Wednesday 20 January 2021

வேகத்தடைகள் விபத்தை தவிர்ப்பதற்கே!

ஜோதிடத்தில் ஒவ்வொரு கிரகத்திற்கும் சில தனிப்பட்ட குணங்கள் இருக்கும். எந்த சூழ்நிலையிலும் ஒரு கிரகம் தனது தனித்துவத்தை இழக்காது. உதாரணமாக தாய்மை உணர்வுக்குரிய சந்திரனே வேகத்திற்குரிய முதன்மை கிரகமாகும். கிரகங்களில் விரைவாக ஒரு ராசியை இரண்டேகால் நாளில் கடக்கக்கூடியது. இதற்கு மாறான கிரகம் சனி. ஒரு ராசியை கடக்க சுமார் இரண்டரை வருடங்கள் எடுத்துக்கொள்கிறது. சம்பவ கால கிரகங்களுடன் சந்திரன் தொடர்பாகும்போது சம்பவங்கள் மிக விரைவாக நடந்துவிடுகின்றன. சனி தொடர்பாகும் சம்பவங்கள் நீண்ட இழுபறிக்குப்பிறகே நடக்கின்றன. செவ்வாய் துடிப்புக்கும் ஆவேசத்திற்கும் உரிய கிரகமாகும். சந்திரன் செவ்வாய் சேர்க்கை இருப்பவர்களுக்கு எளிதில் வாகன விபத்துக்களோ, நீரில் மூழ்கி இறப்பதோ அல்லது இதர வகை துர்மரணங்கள் நடக்க வாய்ப்பு அதிகம். நிதானமற்று யோசிக்காமல் செயல்களில் ஈடுபடும் குணமும் தெரிந்தே தவறு செய்யும் குணமும் சந்திரன் செவ்வாய் சேர்க்கை பெற்ற ஜாதகர்களுக்கு இருக்கும். இந்த கிரக சேர்க்கையில் ராகுவும் இணைந்திருப்பின் இவர்களுது செயல்கள் தறிகெட்ட வகையில் இருக்கும். அப்போது இவர்களது வேகத்திற்கு தடைபோடுவது சனியும் கேதுவுமாகும். ஜோதிடத்தில் நீர் ராசிகளும் சந்திரனும் பேச்சுக்கு காரக கிரகங்களாகின்றன. புதன் நாவன்மையை அதாவது பேச்சின் குணத்தை & சாதுரியத்தை குறிக்கும். இதில் சனியும் கேதுவும் சம்மந்தமுறும்போது பேச்சில் தடையை, நிதானத்தை அல்லது தாமதத்தை ஏற்படுத்துகின்றன. இதைத்தான் நாம் இன்றைய பதிவில் ஆராயவிருக்கிறோம். 

கீழே 2008 ல் பிறந்த ஒரு சிறுவனின் ஜாதகம்.

வாக்கு ஸ்தானமான 2 ஆம் இட அதிபதி குரு வக்கிரமாகியுள்ளார். இரண்டாமிடத்தை நோக்கி ராகு வருகிறார் . இதனால் இச்சிறுவனுக்கு பேசுவதில்  தடை ஏற்படும். குரு வர்கோத்தமம் பெற்றுள்ளது ஒரு நல்ல அமைப்பு. பேச்சுக்கு காரக கிரகமான சந்திரன் தாமததிற்குரிய சனியோடு இணைவு பெற்றுள்ளார். இவை பேச்சில் தடை ஏற்படும் என்பதை குறிக்கிறது. பேச்சின் காரக கிரகமான சந்திரனின் வீட்டில் நீசமான லக்னாதிபதியுடன் செவ்வாயுடன் இணைந்த கேது, பாவ சக்கரத்தில் சந்திரன், சனியோடு இணைந்துள்ளார். சந்திரனின் கடக ராசி பாதிக்கப்பட்டதோடு நவாம்ச லக்னத்திற்கு 2 ல் சந்திரன் நீசமானது ஒரு கடுமையான அமைப்பாகும். ஜனன திசா-புக்தி நாதர்கள் அனுமதியின்றி ஒருவருக்கு பிறவிக்குறைபாடு ஏற்படாது. பூரம்-4 ஆம் பாதத்தில் பிறந்த ஜாதகனுக்கு சுக்கிரனும் சூரியனும் ஒரே பாகையில் நின்று அஸ்தங்கமடைகிறது. கால புருஷனுக்கு 2 ஆம் இடத்தில் அதன் அதிபதி சுக்கிரன் கடக செவ்வாயின் சாரத்தில் அஸ்தங்கமடைவது, மரபு வழியாக தொடர்ந்து வரும் சுரப்பிவகை குறைபாட்டை குறிக்கிறது.   சூரியனும் சுக்கிரனும் பாதக ஸ்தானத்தில் நீச்சமாகியுள்ள செவ்வாயின் மிருக சீரிஷம்-1 ல் நிற்கின்றன. இதனால் சுக்கிர திசையிலும் சூரிய திசையிலும் செவ்வாயின் வெளிப்பாடு இருக்கும். கடகத்திற்கு பாதகத்தில் சூரியன், சுக்கிரன், புதன் அமைவது சந்திரனின் செயல்பாட்டை பாதிக்கும் அமைப்பே. சுக்கிரன் அஸ்தங்கமானதால் பிறப்பிலேயே பையனுக்கு பேச்சில் திக்குவாய் ஏற்பட்டது. காரணம் சுக்கிரனின் சார நாதன் நீச செவ்வாயே. செவ்வாய் சிறுவனின் பேசும் ஆர்வத்தை வேகமாக தூண்டுகிறது. ஆனால் சுரப்பி காரகன் சுக்கிரன் அஸ்தங்கமடைந்துவிட்டதால் மனதின் கட்டளைகள் குரல்வளை போன்ற உறுப்புகளுக்கு தாமதமாகவே செல்கின்றன. செவ்வாயுடன் இணைந்த கேதுவும் செவ்வாயின் தீய செயல்களை அதிகப்படுத்தவே செய்யும்.  

காலபுருஷனுக்கு குரல்வளையை குறிக்கும் மிதுனத்தின் அதிபதி புதன், சந்திரன் சாரத்தில் ரோஹிணி-4 ல் மிதுனதிற்கு 12 ல் மறைந்து வக்கிரமாகிறார் என்பது கவனிக்கத்தக்கது. சுக்கிர திசைக்கு அடுத்து வந்த சூரிய திசையும் செவ்வாயின் சாரத்தையே பெற்றுள்ளது. இதனால் சூரிய திசையிலும் சிறுவனுக்கு திக்குவாய் குறைபாடு தொடர்ந்தது. இங்கு சூரியன் ராசிக்கு திக்பலத்தில் நின்றாலும், அவர் கடகத்தில் அமைந்த நீச செவ்வாய் மிருக சீரிஷம்-1 ல் நிற்பதால் பாதக ஸ்தான செவ்வாயின் பலனையே தந்துள்ளது கவனிக்கத்தக்கது. சூரிய திசைக்கு அடுத்து வந்த சந்திர திசை சிறுவனுக்கு 2017 ல் துவங்கியது. சந்திரன் பேச்சின் காரக கிரகம் என்றாலும் அவர் உடன் அமைந்த சனியின் குணத்தையும் சேர்த்தே செயல்படவேண்டும். வேகத்திற்குரிய செவ்வாய் மனோகாரகன்  வீட்டில் பாதிக்கப்பட்ட நிலையின் அமைந்ததால் சிறுவனுக்கு மனோவேகம் அதிகம். மனத்தின் வேகத்திற்கு தக்கபடி பேச்சு விரைவாக வரவில்லை. இந்நிலையில் சனி தொடர்புபெற்ற சந்திரன், சனியைப்போன்றே நிதானமாக செயல்பட வேண்டும். சந்திரன் சிறுவனின் எண்ண அலைகளை இப்போது நிதானப்படுதுகிறது. மட்டுப்பட்ட மனதின் வேகத்தோடு இப்போது வார்த்தைகள் சரியாக ஒருங்கிணைகின்றன. இதனால் சிறுவனுக்கு பேச்சில் இருந்த திக்குவாய் குறைபாடு நீங்குகிறது.

பொதுவாகவே விரைந்த செயல்பாடுகொண்ட செவ்வாயின் குணத்தை கேதுவின் தொடர்பு அதிகப்படுத்தியதால் சிறுவனுக்கு பேச்சில் பாதிப்பு ஏற்பட்டது. கேதுவும் செவ்வாய் போன்ற செயல்பாடுகொண்டவர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. தற்போது சந்திர திசை துவங்கியதும் 2017 ல் ராகு கடகத்திற்கு வருகிறார். கேது செவ்வாய் போன்றவர் என்றால் ராகுவிடம் சனியின் குணம் இருக்கும். மேலும் ஒரு பாதிப்பை ராகு துவக்கினால் கேதுவும், கேது துவக்கினால் ராகுவும் முடித்துவைப்பர்.  இதனடிப்படையில் செவ்வாய் கேது இருவரின் செயல்பாட்டையும் ராகு சரிசெய்கிறார். காரணம் ஜனன காலத்தில் செவ்வாயின் அவிட்டம்-2 ல் ராகு நின்றதே. ஆனால் திசா நாதனின் ஒத்துழைப்பு இன்றி ராகுவால் செயல்படமுடியாது. திசா நாதன் சந்திரன், சுரப்பி காரகன் சுக்கிரனின் பூரம்-4 ல் நின்று சுக்கிரனின் செயல்பாட்டை சரியான பாதைக்கு திருப்புகிறார். சூரியன் சுக்கிரனை  அஸ்தங்கப்படுதினாலும் ராசிநாதன் என்பதாலும், ராசிக்கு திக்பலத்தில் நிற்பதால்   சந்திரனின் செயல்பாட்டை ஆமோதித்து சுக்கிரன் மீதான தனது கட்டுப்பாடுகளை தளர்த்துகிறார். தற்போது சுரப்பி காரகன் சுக்கிரன் இயல்பாக செயல்படுகிறார். தனது சாரத்தின் நின்று தனக்கு கட்டளைடும் திசாநாதன் சந்திரனின் கட்டளையை ஏற்று சுரப்பிகள் நன்கு செயல்பட சுக்கிரன் சம்மதிக்கிறார். கிரகங்களுக்கிடையேயான இந்த ஒருங்கிணைவு சிறுவனை தடைகளற்று பேசவைத்தது. செவ்வாயின் வேகமான எண்ணங்களுக்கு சனி சந்திரன் இணைவு ஒரு வேகத்தடையை ஏற்படுத்தி சிறுவனின் பேச்சை சரிசெய்துள்ளது என்றால் அது மிகையல்ல.

இப்போது தலைப்பை மீண்டுமொருமுறை படியுங்கள்.

 

மீண்டும் விரைவில் உங்களை அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.

 

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்.

கைபேசி: 8300124501. 

1 comment: