வாழ்க்கை தன்னகத்தே பல்வேறு
புதிர்களை புதைத்து வைத்துக்கொண்டுள்ளது. அதன் போக்கில் சென்று அந்தப்புதிர்களை
விடுவிக்க முயல்பவர்கள் சிலர். வாழ்வின் புதிர்களுக்குள் சிக்கிக்கொண்டு
அதிலிருந்து விடுபட வழி தெரியாமல் விழி பிதுங்கி நிற்பவர்கள் பெரும்பாலோனோர். அப்படி
வாழ்வின் புதிர்களுக்கு விடைகாண முயன்ற ஒரு இளைஞன் தன்னால் ஈர்க்கப்பட்ட குரு
தனக்கு வழிகாட்டுவார் என எண்ணுகிறான். அவர் மூலம் படைத்தவனை உணர அவனால் முடிந்ததா?
அவனது ஞானத்தேடல்களுக்கு விடை கிடைத்ததா? அல்லது வாழ்வில் புதிர்களுக்குள் அவன்
சிக்கிக்கொண்டுவிட்டானா? என இப்பதிவில் ஆராய்வோம்.
ஜாதகர் 1976 ல் பிறந்தவர். மேஷ லக்ன ஜாதகத்தில் லக்னத்தில் ஞானகாரகன் கேது, மோட்ச ஸ்தானாதிபதி (12 ஆமதிபதி) குருவுடன் இணைந்துள்ளது. இவரது பிறப்பின் நோக்கத்தை, ஞானத்தேடல்களில் ஜாதகர் ஈடுபடுவார் என்பதை குறிப்பிடுகிறது. மனோ காரகன் சந்திரன் மறை பொருளை குறிக்கும் 8 ஆமிடத்தில் நீசமாகி, சந்திரனுக்கு 1௦ல், சந்திரனுக்கு திக்பலம் தரும் வகையில் அமைந்த செவ்வாயால் நீச பங்கமும் ஆகியுள்ளது. இதனால் இவரது மனம் மறைப்பொருள் சார்ந்த வகையில் சிந்திக்கும் என்பது புலனாகிறது. தொடர்பு ஸ்தானமான 7 ஆமிடத்தில் மற்றொரு மறைபொருள் சார்ந்த மோட்ச காரகன் ராகு நிற்பதால் இவரது தொடர்புகள் ஞானம், மோட்சம், இறைவழி சார்ந்ததாகவே அமையும். லக்னாதிபதி செவ்வாய் லக்னத்தில் உள்ள கேது,குருவிற்கு திரிகோணத்தில் சூரியனின் வீட்டில் அமைந்து கேதுவோடு சேர்ந்த குருவின் பார்வையை பெறுவதால் ஒரு உயர்ந்த இடத்தில் (மடத்தில்) ஞானத்தை தேடும் குருவின் தொடர்பு ஜாதகருக்கு கிடைக்கும் என்பதை .குறிப்பிடுகிறது. ராசியிலும் நவாம்சத்திலும் 7 ஆமிடம் பாவிகளால் கெட்டு, குருவின் பார்வையை பெறுகிறது. இதனால் ஜாதகருக்கு திருமண வாழ்வு சிறப்பானதாக இருக்க வாய்ப்பில்லை.
ஜாதகர் 1௦ ஆம் வகுப்பிற்கு மேல்
படிக்க விருப்பமின்றி ஞானத்தேடலில் சனி திசையில் லக்னத்தில் நின்ற குருவின்
புக்தியில் வீட்டை விட்டு கிளம்பி தன்னை ஈர்த்த குருவின் ஆசிரமத்தை அடைந்தார். குருவை தரிசித்த ஜாதகர். அங்கேயே தங்கிவிட எண்ணினார்.
ஆசிரமத்தில் தங்கி பயிற்சி பெற ஒரு கணிசமான தொகையை செலுத்த வேண்டியிருந்தது.
அதற்காக ஜாதகர் ஆசிரமம் இருந்த ஊரில் ஒரு குதிரை லாயத்தில் ஓரிரு வருடங்கள் சனி
திசை முடியும் வரை வேலை பார்த்தார். ஜாதகரின் விருப்படியான விஷயங்களை
ராசியைக்கொண்டே அளவிட வேண்டும். ஜாதகரின் கர்மவழி விஷயங்களை லக்னத்தை கொண்டு அளவிட
வேண்டும். இந்த அடிப்படையில் ஜாதகரின் விருப்பத்தை குறிக்கும் ராசிக்கு 5
ஆமதிபதி குரு 6 ல் அமைந்து சனி பார்வை பெற்றதால் ஜாதகர் தனது விருப்பம் நிறைவேற
வேலை செய்ய வேண்டியிருந்தது. வேலை செய்து கிடைத்த பணத்தில் ஜாதகர் ஆசிரமத்தில்
தங்கி ஆன்மீக பயிற்சி பெற்றார். ஜாதகருக்கு புதன் திசை துவங்கி சுய புக்தி முடியும்
வரை அது நீடித்தது.
ஜாதகரின் குரு காமத்தை நுகர்ந்து கடந்து பிறகு
ஆன்மீகப்பாதைக்கு திரும்புமாறு போதித்தார். ஏனெனில் காமம் கொண்ட மனம் எப்போதும்
தெளிவடையாது. எனவே காமத்தை எதிர்கொண்டு அதை கடந்து வருமாறு தன்னை
பின்பற்றுபவர்களுக்கு கூறினார். இதனால் ஜாதகர், தன்னைப்போன்று ஆஸ்ரமத்திற்கு வந்த
சக ஆசிரம வாசிகளுடன் காமத்தை நுகர்ந்தார். சுகஸ்தானாதிபதியான சந்திரன் உடலுறவை
குறிக்கும் 8 ஆமிடத்தில்
சுகஸ்தானத்தில் அமைந்த சனியின் அனுஷம்-1 ல் அமைந்துள்ளது. சனி திருட்டு,
குறை, முறையற்ற விஷயங்களுக்கும், சந்திரன் முறையற்ற உறவிற்கும் காரக
கிரகங்களாகும். புதன் காமத்திரிகோணமான மிதுனத்தில் நண்பர்கள் சூரியனோடும்
சுக்கிரனோடும் அஸ்தங்கமடையாமால் சிறப்பாக அமைந்துள்ளது. புதன் தனது திசையில்
ஜாதகரின் மனம் காமத்தின்பால் இருக்குமாறு பார்த்துக்கொண்டார் என்றால் அது
மிகையல்ல.சிந்தனை ஸ்தானமான 5 ஆமதிபதி சூரியன், திசாநாதன் புதனோடு இணைந்ததால்
ஜாதகரின் மனம் காமத்தில் திளைத்தது.
ஜாதகரின் காம ஸ்தானமான 7 ஆமிடத்தில்
ராகு நிற்கிறார். இதனால் 7 ஆமிட தொடர்புகள் வளரும். ஜாதகர் ஆசிரமத்தை விட்டு
வெளியேறி அண்டை மாநிலம் ஒன்றில், ஒரு மகனோடு உள்ள விதவை ஒருவருடன் திருமணமாகாமால்
இணைந்து வாழ்கிறார். ராகு விதவையையும் குரு ராகுவை பார்ப்பதால் அவர் குழந்தை
உள்ளவராகவும் இருந்தார். 7 ஆமிட ராகு 7 ஆமதிபதி சுக்கிரன் போலவே செயல்படுவார்.
புகன் திசையில் குருவின் சாரம் புனர்பூஷம்-3 ல் நிற்கும் சுக்கிரனின் புக்தியில்
அந்த தொடர்பு அமைந்தது. சுக்கிரன் அஸ்தங்கமாகியுள்ளது குறையுள்ள அதாவது விதவையான
பெண்மணி என்பதையும், குரு சாரத்தில் அமைந்ததால் அவர் குழந்தையுடனும் இருந்தார்
என்பதையும் தெரிவிக்கிறது. குரு திசையில் ஜாதகருக்கு ஏற்பட்ட ஞானத்தேடலை புதன்
திசை தனது தன்மையோடு இணைந்து ஜாதகருக்கு புகட்டினார். எனினும் ஞானத்தேடலை ஜாதகர்
கைவிடவில்லை. காரணம், புதன் ராசிக்கு 8 ஆமதிபதி. அதே சமயம் புதன் காம
திரிகோணாதிபதியாகி காதல் ஸ்தானாதிபதி சூரியனோடு இணைந்ததால் ஞான அனுபவத்திலும், தன்
மீது காதல்கொண்டு தன்னை நாடிவந்த பெண்களால் காம அனுபவத்திலும் ஒன்றுபட்ட
சூழல்களால் ஜாதகர் திக்குமுக்காடினார். சில காலங்களுக்குப்பிறகு மீண்டும் பழைய ஆசிரமத்திற்கு
திரும்பினார். அதன்பிறகு ஆசிரமத்தில் தவிர்க்க முடியாத முதன்மை நபர்களில்
ஒருவரானார். ராஜ கிரகமானா சூரியனோடு திசா நாதன் புதன் சேர்ந்ததால் ஜாதகரின்
ஞானத்தேடலில் ஒரு உயர்ந்த தன்மை வெளிப்பட்டது. அதே சமயம் காமமும் ஜாதகரை வழிய
வந்து அணைத்துக்கொண்டது.
மோட்சத்திரிகோணமான 4 ஆமிட சனியின் பிற்பகுதியில்
ஜாதகரின் மனம் ஞானத்தை நோக்கி கடினத்துடன் திரும்பியது என்றால் புதன் திசை அதை
காதலுடன் உயர்த்தியிருந்தது. ஒரு வழியாக ஜாதகருக்கு புதன் திசை முடிந்து ஞான
காரகன் கேதுவின் திசை 2012 முற்பகுதியில் துவங்கியது. ஞான
காரகனானாலும் காமத்திரிகோணத்தில் நிற்கும் சுக்கிரனின் பரணி-2 ல் நின்ற கேது
ஞானத்தோடு காமத்தொடர்புகளையும் ஜாதகருக்கு வழங்கியது கேது திசையில் ஜாதகர்
ஆசிரமத்தின் முதன்மை நிர்வாகியாக, தியானப்பயிற்சியாளராக உயர்ந்தார். அதே சமயம்
கிறிஸ்தவர்களை குறிக்கும் கேது திசையில் அயல் தேச பெண்மணி ஒருவருடன் ஜாதகர்
திருமணம் செய்துகொள்ளாமல் ஓரிரு வருடங்கள் இணைந்து வாழ்ந்தார். கேதுவின்
திரிகோணத்தில் காதல் பாவமான 5 ல் லக்னாதிபதி செவ்வாய் அமைந்தது அதற்கு காரணம். பிற்பாடு
தன்னை மிகவும் நேசித்து, தன்னை திருமணம் செய்துகொண்டு தனது தேசத்திற்கு வந்துவிடுமாறு
மன்றாடிய அப்பெண்ணின் வேண்டுகோளை கனத்த இதயத்துடன் நிராகரிக்கிறார். கேது திசையில்
குரு புக்தியில் அது நிகழ்ந்தது. குரு ஜாதகரின் பிறப்பின் நோக்கம் என்ன என்று
தெளிவுபடுத்தி அந்த தொடர்பை துண்டிக்க வைக்கிறார். ராகு-கேதுக்களின் இணைவில்
அவைகளை மீறி செயல்படக்கூடிய ஒரே கிரகமாக திகழ்வது கிரகங்களிலேயே குரு ஒருவர்தான்
என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. கேது திசை முடிந்து ஜாதகர் சுக்கிர
திசையில்தான் உள்ளார். சுக்கிரன் காமத்திரிகோணமான 3 ஆவது பாவத்தில்தான் உள்ளார். 5
பாகை இடைவெளியில் சுக்கிரனுக்கு அஸ்தங்கம் பெரிதாக பாதிப்பைத்தராது. சுக்கிர
திசையிலும் ஜாதகர் ஆன்மீக மற்றும் காம ரீதியான தொடர்பில்தான் தற்போதும் இருப்பார்.
பொத்திப்பொத்தி வளர்த்த
சித்தார்த்தனை புத்தனாக்கியதும், செல்வத்தில் திளைத்த பட்டினத்தாரை திருவோடேந்த
வைத்ததும் கிரகங்களின் லீலைகளே. கடவுளைதேடிச்சென்ற நமது ஜாதகரை ஞானத்திலும்
காமத்திலும் திளைக்கவைத்துக்கொண்டிருப்பதும் அதே கிரகங்களே. நாம் எதை அடைய வேண்டும்,
யாரை எப்போது தொடர்புகொள்ள வேண்டும் என்பதை தீர்மானிப்பதும் கிரகங்களே. இது
புரிந்தால் இறை புரியும், இயற்கை புரியும், ஞானம் சித்திக்கும், மனம் அமைதி பெறும்.
ஜோதிடம் அதற்கு ஒரு வழிகாட்டி. ஜாதகம் அதற்கொரு சாட்சி பூதம்.
மீண்டும் மற்றொரு பதிவில்
விரைவில் சந்திப்போம்,
அதுவரை வாழ்த்துக்களுடன்,
அன்பன்,
பழனியப்பன்,
கைபேசி: 8300124501.
உங்களின் கருத்து சரி அய்யா
ReplyDelete