றொரு ஜாதகம்.



இந்த ஜாதகிக்கு சந்திரன் கன்னி லக்னத்திற்கு பாதக ஸ்தானமான மீனத்தில் சனியின் உத்திரட்டாதி – 4 ல் இருந்து திசை நடத்துகிறார். சந்திரன் சனியோடு இணைந்து குருவோடு பரிவர்த்தனை பெற்றுள்ளது. சந்திரன் மாற்றத்திற்கு காரக கிரகம் என்பதாலும் பாதகத்தில் நின்று பாதகாதியோடு பரிவர்த்தனை பெற்று சந்திரனும் குருவும் சனியின் பூரட்டாதி மற்றும் பூசம் சாரம் பெற்றதாலும் பல வருடங்கள் சௌகரியமாக வேலை பார்த்த இடத்திலிருந்து சந்திர திசை துவங்கியதுமே தொலைவிற்கு இடமாறுதல் பெற்றுச்செல்ல வைத்தது. ஜாதகி மீண்டும் முந்தைய இடம் போன்ற சௌகரியமானதொரு இடத்திற்கு வர தற்போது கடும் முயற்சி செய்கிறார். இந்த ஜாதகத்தில் பாதகம் என்பது வேலை மாற்றத்தை ஏற்படுத்தி அதன் மூலமான அசௌகரியங்களை  கொடுத்துள்ளது. இந்த ஜாதகத்தில் பாவ அடிப்படையில் மூன்றாமதிபதியோடு இணைந்த குரு மாற்ற காரகன் சந்திரனோடு ஏற்படுத்திக்கொள்ளும் தொடர்பு ஒரு புறமிருக்க மூன்றாமிடத்தை பாதகாதிபதியான குரு பார்த்து பணி மாற்றம் கிடைக்காதவாறு தடை செய்கிறார். சூரியன 12 ஆமிடாதிபதியாகி அவரும் சந்திரனை பார்ப்பதும் ஒரு காரணமாகும்.

மற்றொரு ஜாதகம் பின்வருமாறு.


இந்த ஜாதகத்தில் லக்னாதிபதி சூரியன் 10 ஆமிடத்தில் திக்பலம் பெற்று 11 ஆமிடாதிபதியுடனும் திசா நாதனும் 6 ஆமதிபதியுமான சனியுடனும் இணைந்துள்ளார். பாக்ய ஸ்தானத்தில் 10 ஆமதிபதி சுக்கிரன் அமர்ந்து அதன் அதிபதி செவ்வாய் லக்னத்திற்கு 6 ஆமிடத்தில் உச்சமாகியுள்ளார். ஜாதகருக்கு சனி திசை சுக்கிர புக்தியில் மாற்றத்தோடு கூடிய பணி உயர்வை அடைந்தார். . இதற்கு ஜாதகத்தில் 6, 10, 11 தொடர்புகளே காரணம் என்றால் அது மிகையல்ல.
  
நான்காவதாக மற்றுமொரு ஜாதகம் கீழே.


இந்த ஜாதகத்தில் ஐந்தாமதிபதி சந்திரன் திக்பலம்  பெற்ற ஆறாமதிபதி சூரியனுடனும் பாவச்சக்கரத்தில் பாதகாதிபதி புதனுடனும் 10 ஆமிடத்தில் அமர்ந்து திசை நடத்துகிறார். ஐந்தாமிடம் வேலை ஸ்தானமான ஆறாமிடத்திற்கு விரைய பாவம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சந்திரன் பணி இழப்பிற்கு முக்கிய கிரகமான கேதுவின் மூல நட்சத்திரத்தில் நிற்கிறார். லக்னாதிபதியும் 10 ஆம் பாவதிபதியுமான குரு ராசியில் ஆட்சி பெற்று பாவத்தில் நீசம் பெற்றுள்ளார். இதனால் 10 ஆமிடம் தொடர்புடைய திசா புக்தி வரும்போது பணியிழப்பு ஏற்படும் என்பதை அனுமானிக்கலாம். கோட்சாரத்தில் இந்த ஜாதகருக்கு சந்திர திசையில் ராசியில் 11 லிலும் பாவத்தில் செவ்வாயோடு  விரையத்திலும் நிற்கும் அஷ்டமாதிபதி சுக்கிரனின் புக்தியில் கோட்சார கேது ஆறாமதிபதி சூரியனின் நட்சத்திரத்தில் நின்று கோட்சார சனியை தொடர்புகொள்ளவிருந்த நிலையில் கடந்த ஆண்டு இறுதியில் ஏழரை சனியில் பணி இழப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

எப்படி திசா புக்திகளும் கோட்சாரமும் இணைந்து செயல்படுகிறது என்பதற்கு இந்த ஜாதகம் சாட்சி. புக்தி  நாதன் சுக்கிரன் பாவச்சக்கரத்தில்  தன வருவாய்க்குரிய ஸ்தானம் மேஷத்திற்கு பாதகமான கும்பத்தில் இருப்பதும் கவனிக்கத்தக்கது. இங்கு பணி இழப்பிற்கு முக்கியமாக வரவு பாவமான 2, வேலை பாவமான 6, லாப பாவமான 11க்கு விரைய பாவங்களோடு (அதாவது 1, 5, 9)  இவற்றோடு லக்னத்திற்கு விரைய பாவமான 12 ஆவது பாவமும் முக்கிய காரணங்கள் என்பது உறுதி செய்யப்படுகிறது.

வாழ்க்கையில் திசா புக்தி மாறுதல்கள் நம் சூழ்நிலைகளை மாற்றி அமைக்கின்றன. அவற்றை ஏற்று செயல்படுத்துவதில் கோட்சார கிரகங்கள் முக்கியமாக வருட கிரகங்களான சனி, குரு, ராகு-கேதுவின் பெயர்சிகள் முக்கிய பங்காற்றுகின்றன என்றால் அது மிகையல்ல.

இவற்றை தெரிந்துகொள்வதால் என்ன நன்மை என்றொரு கேள்வி எழும். மேற்கண்ட ஜாதகங்களிளிருந்து நமது வாழ்வில் நமது பணிச் சூழ்நிலைகளுக்கு மட்டுமல்ல அணைத்து சூழ்நிலைகளுக்கும் கிரகங்களே காரணம் என்பது புரியும். இந்த உண்மை புரிந்தால் கிரகங்கள் நமக்கு வழங்கும் வாழ்க்கையின் மாறுதல்களை சலனமின்றி எதிர்கொள்ளலாம்.

மீண்டும் விரைவில் மற்றொரு பதிவில் சிந்திப்போம்,

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,
பழனியப்பன்.
கைபேசி: 07871244501 , பகிரி 08300124501


Wednesday, 27 March 2019

அஞ்சல் வழிக்கல்விக்கான ஜாதக அமைப்பு.


கல்வி என்பது மனிதனுக்கு கண்களைப் போன்றது. கல்வியில்லாதவன் கண்ணில்லாதவன் என்பது அன்றோர் வாக்கு. சூழ்நிலை சந்தர்பங்களாலும் பொருளாதார சூழ்நிலையின் பொருட்டும் பள்ளிப்படிபோடு கல்வியை விட்டவர்களும் வாழ்வில் நல்ல சூழ்நிலைக்கு வந்த பிறகு கற்காமல் விட்ட காலங்களை நினைத்து ஏங்குவர். அத்தகையோர் தனிப்பட்ட விருப்பங்களின் பேரில் புத்தகங்களை தேடிச் சென்று தங்களது அறிவு தாகத்திற்கு வழி செய்துகொள்கின்றனர்.



சிலர் சமூக அந்தஸ்திற்காகவும் தொழில் சூழ்நிலைகளின் பொருட்டும் அஞ்சல் வழியில் பயின்று தங்களக்கான தகுதியை பட்டங்களின் மூலம் வெளிக்கட்டிக்கொள்கின்றனர். கௌரவ டாக்டர் பட்டங்களை பணம்கொடுத்துப் பெற்று பத்திரிகைகளில் விளம்பரப்படுத்தி மக்கள் நம்புவதாக தங்களை தாங்களே ஏமாற்றிக்கொள்பவர்கள் அரசியல்வாதிகள். இதில் திருமணதிற்காக சொல்லப்படும் பொய்யை மெய்ப்பிக்க திருமணப் பத்திரிகையில் பட்டங்களை போட்டுவிட்டு திருமணம் செய்பவர்கள் ஒருவகை. இவர்களை எதிர்கால அரசியல்வாதிகள் எனலாம். அடைப்புக்குறிக்குள் பட்டங்களை அடக்கிவிட்டு மற்றையோரை அடக்க நினைப்போர் ஒருவகை.  

இப்பதிவில் நாம் உயர்கல்வியில் தடைகளை சந்திக்கும்போது அஞ்சல்வழியில் அதை தொடர சாதகமான ஜாதக அமைப்புகளை அலசவிருக்கிறோம்.

கீழே நீங்கள் காண்பது ஒரு ஆணின் ஜாதகம்.


17.09.1977 – இரவு 7.24 மணி.

மீன லக்ன ஜாதகத்தில் லக்னாதிபதி குரு வித்யா ஸ்தானமான 4 ஆமிடத்தில் 2 மற்றும் ஒன்பதாமதிபதி செவ்வாயோடு அமைந்துள்ளார். இதனால் வித்யா ஸ்தானம் பலம் பெறுகிறது. ஆனால் குருவும் செவ்வாயும் தர்ம கர்மாதிபதிகள் என்பதையும் தொழிலுக்கு இது சாதகமான அமைப்பு என்ற ஒரு கோணமும் உள்ளதை கவனிக்க வேண்டும். ஜாதகருக்கு லக்னாதிபதி குருவின் நட்சத்திரமே முதல் திசையாக வந்தது பால்ய வயது யோகமாக இருந்துள்ளதை குறிப்பிடுகிறது.

ஜாதகரின் 10 ஆவது வயதில் சனி திசை ஆரம்பித்துள்ளது. சனி தனது பகை வீட்டில் லக்ன பாதகாதிபதியுடன் இணைந்து வித்யா ஸ்தானமான 4 க்கு விரையாதிபதியும் உயர்கல்வியை குறிப்பிடும் ஸ்தானமான 9 க்கு விரையமான 8 ஆமதிபதியுமான சுக்கிரனுடன் இணைந்து வித்யா காரகனான புதனின் மூலத்திரிகோண வீட்டிற்கும் லக்னத்திற்கு 6 லும் அமைந்து திசை நடந்துவது கல்விக்கு சிறப்பான அமைப்பு என கூறுவதற்கில்லை. திசா நாதனுக்கு வீடு கொடுத்த சூரியன் பாதக ஸ்தானத்தில் பாதகாதிபதியுடன் பரிவர்த்தனை பெற்ற நிலையில் உள்ளது. இது  சூரியன் நிற்கும் பாவ அடிப்படையில் கல்வியில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதை குறிப்பிடுகிறது. பரிவர்த்தனை அமைப்பு கோட்சாரத்தில் பலனளிக்கும் திசா புக்தியில் கிரகங்கள் தாங்கள் நின்ற இட பலனையே செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சனி கேது சாரம் பெற்று கேது லக்னத்தில் புதனின் சாரத்தில் நிற்பது சனி திசையில் பாதிப்பு கல்வியில்தான் ஏற்படும் என்பதை இது குறிப்பிடுகிறது.

எப்போது கல்வியில் பாதிப்பு ஏற்படும் என்பதை புதிகார கிரகங்களும் கோட்சாரமும் சுட்டிக்காட்டும். ஜாதகர் சனி திசை சுக்கிர புக்தியில் 1994ம் முற்பகுதியில் ஜாதகர் 12 ஆம் வகுப்பை முடித்தார். அதன்பிறகு ராசியின் மீது ராகுவோடு இணைந்து லக்னாதிபதி குரு லக்னத்திற்கு 8 ல் உயர்கல்வியை குறிக்கும் 9 ஆமிடதிற்கு விரையத்தில் நின்றபோது ஜாதகரின் உயர் கல்வி தடைபட்டது. சனி திசையில் சுக்கிர புக்தியில் பாதக ஸ்தானத்தில் நின்ற சூரியனின் அந்தரத்தில் கல்விக்கு சூரியன் மூலம் தடை ஏற்பட்டது. ஜோதிடத்தில் மிகுந்த நம்பிக்கை கொண்ட ஜாதகரின் தந்தை ஒரு ஜோதிடரிடம் ஜாதகத்தை காண்பிக்க அவர் ஜாதகருக்கு உயர்கல்வியை தொடரும் அமைப்பு இல்லை என்று கூற ஜாதகரை தான் நடத்தும் மளிகை கடையை கவனிக்குமாறு பணித்தார். கவனிக்க - புதன் ஜோதிடர், கல்வி, வியாபாரம் இவைகளை குறிக்கும். சுக்கிர புக்தியில் 9 க்கு விரையத்தில் நின்ற சந்திரனின் அந்தரத்திலும் தடை தொடர்ந்தது. கவனிக்க ஜாதகருக்கு யோகியாக குருவும் அவயோகியாக சூரியனும் ஜாதகத்தில் அமைந்துள்ளனர்.

கல்வி தடைபட்ட பிறகு கோட்சார குரு லக்னத்திற்கு 9 ல் சனியின் அனுஷம் நட்சத்திரத்தில் செல்லும்போது கல்வியை தொடர பள்ளி நண்பர் உந்துதலாக இருந்தார். அதனால் ஜாதகர் அஞ்சல் வழியில் இளநிலை தமிழ் பட்டப்படிப்பில் 1996 ஆம் ஆண்டு சேர்ந்தார். அஞ்சல் வழி தொடர்புகளை குறிக்கும் 3 ஆம் இடாதிபதி சுக்கிரனின் புக்தியில் அஞ்சல் வழி தொடர்புகளை குறிக்கும் புதனின் அந்தரத்தில் ஜாதகர் கல்வியை அஞ்சல் வழியில் தொடர்ந்தது கவனிக்கத்தக்கது. பாவ சக்கரத்தில் சனியும் சுக்கிரனும் ஐந்தாமிட தொடர்பு கொண்டதும் ஜாதகருக்கு சுக்கிரன் தனது புக்தியில் உதவியுள்ளது தெரிகிறது. புதனும் 7 ஆமிடமும் நண்பனை குறிக்கும். தொடர்ந்து ஜாதகர் அஞ்சல் வழியிலேயே முதுநிலை தமிழ் பட்டத்தையும் படித்து முடித்தார். 2005 ஆம் ஆண்டு டிசம்பரில்  ஜாதகர் சனி திசையில் லக்னாதிபதி குரு புக்தியில் M Phil பட்டம் பெற்றார்.   

ஜாதகர் 2009 ஜூனில் லக்னத்திற்கு 6 ல் நின்ற புதன் திசை அதே ஆறாமிடத்தில் நின்ற சுக்கிர புக்தியில் தனியார் கல்லூரியில் தமிழ் பேராசிரியராக பணியில் சேர்ந்தார். புதன் திசையில் இட மாற்றத்தை குறிக்கும் சந்திரனின் புக்தியில் 2013 ல் ஜாதகர்  வேறொரு கல்லூரிக்கு மாறினார். அங்கு ஜாதகருக்கு முனைவர் பட்டம் ஏற்பட்ட வாய்ப்பை சரியாகப்  பயன்படுத்தினார். 2017 ல் ராகு புக்தியில் ஜாதகர் தமிழில் சங்க இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றார். 2014 ல் புதன் திசை செவ்வாய் புக்தியில் NET தேர்வில் வெற்றி பெற்றார். பாதகாதிபதியின் வீடுகளான மிதுனமும் கன்னியும் ஜாதகருக்கு திதி சூன்ய வீடுகளானது கவனிக்கத்தக்கது. மேலும் திசா நாதன் புதனின் நிலையால் ஜாதகர் அக்கு பங்சர் மருத்துவமும் பயின்று மருத்துவம் பார்த்து வருகிறார். கல்லூரி சென்று பயிலாத ஜாதகர் கடந்த 10 ஆண்டுகளாக கல்லூரிப் பேராசிரியராக பணிபுரிகிறார் என்றால் அது ஜாதகரின் முயற்சியால் மட்டுமின்றி கிரகங்களின் ஆசீர்வாதத்தால் என்றால்  மிகையல்ல.

எனவே அஞ்சல் வழிக்கல்விக்கு 3 ஆம் பாவமும், தூது மற்றும் அஞ்சல்  போன்றவற்றிற்கு  காரகன் புதனும் சாதகமாக இருப்பது அவசியம் என்பது புலனாகிறது.

லக்னப்புள்ளியும்,  லக்னத்தில் அமைந்த கேதுவும் புதன் சாரம் பெற்றதனாலும் லக்னாதிபதி புதன் வீட்டில் அமைந்து ராகு சாரம் பெற்று அந்த ராகுவும் மலைப்பகுதியை குறிக்கும் சூரியனோடு தொடர்பு கொண்டு புதன் வீட்டில் அமைந்து லக்னத்தை பார்வையிடுவதால் ஜாதகரின் பெயர் மலைமீது இருக்கும் பெருமாளின் பெயராகும்.

ஜாதகத்தில் இரண்டாமிடம் தாய் மொழிக் கல்வியையும் செவ்வாயின் அதிதேவதையான முருகக் கடவுளை தமிழின் வடிவமாகவே தமிழர்களாகிய நாம் வணங்குகிறோம் என்பதையும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஜாதகத்தில் உள்ள குரு - மங்கள யோகம் மிகச் சிறப்பான பலனை ஜாதகருக்கு வணங்கியுள்ளது என்றால் அது மிகையல்ல. செவ்வாய் நான்கில் அமைந்து தொடர்புகள் ஸ்தானமான 7 ஆமிடத்தை நான்காம் பார்வையாக பார்ப்பதால் ஜாதகரின் தொடர்புகளில் செவ்வாய் முன்னிலை வகிக்கிறது. மேலும் செவ்வாய் குருவை விட அதிக பாகை பெற்று நின்றதால் இந்த ஜாதகரை வழிநடத்துவதில் முன்னிலை வகிக்கிறது.

எவ்வாறெனில் 
   
ஜாதகரை அஞ்சல் வழிக்கல்வியில் படிப்பை தொடர உந்துதலாக இருந்த பள்ளித் தோழனின் பெயர் முருகநாத பூபதி.

ஜாதகர் முதுநிலை பட்டப்படிப்பில் தமிழை விடுத்து வேறு பாடம் எடுக்க முயன்றபோது அவரது முதுநிலையிலும் தமிழையே எடுத்து படிக்குமாறு தூண்டிய நண்பரின் பெயர் சரவணன்.

ஜாதகருக்கு சுக்கிரனின் சாரம் பெற்ற 7 ஆமதிபதி புதன் திசை துவங்கிய 2 ஆவது மாதமே 2006 ல் திருமணத்தை நடதிவைதுள்ளது. மாமனாரின் பெயர் ஆறுமுகம்.

2008ல் ஜாதகரது திருமண மோதிரம் தொலைந்துவிட்ட அதை கண்டுபிடித்துக் கொடுத்த ஜாதகரின் கடை ஊழியரின் பெயர் தங்கவேல்.

முதலில் சேர்ந்த கல்லூரியில் ஜாதகரின் திறமையை பரிசோதித்து வேலை கொடுத்த  முதல்வரின் பெயர் சிங்காரவேலன்.

ஜாதகரிடன் வேலைக்கான உத்திரவாத கடிதத்தை வழங்கிய நபரின் பெயர் சரவணகுமார்.

ஜாதகரை முதன் முதலில் பாடம் எடுக்க வகுப்பிற்கு அழைத்துச் சென்ற நபரின் பெயர் சிவசுப்பிரமணியன்.

2013 ல் பணிமாறிச் சென்று சேர்ந்த கல்லூரியின் முதல்வர் பெயர் பாலமுருகன்.

 2015 ல் புதிதாய் கட்டிய வீடு உள்ள பகுதி மந்திரகிரி நகர் எனும் முருகனின் பெயர்கொண்டது.

அந்த வீட்டிற்கு தச்சு வேலை செய்த நபரின் பெயர் சக்திவேல்.

வீட்டை கட்டிக்கொடுத்த பொறியாளரின் பெயர் மந்திராசலம் என்ற முருகனின் பெயர்.

வீட்டில் மின்சார வேலை மற்றும் நீர் குழாய் அமைத்துத்தந்த நபரின் பெயர் கார்த்திகேயன்.

ஜாதகர் அக்குபஞ்சர் மருத்துவமனை நடத்த இடன் கொடுத்து உதவிய இடத்தின் உரிமையாளர் மந்த்ராசலம் என்ற முருகனின் பெயர்.

அந்த மருத்துவமனையில் ஜாதகரிடன் மருத்துவம் பார்க்க வந்த முதல் நோயாளியின் பெயர் ஆறுமுகம்.


இந்த ஜாதகத்தை ஆய்வு செய்து உங்களிடம் பகிர்ந்துகொண்டிருக்கும் ஜோதிடரான அடியேனது பெயர் பழனியப்பன்.

கிரகங்கள் எப்படி நம் வாழ்வில் பங்காற்றுகின்றன என்பதை இது போன்ற ஜாதகங்களை ஆராயும்போது பிரம்மிப்பாக இருக்கிறது. இந்த ஜாதகத்தை மேலும் சில கோணங்களில் ஆராயும்போது இன்னும் சில ஆச்சரியங்களை காண்கிறேன். பதிவின் நீலம் கருதி இத்துடன் முடிக்கிறேன். 

ஜோதிட ஆர்வலர்களுக்காக - ஜாதகம் K.P அயனாம்சம் கொண்டு ஆராயப்பட்டுள்ளது.  

விரைவில் மீண்டுமொரு பதிவில் சந்திக்கிறேன்,
அதுவரை,
வாழ்த்துக்களுடன்,
அன்பன்,
பழனியப்பன்.
கைபேசி: 07871244501