Sunday 2 May 2021

வட்டித்தொழிலில் வளர்ச்சி உண்டா?

ஜாதகத்தில் தன காரகர் குரு செல்வ வளமையை குறிப்பவர். ஜாதகத்தில் செல்வச் சிறப்புடன் ஒருவர் வாழ்ந்திட 9 ஆம் பாவம் சிறப்புப்பெற்றிருக்க வேண்டும். கால புருஷ தத்துவப்படி குரு 9 ஆம் பாவம் தனுசுவின் அதிபதி ஆவது குறிப்பிடத்தக்கது. ஜாதகத்தில் குரு தனது மூலத்திரிகோண வீடான தனுசுவிற்கு மறைவதே ஒரு வகையில் பொருளாதார சிரமங்களை குறிக்கும். அப்படி குரு தனுவிற்கு 6, 8, 12 ல் மறைந்தால், லக்னத்திற்கு மறையாமல் இருப்பது நன்மை. இரண்டு விதங்களிலும் குரு சாதகமாக அமையாவிடில் அந்த ஜாதகர் பொருளாதார வகையில் பாதிக்கப்படுவார். குறிப்பாக லக்னத்தை குரு பார்ப்பது பொருளாதார வகையில் மட்டுமல்ல ஏனைய அனைத்து  வகையிலும் ஒரு மேம்பட்ட நிலையை ஜாதகருக்கு ஏற்படுத்தும். ஜோதிடத்தில் ஒவ்வொரு பாவமும் அதன் எதிர்பாவத்தை சார்ந்தே இயங்குகிறது. உதாரணமாக கணவன்-மனைவி, வியாபாரி-வாடிக்கையாளர், முதலாளி-பணியாள். குருதான் கால புருஷனுக்கு விரைய பாவம் மீனத்தின் அதிபதியும் ஆகிறார். செலவிற்கு பணம் இல்லை என்றால் கடன் வாங்க வேண்டிய நிலை ஏற்படும். அதனால்தான் மீனத்தின் எதிர்பாவம் கன்னி கால புருஷ தத்துவப்படி கடன் பாவம் எனப்படுகிறது. ஒருவர் உழைக்காமல் பொருளீட்டுவதை உபய ராசிகள் நான்கும் குறிப்பிடும். உபய ராசிகளுக்கு அதிபதிகள் குருவும் புதனும் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய பதிவில் நாம் ஒருவர் வட்டித்தொழிலில் ஈடுபட ஜாதக ரீதியான அமைப்புகளைப்பற்றி ஆராயவிருக்கிறோம்.

கீழே ஒரு ஆணின் ஜாதகம்.


ஜாதகத்தில் கடனை குறிக்கும் பாவம் 6 என்றால், கடனை வசூலிப்பது 5 ஆம் பாவமாகும். எனவே கடன்னை வசூலிப்பதை 5 ஆம் பாவமும் அதையே தொழிலாக செய்ய 5 மற்றும் 1௦ ஆம் பாவங்களும் தொடர்பு பெற்றிருக்க வேண்டும். மேற்கண்ட ஜாதகரான ஆண் வங்கிகளுக்கு கடன் வசூல் செய்து தரும் நிறுவனத்தை (Loan collection agency) நடத்தி வருபவர்.  சந்திரனும் 5 ஆம் பாவமும் ஒருவரது எண்ணங்களையும் ஆசைகளையும் குறிப்பிடும். அது 1௦ ஆம் பாவ தொடர்பு பெறுவது எண்ணத்தையே தொழிலாக்குவதை குறிப்பிடுகிறது. ஜோதிடத்தில் கேது கடனை நேரடியாக குறிப்பிடும் முக்கிய கிரகமாகும். கேது லக்னத்திற்கு 2 ல் அமைந்துள்ளது கடனை முன்னிட்டு வருமானம் பெறுவதை குறிக்கிறது. தடைகளுக்குரிய கேது தன பாவமான 2 ல் அமைவது இல்லறம், உறவுகள் வகைக்கு சிறப்பல்ல. ஆனால் கடன் என்ற தனது காரகம் செயல்படுவதால் பொருளாதார வகையில் பாதிப்பை ஏற்படுத்த மாட்டார். பொதுவாகவே ராகு-கேதுக்கள் உயிர் காரகத்திற்கு பாதிப்பு ஏற்படுத்துமளவு பொருட்காரகத்திற்கு பாதிப்பை தரமாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. உழைத்துப்பொருளீட்ட ஜீவன காரகன் சனி ,இரட்டைப்படை பாவங்களில் அமைந்திருப்பது சிறப்பு. உழைக்காமல் பொருளீட்ட சனி ஒற்றைப்படை பாவங்களில் அமைய வேண்டும். இந்த ஜாதகத்தில் கடன் வசூல் செய்வதை குறிக்கும் ஒற்றைப்படை பாவம் 5 ல் சனி அமைந்திருப்பது ஜாதகர் செய்யும் தொழிலுக்கு உகந்த ஒரு அம்சமாகும். லக்னாதிபதி குரு லக்னத்திற்கு 3 ல், தனுசுவிற்கு 6 அமைந்தாலும் அவர் வக்கிரம் பெற்ற (பின்னோக்கிய) நிலையில் உள்ளதால் தனுசு ராசியின் மீது குருவின் அறைப்பங்கு பார்வை விழுகிறது.

ஜாதகத்தில் 8 ஆமிடம் என்பது 7 க்கு 2 ஆக அமைவதால் அது அடுத்தவர் தனத்தை குறிப்பிடும் பாவமாகும். 8 ஆமிடத்தில் அதிக கிரகங்கள் அமைந்து 2 ஆம் இடத்தை பார்வை செய்வதால் அடுத்தவர்கள் தனம் ஜாதகரிடம் அதிகம் புழங்கும் எனலாம். ஜாதகருக்கு 8 ல் வட்டி காரகன் ராகுவின் சுவாதி-1 ல் மறைந்த 2 ஆமதிபதி செவ்வாய் திசை துவங்கியவுடன் கடன் வசூல் செய்யும் நிறுவத்தை துவங்கி இன்று பல வங்கிகளுக்கு கடனாளிகளிடமிருந்து கடனை வசூல் செய்து தருகிறார். அதற்கான தனது  தரகுத்தொகையை பெற்றுக்கொள்கிறார். பல வங்கிகள் இவரது சேவையை நாடிப்பெறுகின்றன. இவரது கடன் வசூல் நிறுவனத்தில் 15 க்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர். தன ஸ்தானமான 2 ஆமிடத்தை சூரியன், புதன், சனி ஆகியவை இணைந்து பார்வையிடுவது வங்கிகளுக்கு கடன் கடன் வசூல் செய்து தருவதை குறிக்கிறது. ராகு-கேதுக்கள் 2 ஆம் பாவத்தோடு தொடர்பாவது கடனுக்கான வட்டியை குறிக்கிறது. பொதுவாக தனுசி ராசி அதுவும் மூல நட்சத்திரத்தில் சந்திரன் அமைவது இரக்கமற்ற முறையில் வட்டி வாங்குவதை குறிப்பிடும். ஜாதகர் மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்.

இரண்டாவதாக மற்றொரு ஆணின் ஜாதகம்.  


இவரும் ஒரு நிதி நிறுவனத்தில் கடன் வசூல் செய்யும் பணியில் உள்ளார். தொடர்பு ஸ்தானமான 7 ஆமிட குரு, கடனை வசூல் செய்யும் 5 ஆம் அதிபதி புதனின் கேட்டை-2 ல் நிற்கிறார். இதனால் இவர் இந்த வேலையில் உள்ளார். 5 ஆமதி புதனும் 1௦ ஆமதிபதி சனியும் இணைந்து 1௦ ஆம் பாவத்தில் நிற்பதால் இவர் இத்துறையில் உள்ளார். 5 ஆமதிபதி புதனும் 6 ஆமதிபதி சுக்கிரனும் 1௦ ஆம் பாவத்தில் இணைந்து நிற்பது, கடன் கொடுத்து வசூல் செய்வதையே தொழிலாக செய்யும் நிதி நிறுவனத்தில் பணி புரிவதை குறிக்கிறது. உழைக்காமல் பொருளீட்ட சனி ஒற்றைப்படை பாவங்களில் அமைய வேண்டும் என்றேன். சனி இந்த ஜாதகத்தில் 1௦  ல் நிற்பதால் இவர் மற்றொருவரிடம் வேலை செய்கிறார். தனது மூலத்திரிக்கோண வீட்டில் நிற்கும் சனியின் திசை துவங்கினால் ஜாதகர் சுய தொழிலில் இறங்குவார்.   சூரியன் 11 ல் நின்று 5 ஆம் பாவத்தை பார்ப்பது இவரது முதலாளி இவர் மீது மிகுந்த மதிப்பைக்கொண்டிருப்பதை காட்டுகிறது. குரு புதனின் கேட்டை-2 ல் நிற்கிறார். இதனால் ஜாதகத்தில் புதனுக்கும் குருவிற்கும் நட்சத்திரப்பரிவர்த்தனை ஏற்படுகிறது. ஜோதிட விதிப்படி உபய ராசி அதிபதிகளான குரு-புதன் தொடர்பு கடன் மற்றும் கடன் வசூல் செய்யும் தொழிலில் ஈடுபடுவதை குறிக்கிறது. 8 ஆமதிபதி குரு லக்னத்தை பார்ப்பது ஜாதகரிடம் அடுத்தவர் பணம் வருவதை குறிக்கிறது. 

மீண்டும் மற்றொரு பதிவில் விரைவில் சந்திப்போம்.

 

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்.

கைபேசி: 8300124501. 

No comments:

Post a Comment