Thursday 11 April 2013

விருக்ஷ சாஸ்திரம்

பகுதி - 1

        


ஒரு மழை நாளில் கூட்டம் அதிகமில்லாத மாலை நேரப் பேருந்தில் உங்கள் கிராமத்துக்குப் பயணித்திருக்கிறீர்களா? அச்சமயம் தமக்கு எந்த வகையிலும் சம்மந்தமில்லாத முகங்களுடன் மனிதர்கள்  சினேக பாவத்துடன் அளவளாவுவதை அணுபவித்திருக்கிறீர்களா?. அது ஒரு கொடுப்பினை. தொடர்பில்லாத மனிதர்களையும் நேசிக்கும் மனோபாவத்தை இயற்கை மழை வடிவில் நமக்கு அச்சமயம் அளிக்கும். ஒரு சூழ்நிலையில் கூடும் மக்களின் மனோ பாவங்களை மழை நல்லவிதமாக மாற்றுகிறது எனும் போது, நமது ஒட்டு மொத்த தேசத்தின் மனோ நிலையையே இயற்கையை சரியான விதத்தில் கையாண்டு நல்ல விதமாக மாற்ற முடியும். நம்புங்கள், அதற்கான வழிமுறைகளைக்  கூறுவதே இப்பதிவின் நோக்கம். இது வெறும் வாதமல்ல.இயற்கை அன்னையின் அன்பை நிராகரித்துவிட்டு எத்தனை கோவில்களுக்குச் சென்றாலும் கிடைக்கப் போவது எதுவுமில்லை. நினைவில் வையுங்கள்.

மாதம் மும்மாரி பொழிந்த எனது சிறுவயது காலத்தை (80 களை) இப்போது நினைத்தால் ஏக்கம் வருகிறது. இன்றைய காலகட்டத்தில் நாட்டில் மழையளவு வெகுவாகக் குறைந்துவிட்டதற்கு இயற்கையோடு இணைந்த வாழ்விலிருந்து நாம் விலகி நிற்பதே காரணம்.மழைக்கு ஆதாரமான காடுகளை, மரங்களை நாம் அழித்துவருவதே இன்றைய மழை குறைவுக்குக் காரணம் என்றால் அது மிகையல்ல. மழை குறைந்ததால் மனிதன் உயிர் வாழ அத்யாவசியத் தேவையான தண்ணீருக்காக, நமது வாழ்வாதாரத்தை காப்பாற்றிக்கொள்வதற்காக  அண்டை மாநிலத்தவருடன் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறோம். காடுகளும் மரங்களும் அழிந்து வரும் இந்த சூழ்நிலையில் நாம் ஒவ்வொருவரும் நல்ல காற்றை சுவாசிக்க மரங்களை நடுவது அவசியம். ஏனெனில் மனிதன் தனது இயற்கைக்கு முரண்பட்ட செயல்களால் காற்று மண்டலத்தை மாசு படுத்தி கார்பண்டை  ஆக்சைடு அளவை அதிகரித்து இந்த பூமியை உயிரினங்கள் வாழத் தகுதியற்றதாக மாற்றிக் கொண்டிருக்கும்  நிலையில் மரங்களே ஆக்சிஜனை உற்பத்தி செய்து வளி மண்டலத்தில் ஆக்சிஜனின் அளவை குறையாமல் காத்துவருகின்றன.

ஒரு குடும்பத்திற்கு ஒரு சிறந்த தமயனைப்போல் ஒரு மரம் அதன் சூழலை மணம் நிறைந்ததாக  மகிழ்ச்சி நிறைந்ததாக மாற்றுகிறது என சாணக்கிய நீதி மரங்களின் சிறப்பை போற்றுகிறது  (சாணக்கிய நீதி தர்பன் 3-14).

மலர்களும் கனிகளும் நிறைந்த மரங்கள் இந்த பூமியை திருப்திப்படுத்துகின்றன. எவனொருவன் ஒரு மரக்கன்றை  தானமாக வழங்குகின்றானோ அவன் அதே மரத்தினால் அவனது மறு உலகில் பயனை அடைகிறான் என நமது இந்து தர்மம் மரங்களின் சிறப்பை சிலாகிக்கிறது. (மகாபாரதம் - அனு பர்வதம் 58/30).

எவனொருவன் ஒரு அரச மரக்கன்றை  நடுகிறானோ , ஒரு வேப்ப மரக்கன்றை  நடுகிறானோ , ஒரு ஆல மரக்கன்றை நடுகிறானோ, 10  மலர்ச் செடிகளை நடுகிறானோ, 2 மாதுளைக் கன்றுகளை நடுகிறானோ, 2 ஆரஞ்சுக் கனி மரக்கன்றுகளை நடுகிறானோ, 5 மாமரக் கன்றுகளை நடுகிறானோ அவன் ஒருபோதும் நரகத்திற்குச் செல்வதில்லை  (வராஹ புராணம் 12-2-39) என ஒருவனது கர்ம வினைகளிளிருந்து தன்னை  காத்துக்கொள்ள வழி கூறுகிறது நமது தர்மம்.

துளசியின் அனைத்து அங்கங்களுமே புனிதமானவை, அது ஜீவித்திருக்கும் மண் கூட புனிதமானதே – பத்ம புராணம்.

இப்படி மரங்களின் சிறப்பை கூறுவதோடல்லாமல்  அவற்றை நமது வாழ்வின் அங்கங்களாக்கிக்கொள்ள நமது முன்னோர்கள் அற்புத பொக்கிஷமான விருக்ஷ சாஸ்திரத்தை அருளியுள்ளனர்.

மரங்களின் முக்கியத்துவத்தின் பொருட்டு விருக்ஷ சாஸ்திரம் என்றொரு தனிப்பிரிவிட்டு அவற்றை போற்றியுள்ளார்கள் நமது முனிவர்கள்.இது ஜோதிடத்தின் ஒரு உப பிரிவாக எடுத்துக் கொள்ளப்படுகிறது.இதன் மூலம், எதுவென ஆராய்ந்தால் அது         ஜோதிடத்திற்கு பிரகத் ஜாதகம் & பிரகத் சம்கிதை என்ற ஒப்பற்ற இரு நூல்களை வழங்கிய வராஹா மிகிரர் என்பது புலனாகிறது. அரசன் விக்கிரமாதித்தனின் (இரண்டாம் சமுத்திரகுப்தன்) அவையை அலங்கரித்த நவரத்தினங்கள் என போற்றப்பட்ட ஒன்பது அறிஞர்களில் சிறந்தவர் இவர். (கிரக சஞ்சார நிலைகளை மிகச் சிறப்பாக கணக்கிட்டு அறிய பல கணக்கீட்டு முறைகளை  நமக்கு அளித்த ஆரியபட்டரின் சமகாலத்தவர் இவர். ஆரிய பட்டரை சிறப்பிக்கும் பொருட்டு நமது இந்திய அரசு தனது முதலாவது செயற்கைக் கோளுக்கு ஆரியபட்டா எனப் பெயரிட்டுள்ளது). ஒரு வராகத்தினால் (பன்றி) விக்கிரமாதித்தனின் புதல்வன் மரணமடைவான் என துல்லியமாகக் கணித்ததால் இவர் வராஹ மிகிரர் என்றே அழைக்கப்படுகிறார்.

இந்த வராஹமிகிரரும் தனது ஜோதிட ஆய்வுக்காக குறிப்பாக தனது பிரகத் சம்கிதைக்காண (பூகம்பம் , புயல் போன்ற இயற்கைச் சூழ்நிலைகளை ஆராயும் நூல்) விபரங்களைத் திரட்ட  பல தேசங்களுக்குச் சென்று பல்வேறு அறிஞர்களிடமிருந்தும் பல சுய ஆய்வு மூலமும்தான் பல்வேறு மரங்களின் விபரங்களைத் திரட்டி குறிப்பிட்ட மரங்கள் குறிப்பிட்ட நக்ஷத்திரங்களில் பிறத்தவர்களின்மீது ஈர்ப்பைக் கொண்டிருக்கின்றன என தமது பிரகத் ஜாதக நூலில் குறிப்பிட்டுள்ளார்.

வேறு சில பண்டைய ஜோதிட நூல்களிலும் மரங்களுக்கும் உயிரினங்களுக்கும் உள்ள தொடர்பு பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு உதாரணம் சொல்ல வேண்டுமென்றால் அரசமரத்தைக் கூறலாம்.   அது  உற்பத்தி செய்யும் ஆக்சிஜனின் அளவு ஏனைய மரங்களை விட அதிகம் என்பதை அறிந்து அந்த ஜீவ வாயுதான் பெண்களின் கர்ப்பப்பையில் கரு தங்கத் தேவையான ஆதார சக்தியை அளிக்கிறது என்பதையும் ஆராய்ந்து தெளிந்து மழலை வேண்டும் பெண்கள் அரச மரத்தை சுற்றிவர வழி வகைகளையும்  குறிப்பிட்டுள்ளார்கள். புத்திர காரகன் என அழைக்கப்படும் குருவினது ராசியான தனுசு ராசிக்குரிய விருக்ஷமாக அரச மரத்தைக் குறிபிட்டுள்ளதிலிருந்து மரங்களின் குணாதிசயங்களை மிகத்தெளிவாகக் கவனித்தே இவற்றை நமக்கு அளித்துள்ளனர்  என அறியலாம்.

குப்பைமேனி செடிகளின் இருக்குமிடங்களை கடந்து வரும்போது பூனைகள் அவற்றை விட்டு விலகிச் செல்வதை கிராமப்புறத்தினர் கவனித்திருக்கலாம். கடும் உணவுப்பற்றாக்குறைக் காலத்திலும் ஆடுகள் செழிப்பாக வளர்ந்துள்ள ஒரு தாவரத்தை உண்ணாது. அத்தாவரம் ஆடு தோடா இலை  என்றே அழைக்கப்படுகிறது. பாம்புடன் சண்டையிடும் கீறி பாம்பு கொத்திவிட்டால் விஷ முறிவிற்காக ஒரு குறிப்பிட்ட தாவரத்தின் வேரை உண்ணுவதை கேள்விப்பட்டிருக்கலாம். இன்னும் இது போல உயிரினங்களை பாதிக்கும் தாவரங்களின் இயல்பை சொல்லிக்கொண்டே போகலாம்.

விருக்ஷ சாஸ்திரத்தில் ஒரு குறிப்பிட்ட நக்ஷத்திரத்தில், ராசியில் அல்லது ஒரு குறிப்பிட்ட கிரகத்தின் அம்சமாகப் பிறந்த ஒருவர் குறிப்பிட்ட சில மரங்களிலிருந்து வெளிப்படும் மணத்தினாலும், அவற்றிலிருந்து செய்யப்படும் மருந்துகளாலும் தனது நோய்களிலிருந்து விடுபடுகிறார் என்பதை கண்டறிந்துள்ளார்கள். இதன் பொருட்டே இந்தத் தொடர்புகளை ஆராய்ந்து நமது நல்வாழ்வுக்குப் பயனளிக்கும் வகையில் குறிப்பிட்டு வைத்துள்ளார்கள். இந்த சாஸ்திரத்தை அறிந்து நமக்குரிய விருக்ஷங்களை நட்டு நமது சிரமங்களிளிருந்து விடுபடுவது மட்டுமின்றி நாம் வாழும் இந்த பூமி செழிக்க நமது பங்கை நாம் ஒவ்வொருவரும் தயங்காது அளிக்க வேண்டும்.

ஒருவருக்கு லக்னத்திலோ அல்லது ராசியிலோ சூரியன் இருந்தால் அவர்கள் சூரியனின் அம்சமாக, தலைமைப்பண்பு உள்ளவர்களாக கருதப்படுவது மட்டுமின்றி அப்பண்பை அவர்களிடத்தில் காணலாம். அதுதான் ஜோதிடம். ஒருவருக்கு  சூரியனின் திசை நடந்தால் அவர் சூரியனுக்கு உரிய எருக்கஞ்செடியை  நட்டு முறையாக பராமரித்து வரவேண்டும். அதனால் அவர் சூரியன் ஜாதகத்தில் அமைந்த வலுவைப் பொறுத்து நற்பலன்களை அடைவது உறுதி. மேலும் சூரியன் நல்லபடியாக ஜனன ஜாதகத்தில் அமையாதவர்களுக்கு   தீய பலன்கள் குறையும். இதை அனுபவித்து உணரலாம். இதே போன்று இதர கிரக அம்சத்தினரும் அவரவர்களுக்கு உரிய கிரக விருக்ஷங்களை நட்டு பராமரித்து வரவேண்டும்.

பின்வருவன நவக்கிரக விருக்ஷங்கள்.

நவக்கிரக விருக்ஷங்கள்
சூரியன்          -           எருக்கு
சந்திரன்         -           பலாசு (பலா மரம் அல்ல)
செவ்வாய்      -           கருங்காலி
புதன்             -           நாயுருவி
குரு                -           அரசு
சுக்கிரன்         -           அத்தி
சனி                -           வன்னி
ராகு                -           அருகம்புல்
கேது               -           தர்ப்பைப் புல்

ஒருவர் சிம்ம லக்னமாகவோ  அல்லது சிம்ம  ராசியாகவோ இருந்தால் அவர்கள் பின்வரும் ராசி விருக்ஷங்களை நட்டு பராமரித்து நற்பலன்களை அடையலாம்.

ராசி விருக்ஷங்கள்
மேஷம்           -           செஞ்சந்தனம் (சந்தன வேங்கை )
ரிஷபம்           -           ஏழிலைப்பாலை
மிதுனம்          -           பலா
கடகம்            -           பலாசு (பலா மரம் அல்ல)
சிம்மம்            -           இலந்தை 
கன்னி             -           மாமரம்
துலாம்            -           வகுளம்
விருச்சிகம்      -           கருங்காலி
தனுசு              -           அரசு
மகரம்             -           தோதகத்தி
கும்பம்            -           வன்னி
மீனம்              -           ஆல மரம்

நாம் அனைவரும் சப்த ரிஷிகளை வழிகாட்டிகளாகக் கொண்டு நம் வாழ்வை அமைத்துக்கொண்டவர்களே . குறிப்பிட்ட ரிஷியை வழிகாட்டியாகக் கொண்டவர்கள் அக்குறிப்பிட்ட ரிஷியின் கோத்திரத்தைச் சார்ந்தவர்கள் என அழைக்கப்படுகிறார்கள். ஒருவர் எந்த ரிஷி கோத்திரத்தைச் சார்ந்தவரோ அந்த ரிஷிக்குரிய விருஷத்தை நட்டு பராமரித்து வரவேண்டும்.

சப்த ரிஷிகளுக்கான மரங்கள்
காஷ்யபர்                   -    கிருஷ்ண துளசி  
அத்ரி                          -    அகத்தி
பரத்வாஜர்                 -     நாயுருவி
விஸ்வாமித்திரர்         -     வில்வம்
கௌதமர்                   -    ஊமத்தை  
ஜமதங்கி                    -    அறுகம்புல்
வசிஷ்டர்                    -   வன்னி மரம்  

பஞ்ச பூதங்களால் ஆனதே இந்த பிரபஞ்சமும் அதில் அமைந்த அனைத்தும். பஞ்ச பூத வடிவங்களை கோவில்களுக்குச் சென்று வழிபடுவது ஒரு முறை. மற்றொரு முறை அவற்றிற்கான விருக்ஷங்களை நட்டு பராமரித்து வருவது.

பஞ்சபூத விருக்ஷங்கள்
ஆகாயம்           -சிவன்        - வில்வம்
நீர்                    -விஷ்ணு     – துளசி
நெருப்பு            -சூரியன்      – அரளி  
பூமி                  -விநாயகர்    - அருகம்புல்
வாயு                -அம்பிகை    – சங்கு புஷ்பம்

ஒரு குறிப்பிட்ட அம்சத்திற்கு ஒன்றிற்கு மேற்பட்ட விருக்ஷங்களை குறிப்பிட்டிருப்பார்கள். அதுபற்றி வாசகர்கள் குழம்பிக்கொள்ள வேண்டாம். ஏனெனில் மேற்குறிப்பிட்டுள்ள விருக்ஷங்களுக்கு உப விருக்ஷங்கள் மற்றும் மாற்று (alternative) விருக்ஷங்களையும் நமது முனிவர்கள் குறிப்பிட்டுள்ளனர். அவை இங்கு குறிப்பிடப்படவில்லை என்பதை கூறிக்கொள்ள விரும்புகிறேன்.



மேற்கண்ட புகைப்படத்தில் என்னுடன் இருப்பவர் நண்பர் திரு.சிவராமன். இப்பதிவை எழுத உந்துதலாக இருந்தவர். இப்பூமி செழிக்க  விருக்ஷங்களை இலவசமாகவே பெற்றுத்தர இவர் போன்ற நல்லுள்ளம் கொண்டோர் நானிலத்தில் சிலருண்டு . அவற்றை நட்டு பராமரித்து இந்த பூமியை  சிதையாமல் பாதுகாத்து நமது அடுத்த தலைமுறைக்கு அளிக்க பலர் தேவை. வருஷாதி, நக்ஷத்திராதி விருக்ஷங்கள் போன்ற மேலும் பல தகவல்களுடன் அது பற்றிய விபரங்களை  அடுத்த பதிவில் அளிக்கிறேன்.

வாழ்த்துக்களுடன்,
பழனியப்பன்.



3 comments:

  1. ஆடுதோடா இல்லை, அது ஆடு தின்னா பாலை அல்லது பாளை,

    ReplyDelete
  2. நன்றி,மிக அவசியமான தகவல்

    ReplyDelete