Saturday 18 April 2020

அஸ்தங்க ஆச்சரியங்கள்!



சூரியனுக்கு மிக நெருக்கமாக அமையும் கிரகங்கள் தங்கள் கதிர்வீச்சை  சூரியனிடம் இழந்து விடும். இதுவே சூரியனால் கிரகங்களுக்கு ஏற்படும் அஸ்தங்க தோஷமாகும். இதில் சூரியனைத்தவிர மற்றொரு முக்கிய ஒளி கிரகமான சந்திரனுக்கும்  நிழல் கிரகங்களான ராகு-கேதுக்களுக்கும் அஸ்தங்க தோஷம் இல்லை.  ஏனைய செவ்வாய் ,புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய 5 கிரகங்களுக்கும் அஸ்தங்க தோஷம் உண்டு. அஸ்தங்க தோஷம் ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு பாகையில் அமையும் என்றாலும் சூரியனுக்கு 5 பாகை அளவில்தான் பாதிப்பு அதிகம் இருக்கும். அதிலும் சூரியனுக்கு 3 பாகை நெருக்கமாக அமையும் சூழலில் அது கடும் தோஷமாக எடுத்துக்கொள்ளப்படுகிறது.   கிரகங்களில் சூரியனுக்கு சம கிரகமான புதனுக்கு சூரியனால் அஸ்தங்க தோஷம் இல்லை என்ற வலுவானதொரு கருத்து ஜோதிட அறிஞர்களிடம் நிலவுகிறது. புதன் புத்தி காரகன் என்பதால் ஒருவருக்கு பள்ளிக்கல்வி பாதிக்கப்பட்டாலும் அனுபவம் என்ற கல்வியால் அது வாழ்வில் ஜாதகரை உயர்த்திவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

அஸ்தங்கமடையும் கிரகங்கள் சூரியனுக்கு முன்னாள் சென்று அமையும்போது சூரியனுக்கு பின்னால் அமைவதால் ஏற்படும் பாதிப்பைவிட குறைவான பாதிப்பையே அடைகின்றன. அஸ்தங்கமடையும் கிரகங்களின் காரகங்களும் ஆதிபத்தியமும் பாதிப்பை அடையும். இவ்விரண்டில் ஒன்று கடுமையான பாதிப்பாக இருந்தால் மற்றொன்று பாதிக்காது. அதாவது காரகம் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுவிட்டால் பாவம் பாதிக்காது. பாவம் கடும் பாதிப்பை சந்திக்க நேர்ந்தால் காரகம் பாதிக்காது.  அஸ்தங்க கிரகங்களின் சாரம் பெற்ற கிரகங்களும் பாதிப்பை அடையும். இதிலும் சில ஆச்சரியங்களும் உண்டு. அவற்றை ஆராய்வதே இப்பதிவின் நோக்கம்.


கீழே ஒரு ஆணின் ஜாதகம்.

  


சுக்கிரன் சூரியனுக்கு 5 பாகைகள் முன்னால் ரோகிணி-1 ல் நிற்கிறது. விருட்சிக லக்னாதிபதி செவ்வாய் மிருகசீரிஷம் -1 ல் நின்று ரோகிணி-3 ல் நிற்கும் சூரியனால் அஸ்தங்கப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் ஜாதகரின் வைராக்கியம் இல்லற  விஷயத்தில் பாதிக்கப்படுகிறது.  களத்திர பாவத்தில் இரு நெருப்பு ராசி கிரகங்கள் நிற்பதால் ஜாதகரின் இல்லற ரீதியான எதிர்பார்ப்புகள் மனைவியிடன் நிறைவேறவில்லை. சுக்கிரனுக்கும் செவ்வாய்க்கும் நடுவில் இங்கு சூரியன் அமைந்துள்ளார். சூரியன் , சுக்கிரன் இருவரும் திருட்டு உறவு காரகன் சந்திரனின் சாரம் பெற்றுள்ளதால் மனைவியிடம் நிறைவேறாத தனது இல்லற ஆசைகளை திருட்டு உறவின் மூலம் சின்ன வீடு ஏற்படுத்திக்கொண்டு அடைகிறார். 7 ஆமிட பாவ கிரகங்கள் செவ்வாயும் சூரியனும் லக்னத்திற்கு நன்மையை செய்தாக வேண்டிய பாவாதிபதிகளாக அதாவது லக்னாதிபதியும் லக்னத்திற்கு திக்பலம் தர வேண்டிய 1௦ ஆமதிபதியுமாவதால் குடும்ப வாழ்வு தடையாகவில்லை. ஆனால் பாதகாதிபதி தொடர்பால் பாதகாதிபதியின் காரக அடிப்படையில் தவறு நடக்கிறது.

கீழே இரண்டாவது ஆணின் ஜாதகம்.


கன்னி லக்ன ஜாதகத்தில் லக்னாதிபதி புதன் தனது மூன்று நண்பர்களுடன் இணைந்து லக்னத்திற்கு திரிகோணத்தில் நிற்கிறார். வித்யா காரகன் புதன் சூரியனின் கார்த்திகை-3 ல் நின்று அதே கார்த்திகை-3 ல் நிற்கும் விரையாதிபதி சூரியனால் அஸ்தங்கப்படுத்தப்பட்டுள்ளார். இங்கு நண்பர் சூரியனின் சாரத்திலேயே புதன் அஸ்தங்கமடைதுள்ளதால் அஸ்தங்க தோஷம் புதனை பாதிக்கவில்லை. 5 ஆமிடத்தில்  நீசமான வித்யா ஸ்தானாதிபதி (4 ஆமதிபதி)  குருவின் 5 ஆம் பார்வை 9 ஆமிட கிரகங்களுக்கு கிடைக்கிறது என்பது இங்கு நல்லதொரு அம்சம். ஜாதகருக்கு புதனின் காரகமான கல்வி அஸ்தங்கத்தால் பாதிக்கவில்லை. ஜாதகர் தமிழில் MA; MEd; MPhil முடித்து அரசுப்பள்ளியில் தமிழ்  ஆசிரியராக பணிபுரிகிறார்.

கீழே மூன்றாவதாக ஒரு பெண்ணின் ஜாதகம்
தாய்மைக்கு உரிய கிரகம் என்றால் அது சந்திரன்தான். அதனால்தான் சந்திரனை “மாத்ரு காரகன்” என ஜோதிடம் போற்றுகிறது.  சந்திரன் வலுவான ஜாதகர்களுக்கு தாய்மை உணர்வு அதிகமாக இருப்பதை காணலாம். லக்னமே சந்திரனுக்கு உரிய கடக லக்னம்தான். குடும்ப பாவாதிபதி சூரியன் லக்னதிற்கு 6 ல் தனுசுவில் மூலம்-3 ல் நின்று, மூலம்-4 ல் நிற்கும் குடும்ப காரகன்  குருவை அஸ்தங்கம் செய்கிறார். குடும்ப காரகன் அஸ்தங்கமடைந்ததால் குடும்பம் வாழ்வு இல்லை என்றொரு நிலை ஜாதகிக்கு ஏற்பட்டது. ஆனால் குரு, சூரியன் இருவரும் ஞான காரகன் கேது சாரம் பெற்றதால் கேது ஜாதகிக்கு உலகமே தன்  குடும்பம் என உணரவைத்தார்.  ஜாதகி தன்னை உலக மக்களுக்கு தாயாக  மனதார எண்ணினார். இது ஒரு அபூர்வ உணர்வு. ஜாதகியின் கணவரும் ஜாதகியை தான் வணங்கும் அன்னை காளியின் அம்சமாகவே எண்ணி ஜாதகியை பூஜை செய்தார். “மகளே, யாரெல்லாம் வந்திருக்கிறார்களோ, யாரெல்லாம் வரவில்லையோ, இனி யாரெல்லாம் வரப்போகிறார்களோ, அந்த என் பிள்ளைகளுக்கெல்லாம் என் அன்பை தெரிவித்துவிடு. என் நல்லாசிகள் அவர்களுக்கு எப்போதும் உண்டு!” என்று உலக மக்களுக்கு தன் கடைசி செய்தியை தெரிவித்துவிட்டு இறையில் கலந்த அன்னை  சாரதா தேவியின் ஜாதகம் இது.

 கீழே நான்காவதாக ஒரு ஆணின் ஜாதகம்.
இந்த ஜாதகர் என்னுடன் பணிபுரிந்தவர். குடும்ப, களத்திர ஸ்தானாதிபதி மற்றும் களத்திர காரகன் ஆகிய பொறுப்புகளுக்கு அதிபதியான சுக்கிரன், 7 க்கு பாதகாதிபதியான சூரியனால் அஸ்தங்கப்படுத்தப்பட்டுள்ளார். சூரியன் பூராடம்-3 ல் நிற்கிறது. சுக்கிரன் பூராடம் – 2 ல் சுய சாரம் பெற்று அம்சத்தில் நீசமடைந்துள்ளார். இந்த ஜாதகர் பல்வேறு முயற்சிகள் எடுத்தும் 41 வயதான ஜாதகருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. காரணம் களத்திரகாரன் சுக்கிரனை அஸ்தங்கப்படுதுவது களத்திர பாவாதிபதி சுக்கிரனுக்கு  பகைகிரகம் மட்டுமல்ல களத்திர ஸ்தானமான துலாதிற்கு பாதகஸ்தானாதிபதி ஆகவும் சூரியன் வருவதே ஆகும்.

கீழே ஐந்தாவதாக மற்றொரு ஆணின் ஜாதகம்.


கடக லக்னத்திற்கு 2 ஆமதிபதி சூரியன் சுவாதி-4 ல் நின்று விசாகம்-2 ல் நிற்கும் 7 ஆமதிபதியும் ஜீவன காரகனுமான சனியை அஸ்தங்கப்படுதுகிறார். இங்கு இது ஒரு முக்கியமான அமைப்பு. நீச சூரியன் அஸ்தங்கப்படுத்தும்  சனியால்தான் நீச பங்கமடைகிறார். எனவே சூரியன் சனியை தீவிரமாக பாதிக்க முடியாது. சனி சூரியனைவிட 5 பாகை முன்னாள் சென்றுதான் 6 ஆமதிபதி குருவின் சாரத்தில் அஸ்தங்கமடைந்துள்ளார். சூரியனும் சனியும் ஒன்றுக்கொன்று பகை கிரகங்களாக இருப்பதால் இங்கு சூரியன் சனியை பாதிப்பதைவிட சனி சூரியனை பாதிப்பதே அதிகமாக இருக்கும். சனி சூரியனோடு இணைந்ததால் அரசுத்துறையிலும் தன காரகன் குருவின் சாரம் பெற்றதால் LIC யிலும் பணியாற்றுகிறார். சூரியன் வலுக்குறைந்து சனி தொடர்பு பெறுவதால் சூரியனின் காரகமான இருதய இயக்கத்தில் ஜாதகருக்கு பாதிப்புகள் இருக்கிறது.  சனி 6 ஆமதிபதி தொடர்பு பெறுவதும் இதற்கு மற்றொரு காரணம்.

மீண்டும் அடுத்த பதிவில் விரைவில் சந்திக்கிறேன்.

அதுவரை,
வாழ்த்துக்களுடன்,

அன்பன்,
பழனியப்பன்.
கைபேசி:8300124501

No comments:

Post a Comment