Friday, 14 November 2025

Make in India

 


தாது ராசிகளான சர ராசிகள் போர்க்குணம் மிக்கவை. புத்தி சாதுர்யமற்றவை. பிறர் அறிவு புகற்றினாலன்றி தனது அறியாமையை மாற்றிக்கொள்ளாது பிடிவாதமாக, முட்டாள்தனமாக செயல்படும் இயல்புடையவை. படைப்பாற்றல் அற்றவையும் கூட. அனைவருக்காகவும் கடுமையாக உழைக்கக் கூடியது. பிறருக்காகவும் போரிடக்கூடியது. செவ்வாய் தாது ராசிகளின் காரக கிரகமாகும். மூல ராசிகளுடன் இணைந்து செயல்படும். ஜீவ ராசிகளை வெறுக்கும். இவற்றை கற்களுக்கு ஒப்பிடலாம்.  

மூல ராசிகளான ஸ்திர ராசிகள் சொந்த அனுபவத்தால் ஓரளவு சாதுர்யத்தை பெற்றிருக்கும். சுய லாபத்தை முன்னிலைப்படுத்தி செயல்படக் கூடியது. போர்க்குணம் குறைவு என்றாலும் தனக்கு பாதிப்பு வந்தால் மட்டும் போர் செய்யும். படைப்பாற்றல் குறைவு. தாது ராசிகளுடன் இணைந்து செயல்படும் என்றாலும் மூல ராசிகளை அதிகம் விரும்பும். சுக்கிரன் மூல ராசிகளின் காரக கிரகமாகும். மூல ராசிகளை மண்ணுக்கு ஒப்பிடலாம்.  

உபய ராசிகளான ஜீவ ராசிகள் புத்தி சாதுர்யம் மிக்கவை. போர்க்குணம் குறைவு. ஆனால் அதை தனது புத்திசாலித்தனத்தால் சரி செய்துவிடும் இயல்புடையவை. மூல ராசிகளே படைப்பாற்றலின் காரக ராசிகளாகும். தங்களுக்குத் தேவையான தொழில் நுட்பங்களை தாங்களே உருவாக்கிக் கொள்ளும் வல்லமை மிக்கவை. இவை தாது ராசிகளின் இயல்பு குணமான கல்லையும், மூல ராசிகளின் இயல்பு குணமான மண்ணையும் விவசாயத்திற்கேற்றபடி உருவாக்கம் செய்து பயிர் விளைவித்து உயிரூட்டும் வல்லமை மிக்கவை.  அதனால்தான் இவற்றை ஜீவ ராசிகள் என்கிறோம். ஜீவ என்றால் உயிர் என்று பொருள். ஜீவ ராசிகள் மூல ராசிகளுடன் இணைந்து செயல்படும். தாது ராசிகளை வெறுக்கும். புதன் மூல ராசிகளின் காரக கிரகமாகும்.

இன்று உலகில் பல புதுமையான தொழில்நுட்பங்களை படைக்கும் அமெரிக்கா உலகியல் ஜோதிடத்தில் ஜீவ ராசியான மிதுன ராசி அமைப்பில் வரும் ராசி என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா தாது ராசி அமைப்பில் வரும் ராசியாகும். இதுவே இரு நாடுகளுக்கும் உழைப்பு மற்றும் படைப்பு ரீதியிலான வேறுபாட்டிற்கும் பகைக்கும் காரணமாகும். இப்பகை எப்போதும் தீராதது. அதாவது இரு நாடுகளும் தங்கள் நட்பில் ஒருபோதும் ஒன்றை ஒன்று நம்பாது.

இன்று அமெரிக்கா இந்தியர்களை அதிக பயத்துடன் பார்க்கின்றனர். காரணம் அமெரிக்கர்கள் உருவாக்கிய தொழில்நுட்பங்களை இந்திய இளைஞர் அறிவு இன்று நிர்வகிக்கிறது. இன்று அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களில் அதிக எண்ணிக்கையில் இந்தியர்களே பணிபுரிகின்றனர். இவர்களால் இந்தியாவின் வருமானமும் உயர்ந்தது. பாரதமும் தொழில்நுட்ப அறிவை அமெரிக்கர்களிடமிருந்து பணி அறிவின் மூலம் பெற்றுள்ளது. இன்னும் பலகோடி மென்பொருள் அறிவுடைய இந்திய இளைஞர்கள்  தங்கள் வாய்ப்புகளுக்காக காத்திருக்கின்றனர் என்பதும் அவற்றால் இந்தியா விரைவில் மேற்குலக நாடுகளை தொழில்நுட்பத்தில் மிஞ்சிவிடும் வாய்ப்பு இருப்பதால் அவை இன்று தூக்கத்தை தொலைதுவிட்டு இந்தியர்களை வெறுப்புடன் பார்ப்பவர்களாக உள்ளனர். இந்நிலையில் நமது அறிவை நம்மை கட்டுப்படுத்த நினைக்கும் மேற்குலக நாடுகளுக்கு விற்கும் சாதாரண பணியாட்களாக அன்றி, தொழில் நுட்பங்களை உருவாக்கி விற்கும் முதலாளிகளாக மாற வேண்டியதன் அவசியத்தை இன்றைய பதிவு வலியுறுத்துகிறது.

பின்வரும் ஆணின் ஜாதகத்தை கவனியுங்கள்.

Screenshot 2025-11-13 104157.png

ரிஷப லக்ன ஜாதகத்தில் லக்னாதிபதி சுக்கிரன் ஜீவ ராசியான மீனத்தில் உச்சம். உச்ச சுக்கிரனால் நீச புதன் பங்கப்படுகிறார். வித்யா காரகர் புதனின் சேர்க்கையால் ஜாதகர் பொறியியலில் மின்னணு தகவல்தொடர்புக் கல்வி (BE-Electonics & Communication) படித்தார். கால புருஷ வித்யா ஸ்தானாதிபதியும் லக்னத்திற்கு மூன்றாமதிபதியுமான சந்திரன், 12 ஆமதிபதி செவ்வாயுடன் பரிவர்த்தனையாகிறார். உயர்கல்வி பாவகமான 9 ஆமிடமான மகரத்தை பரிவர்த்தனைக்குப் பிறகு கடக சந்திரன் பார்ப்பார். மகரத்தை கால புருஷ 9 ஆமதிபதி குரு 5 ஆம் பார்வையாக கன்னியில் இருந்து பார்க்கிறார். இதனால் இவர் உயர் கல்விக்கு வெளிநாடு செல்ல வேண்டியிருக்கும். இதன்படி பரிவர்த்தனை செவ்வாய் தசையில் ஜாதகர் அமெரிக்கா சென்றார். புதனுடனான பரிவர்த்தனைக்குப் பிறகு மீனம் வரும் குரு, அதே பரிவர்த்தனையால் மீனத்திலிருந்து கன்னிக்கு வந்து உச்சம் பெறும் புதனை நேர் பார்வை பார்ப்பார். இவ்வமைப்புகள் ஜாதகர் உயர் கல்விக்காக வெளிநாடு சென்று சிறப்பாக கல்வியை முடிப்பார் என்பதும் புரிகிறது. இதன்படி தாய் நாடான இந்தியாவின் பொறியியலில் இளங்கலை கல்வியை முடித்தவர். முதுகலையில் கணினி அறிவியலை அமெரிக்காவில் முடித்து, அங்கேயே ஒரு நிறுவனத்தில் தரவு மேலாண்மையில் முதல் நிலை பணியாளராக பணிபுரிகிறார்.

தசாம்சத்தில் தரவுகளை (Datas) குறிப்பிடும் புதன், மேலாண்மையை குறிப்பிடும் செவ்வாயுடன் இணைவு பெற்றதால் ஜாதகர் தரவு மேலாண்மைத் துறையில் பணிபுரிகிறார். தாது ராசியான மேஷத்தில் ஜீவ ராசியாதிபதி புதன் தொடர்பு பகையானது. மேஷ ஆட்சி செவ்வாயின் அதிகாரம் புதனின் அறிவை கட்டுப்படுத்திவிடும். இங்கு அதிகாரமே பேசும். அறிவிற்கு இரண்டாமிடமே. ஆனால் அறிவை நிர்வகிக்க மட்டும் ஜாதகருக்கு கொடுப்பிணை உள்ளது. ஜீவ ராசிக்குரிய புதியன படைத்தல் என்பது இங்கு இருக்காது. இத்தகைய ஜாதகர்கள் அமெரிக்கா போன்ற மேலை நாடுகளுக்குச் சென்றாலும் அங்கு அவர்களின் அடிமைகளாக மட்டுமே பணிபுரிவர். இவர்களால் புதியனவற்றை உருவாக்க எந்த தசா-புக்தியிலும் முடியாது. Make in India உருவாக்கத்திற்கு இவர்கள் பயனற்றவர்கள்.

கீழே இரண்டாவதாத ஒரு பெண்ணின் ஜாதகம்.

DHAKSHANA.png

கும்ப லக்ன ஜாதகத்தில் 6 ஆமதிபதி சந்திரன் அமைவு ஜாதகிக்கு உள்ள தாய்நாட்டுப் பற்றையும், வெளிநாட்டு வேலை வாய்ப்பையும் ஒருங்கே குறிப்பிடுகிறது. ஆரோக்கிய ஸ்தானமான 5 ஆமிடத்தில் கால புருஷ ஐந்தாமதிபதி சூரியனுடன் புதனும் சுக்கிரனும் இணைந்துள்ளனர். சூரியனை விட்டு பல பாகைகள் விலகியுள்ளதால் புதனும் சுக்கிரனும் அஸ்தங்கமடையவில்லை. விருட்சிக குரு சனியின் அனுஷ நட்சத்திரத்தில் அமைந்து, மீனச் சனி குருவின் பூரட்டாதியில் நின்று நட்சத்திரப் பரிவர்த்தனையில் உள்ளனர். குரு உயிரியலை குறிப்பிடும் கிரகம். சனி தசையில்  குருவின் புனர்பூஷத்தில் நிற்கும் சுக்கிர புக்தியில் ஜாதகி இளங்கலையில் பொறியியலில் Bio Medical Engineering படித்தார். (குரு உயிரியல், 5 ஆமிடம் மருத்துவம், சனி வக்கிரம் பொறியியல்)  உயர் கல்வியை குறிப்பிடும் 9 ஆமதிபதி சுக்கிரன் அமெரிக்காவை குறிப்பிடும் மிதுன ராசியில் அமைந்ததால் இவர் உயர் கல்விக்காக அமெரிக்கா சென்று முதுகலையில் நிர்வாகவியல் (MBA) படித்தார். சூரியனுடன் 9 ஆமதிபதி இணைந்துள்ளதாலும் சூரியனே பாகை அடிப்படையில் புதன், சுக்கிரனைவிட அதிக பாகை சென்றுள்ளதாலும் ஜாதகிக்கு சுக்கிர புக்தி முடிந்து சூரிய புக்தி வந்தவுடன் முதுகலையில் சூரியன் குறிப்பிடும் நிர்வாகவியல் படித்தார்.

தசாம்சத்தில் சனி, குரு, புதன் ஆகியவை நீர் ராசியான விருட்சிகத்தில் நிற்பது ஜாதகிக்கு கடல் கடந்த தேசத்தில் பணிபுரியும் வாய்ப்பை குறிக்கிறது. ஜாதகிக்கு சனி தசை முடிந்து புதன் தசையில் அமெரிக்காவிலேயே புதன் குறிப்பிடும் தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலை கிடைத்தது.

ஜாதகிக்கு ராசிச் சக்கரப்படி ஜீவ ராசியான மிதுன ராசியில் தனது நட்புக் கிரகங்களுடன் இணைந்து ஆட்சி பெற்ற புதனின் தசை 2௦39 வரை உள்ளது. அதுவரை ஜாதகிக்கு புதியன படைக்கும் ஆற்றல் சிறப்பாக இருக்கும். இத்தகைய ஜாதகர்களை அடையாளம் கண்டு இவர்களது மேலை நாட்டு தொழில்நுட்ப அனுபவங்களை இந்தியாவிற்கு பயன்படும்படி வாய்ப்புகளை பாரதத்திலேயே அமைத்துக்கொடுத்தால் இவர்களால் இந்தியா மாபெரும் வல்லரசாக உருவாகும் வாய்ப்புண்டு. தசாநாதர் புதன், அரசாங்கத்தை குறிக்கும் சூரியனுடன் இணைந்துள்ளதால் இவர் நமது இந்திய அரசாங்கத்திற்கு சேவை செய்ய தயாராக இருப்பார். தாய் நாட்டை குறிக்கும் சந்திரன் லக்னத்திலேயே அமைந்ததால் ஜாதகிக்கு தாய் நாட்டுப் பற்றும் அதிகமிருக்குக்கும். இத்தகைய தகுதியும், தேசப் பற்றும் மேலைத் தொழில் நுட்ப அனுபவ அறிவும் உள்ள பாரதத் தாயின் தவப் புதல்வர்களை Make in India திட்டத்திற்கு பயன்படுத்துவதன் மூலம் மேலை நாடுகளை தொழில் நுட்பங்களுக்காக சார்ந்திராமல், இந்தியாவிலேயே அவற்றை உருவாக்கம் செய்ய இயலும்.

                      

                             ஜெய் ஹிந்த்!

 

மீண்டும் விரைவில் மற்றுமொரு பதிவில் சந்திப்போம்,

அதுவரை வாழ்த்துக்களுடன்,

 

ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்,

கைபேசி: +91 8300124501

Saturday, 10 August 2024

 

அங்க என்ன சொல்லுது?



இன்றைய நவீன உலகில் அனைவரும் ஓடிக்கொண்டே இருக்க வேண்டியுள்ளது. பொருளாதாரத்தை முன்னிட்டிடான ஓட்டத்தில் பணியே முக்கிய கவனமாக ஆகியுள்ளது. அதைத் தவிர இதர விஷயங்களில் கவனம் செலுத்தாவிட்டால் அவை பாதிக்கப்படும். பணமே அனைத்திற்கும் ஆதார சுருதியாக திகழ்கிறது என்றாலும், ஆரோக்கியக் குறைபாடு போன்ற இதர விஷயங்களை துவக்கத்திலேயே கவனித்து சரி செய்துகொள்ளாவிட்டால் பிறகு அது நம்மை பீதிக்குள்ளாக்கும் நிலைக்குக் கொண்டு செல்லும். இந்நிலையில் தனது வாழ்நாள் சேமிப்புகளை சில நாட்கள் மருத்துவமனை சிகிச்சையில் இழப்பவர்கள் பலர். சரியான திட்டமிடல் இல்லாவிட்டால் மன அழுத்தங்களால் வரும் உடல்நல பாதிப்புகளும், பாரம்பரியமாக வரும் ஆரோக்கிய குறைகளும், தவறான பழக்கத்தால் வரும் நோய்களும் ஒருநாள் நம்மை வீழ்த்தி விடும்.  அதனால்தான் “Health is Wealth” என்கிறார்கள். ஆரோக்யம்தான் முதன்மையான சொத்து என்பதை நாம் அறிந்திருப்பது அவசியம். உடல் நலத்திற்கு மன நலமே முக்கிய காரணியாக விளங்குகிறது. மனம் பாதிக்க, உடல் பாதிக்கும். வெளிநாட்டில் இருக்கும் எனது நீண்ட நாள் வாடிக்கையாளர் ஒருவர் தனது ஆரோக்கியம் பற்றிய மன அழுத்தத்தில் இருந்தார். இயல்பாக நடக்க இயலா வண்ணம் தனது கால்கள் சிரமப்படுத்துகின்றன. நடுத்தர வயதானாலும் நடக்க சிரமப்படும் சூழல் தன்னை பயமுறுத்துவதாக கூறினார். தனது கால் எழும்புகள் பாதிக்கப்பட்டிருக்குமோ? என்ற பயத்தில் அவர் இருந்தார். ஜோதிடம் மூலம் தனது கால்களில் என்ன பாதிப்பு? என அறிந்து கூற இயலுமா? என கேட்டுக்கொண்டார். அதற்காக பார்க்கப்பட்ட ஜாமக்கோள் பிரசன்னமே கீழே நீங்கள் காண்பது



கேள்வியாளர் கேள்வியை நேரடியாகவே கேட்டுவிட்டார் என்பதால் உதயமே பதிலை சொல்லிவிட வேண்டும். ஆனால் இங்கு கூடுதலாக கேள்வியின் பின்னணியோடு இந்தப் பிரசன்னத்தை அணுகுவோம். ஆரோக்ய ஸ்தானம் என்பது 4 ஆமிடமாகும். கால புருஷனுக்கு 4 ஆமிடமான கடகமே உதயமாக அமைந்ததால் ஆரோக்ய விஷயம் என்பதை பிரசன்னம் உணர்த்துகிறது. உதயாதிபதி சந்திரன் உதயத்திலே வெளிவட்டத்தில் அமைந்தது பலமே. அவர் சனி சாரத்தில் பூசத்தில் இருப்பதால் கால்கள் இயக்கத்தில் தடை ஏற்பட்டுள்ளது புரிகிறது. உதயப் புள்ளி 6 ஆமதிபதியான குருவின் புனர்பூசத்தில் அமைந்து, மகர குரு நீசம் பெற்ற நிலையில் உதயாதிபதி சந்திரனின் திருவோணத்தில் இருந்து உதயத்தை பார்ப்பதால் கேள்வியாளருக்கு சர்க்கரை வியாதியின் பாதிப்பால் இந்த தொந்தரவு வந்திருக்க வேண்டும். குரு-இனிப்பு, சந்திரன்-ரத்தம். எனவே சர்க்கரை வியாதி. 4 ஆமிடமான துலாத்தில் சந்திரன் ஜாமச் சுக்கிரனுடன் (வெளிவட்ட சுக்கிரன்) இணைவு பெற்றதும் கேள்வியாளருக்கு சர்க்கரை வியாதி இருப்பதை குறிப்பிடுகிறது. துலாத்தில் சுக்கிரன் ராகுவின் சுவாதியில் நிற்பதால் கேள்வியாளருக்கு ரத்த சர்க்கரை கட்டுப்படுத்த சிரமான அளவு உள்ளது என்பதும் புரிகிறது.

பாதிப்பின் காரணத்தை சுட்டிக்காட்டும் ஆரூடம் உதயத்திற்கு 1௦ ஆமிடமான மேஷத்தில் உச்ச சூரியன், புதன், குருவுடன் அமைந்துள்ளது. ஆரூடத்தில் உச்ச சூரியன் உடல் நரம்புகளை குறிப்பிடும் கேதுவின் அஸ்வினியில் அமைந்து, கும்ப சனியின் 3 ஆம் பார்வையை பெறுவதால் கேள்வியாளருக்கு கால்களில் நரம்பு பலகீனத்தால் ஏற்படும் Varicose பாதிப்பும்  இருக்க வேண்டும். பாதிப்பின் வகையை குறிப்பிடும் கவிப்பு சிம்மத்தில் கேதுவின் மகம்-4 ல் அமைந்தது இதை உறுதிப்படுத்துகிறது. கால்களை குறிப்பிடும் சனி வெளிவட்டத்தில்  கன்னியில் கேதுவுடன் இணைவு பெற்று, கால புருஷனுக்கு 12 ஆமிடமான பாதங்களை குறிக்கும் மீனத்தையும், உதயத்திற்கு 12 ஆமிடமான மிதுனத்தையும் பார்ப்பதால் இது தெளிவாகிறது. பாத ராசியான மீனத்தில் சூரியன் ராகு மற்றும் செவ்வாயுடன் இணைவு பெற்று கன்னி சனியின் பார்வை பெறுவதால் கேள்வியாளருக்கு சூரியனின் செயல்பாடுகள் பாதிக்கப்பட வேண்டும். சூரியன் வைட்டமின் D யை குறிப்பிடுபவர். எனவே கேள்வியாளருக்கு வைட்டமின் D குறைபாடு இருக்க வேண்டும்.

மேற்கண்ட சர்க்கரை வியாதி, Varicose, வைட்டமின் D போன்ற பல பாதிப்புகள் கேள்வியாரின் பாதிப்பின் பின்னணியில் இருந்தாலும், தற்போதைய கால்களில் வலிக்கு என்ன காரணம்? என்பதே கேட்கப்பட்ட கேள்வி. இதற்கு உதய கிரகமே நேரடியாக பதிலைக் கூறிவிடும். உதயத்தில் ரத்தத்தை குறிப்பிடும் சந்திரன், கட்டியை குறிப்பிடும் செவ்வாயின் 8 ஆம் பார்வையை கும்பத்தில் இருந்து பெறுகிறார். இதனால் கேள்வியாளருக்கு கால்களின் பாதிப்பிற்கு  ரத்தக்கட்டே காரணம். மீனத்தில் வெளிவட்ட செவ்வாய், நான்காம் பார்வையாக உதயத்திற்கு 12 ஆமிடத்தையும், கும்ப உள்வட்ட செவ்வாய் உதயத்திற்கு 2 ஆமிடத்தையும் பார்ப்பதால், கேள்வியாளருக்கு இரு பாதங்களிலுமே ரத்தக் கட்டுகள் இருக்க வேண்டும். 2 ஆமிடம்-வலது பாதம். 12 ஆமிடம் இடது பாதம் என்பதை அறிக. வலது காலை குறிக்கும் 2 ஆமிடத்தில் கவிப்பு அமைந்தது வலது காலில் பாதிப்பின் கடுமையை குறிப்பிடுகிறது.

மேற்கண்ட விஷயங்களை ஆராய்ந்துவிட்டு உங்களுக்கு சர்க்கரை, Varicose, வைட்டமின் D போன்ற பல உடலியல் பாதிப்புகள் இருப்பினும், தற்போதைய கால்களின் வலிக்கு ரத்தக்கட்டே காரணம். நீங்கள் பயப்படும் அளவு எலும்பு பலகீனமல்ல என்று கூறினேன். கேள்வியாளரும் மேற்கண்ட உடலியல் உபாதைகளை குறிப்பிட்திருந்தார் எனினும், கால்களின்  வலிக்கு காரணம் எனும்பு பாதிப்பல்ல என்று கூறியதால் நிம்மதியடைந்தார்.   அடுத்த ஓரிரு நாட்களில் கேள்வியாளரின் கால் வலிக்கு ரத்தக்கட்டே காரணம் என மருத்துவப் பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டு, முதலில் இடது காலில் ஊசிகள் மூலம் இரத்தக்கட்டுகள் அகற்றப்பட்டன.  அதன் பிறகு சில நாட்கள் இடை வெளிக்குப் பின் ரத்தக்கட்டு அதிகம் இருந்த வலது காலில் பல ஊசிகள் மூலம் கடும் அவஸ்தையுடன் கேள்வியாளருக்கு ரத்தக்கட்டுகள் அகற்றப்பட்டன.

சிறிய அளவில் பாதிப்பு இருந்த போதே சரியான மருத்துவ ஆலோசனையை பெற்றிருந்தால் இத்தகைய கடும் அவஸ்தைகளும் மன உழைச்சலும் ஏற்பட்டிருக்காது எனலாம். ஆனால் கடமைகளும், பொறுப்புகளும் நமது கவனத்தை திசை திருப்புவதன் விளைவு இது.

மீண்டும் விரைவில் மற்றொரு பதிவில் சந்திக்கிறேன்.

அதுவரை வாழ்த்துக்களுடன்,

ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்,

கைபேசி: 8300124501

பின் குறிப்பு:

எனது வலைத்தளம் jothidanunukkangal.com பராமரிப்பில் இருப்பதால் பதிவு தற்காலிகமாக இங்கு பதிவிடப்படுகிறது.   

Friday, 19 November 2021

ஜோதிட நுணுக்கங்கள் வலைமனை

வாசக அன்பர்களுக்கு வணக்கம்.


எனது பதிவுகளை புதிய எனது வலைமனையில் (Website) தொடர்ந்து படிக்க    இங்கு சொடுக்கவும் 

என்றும் உங்களுடன்,

உங்கள் அன்பன்,
ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்,
கைபேசி: 8300124501

Wednesday, 10 November 2021

உறவுகளை கையாள கற்றுக்கொள்ளுங்கள்!

 வாசகர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு:

எட்டு வருடங்களுக்கு முன் 2௦13 ஆம் ஆண்டு துவங்கிய எனது வலைப்பூ பயணத்தின் மற்றொரு மைல் கல்லாக,  jothidanunukkankal.blogspot.com என்ற நமது வலைப்பூவானது   https://jothidanunukkangal.com/     என்று வலைமனையாக மாறி மேலும் கூடுதல் சிறப்பம்சங்களுடன் உங்களுக்கு சேவை செய்ய வருகிறது. எனது அடுத்த பதிவு நமது புதிய https://jothidanunukkangal.com/ என்ற வலைமனையில் வெளிவரும். வாசக அன்பர்கள் தங்களது மேலான ஆதரவை தொடர்ந்து நல்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.




மனிதன் தனது மகிழ்ச்சியையும், சிரமத்தையும் பகிர்ந்துகொள்ள சக மனிதர்களை நாடுகிறான். நமது குடும்ப உறவுகளோடு நாம் ஏற்படுத்திக்கொள்ளும் நட்புகளும், தொடர்புகளும் ஒருவகை உறவுகளே. இத்தகைய உறவுகள் மூலமே ஒருவர் தான் வாழும் சமூகத்தோடு ஒருங்கினைகிறார். ஒருவருக்கு அமையும் உறவுகள் அனைத்தும் அவருக்கு மன நிறைவாக அமைகிறதா? எனில், அப்படி அல்ல. ஒருவருக்கு ஜாதகத்தில் லக்னத்தோடு தொடர்புகொள்ளும் கிரகத்தின் காரக உறவுகள் ஜாதகரைவிட்டு பெரும்பாலும் விலகுவதில்லை. லக்னத்தோடு தொடர்பற்ற கிரகங்களின் காரக உறவுகள் அவற்றின் தசா-புக்திகளில் மட்டும் ஒருவரின் வாழ்க்கை வட்டத்திற்குள் வந்து அதன் தசை முடிந்த பிறகு விலகிச் சென்றுவிடும்.

கோட்சார கிரகங்கள் ஜனன கால கிரகங்களோடு தொடர்புகொள்கையில் ஜனன கால கிரக காரக உறவிற்கு அந்த குறிப்பிட்ட கோட்சார காலங்களில் மட்டும் குண மாற்றத்தை தருகின்றன. கோட்சார மாத கிரகங்கள் ஜனன கால கிரகங்களின்மேல்  ஏற்படுத்தும் தாக்கத்தைவிட, வருட கிரகங்கள் ஏற்படுத்தும் தாக்கங்கள் வருடம் முழுமையிலும் நீடிக்கும் என்பதால் அத்தகைய குரு, சனி, ராகு-கேதுக்களின் தாக்கம் முக்கியமாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. ஆனால் தசா-புக்திகள் ஒரு கிரகத்தின் மீது ஏற்படுத்தும் தாக்கம் அதன் தசா-புக்தி காலம் முடியும் வரை நீடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய பதிவில் கோட்சார வருட கிரகங்கள் கிரக காரக உறவுகள் மீது ஏற்படுத்தும் குண மாற்றத்தை மட்டும் சில உதாரணங்கள் மூலம் ஆராய்வோம்.      

கோட்சார வருட கிரகங்களால் குண மாறுதலை சந்திக்கும் உறவுகள். 


மேற்கண்ட ஜாதகம் காதலித்து திருமணம் செய்துகொண்ட ஒரு பெண்ணினுடையது. சர்ப்ப தோஷம் உள்ள இந்த ஜாதகத்தில் களத்திர பாவத்திலிருக்கும் ராகு, புத்திர பாவத்திலில் நிற்கும் களத்திர பாவாதிபதி சனியைத்தான்  முதலில் தொடும். அதுபோல லக்னத்தில் நிற்கும் கேது, முதலில் தொடுவது களத்திர காரகன் செவ்வாயைத்தான். இது ஜாதகி திருமணம் செய்து கரு உருவானதும் கணவன்-மனைவிக்கும் கருத்து வேறுபாடு ஏற்படும் என்பதை குறிக்கிறது. இவர் 2௦18 ல் திருமணம் செய்துகொண்டவர். திருமணம் செய்து ஓராண்டிற்குப் பிறகு கோட்சார குரு 5 ஆம் பாவத்திற்கு தனுசுவிற்கு வந்தபோது ஜாதகி கருத்தரித்தார். அப்போது கோட்சார  கேது ஜனன கால 7 ஆமதிபதி சனி மீதும், கோட்சார ராகு ஜனன கால களத்திர காரகன் செவ்வாயின் மீதும் நிற்கிறது. கோட்சார ராகு-கேதுக்களால் களத்திர கிரகங்களும் புத்திர பாவமும் கோட்சார குருவும் பாதிப்பிற்கு உள்ளாகின்றன. கேது புத்திர பாவத்தை கெடுக்க, ராகு கணவனை குறிக்கும் செவ்வாயை கெடுக்க கருத்தரித்த நாள் முதல் தம்பதியருக்குள் சண்டை வந்தது. அருமைக்காதலனே ஜாதகிக்கு அந்நியனாக தெரிந்தார். கோட்சார ராகு கேதுக்கள் தனுசு மிதுனத்தை கடந்ததும் கணவரின் குணத்தில் மாற்றம் இருக்கும் என்றும் அதுவரை ஜாதகி பொறுமையாக இருந்து குழந்தையை பெற்றெடுக்குமாறும் ஆலோசனை கூறப்பட்டது. கோட்சாரத்தில் ராகு ஜனன செவ்வாயை கடந்ததும் கணவரின் குணம் மாறியது. ஜாதகியின் பொறுமையால் கணவனை விட்டுத்தராமல் தனது குடும்ப வாழ்வையும் குழந்தையையும் தக்கவைத்துக்கொண்டார்.

உறவுகளை இணைக்கும் கோட்சார - ஜனன கால கிரக இணைவுகள்.


ஜாதகி காதலித்து திருமணம் செய்துகொண்ட ஒரு பெண். விருட்சிக லக்னத்திற்கு சந்திரன் பாதகாதிபதியாகிறார். தாய் மற்றும் மாமியாரை குறிக்கும் சந்திரன் உச்சமும் மூலதிரிகோணமும் பெற்று வலுவாக உள்ளார். பாதகாதிபதி வலுவானதால் இந்த ஜாதகி காதலித்து திருமணம் செய்துகொண்ட தங்களை மாமியார் பிரித்துவிடுவாரோ என்ற பயம் திருமணமான நாள் முதல் இருந்து வந்தது. இதனால் இவர் கணவரின் வீட்டிற்கு வர மறுத்து வந்தார். ராகு-கேதுக்கள் மோட்ச & ஞான காரக கிரகங்களாக வருவதால் பக்தி மார்க்கத்தில் ஈடுபடுபவர்களுக்கு உதவி புரியும் குணம் கொண்டவை. இதனடிப்படையில் இந்த ஜாதகியின் கிரக சூழ்நிலைகளை சுட்டிக்காட்டி, மாமியார் வீட்டிற்கு ஜாதகி வரவேண்டுமெனில் மாமியாரை தீவிர பக்தி மார்க்கத்தில் ஈடுபடும்படி அறிவுறுத்தப்பட்டது. ராகு கேதுக்கள் கிரகஹண தோஷத்தை ஏற்படுத்தி சூரிய சந்திரர்களை அடைக்கிவிடும் வல்லமை படைத்தவை. இதனால் தற்போது ஜனன கால சந்திரன் மீது நிற்கும் கோட்சார ராகு ஜாதகிக்கு ஜனன கால சந்திரனால் ஏற்பட்ட மன பயத்தை நீக்கி தெளிவை தந்தார். தற்போது மாமியாருடன் நெருக்கமான உறவை பேணுகிறார்.

பரிவர்த்தனை கிரக காரக உறவுகள் கோட்சாரத்தில் பெறும் குண மாறுதல்கள்.   


ஜாதகர் ஒரு ஆண். சகோதர காரகன் செவ்வாய் இளைய சகோதரத்தை குறிக்கும் 3 ஆம் பாவத்தில் லக்ன பாதகாதிபதி சனியோடு இணைந்து நிற்கிறது. செவ்வாய் 3 ஆம் பாவத்தில் நீசம் பெற்று அதன் அதிபதி சந்திரனோடு நீச பரிவர்த்தனை ஆகியுள்ளது. நீச கிரகங்கள் பரிவர்தனைக்குப்பிறகு ஆட்சி கிரகங்களாக மாற்றிவிடுவதால் பரிவர்த்தனைகளில் நீச கிரக பரிவர்த்தனை மிக விரும்பப்படுகிறது. பரிவர்த்தனை என்பதே ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு இடம் மாறி செல்வதே. எனவே இட மாற்றத்தால்தான் நற்பலன் ஏற்படும். இல்லையேல் பரிவர்த்தனை பலனளிக்காது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஜாதகருக்கும் இவரது தம்பிக்கும் நல்ல புரிதல் உண்டு. செவ்வாய் கடகத்தில் இருப்பதால் இவரது தம்பி வெளிநாட்டில் பணி புரிகிறார். தற்போது ஜாதகரது தம்பி கொரானாவின் பொருட்டு சொந்த ஊர் திரும்பியுள்ளார். இவரது தம்பி சொந்த ஊர் திரும்பியது முதல் ஜாதகருக்கும் தம்பிக்கும் உறவு பாதிப்படைந்ததாக ஜாதகர் கூறுகிறார். காரணம், தம்பி வெளிநாட்டில் இருக்கும் வரை பரிவர்த்தனை சிறப்பாக செயல்பட்டுள்ளது. தற்போது தம்பி தாய்நாடு திரும்பிவிட்டதால் பரிவர்த்தனை செயல் இழந்துவிட்டது. கோட்சாரத்தில்தான் பரிவர்த்தனை செயல்படும், தசா-புக்திகளில் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. இதனடிப்படையில் கோட்சார கேது விருட்சிகத்திற்கு வந்தவுடன் பரிவர்த்தனை செவ்வாய் கேதுவால் ஏற்படும் தாக்கத்தை சந்திரனுக்குப்பதில் தான் வாங்கிக்கொள்கிறார். இதனால் தம்பியின் குணம் மாறுதலடைகிறது. தற்போது  வெளிநாட்டில் இருக்கும் வரை தன்னை மிகவும் நேசித்த தம்பி தற்போது மதிப்பதில்லை என ஜாதகர் கூறுகிறார்.

நண்பனை எதிரியாக்கும் கோட்சாரம்


நண்பர்களை குறிக்கும் காரக கிரகம் புதனாகும். காரக பாவம் 7 ஆமிடமாகும். 7, 1௦ க்கு உரியவராக குருவே இந்த மிதுன லக்னத்திற்கு அமைகிறார். புதன் விரைய பாவத்தில் அமைந்து,  கேதுவோடு இணைந்து தொழில் பாவமான 1௦ ஆவது பாவத்தை நேர்பார்வை செய்யும் குருவின் 9 ஆவது பார்வையை பெறுகிறார். இதன் பொருள், ஜாதகர் நண்பரோடு  இணைந்து தொழில் செய்வார் என்பதும், பிறகு அவரால் விரையத்தை சந்திப்பார் என்பதுமாகும். ஜாதகருக்கும் அவரது நண்பரும் தங்கக்கட்டிகளை மொத்தமாக கொள்முதல் செய்து அதை நகைக்கடைகளுக்கு விற்று வந்தனர். ஒரு கிரகம் அதன் ஆதிக்க காலம் வரும் வரை தனது செயல்களை வழங்க காத்திருக்கும் என்றபடி ஜாதகருக்கு நண்பரை குறிக்கும் புதன் திசை துவங்கியதும், நண்பரை குறிக்கும் 7 ஆமதிபதி குரு கோட்சாரத்தில் லக்னத்திற்கு 6 ல் விருட்சிகத்திற்கு வந்து அங்குள்ள லக்ன எதிரியான செவ்வாயோடு இணைகிறார். இதனால் நண்பனே எதிரியாகிறான். நண்பர், ஜாதகருக்கு 5௦ லட்சம் ரூபாய் மதிப்பிலான பணத்தை மோசடி செய்துவிட்டு தப்பிவிட்டார். இதனால் ஜாதகர் கடனாளி ஆனார்.

கோட்சார கிரகங்களின் செயல்களை கவனித்து அதற்கேற்ப நமது தொடர்புகளை கையாளப் பழகிவிட்டால், அதன்பிறகு நமக்கு நட்பிற்கும் பகைக்கும் வேறுபாடு தெரியாத ஒரு சமநிலை மனிதர்களாக மாறிவிடுவோம்.  


அடுத்த பதிவில் வலைமனையில் சந்திப்போம்,

என்றும் அன்புடன் உங்கள்,

ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்.

கைபேசி: 8300124501

Sunday, 31 October 2021

முயல் - ஆமை திருமண உறவுகள்.

 

கனவண் மனைவி அன்யோன்யத்தை ஆண்டான்-அடிமை பாவம், காதலன்-காதலி பாவம், குரு-சிஷ்ய பாவம், நாயகன்-நாயகி பாவம், இறைவன்-பக்தன் பாவம், நண்பர்கள் பாவம், நட்பு-எதிரி பாவம் என பல வகையில் வரையறைப்படுத்துவர். இதில் நாயகன் – நாயகி பாவமே உன்னதமானது. அது சம வலுக்கொண்ட ஒரு ஆணும் பெண்ணும் இணைவதை குறிப்பிடுகிறது. ஒரு ஜாதகரின் தன்மைகள் அவரது வாழ்க்கை முழுவதும் ஒரே சீரான அளவில் இருப்பதில்லை. அவரவர் ஜாதக திசா-புக்திகளுக்கேற்ப அது மாறிக்கொண்டே இருக்கும். திருமணத்தின்போது காதலர்களாக இணையும் இருவர், சில ஆண்டுகள் கழித்து இறைவன்-பக்தன் நிலையை அடைவதோ அல்லது ஒருவருக்கொருவர் எதிரிகளாக மாறுவதோ அவரவர் ஜாதக திசா-புக்தி அமைப்பை பொறுத்தே அமையும். சில திசா புக்திகள் சாமான்யமானவர்களையும் சாமர்தியசாளிகளாக மாற்றிவிடும். சில, புத்திசாலிகளையும் கோமாளிகளாக மாற்றிவிடும். இதனடிப்படையில் சொல்லப்படும் ஒரு கருத்து “எத்தனை புத்திசாலி ஆணும் ஒரு பெண்ணிடம் முட்டாளாகிறான்; எத்தனை முட்டாளான பெண்ணும் ஒரு ஆண் அவள் வாழ்க்கையில் வந்த பிறகு புத்திசாலி ஆகிறாள்”.

இன்றைய பதிவில், இப்படி மாறிக்கொண்டிருக்கும் செயல்பாடுகளைக்கொண்ட மனித வாழ்வில் அதிகம் பாதிக்கக்கூடிய சந்திரன் மற்றும் சனி ஆகிய இரு கிரகங்களின் ஆதிக்க காலத்தில் கணவன்-மனைவி உறவில் ஏற்படுத்தும் விழைவுகளை ஆராயவிருக்கிறோம்.

கீழே ஒரு தம்பதியின் ஜாதகம்.

கணவரின் 7 ஆமதிபதி செவ்வாய் ஜாதகரின் துலாம் லக்னத்திலேயே உள்ளதால், இவர் மனைவியை எதற்காகவும் விட்டுக்கொடுக்க மாட்டார்.  ஆனால் 7 ஆமதிபதி செவ்வாய் 7 ன் பாதகாதிபதி சனியோடு இணைந்துள்ளார். இதனால் மனைவியோடு இணக்கமாக ஜாதகர் இருக்க நினைத்தாலும் ஜாதக கர்மா அதை தடுக்கிறது என்று பொருள். 7 ன் பாதகாதிபதி சனி என்பதால் அது தம்பதியரின் இணக்கம், சனி குறிக்கும் ஜீவனம் தொடர்பால்தான் பாதிப்புக்கு உள்ளாகும்.  சனியும் செவ்வாயும் வக்கிர கதியில் உள்ளன. இதனால் ஜீவன தொடர்பான விஷயங்களிலும், மனைவி தொடர்பான விஷயங்களிலும் ஜாதகர் ஒரு தனித்த நிலைப்பாட்டைக்கொண்டிருப்பார். அந்நிலைப்பாட்டை ஜாதகர் மாற்றிக்கொள்வது மிகக்கடினம். கணவருக்கு திருமண காலம் முதலே சனி திசை நடக்கிறது. சனி ஜீவன கிரகம் என்பதோடு, அது பாதித்துறவு பூண்ட கிரகம் என்பது குறிப்பிடத்தக்கது. கணவர் ஜாதகத்தில் உள்ள இந்த அமைப்பே இவர் மனைவியோடு ஒன்றுவதற்கு தடையாகவும் இருக்கும். கணவர் ஜாதகத்தில் மனம், உடல் காரகன் சந்திரனோடு சோம்பல் காரகன் சனி இணைவதால் ஏற்படும் புனர்பூ தோஷம் ஜாதகருக்கு உடல் ரீதியாக சோம்பலை ஏற்படுத்தும். புனர்பூ தோஷம் ஜாதகரின் மனோ வேகமும் செயல் வேகமும் ஒருங்கினையாத தன்மையை ஏற்படுத்தும். சனி, சந்திரன் தசா-புக்திகளில்தான்  இதன் வெளிப்பாடு அதிகம் இருக்கும்.. ஜாதகர் தற்போது சனி தசையில் உள்ளார்.  

மனைவி ஜாதகத்தில் ரிஷப லக்னத்தை குரு தனது சுபப்பார்வையால் புனிதப்பாடுதுகிறார். 7 ஆமதிபதி செவ்வாய் கேந்திர வலுப்பெற்று 7 ஆமிடத்தை தனது 4 ஆம் பார்வையால் வலுவாக்குகிறார். 7 ஆமதி செவ்வாயையும் 7 ஆமிடத்தையும் செவ்வாயின் பகை கிரகமான சனி வக்கிரம் பெற்று பார்க்கிறார். இது, கணவர் சோம்பல்தன்மை உடையவர், ஜீவன விஷயங்களில் குறிப்பிட்ட மாற்ற இயலாத எண்ணங்களைக் கொண்டிருப்பவர் என்பனவற்றை குறிக்கிறது. இந்த ஜாதகத்தில் 1-7 ல் ராகு-கேதுக்கள் அமைந்து சர்ப்ப தோஷத்தை ஏற்படுத்துகிறது. இத்தகைய அமைப்புகள் இந்த ஜாதகி துணைவர் வகையில் சிரமங்களை எதிர்கொள்வார் என்பதை குறிக்கிறது. ஜாதகிக்கு தற்போது சந்திர தசை நடக்கிறது. உணர்ச்சிகளுக்குரிய சந்திரன் அனைத்து கிரகங்களையும்விட விரைவாக சுற்றுபவர். சந்திரன் தனது தசையில் ஜாதகிக்கு செயல் வேகத்தையும் ஆசா-பாசங்ககளையும் தருகிறார்.

கணவர் ஜாதகத்தில் நடக்கும் சனி தசை ஜாதகரை முடக்கி வைத்து அவரை குடும்ப வாழ்வை விட்டு விலக்குகிறது. மனைவி ஜாதகம் அதற்கு நேர்மாறாக உயிர்த்துடிப்புடன் வாழத்தூண்டுகிறது. மனைவியின் செயல் வேகங்களுக்கு கணவரால் ஈடுகொடுக்க இயலவில்லை. அதனால் தனது குறைகளை மறைக்க, வேலைச்சூழலை காரணம் காட்டி மனைவியை இந்தியாவில் விட்டுவிட்டு ஜாதகர் வெளிநாட்டில் வேலை பார்க்கிறார். சனி தசையில்தான் கணவருக்கு திருமணம் நடந்தது. ஆனால் மனைவி வந்த பிறகே தனக்கு மனைவி மீது நாட்டம் இல்லை என்கிறார்.. அதுவரை இல்லற நாட்டம் இருந்தது என கணவர் கூறினார். இவர்களுக்கு குறிப்பாக கணவருக்கு உளவியல் சிகிச்சை தேவைப்படும்.   

இரண்டாவது தம்பதியரின் ஜாதகம் கீழே.

விருட்சிக லக்னதிற்குரிய கணவர் ஜாதகத்தில் கடந்த ஆண்டு முதல் சனி தசை நடக்கிறது. சனி லக்னத்திற்கு 8 ஆமிடத்தில் அமைந்துள்ளார். சனிக்கு 8 ஆமிட தோஷம் இல்லை எனினும், தனது காரகம், தொடர்புகொண்ட பாவங்கள் வகையில் ஜாதகர் மேல் தாக்கத்தை ஏற்படுத்துவார் எனலாம். சனி 8 ஆமிடத்தில் நின்று 1௦, 2, 5 ஆம் பாவத்தை பார்ப்பதால் தனது காரகம் சார்ந்த தொழில், வருமானம், குடும்பம், குழந்தைகள் ஆகிய வகைகளில் தடை, தாமதங்களை ஏற்படுத்துவார். அதே சமயம் ஜாதகருக்கு தத்தி எண்ணுமளவு நிதானம், தெளிந்த  நேர்மை, கட்டுப்பெட்டித்தனம் ஆகியவற்றையும் கொடுப்பார். லக்னாதிபதி செவ்வாய்க்கு 7 ஆமதிபதி சுக்கிரன் விரையத்தில் சிம்மத்தில் நின்று சனி, குரு ஆகிய இரு கிரகங்களின் பார்வையையும் பெறுகிறார். செவ்வாய்க்கு 12 ல் சுக்கிரன் நிற்பதால் ஜாதகர் மனைவியை பிரிகிறார். சனி சுக்கிரனை பார்ப்பதால் மனைவியை வேலை நிமித்தமாக பிரிகிறார். சுக்கிரனை குருவும் பார்க்கிறார். தசாநாதன் சனி குரு சாரம். இந்த அமைப்பால் ஜாதக்கரின் மனைவி வெளிநாட்டு வேலைக்கு சென்றுள்ள நிலையில் மனைவியை பிரிந்துள்ளார்.  

மனைவி ஜாதகப்படி சந்திர தசை நடக்கிறது. வெளி நாடு செல்வதை குறிக்கும் முதன்மை பயண காரக கிரகம் சந்திரன், சனியின் வீட்டில் நின்று லக்னத்தையே பார்ப்பதால் ஜாதகி வேலை தொடர்பாக வெளிநாடு செல்கிறார். சந்திரன் விரைவான செயல் வேகமுடைய கிரகம் என்பதால் மனைவி துணிந்து குடும்பத்தை பிரிந்து வெளிநாடு செல்கிறார். கணவர் ஜாதகத்தில் மெதுவான செயல்பாடுகொண்ட சனி தசை நடப்பதால் அவர் மனைவியின் பணிக்கு வாய்ப்பு விட்டு விலகி நிற்கிறார். கணவர் ஜாதகத்தில் 1-7 ல் நிற்கும் ராகு-கேதுக்களால் ஏற்படும் சர்ப்ப தோஷம் அதற்கு அனுமதிக்கிறது.

இருவரும் முயலும் ஆமையும் திருமணம் செய்துகொண்டதைப்போல தற்போது உணர்கிறார்கள். துள்ளி ஓடும் முயலோடு ஒப்பிடுகையில், ஆமையின் வேகம் மிகக்குறைவு. சந்திரனும் சனியுமே இந்த ஆமையும் முயலும் எனலாம். இவர்கள் இருவரும் ஒரே வேகத்தில் வாழ்வில் இணைந்து செல்ல இயலாது. இங்கு கணவர் மனைவிக்காக விட்டுத்தருகிறார். இதனால் குடும்பம் பிரியாமல் உள்ளது. வயது மனிதர்களின் செயல் வேகத்தை குறைக்கும் என்றாலும், சனி தசை துவங்கியதும்தான் கணவர் மிகவும் சோம்பேறியாகிவிட்டதாக மனைவி கூறுகிறார். குடும்பத்தோடு சுற்றுலா சென்ற இடத்தில் கூட மனைவி குழந்தைகளோடு சூழலை ரசித்துவர, கணவர் காரிலேயே உறங்கியுள்ளார்.

கிரக பாதிப்புகள் தங்களது தசா-புக்திகளில்தான் தாக்கத்தை வெளிப்படுத்தும் என்பதால் சந்திரன் போன்று விரைந்து சுழலும் கிரக தசையும், சனி போன்று மெதுவாக சுழலும் கிரகமும் தசை நடத்தும் இருவர் இணைந்து செல்வது மிகவும் கடினமான ஒன்று. இளம் வயதில் வரும் இத்தகைய தசா-புக்திகளில் தாக்கத்தை அறிந்து பொருத்துவது சிறந்தது. சனி தசை நடக்கும் ஒருவருக்கு சுக்கிர தசை, புதன் தசை நடக்கும் ஒருவர் துணையாக அமைவதே விரும்பத்தக்கது. மேலே  நாம் ஆராய்ந்தவை போன்று இவ்விரு கிரக தசா-புக்திகளும் சந்திக்கும்போது ,தம்பதியர் இருவரில் ஒருவர் விட்டுக்கொடுத்தால்தான் குடும்பம் பிரியாமல் இருக்கும். இல்லையேல் பிரிவினை ஏற்பட சாதியக்கூறுகள் அதிகம். சனி சகிப்புத்தன்மைக்கு உரிய கிரகம் என்பதால், பொதுவாக சனி தசை நடப்பவர்கள்தான் தனது துணைக்காக விட்டுக்கொடுப்பார்கள்.

விரைவில் மீண்டும் மற்றொரு பதிவில் சந்திப்போம்.

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்,

அன்பன்,

ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்.

கைபேசி: 8300124501.

Sunday, 24 October 2021

நைஜீரிய மோசடிகள்

 


ஜோதிடத்தில் மோசடிகளை ராகுவும், 8 ஆமதிபதியும், 8 ஆமிட கிரகமும் குறிக்கும். 8 ஆமிடம் என்பது ஒருவரின் தகுதிக்கு மீறிய ஆசைகளை குறிக்கும் இடமாகும். 8 ஆமிடம் ஒரு ஜாதகர் இயல்பாக ஏமாறுவதை குறிக்கும். 8 க்கு 8 ஆமிடமான 3 ஆமிடமானது வலையுலக மற்றும் செயலி வகை சூதாட்டங்கள் (Online Rummy) போன்றவற்றை ஜாதகரே தேடிச்சென்று ஏமாறுவதை குறிப்பிடும். தகுதிக்கு மீறிய வகையில் குறுக்கு வழியில் கோடீஸ்வரர் ஆக முயல்பவர் ஜாதகங்களில் தன காரக கிரகங்களான சுக்கிரனும், குருவும், இரண்டாம்  அதிபதியும் தொடர்பில் இருக்கும். எப்போது மோசடிகளை ஜாதகர் அனுப்பவிப்பார் என்பதை திசா-புக்திகளும் அதற்கு ஒத்திசைவாக வரும் வருட கிரக நகர்வுகள், குறிப்பாக ராகுவின் கோட்சார நிலை தெளிவாக சுட்டிக்காட்டும்.

ஜாதகத்தில் குரு-ராகு தொடர்பால் ஏற்படும் குரு சண்டாள யோகத்தால் வரும் இத்தகைய நிகழ்வுகளைவிட, சுக்கிரன்-ராகு தொடர்பால் வரும் நிகழ்வுகள் அதிக பாதிப்பை தருபவையாகும். இத்தகைய மோசடிகளுக்கு சுக்கிரன் எளிதில் ஆட்படும்.  சுக்கிரன் ராகு-கேதுக்களைப்போல தன்னைத்தானே வக்கிர கதியில் சுற்றிக்கொண்டு ராசி மண்டலத்தை நேர்கதியில் சுற்றிவருவதே இதற்கு காரணம். தொடர்பு ஸ்தானம் என்று கூறப்படும் 7 ஆமிடமும் அதன் அதிபதியும் ராகு தொடர்பு பெற்றிருந்தால் அத்தகைய ஜாதகர் மோசடியில் சிக்குவார். கால புருஷனின் 7 ஆமிடமாக சுக்கிரனின் துலாம் ராசியில்தான் ராகுவின் நட்சத்திரம் சுவாதி இருப்பது குறிப்பிடத்தக்கது. இப்போது இத்தகைய நிகழ்வுகளை சில உதாரணங்கள் மூலம் ஆராய்வோம்.

ஜாதகதிற்குரியவர் 35 வயதான ஒரு ஆண். 5 ஆமிட ராகு, 8 ல் புதனுடன் நிற்கும் சூரியனின் கார்த்திகை-4 ல் அமைந்துள்ளது. ஜாதகருக்கு கடந்த ஆண்டு துவக்கத்தில் ராகு திசையில் பாதகாதிபதி புதனுடன் இணைந்து புதனின் ஆயில்யம்-2 ல் நிற்கும் சூரியனின் புக்தி நடந்தது. முதல் பத்தியில் நாம் கூறிய மோசடிக்கான விதிகள் இந்த ஜாதகத்தில் பொருந்தி வருவதை கவனியுங்கள்.

மோசடி காரகன் ராகுவின் தசா.

தகுதிக்கு மீறிய ஆசையை தூண்டி மோசம் செய்யும் 8 ஆமிட கிரக புக்தி.

7 ஆமதிபதியே பாதகாதிபதியாக வந்து, 8 நிற்கும் புக்திநாதன் தொடர்பு பெறுகிறது.

நீச சுக்கிரன் 8 ஆமதிபதி சந்திரனோடு இணைந்து லக்னத்திற்கு 1௦ ல் சூரியனின்  உத்திரம்-4 ல் நிற்கிறார். இதனால் புக்திநாதன் சூரியனுக்கு சுக்கிரனின் தொடர்பு ஏற்படுகிறது.

சம்பவங்கள் நடந்த காலத்தின் அந்தர நாதன் குரு லக்னத்திற்கு 3 ஆமிடத்தில் வக்கிரம் பெற்று நிற்கிறார்.

மேற்கண்ட அமைப்புகள் இந்த ஜாதகரே ஏமாற்றத்தை தேடிச்சென்று சந்திப்பார் என்பதை சுட்டிக்காட்டுகின்றன.

ஜாதகருக்கு முகநூல் மூலம் ஏற்பட்ட ஒரு தொடர்பில், ஒரு வெளிநாட்டுப் பெண் மதிப்பு வாய்ந்த கிருஸ்துமஸ் பரிசுகளை ஜாதகருக்கு அனுப்பியிருப்பதாகவும் அதை ஜாதகர் பெற்றுக்கொள்ளும்படி ஒரு தகவலை  தகவலை ஜாதகருக்கு தெரிவிக்கிறார். இது முகநூல் மூலம் ஜாதகரே ஏமாற்றத்தை தேடிசெல்வதை குறிப்பிடுகிறது. மேற்கண்ட தகவலை உண்மை ஜாதகர் நம்புகிறார்.  இதையடுத்து ஜாதகரை தொடர்புகொண்ட போலி ஆசாமிகள், ஜாதகருக்கு வந்திருக்கும் பொருட்களுக்கு வரியாக ஒன்றரை லட்சம் கட்டும்படி கூற அதை நம்பி ஜாதகர் பணம் கட்டுகிறார். பிறகு வெளிநாட்டிலிருந்து வந்த பொருட்கள் முறையான வர்த்தக தொடர்பில் வரவில்லை என்பதால் அதற்கு கூடுதலாக  இரண்டரை லட்சம் கொடுக்கவேண்டும் எனவும் அதை கட்டவில்லை என்றால் வெளி நாட்டு வர்த்தக விதிகளை மீறியதற்காண வழக்கில் ஜாதகர் கைது செய்யப்படுவார் எனவும் மிரட்டப்படுகிறார். பரிசுகளை அனுப்பிய பெண்மணி பொருட்களின் இந்திய மதிப்பு 9 லட்சம் என்று கூற. அதை நம்பி இரண்டாவது முறையாக இரண்டரை லட்சம் ஜாதகர் கட்டிய பிறகே தான் ஏமாற்றப்பட்டதை மிக தாமதமாக ஜாதகர் உணர்கிறார். இவர் இரண்டாவது முறையும் ஏமாற்றதிற்கு உள்ளானதற்கு  காரணம், புத்தி காரகன் சூரியன் புதனின் சாரம் பெறுவதுதான். புதன் ஒரு செயலை இருமுறை நடத்திக்காட்டும் கிரகம் என்பது குறிப்பிடத்தக்கது.

தந்தையின் காரக கிரகமும் பாவாதிபதியுமான சூரியன் 8 ல் மறைந்ததால் தந்தை இது விஷயத்தில் ஜாதகரை கடுமையாக எச்சரித்தும் கேட்கவில்லை. 199௦ களில் நைஜீரிய மோசடியாளர்களால் அதிகம் நடந்ததால் இத்தகைய மோசடிகள் நைஜீரிய மோசடிகள் என்றே பெயர் பெற்றன. ஒருவர் தனது முன்னேற்றதிற்காக முறையான ஆசையை பெற்றிருப்பது தவறில்லை. ஆனால் அவ்வாசை 8 ஆம் பாவம் குறிக்கும் பேராசையாக மாறும்போது  அவர் பாதிக்கப்படுவார். தகவல் தொடர்பு பாவமான 3 ல் அமைந்த அந்தரநாதர் குரு, ஜாதகரே தனது முகநூல் தொடர்பு மூலம் தேடிச்சென்று ஏமாறுவதை குறிப்பிடுகிறார். பேராசையை கட்டுப்படுத்துவதே இதற்கான தீர்வாகும்.

விரைவில் மீண்டும் மற்றொரு பதிவில் சந்திப்போம்.

அதுவரை வாழ்த்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்.

கைபேசி: 8300124501

Thursday, 14 October 2021

தொழில் சிந்தனைகள்...

 


ஒருவரது எண்ணங்களே அவரது செயல்பாட்டை தீர்மானிக்கின்றன. எனவே எண்ணங்களை சிறப்பானதாக  ஏற்படுத்திக்கொண்டால் சீரான வாழ்வு பெறலாம். பொதுவாக ஊக்குவிப்பு பேச்சாளர்கள் பயன்படுத்தும் வார்த்தைகள் இவை. ஆனால் ஒருவரது எண்ணங்கள் எப்போதும் ஒரே அலை வரிசையில் இருப்பதில்லை. கால மாற்றங்களை போன்றவைதான் எண்ணங்களும். எனவே எல்லோரும் காலத்தின் கைப்பாவைகளே. ஒருவர் சிறப்பான தொழில் சிந்தனையை பெற்றிருப்பதை அவரது மனப்போக்குதான் தீர்மானிக்கிறது. நமது இன்றைய பதிவு ஒருவரின் தொழில் ரீதியான சிந்தனைகளை ஜோதிடப்படி ஆராய்வதே.

கீழே ஒரு ஜாதகம்.

ஜாதகர் 43 வயது நிரம்பிய ஒரு ஆண். இவர் ஜாதகம் பார்க்க வந்த நாளில் கோட்சார சந்திரன் ஜீவன பாவமான லக்னத்திற்கு 1௦ ல் மிதுனத்தில் திருவாதிரை-4 ஆம் பாதத்தில்  செல்கிறார். திருவாதிரை-2 ஆம் பாதத்தில்  ஜனன காலத்தில் நிற்கும் லாபாதிபதி மீது கோட்சார சந்திரன் செல்கிறார்.  லாபாதிபதி சந்திரன் மாற்றத்திற்குரிய கிரகம் என்பதோடு அவர் 1௦ ஆமிட தொடர்பில் கோட்சாரத்தில் செல்வதால் இவர் தொழில் மாற்றத்தால்  லாபம் உண்டா? என்ற கேள்வியுடன் ஜாதகம் பார்க்க வந்தார். கோட்சார சந்திரனும் ஜனன சந்திரனும் லக்னத்தில் நிற்கும் ராகு சாரம் பெறுவதால் இவர் சந்திரன்+ராகு சேர்க்கை  குறிக்கும் விவசாயதிற்குரிய உரங்கள், களைக்கொல்லி மருந்துகள் போன்றவற்றில் ஈடுபட்டுள்ளவராக இருப்பார். கோட்சாரத்தில் சந்திரன் ரோகிணி-1 ல் நிற்கும் ராகுவை கடந்து வந்துள்ளது இதை உறுதி செய்கிறது. லக்னத்தில் நிற்கும் கிரகமே ஜாதகரை வழி நடத்தும் என்பதற்கேற்ப, அலைச்சலை குறிக்கும் 12 ஆமதிபதி சூரியன் சாரம் பெற்று அலைச்சலின் காரக கிரகமான ராகுவே லக்னத்தில் நிற்கிறார். இவர் கடந்த காலங்களில் ரசாயன உரங்கள் தொடர்புடைய துறையில் விற்பனை பிரதிநிதியாக நீண்ட பயணங்கள் செய்து நன்கு பணியாற்றியதாக தெரிவிக்கிறார்.

2௦19 ல் இவர் மருந்து வணிகம் தொடர்புடைய துறைக்கு மாறி, கடினமாக உழைத்தும் அதில் எதிர்பார்த்த வெற்றி இல்லை என்கிறார். கொரான காலம் அதற்கு ஒரு காரணமாக சொல்லப்பட்டாலும் வேலையில் திருப்தியில்லை என்கிறார்.  காரணம் மருத்துவத்தின் காரக கிரகமான செவ்வாய் லக்னத்திற்கு 8 ஆமதிபதியாவதால் ஜாதகருக்கு நன்மைகளை வழங்க இயலவில்லை. இவர் மருத்துவம் சார்ந்த துறையில் ஈடுபட காரணம் செவ்வாய் வருமான பாவமான 2 ஆமிடத்தில் நிற்பதால்தான். கோட்சாரத்தில் செவ்வாயும் சூரியனும் ஜனன கால ராகுவிடம் சரணடைவது ஜாதகர் ஈடுபட்ட செவ்வாய் சார்ந்த துறையில் ஜாதகர் சோபிக்கவில்லை என்பதை கூறுகிறது.  இதனால் ராகு-சந்திரன் சேர்க்கை குறிக்கும் விவசாயத்திற்குரிய உரங்கள், ரசாயனங்கள் தொடர்புடைய துறையே ஜாதகருக்கு   நன்மையை செய்கிறது. காரணம் ராகுவும் சந்திரனும் லக்னத்தோடும் 1௦ ஆம் பாவத்தோடும் தொடர்புகொள்வதே. கோட்சார சந்திரன் லாப ஸ்தானத்தில் கடகத்தில் நிற்கும் உச்ச குருவைத்தான் அடுத்து தொடவுள்ளது. விவசாயத்தை கால புருஷனின் நான்காமிடமான கடகமும் அதன் அதிபதி சந்திரனும் குறிப்பதோடு சந்திரன்+ராகு  தொடர்பு, ஜாதகர் முன்பு ஈடுபட்ட ரசாயன உரத்துறைக்கு திரும்புவது ஜாதகருக்கு நிச்சயம் லாபமாக அமையும் என்று கூறப்பட்டது.  

அடுத்து ஒரு ஜாதகம்.   

ஜாதகதிற்குரியவர் 4௦ வயதான ஒரு ஆண். இவர் ஜாதகம் பார்க்க வந்த நாளில் கோட்சார சந்திரன் லக்னத்திற்கு 12 ஆமிடத்தில் கன்னியில் சுய சாரத்தில் ஹஸ்தம்-3 ல் செல்கிறது. குரு கால புருஷனுக்கு 12 ஆமதிபதி என்பதோடு சனியும் கால்கள், பாதங்கள், கழிவுகள் ஆகியவற்றை குறிப்பவர். தொழில் ஸ்தானமான 1௦ ஆமிடத்தில் ஜனன ராகு சனி சாரம் பூசம்-2 ல் நிற்கிறார். 12 ஆமிடாதிபதி புதன், அங்கு சந்திரனோடு  பரிவர்த்தனை பெற்ற சூரியனோடு இணைந்து நிற்கிறார். ஜாதகருக்கு தற்போது ராகு திசையில் சந்திர புக்தி நடக்கிறது. எனவே இவரது தொழில் பற்றிய சிந்தனையில் ராகுவின் காரகத்தோடு, சூரியன் குறிக்கும் சுய தொழில் எண்ணம், சந்திரன் குறிக்கும், திரவங்கள், புதன் குறிக்கும் தரகு கமிஷன், ஏஜென்சி,  ஒப்பந்தம்  ஆகியவை கலந்திருக்கும் எனலாம். செவ்வாய் மிதுனத்தில் ராகு சாரம் திருவாதிரை-4 ல் நிற்பதால் இவரது தொழில் சிந்தனையில் செவ்வாயின் தாக்கமும் இருக்கும். இவர் குடிநீர் விற்பனை செய்தார். தற்போது ஒரு சிமென்ட் ஏஜன்சி வைத்துள்ளார். கூடுதலாக ஒப்பந்த அடிப்படையில் வீடு கட்டி தருகிறார். லக்னத்திற்கு 12 ஆமிடம் என்பது கழிவறையை  குறிக்கும் என்பதோடு, கன்னியில் ஜனன காலத்தில் கால புருஷனுக்கு 12 ஆமதிபதி குரு இருந்து அவர் கோட்சாரத்தில் நீசமாவதும், கழிவுகளை குறிக்கும் சனி ஜனன காலத்தில் அங்கு நிற்கிறது. கோட்சாரத்தில் கட்டுமானங்களுக்குரிய  செவ்வாயும், அரசை குறிக்கும் சூரியனும், கோட்சார புதனோடு லக்னத்திற்கு 12 ஆமிடத்தில் செல்வதால், அரசு மக்களுக்கு கழிவறை கட்டித்தரும் திட்டங்களை தான் ஏற்று செய்யலாமா? என்று கேட்கிறார். ஒருவரது தொழில் சிந்தனையின் தரத்தை கோட்சார கிரகங்கள் சுட்டிக்காட்டுகின்றன என்றால் அது மிகையல்ல.

மூன்றாவதாக ஒரு ஜாதகம்.


ஜாதகத்திற்கு உரியவர் 36 வயதான ஒரு பெண். ஜாதகத்தில் கடனை குறிக்கும் 6 ஆமதிபதி சந்திரன் லக்னத்தில் நிற்கிறார். தொழிலை குறிக்கும் 1௦ ஆமதிபதி செவ்வாய் நீசம் பெற்று கடன் பாவமான 6 ஆமிடத்தில் நிற்கிறார். ஜீவன காரகரும் லக்னாதிபதியுமான சனி உச்சம் பெற்று கடனின் காரக கிரகமான கேதுவோடு பாதக ஸ்தானமான துலாத்தில் உள்ளார். இம்மூன்று அமைப்புகளும் ஒன்றைத்தான் சுட்டிக்காட்டுகின்றன. அது ஜாதகிக்கு தொழில் ரீதியான கடன் ஏற்படுவது தவிர்க்க இயலாதது என்பதே. இது விஷயங்களில் ஜாதகியை ஒரு தேர்ந்த ஜோதிடரால் எச்சரிக்க இயலும். ஆனால் ஜாதகி சம்பவங்களை அனுபவிப்பதை தடுக்க முடியாது.  ஜாதகி ஜாதகம் பார்க்க வந்த நாளில் கோட்சார சந்திரன் கன்னி ராசியில் சுய சாரம் ஹஸ்தம்-3 ல் சென்றுகொண்டிருக்கிறார். கன்னி ராசி கால புருஷனின் 6 ஆவது பாவம் என்ற வகையிலும் சந்திரன் 6 ஆம் பாவாதிபதியாகி 8 ல் சுய சாரத்தில் செல்வதால் ஜாதகி கடன் நெருக்கடியில் ஜாதகம் பார்க்க வந்துள்ளார்.

கடக ராசியில் உள்ள 1௦ ஆமதிபதி செவ்வாய், புதன், சுக்கிரன் ஆகியோரை துலாத்தில் கேதுவோடு இணைந்த சனி தனது 1௦ ஆம் பார்வையை பார்த்த நிலையில் கோட்சார சந்திரன் கடக ராசியை கடந்து வந்துள்ளது. பிறகு சூரியனை கடந்து வந்துள்ளது. கோட்சாரத்தில்  1௦ ஆமதிபதி செவ்வாயும், புதனும், சூரியனும் லக்னத்திற்கு 8 ல் நிற்கின்றனர். சுக்கிரன் லக்னத்திற்கு 1௦ ல் விருட்சிகத்தில் கேதுவோடு நிற்கிறார். இது ஜாதகி தொழிலுக்கான கடன் நடவடிக்கைகளை ஏற்கனவே எடுத்துவிட்டதை குறிக்கிறது. அரசு வங்கிக்கடனுக்கு உரிய சூரியனும் புதனும் லக்னத்திற்கு 8 ல் கோட்சாரத்தில் மறைந்துவிட்டது ஜாதகி அரசு வங்கிக்கடன் பெற எடுத்த முயற்சிகள் பலனடையவில்லை என்பதை குறிக்கின்றன. ஜாதகி தொழிலுக்கான துவக்க முதலீடு செய்துள்ளார். கூடுதல் முதலீட்டிற்காகவே வங்கிக்கடன் முயற்சிகளை எடுத்துக்கொண்டிருக்கிறார். இதனால் ஜாதகி தற்போது தொழில் இருந்து பின் வாங்க இயலாது. கோட்சார சந்திரன் அடுத்து உச்ச சனியையும் கேதுவையும் தொட்ட பிறகே 1௦ ஆமிடம் செல்லமுடியும். இதனால் ஜாதகி தொழிலில் கடுமையான போராட்ட சூழலை சந்தித்த பிறகே தொழிலில் காலூன்ற இயலும் என்பதை கோட்சார சந்திரனின் நகர்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.

ஜீவன விஷயங்கள் ஒருவரது வாழ்க்கை போக்கை தீர்மானிப்பவை. கணிசமான முதலீட்டில் செய்யும் எந்தவொரு விஷயத்தையும் தகுந்த ஜோதிடரின் மூலம் அதன் சாதக பாதகங்களை அறிந்து செயல்படுவது சிறப்பு.

மீண்டும் விரைவில் மற்றொரு பதிவில் சந்திக்கிறேன்.

அதுவரை வாழ்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்.

கைபேசி: 8300124501.