Sunday, 3 January 2021

காத்திருந்து... காத்திருந்து...

 

காதலித்தவரையே துணைவராக அடைவது ஒரு வரம். அடைந்தவரை காதலிப்பது நிம்மதி. இவ்விரண்டிற்குமிடையே இன்றைய இளைஞர்களின் வாழ்க்கை அலைபாய்கிறது. ஒருவரை நன்கு அறிந்து திருமணம் செய்துகொள்ளும் இன்றைய இளைஞர், இளைஞிகளின் முடிவு வரவேற்கத்தக்கது. எனினும் காதலிலும் சில வேதனைகளும் வெற்றிகளும் உண்டு. அனைத்திற்கும் ஒரே காரணம், வாழ்க்கையை அதன் இயல்பில் அனுபவிக்க எண்ணாமல் தங்கள் எண்ணப்படி மாற்றியமைத்துக்கொள்ளலாம் என எண்ணுவதே. இது சாத்தியமானால் இறைவனுக்கு இங்கே இடமில்லை. காதலால் எந்தகைய ஜாதகத்தினர் சிரமப்படுவர் என்பதை தெரிந்துகொண்டால் அவர்கள் தகுந்த உறவுகள் மற்றும் நண்பர்களின் உதவியுடன் தங்கள் துணையை தேர்ந்தெடுக்கலாம். ஜோதிடமும் அதற்கு உதவும்.


காதலை குறிக்கும் பாவம் 5 ஆம் பாவமாகும். ஐந்தாம் பாவம் 7 ஆம் பாவத்துடன் தொடர்புகொண்டால் மட்டுமே காதல் திருமணத்தில் முடியும். காதலின் வெற்றியை 3,5,7,11 ஆகிய பாவங்களின் ஒருங்கிணைவு தீர்மானிக்கிறது. காதலில் தோல்வியை 4,6,1௦, ஆகிய பாவங்களும் கேதுவும் தீர்மானிக்கின்றனர். காதல் யாருக்கு தீமையை தரும் என்பதை இப்பதிவில் காண்போம்.             

                    


மேற்கண்ட ஜாதகம் ஒரு பெண்ணினுடையது. விருச்சிகம் கால புருஷனுக்கு எட்டாம் பாவம் என்பதால் தனது எண்ணங்களை எளிதில் வெளிப்படுத்தாது மறைக்கக்கூடியது. அதுவும் லக்னமும் ராசியும் ஒன்று என்பதால் இக்குணம் அதிகமிருக்கும். சந்திரன் நீசமாவதால் பெற்றோர்களுக்கு பாதிப்பைத்தரும் ராசியாகும். இந்த ஜாதகி தனக்கு வந்த வரன்களை எல்லாம் பிடிக்கவில்லை என பல ஆண்டுகள் மறைத்தார். ஜாதகத்தில் லக்னாதிபதி மறைவு ஸ்தானமான எட்டாமிடம் மிதுனத்தில் வக்கிர கதியில் அமைந்திருப்பதை காண்க. இயல்பாகவே பிடிவாத காரகனான செவ்வாய் வக்கிரமானால் பிடிவாத குணம் மேலும் கூடும். இதனால் பிடிவாதமாக தனக்கு சாதகமான நிலை வரும்வரை ஜாதகி தனது விஷயங்களை மறைக்கிறார். ஜாதகிக்கு வயது தற்போது 28. இன்னும் திருமணமாகவில்லை. மிக தாமதமாகவே தனது காதலை வீட்டில் தெரிவித்தார். ஜாதகத்தில் சந்திர சூரியர்களுக்கு சஷ்டாஷ்டகத்தில் லக்னாதிபதி இருப்பதால் ஜாதகியின் விருப்பத்திற்கு பெற்றோர் சம்மதிக்கவில்லை. இந்த ஜாதகி நிறைவேற வழியற்ற தனது காதலால் மிகவும் சிரமப்படுகிறார். ஜாதகியின் காதலை நிறை வேற்ற துணிவுடன் பெற்றோரை தொடர்புகொண்டு ஜாதகியை கரம்பிடிக்க வேண்டிய காதலனே தீர்மானம் எடுக்க முடியாமல் ஜாதகியை ஏமாற்றிக்கொண்டிருக்கிறார். ஜாதகியின் இளமையை வீணாக்குகிறார் என்பதுதான் இதில் சோகம்.

சரி ஜாதகியின் காதல் இப்படி இழுபறியாக விளங்க காரணம் என்ன?

1993 ல் கேட்டை-2 ல் பிறந்த ஜாதகிக்கு காதலை குறிக்கும் கேது திசையில் காதலுக்குரிய பாவமான 5 ஆம் பாவாதிபதி குருவின் புக்தி 2008 ல் ஜாதகியின் 14 ஆவது வயதில் துவங்கியது. அப்போது முதல் ஜாதகி காதலிக்கிறார். தற்போதுவரை 14 வருடமாக மிக நீண்ட காதல். 2011 மத்தியிலிருந்து ஜாதகிக்கு சுக்கிர திசை நடக்கிறது. களத்திர மற்றும் விரையாதிபதியான சுக்கிரன் நான்காம் பாவத்தில் திக்பலம் பெற்று 2, 5 ஆம் பாவாதிபதி குருவின் பூரட்டாதி-1 ல் நிற்கிறார். திசா நாதன் சுக்கிரன் பகை சாரம் பெற்று திக்பலம் பெறுகிறார். திக்பலம் பகை சாரத்தை முறியடிக்கும் என்றாலும் சுக்கிரன் 4 ஆமிடத்திலிருந்து திசை நடத்துவதுதான் பாதிப்பு. காரணம் 4 ஆம் பாவம் திக்பலம் பெற்றாலும் அது காதலை குறிக்கும் 5 ஆவது பாவத்திற்கு விரைய பாவமாகும். இதனால் 5 ஆம் பாவாதிபதி சாரம் பெற்றாலும் 5 க்கு விரையத்திலிருக்கும் சுக்கிரன் 5 க்கு பாதிப்பை தருகிறார். மேலும் சுக்கிரனும் 5 ஆம் பாவாதிபதி குருவும் பகை என்பதை மீறி இருவரும் ஒருவருக்கொருவர் சஸ்டாஷ்டகத்தில் உள்ளதால் காதலை தனது திசையில் நிறைவேற்றிட மாட்டார். ஜாதகத்தில் காதலனை குறிக்கும் புதன் குறைந்த பாகை (2.06) பெற்றதனால் தாரா காரகனாக உள்ளார். தாரா காரகனான புதனே ஜாதகியின் காதலுக்கு முக்கிய காரணம். புதன் தாரா காரகனானதால் ஜாதகியின் காதலில் உண்மையும் ஏக்கமும் இருக்கும். ஆனால் காதலனை குறிக்கும் புதன் சூரியனின் அஸ்தங்கமாகியுள்ளது. இதனால் காதலனுக்கு போதிய தகுதி இல்லை என்பது தெரிகிறது. ஆனால் புதன் சூரியனோடு சேர்ந்ததால் கௌரவமாகவும்,  சனியோடு சேர்ந்ததால் ஜாதகியை ஏமாற்றுபவராகவும் இருப்பார். (புதன்+சனி சேர்க்கை ஏமாற்றத்தை  குறிக்கும்).

ஜாதகத்தில் குரு 7 ஆம் பாவத்தை பார்ப்பது வாழ்க்கைத்துனைவர் வகையில் ஓரளவு நன்மைகளை செய்யக்கூடிய அமைப்பாகும். ஓரளவு மட்டுமே என்று கூறக்காரணம், குரு நின்ற வீட்டோன் புதன் அஸ்தங்கம் பெற்றுவிட்ட நிலையில், குருவும் சார அடிப்படையில் பாதகாதிபதி சந்திரனின் ஹஸ்தம்-4 ல் நிற்கிறார். நீச சந்திரன் குடும்ப பாவத்திற்கு  விரையத்தில் லக்னத்தில் நின்று, சந்திரனோடு இணைவு பெற்ற சர்ப்பங்களும் 1 & 7 ல் நிற்பது ஜாதகிக்கு திருமணம் நடக்க கடும் தடைகளை ஏற்படுத்தும் அமைப்பாகும்.  மூன்றாவது காமத்திரிகோணமான 11 ஆமிடத்தில் குரு நின்றாலும் அவர் கைகள் கட்டப்பட்டுள்ளன என்பதை இவ்வமைப்பு குறிப்பிடுகிறது. இதனால் காதலனும் பின்வாங்கும் நிலையில் பெற்றோரும் சம்மதிக்காத நிலையில் ஜாதகி விரக்தி நிலையை அடைந்துவிட்டார்.

இந்த நிலையில்தான் ஜோதிடம் மூலம் தனது வாழ்க்கைக்கு தீர்வு கிடைக்கும் என மிக காலம் தாழ்த்திய நிலையில் என்னிடம் ஜாதகி ஆலோசனை கேட்டார். ஜாதகிக்கு சுக்கிர திசை இன்னும் 11 ஆண்டுகள் உள்ளதையும், சுக்கிர திசை சுகத்திற்கு கணவனை கொண்டுவரும் ஆனால் காதலை நிறைவேற்றி வைக்காது என்பதையும் எடுத்துக்கூறினேன். ஜாதகத்தில் காதலனை குறிக்கும் புதனுக்கும் கணவனை குறிக்கும் செவ்வாய்க்கும் சஷ்டாஷ்டகம் (6-8 ஆக) உள்ளது. இது காதலன் வேறு கணவன் வேறு என்பதை தெரிவிக்கிறது. மேலும் மேற்சொன்னபடி காதலனுக்குள்ள பாதகமான அமைப்புகளை எடுத்துக்கூறி இனிமேலும் தனது வாலிபத்தை வீணாக்காமல், பெற்றோர் பார்க்கும் நல்லதொரு வரனை தேர்ந்தெடுத்து திருமணம் செய்துகொள்ளுமாறு ஆலோசனை வழங்கப்பட்டது. ஜாதகிக்கு சுக்கிர திசையில் 7 ஆமிடத்தை பார்வை செய்யும் குரு புக்தி இந்த ஆண்டு பிற்பகுதியில் துவங்குகிறது. ராகு கேதுக்கள் கோட்சாரத்தில் லக்னத்தைவிட்டு விலகி லக்னத்திற்கு 6 மற்றும் 12 ஆக அதாவது 2022 ராகு-கேது பெயர்ச்சிக்குப்பிறகு கோட்சார குருவும் மீனத்திற்கு வரும் காலம் திருமணம் நடக்கும் என்றும் சொல்லப்பட்டது.

 

மீண்டும் விரைவில் அடுத்த பதிவில் சந்திப்போம்,

அதுவரை வாழ்த்துக்களோடு,

அன்பன்,

பழனியப்பன்.

கைபேசி: 8300124501     

No comments:

Post a Comment