Thursday, 14 October 2021

தொழில் சிந்தனைகள்...

 


ஒருவரது எண்ணங்களே அவரது செயல்பாட்டை தீர்மானிக்கின்றன. எனவே எண்ணங்களை சிறப்பானதாக  ஏற்படுத்திக்கொண்டால் சீரான வாழ்வு பெறலாம். பொதுவாக ஊக்குவிப்பு பேச்சாளர்கள் பயன்படுத்தும் வார்த்தைகள் இவை. ஆனால் ஒருவரது எண்ணங்கள் எப்போதும் ஒரே அலை வரிசையில் இருப்பதில்லை. கால மாற்றங்களை போன்றவைதான் எண்ணங்களும். எனவே எல்லோரும் காலத்தின் கைப்பாவைகளே. ஒருவர் சிறப்பான தொழில் சிந்தனையை பெற்றிருப்பதை அவரது மனப்போக்குதான் தீர்மானிக்கிறது. நமது இன்றைய பதிவு ஒருவரின் தொழில் ரீதியான சிந்தனைகளை ஜோதிடப்படி ஆராய்வதே.

கீழே ஒரு ஜாதகம்.

ஜாதகர் 43 வயது நிரம்பிய ஒரு ஆண். இவர் ஜாதகம் பார்க்க வந்த நாளில் கோட்சார சந்திரன் ஜீவன பாவமான லக்னத்திற்கு 1௦ ல் மிதுனத்தில் திருவாதிரை-4 ஆம் பாதத்தில்  செல்கிறார். திருவாதிரை-2 ஆம் பாதத்தில்  ஜனன காலத்தில் நிற்கும் லாபாதிபதி மீது கோட்சார சந்திரன் செல்கிறார்.  லாபாதிபதி சந்திரன் மாற்றத்திற்குரிய கிரகம் என்பதோடு அவர் 1௦ ஆமிட தொடர்பில் கோட்சாரத்தில் செல்வதால் இவர் தொழில் மாற்றத்தால்  லாபம் உண்டா? என்ற கேள்வியுடன் ஜாதகம் பார்க்க வந்தார். கோட்சார சந்திரனும் ஜனன சந்திரனும் லக்னத்தில் நிற்கும் ராகு சாரம் பெறுவதால் இவர் சந்திரன்+ராகு சேர்க்கை  குறிக்கும் விவசாயதிற்குரிய உரங்கள், களைக்கொல்லி மருந்துகள் போன்றவற்றில் ஈடுபட்டுள்ளவராக இருப்பார். கோட்சாரத்தில் சந்திரன் ரோகிணி-1 ல் நிற்கும் ராகுவை கடந்து வந்துள்ளது இதை உறுதி செய்கிறது. லக்னத்தில் நிற்கும் கிரகமே ஜாதகரை வழி நடத்தும் என்பதற்கேற்ப, அலைச்சலை குறிக்கும் 12 ஆமதிபதி சூரியன் சாரம் பெற்று அலைச்சலின் காரக கிரகமான ராகுவே லக்னத்தில் நிற்கிறார். இவர் கடந்த காலங்களில் ரசாயன உரங்கள் தொடர்புடைய துறையில் விற்பனை பிரதிநிதியாக நீண்ட பயணங்கள் செய்து நன்கு பணியாற்றியதாக தெரிவிக்கிறார்.

2௦19 ல் இவர் மருந்து வணிகம் தொடர்புடைய துறைக்கு மாறி, கடினமாக உழைத்தும் அதில் எதிர்பார்த்த வெற்றி இல்லை என்கிறார். கொரான காலம் அதற்கு ஒரு காரணமாக சொல்லப்பட்டாலும் வேலையில் திருப்தியில்லை என்கிறார்.  காரணம் மருத்துவத்தின் காரக கிரகமான செவ்வாய் லக்னத்திற்கு 8 ஆமதிபதியாவதால் ஜாதகருக்கு நன்மைகளை வழங்க இயலவில்லை. இவர் மருத்துவம் சார்ந்த துறையில் ஈடுபட காரணம் செவ்வாய் வருமான பாவமான 2 ஆமிடத்தில் நிற்பதால்தான். கோட்சாரத்தில் செவ்வாயும் சூரியனும் ஜனன கால ராகுவிடம் சரணடைவது ஜாதகர் ஈடுபட்ட செவ்வாய் சார்ந்த துறையில் ஜாதகர் சோபிக்கவில்லை என்பதை கூறுகிறது.  இதனால் ராகு-சந்திரன் சேர்க்கை குறிக்கும் விவசாயத்திற்குரிய உரங்கள், ரசாயனங்கள் தொடர்புடைய துறையே ஜாதகருக்கு   நன்மையை செய்கிறது. காரணம் ராகுவும் சந்திரனும் லக்னத்தோடும் 1௦ ஆம் பாவத்தோடும் தொடர்புகொள்வதே. கோட்சார சந்திரன் லாப ஸ்தானத்தில் கடகத்தில் நிற்கும் உச்ச குருவைத்தான் அடுத்து தொடவுள்ளது. விவசாயத்தை கால புருஷனின் நான்காமிடமான கடகமும் அதன் அதிபதி சந்திரனும் குறிப்பதோடு சந்திரன்+ராகு  தொடர்பு, ஜாதகர் முன்பு ஈடுபட்ட ரசாயன உரத்துறைக்கு திரும்புவது ஜாதகருக்கு நிச்சயம் லாபமாக அமையும் என்று கூறப்பட்டது.  

அடுத்து ஒரு ஜாதகம்.   

ஜாதகதிற்குரியவர் 4௦ வயதான ஒரு ஆண். இவர் ஜாதகம் பார்க்க வந்த நாளில் கோட்சார சந்திரன் லக்னத்திற்கு 12 ஆமிடத்தில் கன்னியில் சுய சாரத்தில் ஹஸ்தம்-3 ல் செல்கிறது. குரு கால புருஷனுக்கு 12 ஆமதிபதி என்பதோடு சனியும் கால்கள், பாதங்கள், கழிவுகள் ஆகியவற்றை குறிப்பவர். தொழில் ஸ்தானமான 1௦ ஆமிடத்தில் ஜனன ராகு சனி சாரம் பூசம்-2 ல் நிற்கிறார். 12 ஆமிடாதிபதி புதன், அங்கு சந்திரனோடு  பரிவர்த்தனை பெற்ற சூரியனோடு இணைந்து நிற்கிறார். ஜாதகருக்கு தற்போது ராகு திசையில் சந்திர புக்தி நடக்கிறது. எனவே இவரது தொழில் பற்றிய சிந்தனையில் ராகுவின் காரகத்தோடு, சூரியன் குறிக்கும் சுய தொழில் எண்ணம், சந்திரன் குறிக்கும், திரவங்கள், புதன் குறிக்கும் தரகு கமிஷன், ஏஜென்சி,  ஒப்பந்தம்  ஆகியவை கலந்திருக்கும் எனலாம். செவ்வாய் மிதுனத்தில் ராகு சாரம் திருவாதிரை-4 ல் நிற்பதால் இவரது தொழில் சிந்தனையில் செவ்வாயின் தாக்கமும் இருக்கும். இவர் குடிநீர் விற்பனை செய்தார். தற்போது ஒரு சிமென்ட் ஏஜன்சி வைத்துள்ளார். கூடுதலாக ஒப்பந்த அடிப்படையில் வீடு கட்டி தருகிறார். லக்னத்திற்கு 12 ஆமிடம் என்பது கழிவறையை  குறிக்கும் என்பதோடு, கன்னியில் ஜனன காலத்தில் கால புருஷனுக்கு 12 ஆமதிபதி குரு இருந்து அவர் கோட்சாரத்தில் நீசமாவதும், கழிவுகளை குறிக்கும் சனி ஜனன காலத்தில் அங்கு நிற்கிறது. கோட்சாரத்தில் கட்டுமானங்களுக்குரிய  செவ்வாயும், அரசை குறிக்கும் சூரியனும், கோட்சார புதனோடு லக்னத்திற்கு 12 ஆமிடத்தில் செல்வதால், அரசு மக்களுக்கு கழிவறை கட்டித்தரும் திட்டங்களை தான் ஏற்று செய்யலாமா? என்று கேட்கிறார். ஒருவரது தொழில் சிந்தனையின் தரத்தை கோட்சார கிரகங்கள் சுட்டிக்காட்டுகின்றன என்றால் அது மிகையல்ல.

மூன்றாவதாக ஒரு ஜாதகம்.


ஜாதகத்திற்கு உரியவர் 36 வயதான ஒரு பெண். ஜாதகத்தில் கடனை குறிக்கும் 6 ஆமதிபதி சந்திரன் லக்னத்தில் நிற்கிறார். தொழிலை குறிக்கும் 1௦ ஆமதிபதி செவ்வாய் நீசம் பெற்று கடன் பாவமான 6 ஆமிடத்தில் நிற்கிறார். ஜீவன காரகரும் லக்னாதிபதியுமான சனி உச்சம் பெற்று கடனின் காரக கிரகமான கேதுவோடு பாதக ஸ்தானமான துலாத்தில் உள்ளார். இம்மூன்று அமைப்புகளும் ஒன்றைத்தான் சுட்டிக்காட்டுகின்றன. அது ஜாதகிக்கு தொழில் ரீதியான கடன் ஏற்படுவது தவிர்க்க இயலாதது என்பதே. இது விஷயங்களில் ஜாதகியை ஒரு தேர்ந்த ஜோதிடரால் எச்சரிக்க இயலும். ஆனால் ஜாதகி சம்பவங்களை அனுபவிப்பதை தடுக்க முடியாது.  ஜாதகி ஜாதகம் பார்க்க வந்த நாளில் கோட்சார சந்திரன் கன்னி ராசியில் சுய சாரம் ஹஸ்தம்-3 ல் சென்றுகொண்டிருக்கிறார். கன்னி ராசி கால புருஷனின் 6 ஆவது பாவம் என்ற வகையிலும் சந்திரன் 6 ஆம் பாவாதிபதியாகி 8 ல் சுய சாரத்தில் செல்வதால் ஜாதகி கடன் நெருக்கடியில் ஜாதகம் பார்க்க வந்துள்ளார்.

கடக ராசியில் உள்ள 1௦ ஆமதிபதி செவ்வாய், புதன், சுக்கிரன் ஆகியோரை துலாத்தில் கேதுவோடு இணைந்த சனி தனது 1௦ ஆம் பார்வையை பார்த்த நிலையில் கோட்சார சந்திரன் கடக ராசியை கடந்து வந்துள்ளது. பிறகு சூரியனை கடந்து வந்துள்ளது. கோட்சாரத்தில்  1௦ ஆமதிபதி செவ்வாயும், புதனும், சூரியனும் லக்னத்திற்கு 8 ல் நிற்கின்றனர். சுக்கிரன் லக்னத்திற்கு 1௦ ல் விருட்சிகத்தில் கேதுவோடு நிற்கிறார். இது ஜாதகி தொழிலுக்கான கடன் நடவடிக்கைகளை ஏற்கனவே எடுத்துவிட்டதை குறிக்கிறது. அரசு வங்கிக்கடனுக்கு உரிய சூரியனும் புதனும் லக்னத்திற்கு 8 ல் கோட்சாரத்தில் மறைந்துவிட்டது ஜாதகி அரசு வங்கிக்கடன் பெற எடுத்த முயற்சிகள் பலனடையவில்லை என்பதை குறிக்கின்றன. ஜாதகி தொழிலுக்கான துவக்க முதலீடு செய்துள்ளார். கூடுதல் முதலீட்டிற்காகவே வங்கிக்கடன் முயற்சிகளை எடுத்துக்கொண்டிருக்கிறார். இதனால் ஜாதகி தற்போது தொழில் இருந்து பின் வாங்க இயலாது. கோட்சார சந்திரன் அடுத்து உச்ச சனியையும் கேதுவையும் தொட்ட பிறகே 1௦ ஆமிடம் செல்லமுடியும். இதனால் ஜாதகி தொழிலில் கடுமையான போராட்ட சூழலை சந்தித்த பிறகே தொழிலில் காலூன்ற இயலும் என்பதை கோட்சார சந்திரனின் நகர்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.

ஜீவன விஷயங்கள் ஒருவரது வாழ்க்கை போக்கை தீர்மானிப்பவை. கணிசமான முதலீட்டில் செய்யும் எந்தவொரு விஷயத்தையும் தகுந்த ஜோதிடரின் மூலம் அதன் சாதக பாதகங்களை அறிந்து செயல்படுவது சிறப்பு.

மீண்டும் விரைவில் மற்றொரு பதிவில் சந்திக்கிறேன்.

அதுவரை வாழ்துக்களுடன்,

அன்பன்,

பழனியப்பன்.

கைபேசி: 8300124501.

No comments:

Post a Comment