இன்றைய சூழலில் காதல் திருமணம் என்பது சர்வ சாதாரணமாகிவிட்டது.
எதிர்காலத்தில் பெற்றோர் பார்த்து செய்விக்கும் திருமணங்கள் அபூர்வமாகவே இருக்கும்
என எதிர்பார்க்கலாம். பெரும்பாலான பெற்றோர் இதை உணர்ந்தே இருக்கின்றனர். எனினும்
தங்கள் பிள்ளைகள் தங்கள் குலப்பெருமையை காக்க மாட்டார்களா? தங்களது குலத்தை விட்டு மாறிவிடுவார்களா? என இன்னும் மேற்கண்ட கேள்வியை ஜோதிடரிடம் தவறாமல் கேட்கின்றனர். இன்றைய காதல் திருமணங்கள்
காலத்தின் கட்டாயம்.
காதலை குறிக்கும் பாவம் 5 ஆம் பாவம். அது வெற்றியாகி
திருமணத்தில் முடிய காதல் & கலப்புமண
காரகன் எனப்படும் புதன் மற்றும் கேது, செவ்வாய், சுக்கிரன்,குரு 2,7,11 ஆம் அதிபதிகள்,
மற்றும் காதலை குறிக்கும் பாவமான 5 க்கு
லாப பாவமான 3 பாவமும் அதன் அதிபதியும் என பல்வேறு பாவங்களும் கிரகங்களும் எதோ ஒரு
வகையில் இணைந்தே தொடர்புகொள்கின்றன.
கீழே ஒரு ஆணின் ஜாதகம்.
ஜாதகத்தில் காதல் ஆசையை தூண்டும் கிரகம் எனப்படும் கேது லக்னத்தில்
தனித்த நிலையில் நின்று பாக்ய ஸ்தானத்தில் இருக்கும் குருவின் பார்வையை பெறுகிறார். காதல் பாவமான 5ஆம்
பாவாதிபதி குரு 5 க்கு 5 ஆம் பாவதிபதியான பாக்யாதிபதி செவ்வாயுடன் பரிவர்த்தனை
ஆகியுள்ளார். இதனால் பரிவர்தனைக்குப்பின் 5, 7 ஆம் பாவாதிபதிகளான குரு- சனி
இணைப்பு ஏற்படுகிறது. காதல் காரகன் புதன் காதல் பாவமான 5ல் நிற்கும் லக்ன
யோகாதிபதி செவ்வாயின் அவிட்டம் – 2 ல்
நின்று நவாம்சத்தில் உச்சமடைகிறார். 5ல் சனி,செவ்வாய் இணைவு 7 க்கு லாபத்தில்
ஏற்பட்டு சனி 7 ஆமிடத்தை பார்ப்பது ஆகியவை இவரது காதல் நிறைவேறி திருமணம் நடக்கும்
என்பதை உறுதி செய்கிறது.
ஒரு ரகசியம் சொல்கிறேன் கேட்டுக்கொள்ளுங்கள். சனி செவ்வாய் இணைவு
ஏற்பட்டு அது 7 ஆமிடத்தோடு எதோ ஒருவகையில் தொடர்புகொள்ளும் ஜாதகர்கள் கலப்பு மனம்
செய்கையில் அங்கு இந்த இணைவினால் ஏற்படும் “விருண யோகம்” எனப்படும் கடும் யோகம் செயல் இழந்துவிடும். ஆனால்
பெரும்பாலான பெற்றோர் அதற்கு ஒப்புக்கொள்ளாமல் திருமணம் செய்கையில் விருண யோகம்
பாடாய் படுத்திவிடும். இந்த யோகத்திற்கு இதைவிட சிறந்த பரிகாரம் இல்லை என்பது எனது
கருத்து. ஜாதி மாறி திருமணம் செய்ய புதனது தொடர்பும் அவசியம். இந்த ஜாதகத்தில்
புதன் தொடர்புகொண்டுள்ளது. ஜாதகரின் மனைவி மாற்று ஜாதியை சேர்ந்தவர். இந்த ஜாதகரின்
வாழ்க்கையில் சனி திசையில் புதன் புக்தியில் தனது காதலியை கண்டுகொண்டார். 5 ல்
நின்ற 7 ஆமதிபதி சனி திசையில் 7ல் நின்ற லக்னாதிபதி சூரியன் புக்தியில் ஜாதகர் திருமணம்
செய்தார். பாவத்தில் 5க்கு விரையத்தில் நின்ற நீச சந்திரனால் தாயார் வடிவில் வந்த
எதிர்ப்பை தனது பொறுமையினால் முறியடித்தார். ஜாதகரின் ஜாதக கர்மாவை அடியேன்
எடுத்துச் சொன்னதும் தாயார் தனது எதிர்ப்பை கைவிட்டார்.
இரண்டாவதாக மற்றொரு பெண்ணின் ஜாதகம்.
இந்த ஜாதகத்தில் 5 ஆம் இடத்தில் ஆட்சி பெற்று வக்ரமடைந்த சனியின் பூசம்
சாரத்தில் நீசம் பெற்று நிற்கும் 2, 7 ஆமதிபதி செவ்வாயின் திசையில் ஜாதகிக்கு
காதல் ஏற்பட்டது. ஆனால் தொடர்புடைய கிரகங்கள் வலுவிழந்ததால் ஜாதகியின் திருமணம்
சனி – செவ்வாய் தொடர்ப்பால் திருட்டுத் திருமணமாகி அது பெற்றோர்களின்
பிரச்சனையால், செவ்வாய் குறிப்பிடும் காவல் துறை வரை சென்றது. செவ்வாய் திசையில்
பாவத்தில் இரண்டில் நிற்கும் சுக்கிர புக்தியில் திருமணம் நடந்தது. தற்போது
இருவரும் சிறப்பாக வாழ்ந்தாலும் செவ்வாய் நீசம் பெற்று திசை நடந்ததால் வீட்டை விட்டு
வெளியேறி பெற்றோர்களின் ஆசியின்றி திருமணம் நடந்தது. செவ்வாய் 2 மற்றும் 7 ஆமிட
தொடர்பு கொண்டு நீசம் பெற்று திருமண காலம் வருகையில் பலருக்கு இது போன்று காவல்
நிலைய, அல்லது திருட்டுத் திருமணங்கள் நடப்பதை கவனிக்க முடிகிறது.
கீழே மூன்றாவதாக ஒரு ஆணின் ஜாதகம்.
எப்படிப் பார்த்தாலும் இந்த ஜாதகரின் திருமண வாழ்வு சிறப்பில்லை. 7
ஆமிடம் இதை தெளிவாக கூறுகிறது. ஆனால் இவரும் காதல் திருமணம் செய்துகொண்டவர். 7 ஆமிடத்தில் சனி காதலுக்கு ஆசை வலை விரிக்கும்
கேதுவின் மகம் சாரம் பெற்ற சனியின் திசையில் குடும்ப ஸ்தானத்தில் நின்ற கேதுவின்
புக்தியில் திருமணம் செய்துகொண்டார். 7 ஆமிடத்தில் சனி
நின்று திசை நடந்த காலத்தில் பணி புரியும் இடத்தில் காதல் ஏற்பட்டது. 7
ஆமிடம் தன்வந்திரி என புகழப்படும் சூரியனது சிம்ம ராசியாகி அதற்கு இரு புறமும்
மருத்துவத்தை குறிக்கும் சூரியனும் ராகுவும் நின்று 7 ஆமிடத்திலும் மருத்துவத்தை
குறிக்கும் செவ்வாயும் புதனும் நின்றதால் ஜாதகரும் அவரது காதலியான மனைவியும் அரசு
மருத்துவமனையில் ஒப்பந்த முறையில் பணிபுரிந்த காலத்தில் காதலித்தனர். இருவரும்
மருத்துவம் தொடர்புடையவர்கள் ஆனால் மருத்துவர்களல்ல. இந்த ஜாதகத்திலும் விருண யோகம் பெரிய பாதிப்பை
தரவில்லை. காரணம் ஜாதகரும் ஜாதகியும் வெவ்வேறு ஜாதியை சேர்ந்தவர்கள் என்பதோடு 7
ஆமிடம் மற்றும் 7க்கு இருபுறமும் நிற்கும் கிரகங்கள் குறிப்பிடும் மருத்துவ துறையை
சார்ந்தவர்கள் என்பதால் தோஷ கிரக அமைப்புகளுக்கேற்ற செயலில் ஜாதகர் ஈடுபட்டிருந்தால்
தோஷ கிரகங்கள் தங்கள் தோஷத்தை குறைத்துக்கொள்ளும் என்ற விதியே ஆகும்.
எப்படிப் பார்த்தாலும் 7 ஆமிட தோஷம் வேலை செய்யும் என்ற வகையில் சனி
நீர் ராசியான மீனத்தில் நிற்கும் கேது சாரம் பெற்று திசை நடத்துவதால் மனைவியை
பிரிந்து பொருளீட்ட ஜாதகர் வெளிநாடு
சென்றார்.
நான்காவதாக ஒரு ஆணின் ஜாதகம் கீழே.
திசா நாதன் சனி காதல் காரகன் புதனின் கேட்டை சாரத்தில் நின்று
லக்னத்திற்கு ஐந்தாமிடத்தை தனது 1௦ ஆம் பார்வையால் பார்க்கிறார். மேஷத்திற்கு
பாதகாதிபதி சனி எட்டில் நிற்பது ஒருவகையில் சிறப்பே ஆகும். சனி ராசிக்கு
ஐந்தாமதிபதி என்பதையும் கவனத்தில்கொள்ளவேண்டும். மேலும் பாவத்தில் 11 ல் ராகு நிற்பதால் சனி பாதக
ஸ்தானத்திற்கு செயல்பட வழியில்லை. ராசியில் ஒரு பரிவர்த்தனை நடந்துள்ளதால் சனி உள்ளிட்ட
கிரகங்கள் பெரும்பாலும் ராசியை சார்ந்தே செயல்பட வேண்டும். சனி ஐந்தாமதி
சூரியனுடனும் பரிவர்தனையான 2, 7 ஆமதிபதி சுக்கிரனுடனும் இணைந்து ராசிக்கு 2 ல் நிற்கிறார்.
சுக்கிரனும் செவ்வாயும் பரிவர்த்தனையாகி
அது லக்னாதிபதியின் ஆட்சி வீடானதால் எட்டாமிட பரிவர்த்தனை தோஷம் இங்கு செயல்படாது.
காதலுக்குரிய பாவாதிபதி சூரியன் எட்டில் மறைந்தாலும் அவர் அனுஷம் - 1
ல் நின்றதால் நவாம்சத்தில் சிம்மத்தில் ஆட்சியாகிவிடுகிறார் என்பதை கவனிக்க
வேண்டும். ஜாதகர் சனி திசையில் பாவத்தில்
ராசிக்கு ஐந்திலும் லக்னத்திற்கு 11 லிலும் நின்ற ராகு புக்தியில் திருமணம்
செய்தார். இந்த ஜாதகத்தில் பரிவர்தனைக்குப்பிறகு சனி செவ்வாய் சேர்க்கை
ஏற்படுகிறது என்பதை கவனிக்க வேண்டும். ஜாதி மாறி திருமணம் செய்தால் விருண யோகம்
செயல்படாது என்பதோடு கலப்பு மணத்தால் பாதகத்தில் நிற்கும் ராகுவும் பாதிக்க
வாய்ப்பில்லாமல் போனது. காரணம் ஜாதி மற்றும் மதம் மாற்றத்திற்கு ராகுவும் ஒரு காரணம். அதனால்
ஜாதி மாறி திருமணம் செய்தால் சர்ப்பக் கிரகங்கள் கடுமை காட்டாது என்பதை
கவனத்தில் கொள்க. இப்படி ஜாதி மாறி
திருமணம் செய்தால் ஜாதகப்படி பாதிக்கப்படக்கூடிய ஒரு அமைப்பும் செயல் இழக்கும்
என்பதை பிள்ளைகளின் ஜாதக தோஷம் கழிக்க கோவில் கோவிலாக சுற்றும் பெற்றோர்கள்
கவனிக்கவேண்டும்.
மீண்டும் அடுத்த வாரம் அடுத்த பதிவில் சிந்திப்போம்.
அதுவரை வாழ்த்துக்களுடன்,
அன்பன்,
பழனியப்பன்.
கைபேசி: 08300124501.