Wednesday, 7 September 2016

நீச கிரகங்களின் மறுபக்கம்

நீள் வட்டப்பாதையில் சுழன்றுகொண்டிருக்கும் கிரகங்கள் சூரியனுக்கு  அருகில் சஞ்சரிக்கும்போது சூரியனின் கதிர்வீச்சு கிரகங்களுக்கு நன்கு கிடைக்கும் இதையே கிரகங்கள் உச்சமடைவதாக ஜோதிடத்தில் எடுத்துக்கொள்கிறோம். இப்படி உச்சமடையும் கிரகங்கள் அவற்றின் காரக, பாவ, நட்சத்திர சார அடிப்படையில் வலுவடையும். ஒருவரது ஜனன ஜாதகத்தில் உச்ச நிலையில் அமைந்த கிரகம் சந்தோஷமான மன நிலையில் இருப்பதாக எடுத்துக்கொள்ளலாம். அது தொடர்புடைய திசா புக்தி அந்தரங்களில் ஜாதகரை உயர்த்தும்.   

நீச கிரகங்களின் நிலை இதற்கு நேர் எதிர். சூரியனை விட்டு அதிகபட்ச தொலைவில் சஞ்சரிக்கும்போது அவற்றிற்கு சூரியனின் கதிர்வீச்சு பலவீனமாகவே கிடைக்கும். அதனால் அவை வலுவிழக்கும். இதை கிரகங்கள் நீச நிலையில் இருப்பதாக எடுத்துக்கொள்கிறோம். கிரகங்கள் நீசமடைவதால் அவை காரகம், பாவம், நட்சத்திர சார அடிப்படையில் வலுவிழக்கும். ஒருவரது ஜனன ஜாதகத்தில் நீச நிலையில் அமைந்த கிரகங்கள் பொதுவாக ஜாதகரின்மேல் கொலைவெறியில் இருப்பதாகவே ஜோதிடத்தில் எடுத்துக்கொள்கிறோம். நீச கிரகம் அதன் திசா-புக்தி அந்தரங்களில் ஜாதகரை கடுமையாக தண்டிக்கும்.

நீச கிரகங்கள் அவை நின்ற நட்சதிராதிபதி கிரகம் உச்சமடைவதால், அவை நின்ற பாவாதிபதி உச்சமடைவதால், அவற்றுடன் ஒரு உச்ச கிரகம் இணைவதால், அவற்றிற்கு கேந்திரத்தில் ஒரு கிரகம் உச்சமடைவதால், நவாம்சத்தில் உச்சமடைவதால், நீச கிரகங்களின் வீட்டில் ஒரு உச்ச கிரகம் நிற்பது போன்ற பல்வேறு வகைகளில் தனது நீச நிலையில் இருந்து உச்சமடைகின்றன.

நீச கிரகங்கள் நீசபங்கமடையாத நிலையில் நல்ல பலன்களை வழங்குவதற்கான விதிகள்:

1 நீச கிரகங்கள் 6, 8, 12 ஆகிய பாவங்களுக்கு அதிபதிகளாக வந்து நீசம் பெற்றால் சில தாமதங்களுக்குப்பிறகு நல்ல பலன்களை வழங்கும். “கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜ யோகம்” என்றொரு ஜோதிட பழமொழியும் இதனை முன்னிட்டு உண்டு. 

2. நீச கிரகங்கள் இரு ஆதிபத்தியம் பெற்றிருந்தால் ஒரு ஆதிபத்தியம் பாதிக்கப்பட்டு மற்றொரு ஆதிபத்தியம்  நற்பலன்களை வழங்கும்.

3. மூன்றாவது விதி நீச கிரகங்களுக்கு மட்டுமல்ல அனைத்து கிரகங்களுக்கும் பொருந்தும். அது, ஒரு கிரகம் ஜாதகருக்கு ஆதீத நற்பலன்களை வாரி வழங்கவேண்டுமெனில் அவற்றின் காரகங்களுள் ஒன்றை முழுமையாக கைவிட்டுவிட்டு தனது மற்ற கா
ரகங்களின் மூலம் நற்பலங்களை வாரி வழங்கும். 

இது போன்ற இன்னும் சிலவும் உண்டு.


கீழே உலகின் இரண்டாவது பெரிய  பணக்காரர் என்ற தகுதியை அடைந்த வாரன் பப்பெட்டின் ஜாதகம்.


மனோ காரகன் நீசமானால் விரைவாக சிந்தித்து முடிவெடுக்க இயலாது திணறுவர். ஆனால் ஜாதகர் ஈடுபட்டுள்ள துறை சில சமயம் வினாடிகளில் கூட முடிவெடுக்க வேண்டிய பங்குச் சந்தை. இந்த ஜாதகத்தில் மறைவு ஸ்தானாதிபதிகள் நீசமடைவது ஜாதகருக்கு ராஜ யோகத்தை வழங்கும் என்ற முதலாவது விதி செயல்படுகிறது. அந்த வகையில் சந்திரன் 8 ஆம் அதிபதியாய் இருந்து நீசமானது ஒருவகையில் யோகமே. சிந்தனை ஸ்தானமான 5 ஆமிடத்தில் தூண்டுதலுக்கு காரகத்துவம் பெற்ற ராகு சிந்தனையை தூண்டிவிடுகிறார். புத்தி காரகன் புதன் உச்சமாகி ராசிக்கு ஐந்தாமிடத்தை பார்த்து புத்திசாலித்தனமான முடிவுகளை எடுக்க உதவுகிறார்.

ஒருவர் பங்குச்சந்தையில் வெற்றி பெறவேண்டுமானால் பங்குச்சந்தைக்கு காரகத்துவம் பெற்ற சுக்கிரன், புத்திகாரகன் புதன் ஆகியவை ஜாதகத்தில் நன்கு அமைந்திருக்க வேண்டியது அவசியம். இவற்றோடு விரைவாக முடிவெடுக்கும் திறனுக்குரிய சந்திரன், நூதன வகை வருமானங்களுக்குரிய ராகு, தன காரகன் குரு இவர்களும் ஜாதகத்தில் நன்கு அமைந்திருக்க வேண்டும். பங்குச்சந்தையில் ஈடுபடுவோர் இதை உணருவது நல்லது. மேற்சொன்ன கிரக அமைப்புகள் வாரன்  பப்பெட்டின் ஜாதகத்தில் நன்றாக அமைந்துள்ளதோடு லக்னாதிபதியும் ராசியதிபதியுமான குருவும் செவ்வாயும் இணைந்து குரு-மங்கள யோகத்தை தருகின்றனர். குரு தனது நேரடிப்பார்வையில் லக்னத்தை காவல் செய்கிறார். 1௦ ஆமதிபதி சூரியனும் லாபாதிபதி சுக்கிரனும் ஆட்சியில் இருக்கிறார்கள். சந்திரன், சுக்கிரன், சூரியன் மூவரும் நவாம்சத்தில் வர்கோத்தமம் அடைந்திருப்பது கூடுதல் பலம்.

கீழே மகான் சத்ய சாய்பாபாவின் ஜாதகத்தை கவனியுங்கள்.



இரு ஆதிபத்யங்களுக்குரிய கிரகம் பாதிக்கப்பட்டிருந்தால் அதன் ஒரு ஆதிபத்யவகையில் கடுமையான பாதிப்பை தந்து மற்றொரு ஆதிபதிவகையில் பாதிப்பை தரக்கூடாது என்ற இரண்டாவது விதி இங்கு செயல்பட்டுள்ளதை காணலாம்.

குடும்ப காரகனும் குடும்ப பாவாதிபதியுமான குரு  நீசமானதால் குடும்பம் துறந்த துறவியானார் சத்யசாய்பாபா. அதே குருவின் மற்றொரு பாவமான பூர்வ புண்ணிய ஸ்தானம் வலுவடைந்ததால் உலகம் வணங்கும் யோகியானார். ஐந்தாமிடம் வலுத்தால்தான் ஒருவருக்கு ஆன்மீக ரீதியான உணர்வும் உயர்வும் இருக்கும். மேலும் பிரபஞ்ச ஞானம் ஆகியவை வாய்க்கும்.

கீழே உள்ள முகலாய மன்னன் ஒளரங்சீப்பின் ஜாதகத்தை கவனியுங்கள்.

 .
கார்த்திகை நட்சத்திரத்தில் சந்திரன் தனது உச்ச வீட்டில் நின்றதால் சூரியன் நீச பங்கமடைந்துவிட்டார். எனவே சூரியனின் வீட்டில் இருக்கும் கிரகமும் வலுவடைகிறது. ராஜ்ய ஸ்தானாதிபதி (10 ஆமதிபதி) செவ்வாய் சூரியன் வீட்டில் நிற்கிறார். இங்கு சூரியன் சந்திரனால் நீச பங்கமடைந்தாலும் காரகோ பாவ நாஸாயா எனும் விதிப்படி பித்ரு காரகன் சூரியன் பிதா ஸ்தானமான 9 ஆம் பாவத்தில் நின்றதாலும் ஸ்திர லக்னமான கும்ப லக்னத்திற்கு 9 ஆமிடமான துலாம் பாதக ஸ்தானம் என்பதாலும் சூரியன் சந்தோஷ மன நிலையில் இல்லை. எனவே சூரியனின் வீட்டில் இருக்கும் செவ்வாயும் சந்தோஷமான மன  நிலையில் இல்லை.

இப்படி மாறுபட்ட நிலையில் அமைந்த ராஜ கிரகம் சூரியன் தனது காரகமான பித்ருகாரகன் எனும் தந்தைக்குரிய காரகத்தை கைவிட்டுவிட்டு ஜாதகருக்கு ராஜ்ய காரகன் என்ற அடிப்படையில் ராஜ்யத்தை வழங்கியது. அதேபோல் செவ்வாய் தனது காரகங்களுள் ஒன்றான சகோதரத்துவத்தை கைவிட்டு 1௦ ஆமதிபதி எனும் வகையில் ராஜ்யத்தை வழங்கியுள்ளார். தந்தை ஷாஜகானுக்கும் சகோதரர்களுக்கும் என்ன ஆனது என்ற வரலாறு  அனைவருக்கும் தெரியும். கும்ப லக்னாதிபதி சனிக்கு சுக்கிரன் நட்பு என்பதால் திருமணமே செய்துகொள்ளாத தனது சகோதரியை (ஜஹானா  பேகம்) மட்டும் உயிருடன் விட்டு வைத்தார் ஒளரங்சீப்.

மேற்சொன்ன விதிகளில் மூன்றாவது விதி இங்கு செயல்பட்டுள்ளது.

மீண்டும் விரைவில் மற்றுமொரு பதிவில் சந்திக்கிறேன்.

வாழ்த்துக்களுடன்,
அன்பன்,
பழனியப்பன். 


2 comments:

  1. நன்றாக விளக்கமாக எழுதுகிறீர்கள் நன்றி

    ReplyDelete
  2. திதிசூன்யம் பெற்ற கிரகங்கள் இயல்பான தோஷ விலக்கு எதுவும் பெறாத நிலையில் செய்யப்படக்கூடிய பரிகாரங்கள் யாவை?

    ReplyDelete