Saturday, 18 April 2020

அஸ்தங்க ஆச்சரியங்கள்!



சூரியனுக்கு மிக நெருக்கமாக அமையும் கிரகங்கள் தங்கள் கதிர்வீச்சை  சூரியனிடம் இழந்து விடும். இதுவே சூரியனால் கிரகங்களுக்கு ஏற்படும் அஸ்தங்க தோஷமாகும். இதில் சூரியனைத்தவிர மற்றொரு முக்கிய ஒளி கிரகமான சந்திரனுக்கும்  நிழல் கிரகங்களான ராகு-கேதுக்களுக்கும் அஸ்தங்க தோஷம் இல்லை.  ஏனைய செவ்வாய் ,புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய 5 கிரகங்களுக்கும் அஸ்தங்க தோஷம் உண்டு. அஸ்தங்க தோஷம் ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு பாகையில் அமையும் என்றாலும் சூரியனுக்கு 5 பாகை அளவில்தான் பாதிப்பு அதிகம் இருக்கும். அதிலும் சூரியனுக்கு 3 பாகை நெருக்கமாக அமையும் சூழலில் அது கடும் தோஷமாக எடுத்துக்கொள்ளப்படுகிறது.   கிரகங்களில் சூரியனுக்கு சம கிரகமான புதனுக்கு சூரியனால் அஸ்தங்க தோஷம் இல்லை என்ற வலுவானதொரு கருத்து ஜோதிட அறிஞர்களிடம் நிலவுகிறது. புதன் புத்தி காரகன் என்பதால் ஒருவருக்கு பள்ளிக்கல்வி பாதிக்கப்பட்டாலும் அனுபவம் என்ற கல்வியால் அது வாழ்வில் ஜாதகரை உயர்த்திவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

அஸ்தங்கமடையும் கிரகங்கள் சூரியனுக்கு முன்னாள் சென்று அமையும்போது சூரியனுக்கு பின்னால் அமைவதால் ஏற்படும் பாதிப்பைவிட குறைவான பாதிப்பையே அடைகின்றன. அஸ்தங்கமடையும் கிரகங்களின் காரகங்களும் ஆதிபத்தியமும் பாதிப்பை அடையும். இவ்விரண்டில் ஒன்று கடுமையான பாதிப்பாக இருந்தால் மற்றொன்று பாதிக்காது. அதாவது காரகம் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுவிட்டால் பாவம் பாதிக்காது. பாவம் கடும் பாதிப்பை சந்திக்க நேர்ந்தால் காரகம் பாதிக்காது.  அஸ்தங்க கிரகங்களின் சாரம் பெற்ற கிரகங்களும் பாதிப்பை அடையும். இதிலும் சில ஆச்சரியங்களும் உண்டு. அவற்றை ஆராய்வதே இப்பதிவின் நோக்கம்.


கீழே ஒரு ஆணின் ஜாதகம்.

  


சுக்கிரன் சூரியனுக்கு 5 பாகைகள் முன்னால் ரோகிணி-1 ல் நிற்கிறது. விருட்சிக லக்னாதிபதி செவ்வாய் மிருகசீரிஷம் -1 ல் நின்று ரோகிணி-3 ல் நிற்கும் சூரியனால் அஸ்தங்கப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் ஜாதகரின் வைராக்கியம் இல்லற  விஷயத்தில் பாதிக்கப்படுகிறது.  களத்திர பாவத்தில் இரு நெருப்பு ராசி கிரகங்கள் நிற்பதால் ஜாதகரின் இல்லற ரீதியான எதிர்பார்ப்புகள் மனைவியிடன் நிறைவேறவில்லை. சுக்கிரனுக்கும் செவ்வாய்க்கும் நடுவில் இங்கு சூரியன் அமைந்துள்ளார். சூரியன் , சுக்கிரன் இருவரும் திருட்டு உறவு காரகன் சந்திரனின் சாரம் பெற்றுள்ளதால் மனைவியிடம் நிறைவேறாத தனது இல்லற ஆசைகளை திருட்டு உறவின் மூலம் சின்ன வீடு ஏற்படுத்திக்கொண்டு அடைகிறார். 7 ஆமிட பாவ கிரகங்கள் செவ்வாயும் சூரியனும் லக்னத்திற்கு நன்மையை செய்தாக வேண்டிய பாவாதிபதிகளாக அதாவது லக்னாதிபதியும் லக்னத்திற்கு திக்பலம் தர வேண்டிய 1௦ ஆமதிபதியுமாவதால் குடும்ப வாழ்வு தடையாகவில்லை. ஆனால் பாதகாதிபதி தொடர்பால் பாதகாதிபதியின் காரக அடிப்படையில் தவறு நடக்கிறது.

கீழே இரண்டாவது ஆணின் ஜாதகம்.


கன்னி லக்ன ஜாதகத்தில் லக்னாதிபதி புதன் தனது மூன்று நண்பர்களுடன் இணைந்து லக்னத்திற்கு திரிகோணத்தில் நிற்கிறார். வித்யா காரகன் புதன் சூரியனின் கார்த்திகை-3 ல் நின்று அதே கார்த்திகை-3 ல் நிற்கும் விரையாதிபதி சூரியனால் அஸ்தங்கப்படுத்தப்பட்டுள்ளார். இங்கு நண்பர் சூரியனின் சாரத்திலேயே புதன் அஸ்தங்கமடைதுள்ளதால் அஸ்தங்க தோஷம் புதனை பாதிக்கவில்லை. 5 ஆமிடத்தில்  நீசமான வித்யா ஸ்தானாதிபதி (4 ஆமதிபதி)  குருவின் 5 ஆம் பார்வை 9 ஆமிட கிரகங்களுக்கு கிடைக்கிறது என்பது இங்கு நல்லதொரு அம்சம். ஜாதகருக்கு புதனின் காரகமான கல்வி அஸ்தங்கத்தால் பாதிக்கவில்லை. ஜாதகர் தமிழில் MA; MEd; MPhil முடித்து அரசுப்பள்ளியில் தமிழ்  ஆசிரியராக பணிபுரிகிறார்.

கீழே மூன்றாவதாக ஒரு பெண்ணின் ஜாதகம்
தாய்மைக்கு உரிய கிரகம் என்றால் அது சந்திரன்தான். அதனால்தான் சந்திரனை “மாத்ரு காரகன்” என ஜோதிடம் போற்றுகிறது.  சந்திரன் வலுவான ஜாதகர்களுக்கு தாய்மை உணர்வு அதிகமாக இருப்பதை காணலாம். லக்னமே சந்திரனுக்கு உரிய கடக லக்னம்தான். குடும்ப பாவாதிபதி சூரியன் லக்னதிற்கு 6 ல் தனுசுவில் மூலம்-3 ல் நின்று, மூலம்-4 ல் நிற்கும் குடும்ப காரகன்  குருவை அஸ்தங்கம் செய்கிறார். குடும்ப காரகன் அஸ்தங்கமடைந்ததால் குடும்பம் வாழ்வு இல்லை என்றொரு நிலை ஜாதகிக்கு ஏற்பட்டது. ஆனால் குரு, சூரியன் இருவரும் ஞான காரகன் கேது சாரம் பெற்றதால் கேது ஜாதகிக்கு உலகமே தன்  குடும்பம் என உணரவைத்தார்.  ஜாதகி தன்னை உலக மக்களுக்கு தாயாக  மனதார எண்ணினார். இது ஒரு அபூர்வ உணர்வு. ஜாதகியின் கணவரும் ஜாதகியை தான் வணங்கும் அன்னை காளியின் அம்சமாகவே எண்ணி ஜாதகியை பூஜை செய்தார். “மகளே, யாரெல்லாம் வந்திருக்கிறார்களோ, யாரெல்லாம் வரவில்லையோ, இனி யாரெல்லாம் வரப்போகிறார்களோ, அந்த என் பிள்ளைகளுக்கெல்லாம் என் அன்பை தெரிவித்துவிடு. என் நல்லாசிகள் அவர்களுக்கு எப்போதும் உண்டு!” என்று உலக மக்களுக்கு தன் கடைசி செய்தியை தெரிவித்துவிட்டு இறையில் கலந்த அன்னை  சாரதா தேவியின் ஜாதகம் இது.

 கீழே நான்காவதாக ஒரு ஆணின் ஜாதகம்.
இந்த ஜாதகர் என்னுடன் பணிபுரிந்தவர். குடும்ப, களத்திர ஸ்தானாதிபதி மற்றும் களத்திர காரகன் ஆகிய பொறுப்புகளுக்கு அதிபதியான சுக்கிரன், 7 க்கு பாதகாதிபதியான சூரியனால் அஸ்தங்கப்படுத்தப்பட்டுள்ளார். சூரியன் பூராடம்-3 ல் நிற்கிறது. சுக்கிரன் பூராடம் – 2 ல் சுய சாரம் பெற்று அம்சத்தில் நீசமடைந்துள்ளார். இந்த ஜாதகர் பல்வேறு முயற்சிகள் எடுத்தும் 41 வயதான ஜாதகருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. காரணம் களத்திரகாரன் சுக்கிரனை அஸ்தங்கப்படுதுவது களத்திர பாவாதிபதி சுக்கிரனுக்கு  பகைகிரகம் மட்டுமல்ல களத்திர ஸ்தானமான துலாதிற்கு பாதகஸ்தானாதிபதி ஆகவும் சூரியன் வருவதே ஆகும்.

கீழே ஐந்தாவதாக மற்றொரு ஆணின் ஜாதகம்.


கடக லக்னத்திற்கு 2 ஆமதிபதி சூரியன் சுவாதி-4 ல் நின்று விசாகம்-2 ல் நிற்கும் 7 ஆமதிபதியும் ஜீவன காரகனுமான சனியை அஸ்தங்கப்படுதுகிறார். இங்கு இது ஒரு முக்கியமான அமைப்பு. நீச சூரியன் அஸ்தங்கப்படுத்தும்  சனியால்தான் நீச பங்கமடைகிறார். எனவே சூரியன் சனியை தீவிரமாக பாதிக்க முடியாது. சனி சூரியனைவிட 5 பாகை முன்னாள் சென்றுதான் 6 ஆமதிபதி குருவின் சாரத்தில் அஸ்தங்கமடைந்துள்ளார். சூரியனும் சனியும் ஒன்றுக்கொன்று பகை கிரகங்களாக இருப்பதால் இங்கு சூரியன் சனியை பாதிப்பதைவிட சனி சூரியனை பாதிப்பதே அதிகமாக இருக்கும். சனி சூரியனோடு இணைந்ததால் அரசுத்துறையிலும் தன காரகன் குருவின் சாரம் பெற்றதால் LIC யிலும் பணியாற்றுகிறார். சூரியன் வலுக்குறைந்து சனி தொடர்பு பெறுவதால் சூரியனின் காரகமான இருதய இயக்கத்தில் ஜாதகருக்கு பாதிப்புகள் இருக்கிறது.  சனி 6 ஆமதிபதி தொடர்பு பெறுவதும் இதற்கு மற்றொரு காரணம்.

மீண்டும் அடுத்த பதிவில் விரைவில் சந்திக்கிறேன்.

அதுவரை,
வாழ்த்துக்களுடன்,

அன்பன்,
பழனியப்பன்.
கைபேசி:8300124501

Saturday, 11 April 2020

சப்தாம்சத்தை கையாள்வது எப்படி?




ஜோதிடத்தில் கிரகங்கள் மற்றும் பாவங்கள் எப்படி திசா புக்தி காலங்களில்  ஒருங்கிணைந்து செயல்படுகின்றன என்பதன் ஆதார சுருதியை கண்டுபிடித்துவிட்டால் பலன் சொல்வதில் துல்லியம் தன்னால் வந்துவிடும். இப்படி கிரகங்களும் பாவங்களும் ஒரு குறிப்பிட்ட பலனை ஜாதகருக்கு கொடுக்குமா என கண்டுப்பிடிக்க ஷட்பலம், அஷ்டவர்க்கம் போன்ற பல்வேறு யுக்திகள் கையாளப்பட்டாலும் அதற்கான வர்க்கச் சக்கரங்களைகொண்டு ஆராய்ந்து தெளிவது மிகச் சரியாக இருக்கும் என்று பண்டைய நூல்கள் கூறுகின்றன. அதற்காக ஏறத்தாழ 60 க்கும் மேற்பட்ட வர்க்க சக்கரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அவற்றை எல்லாம் எப்படி கணக்கிடுவது என்பது ஒரு புறமிருக்க மன்னர்கள் மற்றும் செல்வந்தர்கள் குடும்பதவர்களுக்கே அன்றைய ஜனன நேரம் மிகச் சரியாக கணித்து வைத்திருந்ததால் சாமான்யனுக்கு அவை பயன்படவில்லை. எனவே ராசி மற்றும் நவாம்சம் இவற்றோடு கூடுதலாக திரேக்காணம் போன்ற ஒரு சில வர்க்கங்களை மட்டும் வைத்துக்கொண்டு ஏனையவற்றை கைவிட்டுவிட்டனர். ஜோதிஷ மகரிஷி பராசரர் இப்படிப்பட்ட பல்வேறு வர்க்கங்களையும் ஆராய்ந்து தெளிந்து அவற்றில் 16 வர்க்கங்களை மட்டும் கடைபிடித்து வாழ்வின் அணைந்து விஷயங்களுக்கும் விடை காணலாம் என வகைப்படுத்தி தந்துள்ளார். இவையே சோடசாம்கள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த 16 வகை வர்க்க சக்கரங்களில் ஒருவரின் புத்திர பாக்கியத்திற்கு உரிய சப்தாம் சத்தைக்கொண்டு பலன் காண்பது எப்படி என்று இப்பதிவில் காண்போம். கணினியில் சிறந்ததொரு ஜோதிட மென்பொருளைக்கொண்டு இந்த  சக்கரங்களை வினாடிகளில் அமைத்துவிடலாம் என்றாலும் இதற்கான நல்ல நூல்களும் தற்போது வரத்துவங்கியுள்ளன. அவற்றைகொண்டு சோடச வர்க்கங்களின் அடிப்படையை தெரிந்துகொண்டால் இவற்றைக்கொண்டு ஜெனன நேரத் தவறுகளைக்கூட சரி செய்ய இயலும். 

கீழே நீங்கள் காண்பது ஒரு பெண்ணின் ஜாதகம்.


ஜாதகி 1989 துவக்கத்தில் பிறந்து 2008 இறுதியில் திருமணம் செய்தவர். 11 வருடங்கள் குழந்தையின்மையால் குடும்ப பிரிவினை வரை சென்றவர். தனுசு லக்னத்தில் பிறந்த ஜாதகம். லக்னாதிபதி குரு 6 ஆமிடத்தில் வக்கிர நிலை பெற்று 6 ,11 ஆமதிபதி சுக்கிரனோடு பரிவர்த்தனையில் உள்ளார். ஒரு ஜாதகத்தில் புத்திர காரகன் குரு வக்கிரமானால் புத்திர வகையில் தடை தாமதங்கள் மற்றும் பாதிப்புகள்  ஏற்படும். 5 ஆமதிபதி செவ்வாய் 5 க்கு விரையம் பெற்று அமைந்துள்ளதும் புத்திர வகைக்கு சிறப்பல்ல. குடும்பத்திற்கு புது வரவுகளை குறிப்பிடும் 2 ஆமிடத்தில் பாதகாதிபதி புதன் மாந்தியுடன் இணைந்து அமைந்துள்ளதும், 2 ஆமதிபதி சனி 2 க்கு விரையத்தில் லக்னத்தில் அமைந்ததும் ஒரு வகை புத்திர தடையே ஆகும். பெண்ணுக்கு 9 ஆமிடமான பாக்ய ஸ்தானமே முக்கிய புத்திர ஸ்தானமாகும். 9 ல் கேது அமைத்துள்ளதும் புத்திர தடையை குறிப்பிடுகிறது. ஆண்-பெண் இருவருக்கும் உயிரணு உற்பத்திக்கு காரக கிரகம் கால புருஷ 5 ஆமதிபதி சூரியனாகும். சூரியன் சனியோடு சேர்ந்தால் உயிரணு உற்பத்தியில் தடைகள் தாமதங்கள் ஏற்படும். கர்ப்பப்பையை குறிப்பிடும் 8 ஆம் பாவத்திற்கு பாதகாதிபதி புதனின் பார்வை விழுகிறது. கர்ப்பப்பைக்கு காரக கிரகம் சந்திரன் சனியோடு சேர்ந்து உள்ளதால் ஜாதகிக்கு கற்பப்பை சார்ந்த விஷயங்களால் புத்திரப்பேறு தடைபட வேண்டும். ஜாதகி கர்ப்பப்பை சார்ந்த பாதிப்புகளால் குழந்தை பிறப்புக்கு குறைந்த வாய்ப்புள்ளவர் என மருத்துவர்களால் அறிவிக்கப்பட்டவர்.   சுக்கிரனோடு பரிவர்தனைக்குப்பின் லக்னத்தில் குரு வந்து அமர்வது மட்டுமே ஒரு நல்ல அமைப்பாகும். இதனால் குருவின் பார்வை  5,7,9 பாவங்களில் பதிகிறது. ஜாதகிக்கு தற்போது அஷ்டமாதிபதியான சந்திர திசையில் சனி புக்தி நடக்கிறது.  சந்திரன் லக்னத்திற்கு 6, 11 க்குரிய சுக்கிரனின் பூராடம்-1 ல் நிற்கிறது. சனி கேதுவின் மூலம்-4 ல் நிற்கிறது. இந்த நிலையில் தற்போது புத்திரப்பேறுக்கான வாய்ப்புகளை பார்த்தால் மிகக்குறைவாகவே தெரிகிறது. குரு லக்னத்தில் இருப்பது ஒரு நம்பிக்கையை தருகிறது அவ்வளவே.

தற்போது புத்திர பாவத்திற்கு ஆராய வேண்டிய சப்தாம்ச சக்கரத்திற்கு வருவோம். சப்தாம்ச சக்கரத்தில் 7 ஆவது பாவத்தையும் குருவையும் பிரதானமாகக்கொண்டு குழந்தைப்பேறை ஆராய வேண்டும். ராசிச்சக்கர 5 ஆமதிபதி செவ்வாய் சப்தாம்சத்தில் குரு பார்வை பெற்று வர்கோத்தமம் பெற்றுள்ளது மிகச் சிறப்பு.    சப்தாம்ச சக்கரத்தில் 5 ஆமதிபதி சுக்கிரன் 7 ஆமிடத்தில் நிற்பதும் சிறப்பே. சப்தாம்ச குரு ராசியில் 9 ஆம் பாவத்தில் உள்ள கேதுவுடன் இணைந்துள்ளார். இதனால் புத்திரத்தடைக்கு கேதுவினால் ஏற்படும் தோஷம் கோட்சாரத்தில் குருவோடு கேது இணைவுபெறும்போது நீங்க வேண்டும் என்பது விதி. குரு வக்கிர கதியில் உள்ளதால் கேதுவின் தோஷத்தை கட்டுப்படுத்தும் தகுதி குருவிற்கு உண்டு. ஜாதகிக்கு சப்தாம்சத்தில் குரு வீட்டில் குரு  பார்வை பெற்று திசை நடத்தும் சந்திர திசையில் சப்தாம்ச பாக்யாதிபதி சனியின் புத்தியில் கடந்த மாதம் ஆண் குழந்தை பிறந்தது.

கீழே இரண்டாவதாக மற்றொரு பெண்ணின் ஜாதகம்.


இந்த ஜாதகிக்கு ஏற்கனவே ஒரு குழந்தை உள்ளது. தற்போது ஜாதகிக்கு ராகு திசையில் சுய புக்தியில் சுக்கிரன் அந்தரம் நடக்கிறது. ராகு 5 க்கு விரையத்தில் உச்ச நிலையில் அமைந்துள்ளார். இது புத்திரப்பேறுக்கு சிறப்பல்ல. அந்தர நாதன் சுக்கிரன் 5 ஆவது பாவத்தில் அமைந்துள்ளது மட்டுமே தற்போது புத்திர பாக்கியத்திற்கு தொடர்பை  ஏற்படுத்துகிறது. 2 ஆவது குழந்தை பாவமான 7 ல் சந்திரன் அந்தர நாதன் சுக்கிரனின் பூரம்-2 ல் நிற்கிறது.   மேலும் 2 ஆவது குழந்தை என்பது 7 ஆவது பாவம் என எடுத்துக்கொண்டால் 7 க்கு லாபத்தில் மிதுனத்தில் அந்தர நாதன் சுக்கிரன் அமைந்துள்ளார். ஆனால் திசா புக்தி நாதர்களை மீறி அந்தர நாதனால் செயல்பட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. அந்தர நாதன் சுக்கிரன் மேல் தற்போது கோட்சார ராகு நிற்பது இதை உறுதி செய்கிறது. சுக்கிரன் சூரியனைவிட 5 பாகைகள் முன்னாள் சென்று சூரியனால் குறைவான அஸ்தங்க தோஷத்தை பெறுகிறார். ராகு 7 ஆமிடத்தில் நிற்கும் சந்திரனின் ரோஹிணி-1 ல் நிற்கிறது. இதனால் ராகுவிற்கு 7 ஆம் பாவ தொடர்பு ஒரு வகையில் ஏற்படுகிறது. தற்போது சப்தாம்ச சக்கரத்திற்கு வருவோம்.

சப்தாம்சத்தில் திசா நாதன் ராகு லக்னத்திற்கு 9 ல் நிற்கிறது. ராகுவின் சார நாதன் சந்திரன் லக்னத்திற்கு 8 ல் ராகுவிற்கு விரையத்தில் நிற்கிறது. சந்திரனுக்கு 7 ல் மிதுனத்தில் மாந்தி நிற்கிறது. அந்தர நாதன் சுக்கிரன் 7 ஆம் பாவத்தில் நிற்கிறது. இந்நிலையில் கருத்தரிப்பது அந்தர நாதன் சுக்கிரனின் நிலையால் மட்டுமே ஏற்படும். அப்படி கருத்தரித்தால் அக்குழந்தையின் உயிருக்கு பாதிப்பை ஏற்படும் என்பது கோட்சாரத்தில் ஜனன சுக்கிரனின் மேல் தற்போது நிற்கும்  ராகுவாலும் சப்தாம்சத்தில் சந்திரனுக்கு 7 ல் நிற்கும் மாந்தியாலும் தெளிவாக தெரிகிறது. இந்த ஜாதகிக்கு 2 ஆம் புத்திரம் என்பது ராகு திசை சுய புக்தி முடிந்து சப்தாம்சத்தில் 11 ஆம் பாவதிலிருந்து  7 ஆம் பாவத்தை பார்க்கும் குரு புக்தியில் தான் ஏற்படவேண்டும். இந்நிலையை ஜாதகிக்கு அறிவுறுத்தி இருந்தாலும் ஜாதகி அதை அலட்சியப்படுத்தி கருவுற்றார். சில வாரங்களுக்குப்பிறகு குழந்தை செயல்பாட்டில் இல்லை என மருத்துவர்கள் கூற கருவை கலைத்தார். கிரகங்கள் தயவின்றி எதுவும் கிடைக்காது. அதுவும் எப்போது கிடக்குமோ அப்போதுதான்  கிடைக்கும்.

மீண்டும் மற்றொரு பதிவில் விரைவில் சந்திப்போம்.


அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,
பழனியப்பன்.
கைபேசி: 8300124501

Thursday, 2 April 2020

ஜனன ஜாதகமும் பிரசன்ன ஜாதகமும்


ஒரு ஜாதகத்தை ஆராயும்போது அந்த நேரத்திற்கு ஒரு பிரசன்ன ஜாதகத்தை குறித்து வைத்துக்கொண்டு ஜோதிடரிடம் கொடுக்கப்பட்ட ஜாதகத்தை ஆராயும்போது இரு ஜாதகத்திற்கும் ஒரு தொடர்பு நிச்சயம் இருக்க வேண்டும். ஜாதகர் ஜோதிடரைக்காண வந்த காரணத்தை அனுமானிக்க ஜோதிடத்தில் பல்வேறு யுக்திகள் கையாளப்படுகின்றன. அப்படிப்பட்ட யுக்திகள் மூலம் காரணத்தை அறிய இயலாவிட்டாலும் அவை தவறாகக் கணிக்கப்பட்ட ஜாதகமாகவோ அல்லது போலி ஜாதகமாகவோ இருக்க வாய்ப்ப்புண்டு. பொதுவாக ஒரு ஜாதகத்தை ஆராயும்போது ஜாதகத்தின் அமைவிற்கேற்ப ஜாதகரின் நிலை உள்ளதா என அறிந்து ஜாதகத்தின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். திசா – புக்திகளுகேற்ப கடந்த காலங்களில் சம்பவங்கள் நடந்துள்ளதா என்று சரிபார்த்துக்கொள்வதும் சிறந்தது. அப்போதுதான் ஜோதிடரால் ஜாதகருக்கு தெளிவாக வழி காட்ட இயலும்.


 
ஜனன ஜாதகம் சந்தேகத்திற்குரியதாக இருந்தால், (உதாரணமாக திசா-புக்தியும் கோட்சாரமும் ஒரு சிறப்பான நிலையைக்காட்டி ஜாதகர் கடின சூழ்நிலையை சமாளிப்பது எப்படி என ஜோதிடரை நாடி வந்திருந்தால்)   அப்படிப்பட்ட நிலையில் ஜோதிடர் ஜனன ஜாதகத்தை தவிர்த்து அந்த நேரத்திற்கு கணிக்கப்பட்ட பிரசன்ன ஜாதகத்தைக்கொண்டு கேள்வியாளருக்கு பதிலுரைப்பதே சிறந்தது.  உண்மையில் ஒரு நபர் கொண்டுவரும் ஜாதகம் உண்மையானதா போலியானதா என்று கூட பிரசன்ன ஜாதகம் கொண்டு அறிய முடியும்.  மேலும் ஒரு நபரின் உண்மையான ஜாதகத்தை தேர்ந்த ஒரு ஜோதிடரால் பிரசன்ன ஜாதகத்தைக்கொண்டே எழுதிவிட இயலும். இக்கருத்துக்களை ஒருங்கிணைந்து ஆராய்வதே இப்பதிவின் நோக்கம்.

என்னிடம் ஒரு ஜாதகம் ஆய்வுக்கு கொண்டுவரப்படுகிறது. ஜாதகத்தை நான் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நேரத்தின் பிரசன்ன ஜாதகம் நீங்கள் கீழே காண்பது.


பிரசன்ன ஜாதக விபரம். ஆண்.25.03.2020 இரவு 8 மணி 3 நிமிடம். பிரசன்ன ஜாதகத்திற்கும் ஜனன ஜாதகத்திற்கும் உள்ள தொடர்பை பிரசன்ன ஜாதகத்தின் லக்னம், லக்னாதிபதியை முக்கியமாகக் கொண்டே அறியமுடியும். மேற்கண்ட பிரசன்ன ஜாதகத்தில் லக்னத்தை லக்னாதிபதி சுக்கிரன் மேஷத்திலிருந்து பார்க்கிறார். இதிலிருந்து ஜனன லக்னத்திற்கும் சுக்கிரனுக்கும் தொடர்பு இருக்க வாய்ப்புள்ளது என அறியவேண்டும்.  மேலும் பிரசன்ன ஜாதக ஹோரை சுக்கிர ஹோரையாகும் இதனால் லக்னம் சுக்கிரனோடு தொடர்புடையது என அனுமானிக்கலாம்.  சுக்கிரன் ரிஷபத்திற்கு விரையத்தில் மேஷத்தில் இருந்து பிரசன்ன லக்னமான துலாத்தை பார்ப்பதால் இங்கு ரிஷபத்தை விட துலாமே ஜனன லக்னமாக இருக்க அதிக வாய்ப்புள்ளது.  லக்னத்தை சுக்கிரனைத் தவிர மகரச்சனி தனது 10 ஆம் பார்வையாகப் பார்க்கிறது. சனி லக்னத்தை தவிர சந்திரனை தன்  3 ஆம் பார்வையாக பார்க்கிறது. இதனால் லக்னதிற்கோ அல்லது ராசிக்கோ சனியின் தொடர்பும் இருக்கும் என அனுமானிக்கலாம். சந்திரன் மீனத்தில் புதனின் ரேவதி நட்சத்திரத்தில் நிற்கிறது. சந்திரனின் சார நாதன் புதன் கும்பத்தில் நிற்கிறது. இதனால் ஜனன ராசி மீனமாகி நட்சத்திரம் புதனின் ரேவதி நட்சத்திரமாகவோ அல்லது  சந்திரனின் சார நாதன் நிற்கும் கும்ப ராசியாகவோ இருக்க வாய்ப்புண்டு.

இப்போது பிரசன்ன லக்னாதிபதி சுக்கிரனை கேதுவோடு இணைந்த குரு தனது 5 ஆம் பார்வையாக பார்க்கிறது. ஆனால் குரு தனுசுவின் கடைசி பாகையில் இருந்து தனது நீச்ச வீட்டை நோக்கி செல்வதாலும் பாவத்தில் குரு மகரத்தில் செவ்வாய், சனியோடு இணைவதாலும் சுக்கிரனுக்கு கிடைக்கும் குருவின் 5 ஆவது பார்வை வலுவற்றதாகும். எனவே லக்னத்திற்கு குருவின் தொடர்பு இருக்க வாய்ப்பில்லை. பாவ குரு சனியோடு சேர்வதாலும் சனிக்கும் ஜனன ராசிக்கும் தொடர்பு இருக்கும் என ஏற்கனவே நாம் அனுமானித்து வைத்துள்ளதாலும் ராசி அல்லது நட்சத்திரத்தில் குருவின் பங்கும் இருக்கும் எனலாம். அடுத்து செவ்வாயும் தனது 4 ஆம் பார்வையாக சுக்கிரனை பார்க்கிறது.  எனவே லக்னத்திற்கு செவ்வாயின் தொடர்பும் இருக்க வேண்டும். செவ்வாய் சனியோடு கிரக யுத்தத்தில் தோற்றிருந்தாலும் கால புருஷ லக்னத்திற்கு 1௦ ஆமதிபதியான சனியோடு உச்ச கதியில் திக்பலத்தில் நின்று தன் வீட்டில் நிற்கும் சுக்கிரனை பார்க்கிறது. எனவே ஜனன லக்னத்தில் செவ்வாயின் பங்கு இருக்க வேண்டும்.

மேற்கண்ட கருத்துக்களின் அடிப்படையை ஜனன லக்னம் துலாமாகவும் ராசி கும்பமாகவும் இருக்கலாம். இது ஜனன லக்னம் சுக்கிரனுடையதாகவும் ராசி சனியினுடையதாகவும் இருக்கும் என்ற அடிப்படையைக்கொண்டது. மேலும் சுக்கிரனுக்கும் செவ்வாய்க்கும்  தொடர்பும் எதோ ஒரு வகையில் இருக்க வேண்டும்.  சரி, இப்போது ராசிக்கு குருவின் தொடர்பு எப்படி ஏற்படும் என ஆராய்ந்தால் கும்ப ராசி என நாம் ஜனன ராசியை அனுமானித்து வைத்துள்ள ராசியில்தான் குருவின் பூரட்டாதி நட்சத்திரம் உள்ளது. எனவே ஜாதகரின் ஜனன நட்சத்திரம் கும்ப ராசியில் உள்ள பூரட்டாதி நட்சத்திரமாக இருக்க வேண்டும்.  

கீழே நீங்கள் காண்பது ஜாதகரின் உண்மையான ஜனன ஜாதகம்.


இதில் லக்னம் துலாமாகவும் ராசி கும்பமாகவும் உள்ளது. நட்சத்திரம் பூரட்டாதி-3 ஆகும். லக்னத்தை சனி 3 ஆம் பார்வையாக பார்ப்பதிலிருந்து பிரசன்ன ஜாதகப்படி லக்னத்திற்கு சனி தொடர்பு உறுதியாகிறது. சிம்மச் செவ்வாய் லக்னாதிபதி சுக்கிரனின் பூரம்-1 ல் நிற்கிறது. எனவே செவ்வாய் சுக்கிர தொடர்பும் உறுதிப்படுத்தப்படுகிறது.  எனவே இது உண்மையான ஜாதகமே. போலியான ஜாதகத்திற்கும் பிரசன்ன ஜாதகத்திற்கும் இப்படி தொடர்புகள் இருக்க வாய்ப்பில்லை. ஒரு சில ஜாதகங்களில்  பிரசன்ன ஜாதகத்தோடு தொடர்பு இருந்தால் அதன் உண்மைத்தன்மையை திருமண நாள், வேலை கிடைத்த நாள், வீடு, உடல்நல பாதிப்புகள் உள்ளிட்ட ஏதாவது ஒரு வாழ்க்கை சம்பவங்களை திசா புக்திகளோடு தொடர்புபடுத்தி தெளிவடையலாம்.

பொதுவாக தவறான ஜாதகங்கள் எப்படி உருவாகின்றன என்றால் ஜோதிடத்தில் நம்பிக்கை இல்லாதோரால்தான். அப்படிப்பட்டோரின் பிள்ளைகள் திருமணத்திற்கு துணையை தேடும்போதுதான் ஜாதகம் எழுதி வைக்காததன் பாதிப்பு தெரியும். அப்படிப்பட்டோர் திருமணதிற்காக உத்தேசமாக  ஜனன விபரங்களை கொடுத்து ஜாதகங்களை கணினியில் கணித்து விடுகின்றனர். அப்படிப்பட்ட ஜாதகங்களை வைத்துக்கொண்டு  பொருத்தம் பார்க்கும் ஜோதிடரின் நிலைதான் பரிதாபத்திற்குரியது. இத்தகைய நேரங்களில் ஜோதிடர்களுக்கு உதவுவது பிரசன்ன ஜாதகமாகும். சில சமயங்களில் ஜாதகத்தில் இருக்கும் கடுமையான தோஷங்களை மறைத்து சிறப்பான ஜாதகமாக மாற்றி தங்களுக்குப் பிடித்த வாழ்க்கைத்துணையை அடையவதற்கேற்பவும் போலி ஜாதகங்கள் உருவாகின்றன. இத்தகைய ஜாதகதினர் கடுமையாக நோய்வாய்ப்படும்போது அவர்களின் உறவுகள் போலியான ஜாதகத்தை வைத்துக்கொண்டு  அதிலுள்ள நட்சத்திர நாதனுக்கு சாந்திப்பரிகாரங்களும் வழிபாடுகளும் செய்து   பயனில்லாமலும் காரணம் புரியாமல் ஜோதிடத்தையும் படைத்தவனையும் திட்டுவதும் இந்தக்காலத்தில் நடக்கிறது. 

இப்பதிவு எழுத உந்துதலாக இருந்த காஞ்சிபுரம் வாசகர் திரு.இன்பநாதன் அவர்களுக்கு நன்றி.

மீண்டும் ஒரு பதிவில் விரைவில் உங்களை சந்திக்கிறேன்,
அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,
பழனியப்பன்.
கைபேசி: 8300124501