Sunday 6 June 2021

வீடா? நிலமா?

 


வீடு கட்டி அல்லது வாங்கி குடியேரிய பிறகு அதனை அனுபவிப்பதில் உள்ள  வீடு கொடுப்பினைகள் பற்றி பதிவு எழுதிய போது, பல அன்பர்கள் வீடு பற்றி மேலும் பல கோணங்களில் எழுதத்தூண்டியதன் விளைவே இப்பதிவு. வீடு பற்றி ஏற்கனவே சில பதிவுகள் நான் எழுதியிருந்தாலும் இது மற்றொரு கோணம். கட்டிய வீடு வாங்க வாய்ப்புண்டா? அல்லது நிலம் வாங்கி வீடு கட்டலாமா? என்ற கேள்வி பலருக்கும் இருக்கும். ஜாதகத்தில் இதனை தெளிவாக அறிந்துகொள்ளலாம் என்றாலும் பெரும் தனம் செலவு செய்து சொத்து வாங்குபவர்கள்  தங்களது ஜாதகத்தில் அதற்கான சாதக பாதகங்களை தகுந்த ஒரு ஜோதிடரின் ஆலோசனையின் பேரில் முடிவெடுப்பது எதிர்காலத்தில் வரும் சிரமங்களை தவிர்க்க பேருதவியாக இருக்கும். குறிப்பாக லக்னத்திற்கு 2 ஆம் பாவம், வீடு பாவம் எனும் 4 ஆம் பாவத்தின் லாப பாவம் என்ற அமைப்பின்படி ஒருவர் சொத்து வாங்க அவருக்கு உள்ள நிதி நிலைமையை தெளிவாக சுட்டிக்காட்டும். கட்டிய வீடாக வாங்குவதற்கு ஒருவர் ஜாதகத்தில் செவ்வாய், சுக்கிரன் ஆகிய கிரகங்கள் வலுவாக அமைந்திருக்க வேண்டும். கீழே ஒரு ஆணின் ஜாதகத்தை கவனியுங்கள்.


இந்த ஜாதகர் 1960 ல் பிறந்தவர். ஜாதகருக்கு தற்போது புதன் திசையில் சுக்கிர புக்தி நடக்கிறது. புதன் 4 ஆம் பாவத்தோடு தொடர்புகொண்டுள்ளதால் வீடு வாங்க எண்ணம். புதன்  ராகுவின் சுவாதி-4 ல் நிற்கிறார். ராகு 4 ஆம் பாவத்திற்கு  லாபத்தில் லக்னத்திற்கு 2 ல் தன ஸ்தானத்தில் குரு பார்வை பெற்று நிற்கிறார்.  இது வீடு வாங்க அல்லது கட்ட ஜாதகரிடம் போதுமான தனம் உள்ளது என்பதை குறிப்பிடுகிறது. தற்போது வீடு வாங்கவா? அல்லது கட்டவா? என்பதே இவரது கேள்வியாக இருந்தது. புக்தி நாதன் சுக்கிரன் திசா நாதன் புதனைவிட அதிக பாகை  பெற்று சொந்த வீட்டில் திக்பலம் பெற்று மாளவ்ய யோகத்துடன் மதன கோபால யோகமும் பெற்று வலுவாக அமைந்திருப்பதால் கட்டிய  வீடே அமையும் என்று கூறப்பட்டது. அதன்படியே ஜாதகர் கட்டிய வீட்டையே வாங்கினார். புக்தி நாதன் சுக்கிரன் குருவின் விசாகம்-2 ல் சூரியனுக்கு நெருங்கிய பாகையில் நின்றதால் ஜாதகர் தனது  மகனுக்காக வீடு வாங்கினார்.

கீழே இரண்டாவதாக ஒரு ஆணின் ஜாதகம்.


இந்த ஜாதகர் கடந்த 202௦ துவக்கத்தில் வீடு வாங்கினார். புதன் திசையில் கேது புக்தியில் வீடு வாங்கினார். ஜாதகத்தில் 1,4 ஆமதிபதி குருவின் சாரம் பெற்று விசாகம்-3 ல் திசாநாதன் புதன் நிற்கிறார். உச்சமடைந்த வீடு காரகன் செவ்வாயின் சித்திரை-1 ல் புக்திநாதன் கேது நிற்கிறார். வீடு காரகன் செவ்வாய், வீடு பாவமான 4 க்கு லாபத்தில் லக்னத்திற்கு 2 ல் உச்ச வலுவுடன் சுய சாரம் பெற்று (அவிட்டம்-1) நிற்கிறார். செவ்வாயின் நிலை வீடு வாங்குவதற்கான தனம் ஜாதகரிடம் உள்ளதையும்.திசா-புக்தி நாதர்கள் வீடு அமையும் காலத்தையும் குறிப்பிடுகிறார்கள். 4 ல் ஒரு பாவி ராகு அமைந்து திசா  நாதன் புதன் 4 க்கு 8 துலாத்தில் அமைந்ததால் 4 ஆம் பாவம் ஒருவகையில் பாதிப்பை அடைய வேண்டும். 4 ல் அமைந்த நிழல் கிரகம் ராகு பொருட்காரகத்துவத்தை பாதிக்கமாட்டார். உயிர் காரகத்துவத்தைத்தான்  பாதிப்பார். இதன் அடிப்படையில் ஜாதகர் வீடு வாங்கியதும் ஜாதகரின் தாயார் உடல்நலம் குன்றியுள்ளார். (4 ஆம் பாவம் = வீடு = பொருட்காரகத்துவம் & 4 ஆம் பாவம் = தாயார் = உயிர் காரகத்துவம்)  ஒரு பாவத்தின் பொருட்காரகத்துவம் வலுவடைந்தால் அந்த பாவத்தின் உயிர் காரகத்துவம் பாதிக்கப்படும் என்பதே இதன் அடிப்படை.  

எனது வீடு பாக்கியம் எப்படி உள்ளது? ஒரு வாய்ப்பு வந்துள்ளது என அணுகிய ஒரு அன்பருக்காக பார்க்கப்பட்ட ஜாமக்கோள் பிரசன்னம் கீழே.



வீடா அல்லது இடமா?

உதயம் கால புருஷனுக்கு வீடு பாவமாகிய 4 ஆமிடம் கடகமாகி அதில் வீட்டை குறிக்கும் காரக கிரகங்களான செவ்வாயும் சுக்கிரனும் அமைந்துள்ளனர். உதயாதிபதிகளான இரு சந்திரன்களும் 1௦ ஆமதிபதி செவ்வாயுடன் பரிவர்த்தனை ஆகியுள்ளார். இது ஜாதகரின் வீடு வாங்கும் எண்ணத்தை தெளிவாக கூறுகிறது. உள்வட்ட புதன் மிதுனத்தில் அமைந்த உள்வட்ட சுக்கிரனுடன் பரிவர்த்தனை ஆகி வக்கிரமும் பெற்றுள்ளதாலும் ஜாம புதன் கன்னியில் செவ்வாயின் சித்திரை-2 ல் உச்சம் பெற்று நிற்பதாலும்  புதன்  பலகீனமாகிறார். இதனால் உதய கிரகங்களே வலுவானவை என்ற அடிப்படையிலும் உதய செவ்வாய் நீசமானாலும் உதயாதிபதி சந்திரனுடன் பரிவர்த்தனை ஆவதால் வலுவடைகிறது. வீடு பாவாதிபதி (4 ஆமதிபதி) சுக்கிரன் உதயத்திலேயே அமைந்துள்ளது வீடு வாங்கும் அமைப்பு ஜாதகரை தேடிவந்துள்ளதை உறுதிசெய்கிறது. ஆரூடம் உதயத்திற்கு 4 ல் அமைந்துள்ளதும் ஜாதகரின் வீடு வாங்கும் மன நிலையை படம் பிடித்துக்காட்டுகிறது. 6 ஆமதிபதி குரு உதயத்திற்கு 4 ல் அமைவதும், அந்த  குருவை நோக்கி கேது வருவதும், உதய செவ்வாய் உதயத்திற்கு 6 ல் அமைவது ஆகியவை ஜாதகர் கடன் மூலம் வீடு வாங்க எண்ணியுள்ளதை குறிப்பிடுகிறது.  இந்நிலையில் 4 ல் மாந்தி குருவின் விசாகம்-3 ல் குருவோடு இணைந்து அமைந்துள்ளது சிறப்பான அமைப்பல்ல. இது ஜாதகர் வாங்கும் வீட்டை ஒட்டி இறந்த ஆன்மாக்களின் பதிவுகளோ அல்லது கல்லறை போன்று  மனித உடல் புதைக்கப்பட்டிருக்கும் என்பதை குறிப்பிடுகிறது. மேலும் உதயாதிபதி சந்திரனும் ராகுவும் ஒருவரை ஒருவர் முன்நோக்கி நெருங்கி வருவதும் நல்ல அமைப்பல்ல. இது வீட்டருகே அந்நிய கலாசாரம் கொண்டவர்கள் இருப்பார்கள் என்பதை குறிப்பிடுகிறது. ஜாம குருவும் மேற்கு திசைக்குரிய துலாத்தில், மேற்கு திசைக்குரிய சனி சாரம் அனுஷம்-1 பெற்றுள்ளார்.

எத்தகைய இடத்தில் வீடு?

மேற்கண்ட அமைப்புகளால் ஜாதகர் வாங்க எண்ணியுள்ள வீடு அன்னிய மதத்தவர் வசிக்கும் பகுதியில் மேற்கு வாசல் கொண்ட வீடாக இருக்க வாய்ப்பு உண்டு என கூறப்பட்டது. மேலும் கடக ராசியில் உதயம் அமைந்துள்ளதால் வீடு புற நகர் பகுதியில் நீர் நிலை அருகில் இருக்க வாய்ப்புள்ளதையும் குறிப்பிட்டோம். கேள்வியாளர் புற நகர் பகுதியில் இஸ்லாமியர்கள் வசிக்கும் பகுதியில் ஒரு தர்கா அருகில் மேற்கு பார்த்த வீடு விலைக்கு வருகிறது அதை வாங்கலாமா என்பதற்காகவே உங்களை அணுகினேன் என்றார். தர்கா என்பது இறந்துவிட்ட இஸ்லாமிய சான்றோர்களின் சமாதியை வழிபடும் இடமாகும். வீட்டருகே இறந்த ஆன்மாவின் பதிவுகள் இருக்கும் என்று நாம் கணித்ததும் சரியாக வருகிறது. ராகு உதயாதிபதி சந்திரனின் ரோகிணி-2 ல் ரிஷபத்தில் நிற்பதால் இஸ்லாமியர்கள் வசிப்பிடம்.

வீட்டின் விலை என்ன?

கடக உதயத்தின் கதிர்கள் 3. சுக்கிரனின் கதிர்கள் 2௦. செவ்வாய் நீசமானதால் அதற்கு கதிர்கள் இல்லை. மகரத்தில் கவிப்பு உள்ளதால் மகரத்திலி\ருந்து பார்க்கும் கிரகங்களுக்கு சூரியன், சனி ஆகிய கிரகங்களுக்கும் கதிர்கள் இல்லை. எனவே 3+20=23 என்பதே எண்ணிக்கை. எனவே . வீட்டின் தொகை சுமார் 23 லட்சத்திற்குள் இருக்கும் என்று கூறப்பட்டது. கேள்வியாளர் 21 லட்சத்திற்கு பேச்சு வார்த்தை நடக்கிறது என்று கூறினார். இறுதி செலவாக 23 லட்சம் வரக்கூடும்.

மேற்கண்ட இத்தகைய நுட்பமான தகவல்களை எல்லாம் ஜாதகத்தின் மூலம் நாம் அறிவது மிகக்கடினம். பிரசன்னமே அதிலும் ஜாமக்கோள் பிரசன்னமே மிக துல்லியமான தகவல்களை தெரிவிக்கிறது.

மீண்டும் விரைவில்  மற்றொரு பதிவில் சந்திக்கிறேன்.

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்.

பழனியப்பன்.

கைபேசி: 8300124501

1 comment: