Sunday, 12 April 2015

லக்னத்தில் அமையும் குருவின் திக்பலம்

மனித வாழ்க்கையில் மட்டுமல்ல. அனைத்து உயிரினங்களின் வாழ்விற்கும் ஆதார சுருதியாக விளங்கும் இரு கிரகங்கள் குருவும் சனியுமாவர்.சூரியனுக்கு அடுத்த பெரிய கிரகம் குருதான். சுமார் இரண்டு லட்சத்து நாற்பதாயிரத்து சொச்சம் கிலோமீட்டர்கள் விட்டம் கொண்ட குரு என்றழைக்கப்படும் வியாழன் கிரகத்தில் 1300 பூமிப்பந்துகளை  ஒன்றை     ஒன்று    தொடாமல்   அடுக்கிவிடலாம்    என்றால்   அதன் 


   படத்தில் குருவும் பூமியும்.

பிரம்மாண்டத்தை கற்பனை செய்து பாருங்கள். முழுதும் பனி உறைந்த கடல். சூரிய ஒளியில் 80 சதவீதத்தை பிரதிபளித்துவிடுகிறது. சூரிய ஒளியின் பெரும்பகுதியை கிரகிக்காமல் பிரதிபளித்துவிடுவதால் இதன் தரை வெப்பநிலையானது ஏறக்குறைய மைனஸ் 250 டிகிரி சென்டிகிரேடு ஆகும். இத்தகைய இதன் அதீத குளிர்ச்சியே எத்தகைய வெப்பக் கதிர்வீச்சுகளையும் சாந்தப்படுத்திவிடும். இத்தகைய இயல்புகளால்தான் குருவை சுபக்கிரகங்களில் முதன்மையானது என்கிறோம்.
 
அறிவு ஜீவிகளுக்கு காரகத்துவம் பெற்றவர் குரு. குரு லக்னத்தில் அமைந்தால் திக்பலம் பெறுகிறது. ஒரு அறிவு ஜீவி வாகன ஒட்டியாகிவிட்டால் பயணிப்பவனுக்கு பயணம் வெகு சுலபம் அல்லவா.

ஐஸ் கட்டியை கையில் வைத்தால் எப்படி உணர்வோம். ஜில்லென்று குளிர்ச்சியாக இருக்கும் சில வினாடிகள். பிறகு...

பிறகு ஐஸ்கட்டி சுட ஆரம்பித்துவிடும். கையில் வைத்திருக்க இயலாது. அதுபோல்தான் குருவும். தனிப்பட்ட முறையில் சுபக்கிரகம் என்றாலும் குரு ஜாதகத்தில் தனித்திருப்பது சனியின் கதிர்வீச்சுக்கு ஒப்பான வெப்பக் கதிர் வீச்சைத்தரும் அதனால் தனித்த குரு ஓரளவு  பாவத்தன்மை பெறுகிறது.

சிறு வயதில் எங்கள் கிராமத்து அக்ரகாரத்தில் வேலையாக வெளியே செல்வோர் பிராமணர் ஒருவர் எதிரே வந்தால் திரும்ப வீட்டுக்கு வந்து சிறிது நேரங்கழித்து மீண்டும் செல்வதை கவனித்திருக்கிறேன். ஒற்றை பிராமணன் எதிரே வந்தால் போகும் காரியம் விளங்காது என்பது ஐதீகம். இது ஜோதிடத்திலிருந்து வந்த வார்த்தை. குரு ஜாதகத்தில் தனித்திருந்தால் கடும் சோதனைகளை தருகிறார். நற்பலன்களுக்கு பிற கிரகங்களுடன் சேர்க்கையில் அல்லது பார்வையில் இருக்க வேண்டும்.  . 

பின்வரும் ஜாதகத்தை கவனியுங்கள்.


ஜாதகர் ஒரு ஆண். 

ஜாதகத்தில் சுகஸ்தானமான நான்காமிடத்து அதிபதி 12 ல் மறைந்துவிட்டார். 2, 7 பாவங்களுக்கு அதிபதி செவ்வாயும் 12 ல் மறைந்துவிட்டதால் திருமணம் தடைபட்டது.குரு திக்பல வலிமையுடன் இருக்கும்போது நற்பலன்களை செய்வார் என்றாலும் தனது பகை வீடான துலாத்தில் அமைந்ததால் குடும்ப காரகன் என்ற அடிப்படையில் குரு ஜாதகருக்கு குடும்பம் அமையவிடாமல் தடுத்தார். ஆனால் குருவைவிட சுக்கிரனுக்கு வலு அதிகம் என்பதால் லக்னாதிபதியான சுக்கிரன் தனது ஆதிக்க திசையில் ஜாதகருக்கு சற்று தாமதமாக ஜாதகரின் 32 ஆவது வயதில் (கடந்த 2014 ல்) திருமண வாழ்வை அமைத்துக்கொடுத்தார். “குரு நடத்திவைக்க இயலாத திருமணத்தை சுக்கிரன் நடத்தி வைப்பார்” என்பது இப்படித்தான்.

2  ஆவதாக 1967 ல் பிறந்த மற்றொரு ஆணின் ஜாதகம் கீழே. 
                                                

ஜனன கால குரு திசை இருப்பு: 13 வருஷம் 0  மாதம் 22  நாட்கள்.


கடக லக்னத்தில் குரு உச்சம். திக்பல வலிமை வேறு. ஜாதகர் பால்யத்திலிருந்தே வெகு புத்திசாலி. தன காரகன் குருவும் ஜீவன காரகன் சனியும் சம்மந்தம் பெற்றால் தனம் புழங்குமிடத்தில் பணி அமைய வேண்டும். ஜாதகர் வங்கி ஒன்றில் உயர் அதிகாரியாகப் பணியாற்றுகிறார். ஜீவன ஸ்தானமான பத்தாமிடத்தில் தன பாவமான இரண்டாமதிபதி சூரியன் உச்சம். சூரியனுக்கு 10 வது பாவம் திக்பலம் என்பதை தோணி ஜாதகத்தை உதாரணமாகக் கொண்டு ஆராய்ந்தபோது கண்டோம். சூரியன் அரசாங்கத்தை குறிக்கும் ராஜ கிரகம் என்பதிலிருந்து ஜாதகர் அரசு வங்கியில் பணியாற்றுவார் என்பதை அனுமானிக்கலாம்.

தனித்த குரு பிற கிரகங்களின் பார்வையின்றி இருந்தால் கொஞ்சம் சனியின் இயல்பை சார்ந்து செயல்படுவார். பொதுவாகவே ஒரு கிரகம்  எந்த இடத்தில் இருந்தாலும் அதன் சுய பாவத்தில் இருக்கும் கிரகத்தைச் சார்த்துதான் செயல்படும். இந்தச் சார்பு எந்த அளவு இருக்கும் என்பது அவ்விரு கிரகங்களுக்கிடையேயான உறவு மற்றும் வலிமையை சார்ந்தது. இந்த ஜாதகத்தில் சனியும் குருவும் சமக் கிரகங்களாகும். ஜாதகர் சிறந்த அறிவாளி என்பதிலிருந்து இங்கு குருவின்  காரகம் முதன்மை பெறுகிறது. ஜாதகர் ஒவ்வொரு வினாடியையும் உபயோகமாக செயல்படுத்த விரும்பும் மனோநிலை கொண்டவர். சற்று தனிமை விரும்பி. கடும் உழைப்பாளி. இவை சனியின் காரகத்துவங்களாகும். ஜாதகர் எனது மதிப்பிற்குரிய நண்பர்.

கீழே மூன்றாவது ஜாதகம்.
                                                   

துலாத்தில் உச்சம் பெரும் சனி சந்தோஷமான மனோ நிலையில் இருப்பார். உடன் தமக்கு சமமான வலிமையும் அறிவும் பொருந்திய குரு திக்பலத்துடன் உள்ளார். மேலும் சனியுடன் சனியின் ஆத்ம நண்பன் சுக்கிரன் அதன் ஆட்சி வீட்டில் உள்ளது.ஜாதகத்தில் நீதிமானும் சமக்கிரகமுமான சனியுடனும் தன்னைவிட வலிமை பொருந்திய எதிரியும் தனக்கு அடுத்த சுபக்கிரகமான சுக்கிரனுடனும் குரு உள்ளார். எனவே குரு இந்தச் ஜாதகத்தில் திக்பல வலுவுடன் இருந்தாலும் தன்னிச்சையாகச் செயல்பட இயலாத அமைப்பில் உள்ளார். அதனால் ஜாதகரின் செயல்பாட்டிற்காக தனது கதிர்வீச்சை சனிக்கும் சுக்கிரனுக்கும் வழங்கி ஜாதகரின் அதீத புகழுக்கும் சாதனைகளுக்கும் மறைமுகமாக உதவியுள்ளார்.சர லக்னமான துலாத்துக்கு பாதகாதிபதியான ராஜ கிரகம் சூரியன் இரண்டில் அமைந்தாலும் அங்கு லக்னத்திற்கு சுகம் மற்றும் பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதியான உச்ச சனியின் அனுஷ நட்சத்திரத்தில் அமைந்துள்ளதாலும் சூரியன் அமைந்த வீட்டதிபதி செவ்வாயும் உச்சம் பெற்றதாலும் ஜாதகர் ராஜ கர்மாவை ஏற்று ஒரு மிகப்பெரும் ராஜ்ஜியத்தை ஆட்சிபுரிய வேண்டும். .பல சாதனைகளை புரிந்து புகழ்பெற வேண்டியவராகிறார்.


இந்த ஜாதகர் யாரென்று முடிகிறதா உங்களால்?

கண்டிப்பு, நேர்மை, உறுதி, வீரம், மத நல்லிணக்கம், தயாள குணம் போன்றவற்றுக்காக வரலாற்று அறிஞர்களால் போற்றப்படும் மொகலாய மாவீரச் சக்ரவர்த்தி அக்பரின் ஜாதகம் இது. இஸ்லாமியர்களால் மட்டுமல்ல இந்துக்களாலும் போற்றப்பட்ட மாமன்னர்களான பல்பன், பாபர் வழிவந்த பிரசித்தி பெற்ற சக்ரவர்த்தி அக்பர் ஆவார். அனைத்து மதங்களில் இருந்த நல்ல கருத்துக்களையும் ஒருங்கிணைத்து “தீன் இலாஹி” என்ற தனி மதத்தை மக்கள் கருத்து வேறுபாடுகளின்றி வாழ உருவாக்கினார் என்பது வரலாறு.

தனது ஆட்சியில் பல சிரமங்களை எதிர்கொண்ட மாமன்னன் ஹிமாயூன் ஒரு சிறந்த ஜோதிடரும் கூட. தனது மகன் அக்பரின் ஜாதகத்தை தானே 60 பக்கங்கள் கொண்டதாக விளக்கமாக குறித்துவைத்திருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

ஆய்வு ஜோதிடர்களுக்காக அக்பரின் ஜனனக் குறிப்பு கீழே.

ஜனன நாள்:24.11.1542

நேரம்:  3:46:07 AM (இது ஜோதிட ஆராய்ச்சியாளர்களால் இன்றைய கிரக சஞ்சார விதிகளுக்கேற்ப திருத்தப்பட்ட நேரமாகும்.)

 ஜனன இடம்: உமர்கோட், பாகிஸ்தான். 

(ஜாதகத்தை ஆய்வு செய்ய விரும்பும் ஜோதிடர்கள் ஜெகன்னாத ஹோரா போன்ற உயர்தர வசதிகளுடைய ஜாதக மென்பொருளை பயன்படுத்தி ஆராயலாம்.)


ஜனன ஜாதகத்தில் குருவின் நிலை சரியில்லாதவர்கள் குரு அமைந்த நட்சத்திராதிபதியின் வலிமை அறிந்து உரிய வழிபாடுகளை மேற்கொண்டு குருவருள் பெறலாம்.

மீண்டும் விரைவில் அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.

வாழ்த்துக்களுடன்,

அன்பன்,
பழனியப்பன்.

2 comments:

  1. புரிந்தது போலும் உள்ளது; புரியாதது போலும் உள்ளது சார்.
    அடுத்த பதிவோட சீக்கிரம் வாங்க சார்

    ReplyDelete