Tuesday, 29 October 2019

குமரன் சந்தித்த குருப்பெயர்ச்சிகள்.


இன்று வாக்கியப் பஞ்சாங்கப்படி குருப்பெயர்ச்சி நடந்து முடிந்துவிட்டது. கிரகப்பெயர்ச்சிகளில் சந்திரன் விரைவாகச் சுழலும் கிரகம் என்பதால் அதன் தாக்கம் உடனுக்குடன் மாறிவிடும். மாதக்கிரகங்கள் தரும் பலன்களும் ஒரு மாதத்தில் மாறிவிடும். ஆனால் வருடக்கிரகங்கள் என்று சொல்லப்படும் குரு, சனியும், ராகு-கேதுக்களும் வருடம் முழுமைக்கும் குறிப்பிட்ட சில சூழ்நிலைகளில் நம்மை இருக்க வைக்கும். வருடக்கிரகங்களில் ராகு-கேதுக்கள் தாங்கள் நின்ற பாவாதிபதிகளை சார்ந்துதான் செயல்படும் என்றாலும் அவற்றிற்கும் தனிப்பலன்கள் உண்டு. இதர அனைத்து கிரகங்களையும் கட்டுப்படுத்தி வைக்கும் வல்லமை பெற்றவை நிழல் கிரகங்களான ராகு-கேதுக்கள்.  குருவும் சனியும்தான் மனித வாழ்வை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் வேலையை செய்பவை. இதில் சனி தாட்சன்யமின்றி சில சூழ்நிலைகளுக்கு மனிதர்களை இட்டுச்செல்வார். சனி அளவு கடுமை காட்டாமல் அதே சமயம் ஒரு மனிதன் அடைய வேண்டிய இலக்கை நோக்கி குரு செலுத்துவார் எனலாம்.


வருட கிரகப்பெயர்ச்சிகள் நடக்கவிருக்கும் சில நாட்களுக்கு முன்பே நம்மைச்சுற்றி நடக்கும் நிகழ்வுகளை ஊன்றிக்கவனித்தால் நம் வாழ்க்கையில் வருட கிரகங்கள் ஏப்படி மாற்றங்களை ஏற்படுத்துகின்றன என்பதை நன்கு அறியலாம்.   எனினும் அனைத்து கிரக பெயர்ச்சிகள் ஏற்படுத்தும் மாற்றங்களும் தனிப்பட்ட ஒவ்வொருவரின் ஜாதக அமைப்பிற்குத்தக்கபடி அவரவர் திசா-புக்திகளின் அடிப்படையிலேயே அமையும் என்பதே உண்மை. அதனால்தான் கிரகப்பெயர்ச்சிகளின் பலன்கள் மனிதர்க்கு மனிதர் மாறுபடுகின்றன.

கீழே நான் அறிந்த அன்பர் குமரனின் ஜாதகம்.


மேஷ லக்ன ஜாதகம். லக்னாதிபதி செவ்வாய் களத்திர ஸ்தானமான 7ல் நின்று லக்னத்தை பார்க்கிறார். இதனால் ஜாதகம் வலுவடைகிறது. லக்னாதிபதி செவ்வாய் தனது பகை கிரகமான வித்யாகாரகன் புதனுடன் இணைந்து தொடர்பு ஸ்தானத்தில் நிற்கிறார். இதனால் ஜாதகர் ஒரு ஆசிரியராக உருவெடுத்தார்.

காதல் காரகனான புதன் 7 ல் நிற்கிறார். 7 ஆமதிபதி சுக்கிரன் 7 க்கு பாதகமான காதலைக் குறிக்கும் 5 ஆமிடத்தில் வர்கோத்தமம் பெற்று நிற்கிறார். 5 ஆமதிபதி சூரியன் 6ல் லக்ன சத்ரு புதனின் வீட்டில் புதன் மற்றும் லக்னாதிபதிக்கு விரையத்தில் நிற்கிறார். இதனால் ஜாதகர் காதல் வயப்பட்டார். மகர ராசி சந்தியில் நின்று நீச குருவோடு இணைவு பெற்ற பாதகாதிபதி சனி 12, 4, 7 ஆமிடங்களை பார்க்கிறார். பாதகாதி சனி தொடர்பு பெரும் குரு, பாதகாதிபதி சனிக்கு கட்டுப்பட்டவர் ஆகிறார். இதனால் சனி-குரு இணைவு ஆசிரியராக ஜாதகர் உருவெடுத்து பொருளாதார சிறப்புகளை கொடுத்தாலும் திசா நாதனான 10 ஆமிட குரு குடும்ப வகையில் பாதகத்தையும் தயங்காமல் செய்வார் எனலாம். இதில் சனி செவ்வாய் இரண்டும் ஒன்றை ஒன்று பார்த்துக்கொள்கின்றன என்பதும் சனி வர்கோத்தமம் பெற்றுள்ளதும் கவனிக்கத்தக்கது. இந்த அமைப்புகள் காதலுக்கு சாதகமானது அல்ல. காதல் ஆசையைத்தூண்டும் கேது லாபத்தில் நின்றாலும் பாதகத்தில் நிற்கிறார் என்பது கவனிக்கத்தக்கது. காதலுக்கு உதவும் 5 க்கு லாப பாவமான 3ல் மாந்தியுடன் சேர்க்கை பெற்று கேதுவின் திரிகோணத்தில் சந்திரன் நிற்கிறார். குருவோடு இணைந்த சனி ராசிக்கு இரண்டாமிடத்தை பார்க்கிறார். சனியோடு இணைந்த குரு லக்னத்திற்கு இரண்டாமிடத்தை பார்க்கிறார். திருமணதிற்கு முன் ஜாதகர் காதலால் பெருத்த அவமானத்தை சந்திக்க இருப்பதையும் அது மரணத்திற்கு சமமானதாக இருக்கும் என்பதையும் மாந்தியோடு இணைவு பெற்று புதனின் வீட்டில் நிற்கும் சந்திரன் உணர்த்துகிறது.

காதலால் ஜாதகர் அவமானப்பட்ட காலத்தில் (1989) குரு மிதுனத்திலும் கேது சிம்மத்திலும் ராகு கும்பத்திலும் அமைந்திருந்தனர். அப்போது குரு திசை கேது புக்தி நடந்தது.

காதலால் அவமானப்பட்ட பிறகு 1990 ல் குரு ஜாதகருக்கு நன்மையை செய்யும் நிலைக்கு கோட்சார ரீதியாக கடகத்தில் வந்து உச்சமடைகிறார். கடகத்தில் உச்சமான குரு ஜனன காலத்தில் மகரத்தில் அமைந்த நீச குருவையும் சனியையும் தனது உச்ச பார்வையால் பார்த்து சமாதானமடைய செய்கிறார். அதுமட்டுமல்லாமல் ஜனன காலத்தில் கும்பத்தில் பாதகத்தில் அமைந்த கேதுவோடு கோட்சாரத்தில் கடகத்தில் கூடி சர்ப்ப கிரகங்களையும் சமாதானப்படுத்துகிறார். பாதகாதிபதி சனியும் கோட்சாரத்தில் உச்சமான குருவின் வீட்டில் தனுசுவில் நிற்கிறார். இதனால் குருவின் கட்டளைகளை சனி ஏற்றுக்கொள்ளும் மன  நிலையில் இருப்பார் எனலாம். குரு திசையில் 7 ஆமதிபதி சுக்கிரனின் புக்தி நடந்த  இக்காலகட்டத்தில்  ஜாதகருக்கு திருமணம் நடந்தது.

தற்போது 1992. கோட்சார குரு 7ஆமிடமான துலாத்திற்கு   பாதகமான சிம்மத்திற்கு வருகிறது. அங்கு ஜனன சுக்கிரன் ஏற்கனவே ராகுவோடு இணைந்து பாதிக்கப்பட்டிருக்கிறார். கோட்சார குரு ஜனனத்தில் தன நின்ற பாவத்திற்கு அஷ்டமத்தில் வந்த நிலையில் கோட்சார சனி ஜனன சனி-குருவோடு மகரத்தில் சேர்க்கிறது. கோட்சார கேது ஜனன சந்திரன் மேல் மிதுனத்திலும் ராகு தனுசுவிலும் அமைகிறது. நடப்பது குரு திசையில்  லக்னத்திற்கு 6ல் நிற்கும் சூரிய புக்தி. ஜாதகரின் முதல் திருமணம் முறிவுற்றது. 

ஜாதகர் தற்போது 1998ல் வந்து நிற்கிறார். ஜாதகரை பாடாய் படுத்திய குரு திசை முடிவுக்கு வந்துவிட்டது. 1, 6, 10 திசா-புக்திகள் பொதுவாக பிரிவினையை சொல்லும் என்றாலும் குரு பாதகாதிபதி சனியோடு 10 ல் சேர்ந்ததால் சனியின் குணங்கள் அனைத்தும் குருவுக்கு இருக்கும். அதனால் வாழ்க்கை குருவின் அனைத்து காரகத்துவ ரீதியாகவும் பாழ்பட்டது எனலாம். தற்போது சனி திசை என்பதால் குருவோடு சேர்க்கை பெற்ற சனிக்கு குருவின் அணைந்து தன்மைகளும் இருக்கும். தற்போது சனி திசை துவக்கம்.  சனி 12, 4, 7 ஆம் பாவங்களை குருவோடு இணைந்த நிலையில் ஜனனத்தில் பார்க்கிறார். கோட்சார சனி மேஷத்தில் நிற்கிறார். ராகு கேதுக்கள் ஜனனத்தில் நின்ற அதே சிம்மம் கும்பத்தில் நிற்கின்றன. கோட்சார குருவும் ராசிக்கு 9ல் நின்று ராசியையும் களத்திர ஸ்தானமான துலாமையும் பார்ப்பதோடு கும்பத்தில் கேதுவோடு கூடி  சிம்ம ராகுவை பார்த்து சர்பங்களை சாந்தி செய்கிறார். இதனால் வாழ்வில் ஒரு மறுமலர்ச்சி ஜாதகருக்கு ஏற்பட வேண்டும். ஜாதகருக்கு இக்காலத்தில் இரண்டாவது திருமணம் நடந்தது. 

ஜாதகருக்கு 2 ஆவது திருமணமான சில மாதங்கள் கழிந்த நிலையில் கோட்சார குரு தற்போது மீனத்திற்கு பெயர்ச்சியாகி சனியின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் நின்று 6 ஆமிட ஜனன சூரியனை பார்வை செய்கிறது. ஜீவன காரகன் சனி,  வேலையை குறிக்கும் 6 ஆம் பாவத்தில் நிற்கும் சூரியனின் உத்திராடம் நட்சத்திரத்தில் மகரத்தில் நின்று திசை நடத்துகிறது. இந்தக்காலத்தில் ஜாதகருக்கு நல்லதொரு பள்ளியில்  அரசு பணிக்கு இணையான கௌரவமான சம்பாத்தியத்தில் வேலை கிடைத்தது.

தற்போது 1999 இறுதி மாதம். கோட்சார குரு மேஷத்திற்கு வந்து நீச சனியோது இணைகிறது. கோட்சார ராகு சிம்மத்தை விட்டு நகர்ந்து கடகத்திலும் கேது மகரத்திலும் நிற்கிறது. கோட்ச்சாரத்தில்  சனியோடு இணைந்த குரு லக்னத்திற்கு 5, 7, 9 ஆமிடன்களை பார்வை செய்கிறது. ஜாதகரின் மனைவிக்கு தற்போது பெண் குழந்தையை அருளினார் குரு.

தற்போதைய காலம் 2007 பிப்ரவரி 26. குரு திசையில் முதல் பகுதியான 9 ஆவது ஆதிபத்தியம் முடிந்து 2 வது ஆதிபதியமான 12 ஆமிட விரைய ஆதிபத்தியம் நடக்கிறது. குரு ராசிக்கு 6 லும் லக்னத்திற்கு  8 லுமான விருட்சிகத்தில் கோட்சாரத்தில் வந்து அமைந்துள்ளார். கோட்சார குருவின் பார்வை ராசி மற்றும் லக்னத்திற்கு இல்லை. பாதகாதிபதி சனி கோட்சார குருவின் 9 ஆவது பார்வையை வாங்கினாலும் கோட்சார குருவிற்கு கோட்சார சனி பாதகத்தில்தான் அமைந்துள்ளது. எனவே குருவின் கட்டளையை ஏற்றுக்கொள்ள சனிக்கு மனமில்லை. கோட்சார சனி லக்னத்திற்கு 4ல்  தனது பகை வீட்டில் லக்னத்திற்கு 6 ஆமதிபதி புதனின் ஆயில்ய நட்சத்திரத்தில் அமைந்துள்ளது. கோட்சார கேது சிம்மத்திலும் கோட்சார ராகு கும்பத்திலும் நிற்கிறது. வாகனங்களை குறிக்கும் செவ்வாய் கோட்சாரத்தில் மகரத்தில் உச்சம் பெற்று ஜனனத்தில் லக்னத்திற்கு 6 நின்ற சூரியனின் உத்திராடம் நட்சத்திரத்தில் நிற்கிறது. மற்றொரு வாகன கிரகம் சுக்கிரன் மீனத்தில் உச்சம் பெற்று பாதகாதிபதி சனியின் பூரட்டாதி நட்சத்திரத்தில் நிற்கிறது. கோட்சார சந்திரனும் கோட்சார மாந்தியும் ஜனன காலத்தில் நின்ற அதே மிதுன ராசியில் நிற்கின்றன. நடப்பது சனி திசையில் ஜனனத்தில் ராகுவோடு சேர்ந்து பாதிக்கப்பட்ட சுக்கிரனின் புக்தி. கோட்சார சந்திரன் நிற்பது ராகுவின் திருவாதிரை நட்சத்திரம். இந்த நாளில் ஜாதகர் வாகன விபத்தில் நூலிழையில் உயிர் தப்பினார். வலது காலில் ஏற்பட்ட எழும்பு முறிவுக்காக  ஜாதகருக்கு இரும்புத் தகடு பொருத்தப்பட்டது.

தற்போது 2016 நவம்பர் மாதம் 29 ம் நாள். குருவின் தன்மையை பெற்ற சனியின் திசையில் சனியின் தன்மையை பெற்ற குருவின் புக்தி. குரு பாதகத்தை செய்வார் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. கோட்சார குரு லக்னத்திற்கு 6 ல் மறைந்துள்ளது. கோட்சார சனி லக்னத்திற்கு 8 ல் பகை வீட்டில் விருட்சிகத்தில் நிற்கிறது. கோட்சார ராகு-கேதுக்கள் ஜனன காலத்தில் நின்ற அதே இடத்தில் நிற்கின்றன. கோட்சார குரு ஜனனத்தில் 3 ல் நின்ற சந்திரனின் ஹஸ்தம் நட்சத்திரத்திலும் கோட்சார சனி 6 ஆமதிபதி புதனின் கேட்டை நட்சத்திரத்திலும் நிற்கின்றன. இதனால் விபரீதமாக ஒரு விழைவு நடக்கும் என்பது உறுதியாகிறது. ஜாதகருக்கு அன்றைய நாளில் நடந்த வாகன விபத்தில் இடது கையில் எழும்பு முறிவு ஏற்பட்டது. அதனால் இரும்புத் தகடு பொருத்தப்பட்டது.

தற்போது இன்று 29.10.2019ல் ஜாதகர் லக்னத்திற்கு 6 ஆமதிபதி புதனின் திசையில் ஜனன காலத்தில் பாதகத்தில் நிற்கும் கேதுவின் புக்தியில் உள்ளார். கோட்சாரத்தில் சனியும் கேதுவும் இணைவு பெற்றுள்ளார்கள். புதன் வேலையை குறிக்கும் 6 ஆமதிபதி. கேது தடையை குறிக்கும் கிரகம். சனி ஜீவனத்தை குறிக்கும் கிரகம். தற்போது ராசிக்கு 7 லும் லக்னத்திற்கு 9 லிலும் குரு வந்து அமர்ந்துள்ளார். ஜாதகர் தற்போது பணி ஓய்வு பெறவுள்ளார். தந்தையார் காலத்தில் விட்டுப்போன தனது குல தெய்வ வழிபாடுகளை முறைப்படுத்தி ஜாதகர் செய்து வருகிறார். தனது மகளின் வாழ்வை நல்ல முறையில் அமைத்துத்தர வேண்டிய நிலையில் புதிய ஒரு சூழலில் ஒரு எளிய பணியை ஜாதகர் நாடுகிறார்.

கோட்சார கிரகப்பெயர்ச்சிகள் ஜனன ஜாதகத்தில் இல்லாத ஒன்றை நமக்கு வழங்கிவிட முடியாது. கோட்சார கிரகங்கள் வழங்கும் பலன்களும் திசா-புக்திகளின் அனுமதியின் பேரிலேயே நடக்கும். கோட்சார கிரகங்கள் தோஷம் தரக்கூடிய இடங்களில் அமைந்தாலும் திசா-புக்திகள் சாதகமாக அமைந்துவிட்டால் பெரிய சிரமங்கள் ஏற்படுவதில்லை. இதற்கு உதாரணமாக ஏழரை சனியில் உயர்வு பெரும் எண்ணற்றவர்களின் ஜாதகங்களை என்னால் கூற முடியும்.

வருட கிரகங்களின் பெயர்ச்சிகளை குறிப்பாக குருப்பெயர்ச்சியை நாம் கொண்டாடுவோம். அதைவிட முக்கியமாக நேரிய வழியில் வாழ்ந்திடுவோம். நேரிய வழியில் செல்வோருக்கு கிரகப் பெயர்ச்சிகள் தரும் சிரமங்களை பொறுத்துக்கொள்ளும் பக்குவமிருக்கும். சாதகமான காலம் வரும் வரை சாந்தமான வாழ்வு வாழ்வோருக்கு நிச்சயம் நல்ல பலன்கள் உரிய காலத்தில் கிடைக்கும்.

மீண்டும் மற்றுமொரு பதிவில் சிந்திப்போம்.
அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,
பழனியப்பன்.
கைபேசி: 8300124501


Monday, 21 October 2019

அஷ்டவர்க்கத்தை கையாள்வது எப்படி?


ஜோதிடத்தில் பலன் கூற பல்வேறு யுக்திகள் பயன்படுத்தப்படுகிறது. அவற்றுள் ஒரு யுக்திதான் அஷ்டவர்க்கத்தை பயன்படுத்தி ஜாதக பலன் காணும் முறையாகும். பலன் கூற இது ஒரு எளிய முறையாக தெரிந்தாலும் அஷ்டவர்க்க கணிதம் போடுவதற்கு தேர்ந்த நுட்பம் வேண்டும். தற்போது இப்பணியை கணினிகள் துல்லியமாக செய்வதால் இது எளிதாகிறது. ஆனால் அஷ்டவர்க்க முறையில் பலன் காண வாக்கிய முறை கணிதமே சிறந்தது என கூறப்படுகிறது. அஷ்டவர்க்கத்தில் சுப பரல்கள் அசுப பரல்கள் என்றும் வகைப்பாடு உண்டு.  அதில் சுப பரல்கள் என்பது மொத்தம் 337 ஆகும். அசுப பரல்கள் என்பது மொத்தம் 335 ஆகும். இந்தப் பரல்கள் உண்மையில் ஒரு மனிதன் வாழத்தேவையான பிரபஞ்சத்திலிருந்து கிரகிக்கும் ஒளிப்புள்ளிகளே ஆகும். ஜாதக பலனறிய சுப பரல்கள் மட்டுமே பயன்படுகிறது. அசுப பரல்கள் பயன்படுவதில்லை. மனிதராக பிறந்த அனைவருக்கும் இந்த 337 பரல்கள் பகிர்ந்தளிக்கப்பட்டிருக்கும். மனிதருக்கு மனிதர் ராசியில் இந்த பரல்களின் எண்ணிக்கைதான் மாறுமே தவிர மொத்த எண்ணிக்கை நிச்சயம் 337 தான் வரும்.


மொத்தமுள்ள 337 பரல்களையும் 12 ராசி மண்டலத்திற்கும் பகிர்ந்தால் சராசரியாக 28 பரல்கள் ஒரு ராசிக்கு வரும். இப்படி அமையப்பெற்ற ஜாதகர் வாழ்வில் சராசரியாக அணைத்து விஷயங்களையும் அடைவார் எனலாம். ஆனால் எல்லோருக்கும் இப்படி அமைவதில்லை. மேலும் எல்லோரும் சராசரி மனிதரும் இல்லை. இதனால் சரிவிகிதமாக இப்பரல்கள் அமையாமல் மாறி அமையும் சூழல் உண்டு. அப்படி ஒரு ராசிக்கு பரல்கள் கூடினால் மற்றொரு ராசியில் அது குறையும். ஏனெனில் மொத்த பரல்களின் எண்ணிக்கை 337 தான். ஒரு ராசியில் உள்ள பரல்களின் எண்ணிக்கையை வைத்து அந்த ராசி குறிப்பிடும் பாவத்தின் வலிமையை அறியலாம்.  அதிகபட்சமாக ஒரு ராசிக்கு 56 பரல்கள் வரை கூடலாம். 23 பரல்களுக்கு குறைவாக ஒரு பாவம் பரல்களை பெற்று அதன் அதிபதி வலுவடையாவிட்டால் அந்த பாவம் கடுமையாக பாதிப்படையும்.   அதேபோல ஒரு கிரகத்திற்கு சுய பரலாக ௦ முதல் 8 வரை மாறுபட்டு அமையலாம். 4 என்பது ஒரு கிரகத்திற்கு அமையும் சராசரி பரல் எனலாம்.  4 ஐ விட அதிகமானால் அது வலிமையடையும், 4 ஐ விட சுய பரல்கள் குறைந்து இதர வகைகளில் அக்கிரகம் வலிமையடையாதபோது அக்கிரகம் செயலற்ற நிலையில் அமைந்துள்ளதாக எடுத்துக்கொள்ளலாம். பரல்களை வைத்து ஒரு தனிப்பட்ட கிரகத்தின் வலிமையை அறியலாம். இவை அனைத்துமே திசாபுக்திகளில் எப்படி ஒரு பாவமும் ஒரு கிரகமும் செயல்படும் என்பதை அளவிடவே ஆகும்.

  இப்பதிவில் நாம் அஷ்டவர்க்கத்தை பயன்படுத்தி ஜாதகங்களை எவ்வாறு ஆராய்வது என்று பார்ப்போம்.

கீழே ஒரு ஆணின் ஜாதகம்.

லக்னாதிபதி லக்னத்தில் ஆட்சி, உச்சம், திக்பலம் என்ற அமைப்பில் ஆதீத வலுவடைந்துள்ளது.  ஆனால் லக்னத்தைவிட ஜீவன காரகன் சனி சந்திரனுடன் பரிவர்த்தனையாகி சனி நிற்கும் கடக ராசிக்கே   அதிகமாக 38 பரல்கள் கிடைத்துள்ளது. சனிக்கும் கிரகங்களிலேயே சுய பரல்களில் அதிகமாக 7 பரல்கள் பெற்று அமைந்துள்ளது.   சனியின் அமைப்பால் வெளிநாட்டிலும், புதனின் அமைப்பால் மருத்துவராகவும் ஜாதகர் சிறப்பாகப் பணிபுரிந்து பொருளீட்டுகிறார். இங்கு லக்ன பாவத்திற்கு பரல்கள் குறைவு ஆனால் லக்னாதிபதி வலுவாக உள்ளதால் லக்ன பாவம் குறைந்த பரல்கள் பெற்றாலும் பாதிக்காது என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

இரண்டாவதாக கீழே மற்றொரு ஜாதகம்.

இந்த ஜாதகத்தில் 4 மற்றும் 5 ஆம் பாவங்கள் அதிகமாக 33 பரல்களை பெற்றுள்ளன. 5 ஆவது பாவத்தில் ஒரு உச்ச கிரகம்.  சூரியன் அதிக பட்சமாக சுய பரல்களில் 6 பரல்களை பெற்றுள்ளது. சூரியன் நின்ற வீட்டதிபதி சூரியனுக்கு லாபத்தில் உச்சம். 5 ஆவது பாவம் வலுவடைந்தால் அரசுவகை நன்மை. சூரியன் வலுவடைந்தால் அரசன் உதவுவார். சனி குறைந்த  பரல் பெற்றிருந்தாலும் 5 ஆமிடம் மற்றும் சூரியனின் அமைப்பால் ஜாதகர் அரசுப்பள்ளி ஆசிரியராக பணி புரிந்தார். இந்த ஜாதகத்தில் சனிக்கு பரல்கள் 2 தான் ஆனால் சனி உச்சன் சந்திரனின் பரிபூரண பார்வையை வாங்குகிறார். மேலும் சனி நின்ற பாவாதிபதி செவ்வாய் நீச பங்கமாகியதால் தான் நின்ற வீட்டையும் அதிலுள்ள கிரகத்தையும் வலுவூட்டுவார் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். இந்த ஜாதகர் சனி திசையில்தான் நல்லாசிரியர் விருது பெற்று பிறகு பணி ஓய்வு பெற்றார். ஒரு பாவத்தின் மற்றும் ஒரு கிரகத்தின் சுய வர்க்க பரல்களை  பரல்கள் குறைவை வைத்து  மட்டும் ஒரு பாவத்தின், ஒரு கிரகத்தின் செயல்பாட்டை சரியாக ஆராயாமல் மதிப்பிட்டுவிடக்கூடாது. இதர வகைகளில் அந்த பாவமும் கிரகமும் என்ன வகையான தாக்கத்தை எதிர்கொள்ளும் என ஆராய்ந்தே பலனுரைக்க வேண்டும்.

மூன்றாவதாக மற்றொரு ஆணின் ஜாதகம் கீழே.

சிந்தனை ஸ்தானமான 5 ஆமிடத்தில் 5 ஆமதிபதி ஆட்சி பெற்று குரு பார்வை பெறுகிறது. 5 ஆமதிபதி செவ்வாயின் மிருக சீரிஷ நட்சத்திரத்தில் அமைந்த கேது 5 ஆமிடத்தை நோக்கி வருகிறது. கேது நின்ற பாவம் அதிக பட்சமாக 35 பரல்களையும் கிரகங்களில் குரு சுய வர்க்கத்தில் அதிகபட்சமாக 7 பரல்களையும் பெற்றுள்ளது. இவை இரண்டும் ஆன்மீக கிரகங்களாகி சிந்தனை ஸ்தானமான 5 ஆம் பாவ தொடர்புகொண்ட காரணத்தால் ஜாதகர் உலகம் போற்றிய துறவியாகத் திகழ்ந்தார். சுக்கிரனும், 7 ஆமதியும் 7 க்கு 8 ல் மறைந்துவிட்டனர்.  குரு 4 பாகையில் நின்று தாரா காரகனாகி பாவகர்தாரி யோகம் பெற்றதனால் குரு  7 ஆமிடத்தை பார்த்தும் திருமணம் செய்துகொள்ள எண்ணமின்றி செய்துவிட்டது.  ஜாதகர் வீரத்துறவி விவேகானந்தர். 

நான்காவதாக ஒரு பெண்மணியின் ஜாதகம் கீழே.

 லக்னாதிபதி குரு, மாந்தியுடன் இணைந்து நீசம் பெற்று பாவ கர்தாரி யோகத்தில்  உள்ளார். சர்ப்ப கிரகங்களான ராகுவும் கேதுவும்  இதர அணைத்து கிரகங்களோடும் தொடர்புகொள்கின்றன. கேது ஆறாமிடத்தை நோக்கிய நிலையில் உள்ளதால் 6 ஆமிடத்தில் உள்ள அனைத்து கிரகங்களும் கேதுவால் பாதிக்கப்படும். ஜாதகத்தில் சுக ஸ்தானமான மீனத்தில் அதிகப்பட்சமாக 40 பரல்கள் அமைந்துள்ளன. குருவின் பூரட்டாதி சாரம் பெற்ற   அஷ்டமாதிபதி சந்திரனுக்கு அதிகபட்சமாக 6 பரல்கள் கிடைத்திருக்கிறது. லக்னாதிபதி குரு 5 பரல்கள் பெற்று சந்திரனுடன் சாரப்பரிவர்தனையில் உள்ளார். சுக ஸ்தானம் அதிக பரல்கள் பெற்றாலும் அதன் அதிபதி குரு  பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பால்யத்தில் கடந்த குரு  திசையில் சில கண்டங் களோடு ஜாதகி உயிர் தப்பினார். அதை அடுத்து வந்த சனி திசையும், புதன் திசையும் கேதுவால் தீண்டப்பட்ட திசைகளாகின்றன. தற்போது ஜாதகி பாதகத்தில் நிற்கும் கேது திசையில் உள்ளார். இந்த அமைப்பின்  பலனாவது, ஜாதகி தனது பிறப்பு முதல் இந்நாள் வரை வறுமையிலேயே வாடுகிறார்.  இங்கு பாவம் அதிக பரல் பெற்று பலம் பெற்றாலும் பாவதிபதி வலுவிழந்து முடங்கியிருப்பதால் பயனில்லை என்பதை புரிந்துகொள்ளவேண்டும். 

திசா புக்தி பலன்களை மேலும் நுட்பமாக ஆராய, திசா கிரகம் நிற்கும் பாவத்திற்கும் அதன் சுய பாவங்களுக்கும் இதர கிரகங்கள் வழங்கும் பரல்களை ஆராய்வது மேலும் சிறப்பாகும்.

மீண்டும் அடுத்த பதிவில் சந்திபோம்,
அதுவரை வாழ்த்துக்களுடன்,
அன்பன்,
பழனியப்பன்.
கைபேசி: 8300124501 

Monday, 14 October 2019

தலையாய பிரச்சனை.


உடல் அழகை பேணுவதில் அக்கறை காட்டாத உயிரினமே உலகில் இல்லை எனலாம்.எதிர்பாலினரை கவர அழகு அவசியம். மயில், புறா போன்ற பறவைகள் தங்களது தோகை, இறகுகளை பயன்படுத்தி நடனமாடி தங்களது எதிர்ப்பாலினரை ஈர்க்கின்றன. அதிலும் தலை முடியை அழகு படுத்திக்கொள்வதில் மனிதர்கள் காட்டும் அக்கறை, அதற்காக செலவிடும் நேரம், தொகை அதிகம். இன்று மனிதர்கள் தங்கள் கேசத்தை பராமரிப்பதற்காக செலவிடும் தொகை ஒரு ஆண்டுக்கு பல லட்சம் கோடிகள் என்கிறது புள்ளி விபரங்கள்.



தலை முடி நன்கு வளர ஜோதிடத்தில் அழகுக்கு காரக கிரகமான சுக்கிரனின் பங்கு மிக முக்கியம். அதனால்தான் ஆண் வழுக்கையர்கள் உண்டு.  பெண்ணே சுக்கிரனின் அம்சம் என்பதால் பெண்ணுகளுக்கு வழுக்கை ஏற்படுவதில்லை. சுக்கிரன் முடி வளர்ச்சிக்குத் தேவையான சுரப்பிகளின் செய்யல்பாட்டை கட்டுப்படுத்துகிறது. கேசத்தை நேரடியாக குறிப்பிடும் கேதுவும் ஜாதகத்தில் சிறப்பாக இருத்தல் நன்று. தலையை குறிக்கும் லக்னமும், கால புருஷ தத்துவப்படி தலையை குறிக்கும் மேஷமும், மேஷத்தில் உச்சமாகும் தலைக்கு காரக கிரகமான சூரியனும் ஒருவரது ஜாதகத்தில் தலை முடியின் வளர்ச்சியை நிர்ணயிக்கின்றன.

ஜோதிடத்தில் தலை முடியை நேரடியாக குறிக்கும் கேதுவே சுக்கிரனுடன் தொடர்புகொண்டால் முடி வளர்ச்சிக்கு தடையை உண்டு செய்வார். அதே சமயம் மேஷத்திற்கு பாதக அதிபதியும் மேஷத்தில் நீச்சமடையும் மேஷ அதிபதி செவ்வாயின் பரம எதிரியான சனி மேஷத்துடனோ, லக்னத்துடனோ தலை முடி வளர்ச்சிக்கு தடையை உண்டு செய்வதில் முன்னிலை வகிக்கிறார். சனி மயிர்க்கால்களை குறிக்கும் காரக கிரகமாகும். செவ்வாயின் மற்றொரு எதிரி கிரகமான புதன் மேஷத்துடனோ அல்லது லக்னத்துடனோ தொடர்புகொண்டாலும்   சனியை விட தீவிரமாக செயல்பட்டு தலையில் வழுக்கையை உண்டு செய்கிறது. காரணம் புதன் தோலில் சுரக்கும் ஒருவிதமான எண்ணைப் பசையை சுரக்க உதவும் காரக கிரகமாகும். இந்த எண்ணைப் பசையே மயிர்க்கால்கள் உடலில் ஊன்றி வளர உதவுகின்றன.

செவ்வாய் - வேகம், புதன் – விவேகம். இதனை முன்னிட்டே தலை முடி கொட்டி வழுக்கை நிலை பெற்றவர்கள் புதனின் தாக்கம் நிறைந்தவர்கள் எனவும் செவ்வாயின் தாக்கம் குறைந்தவர்கள் எனவும் எடுத்துக்கொள்ளப்பட்டு விவேகம் குடிகொண்டுள்ள ஒருவரிடம் வேகம் கட்டுப்பாட்டுடனே இருக்கும் என்ற அடிப்படையில் வழுக்கையர்கள் புத்திசாலிகள் எனவும் காம தத்துவத்தை குறிப்பிடும் புதனின் அம்சம் நிரம்ப பெற்றவர்கள்  என்பதாலும் காம உணர்வு நிரம்பியவர்கள் எனவும் பொதுவான ஒரு கருத்து உண்டு.

கீழே ஒரு ஆணின் ஜாதகம்.


கன்னி லக்ன ஜாதகத்தில் ஆறாமதிபதி சனி லக்னத்திலேயே நிற்கிறது. நவாம்சத்தில் சனி மேஷத்தில் நிற்பதால் ஜாதகருக்கு சனியில் வெளிப்பாடு தலையில் வெளிப்படும். மயிர்க்கால்கள் வழு குறைந்தவை என்பதை இது குறிக்கிறது. சுக்கிரன் ஜாதகத்தில் நீச்சம். இதனால் முடி வளர்ச்சிக்கான சுரப்பிகளின் செயல்பாடு சிறப்பாக இருக்காது. சுக்கிரனுக்கு திரிகோணத்தில் கேது உள்ளதால் சுக்கிரனின் செயல்பாடு கேதுவால் பாதிப்படையும். இதனால் முடி வளர்ச்சி தடைபடும்.  பாதகாதிபதி குருவே தலையை குறிக்கும் லக்னத்தில் அமர்ந்துள்ளதால் பாதகாதிபதியும் தலையில் பாதிப்பை ஏற்படுத்துவார். 

திருவாதிரை முதல் பாதத்தில் பிறந்த ஜாதகருக்கு  குரு திசையில் சூரியன் சாரத்தில் நிற்கும் சுக்கிரனின் புக்தியில் 26 வயதில் தலைமுடி கொட்டத் துவங்கியது. தற்போது 39 வயதில் ஜாதகர் சனி திசையில் கேது புக்தியில் தலையில் ஒரு முடிகூட இல்லாத முழு வழுக்கையாக மறைந்த சோ – ராமசாமி போல (பத்திரிகையாளர், வழக்கறிஞர் முழுமையான புதனின் அம்சம்) காட்சியளிக்கிறார்.

கீழே இரண்டாவதாக மற்றொரு ஆணின் ஜாதகம்.


இந்த ஜாதகத்தில் லக்னமே தலைக்கு காரக கிரகமான சிம்மமாக அமைந்துள்ளது. சூரியன் செவ்வாயின் விருசிட்சிக ராசியில் சனியின் அனுஷ நட்சதிரத்தில் அமைந்துள்ளது. சூரியனுக்கு பாவ கர்த்தாரி யோகம் உள்ளது. இந்த ஜாதகத்திலும் சுக்கிரன் நீச்சம். மேஷத்தில் ராகு, மேஷாதிபதி செவ்வாய்க்கு திரிகோணத்தில் அமைந்துள்ளது. சனி லக்னத்திற்கு 8 ல் வக்கிர கதியில் மறைந்து சூரியனுக்கு திரிகோணத்தில் சுய சாரத்தில் உத்திரட்டாதியில் நிற்கிறார். கேது முடி வளர்ச்சியை  தூண்டக்கூடிய சுக்கிரனின் மூலத்திரிகோண  வீட்டில் அமைந்து நீச சுக்கிரனை நோக்கியபடி கால புருஷனின் தலையைக் குறிக்கும் மேஷாதிபதி செவ்வாயின் சித்திரை நட்சத்திரத்தில் நிற்கிறார்.  அஸ்டமாதிபதி குரு தலையை குறிக்கும் லக்னத்தில் நிற்பது போன்ற அமைப்புகள் தலை முடி வளர்ச்சிக்கு சாதகமானவை அல்ல.

ஜாதகருக்கு அவரது 28 ஆவது வயதில் கால புருஷனின் தலையை குறிக்கும் செவ்வாயின்  சாரம் பெற்று தலைக்கு காரக  கிரகமான சூரியனுக்கு விரையத்தில் இருந்து கேது திசை நடத்த  துவங்கியது முதல் தலை முடி கொட்டத் துவங்கியது. தற்போது நீச சுக்கிர திசையில் மேஷத்தில்  நிற்கும் ராகுவின் சாரம் பெற்ற புதனின் புக்தியில் முழு வழுக்கையாக காட்சி தருகிறார்.

இப்படி தலை முடி கொட்ட துவங்குபவர்களுக்கு உரிய பரிகாரங்கள் ஏதேனும் உள்ளதா எனில்  இதை பெருமளவு கட்டுப்படுத்த முடியும் என்றுதான் கூறமுடிகிறது. சர்க்கரை வந்தவர்கள் நடைப்பயிர்ச்சியின் மூலம் சர்க்கரையின் தாக்கத்தை குறைத்துக்கொள்வது போல சில முறைகள் உண்டு.  அவைகளில் சிலவற்றை கீழே அளித்துள்ளேன்.

சூரியனுக்கு பரிகாரமாக பிரதோஷ வழிபாடு மற்றும் சூரினோடு செவ்வாய்க்கும் சேர்த்து பழனிமுருகன் மற்றும் சுவாமிமலை முருகன் ஆகியோரையும் அனைத்து மலை மீது இருக்கும் முருகனையும் வணங்கி வரலாம்.

காவல் காரகன் செவ்வாய்க்கு பரிகாரமாக வீட்டு பாதுகாப்புக்கு நாய் வளர்ப்பது நல்ல பலனைத் தரும். அதோடு செவ்வாய் குறிப்பிடும் சில உடற்பயிற்சிகளை குறிப்பாக யோகாசனங்களை அதிலும் குறிப்பாக தலைக்கு இரத்த ஓட்டம் செல்லும் சிரசாசனத்தை தகுந்த யோகா ஆசிரியர்களிடம் கற்றுக்கொண்டு செய்து வருவது அணைத்து வகை பரிகாரங்களிலும்  மிகுந்த பலனளிக்கும் ஒன்று.  விவசாயிகளுக்கு முடிந்த உதவிகள் செய்தல்  அவர்களின் விளைச்சலுக்கு உகந்த விலை கிடைக்கச் செய்தல் ஆகியவை நல்ல பலனளிக்கும். நல்ல விளைச்சல் பூமியை கழிவுகளை கொட்டி வீணடிக்காமல் பாதுகாத்து உகந்த வகையில் மரங்களையாவது நட்டு பராமரிப்பது, குறிப்பாக குல்மொஹார் வகை மரங்களை நட்டு பராமரிப்பது நல்ல பலனை அளிக்கும்.

புதனின் அம்சமான பள்ளி செல்லும் சிறார், சிறுமியருக்கு அவர்தம் கல்விக்கு     விளையாட்டிற்கு உதவுதல் மற்றும் இசைக் கலைஞர்களை ஆதரித்தல். மகா விஷ்ணுவை வணங்கி வருதல். புதன் செவ்வாய் குறிக்கும்   நரசிம்மரை வழிபடுதல் ஆகியவை நன்மை பயக்கும்.

சுக்கிரனின் அம்சமான பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கி அவர்களை மதித்து மரியாதையும்  கௌரவமும் கொடுத்து நடத்துதல்.  வேதம் ஓதும் பிராமணர்களை ஆதரித்தல்.  இவற்றோடு புதன் சுக்கிரன் இருவருக்குமாக வியாபாரிகளை ஆதரித்தல். பதுக்கல் காரர்களை ஆதரிக்காமல் இருத்தல் ஆகியவை நலம் பயக்கும்.

சனிக்கு பரிகாரமாக எளியோர், நோயாளிகள், நீதிபதிகள், உழைப்பாளிகள், கடை நிலை ஊழியர்கள் ஆகியோருக்கு உதவுதலும் ஆஞ்சநேயர், பைரவர், குல தெய்வம், காவல் தெய்வம், பைரவர் ஆகியோரை வணங்கி வரலாம். 

கேதுவிற்கு பரிகாரமாக கணபதியை வணங்கி வருதல். முருகனோடு இணைந்த கணபதியையும் வணங்கி வரலாம். இது செவ்வாய் கேது இரண்டிற்கும் பரிகாரமாக அமையும். ஞானிகளை கண்டு ஆசி பெறுதல் ஜீவ சமாதியான மகான்களை வழிபடுதலும் சிறப்பு. ஜோதிடர்கள், மருத்துவர்கள், ஆன்மீகவாதிகள், கோவில் பணியாளர்களை  ஆதரிப்பது ஆகியவை கேதுவால் ஏற்படும் தலை முடி பிரச்னைக்கு சிறந்த தீர்வாக அமையும் என்பது உறுதி. சங்கட ஹர சதுர்த்தி நாளன்று விரதம் இருந்து கணபதியை வணங்கி வருவது சிறந்த பரிகாரமாகும்.

மேற்சொன்னவற்றில் குறிப்பாக முடி கொட்டத் துவங்கும் போது திசை நடத்தும் கிரகத்தின் தாக்கத்தை அறிந்து அதற்குரிய வழிபாடுகளை செய்வதே மிகுந்த பலனளிக்கும் பரிகாரமாகும்.  

மீண்டும் அடுத்த வாரம் மற்றுமொரு பதிவில் சிந்திப்போம்.

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,
பழனியப்பன்.
கைபேசி: 8300124501

Sunday, 6 October 2019

ராகு போடும் ரங்கோலிகள்.


ராகு – கேதுக்கள் நிழல் கிரகங்கள், மாய கிரகங்கள், பொய்யான தோற்றத்தையும் மாய வலைகளையும் வீசி அதில் மனிதர்களை சிக்கவைத்து அவர்களின் கர்மங்களை கழிக்க வைத்து ஒருவரது பூர்வ ஜென்ம கணக்கை நேர் செய்பவை. உண்மையில் மனிதர்களின் ஜென்மாந்திர கர்மங்களின் சாட்சி பூதங்கள் இவை. ஒருவரது ஜாதகத்தில் நல்ல முறையில் அமைத்தால் அளப்பரிய நன்மைகளை வாரி வழங்குபவை. மின்னியல், அணுவியல், மின்னணுப் பொறியியல், மருத்துவம், திரைத்துறை, தொலைக்காட்சி, ஜோதிடம் , ஆன்மிகம், விண்வெளி போன்ற பல்வேறு துறைகளில் ஆதிக்கம் செலுத்துபவை. இத்துறைகள் இன்று முக்கிய பொருளாதாரத் துறைகள் என்பது கவனிக்கத்தக்கது.  ராகு-கேதுக்களின் சுப ஆதிக்கம் பெற்றவர்களை இத்துறைகளில் ஈடுபடுத்தி அவர்களை பொருளாதார ரீதியாக உயர்த்துபவை.



ராகு-கேதுக்கள் நிழல் கிரகங்கள் என்பதால் ஜாதகத்தில் தன, ஜீவன கிரகங்களுடனும் தன ஜீவன பாவங்களுடனும் அவற்றின் அதிபதிகளுடனும்  தொடர்புகொண்டால் ஒரு ஜாதகனுக்கு பொருளாதார ரீதியாக மிகச்சிறந்த உயர்வுகளை வழங்கும். பொருளாதாரம் என்பது உயிரற்ற ஜடக்காரணியாகும். என்பதால் நிழல் கிரகங்களான இவை  ஜடக்காரணிகளை பெரும்பாலும் கடுமையாக பாதிப்பதில்லை. அதே சமயம் இவை ஜாதகத்தில் தண்டனை வழங்கும் விதத்தில் அமைந்திருந்தால் பேய், பிசாசு, ஏவல், பில்லி சூனியம் என்பது போன்ற பல்வேறு மாய விஷயங்களை நினைத்து பயம்கொள்ள வைத்து பைதியக்காரர்களாக்குகின்றன  என்பதும் உயிர்க்காரணிகளான குடும்ப உறவுகளை  கடுமையாக பாதிக்கின்றன என்பதும் மறுக்க முடியாத உண்மை. ராகு ஏற்படுத்தும் மாற்றங்களை கேது சீர்செய்யும் வல்லமை படைத்தது. இப்பதிவில் நாம் ராகுவில் செயல்பாடுகளை ஆராய்வோம்.  

கீழே ஒரு ஆணின் ஜாதகம்.


தனுசு லக்ன ஜாதகத்தில் ஜீவன காரகன் சனி 12ஆமிடமும் ஜல ராசியுமான விருச்கிகத்தில் புதனின் கேட்டை நட்சத்திரத்தில் நிற்கிறது. லக்னம் கேதுவின் மூலம் நட்சத்திரத்தில் அமைந்துள்ளது. வேலை பாவம் எனப்படும் 6 ஆம் பாவத்தில் சந்திரன் கார்த்திகை நட்சத்திரத்தில் உச்சமாகி நிற்கிறது. சந்திரனின் சாரநாதன் சூரியன் சந்திரனின் ஹஸ்த நட்சத்திரத்தில் சாரப் பரிவர்த்தனை பெற்று லக்னத்திற்கு திக் பலத்தில் மிகச் சிறப்பாக அமைந்துள்ளது. லக்னாதிபதியும் முதன்மையான ஜலக்கிரகமான குரு கேதுவின் அஸ்வினி சாரம் பெற்று வக்கிர கதியில் நிற்கிறது. குரு வர்கோத்தமம் பெற்று நவாம்சத்தில் குருவின் வீட்டில் செவ்வாய் அமைந்தது சிறப்பு. நான்காவது பாவத்தில் ஜல ராசியான மீனத்தில் தனித்த நிலையில் சனியின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் நின்று ராகு திசை நடத்துகிறது.  சனி புதனின் கேட்டை நட்சத்திரத்தில் செவ்வாயின் வீட்டில்  நிற்பதால் புதன் சனி தொடர்பு குறிக்கும் கணினி மென்பொருளாளராக கர்ம ஸ்தானத்தில் நிற்கும் திக்பல சூரியன் குறிக்கும் அமெரிக்காவில் பணியாற்றுகிறார். கேந்திரப்பாவிகள் சிறப்பாக செயல்படுவர் என்ற விதிப்படி ராகு லக்ன கேந்திரத்தில் லக்னாதிபதியின் மற்றொரு வீட்டிலேயே அமைந்து திசை நடந்துவதால் சிறப்பான பலனை தற்போது தனது திசையில் அளித்து வருகிறது.

இரண்டாவதாக மற்றொரு பெண்ணின் ஜாதகம்.


மிதுன லக்ன ஜாதகத்தில் லக்னத்தில் ராகு உச்சத்திற்கு சமீபமாக நிற்கிறது. லக்னாதிபதி புதன் சுய சாரமான ரேவதியில் நீசம் பெற்று அமைந்துள்ளார். இந்த ஜாதகத்திலும் சூரியன் லக்னத்திற்கு 1௦ ல்  திக்பலத்தில் அமைந்துள்ளார். செவ்வாயும் வர்கோத்தமம் பெற்ற குருவும் பரிவர்த்தனை பெற்று அமைந்துள்ளனர். சனி தனது மூலத்திரிகோண வீடான கும்பத்தில் ராகுவிற்கு திரிகோணத்தில் ராகு சாரம் பெற்று அமைந்துள்ளார். 1௦ ஆமிட அமைப்பால் ஜாதகி நிலத் தரகராகவும்,  கல்விக்கூடங்களுக்கு நிதி ஆதாரங்களை ஏற்பாடு செய்து தரகு பெறுபவராகவும் செயல்படுகிறார். அதே சமயம் ஜீவன காரகன் சனி ராகுவுடன் தொடர்பு கொள்வதால் ரைஸ் புல்லிங், மண்ணுள்ளிப் பாம்பு போன்ற வகையிலும் தனது வருமானத்தை அடைய முனைகிறார். இதற்குக் காரணம் ராகுவே ஆகும்.

மூன்றாவதாக கீழே மற்றொரு பெண்ணின் ஜாதகம்.


கன்னி லக்ன ஜாதகத்தில் லக்னத்தில் சூரியன் அமைந்து 7 ல் நிற்கும் சனியை பார்வை செய்கிறார். மீனத்தில் உச்ச குருவின் பூரட்டாதி நட்சத்திரத்தில் அமைந்த சனியுடன் சனியின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சந்திரன் அமைந்துள்ளார். சந்திரன் ராசியாதிபதி குருவுடன் லக்னத்திற்கு 11 ல் உச்ச நிலை பெற்ற குருவுடன் பரிவர்த்தனை பெற்று அமைந்துள்ளார். குரு சனியின் பூச நட்சத்திரத்தில் அமைந்து சனியுடன் சாரப்பரிவர்தனை பெற்றுள்ளது. இத்தகைய அமைப்பால் ஜாதகி அரசுப்பணியில் உள்ளார். ஜாதகி தனது வேளையில் சிறப்பாக செயல்படுபவர். தைரிய ஸ்தானாதிபதியும் தைரிய காரகனுமான செவ்வாய் நீச பங்கம் பெற்றதால் துணிச்சல் நிறைந்தவர். ஜாதகிக்கு தற்போது சந்திரதிசையில் ராகு புக்தி நடந்து வருகிறது. ஜாதகத்தில் ராகுவுக்கு முன்னால் அமைந்த சந்திரனை நோக்கி ராகு வரும் நிலையில் அமைந்துள்ளது. ராகு லக்னத்திற்கு 8 ல் அமைந்து புக்தி நடத்துகிறது. இந்த அமைப்பால் தைரியம் நிறைந்த ஜாதகி தற்போது மனோ ரீதியாக மிகுந்த பயம் கொண்டவராக உள்ளார். அந்த பயமும் ராகு அமைந்த 8 ஆம் பாவத்தால் தனது ஆயுள் பற்றியதாகவும், பரிவர்தனைக்குப்பின் மீனதிற்கு வரும் குருவால் தனது குழந்தையின் மீதானதாகவும் உள்ளது.  தைரியம் நிறைந்த ஜாதகியின் மனோபலத்தை ராகு உலுக்குகிறார் என்றால் அது மிகையல்ல.

நான்காவதாக ஒரு சிறுவனின் ஜாதகம் கீழே.


துலாம் லக்ன ஜாதகத்தில் தந்தையை குறிக்கும் சூரியன் சந்திரனின் திருவோணம் சாரம் பெற்று மகரத்தில் நிற்கிறார். சூரியனை ஜல ராசியான கடகத்தில் வக்கிர கதியில் அமைந்த குரு பார்க்கிறார். ஜாதகருக்கு ராகு திசையில்  சூரிய புக்தி நடக்கிறது. சூரியனுக்கு திரிகோணத்தில் அமைந்த ராகுவும் சூரியன் அமைந்த அதே சந்திரனின் ரோகிணி சாரம் பெற்று நிற்கிறார். ராகுவோடு வக்கிர சனியும் இணைந்து 8 ல் நிற்கும் அமைப்பை சாக்கடை, சாராயம் காய்ச்சுமிடம் போன்றவற்றை குறிப்பிடும் விருசிகத்திலிருந்து  செவ்வாயும் கேதுவோடு இணைந்த சுக்கிரனும் பார்க்கின்றன. ஜாதகத்தில் சுக்கிரன் விருச்சிகத்தில் தந்தையை குறிப்பிடும் 9 ஆமதிபதி புதனின் கேட்டை நட்சத்திரத்தில் நின்று புதன் தனுசுவில் சுக்கிரனின் பூராட நட்சத்திரத்தில் நின்று சாரப்பரிவர்த்தனை பெறுகிறது. 

ஜாதகரின் தந்தை மதுவெனும் புதை குழியில் விழுந்து எழுந்து நிற்க முடியாமல் தத்தளிக்கிறார். அவரை மதுவிலிருந்து விடுவித்து அவரது உயிரை காப்பாற்ற உறவுகள் முனைகின்றன. ஆனால் ஜாதகரின் தந்தை அதிலிருந்து வெளியே வர முடியாதவராக காட்சியளிக்கிறார்.  இந்த ஜாகதகத்தில் ராகுவும் சூரியனும் நின்ற நட்சத்திராதிபதி ஒருவரே ஆகி  ராகு சூரியனுக்கு திரிகோணத்தில் உச்சம் பெற்றதாலும் ஜாதகரின் தந்தை மீது மிகுந்த ஆதிக்கம் செலுத்துகிறது. ராகு இங்கு முன்னர் கண்ட ஜாதகங்கள் போல் தனித்த நிலையில் அமையாமல் கிரக சேர்க்கையில் அமைந்து பாவிகள் பார்வை பெறுகிறது. இதனால் இங்கு ராகுவிற்கு பாவ வலு கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் அடுத்த வாரப்பதிவில் சிந்திப்போம்,

அதுவரை வாழ்த்துக்களுடன்,
அன்பன்,
பழனியப்பன்,
கைபேசி: 08300124501.