Tuesday 14 September 2021

காதல் கவிதைகள் படித்திடும் நேரம்!

காதல் இன்றைய காலத்தில் நிறைய மாறிவிட்டது. புறா விடு தூதிலிருந்து குருஞ் செய்திகளில் பரிமாறிக்கொள்ளப்படும் காலமாக வளர்ச்சி பெற்றுள்ளது. பொதுவாக பொருத்தம் பார்க்கத்தான் ஜோதிடரை நாடி வருவர். காதலிப்பவர் தனக்கு தகுந்தவரா? எனக் கேட்டு ஜோதிடரை அணுகுவோரும் உண்டு. சமீபத்தில் காதலை சொல்ல நல்ல நாள் கேட்டு ஒரு அன்பர் வந்தது ஆச்சரியமூட்டும் அனுபவம். வந்தவர் ஒரு அரசுப் பள்ளி ஆசிரியர்  அவருக்கு ஜாதகத்தை பெற்றோர் எழுதி வைக்கவில்லை. எனவே பிரசன்னம் பார்க்க வேண்டுமென்றார்.


அவரது கேள்வி நான்கு.
 

1..சக ஆசிரியையின் செயல்கள் என்னை கிளர்சியூட்டுகின்றன. அவரது செயல்கள் என்னை வசீகரிப்பதன் அறிகுறியா?

2. அல்லது “நான் தவறாக புரிந்துக்கொண்டுள்ளேனா?”

3. எனது எண்ணம் சரி எனில் அவரிடம் எனது காதலை சொல்ல நாள் குறித்து சொல்லவும்.

4. எனது காதல் ஏற்றுக்கொள்ளப்படும் நிலையில் எங்கள் மண வாழ்வு எப்படி இருக்கும்? என்று கேள்விகள் இருந்தன.

ஆசிரியருக்கு தெளிவான திட்டமிடல் இருக்கிறது. அடிவாங்காமல் அவமானப்படாமல் தனது காதல் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்ற ஆவலில் ஜோதிட ஆலோசனை கேட்டு வந்துள்ளார்.. அவரது பயத்திற்கு காரணம் அவர் விரும்புவதாக சொல்லும் சக ஆசிரியை வேற்று மதத்தை சார்ந்தவர் என்பதுதான்.

ஆசிரியருக்காக பார்க்கப்பட்ட ஜாமக்கோள் பிரசன்னம் கீழே.


உதயம் ஆரூடம் இரண்டும் ஒன்றாக உள்ளது. இது கேள்வியாளர் தனக்காகவே கேள்வியை கேட்கிறார் என்பதை குறிப்பிடுகிறது. உதயமும் ஆரூடமும் சிம்மமாகி அங்கு சூரியன் ஆட்சி பெற்றுள்ளது கேள்வியாளர் அரசுத் தொடர்புகொண்டவர் என்பதை குறிப்பிடுகிறது. உதயத்தை குரு பார்ப்பதும், உதயத்திற்கு இரண்டாமிடத்தில் உச்ச புதன் இருப்பதும் வந்தவர் அரசுப்பள்ளி ஆசிரியர் என்பதை குறிப்பிடுகிறது. உதயம் கேள்வியாளர் என்றால் 7 ஆமிடம்  இவர் காதலை சொல்லவிருக்கும் ஆசிரியையைக் குறிக்கும். 7 ஆமிடத்தில் குரு இருந்து சூரியன் பார்வை பெறுவது எதிராளியும் ஆசிரியையே என கேள்வியாளர் கூறியது சரியே என்பதை தெரிவிக்கிறது. 

இப்போது இவர் காதலின் நிலை என்ன என்பதை காண்போம். உதயம் இரண்டாமிடத்தில் உள்ள உச்ச புதனையும், நீச சுக்கிரனையும், நோக்கி நகர்கிறது. புதன் காதலின் காரக கிரகம் என்பதோடு, அவர் தகவல் பரிமாற்றம், கடிதம் இவற்றின்  காரக கிரகமும் கூட. மேலும் உதயத்திற்கு இரண்டாமிடத்தில் உள்ள சுக்கிரன் தகவல் தொடர்பை குறிக்கும் மூன்றாவது பாவத்தின் அதிபதியும் கூட. எனவே கேள்வியாளர் காதலை தெரிவிக்க  தயாராக இருக்கும் நிலையை இரண்டாமிட கிரகங்கள் சுட்டிக்காட்டுகின்றன. புதன் காதலியையும், சுக்கிரன் மனைவியையும் குறிக்கும் காரக கிரகங்களாகும். இவை இரண்டும் ஒன்றாய் உதயத்திற்கு இரண்டில் அமைவது, காதலிக்கவுள்ள பெண்ணை மனைவியாக அடையும் கேள்வியாளரது ஆசையை குறிப்பிடுகிறது. காதல் பாவமான உதயத்திற்கு 5 ஆமிடம் தனுசில் ஜாமச் சந்திரன் அமர்ந்து அதன் அதிபதி ஜாம குருவால்  உதயதிற்கு லாபத்தில் மிதுனத்தில் இருந்து பார்ப்பது சிறப்பு என்றாலும் வெளிவட்ட குருவிற்கு உள்வட்ட குருவே ஆதார சக்தி. உள்வட்ட குரு வக்கிரம் பெற்று 7 ல் அமர்ந்து உதயத்தை பார்க்கிறார். உதயத்தில் சூரியனுடன் செவ்வாய் இணைந்துள்ளதால் காதலை சொல்ல துணிச்சல் ஜாதகருக்கு உண்டென்றாலும் வெளிவட்ட செவ்வாய் நீசம் பெற்று, துணிச்சல் ஸ்தானாதிபதி உள்வட்ட சுக்கிரனும் நீசம் பெற்று அமைந்தது ஆகியவற்றால் கேள்வியாளருக்கு சிறிது பயம் கலந்த ஆர்வம் இருப்பது தெரிகிறது. உச்ச, நீச கிரகங்களே கேள்வியாளரின் சிந்தனையில் மையம்கொண்டிருக்கும் என்பதற்கேற்ப களத்திர காரக கிரகங்களான சுக்கிரன், செவ்வாயோடு காதல் காரகன் புதனும் உச்சம் பெற்றது ஜாதகரின் சிந்தனையை தெளிவாக பிரதிபலிக்கிறது.   

இப்போது இவரது காதல் ஏற்றுக்கொள்ளப்படுமா என்று பார்ப்போம். மனைவியை குறிக்கும் சுக்கிரன் உதயத்திற்கு இரண்டாம் வீட்டில் நீசம் பெறுவது கேள்வியாளர் குறிப்பிடும் பெண்ணுக்கு உள்ள பாதிப்பை கூறும் அல்லது கேள்வியாளரின் எண்ணத்திலேயே உள்ள தகுதிக் குறைவை குறிப்பிடும். இதை தனது மதத்திற்கு மாறுப்பட்ட அளவிலான எண்ணம் என்றும் எடுத்துக்கொள்ளலாம். ஜாம சுக்கிரன் உதயத்திற்கு எட்டாமிடமான மீனத்தில் உச்சம் பெற்று மறைவது, எதிராளி ஆசிரியை தற்போது வசதியாக இருக்கிறார் என்பதை குறிப்பிடுகிறது. சுக்கிரனும் புதனும் காதல் பாவமான 5 ஆம் பாவத்தோடு தொடர்புகொள்ளாமல் அவமான பாவமான எட்டாமிடத்தையே தொடர்புகொள்கின்றன.  மேலும் உதயத்திற்கு எட்டாம் அதிபதி 7 ல் இருப்பதால் எதிராளியால் கேள்வியாளருக்கு அவமானம் ஏற்பட இருப்பதை சுட்டிக்காட்டுகின்றது. 7 ஆமிட குருவே உதயத்திற்கு 11 ல் இருப்பது கேள்வியாளரின் ஆவலை தூண்டுவதோடு முறையற்ற தொடர்பு குறித்த தகவலையும் தெரிவிக்கிறது. எனவே கேள்வியாளர், எதிராளியிடம் தனது காதலை தெரிவித்தால் அவமானப்பட நேரும். சக ஆசிரியையின் நடவடிக்கைகளை கேள்வியாளர் தவறாக புரிந்து கொண்டுள்ளதையே பிரசன்னம் சுட்டிக்காட்டுகிறது. 

காதல் காரகன் புதன் வெளிவட்டத்தில் உதயத்திற்கு பாதக ஸ்தானமாக மேஷத்தில் கவிப்புடன் உள்ளது இதனை உறுதி செய்வதாக உள்ளது. உதயதிற்கு 6 ல் இரு சனியும் உள்ளது, தவறாக எடுக்கப்படும் கேள்வியாளரின் ஒரு முன் முயற்சியால் அவரது வேலையில் சிரமங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதை சுட்டிக்காட்டுகிறது. ஒரே கிரகம் உள்வட்டதிலும் வெளிவட்டதிலும் ஒரே ராசியில் இருப்பது அதன் காரகம் பாதிக்கப்படுவதை குறிக்கும். உதயத்திற்கு விரையத்தில் அமைந்த வெளிவட்ட நீச செவ்வாயை இரு சனியும் பார்க்கிறது. பாதகத்தில் கவிப்பு அமைந்து பாதகாதிபதியான செவ்வாய் உள்வட்டத்தில் உதயத்தில் அமர்ந்து 5, 8 அதிபதியான உள்வட்ட குரு  பாதகாதிபதி செவ்வாயின் அவிட்டத்தில் நின்று உதயத்தை பார்ப்பது ஆகியவை காதலைவிட பாதகமே கேள்வியாளரை தேடி வருகிறது என்பதை குறிப்பிடுகிறது. எனவே சக ஆசிரியையின் செயல்களை கேள்வியாளர் தவறாக புரிந்துகொண்டுள்ளார். காதல் கடிதம் கொடுத்தால் கேள்வியாளர் அவமானப்பட நேரும் என்பதோடு அவரது பணிக்கும் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதை  பிரசன்னம் தெளிவாக சுட்டிக்காட்டுகிறது. எனவே காதலை சொல்ல தற்போதைய சூழல் சாதகமில்லை என்று கேள்வியாளருக்கு கூறப்பட்டது. 

இந்த வகை பிரசன்னம் எனக்கு புதிய அனுபவத்தை கொடுத்தது என்பதோடு இவ்வகை கேள்விகளுக்கு எப்படி விடையளிக்கலாம் என்ற புரிதலையும் கொடுத்தது. இதை எனக்கு கற்றுக்கொடுத்த எனது ஆசான்களுக்கு நன்றிகள் கோடி.

 

மீண்டுமொரு பதிவில் விரைவில் சிந்திப்போம்.

அதுவரை வாழ்த்துக்களோடு,

அன்பன்,

பழனியப்பன்.

கைபேசி: 8300124501

No comments:

Post a Comment