Sunday 3 August 2014

THE TUG OF WAR


மனித வாழ்க்கையை நாம் ஒரு கயிறு இழுக்கும் போட்டிக்கு ஒப்பிடலாம். போட்டி மனிதனின் எண்ணத்திற்கும் அவனது விதிக்கும் இடைப்பட்டது.

சிலர் பிறக்கும்போதே விதியின் பக்கம் நின்றுகொண்டிருப்பார்கள். யோக ஜாதகன், அதிஷ்டக்காரன் என அவர்களை அழைக்கலாம். ஆங்கிலத்தில் கூறுவதென்றால் ‘Born with silver spoon. இங்கிலாந்து அரசி போல.

இரண்டாவது வகையினர்  முயன்றமட்டும் தனது எண்ணப்படி வாழ்வை அமைத்துக்கொள்ள கடுமையாகப் போராடுபவர்கள். இந்த இரண்டாம் வகையில் ஒரு பிரிவினர் தனது கர்மாவுக்கும் தனது எண்ணங்களுக்குமிடையே நடக்கும் இந்தப் போட்டியில் வெற்றிபெறுவது கடினம் எனும் சூழ்நிலையில் தங்களது எண்ணங்களை சூழ்நிலைக்கேற்ப மாற்றியமைத்துக் கொள்வார்கள். மற்றொரு பிரிவினர் போட்டியில் தங்களது காலங்களை, இளமையை வீணடித்தாவது வெற்றிபெறுபவர்கள்.

உண்மையில் என்ன நடக்கும் என்றால் மனிதனின் ஆசைக்கும் அவனது கர்மாவிற்குமான போட்டியில் நல்ல திசா-புக்திகள் நடக்கும் சூழ்நிலையில் அவன் வெற்றிபெறுவது போல் தோன்றும். மோசமான திசா–புக்திகள் மற்றும் கோட்சார கிரக நிலைகள் (அதிலும் முக்கியமாக கர்மகாரனான சனியின் நிலை) நிலவுகையில் விதி மனிதனை எளிதாக தன்பக்கம் இழுத்துகொண்டுவிடுகிறது.

இதில் எந்தக் கால கட்டம் யாருக்கு சாதகமாக எந்த செயலுக்கு சாதகமாக இருக்கும் என்பதை ஆராய்ந்து கூறுவதே ஜோதிடம்.

மனித வாழ்வை ஒரு கம்பத்தில் கட்டப்பட்டிருக்கும் மாட்டின் நிலைக்கு ஒப்பிட்டால், சிலருக்கு கர்மாவின்படி கம்பத்திற்க்கும் கயிற்றுக்குமான இடைவெளி மாடு சௌகரியமாக மேய்வதற்குத் தக்கபடி அமைந்திருக்கும். சிலருக்கு அந்த இடைவெளி மிகக் குறைவாக அமைந்திருக்கும். அதாவது அப்படிப்பட்டோரின் வாழ்க்கை வட்டம் குறுகியதாக அமைத்திருக்கும். அத்தகையவர்களே சபிக்கப்பட்டவர்கள் எனலாம். அப்படிப்பட்டவர்களுக்கு படைத்தவனால் சில அடிப்படை உரிமைகள் கூட மறுக்கப்பட்டிருக்கும் உதாரணமாக குடும்பம், குழந்தை, உண்ண உணவு போன்றவை. அத்தகைய ஜாதகங்கள் சிலவற்றை இங்கு காணலாம். 

ஜனன ராகு திசை இருப்பு 5 வருடம் 7 மாதம் 10 நாட்கள்.
ஜாதகத்திற்கு உரியவர் ஒரு ஆண்.

05.07.1968ல் பிறந்த ஜாதகருக்கு தற்போது வயது 46. கோவில் கோவிலாக தற்போது சுற்றி வருகிறார். இன்னும் திருமணம் கூடவில்லை .குடும்ப ஸ்தானாதிபதி (2 ஆம் வீட்டோன்) சனி 5 ஆம் வீட்டில் நீசம். 7 ஆமதிபதி புதன் ஆட்சியானாலும் 7 ஆமதிபதியுடன் இயற்கை பாவிகளான செவ்வாய், சூரியன் மற்றும் 6 ஆமதிபதி சுக்கிரன் ஆகியோரது சேர்க்கை அங்கு ஏற்பட்டதால் பாதிக்கப்பட்டது. முக்கியமாக 7 ஆமிடத்தில் ஏற்பட்ட இந்த இணைவை நீச சனி பார்த்ததால் மிகக் கடுமையாக 7 ஆமிடம் பாதிக்கப்பட்டது.

உபய லக்னமான தனுசு லக்னத்திற்கு 7 ஆமிடத்தில் 7 ஆமதிபதி ஆட்சி பெறுவது ஜாதகரின் திருமண வாழ்வை கேள்விக்குறியாக்கும் அமைப்பு.

மதிகாரகன் சந்திரனை நீச சனி பார்த்ததால் எண்ணங்களில் தெளிவில்லாமை. 5 ஆமிடமென்பது புத்தி ஸ்தானமும் கூட. மனஉறுதி, பிடிவாதம், போர்க்குணம் இவற்றிற்கு காரகத்துவம் பெற்ற செவ்வாயின் வீடு 5 ஆமிடமாகி அங்கு நீசமான  சனி 5 ஆம் வீட்டின் அதிபதி செவ்வாயை 3 ஆம் பார்வையாகப் பார்த்தது ஜாதகருக்கு உறுதியான புத்தி மற்றும் வைராக்கியம் இல்லாமல் செய்துவிட்டது. பாவத்தில் செவ்வாய் கடகத்தில் நீசமானது இதை உறுதி செய்கிறது.

இந்த சனி - செவ்வாயின் நிலையில் மற்றொரு நுட்பமான செய்தியும் உள்ளது. அது இளைய சகோதரத்தைக் குறிக்கும் 3 ஆவது வீட்டோனாக சனி வந்து  சகோதர காரகன் செவ்வாயின் வீட்டில் நீசமாகி ஜாதகருக்கு இத்தகைய பாதிப்புகளை சனி வழங்குவதால் ஜாதகரின் இளைய சகோதரத்தினாலேயே ஜாதகருக்குத் திருமணம் நடக்காது என்பது விளங்கும். ஜாதகருக்கு இளையவரான சகோதரிக்கு திருமணம் நடத்திவைத்துவிட்டு தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற எண்ணம் ஜாதகருக்கு திருமணம் நடக்காமல் செய்துவிட்டது.(2 வயது இளையவரான ஜாதகரின் சகோதரிக்கும் இன்னும் திருமணம் ஆகவில்லை.)

சிற்றின்பத்திற்கு அதிபதி சுக்கிரன், பாக்யாதிபதி சூரியன், புத்திகாரகன் புதன் இவர்களை நீச சனி பார்த்தது இவர்களின் தொடர்புடைய பாக்கியங்களையும் கிடைக்காமல் செய்துவிட்டது.

பாகியஸ்தானத்தில் (9 ஆம்டத்தில்) தனித்து நின்றுவிட்ட குடும்பகாரகன் குருவால் ஜாதகருக்கு திருமணத்தை நடத்திவைக்க இயலவில்லை. காரணம் குருவுக்கு 9 ல் சனி நீசம். குரு பிற கிரகங்களின் சேர்க்கையில் இல்லாமல் தனித்திருந்தால் நன்மை செய்யாது. குரு சுபாவ பாவியான சூரியனின் வீட்டில் சந்நியாச கிரகமான கேதுவின் மக நச்சத்திரத்தில் மாந்தியுடன் நின்றது திருமண முயற்சிகள் கடைசி நேரத்தில் காலைவாரிவிடும் என்பதைக் குறிக்கிறது. மாந்தி  லக்னத்திற்கு 3, 6, 11 இடங்களைத் தவிர வேறு இடத்தில் நின்றால் உடன் நிற்கும் கிரகம் மற்றும் பாவத்தின் பலன்களை கடைசி நேரத்தில் தடுக்கும். 

"அந்தணன் (குரு) தனித்திருக்க அவனியிலே அவதிகள் அதிகம் உண்டாம்" என்பது ஜோதிடம் பொன்மொழி.

ஒரு ஜாதகத்தில் எத்தகைய யோக - தோஷங்களிருந்தாலும் அவையணைத்தும் திசா-புக்திகளின் அடிப்படையிலேயே பலனளிக்கும். அந்த வகையில் ராகுதிசையில் பிறந்த ஜாதகர் குருதிசையை தனது 22 ஆவது வயதில் கடந்தாலும் பாவியின் வீட்டில் தனித்து அமைந்த குருவால் நன்மைகள் ஏதும் பெரிய அளவில் நடக்கவில்லை. அதன் பிறகு சனி திசையில் ஜாதகரின் ஆசைக்கும் கர்மாவிற்க்குமான  TUG OF WAR ல் கடுமையாகப் போராடியிருப்பார். ஆனால் சனி அவரை மிக எளிதாகவே வென்றிருக்கும். ஜாதகரின் அந்தக் கால கட்டத்தை கோட்ச்சார ரீதியாக ஆராய்ந்தபோது ஒரு ஜோதிடனாக எனது நெஞ்சம் நடுங்கியது. தற்போது ஜாதகர் புதன் திசையில் உள்ளார். சனியின் கட்டுபாட்டில் இருக்கும் புதன் சனியை மீறி எதுவும் செய்திட முடியாது என்பது அடியேனுக்குத் தெரியும். தந்தை அடித்துவிட்டால் குழந்தை பக்கத்துவீட்டுக் காரனிடன் நியாயம் கேட்க முடியாது. தந்தையின் முன்னால்தான் மீண்டும் நிற்க வேண்டும். 

அதனால் படைத்தவனிடமே ஜாதகரை முறையிட அறிவுறுத்தப்பட்டது.

"படைத்தவன் மனது வைத்தால் சோதிடன் வார்த்தைகள் எம்மாத்திரம்"  

இனி ஜாதகரின் சகோதரியின் ஜாதகத்தை ஆராய்வோம்.


ராகு திசை இருப்பு 8 வருடம் 10 மாதம்  6 நாட்கள்.

ஜாதகிக்கும் இன்னும் திருமணம் ஆகவில்லை. என்ன காரணம்?

லக்னாதிபதி விரயத்தில். விரயாதிபதி லக்னத்தில் எனும் பரிவர்த்தனை அமைப்பு ஜாதகரது வாழ்வில் ஏற்படும் தவிர்க்க இயலாத விரயத்தைக் குறிப்பிடுகிறது. ஜாதகி தனது குடும்ப வாழ்வை விரையம் செய்தவதை குறிப்பதாக இதை எடுத்துக் கொள்ளலாம். புத்தி ஸ்தானத்திற்கு உரிய சனி 8 ல் நீசம் மற்றும் மறைவு. ஜாதகரை கடைத்தேற்றும் லக்னாதிபதி புதன் 12 ல் மறைவு. அவர் புத்திகாரகனும் ஆகிறார். பெண்களுக்கு மாங்கல்யம்  காரகனும் மன உறுதிக்கு ஆதிபத்தியம் பெற்றவருமான செவ்வாய் 12 ல் மறைந்தும் கடும் தோஷமே.   தேய்பிறைச் சந்திரன் திருவாதிரை நட்சத்திரத்தில் ராகு சாரம் பெற்று லக்ன கேந்திரத்தில் நின்றதால் ஜாதகருக்கு புத்தி சாதுரியம், முடிவெடுக்கும் தைரியம் போன்றவை குறைவே என்பது புலனாகிறது. குடும்ப ஸ்தானாதிபதி சுக்கிரன் ஆட்சி என்பதோடு அவர் 7 ஆமதிபதி குருவோடு இணைந்து 2 ல் நின்றது நல்லதே. ஆனால் அவர்களை சனி பார்த்தது கடுமையானது. குரு நவாம்சத்தில் நீசம் பெற்று சனியுடம் பரிவர்த்தனை பெற்றது திருமண விஷயத்தில் ஏற்படும் அளவுகடந்த தாமதத்தைக் குறிப்பிடுகிறது. வாழ்க்கைத் துணைவரைக் குறிக்கும் 7 ஆமிடத்திற்கு இரு பக்கமும் ராகுவும் சனியும் நின்று 7 ஆமிடத்திற்கு கடும் பாவ  கர்த்தாரி யோகத்தை ஏற்படுத்துகிறார்கள்.

இத்தகைய அமைப்புகள் ஜாதகியின் திருமணத்திற்கு பெரும் தடைகளை உண்டாக்கின. இந்த தடைகள் எல்லாம் திசா புக்தியின் அடிப்படையிலேயே ஏற்படும் என்பதால் அவற்றை ஆராய்வோம்.

ஜாதகி பிறந்தது ராகுதிசையில். 9 வயது வரை ராகு திசை. அடுத்து வந்த குருதிசை ஜாதகியின் திருமண வயதில் 25 ஆவது வயது வரை நடந்தது. 7 ஆமிடம் பாவகர்த்தாரி யோகத்தில் அகப்பட்டதால் குருவால் திருமணத்தை நடத்திட இயலவில்லை அதையடுத்து நீசம் பெற்று வக்கிரமான சனியின் திசை விரயாதிபதி சூரியனின் சாரம் (கார்த்திகை) பெற்றதால் திருமணத்தை நடத்திட இயலவில்லை. கடந்த ஜூலை 2014 இறுதியில் துவங்கிய லக்னாதிபதி புதன் இரண்டாமதிபதி சுக்கிரனின் சாரம் (பூரம்) பெற்று உப நட்சத்திராதிபதியும் குருவானதால் திருமணம் நடக்க வாய்ப்புண்டு. ராகு-கேதுக்கள் தற்போது ஜாதகிக்கு சாதகமான நிலைக்கு பெயர்ச்சியாகிவிட்டனர்.  ராசிக்கு இரண்டில் குருவும் தற்போது சாதகமாக உள்ளார். ஆனால் அதற்கு சூரியனும் சனியும் வழிவிட வேண்டும். விரயாதிபதியுடன் லக்னாதிபதி பரிவர்த்தனை பெற்றால் ஒன்றை இழந்துதான் ஒன்றை அடைய வேண்டும் என்பது ஒரு ஜோதிட விதி.
இந்த விதியினடிப்படையில் பார்த்தால் ஜாதகிக்கான திருமண வாய்ப்புகள் பின்வருமாறு.

1.சூரியன் சாந்த நிலையில் இருக்கும் ஐப்பசி மாதம் நடக்க வாய்ப்புள்ளது.

2.சனி ஏற்கனவே தற்போது உச்சநிலையில் இருக்கும் குருவின் சாரத்தில்தான் (விசாக நட்சத்திரம்) உள்ளார்.

3. ஜாதகி இந்த (45) வயதில் திருமணத்திற்கு மனோ ரீதியாகத் தயாராக இருக்க வேண்டும்.

ஜாதகி எனது தொடர்பு வட்டத்தில் இல்லை. மேற்கூறியபடி திருமணம் நடந்தால் தனது ஆசைக்கும் கர்மாவிற்குமான மிக நீண்டதொரு TUG OF WAR ல் ஜாதகி வெற்றிபெற்றதாகக் கொள்ளலாம். 

வாழ்நாளில் முக்கால்வாசி காலக்கட்டத்தைத் தாண்டி இளம் வயதில் தனது அர்த்தமற்ற பிடிவாதங்களால் தனது குடும்பவாழ்வைத் தொலைத்ததை ஜாதகி  எண்ணி வருத்தப்படுவது அப்போது நிற்கும் எனலாம்.

மேற்கண்ட அண்ணன் தங்கைகள் இருவரும் ராகுவின் நச்சத்திரத்திலேயே பிறந்தவர்கள் என்பதும் திசைகளும் ஒரே மாதிரியானதாக வருகிறது. இருவரது குடும்ப வாழ்வும் பாதிக்கப்பட்டிருக்கிறது. இருவரது ஜாதகத்திலும் பூர்வ புண்ணியத்தைக் குறிக்கும் 5 ஆமிடம் பாதிக்கப்பட்டுள்ளது. இருவரும் சனியால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

நமது இந்து தர்மமும் ஜோதிட சாஸ்திரமும் இதுபோன்ற பாதிப்புகளுக்கு என்ன காரணங்களைக் குறிப்பிடுகின்றன என ஆராய்ந்தபோது. சனியின் அம்சமான கடும் உழைப்பாளிகளின் அதாவது சாமான்ய மக்களின் குடும்பத்தில் தலையிட்டு அவர்களின் குடும்ப வாழ்விற்கு பாதிப்பு ஏற்படுத்துபவர்களை அத்தகைய எளியோரின் வாழ்க்கைத்   துணைவியர் அவர்தம் குழந்தைகள் ஆகியோரது கற்புக்குப் பங்கம் விளைவிப்போருக்கு சனி இத்தகைய கடும் தண்டனைகள் வழங்குவார் என்பதும் தெரியவருகிறது. அப்படி எளியோரின் துணைவியரை பாலியல்ரீதியாக துன்புறுத்துவோரே அடுத்த பிறவிகளில் அதற்கான தண்டனையை அனுபவிக்கப் பிறந்து குடும்பம் அமையாது வேதனையுறுவர் என்பது போன்ற கருத்து பல நூல்களில் காணப்படுகிறது. புராணங்களில் பல முனிவர்கள் புராண கதாபாத்திரங்களுக்கு கொடுத்த சாபங்களின் பின்னணியைக் கவனித்தால் இது தெளிவாகப் புரியும்.

மேலும் சில முக்கிய குறிப்புகள்.

ராசிக்கட்டத்தில் ஒரு பாவமும் பாவாதிபதியும் பாவம் குறிப்பிடும் காரகன் மூன்றுமே பாதிக்கப்பட்டிருந்து நவாம்சத்திலும் அவை மூன்றும் பாதிக்கப்பட்டிருந்தால் அவை குறிப்பிடும் பாக்கியம் ஜாதகருக்குக் கிடைக்காது. 

உதாரணமாக குடும்பத்தைக் குறிப்பிடும் 2 ஆம் பாவத்தில் ஒரு பாவக் கிரகம் இருந்து அந்த இரண்டாம் பாவாதிபதி கிரகமும் நீசமாகி குடும்ப காரகன் குருவும் பாதிக்கப்பட்டு நவாம்சத்திலும் நவாம்ச லக்னத்திற்கு 2 ஆமிடம் 2 ஆம் பாவாதிபதி ஆகியோர் பாதிக்கப்பட்டிருந்தால் ஜாதகருக்கு குடும்ப வாழ்வு படைத்தவனால் மறுக்கப்பட்டிருக்கிறது என்று பொருள்கொள்ளவேண்டும் .

ஆனால் ராசியில் ஒரு பாவமும் காரகனும் பாதிக்கப்பட்டிருந்து நவாம்சத்தில் அவை இரண்டும் கெடாமல் இருந்தால் ராசியில் ஏற்பட்ட பாதிப்பு ஒரு குறிப்பிட்ட திசா புக்தியில் நிவர்த்தியாகிவிடும். இதை திசா புக்தி மற்றும் கோட்சாரத்தின் அடிப்படையில் அறியலாம். கடந்த பதிவில் இதை விளக்கியிருந்ததை வாசகர்கள் அறியலாம்.

மீண்டுமொரு பதிவில் சந்திப்போம்.

வாழ்த்துக்களுடன்,

அன்பன்,
பழனியப்பன். 

4 comments:

  1. அ. யுவராஜ்11 August 2014 at 21:31

    அருமையான அலசல் கட்டுரை.
    எனக்கு ஒரு சந்தேகம், மேலே குறிப்பிட ஜாதகரை போன்றே இவ்வுலகில் இதே பிறந்த தேதி மற்றும் பிறந்த நேரம் கொண்டவர்கள் இவரை போலவே தான் திருமண தடையை அனுபவிப்பார்களா?

    ReplyDelete
    Replies
    1. அதே தேதி மற்றும் அதே நேரத்தில் பிறந்திருந்தால் மட்டும் சம்பவங்கள் ஒரே மாதிரி அமையாது. அதே இடத்திலும் பிறந்திருந்தால் அதற்கு வாய்ப்புண்டு. ஏனெனில் கிரகக் கதிர்வீச்சின் தாக்கம் இடத்திற்கு இடம் மாறுபடும். தங்கள் வருகைக்கு நன்றி.

      அன்பன்,
      பழனியப்பன்.

      Delete
  2. மிகவும் அருமை பயனுள்ள பதிவு

    ReplyDelete
  3. Please take me to explanations for retrograde planets.

    ReplyDelete