Monday, 21 October 2019

அஷ்டவர்க்கத்தை கையாள்வது எப்படி?


ஜோதிடத்தில் பலன் கூற பல்வேறு யுக்திகள் பயன்படுத்தப்படுகிறது. அவற்றுள் ஒரு யுக்திதான் அஷ்டவர்க்கத்தை பயன்படுத்தி ஜாதக பலன் காணும் முறையாகும். பலன் கூற இது ஒரு எளிய முறையாக தெரிந்தாலும் அஷ்டவர்க்க கணிதம் போடுவதற்கு தேர்ந்த நுட்பம் வேண்டும். தற்போது இப்பணியை கணினிகள் துல்லியமாக செய்வதால் இது எளிதாகிறது. ஆனால் அஷ்டவர்க்க முறையில் பலன் காண வாக்கிய முறை கணிதமே சிறந்தது என கூறப்படுகிறது. அஷ்டவர்க்கத்தில் சுப பரல்கள் அசுப பரல்கள் என்றும் வகைப்பாடு உண்டு.  அதில் சுப பரல்கள் என்பது மொத்தம் 337 ஆகும். அசுப பரல்கள் என்பது மொத்தம் 335 ஆகும். இந்தப் பரல்கள் உண்மையில் ஒரு மனிதன் வாழத்தேவையான பிரபஞ்சத்திலிருந்து கிரகிக்கும் ஒளிப்புள்ளிகளே ஆகும். ஜாதக பலனறிய சுப பரல்கள் மட்டுமே பயன்படுகிறது. அசுப பரல்கள் பயன்படுவதில்லை. மனிதராக பிறந்த அனைவருக்கும் இந்த 337 பரல்கள் பகிர்ந்தளிக்கப்பட்டிருக்கும். மனிதருக்கு மனிதர் ராசியில் இந்த பரல்களின் எண்ணிக்கைதான் மாறுமே தவிர மொத்த எண்ணிக்கை நிச்சயம் 337 தான் வரும்.


மொத்தமுள்ள 337 பரல்களையும் 12 ராசி மண்டலத்திற்கும் பகிர்ந்தால் சராசரியாக 28 பரல்கள் ஒரு ராசிக்கு வரும். இப்படி அமையப்பெற்ற ஜாதகர் வாழ்வில் சராசரியாக அணைத்து விஷயங்களையும் அடைவார் எனலாம். ஆனால் எல்லோருக்கும் இப்படி அமைவதில்லை. மேலும் எல்லோரும் சராசரி மனிதரும் இல்லை. இதனால் சரிவிகிதமாக இப்பரல்கள் அமையாமல் மாறி அமையும் சூழல் உண்டு. அப்படி ஒரு ராசிக்கு பரல்கள் கூடினால் மற்றொரு ராசியில் அது குறையும். ஏனெனில் மொத்த பரல்களின் எண்ணிக்கை 337 தான். ஒரு ராசியில் உள்ள பரல்களின் எண்ணிக்கையை வைத்து அந்த ராசி குறிப்பிடும் பாவத்தின் வலிமையை அறியலாம்.  அதிகபட்சமாக ஒரு ராசிக்கு 56 பரல்கள் வரை கூடலாம். 23 பரல்களுக்கு குறைவாக ஒரு பாவம் பரல்களை பெற்று அதன் அதிபதி வலுவடையாவிட்டால் அந்த பாவம் கடுமையாக பாதிப்படையும்.   அதேபோல ஒரு கிரகத்திற்கு சுய பரலாக ௦ முதல் 8 வரை மாறுபட்டு அமையலாம். 4 என்பது ஒரு கிரகத்திற்கு அமையும் சராசரி பரல் எனலாம்.  4 ஐ விட அதிகமானால் அது வலிமையடையும், 4 ஐ விட சுய பரல்கள் குறைந்து இதர வகைகளில் அக்கிரகம் வலிமையடையாதபோது அக்கிரகம் செயலற்ற நிலையில் அமைந்துள்ளதாக எடுத்துக்கொள்ளலாம். பரல்களை வைத்து ஒரு தனிப்பட்ட கிரகத்தின் வலிமையை அறியலாம். இவை அனைத்துமே திசாபுக்திகளில் எப்படி ஒரு பாவமும் ஒரு கிரகமும் செயல்படும் என்பதை அளவிடவே ஆகும்.

  இப்பதிவில் நாம் அஷ்டவர்க்கத்தை பயன்படுத்தி ஜாதகங்களை எவ்வாறு ஆராய்வது என்று பார்ப்போம்.

கீழே ஒரு ஆணின் ஜாதகம்.

லக்னாதிபதி லக்னத்தில் ஆட்சி, உச்சம், திக்பலம் என்ற அமைப்பில் ஆதீத வலுவடைந்துள்ளது.  ஆனால் லக்னத்தைவிட ஜீவன காரகன் சனி சந்திரனுடன் பரிவர்த்தனையாகி சனி நிற்கும் கடக ராசிக்கே   அதிகமாக 38 பரல்கள் கிடைத்துள்ளது. சனிக்கும் கிரகங்களிலேயே சுய பரல்களில் அதிகமாக 7 பரல்கள் பெற்று அமைந்துள்ளது.   சனியின் அமைப்பால் வெளிநாட்டிலும், புதனின் அமைப்பால் மருத்துவராகவும் ஜாதகர் சிறப்பாகப் பணிபுரிந்து பொருளீட்டுகிறார். இங்கு லக்ன பாவத்திற்கு பரல்கள் குறைவு ஆனால் லக்னாதிபதி வலுவாக உள்ளதால் லக்ன பாவம் குறைந்த பரல்கள் பெற்றாலும் பாதிக்காது என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

இரண்டாவதாக கீழே மற்றொரு ஜாதகம்.

இந்த ஜாதகத்தில் 4 மற்றும் 5 ஆம் பாவங்கள் அதிகமாக 33 பரல்களை பெற்றுள்ளன. 5 ஆவது பாவத்தில் ஒரு உச்ச கிரகம்.  சூரியன் அதிக பட்சமாக சுய பரல்களில் 6 பரல்களை பெற்றுள்ளது. சூரியன் நின்ற வீட்டதிபதி சூரியனுக்கு லாபத்தில் உச்சம். 5 ஆவது பாவம் வலுவடைந்தால் அரசுவகை நன்மை. சூரியன் வலுவடைந்தால் அரசன் உதவுவார். சனி குறைந்த  பரல் பெற்றிருந்தாலும் 5 ஆமிடம் மற்றும் சூரியனின் அமைப்பால் ஜாதகர் அரசுப்பள்ளி ஆசிரியராக பணி புரிந்தார். இந்த ஜாதகத்தில் சனிக்கு பரல்கள் 2 தான் ஆனால் சனி உச்சன் சந்திரனின் பரிபூரண பார்வையை வாங்குகிறார். மேலும் சனி நின்ற பாவாதிபதி செவ்வாய் நீச பங்கமாகியதால் தான் நின்ற வீட்டையும் அதிலுள்ள கிரகத்தையும் வலுவூட்டுவார் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். இந்த ஜாதகர் சனி திசையில்தான் நல்லாசிரியர் விருது பெற்று பிறகு பணி ஓய்வு பெற்றார். ஒரு பாவத்தின் மற்றும் ஒரு கிரகத்தின் சுய வர்க்க பரல்களை  பரல்கள் குறைவை வைத்து  மட்டும் ஒரு பாவத்தின், ஒரு கிரகத்தின் செயல்பாட்டை சரியாக ஆராயாமல் மதிப்பிட்டுவிடக்கூடாது. இதர வகைகளில் அந்த பாவமும் கிரகமும் என்ன வகையான தாக்கத்தை எதிர்கொள்ளும் என ஆராய்ந்தே பலனுரைக்க வேண்டும்.

மூன்றாவதாக மற்றொரு ஆணின் ஜாதகம் கீழே.

சிந்தனை ஸ்தானமான 5 ஆமிடத்தில் 5 ஆமதிபதி ஆட்சி பெற்று குரு பார்வை பெறுகிறது. 5 ஆமதிபதி செவ்வாயின் மிருக சீரிஷ நட்சத்திரத்தில் அமைந்த கேது 5 ஆமிடத்தை நோக்கி வருகிறது. கேது நின்ற பாவம் அதிக பட்சமாக 35 பரல்களையும் கிரகங்களில் குரு சுய வர்க்கத்தில் அதிகபட்சமாக 7 பரல்களையும் பெற்றுள்ளது. இவை இரண்டும் ஆன்மீக கிரகங்களாகி சிந்தனை ஸ்தானமான 5 ஆம் பாவ தொடர்புகொண்ட காரணத்தால் ஜாதகர் உலகம் போற்றிய துறவியாகத் திகழ்ந்தார். சுக்கிரனும், 7 ஆமதியும் 7 க்கு 8 ல் மறைந்துவிட்டனர்.  குரு 4 பாகையில் நின்று தாரா காரகனாகி பாவகர்தாரி யோகம் பெற்றதனால் குரு  7 ஆமிடத்தை பார்த்தும் திருமணம் செய்துகொள்ள எண்ணமின்றி செய்துவிட்டது.  ஜாதகர் வீரத்துறவி விவேகானந்தர். 

நான்காவதாக ஒரு பெண்மணியின் ஜாதகம் கீழே.

 லக்னாதிபதி குரு, மாந்தியுடன் இணைந்து நீசம் பெற்று பாவ கர்தாரி யோகத்தில்  உள்ளார். சர்ப்ப கிரகங்களான ராகுவும் கேதுவும்  இதர அணைத்து கிரகங்களோடும் தொடர்புகொள்கின்றன. கேது ஆறாமிடத்தை நோக்கிய நிலையில் உள்ளதால் 6 ஆமிடத்தில் உள்ள அனைத்து கிரகங்களும் கேதுவால் பாதிக்கப்படும். ஜாதகத்தில் சுக ஸ்தானமான மீனத்தில் அதிகப்பட்சமாக 40 பரல்கள் அமைந்துள்ளன. குருவின் பூரட்டாதி சாரம் பெற்ற   அஷ்டமாதிபதி சந்திரனுக்கு அதிகபட்சமாக 6 பரல்கள் கிடைத்திருக்கிறது. லக்னாதிபதி குரு 5 பரல்கள் பெற்று சந்திரனுடன் சாரப்பரிவர்தனையில் உள்ளார். சுக ஸ்தானம் அதிக பரல்கள் பெற்றாலும் அதன் அதிபதி குரு  பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பால்யத்தில் கடந்த குரு  திசையில் சில கண்டங் களோடு ஜாதகி உயிர் தப்பினார். அதை அடுத்து வந்த சனி திசையும், புதன் திசையும் கேதுவால் தீண்டப்பட்ட திசைகளாகின்றன. தற்போது ஜாதகி பாதகத்தில் நிற்கும் கேது திசையில் உள்ளார். இந்த அமைப்பின்  பலனாவது, ஜாதகி தனது பிறப்பு முதல் இந்நாள் வரை வறுமையிலேயே வாடுகிறார்.  இங்கு பாவம் அதிக பரல் பெற்று பலம் பெற்றாலும் பாவதிபதி வலுவிழந்து முடங்கியிருப்பதால் பயனில்லை என்பதை புரிந்துகொள்ளவேண்டும். 

திசா புக்தி பலன்களை மேலும் நுட்பமாக ஆராய, திசா கிரகம் நிற்கும் பாவத்திற்கும் அதன் சுய பாவங்களுக்கும் இதர கிரகங்கள் வழங்கும் பரல்களை ஆராய்வது மேலும் சிறப்பாகும்.

மீண்டும் அடுத்த பதிவில் சந்திபோம்,
அதுவரை வாழ்த்துக்களுடன்,
அன்பன்,
பழனியப்பன்.
கைபேசி: 8300124501 

No comments:

Post a Comment