Saturday, 29 August 2020

பிரசன்னத்தில் வேலை நிலை அறிதல்

ஜாதகம் இல்லாதோருக்கு பிரசன்னம் ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். கேட்கப்படும் கேள்விக்கு துல்லியமான பதிலை, கேள்வியின் தன்மையை, கேள்வியாளரின் நிலையை சுட்டிக்காட்டவல்லது. பிரசன்னங்களில் இதர வகை பிரசன்னங்களைவிட பலபடி உயர்ந்தது, எளிமையானது, துல்லியமானது ஜாமக்கோள் பிரசன்னமாகும். நம்பிக்கையான பதிலை தரவல்லது. நான் எப்போதும் ஜாதக பலன் கூறும்போது ஜாமக்கோள் பிரசன்னத்தை ஒப்பிட்டே பலன் கூறி வருகிறேன். ஜாதகம் தவறாக இருப்பின் பலன்களும் தவறாகவே அமையும். அதுபோன்ற சூழ்நிலைகளில் பிரசன்ன ஜாதகத்தை ஜோதிடர்களை காக்கும் கருவியாக பயன்படுத்தலாம்.

ஜோதிடரிடம் ஒரு கேள்வி முன்வைக்கப்படுகிறது எனில் கேள்வியின் காரக, பாவங்களையும், திசா-புக்திகளையும், கோட்சாரத்தையும் ஒப்பிட்டு பதிலளிப்பது என்பது பெரும்பாலும் அனைத்து ஜோதிடர்களும் கடைப்பிடிக்கும் எளிய முறையாகும். ஆனால் கேள்வி தொடர்பான விஷயத்தின் கடந்த கால, நிகழ்கால மற்றும் எதிர்கால நிலையையும் அதன் போக்கையும் துல்லியமாக அறிய ஜாமக்கோள் ஆரூடம் மிகச்சிறப்பாக பயன்படுகிறது என்று கூறினால் அது மிகையல்ல.

கீழே வேலை தொடர்பாக ஒரு ஆணுக்காகக் கேட்கப்பட்ட பிரசன்னம்.


துலாம் உதயம்.ஜாம உதயாதிபதி துலாத்தில் ஆட்சி பெற்று ராகுவின் சுவாதி-2 ல் நிற்கிறார். உள்வட்ட சுக்கிரன் ராகுவோடு சேர்க்கை பெற்று உதயத்திற்கு 9 ல் மிதுனத்தில் நிற்கிறார். இரு சுக்கிரனும் ராகுவோடு  தொடர்புகொண்டதால் ஜாதகர் ஏதோ ஒரு தடையை சந்தித்துக்கொண்டுள்ளார் என்பது தெரிகிறது. உதயத்திற்கு 9 ஆம் பாவம், ஜீவன பாவமான 1௦க்கு விரைய பாவமாகிறது. இதனால் ஜீவனம் தடையாகியுள்ளது. வெளிவட்ட சுக்கிரன், தன ஸ்தானமான 2 க்கு விரையத்தில் உதயத்திலேயே நிற்பதால் தன வரவு தடையாகிக்கொண்டிருப்பது தெரிகிறது. உள்வட்ட சுக்கிரன், வேலை பாவமான உதயத்திற்கு 6 ஆமிடாதிபதி குருவின் புனர்பூசம்-2 ல் நிற்கிறார். உள்வட்ட சுக்கிரனின் சார நாதன் குருவெளிவட்டத்தில் நீசமாகியுள்ளார். உள்வட்ட குரு, கேதுவோடு இணைந்து பாதிக்கப்பட்டுள்ளார். இரு குருக்களும் ஜாதகரின் பணி இழந்த சூழலை தெளிவாக கூறுகின்றனர்.

ஜீவன பாவமான 1௦ ஆமதிபதி சந்திரன் உள் வட்டத்தில் புதனின் கேட்டை-4 ல் நீசமாகியுள்ளார். வெளிவட்ட சந்திரன் அதே புதனின் ஆயில்யம்-2 ல் நிற்கிறார். இது ஜாதகர் கணினி மென்பொருள் தொடர்பான வேலையில் வெளிநாடு தொடர்புடைய வகையில் முன்னர் பணிபுரிந்து தற்போது பணி இழந்துள்ள சூழலை தெரிவிக்கிறது. உதயத்திற்கு 6 ஆமிடம் நீர் ராசியாகி அதன் அதிபதி குரு நீர் கிரகமாகி, 1௦, 2 ஆகிய பாவங்கள் நீர் ராசியான கடகமும், விருட்சிகமும் ஆகி,  அதன் அதிபதிகள் நீர் கிரகமான சந்திரனே ஆவது ஆகியவை ஜாதகரின் முந்தைய பணிச்சூழலை தெளிவாக கூறுகிறது. ஜாதகர் கணினி மென்பொருள் தொடர்பான வெளிநாட்டு நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து பணியிழப்பை சந்த்திதவர். கவிப்பு உதயத்திற்கு 1௦ ல் புதனின் ஆயில்யம்-1 ல் நிற்கிறது. இது ஜீவனத்தில் பாதிப்பையும்.உறுதி செய்கிறது.

வேலைக்கு காரக கிரகம் சனி வெளிவட்டத்தில் உதயத்திற்கு விரையத்தில் கன்னியில் சூரியனின் உத்திரம்-3 ல் நிற்கிறது. உள்வட்ட சனி 4 ஆம் பாவத்தில் வக்கிரம் பெற்று அதே சூரியனின் உத்திராடம்-2 ல் நிற்கிறது. இது ஜாதகர் தனது பணியில் நிறைந்த மதிப்பையும் கௌரவத்தையும் எதிர்பார்ப்பவர் என்பதை குறிக்கிறது. உதயத்திற்கு 9 ஆம் பாவ ராகு செவ்வாயின் மிருகசீரிஷத்தில் நிற்கிறது. செவ்வாய் பாதகாதிபதிபதி உச்ச சூரியனோடு இணைந்து உதயத்திற்கு 7 ல் உச்சம் பெற்று நிற்பது ஜாதகரின் வேலையில் அவருக்குறிய மதிப்பும், அங்கீகாரமும் ஜாதகரின் உயர் அதிகாரிகளால் மறுக்கப்படும் என்பதை தெரிவிக்கிறது. இங்கே உயர் அதிகாரி என்பதை செவ்வாயும் உயரதிகாரியால் வேலையில் பாதிப்பு என்பதை செவ்வாய் சாரத்தில் நிற்கும் ராகுவும் குறிப்பிடுகின்றனர். செவ்வாய் இங்கு உயரதிகாரி (Team Leader) என்பதையும்,   தலைமை அதிகாரி என்பதை சூரியனும் (Owner & Project Head) சுட்டிக்காட்டும். உள்வட்ட சனி கேதுவை கடந்து மகரத்திற்கு போயுள்ளது. இது ஜாதகர் சனி+கேது சேர்க்கையால் கடந்த ஓரிரு வருடங்களாகவே சரியான பணி கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளது தெரிகிறது.

இந்நிலையில்உள்வட்ட குரு வேலையை குறிக்கும் 6 ஆம் பாவத்திற்கு செல்ல மேலும் 2 வருடங்களுக்கு மேலாகும்.உள்வட்ட கேது உதயத்திற்கு 1௦ ஆமதிபதியான நீச நிலைபெற்ற சந்திரனை நோக்கி வருகிறது. இது ஜீவன தடை தொடர்வதையே குறிக்கிறது. கேது சந்திரனை கடந்து உதயத்திற்கு செல்லும்வரை  தடை நீடிக்கும்.அதுவரை ஜாதகருக்கு சரியான வேலை கிடைக்க வாய்ப்பில்லை. இடையே கிடைக்கு ஓரிரு வாய்ப்புகளும் ஜாதகருக்கு பொருந்தாதவைகளாகவே அமையும் என்பதை பிரசன்னம் குறிப்பிடுகிறது. பிரசன்னத்தில் தெரியும் இந்த நிலையை ஜாதகருக்கு எடுத்துச்சொல்லி ஜாதகரை அதுவரை தாற்காலிக வேலைகளிலோ அல்லது தனது திறனை வளர்த்துக்கொள்வதிலோ கவனத்தை செலுத்தச்செய்து தெம்பூட்ட வேண்டும். இது ஒரு ஜோதிடரின் தலையாய கடமை ஆகும். இது கேள்வியாளர் தனது நிலையில் சோர்வடையாமல் திட்டமிட மிக உதவும்.

மீண்டுமொரு பதிவில் விரைவில் உங்களை சந்திக்கிறேன்,

அதுவரை வாழ்த்துக்களுடன்,

 

அன்பன்,

பழனியப்பன்.

கைபேசி: 8300124501

Saturday, 22 August 2020

கொரானா ஸ்பீக்கிங்!


கொரானாவால் உலகம் பீதியடைந்துள்ள இன்றைய காலகட்டத்தில் கொரானாவால் உயிரிழப்புகளை சந்தித்த சில ஜாதகங்களை ஆராய்ந்தபோது, தற்போது மிதுன ராசியில் இருக்கும் ராகுவிற்கும் கொரானா மரணங்களுக்கும் உள்ள நேரடித்தொடர்பை தெளிவாக உணர முடிகிறது. ராகு தடைகளுக்கு உரிய கிரகம் என்பது அனைவரும் அறிந்ததே. மிதுனம் கால புருஷ தத்துவப்படி தைராய்டு மற்றும் மூச்சுக்குழலை குறிக்கும் ராசியாகும். கொரானாவால் உயிரிழப்பவர்கள் பெரும்பாலும் சுவாசிப்பதில் ஏற்படும் தடையால்தான் உயிரிழக்கின்றனர். ஜனன காலத்தில் மிதுன ராசியும் அதன் அதிபதி புதனும் பாதிக்கப்பட்டு, தற்போது மாரக திசா-புக்திகள் நடப்பவர்களே கொரானா மூலம் மரணத்தை அதிகம் தழுவுகின்றனர். உடலில் ஏற்கனவே பல்வேறு பாதிப்புக்கு உள்ளானவர்களும், புதன் திசை, புதன் புக்தி நடப்பவர்களும் கொரானா தாக்குதலுக்கு உள்ளாக  வாய்ப்புகள் அதிகம் உண்டு. 

 கீழே ஒரு ஜாதகம்.

கன்னி லக்னத்திற்கு மீனம் பாதக ஸ்தானம். மீனத்தில் லக்னாதிபதி புதன் நீசமாகியுள்ளார். அதே சமயம் பாதகாதிபதி குரு லக்னத்திற்கு 1௦ ல் லக்னாதிபதியின் மற்றொரு வீட்டில் நிற்கிறார். இதனால் இங்கு பரிவர்த்தனை யோகம் செயல்படுகிறது. இந்த பரிவர்தனையால் இவ்விரு கிரகங்களும் ஒன்றுக்கொன்று இணைந்து செயல்படும். இதனால் இங்கு குருவின் பாதகாதிபத்திய தோஷம் விலகுகிறது.

ஆனால் பரிவர்தனைக்குப்பிறகு மீனத்தில் ஆட்சி வீட்டிற்கு வரும் பாதகாதிபதி குருபாதகத்தை செய்யும் நிலையிலேயே உள்ளார். எனவே பரிவர்தனைக்குப்பிறகு இங்கு பாதக தோஷம் வலுவடைகிறது. இப்போது குரு மிதுனத்தில் ராகுவின் திருவாதிரை-1 ல் நிற்கிறார். இதனால் தனித்து லக்னத்தில் நிற்கும் ராகு லக்னாதிபதி புதன் போலவே செயல்படுவார். இதனால் ராகுவின் சாரத்தில் நிற்கும் குருவை லக்னாதிபதி புதனின் சாரத்தில் நிற்பதாகவே எடுத்துக்கொள்ள வேண்டும். இதனால் குரு நன்மையை செய்ய வேண்டும்.

இவையெல்லாம் பரிவர்த்தனைக்கு முன்னர்தான். பரிவர்த்தனைக்குப்பிறகு குரு ஆட்சி பெறும் நிலையில் இவை தlலைகீழாக மாறிவிடும். புதன் மீனத்தில் சுய சாரத்தில் ரேவதி – 2 ல் நிற்கிறார். இதனால் இங்கு குருவிற்கு லக்னாதிபதியின் தொடர்பு பரிவர்தனைக்குப்பிறகு மீண்டும் ஏற்படுகிறது. இதனால் இப்போது குருவின் செயல்பாடு எப்படி அமையும் என்ற கேள்வி எழும். ஏழும் பத்தும் பரிவர்த்தனை ஆவதால் இங்கு பரிவர்த்தனை ஆகும் இடங்களுக்கே கிரகங்கள் செயல்பட வேண்டும் எனவே லக்னத்திற்கு பாதகத்தை குரு செயல்படுத்த மாட்டார் என்றொரு கருத்து இங்கு எழும்.

ஆனால் கிரகங்கள் பரிவர்த்தனை ஆனாலும் தாங்கள் இருக்கும் இடத்திற்கு ஓரளவு அதாவது சுமார் 3௦ சதவீத பலனை வழங்க வேண்டும். மீதி 7௦ சதவீத பலனை தாங்கள் பரிவர்த்தனை ஆகிச்சென்று அமரும் இடத்திற்கு வழங்கும் என்றொரு கருத்தே பெரும்பாலும் நடைமுறையில் ஏற்கத்தக்கதாக உள்ளது. இந்தக்கருத்தை கவனத்தில்கொண்டு இப்போது இந்த பரிவர்த்தனையை அனுகினால் பரிவர்த்தனை ஆகும் குருவும் புதனும் இணைந்தே ஜாதகருக்கு நன்மையையும் தீமையையும் கலந்து செய்யவேண்டும் என்றொரு எண்ணம் வரும். இக்கருத்தே சரியானதும் கூட.

இப்போது உண்மையில் இக்கிரகங்கள் என்ன பலனை ஜாதகருக்கு வழங்கியுள்ளன என்று கவனித்தால், லக்னத்தில் ராகு அமர்ந்து, லக்னாதிபதி புதன் பரிவர்த்தனைக்குமுன் மீன ராசியில் நிற்பதாலும், பரிவர்த்தனைக்குப்பின் லக்னாதிபதி புதன், குரு நின்ற ராகுவின் சாரத்திற்கு வருவதாலும் ஜாதகருக்கு வெளிநாட்டுத்தொடர்பு ஏற்பட்டு வெளிநாட்டில் வசிக்கிறார். 7 ஆமிடம் பரிவர்த்தனை ஆவதால் வாழ்க்கைத்துனையுடன் வெளிநாட்டில் வசிக்கிறார். 1௦ ஆமிடம் பரிவர்த்தனை ஆவதால் தொழில் நிமித்தம் வெளிநாட்டில் வசிக்கின்றனர். 1௦ ஆமிடம் கால புருஷனுக்கு 3 ஆமிடமான கழுத்து மற்றும் மூச்சுக்குழலை குறிக்கும் மிதுன ராசியாகிறது. இதனால் ஜாதகருக்கு இவை தொடர்பாக உபாதைகள் ஏற்படின் அது மாரக வியாதியாக உருமாறும். பரிவர்த்தனைக்குப்பின் மாரக ஸ்தானத்திற்கு வரும் குரு 5 ஆம் பார்வையாக கடகத்தை பார்ப்பார். 11 ஆமிடம் என்பது அனைத்து லக்னத்திற்கும் பொதுவான மாரக ஸ்தானமாகும். கடகம் மார்பை குறிக்கும் ராசியாகி பரிவர்த்தனை குருவின் பார்வையை பெறுகிறது. ராகு சந்திரனின் ஹஸ்தம் – 1 ல் நிற்கிறது. ராகுவால் ஏற்படும் மூச்சுத்திணறல் மார்பிற்கு செல்லும் ரத்த ஓட்டத்தையும், நுரையீரல் இயக்கத்தையும் பாதிக்கும் என்பது தெளிவாகிறது. இதனால் இந்த ஜாதகர் மூச்சுக்குழலில் ஏற்படும் பாதிப்பால் மார்பு மற்றும் நுரையீரலில் பாதிப்பு ஏற்பட்டு ஆயுள்தோஷத்தை சந்திப்பார் என அனுமானிக்கலாம்.

திசா – புக்திகளின் அடிப்படியில்தான் அது நிகழும் என்றாலும், லக்னாதிபதி பாதகாதிபதி மற்றும் மாரக ஸ்தானம் இவற்றோடு ஏற்படுத்திக்கொள்ளும் தொடர்பைக்கொண்டே இதை அனுமானிக்கவேண்டும். இந்த அமைப்பு உள்ளோருக்கு தற்போது மாரக திசா-புக்தி நடந்தால் அத்தகையோர் தற்போது உலகை பீதியில் ஆழ்த்திக்கொண்டிருக்கும் கொரோனாவால் உயிரிழக்கும் வாய்ப்பு மிக மிக அதிகம். எனவே புதன், மாகர ஸ்தானம், மிதுனம், கடக ராசி தொடர்புடையவர்கள், ஜனன ஜாதகத்தில் புதன்+ராகு சேர்க்கை உள்ளவர்கள், ஜாதகத்தில் புதன் பாதிக்கப்பட்டவர்கள், கவனமாக இருக்க வேண்டிய காலமிது. திசா-புக்தி சிறப்பாக அமையப்பெற்றவர்கள் இது பற்றி கவலைப்படாமல் கவனமாக இருந்தால் போதும்.

 

விரைவில் மீண்டுமொரு பதிவில் சந்திப்போம்,

 அதுவரை வாழ்த்துக்களோடு,


அன்பன்,

பழனியப்பன்.

கைபேசி: 8300124501

Friday, 14 August 2020

பெற்றோர் ஆதரவற்ற காதல் மண அமைப்பு!


ஒரு மனிதனின் ஒட்டுமொத்த வாழ்க்கையை ஒரே சம்பவத்தில், ஒரே நாளில்  மாற்றிவிடும் வல்லமை படைத்தவை ராகு-கேதுக்கள். ஒரு பாவ பலனை அதன் பாவாதிபதியும் காரக கிரகமும் ஜாதகத்தில் மறுத்திருந்தால் ராகு-கேதுக்கள் அந்த பாவத்தோடு தொடர்புகொண்டிருந்தால் அந்த பாவ பலனை நடத்தி வைக்கும் தகுதியை அடைகின்றன. இதனால் இதர கிரகங்களை மீறி ஜாதகருக்கு ஒரு விஷயத்தை இவை நடத்தி வைக்கின்றன. இதனால் அப்படிப்பட்ட காலத்தில் இவை இதர கிரகங்களை கட்டிவைக்கின்றன. இதனால் எழும் எதிர்ப்புகளை தவிடுபொடியாக்கி போர்க்குணத்தோடு அப்படிப்பட்ட சம்பவங்களை அவை நல்லவை ஆயினும் பொல்லாதவை ஆயினும்  செய்துவைக்கின்றன. ராகுவிற்கு குரு தொடர்பிருந்தால் அப்படிப்பட்ட சம்பவ காலங்களில் குருவே போர்க்களத்தில் இருப்பதாக எண்ணலாம். சனி, செவ்வாய் போன்ற பாவக்கிரகங்கள் தொடர்பிருந்தால் இவை சம்பவ காலங்களில் ராகு-கேதுக்களை தொடர்புகொண்ட கிரகங்களின் குரூரத்தன்மையை வெளிப்படுத்தும். எப்படி நடந்ததென்றே தெரியாமல் கனவுபோல நடந்துவிடும் வாழ்க்கை சம்பவங்கள் அனைத்திற்கும் ராகு-கேதுக்கள் காரக கிரகங்களாகின்றன.

கீழே ஒரு பெண்ணின் ஜாதகம்   

ஜாதகிக்கு ராகு திசை குரு புக்தி நடந்த போது நடந்த சம்பவங்கள் இவை. ராகு 7 , 12 பாவங்களோடு தொடர்புகொண்டு லக்னாதிபதி சுக்கிரனின் பரணி-2 ல் நின்று திசை நடத்துகிறார். ஜாதகிக்கு அப்போது வயது 24. ஏழாமிடத்தோடு தொடர்பாவதால் ராகு ஜாதகிக்கு திருமணம் நடத்திவைக்க பொறுப்பேற்கிறார். 7 ஆமிட சனி குரு சாரத்தில் நின்று மகரத்தில் அமைந்த குருவை 3 ஆம் பார்வையாக பார்க்கிறார். குரு 3 ஆமதிபதி சந்திரனுடன் இணைந்து 7 ஆமிட சனி தொடர்பு ஏற்பட்டு 11 ஆமிடாதிபதிமாகவும்  வருவதால் தனது புக்தியில் ஜாதகிக்கு தனது காரக மற்றும் பாவ தொடர்பு அடிப்படையில் திருமணம் செய்துவைக்க வேண்டிய பொறுப்பேற்கிறார். (3, 7, 11 ஆகியவை திருமண வாழ்வை அமைத்துத்தரும் காமத்திரிகோணங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.) பாதகாதிபதி சனி வக்கிரமாகிவிட்டதால் தனது 9 ஆம் ஆதிபத்திய பலனான பாதக பலனை கைவிட்டு காரக பலனை மட்டும் வழங்க வேண்டியவராகிறார். எனவே இந்த ஜாதகிக்கு பாதக ஸ்தானத்தில் நிற்கும் குருவாலும் சந்திரனாலுமே பாதிப்புகள் ஏற்படவேண்டும். சனியால் ஏற்படாது.

நீசமாகி வக்கிரம் பெறுவதால் குரு நீசபங்கமாகிறார். வக்கிர குரு தனது ஆதிபத்தியத்தை விட்டு காரக பலனையே பிரதானமாக செய்யும் என்றாலும், தான் நிற்கும் ஸ்தான அடிப்படையில் பாதக பலன்களையும், வக்கிரமாகி 8 ஆமிடம் நோக்கி வருவதால் அவமானம், கண்டம் என்ற வகை பலன்களையும்,  லக்னத்திற்கு லாபாதிபதி என்பதால் லாப ஸ்தான பலன்களையும் தனது புக்தி காலத்தில் ஒரு சேர வழங்கியாக வேண்டிய நிலையில் உள்ளார். குரு எத்தனை இடர்பாடுகளை தந்தாலும், குருவிற்கு கேந்திரத்தில் நிற்கும் திசா நாதன் ராகுவிற்கு குரு கட்டுப்பட்டே ஆக வேண்டும். மேலும் ராகுவிற்கு கேந்திரத்தில் நிற்கும் கிரகங்களின் செயல்பாட்டினை ராகு கட்டுப்படுத்துவார் என்றொரு முக்கிய விதி உண்டு. அதனோடு வக்கிரமாகி தன்னிலை இழந்த கிரகங்களை நிரந்தர வக்கிர கிரகங்களான ராகு-கேதுக்கள் தங்களது சேவகர்களாக பயன்படுத்தும் என்றொரு விதியும் உண்டு. இதனால் பாதகம், பாதகாதிபதி, அஷ்டமாதிபத்யம் ஆகிய பலன்களோடு 11 ஆமதிபத்திக்குரிய பலன்களையும் குரு வழங்கியாக வேண்டும். இவை அனைத்தையும் ஒரே சம்பவத்தின்மூலம் வழங்கிவிட குருவிற்கு திசா நாதன் ராகு கட்டளையிடுகிறார்.

குரு தனது புக்தி காலத்தில் இவ்வணைத்து பலன்களையும் திருமணம் என்ற ஒரே சம்பவத்தின் மூலம் ஜாதகிக்கு வழங்கினார். சுக்கிரன்+செவ்வாய் இணைவால் ஜாதகி காதலித்தார். செவ்வாய்-சனி பரஸ்பர பார்வையால் ஜாதி மாறி காதலித்தார். 9 ஆமதிபதி 9 க்கு பாதகத்தில் நின்றால் ஜாதகர் தனது குலப்பெருமையை காப்பாற்றமாட்டார் என்பதற்கேற்ப ஜாதி மாறி காதலித்தார்.  காதலுக்குரிய பாவமான லக்னத்திற்கு 5 ல் காதல் கிரகம் புதன் உச்சமாகி சூரியனோடு இணைந்து நின்ற அமைப்பாலும் ஜாதகி  காதலித்தார். ஆனால் 9 ஆமிடம் பாதிக்கப்பட்டு சிம்ம ராசிக்கு சனி+செவ்வாய் தொடர்பு ஏற்பட்டதால் தந்தை தனது காதலை ஏற்கமாட்டார் என்றொரு மனோநிலைக்கு ஜாதகி ஏற்கனவே வந்திருந்தார். இதனால் காதலனோடு சென்று பதிவு திருமணம் செய்துகொண்டார். பெண் ஜாதகத்தில் குரு, புதன், சந்திரன் மூன்றும் ஒன்றுக்கொன்று தொடர்பாவது வீட்டைவிட்டு ஓடிப்போய் திருமணம் செய்வதை குறிக்கும். இந்த ஜாதகத்தில் சந்திரனோடு இணைந்த குரு, புதனை 9 ஆம் பார்வையாக பார்ப்பதும், குரு+சந்திரனுக்கு திரிகோணத்தில் லக்னத்திற்கு 5 ல் புதன்  வலுவாக அமைந்ததும் ஜாதகியின் திருமணம் எப்படி நடக்கும் என்பதை தெளிவாக குறிப்பிடுகிறது. தந்தை இதனால் வெகுண்டெழுந்து ஜாதகியின் திருமண வாழ்வை முறிக்க சகல முயற்சிகளையும் எடுத்தார். சூரியனுக்கு 8 ல் மேஷத்தில் நிற்கும் திசா நாதன் ராகு சூரியனின் முயற்சிகளை முறியடித்தார். (கவனிக்க: ஒரு கிரகத்திற்கு அதன் ஆயள் ஸ்தானமான 8 ஆமிடத்தில் நிற்கும் கிரகம் அதன் செயல்பாட்டை முழுமையாக கட்டுப்படுத்தும்.) இதனால் ஜாதகி அவமானப்பட்டார். உயிராபத்திற்கு உள்ளானார். இறுதியில் தனது காதலில் உறுதியாய் நின்று தற்போது குடும்ப வாழ்வை நடத்தி வருகிறார். 

இப்போது திருமண கால கிரக நிலைகளை கவனிப்போம்.     

ஸ்திர லக்னக்திற்கு பாதிப்பை வழங்க வேண்டிய பாதக ஸ்தானமான 9 ஆமிடத்தில் கோட்சார ராகு வந்து நின்று குருவின் செயல்பாட்டை தானே முன்னின்று கவனிக்கிறார். இதனால் ஜனன காலத்தில் பாதகத்தில் நின்ற குரு, ராகுவை மீறி செயல்பட முடியாதவாறு ராகு குருவை கட்டுப்படுத்துகிறார். எதிர்ப்பை தெரிவிக்கும் சூரியன், கோட்சாரத்தில் மேஷத்தில் ஜனன ராகு மீது நின்று கிரகண தோஷமடைகிறார். இதனால் ராகுவை மீறி சூரியனால் செயல்பட முடியாது. தாயாரை குறிக்கும் சந்திரன் கோட்சாரத்தில் ஜனன கேது மீது நின்று,  கோட்சார கேதுவும் கடகத்தில் நிற்பதால் தாயின் எதிர்ப்பையும் கேது முறியடிக்கிறார். ஜனன நிலையை போலவே கோட்சாரத்திலும் செவ்வாயும் சுக்கிரனும் இணைந்திருக்கின்றனர். சுக்கிரன் உச்சம் பெற்று செவ்வாயோடு இணைந்துள்ளது வீட்டை பிரிந்துவர ஜாதகிக்கு துணிச்சலை கொடுத்துள்ளது. ஜனனத்தில் 7 ஆமிடத்தில் நின்று சிம்மத்தை பார்த்த சனி கோட்சாரத்தில் வக்கிரமாகி ஜனன செவ்வாய்+சுக்கிரன் மீது நிற்கிறது. இதனால் இந்த ஜாதகி திருமணமானவுடன் தனது பாதுகாப்பிற்காக காவல்நிலையத்தை நாடினார். ஜனன காலத்தில் குரு வக்கிரமாகி சனி நேர்கதியில் இருக்கிறது. ஆனால் கோட்சாரத்தில் சனி வக்கிரமாகி குரு நேர்கதியில் உள்ளது. இது ஜனன கால கிரகங்களின் மனோபாவம் மாறிவிட்டதை குறிப்பிடுகிறது.,

 மீண்டும் விரைவில் மற்றொரு பதிவில் சந்திப்போம்.

 அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

 பழனியப்பன்.

கைபேசி: 8300124501

Monday, 10 August 2020

வெளிநாட்டு யோகத்தை அள்ளித்தரும் ராகு-கேதுக்கள்!

 


ராகு கேதுக்கள் ஜோதிடத்தில் மிக முக்கியமான கிரகங்கள். குடிசையில் இருக்கும் ஒருவனை கோபுரத்தில் கொண்டுசென்று நிறுத்தும். மாடத்தில் இருப்பவரை தெருவில் கொண்டுவந்து நிறுத்தும். பொதுவாக ராகு-கேதுக்கள் தடைகளை ஏற்படுத்தும் கிரகங்கள் மட்டுமே என்று தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கின்றன. ஆனால் சாதகமாக இவை ஜாதகத்தில் அமைந்திருந்தால் இதர கிரகங்களை விட உறுதியான அமைப்பில் முன்னேற்றப்பாதையில் ஜாதகரை கொண்டுசெலுத்தும். இவைகளே இதர கிரக அமைப்புகளால் வாழ வழியற்றுத்திரிபவர்களுக்கு தனது காரகத்துவம் சார்த்த வகையில் திடீர் வெளிநாட்டு வாய்ப்புகளையும் கொடுத்து வாழ வழியும் காண்பிக்கும். சர்ப்ப கிரகங்கள் கட்டுப்பாட்டில் அனைத்து வகையான புதுமையான நவீனமான துறைகள் வரும் என்றாலும் குறிப்பாக குற்றமறியும் துறை, நவீன கணினி மென்பொருள் துறை, மருத்துவத்துறை, விண்வெளி அறிவியல் மற்றும் ஆராய்ச்சித்துறை இவைகளின் மூலம் வெளிநாட்டு வாய்ப்புகளை இவை வழங்குகின்றன. நவீனத்தை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் இன்றைய காலத்தில் மேற்குறிப்பிட்டவை பொருளாதார உயர்வைத்தரும் முக்கிய துறைகளாகும். 

இன்றைய பதிவில் ராகு-கேதுக்கள் வழங்கும் வெளிநாட்டு வாய்ப்புகளைப்பற்றி ஆராயவிருக்கிறோம்.      

 கீழே ஆணின் ஒரு ஜாதகம். 

jothidanunukkangal.blogspot.com

ஒருவர் உள்ளூரில் ஆதாவது  தான் பிறந்து வளர்ந்த ஊரில் தனது வாழ்க்கையையும் ஜீவனத்தையும் சிறப்பாக நடத்திக்கொள்ள வேண்டுமெனில் ஜாதகத்தில் உள்ளூர் வாழ்க்கையை குறிக்கும் 2 ஆமிடம் சிறப்பாக இருக்க வேண்டும். இரண்டாமிடத்தோடு தொடர்புடைய கிரக அமைப்புகள் ஒருவருக்கு வருமானம் மற்றும் குடும்பம் அமையுமிடங்களை சுட்டிக்காட்டும். ராகுவோடு இணைந்ததால் சந்திரன் தனது பலத்தை ராகுவிடம் இழக்கிறார். இதனால் சந்திரனின் அஷ்டமாதித்ய தோஷம் ராகுவை மீறி இங்கு செயல்பட்டாது. சந்திரனும் ராகுவும் கடல்கடந்து சென்று வெளிநாட்டில் வாழ்வதை குறிக்கும் கிரகங்கள் ஆகும். ஜீவன காரகனும் வருமான ஸ்தானாதிபதியுமான சனி வக்கிரம் பெற்ற நிலையில் 6 ஆமிடத்தில் சந்திரனின் ரோகிணி நட்சத்திரத்தில் நிற்கிறார். 2 ஆமதிபதி 6 ல் அமைவது ஜாதகர் வேலைக்குச் செல்வார் என்பதும் (2 வருமானம், 6 வேலை), சந்திரனின் சாரத்தில் சனி அமர்வதால் வேலை வெளிநாடு தொடர்பானதாக அமையும் என்பதும் இங்கு புலனாகிறது. லக்னாதிபதி குரு வெளிநாட்டில் வசிக்கும் அமைப்பை குறிக்கும் 12 ஆமிடமான நீர் ராசி விருட்சிகத்தில் நிற்கிறார். இதனால் ஜாதகர் வெளிநாட்டிலேயே நிரந்தரமாக தங்குவார் என்பதை இந்த அமைப்பு சுட்டிக்காட்டுகிறது.

விருச்சிகம் ஸ்திர ராசி என்பதால் ஜாதகர் நிரந்தரமாக வெளிநாட்டில் வசிப்பதை குறிப்பிடும். எப்போது இந்த அமைப்புகள் எல்லாம் செயல்படும் என்பதைக்கான திசா புக்திகளை காண வேண்டும். ஜாதகர் 1971 ல் பிறந்தவர். ஜாதகருக்கு 1991 இறுதியிலிருந்து குரு திசை நடந்தது. 16 வருட குரு திசையின் முதல் பகுதியான முதல் 8 வருடங்கள்  மேஷத்திற்கு செயல்பட்டது. மேஷம் வேலை பாவமான 6 க்கு விரைய ஸ்தானம். எனவே ஜாதகர் அப்போது சரியான வேலை அமைய போராட்டத்தில் இருந்திருப்பார்.     2004 முதல் குரு திசையின் இரண்டாவது பகுதி செயல்பட்டது. 12 ஆமிடம் ஒருவர் தான் பிறந்த வளர்ந்த வாழிடத்தை விட்டு வெகு தூரம் விலகிச்செல்வதை குறிப்பிடும். விருட்சிகத்திலிருந்து திசை நடத்தும் குரு தனது திசையின் 2 ஆவது பகுதியில் வேலை பாவத்தில் நிற்கும் ஜீவன காரகன் சனியை பார்க்கிறார். இதனால் ஜாதகருக்கு வேலை கிடைத்து வெளிநாடு சென்றார். ஜாதகருக்கு தற்போது குரு திசை முடிந்து சனி திசையில் உள்ளார். இறுதிக்காலத்தில் 12 ஆமிட குருவின் விசாக நட்சத்திரத்தில் நிற்கும் புதன் திசையைத்தான் ஜாதகர் சந்திக்கவுள்ளார். எனவே ஜாதகர் வெளிநாட்டில்தான் நிரந்தரமாக வாசிப்பார். ஜாதகர் தனது தாய் நாடான  இந்தியாவில் நிரந்தரமாக வசிக்க வாய்ப்பே இல்லை. ஜாதகருக்கு வெளிநாட்டு வாய்ப்பையும் வசிப்பிடத்தையும் இங்கு ராகுவே வழங்கியுள்ளது. அதற்கு திசா புக்திகள் ஒத்துழைக்க வேண்டும். 

இந்த ஜாதகத்தில் செயல்படும் மற்றொரு அமைப்பு தர்ம கர்மாதிபதி யோகமாகும். வேலைக்காக வெளிநாடு செல்லும் ஒருவர் அங்கு நிரந்தரமாக குடியுரிமை பெற்று தங்கவேண்டுமெனில் அவர் திறமையும் சாதுரியமும் மதிநுட்பமும் கொண்டவராக இருக்கவேண்டும். இவை இல்லாவிட்டால் வெளிநாட்டிலும் வாழ வழியற்று திறமையற்ற பணியாளராகவோ அல்லது அகதியாகவோதான் தங்கவேண்டியிருக்கும். சுற்றுலா விசாவில் வெளிநாடு சென்று பணி செய்யும் அமைப்புள்ளோருக்குத்தான் அத்தகைய அமைப்பு இருக்கும். விசா அதிகாரிகளிடம் மாட்டிய பிறகு வெளிநாட்டில் கம்பி எண்ண வேண்டியதுதான் அல்லது அவமானப்படுத்தப்பட்டு திரும்பவேண்டியிருக்கும். இந்த ஜாதகத்தில் வெளிநாட்டிலும் தனது திறமையால் சகல வசதி வாய்ப்புகளையும் அங்கீகாரத்தையும் குடியுரிமையையும் பெறும் அமைப்புகள் உள்ளன. அவற்றில் சிறப்பானது தர்ம கர்மாதிபதி யோகமாகும். கால புருஷ 9 மற்றும் 1௦ ஆமதிபதிகளான குரு , சனி தொடர்பால் ஏற்படுவதே முதல்தர தர்ம கர்மாதிபதி யோகமாகும். இந்த ஜாதகத்தில் சனியை குரு பார்ப்பதால் அது அமைகிறது. மற்றொரு தர்ம கர்மாதிபதி யோகமானது லாப ஸ்தானத்தில் லாபாதிபதி சுக்கிரனோடு இணைந்திருக்கும் 9 ஆமதிபதி சூரியனாலும் 1௦ ஆமதிபதி புதனாலும் ஏற்படுவதாகும். இது இரண்டாம்தர தர்ம கர்மாதிபதி யோகமாகும்.

ராகு கேதுக்களின் யோகத்தை பெறவும் சிறப்பானதொரு ஜாதக அமைப்பிருக்க வேண்டும். பொதுவாக ராகு-கேதுக்கள் வாழ்வில் ஒரு விஷயத்தில் பாதிப்பை தந்து வேறொரு வகையில் ஜாதகரை உயர்த்தும் என்று கூறுவதுண்டு. இந்த ஜாதகத்தில் நாம் கண்டது போல பிறந்து வளர்ந்த மண்ணை விட்டுச்செல்வது பாதகம் என்று  எடுத்துக்கொண்டால் அந்நிய தேசத்தில் சிறப்பான வாழ்வு அமைவது சாதகமே. ஒரே சமயத்தில் இந்த இரு வகையான அமைப்புகளையும் அனுபவிக்க இயலாது.

 

மீண்டும் விரைவில் அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.

அதுவரை வாழ்த்துக்களுடன்,

 

அன்பன்,

பழனியப்பன்.

கைபேசி: 8300124501