Monday 23 November 2020

முயல் வளர்ப்பு லாபம் தருமா?

 


அன்பர் ஒருவர் முயல் பண்ணை வைத்து சம்பாதிக்க ஆசைப்படுகிறேன். எனது ஜாதகப்படி அது லாபகரமானதாக இருக்குமா? என்ற கேள்வியுடன் தொடர்புகொண்டார். இது ஒரு சாதாரண தொழில் ரீதியான கேள்விதான் எனினும் தொடர்புகொண்ட நபர் தன்னை ஒரு அரசுப்பள்ளி ஆசிரியர் என்று அறிமுகப்படுத்தியிருந்தார். பொதுவாக ஆசிரிய தொழில் புரிவோர் குருவின் ஆதிக்கத்தில் வருபவர்கள். அரசுப்பள்ளி ஆசிரியர் என்றால் ஜாதகத்தில் ஜீவன பாவங்களுடன் குருவும் சூரியனும் தொடர்புகொண்டிருக்க வேண்டும். குருவும் சூரியனும் சத்வ குணத்தை சேர்ந்த கிரகங்களாகும். அப்படி இருக்கையில் இவர் எப்படி முயல் பண்ணை வைத்து அதை மாமிசமாக்கி உண்ணக்கொடுத்து தனது கர்மாவிற்கு பாதகத்தை உண்டாக்கிக்கொள்கிறாரே என்று எண்ணினேன். முன்பொரு முறை என்னை தொடர்புகொண்ட தென்மாவட்டத்தை சார்ந்த பிராமண வகுப்பை சார்ந்த நபர் தனது நிலத்தில் மீன் வளர்ப்பு செய்யலாமா? என்று கேள்வி கேட்டு என்னை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருந்தார். கலிகாலத்தில் இவை சாதாரணம் என்று எண்ணியபடி ஜாதகத்தை ஆராய்ந்தேன்.

கீழே ஜாதகம்.


1) ஜாதகத்தில் வருமானத்தை தரும் 2 ஆம் பாவத்தில் குரு, ஜீவன காரகன் சனி சாரத்தில் அனுஷம்-2 ல் நிற்கிறார். இதனால் ஜாதகரின் ஜீவன வகையில் குருவின் தன்மை இருக்கும்.

2) குரு 1௦ ஆமிடத்தையும், சனி 1௦ க்கு 1௦ ஆன 7 ஆமிடத்தை பார்ப்பதாலும் ஜாதகர் ஆசிரியராக பணிபுரிய ஜாதக அமைப்பு உள்ளது.

3) புதன் 1௦ ஆமதிபதி சந்திரனின் சாரத்தில் ரோஹிணி-2 ல் நின்று,  2 & 7 ஆமதிபதி செவ்வாயோடு இணைந்து குரு பார்வை பெற்று 2, 7, 1௦ ஆமிடத்தோடு தொடர்புகொண்டு வர்கோத்தமம் பெற்றதால் ஜாதகர் ஆசிரியர் பணி புரிவார் என்பதை அனுமானிக்கலாம்.

4) 1௦ ஆமிடத்தில் அமைந்த சுக்கிரன் புதனின் ஆயில்யம்-1 பெற்று, 1௦ ஆமதிபதி சந்திரன் புதன் வீட்டில் கன்னியில் 2 ஆம் பாவத்திற்கு லாபத்தில்  அமைந்ததாலும், இப்படி அமைந்த 1௦ ஆமதிபதி சந்திரனுக்கு திரிகோணத்தில் புதன் சந்திரனின் சாரத்தில் அமைந்ததாலும் ஜாதகரின் பணி கல்வி தொடர்பானது என்பது தெளிவாகிறது. 1௦ ஆமிட கிரகமான சுக்கிரன் நவாம்சத்தில் குரு வீட்டில் நிற்பது கவனிக்கத்தக்கது.  

5) ராசிக்கு 1௦ ல் ராசியாதிபதி புதனின் வீட்டில் திக்பலத்தில் அமைந்த சூரியனால் ஜாதகர் கல்வி தொடர்பான அரசுத்துறையில் பணிபுரிகிறார் என்பதை அனுமானிக்கலாம். இந்த சூரியன் நவாம்சத்தில் சனியோடு இணைந்து நிற்பதும் ஜீவனம் அரசுவகை என்பதை குறிப்பிடுகிறது.

6) இன்னும் எளிமையாக தசாம்சத்தில் 1௦ ஆம் அதிபதி சந்திரன் குரு வீட்டில் அமைத்து, 1௦ ஆமிடத்தில் சூரியன் அமைந்து, 1௦ க்கு 1௦ ஆமிடமான (பாவத்பாவம்) 7 ஆமிடத்தை அதன் அதிபதி செவ்வாயோடு இணைந்த குரு பார்ப்பதாலும் ஜாதகர் அரசுப்பள்ளி ஆசிரியர் என்பதை அருதியிட்டுக்கூறுகின்றன.  

ஒருவரது தொழிலை அனுமானிக்க எத்தனை உபாயங்கள் பாருங்கள். இங்கு கூறியுள்ளவை சில மட்டுமே. இப்படி ஜாதகம் அமையப்பெற்றவர் ஏன் தற்போது முயல் பண்ணை வைக்க எண்ணுகிறார் என ஆராய்வோம் வாருங்கள்.

ஜாதகருக்கு தற்போது குரு திசையில் சந்திர புக்தி நடக்கிறது. குரு ஜாதகத்தில் உணவை குறிக்கும் 2 ஆமிடத்தில் குரு வக்கிரம் பெற்று அதன் அதிபதி செவ்வாயால் கால புருஷனுக்கு உணவு ஸ்தானமான ரிஷபத்தில் இருந்து பார்க்கப்படுகிறார்.  குரு செவ்வாய் பார்வை பெற்றதால் தோஷமான நிலையில்தான் உள்ளார். அதுவும் விருட்சிகத்தில் அமையும் பாதிக்கப்பட்ட குரு வெளிப்படையாக அல்லாமல் மறைமுகமாக கெடு செயல்களில் ஜாதகரை ஈடுபட வைக்கும். ஏனெனில் விருச்சிகம் கால புருஷனுக்கு 8 ஆமிடமான மறைவு ஸ்தானமாகும். பாவியின் வீட்டில் பாவியின் பார்வையில் குரு உச்சமாகி வக்கிரமானதால்  நீச்சத்திற்கொப்பான நிலை பெற்ற சனியின் சாரமும் பெற்று அது 2 ஆம் பாவமும் ஆனதால் ஜாதகர் இப்படி ஒரு கொலைக்கு உயிர் பிராணியை வளர்த்துக்கொடுக்கும் தொழில் செய்வார் என்பது புலனாகிறது. 2 ஆம் பாவம் என்பது 1௦ அதிபதி சந்திரன் நீசமாகும் ராசி என்பதால் ஜாதகர் இப்படி ஒரு நீசத்தொழிலுக்கு எண்ணம்கொண்டுள்ளார். இங்கு முக்கியமாக குறிப்பிட வேண்டியது பசு, யானை, எருமை, குதிரை போன்று வாழ்க்கைக்கும் ஜீவனத்திற்கும் உறுதுணையாக இருக்கும் பிராணிகளை 4 ஆமிடத்தைக்கொண்டும் இதர வகை பிராணிகளை அதாவது உணவுக்காக வளர்ப்பது, பாதுகாப்பிற்காக நாய் வளர்ப்பது போன்றவற்றை 6 ஆமிடத்தைக்கொண்டும் அறியவேண்டும். பொதுவாக பண்ணை வளர்ப்பு முறையில் வளர்க்கப்படும் பிராணிகளை 4 ஆமிடம் குறிப்பிடும்.

இந்த ஜாதகத்தில் நீச்சதிற்கொப்பான நிலை பெற்ற 4 ஆமதிபதி சனியின் சாரம் அனுஷத்தில் வக்கிரமான 6 ஆமதிபதி குரு நிற்கிறார். இதனால் ஜாதகர் வியாபாரத்திற்காக பிராணிகளை பண்ணை முறையில் வளர்க்க எண்ணுகிறார் என்பது தெரிகிறது. இதில் ஜாதகர் ஏன் முயல் வளர்க்க எண்ணுகிறார் என்ற கேள்வி எழுகிறது. முயலை குறிக்கும் காரக கிரகம் சந்திரனாகும். ஜாதகருக்கு தற்போது குரு திசையில் சந்திர புக்தி நடக்கிறது. இதனால் ஜாதகர் முயல் வளர்க்க எண்ணுகிறார். புதனின் வீட்டில் சந்திரன் 2 க்கு லாபத்தில் அமைந்து, சந்திரனின் சாரத்தில் நிற்கும் புதனாலும் ஜாதகரின் வியாபர நோக்கம் புலனாகிறது. எப்படிப்பார்த்தாலும் குருவின் அம்சத்தில் போதனை செய்து சம்பாத்தியம் செய்யும் ஒருவர் உணவிற்காக பிராணிகளை வளர்த்துக்கொடுப்பது பாதகமே என்றொரு நெருடல் எழுகிறது. சரி இதன் விழைவு என்ன என ஆராய்வோம். ஜாதகத்தில் சந்திரன் விரைய ஸ்தானமான 12 ஆமிடத்தில் அமைந்துள்ளார். இதனால் சுய தொழில் செய்தால் ஜாதகர் தனது பொருளாதாரத்தை இழப்பது உறுதி. மேலும் 12 ஆமிடத்தில் நிற்கும் கிரகம் ஒருவர் தனது கர்மாவின் அடிப்படையில் பெற்ற சாபத்தை குறிப்பிடும் கிரகமாகும். ஜாதகருக்கு சந்திரனின் காரகமான மாத்ரு வகை சாபம் உள்ளது. ஜாதகர் இந்த தொழிலை செய்தால் அது அதிகமாகி ஜாதகரை பழிவாங்கும். இதை தவிர்க்க ஜாதகத்தில் அமைப்பு உள்ளதா? என காண்போம்.

ஜாதகத்தில் 2 ல் நிற்கும் 6 ஆமதிபதி குரு வக்கிரமாகி, குருவின் சார நாதனும் ஜீவன காரகனுமான சனியும் வக்கிரமாகியுள்ளதால் ஜாதகர் தொழில் விஷயத்தில் மற்றவர்களின் பேச்சை ஒருபோதும் கேட்க மாட்டார். இதனால் ஜாதகர் ஜோதிடர்கள் மட்டுமல்ல நண்பர்களிடமும் ஆலோசனை மட்டுமே கேட்பார். ஆனால் முடிவை ஜாதகர் ஏற்கனவே தீர்மானித்திருப்பார். எனிவே இந்த பாதக தொழிலை செய்யாதீர்கள் என்று இவருக்கு ஆலோசனை சொல்வது வீண். மேலும் கால புருஷனுக்கு 8 ஆமதிபதியான, செவ்வாய், லக்னத்திற்கு 8 ஆமிடதிலிருந்து திசா நாதன் குருவை பார்ப்பதால் ஜாதகர் இந்த தொழிலை உறுதியாக மற்றும் பிடிவாதமாகச்செய்வார். அதனால் ஏற்படும் நஷ்டத்தையும், சாபத்தில் விளைவையும் ஜாதகர் அனுபவிப்பார். 1௦ க்கு பாதகத்தில் நிற்கும் அடுத்து வரக்கூடிய செவ்வாய் புக்தியில் அது நடக்கும். தற்போது ஜனன செவ்வாய் மற்றும் குரு மீது கோட்சாரத்தில் நிற்கும் ராகு-கேதுக்களும், லக்னத்திற்கு 4 ல் இணைந்து 1௦ ஆம் பாவத்தை பார்க்கும் குருவும் சனியும் இதை உறுதி படுத்துகின்றன.

 

மீண்டும் விரைவில் மற்றொரு பதிவில் சந்திக்கிறேன்,

 

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்.

கைபேசி: 8300124501.

  

No comments:

Post a Comment