Sunday, 6 October 2019

ராகு போடும் ரங்கோலிகள்.


ராகு – கேதுக்கள் நிழல் கிரகங்கள், மாய கிரகங்கள், பொய்யான தோற்றத்தையும் மாய வலைகளையும் வீசி அதில் மனிதர்களை சிக்கவைத்து அவர்களின் கர்மங்களை கழிக்க வைத்து ஒருவரது பூர்வ ஜென்ம கணக்கை நேர் செய்பவை. உண்மையில் மனிதர்களின் ஜென்மாந்திர கர்மங்களின் சாட்சி பூதங்கள் இவை. ஒருவரது ஜாதகத்தில் நல்ல முறையில் அமைத்தால் அளப்பரிய நன்மைகளை வாரி வழங்குபவை. மின்னியல், அணுவியல், மின்னணுப் பொறியியல், மருத்துவம், திரைத்துறை, தொலைக்காட்சி, ஜோதிடம் , ஆன்மிகம், விண்வெளி போன்ற பல்வேறு துறைகளில் ஆதிக்கம் செலுத்துபவை. இத்துறைகள் இன்று முக்கிய பொருளாதாரத் துறைகள் என்பது கவனிக்கத்தக்கது.  ராகு-கேதுக்களின் சுப ஆதிக்கம் பெற்றவர்களை இத்துறைகளில் ஈடுபடுத்தி அவர்களை பொருளாதார ரீதியாக உயர்த்துபவை.



ராகு-கேதுக்கள் நிழல் கிரகங்கள் என்பதால் ஜாதகத்தில் தன, ஜீவன கிரகங்களுடனும் தன ஜீவன பாவங்களுடனும் அவற்றின் அதிபதிகளுடனும்  தொடர்புகொண்டால் ஒரு ஜாதகனுக்கு பொருளாதார ரீதியாக மிகச்சிறந்த உயர்வுகளை வழங்கும். பொருளாதாரம் என்பது உயிரற்ற ஜடக்காரணியாகும். என்பதால் நிழல் கிரகங்களான இவை  ஜடக்காரணிகளை பெரும்பாலும் கடுமையாக பாதிப்பதில்லை. அதே சமயம் இவை ஜாதகத்தில் தண்டனை வழங்கும் விதத்தில் அமைந்திருந்தால் பேய், பிசாசு, ஏவல், பில்லி சூனியம் என்பது போன்ற பல்வேறு மாய விஷயங்களை நினைத்து பயம்கொள்ள வைத்து பைதியக்காரர்களாக்குகின்றன  என்பதும் உயிர்க்காரணிகளான குடும்ப உறவுகளை  கடுமையாக பாதிக்கின்றன என்பதும் மறுக்க முடியாத உண்மை. ராகு ஏற்படுத்தும் மாற்றங்களை கேது சீர்செய்யும் வல்லமை படைத்தது. இப்பதிவில் நாம் ராகுவில் செயல்பாடுகளை ஆராய்வோம்.  

கீழே ஒரு ஆணின் ஜாதகம்.


தனுசு லக்ன ஜாதகத்தில் ஜீவன காரகன் சனி 12ஆமிடமும் ஜல ராசியுமான விருச்கிகத்தில் புதனின் கேட்டை நட்சத்திரத்தில் நிற்கிறது. லக்னம் கேதுவின் மூலம் நட்சத்திரத்தில் அமைந்துள்ளது. வேலை பாவம் எனப்படும் 6 ஆம் பாவத்தில் சந்திரன் கார்த்திகை நட்சத்திரத்தில் உச்சமாகி நிற்கிறது. சந்திரனின் சாரநாதன் சூரியன் சந்திரனின் ஹஸ்த நட்சத்திரத்தில் சாரப் பரிவர்த்தனை பெற்று லக்னத்திற்கு திக் பலத்தில் மிகச் சிறப்பாக அமைந்துள்ளது. லக்னாதிபதியும் முதன்மையான ஜலக்கிரகமான குரு கேதுவின் அஸ்வினி சாரம் பெற்று வக்கிர கதியில் நிற்கிறது. குரு வர்கோத்தமம் பெற்று நவாம்சத்தில் குருவின் வீட்டில் செவ்வாய் அமைந்தது சிறப்பு. நான்காவது பாவத்தில் ஜல ராசியான மீனத்தில் தனித்த நிலையில் சனியின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் நின்று ராகு திசை நடத்துகிறது.  சனி புதனின் கேட்டை நட்சத்திரத்தில் செவ்வாயின் வீட்டில்  நிற்பதால் புதன் சனி தொடர்பு குறிக்கும் கணினி மென்பொருளாளராக கர்ம ஸ்தானத்தில் நிற்கும் திக்பல சூரியன் குறிக்கும் அமெரிக்காவில் பணியாற்றுகிறார். கேந்திரப்பாவிகள் சிறப்பாக செயல்படுவர் என்ற விதிப்படி ராகு லக்ன கேந்திரத்தில் லக்னாதிபதியின் மற்றொரு வீட்டிலேயே அமைந்து திசை நடந்துவதால் சிறப்பான பலனை தற்போது தனது திசையில் அளித்து வருகிறது.

இரண்டாவதாக மற்றொரு பெண்ணின் ஜாதகம்.


மிதுன லக்ன ஜாதகத்தில் லக்னத்தில் ராகு உச்சத்திற்கு சமீபமாக நிற்கிறது. லக்னாதிபதி புதன் சுய சாரமான ரேவதியில் நீசம் பெற்று அமைந்துள்ளார். இந்த ஜாதகத்திலும் சூரியன் லக்னத்திற்கு 1௦ ல்  திக்பலத்தில் அமைந்துள்ளார். செவ்வாயும் வர்கோத்தமம் பெற்ற குருவும் பரிவர்த்தனை பெற்று அமைந்துள்ளனர். சனி தனது மூலத்திரிகோண வீடான கும்பத்தில் ராகுவிற்கு திரிகோணத்தில் ராகு சாரம் பெற்று அமைந்துள்ளார். 1௦ ஆமிட அமைப்பால் ஜாதகி நிலத் தரகராகவும்,  கல்விக்கூடங்களுக்கு நிதி ஆதாரங்களை ஏற்பாடு செய்து தரகு பெறுபவராகவும் செயல்படுகிறார். அதே சமயம் ஜீவன காரகன் சனி ராகுவுடன் தொடர்பு கொள்வதால் ரைஸ் புல்லிங், மண்ணுள்ளிப் பாம்பு போன்ற வகையிலும் தனது வருமானத்தை அடைய முனைகிறார். இதற்குக் காரணம் ராகுவே ஆகும்.

மூன்றாவதாக கீழே மற்றொரு பெண்ணின் ஜாதகம்.


கன்னி லக்ன ஜாதகத்தில் லக்னத்தில் சூரியன் அமைந்து 7 ல் நிற்கும் சனியை பார்வை செய்கிறார். மீனத்தில் உச்ச குருவின் பூரட்டாதி நட்சத்திரத்தில் அமைந்த சனியுடன் சனியின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சந்திரன் அமைந்துள்ளார். சந்திரன் ராசியாதிபதி குருவுடன் லக்னத்திற்கு 11 ல் உச்ச நிலை பெற்ற குருவுடன் பரிவர்த்தனை பெற்று அமைந்துள்ளார். குரு சனியின் பூச நட்சத்திரத்தில் அமைந்து சனியுடன் சாரப்பரிவர்தனை பெற்றுள்ளது. இத்தகைய அமைப்பால் ஜாதகி அரசுப்பணியில் உள்ளார். ஜாதகி தனது வேளையில் சிறப்பாக செயல்படுபவர். தைரிய ஸ்தானாதிபதியும் தைரிய காரகனுமான செவ்வாய் நீச பங்கம் பெற்றதால் துணிச்சல் நிறைந்தவர். ஜாதகிக்கு தற்போது சந்திரதிசையில் ராகு புக்தி நடந்து வருகிறது. ஜாதகத்தில் ராகுவுக்கு முன்னால் அமைந்த சந்திரனை நோக்கி ராகு வரும் நிலையில் அமைந்துள்ளது. ராகு லக்னத்திற்கு 8 ல் அமைந்து புக்தி நடத்துகிறது. இந்த அமைப்பால் தைரியம் நிறைந்த ஜாதகி தற்போது மனோ ரீதியாக மிகுந்த பயம் கொண்டவராக உள்ளார். அந்த பயமும் ராகு அமைந்த 8 ஆம் பாவத்தால் தனது ஆயுள் பற்றியதாகவும், பரிவர்தனைக்குப்பின் மீனதிற்கு வரும் குருவால் தனது குழந்தையின் மீதானதாகவும் உள்ளது.  தைரியம் நிறைந்த ஜாதகியின் மனோபலத்தை ராகு உலுக்குகிறார் என்றால் அது மிகையல்ல.

நான்காவதாக ஒரு சிறுவனின் ஜாதகம் கீழே.


துலாம் லக்ன ஜாதகத்தில் தந்தையை குறிக்கும் சூரியன் சந்திரனின் திருவோணம் சாரம் பெற்று மகரத்தில் நிற்கிறார். சூரியனை ஜல ராசியான கடகத்தில் வக்கிர கதியில் அமைந்த குரு பார்க்கிறார். ஜாதகருக்கு ராகு திசையில்  சூரிய புக்தி நடக்கிறது. சூரியனுக்கு திரிகோணத்தில் அமைந்த ராகுவும் சூரியன் அமைந்த அதே சந்திரனின் ரோகிணி சாரம் பெற்று நிற்கிறார். ராகுவோடு வக்கிர சனியும் இணைந்து 8 ல் நிற்கும் அமைப்பை சாக்கடை, சாராயம் காய்ச்சுமிடம் போன்றவற்றை குறிப்பிடும் விருசிகத்திலிருந்து  செவ்வாயும் கேதுவோடு இணைந்த சுக்கிரனும் பார்க்கின்றன. ஜாதகத்தில் சுக்கிரன் விருச்சிகத்தில் தந்தையை குறிப்பிடும் 9 ஆமதிபதி புதனின் கேட்டை நட்சத்திரத்தில் நின்று புதன் தனுசுவில் சுக்கிரனின் பூராட நட்சத்திரத்தில் நின்று சாரப்பரிவர்த்தனை பெறுகிறது. 

ஜாதகரின் தந்தை மதுவெனும் புதை குழியில் விழுந்து எழுந்து நிற்க முடியாமல் தத்தளிக்கிறார். அவரை மதுவிலிருந்து விடுவித்து அவரது உயிரை காப்பாற்ற உறவுகள் முனைகின்றன. ஆனால் ஜாதகரின் தந்தை அதிலிருந்து வெளியே வர முடியாதவராக காட்சியளிக்கிறார்.  இந்த ஜாகதகத்தில் ராகுவும் சூரியனும் நின்ற நட்சத்திராதிபதி ஒருவரே ஆகி  ராகு சூரியனுக்கு திரிகோணத்தில் உச்சம் பெற்றதாலும் ஜாதகரின் தந்தை மீது மிகுந்த ஆதிக்கம் செலுத்துகிறது. ராகு இங்கு முன்னர் கண்ட ஜாதகங்கள் போல் தனித்த நிலையில் அமையாமல் கிரக சேர்க்கையில் அமைந்து பாவிகள் பார்வை பெறுகிறது. இதனால் இங்கு ராகுவிற்கு பாவ வலு கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் அடுத்த வாரப்பதிவில் சிந்திப்போம்,

அதுவரை வாழ்த்துக்களுடன்,
அன்பன்,
பழனியப்பன்,
கைபேசி: 08300124501.

1 comment: