Tuesday, 22 June 2021

ஆழ்துளைக்கிணறு

 



“கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்” என்பர். அதற்கு முந்தைய மொழி  நீரில்லா ஊரில் வாழ்வு ஏது? என்பதாகும். “நீரின்றி அமையாது உலகு” என்பது முதுமொழி. உலக நாகரீகங்கள் எல்லாம் ஆற்றங்கரை நாகரீகங்களாகவே தோன்றியதிலிருந்து இச்சொல்லின் முக்கியத்துவத்தை உணரலாம். ஒருவரது வாழ்வை பாழ்படுத்த தண்ணியில்லா  காட்டுக்கு பணி மாறுதல் என்பது இன்றைய நிலை. நீரே அனைத்து உயிரினங்களுக்கும் ஆதார சக்தி. நிலத்திற்கு  தாய்போல வளங்களை ஊட்டுவது நீர்தான். நீரில்லா பூமி, உயிர்கள் ஜீவிக்க இயலாத பாலைவனம்தான். அது வெறும் தாதுதான். காட்டை சமன்படுத்தி விளைச்சல்  நிலங்களாக்கும்போது அது மூலமாக உருப்பெறுகிறது. மூலமாக மாறிய பூமியில் நீர் பாயும்போது அது ஜீவனாக உருப்பெற்று உயிர்கள் வாழ வழி ஏற்படுகிறது.


அதனால்தான் நீரை பூமியின் தாய் என்கிறோம். கடக ராசி மாத்ரு (தாய்) பாவம் எனப்படுகிறது. விலை நிலங்களை ஒட்டியே குடிகள் வாழ்விடம் அமையும். அதன் பிறகு குடிகள் வழிபட கோவில்கள் ஏற்படும். ஆனால் இன்றைய நிலையை நினைத்துப்பாருங்கள் நீர் ஆதாரங்களை பெருக்காமல், இருப்பதையும் பாழ்படுத்தி,  ஆக்கிரமித்து சீரழித்துவிட்டு நரக வாழ்வு வாழ்கிறோம். வாழ வழியற்று  புலம்புகிறோம். ஊருக்கு ஊர் இருந்த கண்மாய்களும், நீர்நிலைகளும் பெரிய பண முதலைகளின் பேராசைக்கு பலியாகிவிட்டன. நீருக்கு ஆதாரமாக விளங்கும் மரங்கள்  அரசியல் பின்புலம் கொண்டவர்களால் கடத்தப்படுவது அனைத்து ஆட்சியிலும் நடக்கிறது. குறிப்பாக ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைப்பிரதேசங்களில் பழமையான மரங்கள் மொட்டையடிக்கப்பட்டு மரங்களுக்குப்பதில் கட்டுமானங்கள் பெருகிக்கொண்டிருக்கின்றன. பூமித்தாயின் மார்பை கிழித்தி எறிந்துவிட்டு பால் இனி இல்லை என்ற நிலையில்தான் நாம் இருக்கிறோம். இந்நிலையில் இருக்கின்ற நீர் ஆதாரங்களை பாதுகாக்க நல்லோர்களும் நீதிமன்றங்களும் போராடுகின்றன. இப்பதிவில் நாம் ஜாதக ரீதியான நீர் யோகத்தையும் பிரசன்ன ரீதியான ஆழ்துளைக்குழாய் கிணறு (Bore well) தொடர்பாகவும்  ஆராயவிருக்கிறோம். 


ஒருவருக்கு நீர் வகையில் பாக்கியம் இருக்க வேண்டும் எனில் அவரது ஜாதகத்தில் சந்திரனும் கடக ராசியும் சிறப்பாக அமைய வேண்டும். லக்னத்திற்கு 4 ஆம் பாவமும் நீர் வளம் பற்றிக்கூறும்.  மேற்கண்ட ஜாதகத்தில் கடக ராசிக்கு இரு புறமும் புதனும் குருவும் அமைத்து சுப கர்த்தாரி யோகத்தை வழங்குகின்றனர். கடக ராசிக்கு பாவிகள் பார்வை எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. கடக ராசி அதிபதி சந்திரன், லக்னத்திற்கு லாபத்தில் நீர்க்கிரகம் என்று ஜோதிடத்தில் அழைக்கப்படும் சுக்கிரனின் சாரத்தில் பரணி-2 ல் நிற்கிறார். சந்திரன் நின்ற வீட்டோ\ன் செவ்வாய், சந்திரன் உச்சமடையும் ரோஹிணி-3 ல் நிற்கிறார். செவ்வாய் நீர் ராசியான தன் வீடு விருட்சிகத்தை தானே பார்க்கிறார். இதனால் விருச்சிகம் சிறப்படைகிறது. ஜாதகத்தில் மீன ராசி மட்டுமே பாவிகளான ராகு, சனியால் பாதிக்கப்பட்டுள்ளது. மற்ற இரு நீர் ராசிகள் கடகமும் விருட்சிகமும் சிறப்பாகவே அமைந்துள்ளன. நீர் கிரகமான சுக்கிர திசையில் பிறந்த இந்த ஜாதகர் சந்திரனின் சாரம் ரோஹிணியில் நிற்கும் சூரிய திசை கடந்து, சுக்கிரனின் சாரம் பெற்று லாபத்தில் நிற்கும் சந்திர திசை கடந்து, சந்திரனின் சாரத்தில் நிற்கும் செவ்வாய் திசை கடந்து தற்போது நீர் ராசியான மீனத்தில் நிற்கும் ராகுவின் திசையில் உள்ளார்.. சுக்கிரனும், செவ்வாயும் சூரியனை விட்டு 5 பாகைக்கு மேல் விலகி நிற்பதால் பெரிய அளவில் அஸ்தங்க தோஷம் இல்லை. மீனத்தில் நிற்கும் ராகுவும் குருவின் தன்மையிலேயே செயல்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்கண்ட ஜாதகத்தில் 4 ஆம்  பாவம், 4 ல் நின்ற கிரகம், 4 ஆமதிபதி, 4 ன் எதிர் பாவமான 1௦ ஆம் பாவத்திலிருந்து 4 ஆம் பாவத்தை தொடர்புகொள்ளும் கிரகங்கள் இவைகளை வைத்து கிணற்றின் நீர் வளத்தை அறியலாம். இந்த ஜாதகத்தில் 4 ஆம் பாவம் தெற்கு திசையை குறிக்கும் கன்னி ராசியாகி, அதில் தென்மேற்கு திசையை குறிக்கும் கேது அமைந்து மேற்கு திசையை குறிக்கும் ராகு, சனியால் 1௦ ஆம் பாவத்தில் இருந்து பார்க்கப்படுகிறது. இந்த அமைப்பால் இந்த ஜாதகரின் நிலத்தில் தென்மேற்கு திசையில் இவரது கிணறு அமைந்துள்ளது.     மேற்கண்ட ஜாதகரின் நிலத்தில் உள்ள கிணற்றில் இதுவரை நீர் வற்றவில்லை. சந்திர திசை வரை நீர்வளம் மிகச்சிறப்பாக இருந்துள்ளது. அதனால் நெல் பயிரிட்டுள்ளனர். செவ்வாய் திசையில் நீர்வளம் சற்றே குறைந்தது. அதனால் செவ்வாய் திசையில் நெற்பயிர் பயிரிடாமல் இதர வகை பயிர்களை பயிரிட்டனர். பூமி காரகன் லக்னத்திற்கு 12 ல் மறைந்ததால் செவ்வாய் திசையில் நிலத்தை குத்தகைக்கு விட்டுவிட்டு வேலை நிமித்தம் ஜாதகர் சொந்த ஊரைவிட்டு வெளியேறினார். தற்போது ராகு திசையிலும் கிணற்றில் நீர் வற்றிவிடவில்லை. ஓரளவு உள்ளது.

கீழே ஆழ்துளை கிணறு போட்டு போதிய நீர் கிடைக்காமல் அதையே பயன்படுத்தினால் நீர் ஊறுமா? அல்லது புதிய ஆழ்துளைக்கிணறு போட வேண்டி இருக்குமா? என்று கேட்ட அன்பருக்காக பார்த்த ஜாமக்கோள் பிரசன்னம்.


ஜாமக்கோள் பிரசன்னத்தில் ரிஷப வீதிகளான கன்னி, துலாம், மீனம், மேஷம் ஆகியவை நீர் ராசிகள் எனப்படும். மிதுனம், சிம்மம், தனுசு, கும்பம் ஆகியவை நீரில்லா ராசிகள் எனப்படும். உதயம் நீரற்ற ராசியான தனுசில் அமைந்துள்ளது. உதயத்திற்கு பாதகத்தில் நீரில்லா ராசியான மிதுனத்தில் ஆரூடம் அமைந்துள்ளது. இது ஜாதகர் செய்துவிட்ட செயலின் தன்மையை குறிக்கிறது. உதயத்திற்கு லாபத்தில் நீர் ராசியான துலாத்தில் கவிப்பு அமைந்தது சிறப்பே. எனினும் கவிப்பில், கடக ராசி அதிபதியும் பிரதான நீர் கிரகமுமான சந்திரன் உள்வட்டத்தில் அமைந்து, கவிப்பு உதயத்திற்கு 8 ல் கடகத்தில் நீசம் பெற்று நிற்கும் செவ்வாயின் சாரம் சித்திரை-4 ல் நிற்கிறது.  இவை அனைத்தும் ஜாதகர் துளையிட்ட ஆழ்துளை கிணற்றின் நீர் வளம் சிறப்பில்லை என்பதை   காட்டுகிறது.  குறிப்பாக கவிப்பில் உள்வட்ட சந்திரன் அமைந்தது நீர் வளம் பாதிக்கப்பட்டதை  தெளிவாக உணர்த்துகிறது. ஆனால் கவிப்பு உதயத்திற்கு 11 ல் நிற்பதால் நீர்வளம் முற்றிலும் பாதிக்கப்படவில்லை என்பதை தெரிவிக்கிறது. உதயத்தில்  நீர்கிரகமான ஜாம சுக்கிரன் அமைந்துள்ளது ஓரளவு சிறப்பு என்றாலும் உதயாதிபதி குரு உள்வட்டத்தில் வக்கிரம் பெற்று மற்றொரு நீரில்லா ராசியான கும்பத்தில் அமைந்துள்ளது பாதிப்பே. உதயத்திற்கு 1௦ ஆமிடத்தில் நீர் ராசியான கன்னியில் ஜாமச்சந்திரன் சுய சாரமான ஹஸ்தத்தில் அமைந்துள்ளார். இது நீர் பிரசன்னம் என்பதையும் கேள்வியின் தன்மையையும் கூறுகிறது.  கன்னி சந்திரன், நீர் ராசியான மீனத்தில் நிற்கும் ஜாம குருவை நேர் பார்வை செய்கிறார். உதயத்திற்கு 4 ஆமிடமான மீனத்தில், ஜாம குரு, ராகுவோடு இணைந்து வக்கிரம் பெற்று நிற்கும் பாதகாதிபதி புதனின் சாரத்தில் ரேவதி-2 ல் நிற்கிறார். இந்த அமைப்பும் கேள்வியாளருக்கு சிறந்த நீர் யோகத்தை காட்டவில்லை.

தனுசு உதய கதிர்கள் 6. உதயத்தில் நிற்கும் சுக்கிரனின் கதிர்கள் 2௦. எனவே உதயத்திற்கு மொத்தம் 26 கதிர்கள். 26 ன் மூன்று மடங்கு 78 ஆகும்.. 780 அடி ஆழ்துளை போட்டிருக்க வேண்டும். கேள்வியாளர் 785 அடி போட்டதாக கூறினார். உதயத்திற்கு மிதுன ராசி கிரகங்களின் பார்வை கிடைக்கிறது. மிதுன ராசியில் உள்ள இரண்டு சூரியனுக்கும் 5X2 = 1௦ கதிர்கள். மிதுனத்தில் உள்ள சுக்கிர கதிர்கள் 2௦. ஆக மொத்த மிதுன கதிர்கள் 3௦. உதயத்தை துலாத்தில் இருந்து சனி 3 ஆம் பார்வையாக பார்க்கிறது. சனிக்கு கதிர்கள் 4. உச்ச சனிக்கு கதிர்கள் 3 மடங்கு என 12 கதிர்கள் எடுத்துக்கொண்டால் மிதுன கிரக கதிர்கள் 3௦+உச்ச சனி கதிர் 12 என மொத்தம் 42 வருகிறது. எனவே கூடுதல் தேவைக்கு 420  அடி போட்டுக்கொள்ளலாம் என்று பொதுவாக கூறலாம். ஆனால் இந்த பிரசன்னத்தில் மிதுனம் நீரற்ற ராசியாகவும் உதயத்திற்கு பாதகமாகவும் வருவதால் மிதுனத்திற்காக 3௦௦ அடிகள் போடுவது வீண். துலா சனி கவிப்பில் இருந்து உதயத்தை பார்ப்பதால் சனி பார்வைக்கு கதிர்கள் இல்லை. எனவே கூடுதலாக துளையிடுவது பயனற்ற செலவாகவே இருக்கும் என்று கூறப்பட்டது. அப்படி எனில் புதிதாக ஒரு ஆழ்துளைக்கிணறு  போடலாமா? என்றொரு கேள்வி முன் வைக்கப்பட்டது. தற்போதைக்கு குறைவாக நீர் வரும் ஆழ்துளைக்கிணற்று நீரையே பயன்படுத்துமாறும், உள்வட்டத்தில் நீரற்ற கும்ப ராசியில் நிற்கும் குரு உதயத்திற்கு 4 ல் நீர் ராசியான மீனத்திற்கு தனது ஆட்சி வீட்டிற்கு வரும் காலம் வரை பொறுத்திருக்குமாறும், அப்போது கடக ராசிக்கும் உள்வட்ட குரு பார்வையும் கிடைக்கவிருப்பதால் நீர் ஊறும். அப்போதும் கேள்வியாளரின் நீர்த்தேவை பூர்த்தியாகவில்லை எனில் மற்றொரு பிரசன்னம் மூலம் புதிதாக ஆழ்துளைக்கிணறு தொடர்பான சாத்தியக்கூறுகளை பார்ப்போம் என்று கூறினேன்.

 

மீண்டும் விரைவில் மற்றொரு பதிவில் சந்திக்கிறேன்,

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்.

கைபேசி: 8300124501

No comments:

Post a Comment