Wednesday, 12 October 2016

லக்ன நட்சத்திராதிபதி

ஜோதிட பலன்களை வரையறுப்பதில் லக்னம் அமைந்த நட்சத்திராதிபதி கிரகத்தின் பங்கு மிக இன்றியமையாதது. லக்ன நட்சத்திராதிபதி கிரகத்தையும் ஜாதகத்தில் அது தொடர்புகொண்ட பாவங்களையும் அலசினால் ஜாதகரின் ஒட்டுமொத்த இயல்பையும் மற்றவற்றை ஆராயுமுன் அனுமானித்துவிடலாம். ஒரு உயிர் என்ன காரணத்திற்காக பிறவி எடுத்திருக்கிறது என்பதையும் அது என்ன கர்மங்களில் ஈடுபடும், அனுபவிக்கும் என்பதையும் லக்னம் அமைந்த நட்சத்திராதிபதி கிரகம் தெளிவாய் கூறிவிடும். தேர்ந்த ஜோதிடர்கள் லக்ன நட்சத்திராதிபதி கிரகம் முதற்கொண்டே ஒருவரது ஜாதகத்தை ஆராய்வர்.    

மகாபாரதத்தின் நாயகன் தருமபுத்திரரின் ஜாதகம் கீழே.

                 


லக்னம் ஞான காரகன் கேதுவின் மகம் நட்சத்திரத்தில் அமைந்துள்ளது. கேது ஏழாமிடத்தில் அமைந்த குருவை கெடுத்து குடும்ப வாழ்வில் குளறுபடிகள் ஏற்பட வழிசெய்துவிட்டார். ஆனால் அதே கேது நுட்ப அறிவுக்குரிய 5 ஆம் பாவாதிபதியும் காரகனுமான குருவுடன் இணைந்ததால் ஜாதகருக்கு பகைவனும் போற்றும் தரும சிந்தனையை கொடுத்தது. 7 க்கு சுகஸ்தானமான 1௦ ஆம் பாவத்தில் நான்கு கிரக சேர்க்கை என்பது ஏழாமிட தோஷம் எத்தனை   இணைவுகளுடன் ஏற்படும் என்பதை குறிப்பிடுகிறது.. தர்மரின் 4 சகோதரர்களுக்கும் ஜாதகரின் மனைவியான திரௌபதி குடும்ப வாழ்வில் இணைந்து பாஞ்சாலியாக வேண்டும் என்பதை இது குறிப்பிடுகிறது.

இவ்விடத்தில் வேறு சில விஷயங்களையும் குறிப்பிட்டாக வேண்டும். லக்னத்திற்கு 10 ஆமிடத்தில் ஏற்பட்டுள்ள 4 கிரக சேர்க்கை சன்யாச யோகமாகும்.  குரு, 12 ஆமிடம் ஆகியவை வலுவிழந்து இருப்பது இல்லற வாழ்வில் பிடிப்பற்ற நிலையை குறிப்பிடுகிறது. துவாபர யுகம் வரை மனிதர்கள் இத்தகைய அமைப்புகளிலேயே பிறப்பார்கள் என்று சுக்ர நீதி போன்ற நூல்களில் கூறப்பட்டுள்ளது. அதனால் அந்த யுகங்களில் மனிதர்களில் பெரும்பான்மையினர் நற்குணவான்களாக (ரஜோ குணம்) இருந்தனர். கலி யுகத்தில் பிறக்கும் மனிதர்களில் பெரும்பான்மையோர் ராக்ஷச குணம் கொண்டவர்களாக அதாவது  சனி,செவ்வாய், ராகு-கேது போன்ற கிரகங்கள் மனிதர்களை தவறாக வழிநடத்தும் ஜாதக பாவங்களில் கலி புருஷனின் கட்டளைப்படி அமையும் என்றும் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  

இரண்டாவதாக மற்றுமொரு ஜாதகம்.

              
சுக்கிரனின் பூராடம் – 4 ல்   லக்னம் அமைந்துள்ளது. சுக்கிரன் வெளிநாட்டு தொடர்புகளை குறிக்கும் ஒன்பதாம் பாவத்தில் அமைந்துள்ளது. ஜாதகி வெளிநாட்டில் குடும்பத்துடன் வசிக்கிறார். மருத்துவ கிரகங்கள் சூரியன், கேது, செவ்வாய், புதன் ஆகியவர்களின் நிலையை ஆராய்ந்தால் ஜாதகி ஒரு மருத்துவர் என்பதை அறியலாம்.

இரண்டாமிடத்தில் கேது நின்று 2 க்கு எட்டாமதிபதியான சூரியனுடன் சனி தொடர்புகொண்டதால் ஜாதகி சனியின் காரக அடிப்படையில் தொழில் நிமித்தம் குடும்பத்துடன் வெளிநாட்டில் வசிக்கிறார். ஒருவர் ஜாதகத்தில் இரண்டாமிடம் கெட்டுவிட்டால் அவர் சொந்த ஊரில் இருந்தால் வருமானம் பாதிப்படையும் என்பது ஒரு முக்கிய ஜாதக விதி என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அத்தகைய ஜாதகர்கள் சொந்த ஊரைவிட்டு முடிந்தவரை விலகிச்சென்று வருமானம் ஈட்ட முயலவேண்டும். 

மூன்றாவதாக அறிஞர் அண்ணாவின் ஜாதகம் கீழே.

                 
லக்னம் ராகுவின் சுவாதி நட்சத்திரத்தில் அமைந்துள்ளது. ராகுவிற்கு வீடு கொடுத்த லக்னாதிபதி சுக்கிரன் ஆட்சியில் உள்ளார். உச்சமான வாக்கு காரகன் புதனின் கன்னி ராசிக்கு வாக்கு ஸ்தானமான 2 ஆமிடத்தில் ராகு தொடர்பில் இருப்பது ஜாதகர் பேச்சுத்திறமையில் வல்லவர் என்பதை குறிக்கிறது. ராகு ராஜ்ய ஸ்தானமான பத்தாம் அதிபதியும் அரசியல் தொடர்புகளுக்கும் உரிய சந்திரனின் ரோகிணி நட்சத்திரத்தில் அமைந்ததும். பத்தாம் அதிபதி சந்திரன் ராஜ்யாதிபதி எனப்படும் அரசாங்கத்திற்கு காரகத்துவம் பெற்ற சூரியனின் உத்திரம் நட்சத்திரத்தில் அமைந்ததும் ஜாதகரின் கர்மா அரசாங்கத்துடன் தொடர்புடையது என்பதை குறிப்பிடுகிறது. 

லக்னம் அமைந்த நட்சதிராதிபதி ராகு ஆயுள் ஸ்தானமான 8 ஆமிடத்துடன் தொடர்பு கொண்டதும் ராசிக்கு எட்டில் நீசம்பெற்று வக்கிரமடைந்த சனியும், சனிக்கு 12 ல் ராசிக்கு  ஏழில் அஷ்டமாதிபதியான செவ்வாய் வக்கிர நிலையில் அமைந்ததும் ஜாதகர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மரணமடைவார் என்பதை குறிப்பிடுகிறது. புற்றுநோய்க்கு ராகு,சனி மற்றும் செவ்வாய் ஆகியவற்றின் கதிர்வீச்சுகளே காரணமென்பது ஜோதிடம் ஆராய்ந்து அறிந்த உண்மை. ஜாதகத்தில் இம்மூன்று கிரகங்களும் ஒன்றுக்கொன்று நெருக்கமான தொடர்பில் அடுத்தடுத்த ராசிகளில் அமைந்தது கவனிக்கத்தக்கது.

கீழே தமிழர்கள் இன்னும் இயந்திரங்களாக மாறிவிடாமல் தனது இசையால் தடுத்துக்கொண்டிருக்கும் இசைஞானி இளையராஜாவின் ஜாதகம்.



                    
விரயாதிபதி செவ்வாயின் மிருகசீரிஷம் 2 ஆம் பாதத்தில் லக்னம் அமைந்துள்ளது. செவ்வாய் சிம்ம ராசிக்கு எட்டில் மறைந்துள்ளார். மேலும் சூரியன் அமைந்த ரிஷப ராசிக்கு செவ்வாய் விரயாதிபதியாகிறார். தந்தையின் பாக்கியத்தை பெற இயலாத நிலையை இது குறிப்பிடுகிறது. லக்னத்தில் பித்ரு காரகன் சூரியன் மாத்ரு காரகனான உச்ச சந்திரனுடன் சேர்ந்து சனியுடன் இணைவு பெற்றது தந்தையின் பாக்கியங்களை தனது சுய அனுபவங்களின் மூலமே பெற்று உயர வேண்டும் என்பது ஜாதகறது கர்மா. சனி சூரிய புத்திரன் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.  

ஒருவரது ஜாதகத்தில் இசைத்துறை தொடர்பை குறிப்பது மூன்றாமிடமாகும். இசைத்திரையில் ஒருவர் கோலோச்ச வேண்டுமானால் லக்னத்திற்கு மூன்றாமிடம், சுக்கிரன், புதன் ஆகியவை வலுத்திருக்க வேண்டும். ஜாதகத்தில் மூன்றாமதிபதி சந்திரன் லக்னத்தில் உச்சம். கலை மற்றும் திரைத்துறைக்கு காரகத்துவம் பெற்ற லக்னாதிபதி சுக்கிரன் உச்ச சந்திரனின் வீட்டில் அமர்ந்ததால் உச்ச வலு பெற்றதோடல்லாமல் பரிவர்த்தனையும் பெற்றதால் ஜாதகர் உலகம் போற்றும் உன்னத இசை வல்லுனராக ஒளிர்கிறார்.



வாசக அன்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்:

எனது பதிவுகள் சாமான்யர்களுக்கும், ஜோதிட நேசர்களுக்கும், ஆய்வாளர்களுக்கும் பயன்படவேண்டும் என்ற நோக்கத்தில் எழுதப்படுபவை.. எனது சுய ஆய்வு கொண்டு வரும் கருத்துக்கள் இப்பதிவுகள். அதனால்தான் பிற ஜோதிட வலைப்பதிவுகளுக்கும் எனது பதிவுகளுக்கும் வித்தியாசங்கள் காணப்படும். ஜோதிட விதிகளை புத்தகங்களில் இருந்து வலை ஏற்றுபவை அல்ல எனது பதிவுகள். உதாரண ஜாதகங்கள் மூலம் ஜோதிட விதிகளை பூப்போல எனது பதிவுகளில் தூவியிருப்பேன். எனது ஆய்வுக்கட்டுரைகளை அன்பர்கள் தங்களது ஜோதிட அறிவை செம்மைப்படுத்திக்கொள்ள பயன்படுத்துவதோடல்லாமல் பதிவுகளில் தவறிருப்பின் பின்னூட்டங்கள் மூலமும் என்னை செம்மைப்படுத்தவும் உதவலாம். எனது ஆய்வுக்கருத்துகளை பலர் தங்களது ஜோதிட மாணவர்களுக்கு பாடங்களாக்கி பயன்படுத்துகின்றனர் என்பது மகிழ்ச்சியே. ஆனால் அதில் எனது ஆக்கம் என்பதை மறைத்து பயன்படுத்துவது வேதனைப்படுத்துகிறது. எனது ஆய்வுக்கட்டுரைகளை செம்மைப்படுத்தி பல வாசக அன்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்க  நூல்வடிவில் கொண்டுவர இருக்கிறேன். ஜோதிடம் பயில வேண்டும் என்பவர்களுக்காக தங்களுக்கு இயன்ற நேரத்தில் இயன்ற வகையில் கட்டுப்பாடுகள்;;இல்லாமல் மின்னஞ்சலில் ஜோதிட ஜோதிட பாடங்கள் நடத்திடவும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. எனவே எனது ஆக்கங்களை தவறாக யாரும் பயன்படுத்த வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.

எனது பாவச்சக்கரத்தை பயன்படுத்துவது எப்படி?, தசாம்சமும் தொழிலும் போன்ற சில பதிவுகளை PDF கோப்புகளாக மாற்றி எனது பெயரை மறைத்து வெளியிட்டிருக்கும் ஒரு வலைப்பூ..

https://vedicfastro.blogspot.in/p/pdf-tamil-books.html


மீண்டும் ஒரு பதிவில் சிந்திப்போம்,

அன்பன்,


பழனியப்பன்.     . 

4 comments:

  1. வணக்கம் .
    தங்களின் ஜோதிட ஆராய்ச்சி கட்டுரைகளை படிக்கும் படிக்கும் போது மனதில் உத்வேகம் தோன்றுகிறது . உங்கள் பதிவுகளை தொடந்து படிக்கும் ஜோதிடஆர்வலர்கள் விரைவில் ஒரு ஆராச்சியாளராக வருவார்கள் என்பது உறுதி .
    உங்களது ஒவ்வரு பதிவிலும் ஒரு ஜோதிட விதி இருக்கும் .

    உங்கள் ஜோதிட விதிகளை படித்து அதை பயன்படுத்தி 3 மருத்துவர்களை உருவாக்கியிருக்கிறேன் என்பதில் மகிழ்ச்சி .

    உங்கள் பதிவுகளை புத்தகமாக்குங்கள் . வரவேற்கிறோம் .
    அன்புடன்
    சோமசுந்தரம் பழனியப்பன்
    மஸ்கட்

    ReplyDelete
  2. You are Hariram Tejus? Amazing.

    ReplyDelete
  3. அய்யா கடக லக்னம், லக்னம் ஆயில்யம் நட்சத்திரத்தில் புதன் சூரியன் உடன் 8ல்..என்ன பலன்

    ReplyDelete
  4. Have you published any book. Pl let me know

    ReplyDelete