Sunday, 8 November 2020

உயர்கல்வியும் எட்டாம் பாவமும்!

 


ஜோதிடத்தில் உயர்கல்வியை குறிக்கும் பாவம் ஒன்பதாம் பாவமாகும். மாணவர்களுக்கு பள்ளிக்கல்வியை முடித்து உயர் கல்விக்காக கல்லூரி செல்லும்போது எட்டாம் பாவத்தில் இருந்து ஒரு கிரகம் திசா-புக்தி நடத்தினாலோ அல்லது எட்டாம் பாவாதிபதி திசா-புக்தி நடந்தாலோ அப்போது உயர்கல்வியில் தடை ஏற்படும். ஏனெனில் 8 ஆம் பாவம் என்பது ஒன்பதாம் பாவத்தின் விரைய பாவமாகும்.அப்படியானதொரு சூழலில் நினைந்த உயர்கல்வி வாய்ப்புகள் பாதிக்கப்படும். மாணவர்கள் தங்கள் எதிர்காலத்தை தீர்மானிக்கும் இந்தக்காலகட்டமே மிக முக்கியமானதொரு காலமாகும். இந்தச் சூழ்நிலையில் பெற்றோர்கள் சரியான வழிகாட்டலை தங்கள் குழந்தைகளுக்கு அளிக்க வேண்டும். முன்னதாக தங்கள் குழந்தைகளின் உயர்கல்வி சூழல்களை தகுந்த ஜோதிடர்களின் துணைகொண்டு ஆராய்ந்து வைத்திருப்பது பல சிரமங்களை தவிர்க்க பெரிதும் உதவும். உயர்கல்வியில் சிரம சூழல் யாருக்கு ஏற்படும் எனில் ஒன்பதாம் பாவம் பாதிக்கப்பட்டவர்களுக்கே அதிகம் ஏற்படும். 9 ஆம் பாவம் பாதிக்கப்பட்டு 8 ஆம் பாவ கிரக திசை-புக்தி நடக்கையில் அங்கு உயர்கல்வி தடுமாறும். அப்போது குறிப்பிட்ட காலம் வரை அவர்களை ஆற்றுப்படுத்தி உரிய மறு வாய்ப்புகளை அடையாளம் காட்டவேண்டியது ஒவ்வொரு பெற்றோரின் கடமையாகும். இப்பதிவின் உயர்கல்வி வாய்ப்புகளில் 8 ஆமிடத்தின் தாக்கம் எப்படி செயல்படுகிறது என்பதை நாம் ஆராயவிருக்கிறோம்.  

கீழே ஒரு மாணவியின் ஜாதகம்.

2002 ல் பிறந்த இந்த மாணவிக்கு 2018 இறுதியிலிருந்து சிம்ம லக்னத்திற்கு 8 ஆமிடத்தில் மீனத்தில் ரேவதி-2 ல் நிற்கும் 9 ஆமதிபதி செவ்வாயின் திசை நடக்கிறது. ஜாதகி 2௦19 ல் 12 ஆம் வகுப்பு முடித்து மருத்துவம் பயில எண்ணியிருந்தார். உயர் கல்வியை குறிக்கும் 9 ஆமதிபதி செவ்வாய், 9 க்கு விரையத்தில் மறைந்துள்ளார். ஜாதகி நன்றாக படிக்கும் மாணவி ஆயினும் மருத்துவம் பயில நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற இயலவில்லை. இதனால் தனது எண்ணம் ஈடேற ஓராண்டு பயிற்சி எடுத்துக்கொண்டு மீண்டும் இவ்வாண்டு தேர்வு எழுதினார். ஆயினும் இவ்வாண்டும் தேர்ச்சி பெற இயலவில்லை. செவ்வாய் இங்கு பாக்யாதிபதி ஆயினும் 8 ல் மறைந்து திசை நடத்துவதால் உயர்கல்வியை தடை செய்கிறார். 8 ஆமிட செவ்வாய் தனது எதிரி புதனின் ரேவதி நட்சத்திரத்தில் நிற்பதால் புதனின் காரக வகையில்தான் அதாவது கல்வி சார்ந்த வகையில்தான் தனது பாதிப்பை வழங்கவேண்டும் என்பது தெளிவாகிறது. செவ்வாய் பிடிவாத காரகன் ஆகிறார். இதனால் ஓராண்டு கல்வியை பிடிவாதமாக மறுத்து மீண்டும் முயன்றார். உயர்கல்விக்கு உரிய 9 ஆம் பாவத்திற்கு பாவ கர்த்தாரி யோகம் இருப்பது உயர்கல்வியில் ஏற்படும் தடுமாற்றத்தை தெளிவாக உணர்த்துகிறது. இங்கு செவ்வாய் பாக்யாதிபதியாயினும் 8 ஆமிட பலனை முதலில் வழங்கிவிட்டு பிறகே தனது 9 ஆம் பாவ பலனை வழங்குவார். இந்த அடிப்படையில் முதலில் உயர்கல்வியை தடைசெய்த அதே செவ்வாய் தற்போது உயர்கல்வியை தொடர வழிவகுத்துள்ளார். தற்போது ஜாதகி கல்லூரியில் இளங்கலை முதலாமாண்டு சேர்ந்துள்ளார்.  

இரண்டாவதாக மற்றொரு மாணவியின் ஜாதகம்.


ஜாதகி 1994ல் பிறந்தவர். இந்த ஜாதகமும் முதல் ஜாதகத்தைப்போன்றே சிம்ம லக்ன ஜாதகம்தான். ஜாதகிக்கு 2௦௦6 முதல் 2023 வரை புதன் திசை நடக்கிறது. புதன் இந்த ஜாதகத்தில் 8 மறைந்து திசை நடத்தினாலும் அவர் தனது திசையின் ஒரு பகுதி பலனை 5 ஆமிடத்திற்கும் பிரித்து வழங்க வேண்டும். ஏனெனில் புதன் இரு வீடு ஆதிபத்தியம்கொண்ட  குருவின் வீட்டில் இருந்து திசை நடத்துகிறார். புதன் ஜாதகத்தில் நீசமானாலும் அவர் லக்னத்திற்கு 7 ல் திக்பலத்தில் நிற்கும் சனியின் உத்திரட்டாதி-1 ல் நிற்கிறார். இதனால் புதனுக்கு நீச பங்கம் ஏற்படுகிறது. கூடவே சனியின் திக்பல வலிமை புதனுக்கும் கிடைக்கிறது. இதனால் புதன் வலுவடைகிறார். இங்கு முக்கியமாக குறிப்பிடத்தக்க ஒரு விஷயம் புதனும் சூரியனும் சேர்ந்து புத-ஆதித்ய யோகத்தில் உள்ளனர். பொதுவாக புதனும் சூரியனும் சேர்ந்து இதர இடங்களில் அமைவதைவிட 1, 4, 8  ஆகிய மூன்று இடங்களில் ஒன்றில் இணைந்து நின்றால்தான் அங்கு புத-ஆதித்ய யோகம் மிகச்சிறப்பாகச் செயல்படும். இந்த ஜாதகத்தில் புத-ஆதித்ய யோகம் மிகச்சிறப்பாக செயல்படுகிறது.

இந்த ஜாதகத்தில் உயர் கல்வியை குறிக்கும் 9 ஆமிடத்தில் சுக்கிரன் சிறப்பாக அமைந்து தன வீட்டில் அமைந்த குருவின் பார்வையை பெறுகிறார் என்பது மிகச்சிறந்த அமைப்பாகும். இதனால் ஜாதகிக்கு உயர்கல்வி மிகச்சிறப்பாக வாய்க்கும். 8 ஆமிடம் சிறப்பாக அமைந்தால் அது மறைந்திருக்கும் பல விஷயங்களை ஆராய்ந்து அறிந்து புகழ்பெற்ற வைக்கும் அமைப்பாகும். இந்த ஜாதகத்தில் 8 ஆமிட புதன் நீச பங்கம் பெற்று புத-ஆதித்ய யோகத்தில் அமைந்தது ஜாதகிக்கு தீவிர ஆராய்ச்சி மனமிருக்கும் என்பதை குறிப்பிடுகிறது. 8 ஆமிடம் என்பது நீர் ராசியாவதால் ஜாதகி சொந்த ஊரை விட்டு கண்காணாத இடத்தில் கடல்கடந்த தேசத்தில் மறைந்துதான் தனது உயர்கல்வியை தொடரவேண்டும் என்பதையும் குறிப்பிடும். இந்த ஜாதகி பொறியியலில் BE (INDUSTRIAL BIO TECHNOLOGY) யை முடித்தார். புதன் செவ்வாய் சேர்க்கை இதற்கு வித்திட்டது என்றால் அது மிகையல்ல. அறிவியலின் அனைத்து பிரிவுகளுக்கும் காரக கிரகமாக 9 ஆமிடத்தில் அமைந்த சுக்கிரன் திகழ்வது இங்கு குறிப்பிடத்தக்கது. பொறியியல் கல்வி பயிலும்போது ஜாதகி உயர்கல்விக்காக வெளிநாடு செல்ல தேர்வெழுதி அதில் வெற்றியும் பெற்று புதன் திசையில் செவ்வாய் புக்தியில் ஜாதகி ஜெர்மன் சென்று MS (MOLECULAR BIO TECHNOLOGY) பயின்றார். ஜாதகி இந்த துறையை தேர்ந்தெடுக்க காரணம் புக்திநாதன் செவ்வாய் குரு சாரம் பூரட்டாதி-4 பெற்று, குருவும் ராகுவும் தங்களுக்குள் சாரப்பரிவர்த்தனை (குரு-சுவாதி-4 & ராகு விசாகம்-4)  பெற்றதுதான் காரணமாகும். MOLECULAR பிரிவு கல்வியை இங்கு ராகு குறிக்கிறார். ஜாதகி ஜெர்மனியில் MS படிக்கும்போதே சுவிட்சர்லாந்தில் தனது ஆய்வுக்கல்வியை (PhD) பயில்வதற்கான  வாய்ப்புகளை உருவாக்கிக்கொண்டார். ஜாதகி தற்போது சுவிட்சர்லாந்தில் MOLECULAR BIO ENGINEERING  ல் தனது ஆய்வுக்கல்வியை  தொடர்ந்து வருகிறார். 

பொதுவாக 8 ஆமிடம் என்பது உயர்கல்வியை தடை செய்யும் அமைப்புதான் என்றாலும் ஜாதகத்தில் உயர்கல்வியை குறிக்கும் பாக்யஸ்தானத்தின் அமைப்பையும் 8 ஆமிட கிரகம் வேறு எந்த பாவங்களுடன் தொடர்புகொள்கிறது என்பதை கவனித்தே உயர்கல்வியில் ஏற்படும் விளைவுகளை கூறவேண்டும். இந்த ஜாதகத்தில் 8 ஆமிட கிரகம் கண்காணாத கடல்கடந்த தூர தேசத்தில் தனது உயர்கல்வியை பயில ஜாதகிக்கு வகை செய்துள்ளதை கவனிக்கவேண்டும். (8 ஆமிடம் – மறைந்துபோதல், கடல்கடந்த தூர தேசம் சென்றுவிடுவதை குறிக்கும்.)

 

மீண்டும் விரைவில் அடுத்த பதிவில் சந்திக்கிறேன்,

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்.

கைபேசி: 8300124501

1 comment:

  1. எந்த துறை தேர்ந்தெடுத்து படிக்கலாம் மெடிக்கல் /இன்ஜினீயர், (பிள்ளைகளுக்கு ),பார்க்க கட்டணம் எவ்வளவு (anandananimator@gmail.com 9940188519

    ReplyDelete