சூரிய மண்டலத்தில்
ராகு-கேதுக்களின் அமைவிடத்தை விளக்கும் படம்.
கிரகங்கள் சூரியனைச் சுற்றும் கிடைமட்ட அச்சுக்கு
குறுக்குவாட்டில் பூமியைச் சுற்றும் சந்திரனின் அச்சானது இரு இடங்களில் வெட்டும். சந்திரன்
மேலெழும்பி வரும்போது வெட்டும் புள்ளியே ராகு எனக் குறிப்பிடப்படுகிறது. அதுபோல்
சந்திரன் கீழே செல்லும்போது வெட்டும் புள்ளியே கேது எனப்படுகிறது. ராகு கேதுக்கள்
கிரகங்கள் அல்ல. தங்கள் பாதையில் வரும் கிரகங்களின் கதிர்வீச்சுகளை
கட்டுப்படுத்துபவை. எனவேதான் அவற்றை புள்ளிகள், நிழல்கள் (சாயா என்ற வடமொழிச்
சொல்லுக்கு நிழல் எனப் பொருள்) என்கின்றனர். மேல்நாட்டு ஜோதிடமுறையில் இவற்றை Moon ascending
node & Moon descending node எனக் குறிப்பிடுகின்றனர்.
ராகு கேதுக்கள் கிரகங்களின் கதிவீச்சுக்களைக்
கட்டுப்படுத்தும் சக்தி வாய்ந்தவை. அதனால்தான் அவற்றை ஏனைய ஏழு கிரகங்களையும்விட
வலிமையானவை என்கிறது ஜோதிடம். நிஜமன்றி நிழல் இல்லை என்பதால் இவை தாங்கள்
அமைந்துள்ள பாவாதிபதிகளின் பலன்களையே முதன்மையாக எடுத்துச் செய்வார்கள். பிறகு
தாங்கள் அமர்ந்த நட்சத்திராதிபதி, தங்களைப் பார்க்கும் கிரகம், தங்களுடன் சேர்ந்த கிரகங்களின்
பலன்களையும் வழங்குவார்கள்.
பின்வரும் ஜாதகத்தைக்
கவனியுங்கள்.
02.07.1986 ல் பரணி நட்சத்திரம் நான்காம் பாவத்தில் பிறந்தவர் ஜாதகர்.
ராகு லக்னாதிபதி குருவின் வீட்டில் இருப்பதால் அவர்
குருவினது சுபாவமான சுபப் பலன்களையே வழங்க வேண்டும். குரு லக்னத்திற்கும் நான்காம்
பாவத்திற்கும் உரியவர். மேலும் குரு ஒரு நீர் கிரகம். நான்காம் பாவமும் 9 ஆம்
பாவமும் ஒரு ஜாதகரின் வெளிநாட்டுத் தொடர்பு மற்றும் பயணங்களைக் குறிப்பிடுவதாகும்.
ராகு-கேதுக்களும் தங்கள் காரகப்படி வெளிநாட்டுத் தொடர்பை குறிப்பவை. லக்னத்தோடும்
4,
9 பாவங்களோடும்
தொடர்புடைய ராகு-கேதுக்கள் தங்களது திசா புக்திகளில் ஒரு ஜாதகருக்கு வெளிநாட்டுத்
தொடர்பை ஏற்படுத்தும்.
ஜாதகருக்கு 2013 மே மாதம் இறுதியில் ராகு திசை
துவங்கியது. ராகு குருவின் சுபாவப்படி செயல்பட வேண்டும். குரு குடும்ப காரகன்
என்பதால் ஜாதகுக்கு தனது திசையில் குரு புக்தியில் திருமணத்தை நடத்தி
வைத்தது. அடுத்து ஜாதகத்தில் 4 ஆம் இடம் நீர் ராசியாகி (மீனம்) அங்கு வெளிநாட்டுத் தொடர்பைக் குறிக்கும் ராகு
இருப்பதால் ஜாதகருக்கு வெளிநாட்டுத் தொடர்பை ஏற்படுத்தித் தர வேண்டும். ஜாதகர்
திருமணம் முடிந்த அதே குரு புக்தியில் வெளிநாடு சென்றார். குரு தனது சுய சாரமான
பூரட்டாதி – 3 ல் இருக்கிறார். மேலும் குரு அமைந்த சாரத்தின் உப நட்சத்திரமானது 9 ஆம் பாவாதிபதியான சூரியன் என்பதால் இது
நடந்தது. (K.P முறையில் ஜோதிடம்
பயில்வோருக்கு இது புரியும் புரியாத ஏனையோர் விட்டுவிடவும்).
பின்வரும் இரண்டாவது
ஜாதகத்தைக் கவனியுங்கள்.
08.11.1962 பூரட்டாதி 4 ஆம் பாத்தில் பிறந்தவர் ஜாதகர்.
ஜாதகருக்கு 2002 செப்டம்பர் முதல் வாரத்தில் கேது
திசை துவங்கியது. கேது லக்னத்திற்கு 2 ல் சனி வீட்டில் சனியுடன் சேர்க்கையில்
உள்ளார். மேலும் கேது அஷ்டமாதிபதியான சந்திரனின் நட்சத்திரமான திருவோண நட்சத்திரத்தில்
உள்ளார். வளர்பிறைச் சந்திரன் சதுர்த்த கேந்திரத்தில் (4 வது பாவம்) அமைந்து கேந்திராதிபத்திய
தோஷவலுவும் கூடியுள்ளது. திருக்பலம் என்ற அமைப்பில் சதுர்த்த கேந்திரத்தில்
சந்திரனுக்கு வலு அதிகம் என்பது இங்கு கவனிக்கத்தக்கது. (இதுபற்றிய
ஆய்வுக்கட்டுரை பிறகு வரும்). எனவே சந்திரன் ஜாதகருக்கு பாதகப்பலங்களை வழங்கத் தயாராக உள்ளார் என்பதை அறிய முடிகிறது. மேலும் சந்திரனின் வீட்டில் பூமிகாரகன் செவ்வாய் நீசமாகி
ராகுவுடன் சேர்ந்து கெட்டுவிட்டார்.
ஜாதகருக்கு கேது திசை துவங்குமுன்னரே கேது திசையில்
ஜாதகர் சார்ந்த ஏற்றுமதித் துறையில் பெரும் நஷ்டம் ஏற்பட்டு பூமி வகைகளை விற்கும்
நிலைக்கு தள்ளப்படுவீர்கள் என எச்சரிக்கப்பட்டது. ஆனால் கேந்திராதிபத்திய
தோஷத்திற்கு ஆளான மனோகாரகன் சந்திரனும் சிந்தனை ஸ்தானமான 5 ஆமிடாதிபதி செவ்வாய்
நீசமானதால் சிந்தனையும் பாதிக்கப்பட்ட ஜாதகர் ஜோதிடரின் எச்சரிக்கைகளை கவனத்தில்கொள்ளத்
தவறினார். விளைவு? ஜோதிடர் சொன்னது அத்தனையும் நடந்தது. ஏற்றுமதித் தொழிலில்
ஏற்பட்ட நஷ்டத்தால் ஜாதகர் தனது பூமிகளை இழக்கும்படியாயிற்று.
கீழே மூன்றாவது ஜாதகத்தை கவனியுங்கள்.
எனது 16 வருட ஜோதிட ஆய்வில் உதாரணத்திற்கு பல்வேறு ஜாதகங்கள் இருந்தாலும் படைத்தவனைப்
பற்றிய தேடலில் உள்ளவன் என்ற வகையில் படைத்தவனின் லீலைகளைப் பல்வேறு கோணத்தில்
ஆராய உதவிய ஜாதகம் இது. நான் மிகவும் நேசிக்கும் மகாகவி ரவீந்த்ரநாத் தாகூரின்
ஜாதகம் இது.
பிறந்தது 6 மே 1861 அதிகாலை 4.02 AM கல்கத்தா.
தனது பெற்றோருக்குப் 14 ஆவது பிள்ளையாய் பிறந்தவர். புதனின் ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர் தாகூர். புதன்
உச்ச சூரியனுடன் புத- ஆதித்ய யோகத்தில் இருந்ததால் பால்யக்கல்வியில் சிறந்து
விளங்கினார். அடுத்து 4 ஆம் பாவத்தில் அமைந்து கேந்திராதிபத்ய தோஷம் பெற்ற குருவின் நட்சத்திரத்தில்
அமைந்த கேது திசை பள்ளிக் கல்வியைத் தடை
செய்தது. பள்ளிக் கல்வியை 4 ஆம் பாவம்
குறிக்கும் என்பது இங்கு
கவனிக்கத்தக்கது. (பால்யக்கல்வியை 2 ஆம் பாவமும் உயர் கல்வியை 9 ஆம் பாவமும் குறிப்பிடும்.)
அதனால்
தனது 14 ஆவது வயதில் பள்ளிக்
கல்வியை நிறுத்தும் சூழல் ஏற்பட்டது.
ஆனால் உச்சம் பெற்ற கிரகம் கேந்திராதிபத்யாதோஷத்தால்
தடங்கல்களைத் தருமேயன்றி தடைசெய்யாது என்ற விதிப்படி தன் வீட்டிலேயே தாகூர் தனிக்
கல்வி பயின்றார். உயர்கல்வியைக் குறிப்பிடும் 9 ஆம் பாவதிபதி உச்சம் பெற்றதால்
அறிவை தேடித்தேடிப் பயின்றார். லண்டன் சென்று சட்டம் பயின்றார். ஆனால் மேல்நாட்டுச்
சட்டக் கல்விகள் வக்கீல்களின் வாதத்திறமையை வளர்க்கவே உதவின. நீதியை நிலைநாட்ட
அல்ல என்ற உண்மையை புரிந்துகொண்டார். நமது வேத இதிகாச புராணங்களில் இல்லாத
நீதிகளா?. என்ற கேள்வி எழ முழுக் கல்வியையும் முடிக்காமலேயே இந்தியா திரும்பினார். நமது இந்து தர்ம நெறிகளையும் பண்பாட்டையும் முழுமையாகக் கற்றார்.
நமது தர்மங்களின் சிறப்போடு கூடிய கல்வியை நாடெங்கிலும் அணைவரும் கற்க சாந்தி
நிகேதனை நிறுவினார். அவர் ஊன்றிய அந்த
விருட்சம் இன்று தேசமெங்கும் கிளை பரப்பி நிற்கிறது.
இந்தியாவின் மிகச் சிறந்த விடுதலைவீரர். உலகின் மிகச்சிறந்த
தத்துவ ஞானிகளில் ஒருவர். இந்தியாவின் மிகச் சிறந்த கவிஞர். உலகின் மிகச் சிறந்த
இலக்கியவாதிகளில் ஒருவர். அதற்காகவே தாகூரினது கீதாஞ்சலி கவிதைத் தொகுப்பிற்காக இலக்கியத்திற்கான
நோபல் பரிசு பெற்றார்.
இப்படி பன்முகத்திறமைகளையும் ஜாதகருக்கு வழங்கியது உச்சம்பெற்ற
பாக்கியஸ்தானாதிபதி குருவும் பாக்கியஸ்தானத்தில் அமைந்ததால் குருவின் சுபாவத்தையொட்டி
ஜாதகருக்கு பாக்கியங்களை வாரி வழங்கிய ராகுவுமே ஆவர் என்றால் அது மிகையல்ல. அவரது உள்ளத்தில்
உறுதியையும் உயர்வையும் ஐந்தாமிடத்தில் அமைந்த சனியும் உச்சமடைந்த ஐந்தாமதிபதி
சூரியனும் அளித்தார்கள்.
கீழே 4 ஆவது ஜாதகம்.
லக்னத்திற்கு மூன்றில் பத்தாமதிபதி சந்திரன் மறைந்துவிட்டார்.
சந்திரனின் வீடான கடகமும் 2 மற்றும் 7 க்குரிய செவ்வாய் அங்கு நீசமானதால் கெட்டது. சுகஸ்தானமான 4 ஆம் பாவாதிபதி சனி லக்னத்திற்கு 12
ல் மறைந்துவிட்டார். எனவே சுகஸ்தானத்திலமைந்த கேதுவும் கடகத்திலமைந்த ராகுவும்
தங்கள் பாவாதிபதிகள் கெட்டதால் தாங்களும் கெடுபலனைத் தர வேண்டியவராகின்றனர். ராகு
கேதுக்கள் முழுமையான கால சர்ப்ப தோஷத்தை இங்கு அளிக்கின்றனர். 1981 ல் சூரிய திசை யில் பிறந்த
ஜாதகருக்கு திருமணம் என்பது கானல் நீராகிப் போனது கொடுமை.
எனவே ராகு கேதுக்கள் தன்னிச்சையாக பலன்களை
வழங்குவதில்லை அவர்கள் அமைந்த வீட்டதிபதியின் நிலையைச் சார்ந்தே பலன்களை
அளிக்கின்றனர்.
இப்போது தலைப்பை மீண்டும் ஒருமுறை வாசியுங்கள்.
மீண்டும் ஒரு பதிவில் சிந்திப்போம்.
வாழ்த்துக்களுடன்
அன்பன்,
பழனியப்பன்.
No comments:
Post a Comment