Thursday, 23 January 2014

தொழிலில் பங்குதாரரை தேர்ந்தெடுக்கும்போது ஜோதிட ஆலோசனை அவசியமா?



அடிக்கடி சிறிய சிறிய காரணங்களுக்காக ஜோதிடம் பார்ப்பது கூடாது.
ஆனால் குழந்தைகளின் உயர்கல்வியை முடிவு செய்யும்பொழுது, வீடு கட்டும் பொழுது, திருமணத்தை முடிவுசெய்யும் பொழுது, ஒரு தொழில் துவங்கும் பொழுது, முக்கியமாக தொழிலில் பங்குதாரரை தேர்வுசெய்யும் பொழுது ஜோதிடரின் ஆலோசனையை நாடுவது நல்லது.

வாழ்க்கைத் துணைவரைத் தேர்ந்தெடுக்கும்போது உள்ள கவனம் தொழில் கூட்டாளியைத் தேர்ந்தெடுக்கும் போதும் வேண்டும். ஏனெனில் அதன் மூலம் ஈட்டப்படும் தனமே வாழ்வின் ஆதார சக்தியாக விளங்குகிறது.

பின்வரும் ஜாதக அமைப்பை கவனியுங்கள்.





மகர லக்ன ஜாதகத்தில் தொழில் கூட்டாளியைக் குறிக்கும் 7 ஆம் அதிபதி சந்திரன் விரையஸ்தானமான 12 ஆமிடத்தில் விரையாதிபதியான தனகாரகன் குருவுடன் இணைந்து உள்ளார். இந்த அமைப்பு, ஜாதகர் வாழ்வில் நிறைய பொருளாதார இழப்புகளைச் சந்திப்பதையும் அது கூட்டாளி அல்லது மனைவி மூலமாகவே இருக்கும் என்பதனையும் குறிப்பிடுகிறது. (7 ஆமிடம் மனைவி, கூட்டாளி மற்றும் அடிக்கடி நம்மை தொடர்புகொள்பவர்களையும் குறிக்கும்) 



கீழே மற்றொரு ஜாதக அமைப்பைக் கவனியுங்கள்.







கடக லக்ன ஜாதகருக்கு விரயாதிபதி புதன் கூட்டாளி ஸ்தானமான 7 ஆமிடத்தில் உள்ளார். பங்குதாரர் மூலம் இழப்பு ஏற்படும் என்பதை இவ்வமைப்பு குறிப்பிடுகிறது. ஜீவன ஸ்தானமான 10 ஆமிடத்தில் கேதுவுடன் சேர்ந்து கெட்டுவிட்ட லக்னாதிபதி சந்திரனால் தொழிலை சிறப்பிக்க இயலவில்லை. 10 ஆமதிபதி செவ்வாய் வக்ரகதியில் சர லக்னத்திற்கு பாதக ஸ்தானமான 11 ஆமிடத்தில் சென்று அமைந்து கெட்டுவிட்டதால் அவராலும் தொழிலில் ஜாதகருக்கு சாதகமான சூழ்நிலையைத் தர இயலவில்லை. மேலும் ஜாதகரின் மேஷ ராசிக்கு தொழில் ஸ்தானமான 10 ஆமிடமான மகரத்தில் ராசிக்கு 3 & 6 ஆகிய பாவங்களுக்குரிய புதன் அமைந்துள்ளார். 6 ஆமிடாதிபதி கடன்களைக் குறிப்பவர் என்பது இங்கு கவனிக்கத்தக்கது.

இவ்விரு ஜாதகத்திலும் ராசிகள் தனுசும் மேஷமும் திரிகோண ராசிகள் என்பதும் ராசியாதிபதிகள் குரு மற்றும் செவ்வாய் இருவரும் நட்பு என்பதாலும் இரு ஜாதகர்களும் மரியாதை மிக்க நட்புணர்வோடு பழகியவர்கள். ஆனால் அந்த நட்பை மட்டுமே நம்பி தொழிலில் பங்குதாரர்களானவர்கள். இரு ஜாதகர்களுமே இறை நம்பிக்கை மிக்கவர்களாக இருந்தும் தொழிலில் ஒன்று சேர்வதற்கு முன் துரதிஷ்ட வசமாக ஜோதிட ஆலோசனை பெறத் தவறியவர்கள்.

தற்போது இவர்களின் தொழில் கூட்டணி முறிந்ததோடல்லாமல் இவர்களின் நட்பும் விதி வசத்தால் கேள்விக்குறியாகிப் போனது. காரணம் சொல்லித்தெறிய வேண்டுமா?. ஆம் தொழிலில் ஏற்பட்ட கடன்கள் மற்றும் இழப்புகளே.

எனவே இதுபோன்ற பாதிப்புகள் ஏற்பட ஜாதக ரீதியாக உள்ள வாய்ப்புகளை அது விஷயத்தில் கால்பதிக்கும் முன்னரே கண்டு முடிவெடுத்தால் நம் வாழ்வின் துயரங்களில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம். அப்படி நமது வாழ்வின் சிரமங்களை களைய நம் முன்னோர்கள் அருளிச் சென்ற அற்புதக் கலையே ஜோதிடக் கலை.   

எனவே முக்கிய காரணங்களுக்காக கண்டிப்பாக ஜோதிடத்தின் துணையை நாடுங்கள். இறை நம்பிக்கையுடன் நமது புத்தி சாதுரியத்தையும் ஒன்று சேருங்கள் வாழ்வை வளமாக்கலாம்.

பிற்சேர்க்கை :

கடந்த 2013 ஜனவரி 23 ஆம் தேதி துவங்கப்பட்ட எனது வலைப்பூ இன்று தனது இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. வலைப்பூ உலகிற்கு   புதிய அறிமுகமான எனக்கு வாசகர்களின் மன ஓட்டங்களை அறிந்துகொள்ள கடந்த ஒரு வருடம் உதவியது. தரமான, ஆர்வமும் தேடலுமுள்ள வாசகர்களைத்தான் நான் நாடுகிறேன். வேறெந்த வலைப்பூவுடனும் ஒப்பிட இயலாதவாறு எனது பாணியில் இதை நிர்வகிக்க  ஆவல். அதற்கு ஆதரவளிக்கும் அன்பு உள்ளங்களுக்கு நன்றி.

அடுத்த பதிவு "கேந்திராதிபத்திய தோஷத்தின் பின்னணியிலுள்ள அறிவியல் சூட்சுமம்."


சிந்திப்போம்.

வாழ்த்துக்களுடன்,
அன்பன்,
பழனியப்பன்.

No comments:

Post a Comment