ஒரு மனிதனின் ஒட்டுமொத்த
வாழ்க்கையை ஒரே சம்பவத்தில், ஒரே நாளில் மாற்றிவிடும் வல்லமை படைத்தவை ராகு-கேதுக்கள். ஒரு பாவ பலனை
அதன் பாவாதிபதியும் காரக கிரகமும் ஜாதகத்தில் மறுத்திருந்தால் ராகு-கேதுக்கள் அந்த
பாவத்தோடு தொடர்புகொண்டிருந்தால் அந்த பாவ பலனை நடத்தி வைக்கும் தகுதியை
அடைகின்றன. இதனால் இதர கிரகங்களை மீறி ஜாதகருக்கு ஒரு விஷயத்தை இவை
நடத்தி வைக்கின்றன. இதனால் அப்படிப்பட்ட காலத்தில் இவை இதர கிரகங்களை
கட்டிவைக்கின்றன. இதனால் எழும் எதிர்ப்புகளை தவிடுபொடியாக்கி போர்க்குணத்தோடு அப்படிப்பட்ட
சம்பவங்களை அவை நல்லவை ஆயினும் பொல்லாதவை ஆயினும்
செய்துவைக்கின்றன. ராகுவிற்கு குரு தொடர்பிருந்தால் அப்படிப்பட்ட சம்பவ
காலங்களில் குருவே போர்க்களத்தில் இருப்பதாக எண்ணலாம். சனி, செவ்வாய் போன்ற
பாவக்கிரகங்கள் தொடர்பிருந்தால் இவை சம்பவ காலங்களில் ராகு-கேதுக்களை தொடர்புகொண்ட
கிரகங்களின் குரூரத்தன்மையை வெளிப்படுத்தும். எப்படி நடந்ததென்றே தெரியாமல்
கனவுபோல நடந்துவிடும் வாழ்க்கை சம்பவங்கள் அனைத்திற்கும் ராகு-கேதுக்கள் காரக
கிரகங்களாகின்றன.
கீழே ஒரு பெண்ணின் ஜாதகம்
ஜாதகிக்கு ராகு திசை குரு புக்தி
நடந்த போது நடந்த சம்பவங்கள் இவை. ராகு 7 , 12 பாவங்களோடு
தொடர்புகொண்டு லக்னாதிபதி சுக்கிரனின் பரணி-2 ல் நின்று திசை நடத்துகிறார். ஜாதகிக்கு
அப்போது வயது 24. ஏழாமிடத்தோடு தொடர்பாவதால் ராகு ஜாதகிக்கு திருமணம் நடத்திவைக்க
பொறுப்பேற்கிறார். 7 ஆமிட சனி குரு சாரத்தில் நின்று மகரத்தில் அமைந்த குருவை 3
ஆம் பார்வையாக பார்க்கிறார். குரு 3 ஆமதிபதி சந்திரனுடன் இணைந்து 7 ஆமிட சனி
தொடர்பு ஏற்பட்டு 11 ஆமிடாதிபதிமாகவும் வருவதால் தனது புக்தியில் ஜாதகிக்கு தனது காரக
மற்றும் பாவ தொடர்பு அடிப்படையில் திருமணம் செய்துவைக்க வேண்டிய பொறுப்பேற்கிறார்.
(3, 7, 11 ஆகியவை திருமண வாழ்வை அமைத்துத்தரும் காமத்திரிகோணங்கள் என்பது
குறிப்பிடத்தக்கது.) பாதகாதிபதி சனி வக்கிரமாகிவிட்டதால் தனது 9 ஆம் ஆதிபத்திய
பலனான பாதக பலனை கைவிட்டு காரக பலனை மட்டும் வழங்க வேண்டியவராகிறார். எனவே இந்த
ஜாதகிக்கு பாதக ஸ்தானத்தில் நிற்கும் குருவாலும் சந்திரனாலுமே பாதிப்புகள்
ஏற்படவேண்டும். சனியால் ஏற்படாது.
நீசமாகி வக்கிரம் பெறுவதால் குரு
நீசபங்கமாகிறார். வக்கிர குரு தனது ஆதிபத்தியத்தை விட்டு காரக பலனையே
பிரதானமாக செய்யும் என்றாலும், தான் நிற்கும் ஸ்தான அடிப்படையில் பாதக பலன்களையும்,
வக்கிரமாகி 8
ஆமிடம் நோக்கி வருவதால் அவமானம், கண்டம் என்ற வகை
பலன்களையும், லக்னத்திற்கு லாபாதிபதி என்பதால்
லாப ஸ்தான பலன்களையும் தனது புக்தி காலத்தில் ஒரு சேர வழங்கியாக வேண்டிய நிலையில்
உள்ளார். குரு எத்தனை இடர்பாடுகளை தந்தாலும், குருவிற்கு கேந்திரத்தில் நிற்கும்
திசா நாதன் ராகுவிற்கு குரு கட்டுப்பட்டே ஆக வேண்டும். மேலும் ராகுவிற்கு
கேந்திரத்தில் நிற்கும் கிரகங்களின் செயல்பாட்டினை ராகு கட்டுப்படுத்துவார்
என்றொரு முக்கிய விதி உண்டு. அதனோடு வக்கிரமாகி தன்னிலை இழந்த கிரகங்களை நிரந்தர
வக்கிர கிரகங்களான ராகு-கேதுக்கள் தங்களது சேவகர்களாக பயன்படுத்தும் என்றொரு
விதியும் உண்டு. இதனால் பாதகம், பாதகாதிபதி, அஷ்டமாதிபத்யம் ஆகிய பலன்களோடு 11
ஆமதிபத்திக்குரிய பலன்களையும் குரு வழங்கியாக வேண்டும். இவை அனைத்தையும் ஒரே
சம்பவத்தின்மூலம் வழங்கிவிட குருவிற்கு திசா நாதன் ராகு கட்டளையிடுகிறார்.
குரு தனது புக்தி காலத்தில் இவ்வணைத்து
பலன்களையும் திருமணம் என்ற ஒரே சம்பவத்தின் மூலம் ஜாதகிக்கு வழங்கினார். சுக்கிரன்+செவ்வாய்
இணைவால் ஜாதகி காதலித்தார். செவ்வாய்-சனி பரஸ்பர பார்வையால் ஜாதி மாறி
காதலித்தார். 9 ஆமதிபதி 9 க்கு பாதகத்தில் நின்றால் ஜாதகர் தனது குலப்பெருமையை
காப்பாற்றமாட்டார் என்பதற்கேற்ப ஜாதி மாறி காதலித்தார். காதலுக்குரிய பாவமான லக்னத்திற்கு 5 ல் காதல்
கிரகம் புதன் உச்சமாகி சூரியனோடு இணைந்து நின்ற அமைப்பாலும் ஜாதகி காதலித்தார். ஆனால் 9 ஆமிடம் பாதிக்கப்பட்டு
சிம்ம ராசிக்கு சனி+செவ்வாய் தொடர்பு ஏற்பட்டதால் தந்தை தனது காதலை ஏற்கமாட்டார்
என்றொரு மனோநிலைக்கு ஜாதகி ஏற்கனவே வந்திருந்தார். இதனால் காதலனோடு சென்று பதிவு
திருமணம் செய்துகொண்டார். பெண் ஜாதகத்தில் குரு, புதன், சந்திரன் மூன்றும் ஒன்றுக்கொன்று தொடர்பாவது வீட்டைவிட்டு ஓடிப்போய் திருமணம் செய்வதை குறிக்கும். இந்த ஜாதகத்தில் சந்திரனோடு இணைந்த குரு, புதனை 9 ஆம் பார்வையாக பார்ப்பதும், குரு+சந்திரனுக்கு திரிகோணத்தில் லக்னத்திற்கு 5 ல் புதன் வலுவாக அமைந்ததும் ஜாதகியின் திருமணம் எப்படி நடக்கும் என்பதை தெளிவாக குறிப்பிடுகிறது. தந்தை இதனால் வெகுண்டெழுந்து ஜாதகியின் திருமண வாழ்வை
முறிக்க சகல முயற்சிகளையும் எடுத்தார். சூரியனுக்கு 8 ல் மேஷத்தில்
நிற்கும் திசா நாதன் ராகு சூரியனின் முயற்சிகளை முறியடித்தார். (கவனிக்க: ஒரு கிரகத்திற்கு
அதன் ஆயள் ஸ்தானமான 8 ஆமிடத்தில் நிற்கும் கிரகம் அதன் செயல்பாட்டை
முழுமையாக கட்டுப்படுத்தும்.) இதனால் ஜாதகி அவமானப்பட்டார்.
உயிராபத்திற்கு உள்ளானார். இறுதியில் தனது காதலில் உறுதியாய் நின்று தற்போது குடும்ப
வாழ்வை நடத்தி வருகிறார்.
இப்போது திருமண கால கிரக நிலைகளை கவனிப்போம்.
ஸ்திர லக்னக்திற்கு பாதிப்பை
வழங்க வேண்டிய பாதக ஸ்தானமான 9 ஆமிடத்தில் கோட்சார ராகு வந்து நின்று குருவின்
செயல்பாட்டை தானே முன்னின்று கவனிக்கிறார். இதனால் ஜனன காலத்தில் பாதகத்தில் நின்ற
குரு, ராகுவை மீறி செயல்பட முடியாதவாறு ராகு குருவை கட்டுப்படுத்துகிறார். எதிர்ப்பை
தெரிவிக்கும் சூரியன், கோட்சாரத்தில் மேஷத்தில் ஜனன ராகு மீது நின்று கிரகண தோஷமடைகிறார்.
இதனால் ராகுவை மீறி சூரியனால் செயல்பட முடியாது. தாயாரை குறிக்கும் சந்திரன்
கோட்சாரத்தில் ஜனன கேது மீது நின்று, கோட்சார கேதுவும் கடகத்தில் நிற்பதால் தாயின் எதிர்ப்பையும் கேது முறியடிக்கிறார். ஜனன நிலையை போலவே கோட்சாரத்திலும் செவ்வாயும் சுக்கிரனும்
இணைந்திருக்கின்றனர். சுக்கிரன் உச்சம் பெற்று செவ்வாயோடு இணைந்துள்ளது வீட்டை
பிரிந்துவர ஜாதகிக்கு துணிச்சலை கொடுத்துள்ளது. ஜனனத்தில் 7 ஆமிடத்தில் நின்று
சிம்மத்தை பார்த்த சனி கோட்சாரத்தில் வக்கிரமாகி ஜனன செவ்வாய்+சுக்கிரன் மீது நிற்கிறது.
இதனால் இந்த ஜாதகி திருமணமானவுடன் தனது பாதுகாப்பிற்காக காவல்நிலையத்தை நாடினார். ஜனன
காலத்தில் குரு வக்கிரமாகி சனி நேர்கதியில் இருக்கிறது. ஆனால் கோட்சாரத்தில் சனி
வக்கிரமாகி குரு நேர்கதியில் உள்ளது. இது ஜனன கால கிரகங்களின் மனோபாவம்
மாறிவிட்டதை குறிப்பிடுகிறது.,
மீண்டும் விரைவில் மற்றொரு பதிவில் சந்திப்போம்.
அதுவரை வாழ்த்துக்களுடன்,
அன்பன்,
பழனியப்பன்.
கைபேசி: 8300124501
No comments:
Post a Comment